ஆனந்த விகடன் விருதுகள்
தொடர்கள்
Published:Updated:

1983: ஒரு சில்க் கதை - சிறுகதை

1983: ஒரு சில்க் கதை - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
1983: ஒரு சில்க் கதை - சிறுகதை

சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

டைரி 1983

18. 1. 1983


`இன்று நானும் ஆனந்தும் மோகனும் சிவாவும் காலேஜ் கட்டடித்துவிட்டு, தஞ்சாவூர் சென்று சில்க் ஸ்மிதா நடித்த `கோழிகூவுது’ படம் பார்த்தோம்... வாழ்நாள் முழுவதும் என் கண்களில் வேறு காட்சி ஏதும் தெரியாமல், சில்க் ஸ்மிதா மட்டுமே நிரந்தரமாகத் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?  படத்தின் டைட்டிலிலேயே சிலுக்கு வெள்ளை நிற தாவணியில், நூற்றாண்டுக்காலம் புதைத்துவைத்திருந்த ஒயினைப் போன்ற போதையூட்டும் கண்களால் பார்த்தபடி, உதட்டுக்குள் சிரித்தபோது, பவுர்ணமி நிலவைக் கன்னத்தில் அடக்கிக்கொண்டு சிரிக்கும் சிரிப்பில் அப்படி ஒரு வெளிச்சம். `பூவே... இளைய பூவே...’ பாடலில் பிரபு கண்ணடிக்கும்போது, சிலுக்கு தலையைத் தாழ்த்தி, லேசான வெட்கத்துடன் உலகின் மிக அழகிய கண்களால் பூமியைப் பார்த்தபோது,  சிலுக்கு பார்த்த இடத்தில் ஆயிரம் பூப் பூத்திருந்தால் நான் ஆச்சர்யப்பட மாட்டேன்’

என்று நான் எழுதிக்கொண்டிருந்தபோது, வெளியே சாலையிலிருந்து ``மகேந்திரா….” என்று ஆனந்தின் குரல் கேட்டது. 

1983: ஒரு சில்க் கதை - சிறுகதை

சுவர்க்கடிகாரத்தைப்  பார்த்தேன். மணி இரவு 9. நான்  மாடி அறையிலிருந்து இறங்கி வந்தேன். தெருவில் நின்றுகொண்டிருந்த சிவாவும் ஆனந்தும் என்னைப் பார்த்தவுடன், `வா…’ என சைகை செய்தனர். கூடத்தில் சித்தப்பாவுடன் பேசிக்கொண்டிருந்த ஆங்கில வாத்தியாரான என் அப்பா, ``யார்டா அது? உங்களுக்கெல்லாம் நேரம், காலமே கிடையாதாடா?” என்று குரல் எழுப்பினார்.

``நான்தான் ஆனந்துப்பா. முக்கியமான ஒரு வாழ்க்கைப் பிரச்னைப்பா” என்று தெருவிலிருந்து ஆனந்த் குரல்கொடுத்தான்.

``வெளக்கமாத்தால அடிப்பேன்” என்று அப்பாவிடமிருந்து பேரன்புடன் பதில் வர… ஆனந்த் அமைதியானான்.

நான் கேட்டைத் திறந்துகொண்டு சாலைக்கு வந்தேன். எதிர் வீட்டு ராஜேந்திரன், தெருவில் கட்டிலில் படுத்துக்கொண்டு தனது எட்டாவது காதல் தோல்விக்கு துக்கம் அனுசரிப்பதற்காக டேப்ரெக்கார்டரில் `குயிலே…. குயிலே… உந்தன் கீதங்கள் கேட்காதோ…’ பாடல் கேட்டுக் கொண்டிருந்தார். பக்கத்து வீட்டுச் சுவரில், எங்கள் ஊருக்கு ஒரு திருமணத்துக்கு வருகைதரும் கல்வி அமைச்சர் செ.அரங்கநாயகத்தை வரவேற்று சற்றுமுன் ஒட்டப்பட்ட போஸ்டர், பசை காயாமல் இன்னும் ஈரத்துடன் இருந்தது. 

என்னைப் பார்த்தவுடன் ஆனந்த், ``ஏ மகேந்திரன் ஹை!” என்றான் சிவாவிடம். ஆனந்த் இந்தி வாத்தியார் பெண்ணைக் காதலிப்பதற்காக, அந்த இந்தி வாத்தியாரிடமே இந்தி ட்யூஷன் சென்று கொண்டிருக்கிறான். அதனால் சமீப நாள்களாக நடுநடுவே, ``ஏ நடராஜா தியேட்டர் ஹை…” “ஏ தண்ணித்தொட்டித்தெரு ஹை” என்று எங்களிடம் இந்தி பேசிப் பயிற்சியெடுத்துக்கொண்டிருந்தான்.

என் தோளில் கை போட்டபடி, ``முக்கியமான ஒரு விஷயம் பேசணும் மாப்ள… மோகன், வாரியார் கதை கேட்கிறதுக்காக காமாட்சியம்மன் கோயிலுக்குப் போயிருக்கான். அங்கே போய் அவனையும் அழைச்சுட்டுப் போயிடலாம்” என்ற சிவா, ஆறடி உயரத்தில் ஜிம் பாடியுடன் கட்டுமஸ்தாக இருந்தான்.

``மோகன் எதுக்குடா வாரியார் கதை கேட்கப் போயிருக்கான்?”

``அவன் ஆளு நிர்மலா, அவங்க பாட்டியோட வாரியார் கதை கேட்கப் போயிருக்கு. இவனும் பின்னாடியே போயிட்டான்.”

தெருமுனை, மணி கடை வந்ததும் நின்றோம். ஆனந்த், ``அரைப் பாக்கெட் Blue bird சிகரெட் தா மணி” என்று வாங்கிக்கொண்டான். கடை வாசல் கயிற்றில் புத்தகங்கள் தொங்குவதைப் பார்த்த நான், ஒரு ரூபாய் ஐம்பது பைசாவை எடுத்துக் கொடுத்துவிட்டு, கயிற்றில் தொங்கிய ஆனந்த விகடன் புத்தகத்தை எடுத்தேன். புத்தகத்தைப் புரட்டியபடி சிவாவிடம், ``சுஜாதாவோட `பிரிவோம் சந்திப்போம்’ படிச்சுக்கிட்டிருக்கியா?” என்றேன்.

``ம்…. லவ் ஸ்டோரிலயும் சுஜாதா கலக்கிறாரில்ல? இப்ப சிவசங்கரியோட `பாலங்கள்’ ஆரம்பிச்சிருக்கு. படிக்கிறியா?”

``ம்…. அதுவும் நல்லாதான் இருக்கு.”

காமாட்சியம்மன் கோயிலில் நாங்கள் நுழைந்தபோது வாரியார், ``முருகனின் கொடி என்ன?” என்று கேட்க… மோகன் எழுந்து, ``சேவற்கொடி ஐயா…” என்று நிர்மலாவைப் பார்த்தபடி பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.. வாரியார் ``சபாஷ்…’’ என்று ஒரு கல்கண்டைத் தூக்கிப் போட, மோகன் பாய்ந்து கல்கண்டைப் பிடிக்கும்போது, அருகில் இருந்த ஒரு பெண்ணின் மீது விழுந்து, திட்டு வாங்கிக் கொண்டு எழுந்தான். நாங்கள் அவனைப் பார்த்து சைகை காண்பிக்க…  எங்களை நோக்கி வந்த மோகன், ``டிசம்பர் பூ வெச்சுக்கிட்டு நிர்மலா என்னமா இருக்கா தெரியுமா?” என்றான் எங்களிடம்.

``ஏ நிர்மலா ஹை...” என்ற நிர்மலாவை நோக்கிக் கை காண்பித்த ஆனந்தின் தலையில் நான் ஓங்கித் தட்டினேன்.

காவிரிக்கரை, அரசமரத்தடி, படித்துறை, கரையோரத் தூங்குமூஞ்சி மரங்களிலிருந்து, சில்வண்டுகளின் சத்தம் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. நிதானமாக ஓடிக்கொண்டிருந்த காவிரி நீரில், நிலா வெளிச்சம் ததும்பினாற்போல் பளபளத்துக் கொண்டிருந்தது. நாங்கள் கடைசிப் படிக்கட்டில், நீரில் காலை நனைத்தபடி அமர்ந்திருந்தோம். சிகரெட்டை எடுத்து நாங்கள் பற்றவைக்க… தை மாதக் குளிருக்கு புளூ பேர்டு காட்டம் இதமாக இருந்தது.

சிவா திடீரென, ``மாப்ள... சும்மா பொறந்தோம், சோறு தின்னோம்னு செத்துடக் கூடாதுடா. நம்ப வாழக்கையில ஏதாச்சும் சாதிக்கணும்டா” என்றான் வேகமாக.

``என்னடா ஆச்சு உனக்கு?”

சில விநாடி நேரம் ஒன்றும் பேசாமல் சிகரெட் புகையை இழுத்து விட்ட சிவா, ``சில்க் ஸ்மிதாவுக்கு ரசிகர் மன்றம் ஒண்ணு ஆரம்பிச்சு, நம்ம ஊருல சிலுக்குக்கு சிலை வைக்கணும்” என்று தடாலடியாகக் கூற, நாங்கள் அதிர்ந்தோம். சில விநாடி நேரத்துக்கு யாரும் ஒன்றும் பேசவில்லை.

நான்தான் முதலில் சமாளித்துக்கொண்டு, ``டேய்… சிலுக்குக்கு சிலை வைக்கப்போறோம்னு சொன்னா, வீட்டை விட்டுத் துரத்திடுவாங்க…” என்றேன் புகையை விட்டபடி.

``எங்க வீட்டுல மட்டும் கொஞ்சுவாங்களா? வாழற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டாமா? நாளைக்கு சாவுற காலத்துல நம்ம வாழ்க்கையில உருப்படியா என்ன பண்ணியிருக்கோம்னு யோசிச்சா, இதுவாச்சும் இருக்கும்ல?” என்று தொடர்ந்து சீரியஸாகப் பேசினான் சிவா.

``அதானே… எங்க அரிசி மில்லுலயே ஆபீஸ் போட்டுடலாம். அங்கே நெல்லு காயப்போடுற களத்துல, சிலுக்கு சிலையை வெச்சுடலாம். ரோட்டிலிருந்து பார்த்தா தெரியும்” என்றான் ஆனந்த். ஆனந்தின் அப்பா ஏராளமான சொத்துகளை விட்டுவிட்டு, சிறுவயதிலேயே ஒரு விபத்தில் இறந்துவிட்டார். ஒரே பையன் என்று அவன் அம்மாவால் வெகுசெல்லமாக வளர்க்கப்படுவதால், வீட்டில் அவன் வைத்ததுதான் சட்டம். கல்லூரிக்கு வந்த பிறகு சொத்துகளையும் அவனேதான் நிர்வகித்து வருகிறான்.

நான், ``இப்பதான் விஜி என்கூட பேச ஆரம்பிச்சிருக்கு. சிலுக்குக்கு சிலை வைக்கிறோம்னு தெரிஞ்சது... அவ்வளவுதான்” என்று சொல்லும்போதே விஜி மனதுக்குள் வந்து, `ஹாய் மகேந்திரா!’ என்றாள்.
விஜி என்கிற விஜயலட்சுமி, கடந்த இரண்டு மாதங்களாக நூலகத்தில் வைத்துப் பழக்கம். 1980-களின் தாவணிப் பெண்கள், கொஞ்சம் சுஜாதா, பாலகுமாரன் எல்லாம் படித்தவுடனேயே தங்களை அறிவுஜீவியாக நினைத்துக்கொள்வார்கள். அப்போது அவர்களின் தலைக்குப் பின்னால் மங்கலாக ஓர் ஒளிவட்டம் தோன்றும். இந்த ஒளிவட்டத்தின் பிரச்னை என்னவென்றால், அது வேறு யார் கண்களுக்கும் தெரியாது. எனவே அவர்கள் தங்கள் ஒளிவட்டம் கண்களுக்குத் தெரியும் ஆளைத் தேடிக்கொண்டேயிருப்பார்கள். நான் எப்போதும் அழகிய பெண்களின் ஒளிவட்டங்களை அங்கீகரிப்பவன் என்பதால், விஜி சமீபகாலமாக என்னோடு பேச ஆரம்பித்திருக்கிறாள்.

``காதலெல்லாம் இருக்கவேண்டியதுதான். ஆனா, அது நம்ம கடமைகள்ல குறுக்கிடக் கூடாது” என்றான் சிவா. சிவா கடமை என்றது, சில்க் ஸ்மிதாவுக்குச் சிலை வைப்பதைத்தான். அந்த சிகரெட்டைக் குடித்து முடிப்பதற்குள் மனதில் காதலுக்கும் கடமைக்கும் இடையே மிகப்பெரிய போர் நிகழ்ந்தது. கடைசியில் `தங்கப்பதக்கம்’ சிவாஜிபோல் கடமையே பெரிது என்ற முடிவுக்கு வந்து, ``சரி, நான் ரசிகர் மன்றத் தலைவரா இருக்கேன்” என்று நான் கூறியவுடன் சிவாவின் முகம் மாறியது.

``நான்தான் இந்தப் பேச்சை ஆரம்பிச்சிருக்கேன். நான்தான் தலைவரா இருக்கணும்.”

``ஏன்... எப்பவும் நீதான் தலைவரா இருக்கணுமா? பொங்கல் இளைஞர் விழா மன்றத்துக்கு நீதான் தலைவரா இருந்த. இதுக்கு நான் இருக்கிறேன். நீ துணைத் தலைவரா இரு.”

``நீங்கள்லாம் `மூன்றாம் பிறை படம்’ பார்த்ததுல இருந்துதான் சிலுக்கு ஃபேன். `வண்டிச்சக்கரம்’ படத்துல சராயக்கடையில மஞ்சள் கலர் ஜாக்கெட் போட்டுக்கிட்டு சிலுக்கு முதல் சீன்ல வரும். அப்பவே நான் சில்க் ரசிகன். அதுவுமில்லாம, நான்தான் ஐடியாவைச் சொன்னேன். அதனால நான்தான் தலைவரா இருப்பேன்.”

``எல்லாத்துக்கும் நீதான் தலைவரா? எனக்கும் தலைவராவணும்னு ஆசையிருக்காதா?’’

உடனே சிவா கோபத்துடன், ``மகேந்திரா, உனக்குக் கொஞ்சமாச்சும் நன்றி உணர்வு வேணும்டா. இதெல்லாம் சொல்லிக் காமிக்கக் கூடாது. இருந்தாலும் சொல்றேன், `அவளுட ராவுகள்’ ஏழு ஷோவுக்கும் நான்தான் உனக்கும் சேத்து டிக்கெட் எடுத்தேன். இதெல்லாம் சொல்லிக் காமிக்கக் கூடாது. இருந்தாலும் சொல்றேன், தஞ்சாவூருக்கு உங்களை எல்லாம் நான்தான் கார் வெச்சு `தம்புராட்டி’ படத்துக்கு அழைச்சுட்டுப் போனேன். இதெல்லாம் சொல்லிக் காமிக்கக் கூடாது. இருந்தாலும் சொல்றேன்… நான்தான்...” என்று மீண்டும் ஆரம்பிக்க, குறுக்கே புகுந்த ஆனந்த், ``விடு சிவா. மகேந்திரன் முதமுதலா தலைவர் போஸ்ட்டுக்கு ஆசைப்படுறான். இந்த ஒரு தடவை விட்டுக்கொடு” என்றான்.

``மோகனு… நீ என்ன சொல்ற?” என்றான் சிவா.

``மகேந்திரனே தலைவரா இருக்கட்டும்” என்றான் மோகன். மோகனும் ஆனந்தும் ஒண்ணாம்கிளாஸிலிருந்து இடைவெளி இல்லாமல் என்னோடு படிக்கிறவங்க. அதனால எப்பவும் எனக்குத்தான் ஆதரவா இருப்பாங்க. சிவா கொஞ்சம் தூரத்து ஃப்ரெண்ட்தான். கல்லூரி வந்துதான் பழக்கம்.

சில விநாடிகள் யோசித்த சிவா, ``ஓகே… நீ தலைவர். நான் துணைத் தலைவர்” என்றாலும் அவன் முகத்தில் அதிருப்தி தெரிந்தது.

நான்,  ``மோகன் செயலாளர். ஆனந்த் பொருளாளர்” என்று கூற,

ஆனந்த், ``மேரா பொருளாளர் ஹை!” என்றான்.

``மார்ச் மாசம் மன்றத்தைத் திறந்திடுவோம்” என்றான் சிவா.

``ஏன்டா அவ்ளோ நாள் தள்ளிப் போட்டுகிட்டு? அடுத்த வாரமே ஆரம்பிச்சிடுவோம்” என்றேன் நான்.

``டேய்… சிலை வைக்கிறதுன்னா சும்மா நினைச்சுட்டியா? ஒரு அடிக்கு 30 ரூபாய் ஆவுமாம். நம்ம பணத்தைப் போட்டெல்லாம் சிலை செய்ய முடியாது. அதனால ஊருல நன்கொடை வசூலிப்போம். அப்புறம் சிலை ஆர்டர் பண்ணி செய்யணும். அதுக்கெல்லாம் டைம் ஆவும். அதான் மார்ச் மாசம் திறக்கலாம்னு இருக்கேன்” என்று கூற… நான், ``இருக்கோம்…” எனத் திருத்தினேன்.

இப்போது ஆனந்த், ``டேய்… சிலுக்குக்குச் சிலை வைக்கன்னு டொனேஷன் கேட்டா, தருவாங்களா?” என்றான்.

``கண் இருக்கிற ஆம்பளைங்க அத்தனை பேரும் தருவாங்க” என்றான் சிவா.

ஞாயிற்றுக்கிழமை, கடைத்தெருவில் எங்கள் வசூலை ஆரம்பித்தோம். முதலாவதாக நாங்கள் நாயுடு அரிசி மண்டியில் நுழைந்தபோது ரேடியோ செய்தியில், `இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் திரு.கனிகான் சவுத்திரி...’ என ஒலித்துக்கொண்டிருந்தது. கல்லாப்பெட்டியில் நாமத்துடன் அமர்ந்து, பணத்தை எண்ணிக்கொண்டிருந்த  ராஜாராம் நாயுடுவைப் பார்த்து, ``வணக்கம் நயினா” என்று நாங்கள் கோரஸாகக் கத்த… அவர் மிரண்டு போனார்.

``ஏன்டா இப்படிக் கத்துறீங்க? இப்பதான பொங்கல் நன்கொடை வசூலிச்சுட்டுப் போனீங்க. இப்ப என்ன நோட்டோட வந்து நிக்கிறீங்க?” என்றார்.

``நயினா... அது வந்து... அடுத்த நூற்றாண்டின் தமிழக முதல்வருக்குச் சிலை வைக்க. டொனேஷன் கலெக்ட் பண்றோம்” என்றேன் நான்.

``அதாருடா அடுத்த நூற்றாண்டின் தமிழக முதல்வர்?”

``சின்னத்தாரகை சிலுக் ஸ்மிதா நயினா” என்றான் ஆனந்த்.

``பெருமாளே...” என்று அலறியபடி எழுந்தவர், ``சிலுக்குக்குச் சிலை வைக்கிறீங்களா? ராவு காலத்துல பொறந்தவன்ங்களா…. இதுக்கெல்லாம் நன்கொடையா? ஓடுங்கடா!” என்று துரத்தி விட்டார்.

``என்னடா, முத ஆளே துரத்துறார்” என்றேன்.

``பொங்கல் விழா நன்கொடைக்கு இவர்கிட்ட தான் முதல்ல வருவோம். பெரிய அமௌன்ட்டா போடுவார். அதுக்காக வந்தேன். சிலுக்குன்னவுடனே நயினா சீர்றாரே! சரி, நம்ம பாப்புலர் முருகனைப் பாப்போம்” என்று பாப்புலர் துணிக்கடையை நோக்கி நடந்தோம்.

பாப்புலர் துணிக்கடை முதலாளி முருகன், கடை வாசலிலேயே நின்றுகொண்டு, தெருவில் செல்லும் பெண்களை எல்லாம் வயது வித்தியாசம் இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தார். முருகன் முதலாளி பிறவியிலேயே `பெண்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்’ குறைபாட்டுடன் பிறந்திருந்ததால், நாங்கள் கடைக்குள் நுழைந்ததை அவர் கவனிக்கவில்லை.

``அண்ணன்...” என்று மோகன் அழைக்க... திரும்பிப் பார்த்தவர், ``நீங்க எப்படா வந்தீங்க?” என்றார்

``நீங்க அந்த ஊதா கலர் தாவணி உடுத்திய பொண்ணப் பார்த்துக்கிட்டிருந்தப்பவே வந்துட்டோம்ண்ணன்” என்ற ஆனந்தை, நான் முறைத்தேன்.

``எவ்ளோ வயசானாலும் மனசு மட்டும் கழுத... அப்படியே இளமையாவே இருக்கு” என்றபடி கல்லாப்பெட்டிக்குப் பின்னால் அமர்ந்தார். கல்லாப்பெட்டியின் மேல், `பொம்மை’ சினிமா இதழ் காற்றில் படபடத்துக்கொண்டிருந்தது.

நான், ``நம்ம ஊருல  எவ்வளவோ சிலை இருக்குண்ணன். ஆனா, சிலுக்குக்கு ஒரு சிலை இல்லைண்ணன். அதான் நம்ம ஊர்ல சிலுக்குக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு, சிலுக்குக்கு ஒரு சிலையும் வைக்கலாம்னு இருக்கோம்” என்றவுடன் முருகன் முதலாளியின் கண்கள் ஒளிர்ந்தன.

``சிலுக்குக்குச் சிலையா?” என்றவர் பரவசத்துடன், ``டேய்… தம்பிங்களுக்கு கோல்டு ஸ்பாட் வாங்கிட்டு வா” என்று கடைப்பையனை அனுப்பிவிட்டு, ``உக்காருங்க” என்றார். நாங்கள் தரையில் விரித்திருந்த பாயில் அமர்ந்தபோது, பக்கத்துக் கல்யாண மண்டப ஸ்பீக்கரிலிருந்து, ``ஆனந்த ராகம்… கேட்கும் காலம்…” பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

முருகன் முதலாளி, ``இப்பதான் அக்டோபர் மாச `பொம்மை’ இதழ்ல, எழுத்தாளர் புஷ்பா தங்கதுரையும் சிலுக்கு ஸ்மிதாவும் சந்திச்சுப் பேசிக்கிட்டதைப் படிச்சு முடிச்சேன். கரெக்டா சிலுக்குக்கு சிலைன்னு வந்து நிக்கிறீங்க. உங்களை யெல்லாம் நினைச்சா எனக்குப் பெருமையா இருக்குடா. நான் சின்ன வயசுல சரோஜாதேவிக்குச் சிலை வைக்கலாம்னு ட்ரை பண்ணி முடியாமப் போயிடுச்சு.  நீங்களாச்சும் பண்ணுங்கடா. நீங்கள்லாம் தமிழ்ப் படத்துல மட்டும்தான் சிலுக்கை ரசிப்பீங்க. நான் கேரளாவுக்குத் துணி போடப் போறப்ப, `ரதிலயம்’, `வயல்’னு மலையாளப் படத்துலயெல்லாம்கூட சிலுக்கு நடிச்சிருக்குன்னு பார்ப்பேன். `வயல்’ படத்துல சிலுக்கு அப்பளம் போடுற பொண்ணா வரும். அதிலிருந்து அப்பளம் சாப்பிடுறப்பெல்லாம் சிலுக்கைத்தான் நினைச்சுப்பேன்” என்றபடி எதிர் மளிகைக்கடை போர்டில் இருந்த அப்பளம் போர்டையே சிலுக்கைப் பார்ப்பதுபோல் பார்த்தார்.

1983: ஒரு சில்க் கதை - சிறுகதை

கோல்டு ஸ்பாட் வந்தது. கல்லாவிலிருந்து முருகன் பத்து ரூபாய் நோட் ஒன்றை எடுத்து நீட்ட, நாங்கள் அசந்துபோனோம். ``சிறப்பா செய்ங்க” என்று வாசல் வரை வந்து வழியனுப்பிவைத்தார்.

பொன்மகள் லாட்டரி சென்டரில் நாங்கள் நுழைந்தபோது முதலாளி முருகேசன், மைக்கில் ``கேரள அரசின் கைரளி, மாவேலி பம்பர் குலுக்கலில்...” என்று கூறிக்கொண்டிருந்தவர் எங்களைப் பார்த்து, பேச்சை நிறுத்தினார். ``என்னாங்கடா, கும்பலா வந்திருக்கீங்க?” என்றவர், தன் மகன் மணிவண்ணனிடம், ``டேய்… சீட்டை செட்டு பிரிச்சு பின் அடி” என்றார். நாங்கள்  அவரிடம் சிலுக்கு சிலை விஷயத்தைக் கூறினோம்.
``டேய்… எது எதுக்குப் பணம் கலெக்ட் பண்றதுன்னு உங்களுக்கு விவஸ்தையே இல்லையாடா?” என்று எங்களை அடித்துத் துரத்தாத குறையாகத் துரத்திவிட்டார். நாங்கள் நான்கு கடை தள்ளி இருந்த `விநாயகா விலாஸ்’ ஹோட்டலை நெருங்கியபோது, ``மகேந்திரா...” என்று பின்னாலிருந்து முருகேசனின் குரல் கேட்டது. நாங்கள் நின்றோம்.

எங்களை நெருங்கிய முருகேசன், ``ஏன்டா, என் பையன் பக்கத்துல உட்கார்ந்திருக்கான். அவனை வெச்சுக்கிட்டு சிலுக்கு சிலைக்குக் காசு கேட்கிறீங்களே… எப்படிரா கொடுக்க முடியும்?” என்றவர் இரண்டு ரூபாயை எடுத்து நீட்டினார். தொடர்ந்து, ``நம்மளாலதான் ஊருல ஒரு நல்ல காரியம் எடுத்துப் பண்ண முடியலை. நீங்களாச்சும் பண்றப்ப துணை நிக்கணும்ல. இந்த விஷயம் என் பையனுக்குத் தெரிய வேணாம்” என்று கூறிவிட்டுச் சென்றார்.

நாங்கள் விநாயகர் விலாஸ் ஹோட்டலை விட்டு வெளியே வந்தபோது, முருகேசனின் மகன் மணிவண்ணன் வெளியே நின்றுகொண்டிருந்தான். சுற்றிலும் பார்த்துக்கொண்டு, ``என் அப்பா இருக்கார்னு கடையில கொடுக்க முடியலை” என்று ஒரு ரூபாய் நோட்டை நீட்டியவன், ``இது என் அப்பாவுக்குத் தெரிய வேணாம்” என்றான்.

அப்போது மோகன், ``நல்லதொரு குடும்பம்... பல்கலைக்கழகம்!” என்று பாட, நான் அவனை முறைத்தேன். ``ஏ ஏக் ருப்பியா ஹை!” என்ற ஆனந்த் பணத்தைக் கைப்பையில் வைத்துக்கொண்டான்.

அன்று இரவு நான் வீட்டினுள் நுழைந்தபோது, கூடத்தில் ஒரு சிறு படையே உட்கார்ந்திருந்தது. உள்ளூரிலேயே நாங்கள் கட்டிக்கொடுத்திருக்கும் என் அக்காவின் கணவர், என்  சித்தப்பா, சித்தி, தாத்தா, பாட்டி, அப்பா... என அனைவரும் என்னையே வெறித்துப் பார்க்க, உள்ளுக்குள் லேசாக உதைத்தது. நான் வேகமாக சமையலறைக்குச் சென்றேன். அங்கே அக்காவும் அம்மாவும் கண்களின் நீரைத் துடைத்துக்கொண்டிருந்தனர்.

``என்னம்மா, ஏதாச்சும் பிரச்னையா?” என்றேன்.

``எங்க மானத்த வாங்குறதுக்குன்னே வந்து பொறந்திருக்கியாடா?” என்றார் அம்மா.

``என்னாச்சும்மா?”

``ஏன்டா, நீ சிலுக்குக்குச் சிலை வைக்கப்போறியாமே!” என்று அம்மா கேட்டவுடன் நான் அதிர்ந்தேன். `அதற்குள் வீடு வரை விஷயம் வந்துவிட்டதா?’

அக்கா, ``எங்க மாமனாருக்கு விஷயம் தெரிஞ்சு, வீட்டுல ஒரே ரகளை. இன்னக்கி சாயங்காலம் வீட்டுக்கு வந்தவுடனே என் மாமனார், `நான் சுப்பிரமணியர் கோயில் தர்மகர்த்தா. கோயில்ல புதுசா பிள்ளையார் சிலை வைக்க பணம் வசூலிச்சுக்கிட்டிருக்கேன். போற இடத்துல எல்லாம், உங்க சம்பந்திப் பையன் சிலுக்குக்குச் சிலை வைக்க இப்பதான் பணம் வாங்கிட்டுப் போனார்ங்கிறான். சம்பந்தி வீட்டுப் பையன், இப்படி அரைகுறையா ஆடுறவளுக்கெல்லாம் சிலை வெச்சா, ஊருல தலை காமிச்சு நடக்க முடியுமா?’னு சத்தம் போடுறார். இன்னிக்கின்னு பார்த்து என் வீட்டுக்காரர் திருவையாத்துல இருந்து எனக்குன்னு ஆண்டவர் நெய் அல்வா வாங்கிட்டு வந்தார். ஆசையா எடுத்து ஒரு வாய்கூட போடலை. என் மாமியார் கண்டபடி திட்டி, `போய், முதல்ல சிலுக்கு சிலை வைக்கிறதை நிறுத்து’னு அனுப்பிடுச்சு. கையில எடுத்த அல்வாவை அப்படியே வெச்சுட்டு வந்துட்டேன்” என்று அழ... அக்கா, சிலுக்குப் பிரச்னைக்காக அழுகிறாளா அல்லது அல்வாவுக்காக அழுகிறாளா என எனக்குப் புரியவில்லை.

அப்போது பின்னால் இருந்து என் சட்டையைக் கொத்தாகப் பிடித்த அப்பா, ``சிலுக்குக்குச் சிலை வைக்கிறேன்னு ஊரு ஃபுல்லா பணம் வசூலிக்கிறியே, உனக்கு வெட்கமா இல்லை?” என்றபடி என் கன்னத்தில் அறையப்பார்க்க… பின்னாலேயே வந்த சித்தப்பா, ``விடுண்ணன்… விசாரிப்போம். தோளுக்குமேல வளர்ந்த பிள்ளைய அடிச்சுக்கிட்டு” என்று தடுத்து, என்னைக் கூடத்துக்கு அழைத்து வந்த சித்தப்பா, ``படிக்கிற பய, உனக்கு ஏன்டா இந்த வேலை?” என்றார்.

``டி.ஆர்.ராஜகுமாரிக்கு வெச்சாலும் பரவாயில்லை” என்ற தாத்தாவை அப்பா முறைக்க, தாத்தா அமைதியானார்.

``எனக்குன்னு எங்கிருந்துதான் வந்து பொறந்துச்சோ? வெட்கங்கெட்ட நாயி!” என்றார் அப்பா காட்டமாக.

நான், ``இதுல என்ன வெட்கம்? எனக்குப் பிடிச்ச நடிகைக்கு நான் சிலை வைக்கிறேன்” என்றவுடன் சற்றும் எதிர்பாராதவிதமாக அப்பா, என் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். தொடர்ந்து அவர் மடேர் மடேரென என் முதுகில் மாறி மாறி அடிக்க ஆரம்பித்தார். அனைவரும் அவரைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுக்க, அப்பா மீறிக்கொண்டு வந்து என்னை அடித்தார். வலி தாங்க முடியாமல் நான் அழ ஆரம்பிக்க, என் பாட்டி ``ஐயோ... ஐயோ... என் பேரனைக் கொல்றானே…. என் பேரனைக் கொல்றானே…” என்று கத்த, அப்பா அடிப்பதை நிறுத்தினார்.

சுவர் ஓரம் அமர்ந்து அழுதுகொண்டிருந்த என்னிடம் வந்து என் கண்களைத் துடைத்த பாட்டி, ``யாரு கண்ணு சிலுக்கு... சுதந்திரத்துக்குப் போராடினவங்களா..?” என்றார்.

``இல்ல பாட்டி, நடிகை.”

``நல்லா நடிக்குமா கண்ணு?”

``அட்டகாசமா நடிக்கும் பாட்டி” என்றேன் தோள்கள் குலுங்க, தேம்பிக்கொண்டே.

``நல்லா நடிக்குமாமே... வெச்சுட்டுப்போறான் விடுங்கடா. இதுக்கு ஏன்டா ஊரக் கூட்டி கூத்தடிக்கிறீங்க?”

அப்போது வெளியேயிருந்து, ``சார்... சார்...” என்று சத்தம் கேட்டது. அப்பா வெளியே எட்டிப்பார்த்தார். வெளியே பத்தாவது படிப்பதுபோல் இருந்த நான்கைந்து பையன்கள், ``நாங்க கீழப்பழூர்ல இருந்து வர்றோம். சார் இல்லையா?” என்றனர்.

``எந்த சார்?”

``மகேந்திரன் சார்”:

திரும்பி என்னை முறைத்த அப்பா, ``சாரு இல்லை. என்ன விஷயம்?” என்றார்.

``இல்ல... சாரு சிலுக்குக்குச் சிலை வைக்க நன்கொடை வாங்குறார்னு கேள்விப்பட்டோம். அதான் எங்க பங்கைக் கொடுத்துட்டுப் போலாம்னு வந்தோம். நீங்க கொடுத்துடுறீங்களா?” என்று அவர்கள் ஒரு ரூபாயை நீட்டினர். ``என்னடா பங்கு...” என்று பணத்தை வாங்கி அவர்கள் முகத்தில் விட்டெறிந்த அப்பா, ``ஓடுங்கடா இங்கேயிருந்து” என்று துரத்திவிட்டு, உள்ளே வந்தார். ``கீழப்பழூர் வரைக்கும் மானம் போகுது. டேய், ஒழுங்கு மரியாதையா இந்தச் சிலை வேலைய நிறுத்து” என்றார்.

நான் ஆவேசமாக, ``அதெல்லாம் முடியாது. எனக்கும் 19 வயசு ஆவுது. எனக்குன்னு ஒரு சுதந்திரம் இருக்கு” என்றேன்.

அப்போது நான் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக அப்பா ஆங்கிலத்தில், ``யூ ஆர் நாட் இண்டிபெண்டன்ட்... யூ ஆர் டிபெண்டன்ட் டு மீ” என்று பேசி, தான் ஆங்கில வாத்தியார் என்பதை நிரூபித்தார். நானும் பதிலுக்கு விடாமல், ``நோ ஃபாதர், ஐ’யம் எ ப்யூர், கம்ப்ளீட், பர்ஃபெக்ட், ஹன்ட்ரட் பர்சென்ட் ஜென்யூன் இண்டிபெண்டன்ட்” என்று ஆங்கிலத்தில் பேச, பயந்துபோன அப்பா சட்டெனத் தமிழுக்குத் தாவி, ``கடைசியா நீ என்ன சொல்றே?” என்றார்.

நான், ``இந்த வீட்டுல இருக்கிற அத்தனை ஆம்பளைங்களும் `எனக்கு சிலுக்கைப் பிடிக்காது’னு சொல்லுங்க, விட்டுடுறேன். நம்ப `சகலகலா வல்லவன்’ படம் பார்க்கப் போனப்ப, `நேத்து ராத்திரி யம்மா’ பாட்டு போட்டான். அப்ப பக்கத்துல வயசுப்பையன் இருக்கான்னுகூட பார்க்காம, சீட்டு நுனிக்குப் போயி, வெச்ச கண்ணு எடுக்காம பார்த்தீங்க. அம்மா பாட்டு நடுவுல பேச்சு கொடுத்ததுக்கு, `பேசாம வாய மூடிக்கிட்டுப் படத்தைப் பாருடி’னு நீங்க சொல்லலை?

மாமா, நீங்க `சில்க்... சில்க்... சில்க்’ படம் ரிலீஸானப்ப பொங்கல்னுகூட வீட்டுல தங்காம திருச்சிக்குப் போயி, ஃபர்ஸ்ட் நாளே பார்த்துட்டு வரல?” என்று கூற, மாமா தலையைக் குனிந்துகொண்டார்.

அடுத்து சித்தப்பாவின் அருகில் நெருங்கிய நான் அவர் காதில் மெதுவாக, ``ஏன் சித்தப்பா… நம்ம நடராஜா தியேட்டர்ல காலைக் காட்சி `நேற்று ராத்திரி சிலுக்கு’, `ஒதுக்கப்பட்டவள்’னு சிலுக்கு நடிச்ச  மலையாளப் படமெல்லாம் போட்டப்ப,  முத    ஆளா என் ஃப்ரெண்ட்ஸ்ங்களுக்கு முன்னாடி க்யூல நின்னு என் மானத்த வாங்கல?” என்று சொன்னதுதான் தாமதம்.

அரண்டுபோன சித்தப்பா, ``டேய்… சத்தமா சொல்லாதடா” என்றவர், தடாலடியாக ``மகேந்திரன் பண்றது என்ன தப்புங்கிறேன்?” என்று கேட்க, மொத்தக் குடும்பமும் அவரை அதிர்ச்சியுடன் பார்த்தது.
தொடர்ந்து சித்தப்பா,  ``பரம்பரை பரம்பரையா நம்ம குடும்பம் ஆட்டக்காரிங்களை ஆதரிக்கிற குடும்பம்தானே! நம்ப பெரிய தாத்தா நாச்சியார் கோயில் போயி நாட்டியக்காரிங்களுக்கு ஆதரவு கொடுத்துக் கொடுத்துதானே சூரக்கோட்டை நிலம் மொத்தமும் போச்சு” என்று கூற, அந்த இடமே அமைதியானது. தொடர்ந்து சித்தப்பா என் அம்மாவைப் பார்த்து, ``ஏன் அண்ணி, உங்க தாத்தா ஒரு தஞ்சாவூர் ஆட்டக்காரிக்கு ஆதரவு கொடுக்கத்தானே மேலவீதி வீட்டையே எழுதித் தந்தாரு” என்று கூற, அம்மாவின் முகம் வெளுத்துவிட்டது.

நான் அப்பாவைப் பார்க்க, அவர் முகம் வியர்த்து விறுவிறுத்து இருந்தது. நான், `இவரு முகம் ஏன் இப்படி வேர்க்குது? இவரு யாருக்காச்சும் `ஆதரவு’ அளிச்சிருப்பாரோ?’ என்று சந்தேகமாகப் பார்த்தேன்.
அப்பா, ``என்னை ஏன்டா அப்படிப் பார்க்கிற... நானெல்லாம் யாருக்கும் `ஆதரவு’ தரல. நீ சொல்லுடி. உன் மவன் என்னை சந்தேகமா பார்க்கிறான்” என்று அம்மாவிடம் கூற, அம்மா முணுமுணுப்பாக ``ம்க்கும், நீங்க ஆதரவளிச்சுட்டாலும்...” என்றார். மேற்கொண்டு விவாதம் தொடர்ந்தால், யாராரு யாருக்கு ஆதரவளித்தார்கள் என்று பெரிய பூகம்பம் வெடிக்கக்கூடிய வாய்ப்பிருந்ததால், அனைவரும் அமைதியானார்கள். இதுதான் சாக்கு என நான் வீட்டை விட்டு வெளியே வந்தேன்.

நான் தெருவில் இறங்க, ``மகேந்திரா...’’ என்று குரல் கேட்டது. திரும்பினேன். தாத்தா. என் அருகில் வந்த தாத்தா, ``சிலுக்குன்னா `மூன்றாம் பிறை’ படத்துல மலை உச்சியில, கமலகாசனோடு  ஆடுச்சே... அந்தப் பாப்பாதானே?” என்றார்.

நான் எரிச்சலுடன் ``ஆமாம் தாத்தா” என்றேன். சுற்றிலும் பார்த்த தாத்தா, வேட்டி மடிப்பை விரித்து ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து என்னிடம் தந்தபடி, ``சிலுக்கு சிலை கண்ணும் உதடும் என் செலவுல இருக்கட்டும்” என்று கூற, நான் ``ஆ…’’ என்று அலறினேன்.

இரண்டு வாரகால வசூலுக்குப் பிறகு, நாங்கள் கணக்குவழக்கு பார்ப்பதற்காக ஆற்றங்கரையில் கூடியிருந்தோம். சற்று தள்ளியிருந்த காந்தி திடலில் தி.மு.க பேச்சாளர் வெற்றிகொண்டான், ``நேத்து திடீர்னு நம்ம முதலமைச்சர் எம்.ஜி.ஆர் டெல்லியிலிருந்து அரிசி அனுப்பலைனு உண்ணாவிரதம் இருந்திருக்கார். நான் கேட்கிறேன்...” என்று பேசியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

``டேய், நான் சொல்றதைக் கேளுடா…” என்று சிவா கூற, நான் ``சொல்லு” என்றேன்.

``சுவாமிமலையில ஐம்பொன் சிலைதான் செய்வாங்க. அதுவும் சாமி சிலைதான். அது நமக்கு சரிவராது. அப்புறம் அவிநாசிக்குப் பக்கத்துல திருமுருகன் பூண்டிங்கிற ஊர்ல சிலை செய்வாங்களாம். அதைவிட நாகர்கோவில் பக்கத்துல மயிலாடிங்கிற ஊருல சிலையெல்லாம் ரொம்ப அருமையா செய்வாங்களாம். சிவாஜிகூட அவங்க அம்மாவுக்கு அங்கேதான் சிலை செஞ்சாராம். அது ரொம்பப் பிடிச்சுப்போயி, இப்பவும் அந்தப் பக்கம் போனா மயிலாடிக்குப் போய் அங்கே செய்ற சிலைங்களை எல்லாம் பார்த்துட்டு வருவாராம். அதனால அடுத்த வாரம் நம்ம மயிலாடி போய் அட்வான்ஸ் கொடுத்து, சிலை ஆர்டர் பண்ணிடலாம். மார்ச் மாசம் 8-ம் தேதி சிலை திறப்பு விழா வெச்சுப்போம்.”

``சரி, நம்ம சிலுக்கு மன்றத்துக்கு என்ன பேரு வைக்கலாம்?” என்றான் மோகன்.

நான், ``சிலுக் ஸ்மிதா ரொம்ப ஃபேமஸானது `மூன்றாம் பிறை’ படம் வந்தப்புறம்தான். அதுலதான் சிலுக்குக்கு வெறும் பாட்டு மட்டுமில்லாம, நிறைய சீனு. அதனால `மூன்றாம் பிறை சிலுக் ஸ்மிதா மன்றம்’ன்னே பேரு வைப்போம்” என்றேன்.

சிவா, `` `மூன்றாம் பிறை’யைவிட `சகலகலா வல்லவன்’ `நேத்து ராத்திரி யம்மா’தான் மூணு சென்டர்கள்லயும் சிலுக்கைக் கொண்டுபோய் சேத்துச்சு. அதனால `சகலகலா வல்லவி சிலுக் ஸ்மிதா மன்றம்’னு பேர் வைப்போம்” என்றான்.

``இல்ல... `மூன்றாம் பிறை’ சிலுக்குன்னே வைப்போம். இது ஜனநாயக நாடு. மெஜாரிட்டி என்ன முடிவுபண்றோமோ, அதுபடியே வைப்போம்” என்று கூற, மோகனும் ஆனந்தும் தலையாட்டினர்.

தொடர்ந்து நான், `` `மூன்றாம் பிறை’ படத்துல சிலுக்கு ஸ்வெட்டர அழகா கையில வெச்சுக்கிட்டு, ‘ஞாலத்தில் நல்கியது நண்ணுமோ என்றேன். நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாமென்றாள்’னு  பாரதியார் கவிதை ஒண்ணு சொல்லும் பாரு, ஸ்கூல்ல எத்தனை பாரதியார் கவிதைகள் படிச்சிருக்கோம்? ஒண்ணாவது மனசுல பதிஞ்சிருக்கா? சிலுக்கு சொல்லி கேட்டவுடனே அப்படியே மனசுல பதிஞ்சிருச்சு. அதுக்குப் பிறகுதான் நான் அந்தக் கவிதையைத் தேடிப் படிச்சேன். அந்தக் கவிதை பேரு `அழகுதெய்வம்’. மத்த படத்துல எல்லாம் சிலுக்கு வெறும் அழகு நடிகைடா. `மூன்றாம் பிறை’ல அது அழகுதெய்வம்” என்று நான் உணர்ச்சிகரமாகப் பேசிவிட்டு, ``என்னாங்கடா சொல்றீங்க?” என்றேன்.

1983: ஒரு சில்க் கதை - சிறுகதை

மோகனும் ஆனந்தும், `` `மூன்றாம் பிறை மன்றம்னே வைப்போம்” என்று கூற, மெஜாரிட்டி முடிவுப்படி அப்படியே முடிவானது. ஜனநாயகம் எதெதற்கெல்லாம் பயன்படுகிறது பாருங்கள். ``எல்லாம் உன் இஷ்டத்துக்கே பண்ணு” என்று கோபமாக எழுந்து சென்றான் சிவா. அதற்குப் பிறகு நானும் சிவாவும் கொஞ்சம் முறைப்பாகத்தான் இருந்தோம். பணம் வசூல்செய்யச் செல்லும்போதுகூட, `என்னன்னா என்ன?’ என்பதோடு நிறுத்திக்கொள்வோம்.

மறுவாரம் மயிலாடி சென்று சிலை ஆர்டர் கொடுத்தோம். பாவாடை தாவணியில் இருக்கும் `கோழிகூவுது’ சிலுக் ஸ்மிதா ஸ்டில்லைக் காண்பித்து, அதுபோல் செய்யச் சொன்னோம். அவர்கள் முதலில் களிமண்ணில் மாடல் சிலை செய்து காண்பித்தார்கள். நாங்கள் ஓகே சொன்னவுடன், ``மூன்று வாரத்துக்குள் சிலை ரெடியாகும்’’ என்றார்கள்.

சிலை திறப்பு விழாவுக்கு ஒரு வாரம் முன்னர், நாங்கள் நடராஜா தியேட்டர் முதலாளியிடம் பணம் வசூல் செய்யச் சென்றிருந்தோம். நாங்கள் சென்றபோது, `பாயும் புலி’ ஃபர்ஸ்ட் ஷோவுக்கு டிக்கெட் வாங்க பெரிய க்யூ நின்றுகொண்டிருந்தது. வாசலில் இருந்த ஸ்பீக்கரில், `பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…’ பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. நாங்கள் மேனேஜரிடம் விஷயத்தைச் சொல்லியனுப்ப, ஐந்து நிமிடம் கழித்து முதலாளி எங்களை அழைத்தார்.

முதலாளி சிவாவைப் பார்த்து, ``வாங்க தலைவரே, இப்ப பொங்கல் மன்றத் தலைவர்ல இருந்து சிலுக்கு மன்றத் தலைவரா புரமோட் ஆகிட்டீங்களா?” என்றார்.

இதற்கு சிவா, `நான் தலைவர் இல்லை’ என்று கூறவேண்டுமல்லவா? ஆனால் அவன் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருந்தான். பிறகு நன்கொடையை அளித்துவிட்டு, கிளம்பும்போது முதலாளி, ``போயிட்டு வாங்க தலைவரே…” என்று சொன்னபோதும் சிவா ஒன்றும் சொல்லவில்லை. தியேட்டரை விட்டு நாங்கள் வெளியே வந்தபோது க்யூ இப்போது இன்னும் நீளமாகியிருந்தது.

சைக்கிளை எடுத்த சிவாவை நிறுத்தி, ``நான் தலைவரா... நீ தலைவரா?” என்றேன் நான்.

``ஏன் கேட்கிற?”

``இல்ல... அன்னைக்கி சிலை ஆர்டர் பண்ண மயிலாடி போனப்ப, அவங்க உன்னை `தலைவர்’ன்னாங்க. நீ மறுத்து நான்தான் தலைவர்னு சொல்லலை. சரி, வெளியூர்தானேன்னு நான் ஒண்ணும் கண்டுக்கலை. இப்ப உள்ளூர்லயும் அவரு உன்னைத் தலைவர்ங்கிறார். நீ மறுத்து நான்தான் தலைவர்னு ஏன்டா சொல்லலை?”

``டேய், தலைவர்னு நம்பளா சொல்லிக்கிட்டா போதாதுடா. பார்க்கிறதுக்கு ஒரு தலைவர் லுக்கு இருக்கணும்” என்றவுடன், சட்டென ஆத்திரமான நான், ``ஏன்... என் லுக்குக்கு என்ன குறைச்சல்?” என்று அவன் சட்டையைப் பிடித்துவிட்டேன்.

சிவா, ``வாய்ப் பேச்சு பேசிக்கிட்டிருக்கிறப்ப, ஏன்டா கைய நீட்டுற? முதல்ல கைய எடு” என்றான் கோபத்தை அடக்கிக்கொண்டு.

``ஏன்... கைய எடுக்கலைன்னா தலைய சீவிடுவியோ?’’

``மாப்ள, லேடீஸ்ல்லாம் இருக்காங்க… விடு” என்றான்.

``இருந்தா இருக்கட்டும். நீ முதல்ல என்னைத் தலைவனா ஏத்துக்க” என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவன் என் நெஞ்சில் கை வைத்துத் தள்ளினான். சிவா தள்ளிய வேகத்தில், அவன் சட்டை பட்டன் பிய்ந்துகொண்டு வர, நான் கீழே விழுந்தேன்.

என்னைப் பிடித்து எழுப்பிய ஆனந்த், ``டேய், மேற்கொண்டு பிரச்னை பண்ணாதடா. உன் ஆளு விஜியெல்லாம் தியேட்டருக்கு வந்திருக்கா. நீ கீழே விழுந்ததைப் பார்த்துட்டா...” என்றவுடன் நான் வேகமாகத் திரும்பிப் பார்த்தேன். பெண்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்த விஜி, என்னைப் பார்த்தவுடன் முகத்தைச் சுளித்தபடி திரும்பிக்கொண்டாள். எனக்கு ரோஷம் வந்துவிட்டது. என்னைக் கீழே தள்ளுவதை விஜி பார்த்திருக்கிறாள். பதிலுக்கு நான் சிவாவை அடிக்காமல் இருந்தால் சரியாக இருக்காது. எனவே, வேகமாக எழுந்து சிவாவின் முகத்தைத் தாக்க கையை ஓங்கினேன். அவன் அசால்ட்டாக ஒண்ணாங்கிளாஸ் பையனை மடக்குவதுபோல் என் கையை மடக்கி, என் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டான். நான் முகத்தைப் பொத்திக்கொண்டு, அப்படியே மடங்கி கீழே உட்கார்ந்தேன். திரும்பி விஜியைப் பார்த்துவிட்டு, மீண்டும் சிவாவை அடிக்கப் பாய்ந்தேன். அவன் இப்போது என்னை எட்டி ஓர் உதை விட, நான் மல்லாக்க விழுந்தேன். சிவா விட்ட உதையில் என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை. மீண்டும் என்னை அடிக்க வந்த சிவாவை மோகனும் ஆனந்தும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

அன்றிரவு காவிரி ஆற்றுப் படித்துறையில் சிவாவைத் தவிர மீதி மூவரும் கூடியிருந்தோம். நான், ``சிவாவ மன்றத்திலிருந்து தூக்கிடலாம்டா” என்றேன்.

``டேய், அவன்தான் இதை ஆரம்பிச்சு வெச்சான். அவனை விட்டுட்டு எப்படிடா? அவன் ஏதாச்சும் பிரச்னை பண்ணினா?” என்றான் ஆனந்த்.

``என்னை பொது இடத்துல விஜி முன்னாடி அடிச்சிருக்கான். இனிமேல் எப்படி சேர்ந்து இருக்க முடியும்? உன் அரிசி மில் இடத்துலதான் சிலை வைக்கிறோம். மன்ற ஆபீஸும் உன் இடம்தான். கலெக்ட் பண்ணின பணமும், பொருளாளர்னு உன்கிட்டதான் இருக்கு. அவன் என்ன பண்ண முடியும்? உங்களுக்கு ஓகேன்னா மயிலாடிக்கு ட்ரங்க்கால் புக் பண்ணி, கல்வெட்டுல சிவா பேர போட வேண்டாம்னு சொல்லிடலாம். என்ன சொல்றீங்க?” என்றேன். ஆனந்தும் மோகனும் மௌனமாக இருந்தனர்.

``உங்களுக்கு ஓகே இல்லைன்னா, நான் மன்றத்திலிருந்து விலகிக்கிறேன்” என்று வேகமாக எழுந்தேன்.

``இருடா, ஏன்டா அவசரப்படுற? சரி, நாளைக்கி அவனைப் பார்த்து விஷயத்தைச் சொல்லிடலாம்” என்றான் ஆனந்த்.

மறுநாள் மாலை. நாங்கள் சிவாவை டீக்கடையில் பார்த்தபோது, சிவா எழுந்து எங்கள் அருகில் வந்தான். நாங்கள் ஒன்றும் பேசாமல் நின்றோம். டீக்கடை ரேடியோவில், `கிங்ஸ்டனில் இந்தியா - மேற்கிந்தியத் தீவு அணிகளுக்கிடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றி பெற, 172 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 25.2 ஓவர்களில்...’ என்று கூறிக்கொண்டிருந்தபோது ஆனந்த் பேச்சை ஆரம்பித்தான்.

``சிவா, இவ்ளோ ஆனப்புறம் நீ மன்றத்துல இருந்தா சரிப்படாது. நீ விலகிக்க. இனிமே நாங்களே பாத்துக்கிறோம்” என்று ஆனந்த் கூற, ``என்னடா சொல்ற?” என்ற சிவாவின் முகம் மாறியது.

``ஆமாம், இது நாங்க மூணு பேரும் சேர்ந்து எடுத்த முடிவு” என்றவுடன் சிவாவின் கண்கள் கலங்கிவிட்டன.

``டேய், இந்த ஐடியாவைச் சொன்னதே நான்டா. இப்ப என்னையே தூக்குறீங்க!”

``அவன் ஆளு பார்த்துட்டிருக்கிறப்பவே நீ அடிச்சிருக்க. அவன் ரொம்ப அவமானமா ஃபீல் பண்றான்.”

``நான் வேணும்னா மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்ற சிவா என்னை நோக்கி வந்து, ``ஸாரிடா...” என்றான். நான் பதில் ஒன்றும் சொல்லாமல் வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டேன்.

``டேய், ஊரெல்லாம் உங்களோட சேர்ந்து வசூலுக்குச் சுத்திட்டேன்டா. சிலை திறக்கிற வரைக்குமாச்சும் உங்ககூட வெச்சுக்குங்கடா. அதுக்குப் பிறகு பிரிஞ்சுடலாம். ப்ளீஸ்டா!” என்று கெஞ்ச, ஆனந்தும் மோகனும் என் முகத்தைப் பார்த்தனர். நான் மனம் இரங்கவேயில்லை.

``டேய், ப்ளீஸ்டா…” என்று அவன் கெஞ்சக் கெஞ்ச… ``இனிமேல் பேசுறதுக்கு ஒண்ணுமில்ல” என்று கூறிவிட்டு நாங்கள் நகர்ந்தோம்.

திறப்பு விழாவுக்கு இரண்டு நாள் முன்பாக, மயிலாடி சென்று சிலுக்கு சிலையை வாங்கிக்கொண்டு வந்தோம். ஊர் முழுவதும் சிலுக்கு சிலை திறப்பு விழா குறித்து போஸ்டர் ஒட்டினோம்.

மார்ச் 8. திறப்பு விழா நாளன்று, ஆனந்தின் மாவுமில் சாலையே பரபரப்பாக இருந்தது. மாவு மில்லையொட்டி சாலையோரமாகப் பந்தல் போட்டிருந்தோம். நெல் காயவைக்கும் களத்தில், நான்கடி உயர பீடத்தில் வைக்கப்பட்டிருந்த சிலுக்கு சிலை, ரோஸ் நிறத் திரையால் மூடப்பட்டிருந்தது. ஸ்பீக்கரில், `பொன்மேனி உருகுதே...’ `நேத்து ராத்திரி யம்மா...’ `ஆடி மாசம் காத்தடிக்க…’ என்று வரிசையாக சிலுக்கு பாடல்களாக ஒலித்துக்கொண்டிருந்தன. திறப்பு விழா முடிந்தவுடன் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்ததால், ஏராளமான பேர் வந்து பந்தலுக்குக் கீழே அமர்ந்திருந்தனர். சிவா திடீரென வந்து, தகராறு ஏதும் செய்வானோ என்ற பயத்துடன் நான் கும்பலைக் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

மதுரை சிலுக்கு ரசிகர் மன்றத்தில் செய்ததுபோல், நாங்களும் மஞ்சள் நிறக் கொடியின் நடுவில் கறுப்பு நிற இதயச் சின்னம் பதித்த கொடியை முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமார் அவர்களை ஏற்றச் சொன்னோம். கொடி ஏற்றிவைத்த முத்துக்குமார், ``சிலுக்கு ரசிகர் மன்றத் தலைவர் மகேந்திரன் அவர்களே... செயலாளர் மோகன் அவர்களே... பொருளாளர் ஆனந்த் அவர்களே... மற்றும் சிலுக்கின் உயிரான ரசிகக் கண்மணிகளே...” என்றவர் சட்டென ஆவேசமாக, ``கிரேக்கத்துக்கு ஒரு அலெக்ஸாண்டர், க்யூபாவுக்கு ஒரு ஃபிடல் காஸ்ட்ரோ, இத்தாலிக்கு ஒரு சோஃபியா லாரன்ஸ், அமெரிக்காவுக்கு ஒரு மர்லின் மன்றோ, இந்தியாவுக்கு ஒரு சிலுக்கு. ஒரே ஒரு சிலுக்கு” என்று இடைவெளி விட, ரசிகர்கள் புரிந்துகொண்டு கைதட்டினர்.

தொடர்ந்து ஆறுமுகம், ``சிலுக்கு சிலையைத் திறந்துவைப்பதன் மூலமாக, நமது ஊர் தமிழ்நாட்டின் சரித்திரத்தில் என்றென்றைக்கும் நிரந்தரமாக இருக்கப்போகிறது. இந்தச் சரித்திர நிகழ்வில் நானும் பங்குவகிப்பதில் எல்லையில்லா பூரிப்படைகிறேன். இன்று நம் ஊரில் ஏற்றிவைத்த இந்தக் கொடி, இனி தமிழ்நாடு முழுவதும், ஏன்... இந்தியா முழுவதும், ஏன்... உலகம் முழுவதும் ஆண்டிப்பட்டி முதல் அன்ட்டார்ட்டிகா வரை பறக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை... இல்லை... இல்லை...” என்பதைத் தெரிவித்துக்கொண்டு அமர, ரசிகர்கள் கைதட்டினர்.

அடுத்து பேசிய ஆனந்த், ``நம் ஊரில் இதுபோன்று நடைபெறும் சமூகநலப் பணிகளுக்கெல்லாம் காசை வாரி வாரி வழங்கும் கொடைவள்ளல், வாழும் கர்ணன் பாப்புலர் ஜவுளி ஸ்டோர் முருகன் அவர்கள் சின்னத்தாரகை, வண்ணத்தாரகை சிலுக்கு ஸ்மிதா சிலையைத் திறந்துவைப்பார்” என்று கூற, முருகன் எழுந்து திரையை விலக்கினார். சிலுக்கின் சிலையைப் பார்த்த ரசிகர்கள் விசிலடித்துக் கூச்சலிட்டனர். சிலைக்குக் கீழே பீடத்தில் இருந்த கல்வெட்டில் சிவா பெயர் இல்லாமல், எங்கள் பெயர்கள் மட்டும் இருந்தன.

மைக்கைப் பிடித்த முருகன், ``இங்கு சிலுக்கின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஜெயமாலினியின் கொடியை சிலுக்கு இறக்கிவிட்டதற்கான அடையாளமாகத்தான் இதைப் பார்க்கிறேன். பொதுவாக, கவர்ச்சி நடிகைகளை நமது சமூகம் பெரிதாக மதிப்பதில்லை. அழுகை, கோபம், சிரிப்புபோல காமமும் அற்புதமான ஓர் உணர்வு. காமம் இல்லாமல் நாம் எல்லாம் இல்லை. எனவே, அவ்வாறு நடிப்பவர்களையும் நாம் அங்கீகரிக்கவேண்டும். அடுத்த ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதை சிலுக் ஸ்மிதாவுக்கே அளிக்க வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்களைக் கேட்டுக்கொண்டு...” அமர்ந்தார்.

நான் பயந்ததுபோல் சிவா வந்து தகராறு ஏதும் செய்யவில்லை என்றாலும், உள்ளுக்குள் ஏனோ உதைப்பாகவே இருந்தது.

அன்று இரவு பாப்புலர் ஜவுளி ஸ்டோர் வாசலில் முருகன், ``திறப்பு விழா போட்டோ பிரின்ட் போட்டவுடனே திருச்சி போறேன். அங்கே தினத்தந்தி ஆபீஸ்ல ஒரு ரிப்போர்ட்டர் தெரியும். கொடுத்து பேப்பர்ல நியூஸ் வந்துச்சுன்னா, சிலுக்கே உங்களைக் கூப்பிட்டுப் பார்க்கும்” என்று கூறிக்கொண்டிருக்கும்போது, மோகன் வேக, வேகமாக எங்களை நோக்கி ஓடிவருவதைக் கவனித்தேன்.

``மகேந்திரா... சிவா சாராயம் குடிச்சுட்டு நம்ம கல்வெட்ட இடிச்சுக்கிட்டிருக்கான்டா...’’ என்று கத்த, நானும் ஆனந்தும் அதிர்ந்தோம். வேக, வேகமாக கைலியை மடித்துக் கட்டிக்கொண்டு ஓடினோம்.

நாங்கள் அரிசி மில்லை நெருங்கும்போதே,  நங் நங்கென கல்வெட்டு  இடிபடும் சத்தம் கேட்டது.  அருகில் நெருங்க, சிலுக்கு சிலைப் பீடம், மண்ணில் பதிந்திருக்கும் கீழ்ப்பகுதியை சிவா ஆவேசமாகக் கடப்பாறையால் இடித்துக்கொண்டிருந்தான். ``டேய்…” என்று பாய்ந்து அவனைப் பிடித்துக் கீழே தள்ளினேன். இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டு உருண்டு புரண்டு சண்டைபோட… எங்களை ஆனந்தாலும் மோகனாலும், முருகன் முதலாளியாலும் தடுக்கவே முடியவில்லை.

1983: ஒரு சில்க் கதை - சிறுகதை

ஒருகட்டத்தில் மிகவும் ஆத்திரமான சிவா, கடப்பாறையைத் தூக்கிக்கொண்டு என் மேல் பாய்ந்தான். நான் பயந்துபோய் `அவ்வளவுதான், என் கதை முடிந்தது’ என்றே நினைத்தேன். கடைசி நேரத்தில் சமாளித்து, கடப்பாறையைப் பிடித்திருந்த அவன் கையை நான் எட்டி உதைத்தேன். கடப்பாறை அவன் கையிலிருந்து வேகமாக நழுவி, உயரே பறந்து நாங்கள் சற்றும் எதிர்பாராதவிதமாக சிலுக்கு சிலையின் தலை மீது வேகமாக மோத, சிலுக்கின் கழுத்துப் பகுதி அப்படியே துண்டாகிக் கீழே விழுந்தது. அப்போது நான், ``அய்யோ... பாவி!” என்று அலறியதுபோல் பிறகு எப்போதும் அலறியதில்லை. சட்டென அந்த இடமே அமைதியானது. அத்தனை பேரும் அதிர்ச்சியாகி,  ஒன்றும் பேசத் தோன்றாமல் உடைந்த சிலையையே பார்த்துக்கொண்டு நின்றோம்.

வெறியான நான், ``டேய்... கம்னாட்டி நாயே! ரெண்டு மாசமா நாயா, பேயா அலைஞ்சு திரிஞ்சு வெச்சதுடா…” என்று கடப்பாறையை எடுத்துக் கொண்டு அவன்மீது பாய்ந்தேன். அதற்குள் அங்கு வந்திருந்த ஊர்க்காரர்கள் எங்களைத் தடுத்து அழைத்துச் சென்றனர். என் முகத்தில் வழிந்த ரத்தத்துடன் என் கண்ணீரும் கலந்து வடிய, உடைந்து தரையில் துண்டாகக் கிடந்த சிலுக்கின் தலையைப் பார்த்தபடியே சென்றேன்.

அதன் பிறகு நாங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும். இருவரும் ஒருவர்மேல் மற்றொருவர் போலீஸ் கேஸ் கொடுத்துக் கொண்டதும், பின்னர் முருகன் முதலாளியின் சமாதான முயற்சியால் நாங்கள் புகாரை வாபஸ் வாங்கிக்கொண்டதும், பிறகு வீட்டினரின் கடும் எதிர்ப்பால் நாங்கள் சிலுக்கு மன்றப் பணிகளை நிறுத்திக்கொண்டதும், மொத்த சிலையையும் எடுத்து ஆனந்த் அதைத் தனது அரிசி மில் மூலையில் போட்டதும், கல்லூரியில் கடைசி ஆண்டு படிக்கும்போது நானும் சிவாவும் மீண்டும் சேர்ந்துகொண்டதும், நான் சென்னையில் வேலை கிடைத்து வந்ததும் தனிக்கதை.

போன தீபாவளிக்கு ஊருக்குச் சென்றபோது, நாங்கள் தம்மடித்துக்கொண்டே, ஆனந்த் மாவு மில்லில் பேசிக்கொண்டிருந்தோம். வாழ்க்கை எங்களை Blue bird சிகரெட்டிலிருந்து கிங்ஸ் வரை கொண்டு சேர்த்திருந்தது. திடீரென சிலுக்குப் பேச்சு வர, நாங்கள் கோதுமை மாவு, மிளகாய்த்தூள் தூசிக்கிடையே புதைந்து கிடந்த, சிலுக்கு சிலையின் உடைந்த பாகங்களை வெளியே எடுத்துப் பார்த்தோம்.’
1983-ல், காவிரி ஆற்றுநீரில் நிலா வெளிச்சம் ததும்புவதைப் பார்த்துக்கொண்டே, பெண்கள் மட்டுமே உலகம் என நினைத்துக்கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் கண்ட மகத்தான, அழகிய கனவு அது. நமது இளமைக் காலத்தின்  மாபெரும் கனவுகள், உடைந்து துண்டு துண்டுகளாகிப் போனதுபோல, உடைந்து கிடந்தது சில்க் ஸ்மிதாவின் சிலை.

ஆனந்த விகடனுக்கான உங்கள் சிறுகதைகளை avstory@vikatan.com-க்கு இ-மெயில் அனுப்பவும்!