Published:Updated:

`இருபத்து மூண்டு வயசு சாகிற வயதா?' ஈழத்து திலீபன் பற்றித் தமிழ்நதியின் பதிவு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`இருபத்து மூண்டு வயசு சாகிற வயதா?' ஈழத்து திலீபன் பற்றித் தமிழ்நதியின் பதிவு!
`இருபத்து மூண்டு வயசு சாகிற வயதா?' ஈழத்து திலீபன் பற்றித் தமிழ்நதியின் பதிவு!

`இருபத்து மூண்டு வயசு சாகிற வயதா?' ஈழத்து திலீபன் பற்றித் தமிழ்நதியின் பதிவு!

லங்கையில் தமிழர்களுக்கு சம வாழ்வுரிமை மறுக்கப்பட்டபோது, அதை எதிர்த்து அமைதி வழியில் ஆயுத வழியில் பல அமைப்புகள் போராடின. அவற்றில் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செலுத்திய விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்தான் திலீபன். 1987 ம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றபோது, ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 1987 செப்டம்பர் 15 அன்று உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் திலீபன். அவரின் கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில், பலரும் வற்புறுத்தியும் தன் உண்ணாவிரதத்தைக் கைவிடாமல் செப்டம்பர் 26 அன்று உயிரிழந்தார். அவரைப் பற்றி எழுத்தாளர் தமிழ்நதி தனது 'பார்த்தீனியம்' நாவலில் ஒரு பகுதியாக எழுதியிருக்கிறார். அது இதோ! 

அன்று விரிவுரைகள் இல்லை. விடுமுறை நாளுக்கேயுரிய சோம்பலுடன் வானதி போர்டிகோவில் அமர்ந்திருந்தாள். கிணற்றடி மறைப்புச் சுவர்மீது காகமொன்று அமர்ந்து சிறகு கோதிக்கொண்டிருந்தது. அதன் தலைக் கறுப்பில் வெயில் கிரணங்கள் பன்னிறங் கொண்டு மின்னின.

யாரோ சிலர் வீதியில் சளசளத்தபடி போகும் சத்தம். அருகில் பாடிக்கொண்டிருந்த வானொலியின் ஓசையைக் குறைத்தாள். இல்லை… அந்தச் சத்தம் வீதியிலிருந்து ஒலிக்கவில்லை. ஒலிபெருக்கிதான் தூரத்துச் சளசளப்பை அண்மையில் எடுத்துவருகிறதென உணர்ந்தாள். இருந்தாற்போலொரு பேரோலம் கிளம்பி நெஞ்சை அடைக்கப் பண்ணிற்று. சற்றைக்கெல்லாம் பல குரல்கள் கதறியழுகிற ஓசை ஒலிபெருக்கியூடாக அப்பகுதியெங்கும் கேட்கத் தொடங்கிற்று.

‘அப்படியிருக்குமோ…?’ அதிர்ந்துபோனாள்.

``எனது கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றாவிட்டால் நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர, இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் இலட்சியத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்.”

திலீபன் தான் சொன்னபடி செய்துவிட்டாரா?

``என்ன அது சத்தம்?” தனபாக்கியம் படலையடிக்குப் போய் கூர்ந்து செவிமடுத்தார். சத்தம் வந்த திசையை வைத்து நடந்தேறியிருக்கும் விபரீதத்தை அவரும் ஊகித்துக்கொண்டுவிட்டார்.

``என்ரை அம்மாளாச்சி!” நெஞ்சில் கைவைத்தபடி திரும்பி வீட்டுக்குள் ஓடிவந்தார். அருமைநாயகத்தைக் காணவில்லை.

``கொப்பர் எங்கையடி?”

வானதி தனக்குத் தெரியாதென்பதாகத் தலையசைத்தாள்.

``எங்கையேன் வீண்பொழுது கழிக்கப்போயிருக்கும்.”

அருமைநாயகத்தை அஃறிணையாக்கி, தனது கேள்விக்குத் தானே விடையிறுத்தார் தனபாக்கியம். பதட்டத்தில் அடுத்து என்ன செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை.

வானதி வானொலிப்பெட்டியை எடுத்துக்கொண்டு உள்ளே போனாள்.

``திலீபன் முடிஞ்சுதுபோலை கிடக்கு” தனபாக்கியம் சொன்னார்.

வானதி பதிலளிக்கவில்லை. மோசமான செய்தியொன்று வந்து தாக்குகிறபோது அதை உறுதிப்படுத்துவதைத் தள்ளிப்போடுவதன்மூலம் அந்தச் சிக்கலிலிருந்து விலகியிருக்கும் வேலையைத்தான் அவள் செய்துகொண்டிருந்தாள்.

உண்ணாவிரதம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து வானதி ஒன்றுவிட்ட ஒருநாள் நல்லூரடிக்குப் போய்வந்தாள். உண்ணாவிரத மேடைக்கு முன்பாக, `அதிசயமொன்று நடந்து இந்தப் பிள்ளை பிழைத்தெழுந்துவிட மாட்டானா?’வெனக் காத்திருக்கும், மழைக்கும் வெயிலுக்கும் அசையாத சனங்களோடு சேர்ந்து அமர்ந்துகொள்வாள். கண்ணீரோடு வாசிக்கப்படும் கவிதைகளை, உரைகளைக் கேட்டுக்கொண்டிருப்பாள். அந்த உணர்ச்சிப் பிரவாகத்தில் அவளும் ஒரு துளியாவாள்.

அதிசயங்களில் நம்பிக்கை இழந்துபோக அவள் விரும்பவில்லை!

`ஐந்து அம்சக் கோரிக்கையை இந்தியா ஏற்றுக்கொண்ட செய்தி வந்த அடுத்த நிமிடமே திலீபன் அண்ணாவை வைத்தியசாலைக்குக் கொண்டுபோய்விடுவார்கள், உயிர்காக்கும் விரைவூர்தி தயாராக நிற்கிறது; எப்பாடுபட்டேனும் வைத்தியர்கள் அவரைக் காப்பாற்றிவிடுவார்கள்…’ இவ்விதமாக அவளது கற்பனைகள் நீண்டுசெல்லும்.

``இண்டைக்கு யாழ்ப்பாண கோட்டைக்குப் பொறுப்பான ஐபிகேஎஃப் அதிகாரி வந்தவர்”
``இண்டைக்குப் பேச்சுவார்த்தை நடந்தது”
``இண்டைக்கு இந்தியாவிலையிருந்து பேப்பர்காரங்கள் வந்தவங்கள். தமிழ்நாட்டிலையும் உண்ணாவிரதத்துக்கு ஆதரவா போராட்டம் நடக்குதாம்”

நம்பிக்கை துளிர்விடும். அடுத்தநாள் போகும்போது ஒன்றும் நடந்திராது. ஒன்றின் பிரதியே மற்றையதெனத் தொடர்ந்தன நாட்கள்.

``என்ன செய்தி?” தனபாக்கியம் மகளிடம் கேட்பார்.

அவள் பதிலளிக்காது உள்ளே போய்விடுவாள்.

ஒன்பதாம் நாள் திலீபனில் ஒரு அசைவுமில்லை. வற்றியுலர்ந்துபோனவராய் கண்மூடிப் படுத்திருந்தார். அன்றைக்குப் பள்ளிக்கூடங்களிலிருந்தும் மாணவர்கள் அவரைப் பார்க்க வந்திருந்தார்கள். பதினோராம் நாளாகிய நேற்றும் வாகனங்களில் சனங்கள் அள்ளுப்பட்டு வந்தார்கள். லொறிகளில், கார்களில், பேருந்துகளில், மாட்டு வண்டில்களில்கூட வந்து குவிந்தவண்ணமிருந்தார்களே! ஐம்பது மாட்டுவண்டிகள் நிறைய சனங்கள் புலிக்கொடியைப் பறக்கவிட்டபடி அணிவகுத்து வந்த காட்சி இன்னமும் கண்களுள் நிற்கிறதே!

``நல்லூர்க் கந்தா! இந்தப் பிள்ளையைக் காப்பாற்று” என்றழுத தாய்மாரின் பிரார்த்தனைகள் முருகனின்
செவிகளைச் சென்று சேராமல் மண்ணில் வீழ்ந்தனவா? இத்தனை ஆயிரம் சனங்கள் வைத்த நேர்த்திகளுக்கும் செய்த அர்ச்சனைகளுக்கும் என்னதான் நடந்தது?

வானதியும் தன் பங்குக்கு நேர்த்தி வைத்தாள். திலீபன் உயிர் பிழைத்தெழுந்தால் கோவிலைச் சுற்றி
`அடியளிப்பதாக’. `திலீபனுடைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டால்...?’ அவளுடைய கற்பனைக் குதிரை பிடரி மயிர்கள் சிலிர்த்து அலைபாய மூக்கை விடைத்தபடி பாய்ந்தோடியது. அது சென்று சேர்ந்த இடம் பரணி. அழுகுரல்கள் பெருகிவிட்டன. ஒலிபெருக்கி ஓசைகளை ஊரெல்லாம் கொண்டுசேர்க்கிறது.

சுதாங்கன் குளிப்பதற்கு உதவிசெய்துகொண்டிருந்த தணிகாசலம் ஐயா, அவனைக் கொண்டுபோய் அறையில் விட்டுவிட்டு போர்டிகோவுக்கு வந்தார்.

இந்தியாவின் அகம்பாவம் வென்றுவிட்டதை அவர் புரிந்துகொண்டார். சால்வையை உதறித் தோளில்
போட்டுக்கொண்டு, கோவிலடியை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

``போயும் போயும் அஞ்சு கோரிக்கை… அதைக்கூட நிறைவேற்றாம கொன்றுபோட்டியளே! பாவியளே… நீங்கள் நல்லாயிருப்பியளா?” வயிறெரிந்து இந்தியாவைச் சபித்தார்.

திலீபனை அவர் ஒரேயொரு தடவை கூட்டமொன்றில் பேசிக்கொண்டிருந்தபோது நேரில் கண்டிருக்கிறார். கச்சலான மெலிந்த தோற்றம். கசங்கிய உடை. அமைதியில் பொலிந்த முகம்.

``இருபத்து மூண்டு வயசு சாகிற வயதா?” உள்ளுக்குள் ஓலம் சுழன்றது.

``நானும் போறன்” வானதியும் புறப்பட்டாள்.

``நீயேன்…..?” தனபாக்கியத்தின் கேள்வி வானதியை எட்டுவதற்கிடையில் அவள் வீதியில் இறங்கி கோவிலை நோக்கி ஒரே ஓட்டமாக ஓடத் தொடங்கியிருந்தாள்.

நல்லூர்க் கோவிலை நோக்கிச் செல்லும் தெரு முழுவதும் சனங்கள். நடந்தும் ஓடியும் செல்கிறவர்கள், சைக்கிள்களில் எம்பி எம்பி மிதித்துப் பறக்கிறவர்கள், ஒருவரையொருவர் உரசி விழத்தட்டி விடுவார்களோவென அஞ்சும்படியான எண்ணிக்கையில் மோட்டார் சைக்கிள்களில் விரைந்துபோகிறவர்கள், இயக்க வாகனங்களில் இறுகிய முகங்களோடு அமர்ந்து செல்கிறவர்கள்…

``திலீபன் அழைப்பது சாவையா? - இந்தச் சின்ன வயதில் இது தேவையா?”

அவள் மூச்சிரைக்க ஓடினாள்.


 - தமிழ்நதி: கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை ஆகியவற்றில் தொடர்ந்து பங்காற்றி வருபவர். ஈழ மக்களின் உணர்வுகளை, தன் படைப்புகள் வழியே அதன் ஈரம் உலர்ந்துவிடாமல் பதிவு செய்பவர். இவரது `பார்த்தீனியம்' நாவல் வாசகர்கள் மத்தியில் பரவலான கவனிப்புக்குள்ளானது. (பார்த்தீனியம் - நற்றிணை பதிப்பக வெளியீடு, சென்னை)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு