ஆனந்த விகடன் விருதுகள்
தொடர்கள்
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

சொல்வனம்

பிரிய டைரிகளின் குறிப்புகள்

தாள்கள் மிச்சம் இருக்கின்றன
நினைவுகள் நிறைய இருக்கின்றன
மை தீர்ந்துவிடவில்லை
எழுதுவதற்கான வலு இல்லை என்பதால்
டைரிகள் பட்டினி கிடக்கின்றன
பால் கணக்கோ
மளிகைக் கணக்கோ எழுதி
அதை ஆசுவாசப்படுத்த வேண்டும்
மேலும் கடன் கணக்கை எழுதி
வாய் பிளக்க வைத்துவிடக் கூடாது
கால ஓட்டத்தில்
காலாவதியாகிப்போன டைரியில்
வீட்டுப்பாடல் எழுதிச் செல்லும்
பிள்ளைகளை ரசிக்கும் ஆசிரியர்கள்
பாக்கியவான்கள்
சித்திரகுப்தனின் ஏடென
குழந்தைகளின் சித்திரங்களாய் நிறைந்த
டைரி கிடைத்தால் மட்டும்
என்னைக் கண்டுபிடித்து
என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள்

- விகடபாரதி

சொல்வனம்

குயில்

பறவைகளின்
கீச்சொலி கேட்டறியா
நகரத்துப் பேரனின் செவியை
சிறகொன்றால்
சுத்தம் செய்கின்றாள்
கிராமத்துப்  பாட்டி.
பரவசம் கொள்கின்றான்  செவிக்குள் குயிலொன்று கூவுவதாய்க் கூறி.

- தமிழ் தென்றல்

பனி

இங்கே பண்ணையார்கள்
இல்லாத போதும்
கைகளைக் கட்டிக்கொள்கிறேன்

நான் பாரதி
இல்லாத போதும்
முண்டாசு கட்டிக்கொள்கிறேன்

பதற்றமான சூழல் எதுவும்
இல்லாத போதும்
உதடுகள் துடிக்கின்றன

சிக்கிமுக்கியின் பாதையில்
பயணிக்கின்றன 
உள்ளங்கைகள்

இது பனிவிழும் நாளிதழ்களின்
பரபரப்பில்லா 
தலைப்புச்செய்திகள்
 
- ரா.பிரசன்னா