Published:Updated:

"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி

"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி
பிரீமியம் ஸ்டோரி
"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி

சந்திப்பு: வெய்யில், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன்படங்கள்: தி.விஜய், ரா.ராம்குமார்

"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி

சந்திப்பு: வெய்யில், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன்படங்கள்: தி.விஜய், ரா.ராம்குமார்

Published:Updated:
"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி
பிரீமியம் ஸ்டோரி
"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி

ஷோபாசக்தி ஈழ இலக்கியத்தின் இன்றைய முகம். போரின் அழிவுகளை, சிங்களப் பேரினவாதத்தின் இன ஒடுக்குமுறைகளை, போராளி இயக்கங்களின் தவறுகளை, புலம்பெயர் வாழ்வின் பிரச்னைகளைக் காத்திரமான மொழியில் தன் படைப்புகளில் பதிவுசெய்த படைப்பாளி. சாதி ஒழிப்புக் கருத்தியலையும் தலித்தியத்தையும் ஈழத் தமிழர்களிடத்தில் கொண்டுசெல்ல இடைவிடாது உரையாடிக்கொண்டிருப்பவர். ஷோபாசக்தியின் அரசியல் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட அவரது படைப்பின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வார்கள். இப்போது நடிகராகவும் மாறியிருக்கும் ஷோபாசக்தியை, சென்னைப் புத்தகக் கண்காட்சிக்காகக் கிளம்பிக்கொண்டிருந்த வேளையில் சந்தித்தோம்.

“உங்களுக்குப் பிடித்த பைபிள் வரிகளுடன் நேர்காணலைத் தொடங்கலாம்...”

“ ‘எகிப்திலே பிரேதக் குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு  எங்களைக் கொண்டுவந்தீர்?’

எங்களது அகதி வாழ்க்கையைக் குறிக்க இதைவிடச் சிறந்த வாக்கியம் ஏது? ‘ம்’ நாவலின் முகப்பில் இதைக் குறிப்பிட்டே கதையைத் தொடங்கினேன்.’’

"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி

“ஷோபாசக்தி தன்னை, தனது வாழ்க்கையை எப்படி வரையறுத்துக்கொண்டார்/கொள்கிறார்?”

“யுத்தத்தின் ஊடாகவே வளர்ந்ததால், நான் எப்படி வளர்வேன்; என்ன ஆவேன்; என்ன செய்ய வேண்டும் எனத் திட்டமிடுவது எதுவும் என் கையில் இருக்கவில்லை. என்னைச் சூழ்ந்திருந்த புறக் காரணிகளே என் வாழ்க்கையைத் தீர்மானித்தன. இன்றுவரையும்கூட என் வாழ்க்கை அப்படித்தான். நான் இயக்கத்துக்குப் போவேன் என ஒருபோதும் நினைக்கவில்லை. மிகவும் வறுமைப்பட்ட குடும்பத்திலிருந்து வந்தவன் நான். பொதுவாக, யாழ்ப்பாணத்துச் சமூகம் பிள்ளைகளைப் படிக்க வேண்டும் என்று சொல்லியே வளர்க்கும். நானும் நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன்தான். அந்தக் காலகட்டத்தில் வழக்கறிஞர் தொழில்தான் கவர்ச்சிகரமான தொழில். தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்ற அரசியல் தலைவர்களும் வழக்கறிஞர்கள்தாம். சட்டம் படித்துப் பட்டம் பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பமும். ஆனால், புறச்சூழல்கள் அனுமதிக்கவில்லை.

நான் பத்தாவது படித்த 83-ம் ஆண்டில்தான் இனக்கலவரம் நடைபெற்றது. அதை இனக்கலவரம் என்று சொல்லக் கூடாது; தமிழர்கள்மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. எங்கள் கிராமம்  வறண்ட பாலைநிலம். பெரிய அளவில் விவசாயமெல்லாம் செய்ய முடியாது. ஊரில் உள்ள பெரும்பாலானோர் கொழும்புக்குச் சென்று, அங்குள்ள கடைகளில் சிற்றூழியர்களாக வேலை பார்ப்பார்கள். என் அப்பாவும், அண்ணனும் அவ்வாறு வேலை செய்தவர்கள்தாம். 83-ம் வருடப் படுகொலைகளின் போது எங்கள் கிராமத்தில் பாதிப் பேர் கொழும்பில்தான் இருந்தார்கள். அப்போது அவர்களில் சிலர் கொல்லப்பட்டார்கள்; சிலர் காதறுக்கப்பட்டு, விரல்கள் துண்டிக்கப்பட்டு வந்தார்கள். முழு கிராமமும் யாழ்ப்பாணத்தையும் அல்லைப் பிட்டியையும் இணைக்கும் அந்தப் பாலத்தில் உட்கார்ந்திருந்தார்கள். தொலைபேசியும் இல்லை; செய்திகள் தெரிந்துகொள்ள வழியே இல்லை. வானொலிச் செய்திகள் மட்டுமேதான். வானொலியும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் பொய்ச் செய்திகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தது. அப்பா, அண்ணனுக்காக நானும் காத்துக்கொண்டிருந்தேன். பத்துநாள்கள் கழித்துத் தனித்தனியாகக் கட்டிய துணியுடன் வந்தார்கள். இதுபோன்ற சூழல்கள்தான் என்னை இயக்கத்துக்கு அனுப்பின.

மிகுந்த நம்பிக்கையோடுதான் இயக்கத்தில் இணைந்தேன். நான் மட்டுமல்ல, எங்கள் வகுப்பில் நாற்பது பேர் இருப்போம். திடீரென்று பத்துப் பேர் இல்லாமல் போய்விடுவார்கள். அடுத்து, ஐந்து பேர் போவார்கள். இப்படிக் கும்பல் கும்பலாக இயக்கங்களுக்குள் சேர்ந்தோம்.”

“உங்கள் விடுதலைப் புலிகள் இயக்க அனுபவங்கள்...”

“1983-ம் ஆண்டுக் கடைசியில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன். யூலை 25-ம் தேதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் குட்டி மணி, தங்கத்துரை, ஜெகன் உள்பட 35 பேர் கொல்லப்பட்டார்கள். அதற்கு அடுத்த இரண்டு நாள்களில் மறுபடி திட்டமிட்டு 27 பேர் கொல்லப்பட்டார்கள். அப்போதெல்லாம் குட்டிமணியும் தங்கத்துரையும் எங்களுடைய தேசிய நாயகர்கள். வெலிக்கடை சிறைப் படுகொலையை மையப்படுத்திதான் ‘ம்’ நாவலை எழுதினேன். அந்தச் சம்பவம்தான் என்னை, பள்ளிக்கூடத்தை, குடும்பத்தை விட்டு இயக்கத்தில் இணையத் தூண்டியது. போகும்போது பெரும் நம்பிக்கையோடு சென்றோம். எங்கள் ஊரில் அந்த நேரத்தில் பலரும் புளொட்டுக்குத்தான் சென்றார்கள். நான் எல்.டி.டி.இ-ல்தான் சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி

“ஏன்?”

“அந்த நேரத்தில் எல்.டி.டி. இ மட்டும்தான் ஆயுத ரீதியாகச் செயல்பட்டு, கெரில்லாத் தாக்குதல்களைப் பரவலாகச் செய்துவந்தனர். மற்றவர்கள் மக்கள் மத்தியில் இறங்கி அரசியல் வேலைகளைச் செய்தார்கள். அரைகுறையாக சோசலிசக் கருத்துகளைப் பேசுவார்கள். எல்.டி.டி.இ மட்டும்தான் கெரில்லா இயக்கமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்தது. அவர்களும் சோசலிசத் தமிழீழம் என்றே முழங்கினார்கள். அதனால் புலிகள் அமைப்பில் சேர முடிவெடுத்தேன். ஆனால், எல்.டி.டி.இ-யில் சேர்வதென்றால், அப்போது மிகக் கஷ்டம். தொடர்பே எடுக்க முடியாது. யாழ்ப்பாணத்திலிருந்து விலகியிருந்த எங்கள் தீவுக்குக் கடைசியாகத்தான் பஸ் வரும், கடைசியாகத்தான் கரன்ட் வரும். இயக்கமும் கடைசியாகத்தான் வந்தது. எல்.டி.டி.இ-ல் நான் சந்தித்த முதல் பொறுப்பாளர்  கவிஞர் நிலாந்தன். அவர் மூலம்தான் இயக்கத்தின் முழுநேர உறுப்பினரானேன். அவர் அப்போதே கவிதைகள் எழுதிவந்தார். நாங்கள் கெரில்லா வாழ்க்கையில் இருந்த காலத்தில்தான் ‘குமுதினி’ படகில் வந்த பயணிகள் 60 பேர் இலங்கைக் கடற் படையால் வெட்டிக் கொல்லப்பட்டனர். நாங்கள்தான் அந்த உடல்களைக் கரைக்குக் கொண்டுவந்து, மருத்துவமனையில் சேர்த்தோம். அன்றிரவு நிலாந்தன் ‘கடலம்மா’ என்ற புகழ்பெற்ற அந்தக் கவிதையை எழுதினார். இயக்கத்தில் இருந்த மிகச் சில சிந்தனையாளர்களில், கலைஞர்களில் நிலாந்தனும் ஒருவர். எழுத்தாளனாக என்னுடைய உருவாக்கத்தில் நிலாந்தனுக்கும் ஒரு பங்குண்டு. அவரை அடியொற்றித்தான் நான் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன்.

மக்கள், விடுதலை இயக்கங்களை அவ்வளவு ஆதரித்து நேசித்தார்கள். அப்போது, இன்று இருக்கும் வடக்கு, கிழக்குப் பிரிவு இருக்கவில்லை; தமிழர் - முஸ்லிம் பகை இருக்கவில்லை. இயக்கத்துக்குள் நிறைய இஸ்லாமியர்கள் இருந்தார்கள். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் பாரூக், உஸ்மான் போன்றோர் இஸ்லாமியர்கள்தான். ஏறக்குறைய தமிழ் பேசும் அனைத்து மக்களுமே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்த காலம் அது. போராட்டத்துக்கு இந்தியாவின் ஆதரவு இருந்த காலமும்கூட. போராளிகளை அழைத்து, பயிற்சி முகாம் அமைத்து, சாப்பாடு போட்டுப் பணம் கொடுத்து, ஆயுதங்களையும் தந்தது இந்திய அரசு. அதேவேளையில், பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடன் உள்ள தொடர்பினால், போராளிகளில் ஒரு பகுதியினர் பாலஸ்தீனத்திலும் லெபனானிலும் பயிற்சி பெற்று வந்தனர். அதுவரை இலங்கை ராணுவம் எந்தவொரு சண்டையும் செய்திருக்கவில்லை. வெறுமனே சுதந்திர தினத்தில் குண்டு இல்லாத வெற்றுத் துப்பாக்கியைக்கொண்டு அணிவகுப்பு செய்துவந்த ராணுவம் அது. ஆக, நாங்கள் மிகப் பெரிய பயிற்சி பெற்ற படை. வலுவான இயக்கங்களாக ஐந்து இருந்தன. அதைத் தவிர சிறிய சிறிய இயக்கங்களும் இருந்தன. இருந்தாலும் இயக்கங்களுக்குள் பெரிய முரண்கள் இருக்கவில்லை. இயக்கத் தலைவர்கள் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர். 85-ம் ஆண்டு நடுப்பகுதியில் எல்.டி.டி.இ, ஈ.பி.ஆர்.எல்.எஃப், டெலோ, ஈரோஸ் ஆகிய இயக்கங்கள் இணைந்து ஒரு முன்னணியையும் அமைத்திருந்தன.

"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்திகாலத்துக்குக் காலம் தமிழ்த் தரப்புகள் பல்வேறு பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்களை நடத்தியிருக்கின்றன. ஆனால், எந்த ஒப்பந்தங்களையும் இலங்கை அரசு முறையாக நிறைவேற்றவில்லை. அதனால், இனி இலங்கை அரசோடு துப்பாக்கிக் குழல்களால் மட்டுமேதான் பேசுவோம் என்று முடிவெடுத்தோம். ‘ஆற்றல் மிகு கைகளில் ஆயுதம் ஏந்துவோம். மாற்று வழி நாம் அறியோம்’ என்பதே எங்கள் முழக்கமாக இருந்தது. ஆனால், 85-ல் இந்திய அரசின் நிர்பந்தத்தின் காரணமாக, திம்பு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் நிர்பந்திக்கப்பட்டோம். இயக்கத் தலைவர்கள் வேறு வழியில்லாமல் சம்மதித்தார்கள். தமிழீழத்துக்குப் பதிலாக மாகாணசபை என்றெல்லாம் பேசப்பட்டது. நமது போராட்டம் திசைமாறுகிறதோ என முதற் குழப்பம் எனக்குள் ஏற்பட்டது. எங்களுடைய இயக்கம் நிகழ்த்திய அனுராதாபுரம் படுகொலை எனக்குள் பெரிய அதிர்ச்சியை விளைவித்தது. குழந்தைகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி சிங்களப் பொதுமக்கள் விடுதலைப் புலிகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். ‘சோசலிசத் தமிழீழம்’ என்று பேசிக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் இந்த நடவடிக்கை எனக்குள் ஆறாக் கசப்பை ஏற்படுத்தியது.

நாங்கள் விற்ற முதல் நூலே ‘சோஷலிச தமிழீழத்தை நோக்கி...’ என்பதுதான். பயிற்சி முகாமில், காலை நேரத்தில் நாங்கள் எடுக்கும் சத்தியப் பிரமாணமும் ‘எமது புரட்சிகர இயக்கத்தின் புனித இலட்சியமாம் சோசலிசத் தமிழீழத்தை அடைய...’ என்றுதான் ஆரம்பிக்கும். இடதுவயப்பட்ட இயக்கமாக இருக்கும் என நாங்கள் நம்பிய இயக்கம், அப்பாவி மக்களைக் கொன்றது. அதைத் தொடர்ந்து 86 -ம் ஆண்டு டெலோ இயக்கத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் தாக்கித் தடை செய்தது. அப்போதும் நான் இயக்கத்தில்தான் இருந்தேன். சமூக விரோதிகளை ஒழிக்கிறோம் என்று சிறிய திருடர்களை, பாலியல் தொழிலாளர்களை எல்லாம் மின்கம்பத்தில் கட்டி, சுட்டுக் கொன்றார்கள். இதைப் பல்வேறு இயக்கங்களும் செய்தனர். புலிகளும் செய்தனர். மனநிலை சரியில்லாமல் திரிந்தவனையெல்லாம் சி.ஐ.டி என ‘அடையாளம் கண்டு’ கொன்றனர். எங்கள் கிராமத்திலேயே சிலர் இயக்கங்களால் கொல்லப்பட்டனர். இவை எல்லாம் சேர்ந்து எனக்குள் ஒரு பாதிப்பை உண்டாக்கின. இயக்கத்தின் மீது என் கசப்பு உணர்வு விரிய ஆரம்பித்தது.”
 
“அப்போதே இந்த விஷயத்தில் தத்துவார்த்த ரீதியிலான புரிதல் உங்களுக்கு இருந்ததா?”

“அப்போது பெரியளவில் எந்தத் தத்துவார்த்தப் புரிதலும் எனக்கு இல்லை. ஆனால், ஏதோ தவறான விஷயம் நடந்துகொண்டிருக்கிறது என்று மட்டும் புரிந்தது. நான் மனதளவில் இயக்கத்தை விட்டு விலகத் தொடங்கினேன்”

“உங்களுக்கு இடதுசாரித் தத்துவத்தின் மீதான ஈர்ப்பு எப்படி ஏற்பட்டது?”

“சிறுவயதில் எம்.ஜி.ஆர் பாடல்கள்மூலம் தெரிந்தவைதான். ‘தனியுடைமை கொடுமைகள் தீரத் தொண்டு செய்யடா... தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா...” - அவ்வளவுதான் தெரியும். நான் பிரான்ஸுக்குப் போனபின்புதான் மார்க்ஸியம் குறித்தும் இடதுசாரி இயக்கங்கள் பற்றியும் முழுமையாகத் தெரிந்துகொண்டேன். ஆனால், இயக்கத்தில் எனக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு என்பது பாலியல் தொழிலாளிகள், சிறிய திருடர்கள் கொல்லப்படுவதில், அப்பாவி சிங்கள மக்கள் கொல்லப்படுவதில் இருந்துதான் தொடங்கியது. மார்க்ஸியம், மனித உரிமைகள் குறித்தெல்லாம் பெரியளவிலான தத்துவார்த்தப் புரிதல் இல்லாவிட்டாலும் சாமானிய மக்கள் கொலைசெய்யப்பட்டதை, அதுவும் தமிழீழம் வாங்கித்தரும் என்று நான் நம்பிய லட்சியவாத இயக்கத்தால் செய்யப்பட்டதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை”

“ஆனால், புலிகளின் ஆயுதச் செயற்பாடுகளில் ஈர்க்கப்பட்டுத்தானே, நீங்கள் இயக்கத்தில் இணைந்தீர்கள்?”

“ஆமாம், அந்தச் செயற்பாடுகள் இலங்கை கொலைகார ராணுவ ஆயுதப் படைக்கு எதிராக நடந்தவை. ஆனால், அதுவே சொந்த மக்களுக்கும் அப்பாவிச் சிங்கள மக்களுக்கும் எதிராகத் திரும்பும்போது, நான் எப்படி அதை ஏற்றுக்கொள்ள முடியும்? இந்தக் கொடுமைகளுக்கும் விடுதலைக் கருத்தியலுக்கும் என்ன தொடர்பு?”

“இதை எதிர்த்து இயக்கத்தில் கருத்துகளை முன்வைத்து விவாதிக்க முடிந்ததா?”

“விவாதத்திற்கெல்லாம் இயக்கத்தில் இடமிருக்கவில்லை. அவ்வளவு இறுக்கமான தலைமை அது. இயக்கத்தின் ஆரம்ப நாள்களில் அரசியல் மத்தியக் குழு என ஒன்று இருந்தாலும் அது பலவீனமாகவே இருந்தது. பின்பு மத்தியக் குழுவே இல்லாமல் போய்த் தனிநபர் தலைமை என்றானது. தலைமை எடுக்கும் முடிவிற்கு எதிராகக் கருத்துச் சொன்னவர்கள் ஒன்று இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள். இயக்கத்தின் ஆரம்பக் காலங்களிலேயே ‘புதியபாதை’ சுந்தரம், மனோ மாஸ்டர், ஒப்ராய் தேவன் போன்ற பலர் தலைமையோடு முரண்பட்டு வேறு அரசியல் இயக்கங்களில் இயங்கினார்கள். இவர்கள் அனைவருமே பின்பு புலிகளால் கொல்லப்பட்டார்கள்.

புலிகளின் இரண்டாம் கட்டத் தலைவராக இருந்த ராகவன் போன்றோர் மாற்றுக் கருத்துகளை முன்வைத்து, முடியும் வரை போராடிப் பார்த்துவிட்டு, உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட தருணத்தில் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றார்கள். உட்கட்சிப் போராட்டம் என்பது அப்போதே தொடங்கிவிட்டது. அதேபோல, அந்தப் போராட்டம் கடுமையாக நசுக்கி அழிக்கவும்பட்டது.

நான் இயக்கத்தில் இருந்த நிலை என்பது தலைமையையோ, முன்னணித் தலைவர்களையோ நேரடியாகப் பார்த்து விவாதிக்கும் அளவுக்குப் பெரிதில்லை. அதிகபட்சம் எங்களைப் போன்றவர்களால் திலீபனைப் பார்த்து முறையிட முடியும். அவரும் நாம் சொல்வதைக் கேட்டுக்கொள்வார்; விவாதிக்க மாட்டார். நான் இருந்தது சிறிய கெரில்லா குழுவில். இயக்கத்தில் அப்போது அரசியல் வகுப்புகளே நடத்தப்படவில்லை. எளிய கிராமத்து இளைஞனாக,  நடப்பது தவறெனத் தெரிந்தது. ஆனால், என்ன செய்வது எனத்

"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி

தெரியவில்லை. நமக்கு இறுதித் தீர்வு தமிழீழம்தான். அதற்காகப் புலிகள் இயக்கம் முன்னின்று போராடி வருகிறது. ஆக, அவர்களைவிட்டு வெளியேறவும் முடியாது. அப்போது புலிகள் இயக்கத்தில் சேரும்போதே சில நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டுக் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும். அதிலொரு நிபந்தனை: ‘இயக்கத்தைவிட்டு வெளியேறினாலோ, வெளியேற்றப் பட்டாலோ, அவர் வேறு எந்தவொரு அமைப்பிலும் சேரக் கூடாது. எவ்வித அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. இந்த நிபந்தனையை மீறினால், மரண தண்டனை வழங்கப்படும்.’

1986-ல் ஈ.பி.ஆர்.எல்.எஃபைப் புலிகள் இயக்கம் தாக்கி அழிக்கத் திட்டமிட்டபோது நான் வெளியேறினேன். வீட்டிலும் வறுமை. யாழ்ப்பாணத்துக்குப் போகக்கூட பஸ்ஸூக்குக் காசு இருக்காது. வீட்டிலிருந்தபோது புலிகள் பண்ணைப் பாலத்தில் புதைத்துவைத்த சிலிண்டர் கண்ணிவெடியைக் கிளப்பிவிட்டேன் எனப் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுப் புலிகளால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டேன். புலிகளின் அப்போதைய ஆயுதப் பொறுப்பாளர் ஜொனி நீண்ட விசாரணையின் பின் என்னை விடுவித்தார். இனி அரசியல் பக்கமே தலைவைத்தும் படுக்கக் கூடாது எனக் கடும் எச்சரிக்கை வேறு. அடுத்து என்ன செய்வது என்றும் தெரியாமலிருந்தேன்.

ஆறு மாதம் கழித்து, இலங்கை - இந்திய ஒப்பந்தம் வந்தது. இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வந்தது. புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் போர் மூண்டது.  ஒரு கட்டத்தில் புலிகள் பின் வாங்கி, காட்டுக்குச் சென்றார்கள். தமிழ்ப் பகுதிகள் முழுக்க அமைதிப்படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. கணக்கிட முடியாத கொலைகளை, பாலியல் வன்புணர்வுகளை, சித்ரவதைகளை, அவமானங்களை, அத்துமீறல்களை இந்திய ராணுவம் நடத்தியது. இறுதியில் ஒருநாள் அமைதிப்படை எங்கள் கிராமத்துக்கும் வந்தது. புலிகள், முன்னாள் புலிகள், அவர்களுக்கு உதவி செய்தவர்களை அமைதிப்படை தேடியது. அமைதிப் படைக்குத் துணைக் குழுக்களாக டக்ளஸ் தேவானந்தா, பரந்தன் ராஜன் போன்றவர்களால் வழிநடத்தப்பட்ட இளைஞர்களும் வந்தார்கள். புலிகளுடனான தங்கள் பகையை அமைதிப்படைக்குக் கூலிப்படையாக மாறி அவர்கள் நேர்செய்ய முயன்றார்கள்.

அவர்களுக்கு யார் யார் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று நன்றாகத் தெரியும். எல்லாருமே கிராமத்தில் எங்கள் மாமன் மச்சான்கள்தானே! என் வீட்டுக்கும் இரண்டு முறை இந்திய ராணுவம் தேடி வந்தது. நல்வாய்ப்பாக நான் தப்பிவிட்டேன். இதனால் என்னால் யாழ்ப்பாணத்தில் இருக்க முடியவில்லை. அங்கிருந்து தப்பி, கொழும்புக்கு ஓடி வந்தேன். நான் கொழும்புக்கு வரவும் புலிகளுக்கும்  இலங்கை அதிபர் பிரேமதாசாவுக்கும் ஓர் ஒப்பந்தம் வரவும் சரியாக இருந்தது. பிரேமதாசா ஆட்சிக்கு வந்ததும் இந்திய ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்பதில் அவர்  உறுதியாக இருந்தார். அமைதிப்படையை எதிர்த்துப் போரிட்ட புலிகளுக்கு நிதி மற்றும் ஆயுத உதவியும் செய்தார். 1990 மார்ச்சில் இந்திய ராணுவம் வெளியேறியதும் மறுபடியும் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் சண்டை ஆரம்பித்தது. என்னைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதுசெய்து, சிறைக்கு அனுப்பினார்கள். அந்தச் சட்டத்தில் கைதுசெய்தால் விசாரணையின்றி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சிறையில் அடைக்கலாம். நான் கைது செய்யப்பட்டது என் குடும்பம் உட்பட யாருக்கும் தெரியாது. தகவல் தெரிவிக்க வழியுமில்லை. என்ன ஆவேன் எப்படி வெளியே வருவேன் எனத் தெரியவில்லை. நான் கொழும்பில் இருந்தபோது எனக்கு சிங்களத் தோழி ஒருவர்  கிடைத்தார். அவர் தன்பகுதி அரசியல்வாதிகளை அணுகிப் பெருந்தொகை லஞ்சம் கொடுத்து எடுத்த முயற்சியால் நான்கு மாதங்கள் கழித்து, சிறையைவிட்டு வெளியே வந்தேன்.”

“வெளியே வந்ததும் உங்களது முதல் முடிவு என்னவாக இருந்தது?”

“நான் கொழும்பில் இருக்க முடியாத நிலை. தினந்தோறும் கொலைகள். இலங்கை ராணுவம், தமிழ் இயக்கங்கள், ஜேவிபி, ஜிகாத் எனும் இஸ்லாமிய ஆயுதக்குழு என யார், யாரைச் சுட்டுக்கொல்வார்கள் என ஒன்றும் தெரியவில்லை. இலங்கை ராணுவமே பல்வேறு ஆயுதக் குழுக்களை உருவாக்கியது. உதாரணமாக, ‘பச்சைப் புலிகள்’ என்றொரு அமைப்பு நேரடியாகவே ஜெயவர்த்தனே மகனின் கட்டுப்பாட்டில் கொலைகளைச் செய்தார்கள். தமிழர்களுக்குத் தங்க வீடு கிடைக்காது; விடுதி கிடைக்காது. முன்னாள் புலி என்பதால், இந்தியாவுக்கும் வர முடியாது. அப்படி வந்தால், நேரடியாகச் சிறைக்கு அனுப்பிவிடுவார்கள் என அஞ்சினேன். ஆக, வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதொன்றே என் முன் இருந்த தீர்வு.
 
என் அண்ணா ஜெர்மனியில் இருந்தார். அவர், ‘தாய்லாந்துக்குப் போ’ என வழிகாட்டினார். திருட்டுத்தனமாக ஒரு பாஸ்போர்ட்டைத் தயார் செய்து தாய்லாந்து சென்றேன். அங்கே மூன்றரை வருடங்கள் அகதியாக வாழ்ந்தேன். அங்கேயும் சில பிரச்னைகள். தாய்லாந்தில் எங்களை அகதியாக ஐ.நா-வின்  ‘அகதிகளிற்கான உயர் ஆணையம்’ ஏற்றுக்கொண்டது. ஆனால், தாய்லாந்து அரசு எங்களை அகதியாக ஏற்க மறுத்தது. பலமுறை சிறைவாசம். உலகின் கொடூரமான சிறைகளில் பாங்காக் சிறையும் ஒன்று.

1993-ல் அங்கிருந்து பாரிஸுக்கு எல்லா அகதிகளையும் போலவே நானும் பிரெஞ்சு கள்ளப் பாஸ்போர்ட்டில் போனேன். ஒருவேளை எனக்கு லண்டன் கள்ளப் பாஸ்போர்ட் கிடைத்திருந்தால், லண்டன் போயிருப்பேன். இப்படி என் வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்தையும் புறச்சூழல்களே தீர்மானித்தன. இன்றைக்கும் நான் எந்த நாட்டில் இருக்க வேண்டும்; எத்தனை நாள்கள் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது, அந்தந்த நாட்டின் அரசுகள்தான். நான் இன்னமும் பிரெஞ்சுக் குடிமகன் கிடையாது; அகதிதான். பிரெஞ்சுக் குடிமகனுக்கு இந்தியா வர ஆறு மாத விசா வழங்கப்படுகிறது. ஆனால், என்னைப் போன்ற ஓர் அகதிக்கு ஒரு மாத விசாதான் தருகிறார்கள். அதிலும் இந்தியாவின் சில பகுதிகளுக்குச் செல்ல முடியாது. அதற்குச் சிறப்பு அனுமதி வாங்க வேண்டும்.’’

“சர்வதேச அளவில் முகம் தெரிந்த நடிகராகிவிட்டீர்கள். இப்போதும் இதுபோன்ற பிரச்னைகள் இருக்கிறதா?”

``2015-ல் டொரோண்டோ சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு அழைப்பாளராகச் சென்றிருந்தேன். இதற்கு முன் ‘செங்கடல்’ திரையிடலுக்கு, அழைப்பாளராகக் கனடா சென்ற நிலையிலும் எமிகிரேசனில் படாதபாடு படுத்திவிட்டார்கள். ‘இப்போது அந்தப் பிரச்னை இருக்காது, நாம்தான் முகம் தெரிந்த நடிகராகிவிட்டோமே’ என்று நினைத்தேன். வாழ்க்கையில் முதல் முறையாக விமானத்தில் முதல் வகுப்பில் பிரயாணம். வந்திறங்கியபோது என் பெயர் தாங்கிய அட்டையுடன் விழாக்குழுவின் ஒருவர் காத்திருந்தார். ஏற்பாடெல்லாம் சிறப்பாக இருக்கிறதே என நினைத்தேன். எமிகிரேஷனில் பாஸ்போர்ட்டைப் பார்த்துவிட்டு, அனுமதிக்க முடியாது என்றார்கள். காரணம், நான் ஒரு முன்னாள் புலிப்போராளி. ‘அதெல்லாம் கன காலத்துக்கு முன்னால்’ என்றதற்கு, ‘தெரியும் தெரியும்’ என்றார்கள். ‘விசாவை கேன்சல் செய்கிறேன்’ என்றார்கள். பிறகு, போராடி விழா நடக்கும் 10 நாள்களுக்கு மட்டும் அனுமதி பெற்றேன். அதுவும் என் பாஸ்போர்ட்டை அவர்களே வைத்துக்கொண்டார்கள். திரும்பிவரும்போது எனது ஒரு வருட கனடா விசாவை ரத்துச் செய்து என்னை வெளியேற்றினார்கள்.”

"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி

“இவ்வளவுக்கு மத்தியில் உங்களுக்கு இலக்கிய, கலை ஆர்வம் எப்படி உருவானது?”

“எங்கள் கிராமமே நாடகவெறி பிடித்தது. இரவில் விடிய விடிய கிறிஸ்துவ தென்மோடிக் கூத்துகள் நடக்கும். முற்கூத்தில் ராஜாவாக ஒருவரும் பிற்கூத்தில் ராஜாவாக வேறொருவரும் நடிக்குமளவிற்கு நீண்ட கூத்துகள் அவை. கூத்தின் அளவு 8-9 மணி நேரங்களிருக்கும். கூத்திற்கான ஒத்திகை மாத்திரம் ஏழெட்டு மாதங்கள் நடக்கும். ஒத்திகையை வேடிக்கை பார்ப்பதற்கே மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.

நான் 10 வயதிலேயே கூத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் நடித்த முதல் பாத்திரமே துரோகி பாத்திரம்தான் (சிரிக்கிறார்). பண்டார வன்னியன் கூத்தில் நான்தான் காக்கைவன்னியன். பிறகு சமூகச் சீர்திருத்த நாடகங்கள் எழுதி நடிப்பது, நாடகங்கள் இடையே சினிமாப் படப்பாடல்களைப்போட்டு வாயசைப்பது என இருந்தோம். அப்போது நாங்கள் வாயசைத்த ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்’ எம்.ஜி.ஆர். பாடல்தான் இப்போதும் என் செல்போன் ரிங்டோன்.

இயக்கத்தில் இருந்த காலகட்டத்திலும் கவிதை எழுதுவது, மக்கள் மத்தியில் நாடகங்கள் போடுவது என இருந்தோம். நிலாந்தன் எழுதிய ‘விடுதலைக் காளி’ என்ற நாடகத்தை ஒரு நாளில் பத்து கிராமங்களில்கூட நடித்திருக்கிறோம். எனவே, கலையின் மீதான ஆர்வம் எனக்குச் சிறுபிராயத்தில் ஆரம்பித்தது.

15 வயதில் எனக்குக் கடவுள் நம்பிக்கை போய்விட்டது. சிறைக்குச் சென்றபோது கடவுள் நம்பிக்கை மறுபடியும் வந்தது. வெளியே வந்து தாய்லாந்து போனபோது நான் எடுத்துச் சென்றவை இரண்டே புத்தகங்கள். அவை பாரதியார் கவிதைகள் மற்றும் பைபிள். தாய்லாந்தில் தமிழில் படிப்பதற்கு ஏதும் கிடைக்காமல் பைபிளையும் பாரதியார் கவிதைகளையும் திரும்பத் திரும்பப் படித்தவாறிருந்தேன். எப்போது பைபிளைக் கசடறக் கற்றேனோ, அந்தத் தருணத்தில் என் கடவுள் நம்பிக்கை முற்றாக அழிந்தது. தாய்லாந்தில் இருக்கும்போதே, அங்கிருந்த முந்நூறு ஈழத் தமிழர்களுக்காக ‘நெற்றிக்கண்’ என்ற கையெழுத்து - ஜெராக்ஸ் பத்திரிகையை நடத்தினேன்.  பிரான்ஸுக்குப் போன பிறகு, ‘நான்காம் அகிலம்’ என்ற சர்வதேச ட்ராட்ஸிகிய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தேன். கட்சிக்குள் சென்ற பிறகுதான் என்னுடைய இலக்கிய வாசிப்பு சரியான முறையில் தொடங்கியது. கட்சித் தோழர்களுடனான உரையாடல்கள் மூலம்தான் எழுத்தாளன் ஷோபாசக்தி உருவானான்.”

“ `நான்காம் அகில’த்தில் உங்களுடைய செயல்பாடு என்னவாக இருந்தது, அங்கு ஏதும் முரண் ஏற்படவில்லையா?”

“நான் பிரான்ஸ் போய் ஒரு மாதம் இருக்கும். வேலை சோலி ஏதுமில்லை. முழு ‘தண்ணி’யில் சாலையில் போய்க்கொண்டிருந்தேன். தமிழ்க் கடைத்தெருப் பகுதியில் ‘தொழிலாளர் பாதை’ எனும் பத்திரிகையைச் சில தமிழ் இளைஞர்கள் விற்றுக்கொண்டிருந்தனர். நான் அந்தப் பத்திரிகையைக் காசு கொடுத்து வாங்கியதோடு, அவர்களிடமிருந்த சிறு பிரசுரத்தையும் வாங்கியதும் அவர்கள் பேரதிர்ச்சி அடைந்தார்கள். பொதுவாக யாரும் அந்தப் பத்திரிகையை வாங்குவதில்லை. அந்தப் பத்திரிகையின் மொழியே புரட்சிகரக் கரடுமுரடாயிருக்கும். பின்னாளில் நானே அந்தப் பத்திரிகையைத் தெருத்தெருவாக விற்றிருக்கிறேன்.

நான் வலியப்போய் பத்திரிகையை வாங்கியது அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்க வேண்டும். உடனே தொடர்பு எண் கேட்டார்கள். எண்ணைக் கொடுத்து விட்டேன். அடுத்த நாளே தொடர்பு கொண்டார்கள். அவர்களுடனான முதற் சந்திப்பில்தான் ட்ராஸ்கி எனும் பெயரை அறிந்தேன். அதைத் தொடர்ந்து ஏராளமான உரையாடல்கள். அவர்கள்தான் என்னைத் தேசியவாத அரசியலிலிருந்து வெளியே கொண்டுவந்தவர்கள். அந்த இயக்கத்தில் தமிழர்கள் மட்டுமல்ல, பிரெஞ்சுத் தோழர்களும் இருந்தனர். வருஷத்துக்கு ஒருமுறை சம்மர் கேம்ப் அழைத்துச் சென்று வகுப்புகள் நடக்கும். உலகம் முழுவதுமிருந்து வரும் ட்ராட்ஸ்கியர்கள் அந்தப் பயிற்சி முகாமில் கலந்துகொள்வார்கள். நான்கு வருடங்கள் கடுமையான பயிற்சியில் முரட்டு டிராட்ஸ்கியவாதியாக உருவானேன். அப்போதுதான் தமிழகத்திலிருந்து அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி, ரவிக்குமார் ஆகியோர் இணைந்து நடத்திய ‘நிறப்பிரிகை’ இதழ்கள் வேறு தோழர்கள் மூலம் கிடைத்தன. சாதி, தலித்தியம் குறித்த கட்டுரைகளை ‘நிறப்பிரிகை’யில் வாசித்தேன். அது குறித்துக் கட்சியோடு உரையாடத் தொடங்கினேன். அதில் முரண் ஏற்பட்டது. ‘வர்க்கப் புரட்சி நடைபெற்றால், சாதி ஒழிந்துவிடும்’ என்ற வழமையான எளிய சூத்திரமே அவர்களிடமிருந்தது. நான் கட்சியிலிருந்து வெளியேறினேன்.

"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி

98-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தேன். இந்தியாவில் என் அம்மா, அப்பா, தங்கை அகதிகளாக வாழ்ந்துவந்தார்கள். நான் பிரான்ஸிலிருந்து கிளம்பும்போது, தோழர் சுகன், அ.மார்க்ஸின் தஞ்சாவூர் முகவரியைக் கொடுத்து அ.மார்க்ஸைப் போய் அவசியம் சந்திக்கச் சொன்னார். நான் அவர் வீட்டுக்குப் போனேன். அங்கே ஒருநாள் முழுவதும் அவரிடம் உரையாடினேன். அங்கிருந்து சென்னைக்குக் கிளம்பியபோது, வளர்மதி, ராஜன் குறை ஆகியோரின் தொலைபேசி எண்களைத் தந்து அவர்களைச் சந்திக்கச் சொன்னார் மார்க்ஸ். இப்படித்தான் ‘நிறப்பிரிகை’ குழுவோடு உரையாடவும் பின் நவீனத்துவம், தலித்தியம், பெரியாரியம் ஆகியவற்றைக் கற்கவும் தொடங்கினேன்.”

“இன்னமும் உங்களுக்குப் பின்நவீனத் துவத்தில் நம்பிக்கை இருக்கிறதா? சில வலதுசாரிகளும் பின்நவீனத்துவத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்து கிறார்களே?”

“பின்நவீனத்துவம் என்ன கடவுளா, நம்பிக்கை வைக்க. என்னைப் பொறுத்தவரை பின்நவீனத்துவம் என்பது ஓர் ஆய்வுச் செல்நெறி. இலக்கியப் பிரதிகளையும் கலையையும் அரசியலையும் சமூகத்தையும் புரிந்துகொள்வதற்கான அணுகல்முறை. அதில் எனக்கு ஆர்வம் உண்டு.

வலதுசாரிகள் மட்டுமல்ல; இலக்கியப் போலிகளும் பின்நவீனத்துவம் எனப் போகிற போக்கில் உச்சரித்துச் செல்கிறார்கள். பின்நவீனத்துவத்தின் பெயரால் ஃபோர்னோ பட இணையங்களை ஆதரித்த கொடுமையும் இங்குதான் நடந்தது. அதை எதிர்த்துக் கடுமையாக எனது வலைதளத்தில் எழுதியிருந்தேன். வர்க்கப் பிரச்னைகள் குறித்தோ, பண்பாடு குறித்தோ உரையாடல் நடக்கும்போதெல்லாம், ‘பின் நவீனத்துவம் அனைத்தையும் கட்டுடைக்கும்’ என உளறிக் கொட்டுவார்கள். மிகக் கொச்சையாகப் பின்நவீனத்துவத்தைப் புரிந்துவைப்பவர்கள் இவர்களென்றால், பின் நவீனத்துவத்தை எதிர்ப்பவர்களோ அதை இன்னும் கொச்சையாகப் புரிந்துவைத்திருக்கிறார்கள். பின்நவீனத்துவம் தத்துவங்களைக் கேள்விக்குள்ளாக்கும் ஓர் ஆய்வுமுறைமை. அதையே தத்துவமாக்குவதும் அரசியல் நிறுவனமாக்குவதும் சட்டகமாக்குவதும் அறியாமை.”

 “ஆன்டனி என்ற பெயர் ஷோபாசக்தி ஆனது எப்போது?”

“ஆம். நான் பாரீஸுக்குப் போனவுடனே சிவசக்தி என்ற பெயரில் எழுதினேன். ‘சொல்லடி சிவசக்தி எனைச் சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்’ என்ற பாரதியின் வரியில் இருந்து எடுத்தது. அன்ரனிதாசன் என்ற பெயரிலும் சிலவற்றை எழுதினேன். அப்போது பணக் கஷ்டம், அகதி வழக்கை வேறு நடத்தியாக

"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி

வேண்டும். அதனால் இரண்டு இலக்கியப் பரிசுப் போட்டிகளுக்குக் கதையும் கவிதையும் அனுப்பினேன். இரண்டு போட்டிகளிலுமே கதைக்கு இரண்டாம் பரிசு; கவிதைக்கு முதல் பரிசு. ஆனால், இந்த இடைவெளியில் கட்சியில் சேர்ந்துவிட்டேன். கட்சி இந்தப் பரிசுப் பணத்தை வாங்காதே என்றது. அதனால் நான் வாங்கவும் இல்லை. கட்சியைவிட்டு வெளியே வந்தபின் சிவசக்தி என்ற பெயரை விட்டுவிட வேண்டும் என்று என் அறவுணர்வு சொன்னது. பாரதிதாசன், சுப்புரத்தினதாசன் என்றெல்லாம் நமக்குப் பிடித்த ஆளுமைகளின் பெயரைச் சூடிக்கொள்வது நம் வழக்கமல்லவா. போதாக்குறைக்கு அப்போது ஜெயமோகனதாசன் என்றொருவர் வேறு சுற்றிக்கொண்டிருந்தார். அதனால், எனக்குப் பிடித்த கலைஞர் ஒருவரின் பெயரை நான் சூட்டிக்கொள்ள நினைத்தேன். ஜெயகாந்தனை எனக்குப் பிடிக்கும். ஆனால், ஜெயசக்தி என்ற பெயர் பிடிக்கவில்லை. எனக்கு நடிகை ‘பசி’ ஷோபாவை மிகவும் பிடிக்கும். அதனால் ஷோபாசக்தி என்று வைத்துக்கொண்டேன். ‘ஷோபாசக்தி’ ஆனபிறகு, எழுதிய கதைகளைத்தான் தொகுப்பாக்கியுள்ளேன். சிவசக்தி மற்றும் அன்ரனிதாசன் எனும் பெயரில் எழுதியவற்றை மூடி மறைத்துவிட்டேன். ஆனால், என் செல்ல விமர்சகர்கள் அவற்றைக் கண்டுபிடித்து இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள்.  அவையெல்லாம் தமிழ் தேசியத்துக்கு அறைகூவும் கதைகளும் கவிதைகளும். ஷோபாசக்தி என்கிற பெயரில் நான் எழுதிய முதல் கதை ‘எலி வேட்டை’. ”

“புலிகள் அமைப்பிலிருந்து விலகி, அகதி வாழ்க்கை, இலக்கியம் எனச் சென்ற நீங்கள் தீவிரமான புலி எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டுக்கு எப்போது வந்தீர்கள்?”

‘‘நான் புலிகள் அமைப்பில் 83-ம் ஆண்டு சேர்ந்து 86-ம் ஆண்டு வெளியேறிவிட்டேன்.  ஆனால், புலிகளைப் பகிங்கிரமாக எழுதி எதிர்க்கத் தொடங்கியது 98-ல்தான். நான் அந்த இடத்துக்கு வந்து சேருவதற்கு 12 ஆண்டுகள் ஆனது. இந்தக் காலங்களில் நான் எழுதாமலும் இல்லை. ஏதோ சொற்பமாகவேனும் எழுதியுள்ளேன். இந்தக் காலத்தில் தமிழ் தேசியத்திற்கு ஆதரவான பிரதிகளையும் எழுதியுள்ளேன்.

இந்த தேசியவாதப் போக்கிலிருந்து நான் என்னைத் துண்டித்துக்கொண்டு தமிழ் தேசியத்தையும் புலிகளையும் தீவிரமாக எதிர்க்கும் நிலைக்கு வந்ததற்கு   முக்கியமான காரணம், நான் கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கியபோது தேசியவாதம் குறித்து நடந்த உரையாடல்கள். அதைவிடவும் முக்கியமாகப் புலிகளின் செயற்பாடுகளே என்னை அவர்களை நோக்கி விமர்சிக்கத் தூண்டின. அவர்கள் முஸ்லிம்களைக் கட்டிய துணியோடு 24 மணி நேரத்தில் வடக்கிலிருந்து வெளியேற்றியது, நாடு கடந்து வந்தும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டது, பாரீஸில் தோழர் சபாலிங்கத்தைச் சுட்டுக்கொன்றது என்று ஏராளமானதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எழுதுவதற்காக ஒரு மனுசனைச் சுட்டுக்கொல்வதா? புலிகள் மேலும் மேலும் வன்கொடுமை அமைப்பாக மாறிக்கொண்டிருந்ததால், இனி விமர்சித்துத்தான் ஆக வேண்டும் என முடிவெடுத்தேன். இந்த முடிவை இயக்கத்தைவிட்டு வந்த மறுநாளே எடுக்கவில்லை. 12 ஆண்டுகளாயிற்று. நான் புலி எதிர்ப்பாளன் ஆவதற்குக் காரணம் புலிகளே. ஆம், அவர்களே என்னைப் புலி எதிர்ப்பாளன் ஆக்கினார்கள்”

"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி

“புலி எதிர்ப்பை முன்வைத்ததால், உங்களுக்கு அச்சுறுத்தல்கள் வந்தனவா?”

“பலமுறை உடல்ரீதியான தாக்குதல் எத்தனங்கள் நிகழ்ந்தாலும் ஓரிரு தடவைதான் வசமாக அவர்களிடம் சிக்கினேன். புலிகள் - சந்திரிகா கூட்டின்போது இதன் பின்னால் உள்ளது சமாதானம் அல்ல, போர்த் தயாரிப்பு முன்னேற்பாடுகளே என  ‘தொழிலாளர் பாதை’ பத்திரிகையில் எழுதி, அதை மக்களிடம் எடுத்துச் சென்றோம். அதற்கு அடித்தார்கள். மே தின ஊர்வலத்தில்  வைத்துத் தாக்கினார்கள். தெருவில் பத்திரிகை விற்றுக்கொண்டு நிற்கும்போது தாக்கி, பத்திரிகைகளைப் பறித்துச் சென்றிருக்கிறார்கள். அவ்வப்போது சில பல மிரட்டல்கள் வரும். இப்போது இந்தத் தமிழகப்பயணத்தில்கூட ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்குச் சென்று வரும்போது ஒருவர், ‘டேய் ஷோபாசக்தி புக் ஃபேருக்கு வாடா... உதைக்கிறேன்’ என்று கத்தினார். நான், ‘நன்றி தோழர்’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். விசாரித்தபோது ஏதோ தமிழ் தேசிய அமைப்பைச் சேர்ந்தவராம். 2009-க்குப் பிறகு உடல்ரீதியான அச்சுறுத்தல்கள் குறைந்திருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்பு பாரீஸில் கிழக்கு முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் நூல் வெளியீட்டு விழாவில், அந்த நூலைப் பெருமளவு மறுத்துப் பேசினேன். ஆனால், புலிகளின் ஆதரவாளர்களின் நோக்கமோ அந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசவே கூடாது என்பதாக இருந்தது. அந்தக் கூட்டத்துக்கு முன், 30 பேர் கும்பலாக வந்து, அரங்குக்குள் போய் புத்தகங்களை எல்லாம் எடுத்து வந்து கொளுத்தி, எங்களை உள்ளே போகக் கூடாதென மிரட்டி, பிரச்னை பண்ணினார்கள். அவர்கள் அடிப்பதற்கு என்றே வந்திருக்கிறார்கள். நாங்களும் நிறைய பேர் இருந்தோம். ஆனால், சண்டை வேண்டாம் என அமைதியாக இருந்தோம். பிறகு ஆயுதப்படை போலீஸ் வந்து அவர்களை அப்புறப்படுத்தியதும் நிகழ்ச்சி நடந்தது. இப்படித் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.
 
எழுதியதற்காகவும் மாற்றுக் கருத்துகளைப் பேசியதற்காகவும் ஐரோப்பாவிலேயே பல சிறுபத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். கனடாவில் ‘தேடகம்’ நுாலகத்தையே புலிகள் கொளுத்திப்போட்டார்கள். யாழ்ப்பாண நுாலகத்தை இலங்கை அரசு கொளுத்தியதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?’’

“2009-க்குப் பிறகு புலிகள் இல்லை. இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கவோ, தமிழர்களுக்காகப் போராடவோ யாரும் இல்லாத சூழல். ‘புலிகள் இருந்திருக்கலாமோ’ என்று நினைத்திருக்கிறீர்களா?”

“புலிகள் அழிய வேண்டும் என யாருக்கு ஆசை? புலிகள் தமது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைத்தானே அவர்கள் இருக்கும்போதிலிருந்தே வலியுறுத்தி வந்தேன்! அவர்கள் ஆயுதப் போராட்டத்தை நிறுத்திக்கொண்டு பேச்சு வார்த்தைக்குச் செல்ல வேண்டும், அதன்மூலம் ஒரு தீர்வை எட்ட வேண்டும் என்பதுதான் என் கோரிக்கையாக இருந்தது. அதற்கான வாய்ப்புகளும் நிறைய இருந்தன. புலிகளை இலங்கை அரசுக்குச் சமமாகச் சர்வதேசம் மதித்து ஐந்து பெரிய நாடுகளின் அனுசரணையிலேயே பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. அந்த வாய்ப்புகளைப் புலிகள் தவறவிட்டனர். இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளுக்கு நம்பகமானவர்களில்லை என்ற போதிலும் சர்வதேசத்தின் மத்தியஸ்தத்தில் ஓர் அமைதி உடன்பாட்டைக் கொண்டுவந்திருக்க முடியும். சர்வதேசத்தின் மத்தியஸ்தத்தில் அந்த உடன்பாட்டைக் காப்பாற்ற இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்க முடியும். அமைதி உடன்பாடு இலங்கை அரசுக்கு அல்லாமல் எங்களுக்கே அவசியமாக இருந்தது. ஏனெனில், போரால் 90 விழுக்காடு பாதிப்புக்கு உள்ளாகிச் செத்துக் கொண்டிருந்தவர்கள் தமிழர்கள்தான்.

இந்த ஆயுதப்போராட்டம் நிச்சயம் நம்மை அழிவுக்குத்தான் இட்டுச் செல்லும் என அப்போதே கூறிவந்தோம். புலிகள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. அது இவ்வளவு பெரிய பேரழிவுக்குக் காரணமானது. எந்த மனிதர் இறப்பதும் கொல்லப்படுவதும் நமக்கு வருத்தம்தான். விடுதலைப் புலிகள் எனும் அமைப்பு இருந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் தங்கள் அரசியல் முகத்தை மாற்றியிருக்க வேண்டும்.

புலிகளுக்குப் பின்னான இந்தக் காலகட்டத்தைப் பார்த்தோம் என்றால், எம்மிடம் எந்த வலுவான அரசியல் தலைவர்களும் கிடையாது. எல்லாத் தலைவர்களையும் கொன்றொழித்தாகி விட்டது. புலிகள் கொன்றது பாதி; இலங்கை அரசும் அதன் துணைப்படைகளும் கொன்றது மீதி. 83-க்குமுன் நாங்கள் எந்த அரசியல் தலைவர்களை எதிர்த்து,  எந்தப் பாராளுமன்ற ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்து அரசியலில் இறங்கினோமோ, அந்த இடத்துக்கே மீண்டும் வந்து நிற்கிறோம். இயக்கங்கள் அரசியலில் நுழையும்போது வக்கீல்கள், நீதிபதிகள், வெள்ளை வேட்டிக் கள்ளன்கள் என அவர்கள்தான் மக்களிடம் அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தார்கள். எங்களது போராட்டம் முதலில் அவர்களை மக்களிடமிருந்து அந்நியப்படுத்துவதாகவே இருந்தது. அதைச் செய்து முடித்தோம். ஆனால், மீண்டும் அவர்களே நமது மக்களுக்குத் தலைமை ஏற்றிருக்கிறார்கள். அவலம்!

"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி

அடுத்த தலைமுறையாவது நம்பிக்கைத் தருவதாக அமைய வேண்டும். எதுவாகினும் சரி, நான் நாட்டைவிட்டு வந்து 25 வருடங்களாகின்றன. தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டியது அங்கேயிருக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்கள்தாம். முக்கியமாக, பகை மறப்பு நிகழ வேண்டும். முதல் கட்டமாக, தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும், அடுத்து சிறுபான்மையினரான தமிழர்கள், முஸ்லிம்களுக்கும் சிங்கள மக்களுக்கும்.

30 வருட யுத்தம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் அனுபவம்; ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் இழப்பு; ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வன்மம். இவையெல்லாம் ஆற காலம் எடுக்கும். அதற்கான வேலைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. எதிர்காலத்தில் இலங்கையின் அரசியல் போக்கைப் பாராளுமன்ற அரசியலே வழிநடத்தும். இப்போதும்கூடத் தமிழர்களுக்கு வாக்குப் பலம் இருக்கிறது. மைத்ரிபால சிறிசேனாகூடத் தமிழர்களின் வாக்குப் பலத்தில்தான் வென்றார். சிறுபான்மை இனங்கள் தங்களது வாக்குப் பலத்தை ஒன்றிணைத்து அரசியல் செய்வதின் வழியேதான் இனி, சிங்களப் பேரினவாத அரசியலை எதிர்கொள்ள முடியும்.’’

“புலிகள் இயக்கத்தில் முதல் நம்பிக்கை இழப்புக்குக் காரணமாக அவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதைச் சொல்கிறீர்கள். இப்போது, நீங்களே நாடாளுமன்றப் பாதை, பேச்சு வார்த்தையை நோக்கித் தமிழர்களை நகரச் சொல்கிறீர்களே?”

“இனிப் பேச்சுவார்த்தை இல்லை; ஆயுதப் போராட்டம்தான் எனக் கருதியது எண்பதுகளின் காலகட்டத்தில். அதற்குப் பின்னான காலங்களில் அனுபவமே பேராசானாக அமைந்தது. எல்லாத் தத்துவங்களைவிடவும் அனுபவமே பேராசான். 70-களுக்குப் பிறகு இலங்கையில் நடைபெற்ற ஆயுத எழுச்சிகள் எல்லாமே - அதைத் தமிழர்கள் முன்னெடுத்தாலும் சிங்களவர்கள் முன்னெடுத்தாலும் அந்த ஆயுத எழுச்சிகள் ரத்த வெள்ளத்திலே அரசால் தோற்கடிக்கப்பட்டன. இலங்கை மிகச் சிறிய நாடு. ஆனால், அது உள்நாட்டுப் போர்களில் கொடுத்த விலை மிக மிக அதிகம். லட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்தும் அற்ப வெற்றியையும் அடைய முடியாதவர்களானோம்.

அந்த அனுபவத்திலிருந்துதான் ஆயுதப் போராட்ட அரசியலே இனி வேண்டாம் என்கிறேன். இனி எந்தக் காலத்திலும் ஆயுதப்போராட்டம் பொருத்தமற்றது. எந்த நாட்டுக்கும் பொருத்தமற்றது. கியூபா போராட்டம், வியட்நாம் போராட்டக் காலங்களும் அரசியல் சூழல்களும் இன்றிலிருந்து முற்றிலும் வேறானவை. சோவியத் யூனியன் வலுவாக இருந்த காலம் அது. மேற்சொன்ன போராட்டங்களுக்கு எல்லாம் சோவியத் யூனியன் உற்ற துணையாக நின்றது. உலக முதலாளித்துவ அரசுகள் இன்று உள்ளதுபோல இறுக்கமான வலைப்பின்னலமைப்பும் மிருகத்தனமான ராணுவ வலிமையும் பெற்றிராத காலங்கள்அவை.

இன்று அரசுகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும்போது, ஓர் அரசுக்கு ஆதரவாகப் பல்வேறு அரசுகள் குவிந்துவிடுகிறார்கள். இதுதானே ஈழத்திலும் நடந்தது? ஈழ இறுதிப் போரில் மருத்துவக் குழு எனும் போர்வையில் இந்தியாவிலிருந்து ராணுவ நிபுணர்கள் வந்து இலங்கை ராணுவத்தை வழிநடத்தினார்கள். கடைசி நான்கு வருடங்கள் புலிகளுக்கு ஒரு துப்பாக்கிக் குண்டுகூட வெளிநாட்டிலிருந்து வரவில்லை. இந்திய ராணுவம், இலங்கைக் கடற்பரப்பின் பகுதிகளைக் கண்காணித்து, இலங்கை அரசுக்குத் தகவல் சொல்லி, புலிகளின் கப்பல்களை மூழ்கடிக்கச் செய்தது.

இலங்கை, இந்தியாவுக்குக் கீழே தொங்கிக்கொண்டிருக்கும் சின்னஞ்சிறு தீவாய்ப் புவியியல் ரீதியாக அமைந்ததுதான் பெரும் துன்பமாகப் போய்விட்டது. தனது விருப்பங்களுக்கு மாறாக இலங்கையில் சிறு அரசியல் மாற்றம் நிகழ்வதையும் இந்திய அரசு அனுமதிக்கப் போவதில்லை. இந்திரா காந்தி ஈழப் போராளிகளுக்கு ஆதரவு கொடுத்ததுகூட ஜெயவர்த்தனேவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளத்தான். எங்கள்மூலம் ஜெயவர்த்தனேவுக்குத் தலையிடியைக் கொடுத்து, அவர் இந்தியாவின் காலடியில் வந்தபிறகு, எங்களிடம், ‘போதும் பேச்சு வார்த்தைக்குச் செல்லுங்கள்’ என்று சொன்னது இந்திய அரசு. ஆக, எங்களது போராட்டத்தின் நிகழ்வுப்போக்கை இந்தியா உள்படப் பல ஏகாதிபத்திய நாடுகளே முடிவு செய்தன. இவை எல்லாவற்றையும் தீர யோசித்தே ஆயுதப் போராட்டத்தை நிராகரிக்கிறேன். நான் மட்டுமல்ல, இன்று இலங்கையிலிருக்கும் எந்த அரசியலாளரோ அறிவுஜீவியோ ஆயுதப் போராட்டத்தை முன்னிறுத்துவதில்லை.’’

“விடுதலைப் புலிகள், இலங்கை அரசாங்கம் இரண்டின் வன்முறையையும் பேசுகிறேன் என்கிறீர்கள். ஆனால், உங்களது பேச்சில் புலிகள் பற்றிய விமர்சனங்கள் மட்டுமே அதிகமிருப்பதாகப் படுகிறதே?”

“நான் தமிழில் மட்டும் இயங்குபவன் இல்லை. என்னுடைய புத்தகங்கள் பிற மொழிகளிலும் வருகின்றன. அவற்றாலும் திரைப்பட உலகிற்கு நான் சென்றதாலும்   ஏராளமான சர்வதேச அரங்குகளிலும் ஊடகங்களிலும் குரல் ஒலிக்கும் வாய்ப்புப் பெற்றுள்ளேன். வருடம் முழுவதும் பேசிக்கொண்டுதானிருக்கிறேன்.

எல்லா இடங்களிலும் இலங்கை அரசுக்கு எதிராக நான் குரல் கொடுத்துதான் வருகிறேன். அங்கெல்லாம் பெரும்பாலும் புலிகள் பற்றிப் பேசியதில்லை; பேச வேண்டிய அவசியமுமில்லை. ஆனால், தமிழ்ச் சூழலில் உங்களுடன் பேசும்போது இலங்கை அரசாங்கம் கொடுமையானது; இலங்கை அரசாங்கம் பாசிசமானது என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. ஏனென்றால், அது உங்களுக்கே நன்கு தெரியும். உங்களுக்குத் தெரியாத சில விஷயங்களைப் பற்றித்தான் உங்களிடம் நான் பேச வேண்டும். புலிகள் தரப்புப் பற்றி உங்களுக்குத் தெரியாது. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. அந்தச் சூழலில்தான் என்னைப் போன்றவர்கள் பேசுகிறோம். நான் புலி எதிர்ப்பாளர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அது மட்டுமே நான் அல்ல. நான் இந்திய அரசு எதிர்ப்பாளன், இலங்கை அரசு எதிர்ப்பாளன், சாதி எதிர்ப்பாளன், பார்ப்பன எதிர்ப்பாளன், ஆணாதிக்க எதிர்ப்பாளன், இந்துத்துவ எதிர்ப்பாளன், பி.ஜே.பி. எதிர்ப்பாளன் எல்லாமும்தான். 2009-க்குப் பிறகு எல்லோரும் பேசலாம். ஆனால், இலங்கையில் புலிகளின் அராஜகத்திற்கு எதிராக அநேகர் குரல் கொடுக்கத் துணியாத காலத்தில், மூச்சுவிட்டாலும் சுட்டுக்கொல்லப்படும் சூழலில், நாங்கள் புலம் பெயர்ந்த நிலையில் 50 பேராவது இந்த அநியாயங்களுக்கு எதிராகச் சிறுபத்திரிகை நடத்தினோம், ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம், கருத்தரங்குகளை நடத்தினோம் என்கிற வரலாறு உண்டு எங்களுக்கு.’’

``நாடாளுமன்றப் பாதையில் புலிகள் சென்றிருக்க வேண்டும் எனச் சொல்கிறீர்கள். ஆனால், அந்தப் பாதையில் சென்ற டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான்களால் மக்களின் அரசியலை முன்னெடுக்க முடியவில்லையே?’’

“உண்மைதான். ஆனால் கருணா, பிள்ளையான் தொடர்ந்து ஆயுதம் ஏந்திப் போராடியிருந்தால், கிழக்கிலும் ஒரு முள்ளிவாய்க்கால் நிகழ்ந்திருக்கும். கிழக்கிலும் இரண்டு லட்சம் பேர் கொல்லப்பட்டிருப்பார்கள். நீங்கள் சொன்னவர்கள் ஜனநாயகத்தின் மீதுள்ள விருப்பால் நாடாளுமன்ற அரசியலுக்குத் திரும்பியவர்கள் அல்ல. புலிகளிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள இலங்கை அரசு பக்கம் சாய்ந்து, அதன் வழியே ஆயுதங்களை ஒப்புக்குக் களைந்துவிட்டு நாடாளுமன்றத்திற்குப் போனவர்கள். சமயம் கிடைத்தால் கொலை செய்யவும் தயங்காதவர்கள். செய்துமிருக்கிறார்கள்.

நான் சொல்வது நேர்மையும் ஜனநாயகப் பற்றுமுள்ள, இனவெறுப்பற்ற நாடாளுமன்ற அரசியல். இன்று உலகில் நடைமுறையில் இருக்கும் ஆட்சி வடிவங்களில் நாடாளுமன்ற அரசியல் முறையே சிறந்ததாக இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.”

“புலி எதிர்ப்பு, பிரபாகரன் மீதான விமர்சனங்களை முன்வைத்தாலும் தமிழகத்தில் பல மட்டத்தில் போராட்டக்களத்தில் நிற்கும் திருமாவளவன் தொடங்கி இன்றைய பல இளைஞர்கள் வரை பிரபாகரனையே தங்கள் ஆதர்சப் போராளியாக முன்னிறுத்துகிறார்கள். தலித் அரசியலைப் பேசும் கோபி நயினார்கூட ‘அறம்’ படத்தின் நாயகிக்கு மதிவதினி எனப் பெயர்வைக்கிறார். எல்லோருக்கும் ஆதர்சமான போராளியாகப் பிரபாகரன் இருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“பிரபாகரனை ஆதர்சமாகக்கொள்வதில் எந்தத் தவறுமில்லை. அவர் தனது பதினாறாவது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, தலைமறைவாக இருந்து, போராடி, பெரும் இயக்கத்தைக் கட்டியெழுப்பி, உலக அளவில் தமிழர்களின் பிரச்னைகளை அறியச் செய்தவர். அவர் நிச்சயமாகச் சாதி எதிர்ப்பாளர்தான். அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. என்னுடைய விமர்சனம் அவரின் அரசியல் வழிமுறைகளைப் பற்றித்தான். நான் புலிகளின் எல்லா அரசியல் வழிமுறைகளையும் எதிர்க்கவில்லையே. ‘பொது இடத்தில் சாதி பேசினால் குற்றம், அதற்குத் தண்டனை’ எனச் சட்டம் போட்டார்கள், மணக்கொடைத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தார்கள். இவற்றையெல்லாம் நான் எதிர்த்தேனா? புலிகளின் தவறான செயல்களை, தவறான அரசியல் நிலைப்பாடுகளைத்தான் நான் எதிர்த்தேன். தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, எங்களது மக்களுக்கும் தெளிவில்லாத பல அரசியல் சிக்கல்கள் உள்ளன. அதை நாம் உடைத்துச் சொல்லித்தானே ஆக வேண்டும். அப்படிச் சொல்லும்போது அறம் உள்ளவர்கள் கேட்டுக்கொள்வார்கள்.

இப்போது கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைக் கேட்டு நாம் எப்படிக் கொதித்தெழுந்தோம், ெவகுசன மக்கள் எழாவிட்டாலும் எழுத்தாளர்களும் ஜனநாயகச் சக்திகளும் கொதித்தெழுந்தோம் இல்லையா? இதுபோல புலிகள் எத்தனை எழுத்தாளர்களைக் கொன்றொழித்தார்கள்? ரஜினி திரணகம, செல்வி, சபாலிங்கம் என எத்தனை பேர்? ஆக, கவுரி லங்கேஷுக்கு வைக்கப்படும் அதே அளவுகோல்தானே செல்விக்கும் வைக்கப்பட வேண்டும். புலிகளை ஆதரியுங்கள். அவர்கள் தியாகம் செய்திருக்கிறார்கள். உயிரைப் பணயம்வைத்துப் போராடியிருக்கிறார்கள். அதில், ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. அதேவேளையில் நாம் சொல்லும் விமர்சனங்களையும் மன்றாட்டுகளையும் தயவுசெய்து காதுகொடுத்துக் கேளுங்கள். விமர்சனத்தையே ஏற்காத, மாற்றுக் கருத்தையே சகிக்காத ஒரு தலைமையாகப் பிரபாகரன் உருவெடுத்ததற்கு, விமர்சனமற்ற இந்த வழிபாடும் ஒரு காரணம் என்பதை உணருங்கள்.”

 “சாதி பேசத் தடை, மணக்கொடைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றை புலிகள் இயக்கம் கொண்டுவந்தார்களே, அது தமிழ் மக்களிடையே என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அது இன்று வரைக்கும் நீடிக்கிறதா?”

‘‘சாதி பற்றி இழிவாகப் பேசினால் தண்டனை, மணக்கொடைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றைக் கொண்டுவந்தார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். மணக்கொடைத் தடைச் சட்டத்தை யாழ்ப்பாணத்தினர் எப்படிக் கையாண்டார்கள் தெரியுமா? கல்யாணம் இங்கே நடக்கும். பணப் பரிமாற்றம் வெளிநாட்டில் நடக்கும். சாதியைப் பொறுத்தவரை, புலிகளின் சட்டத்தில் இருந்தது; அவ்வளவுதான். இலங்கை அரசு 

"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி

1957-லேயே இந்தச் சட்டத்தைப் பிறப்பித்து இருந்தது. ஆனால், அவை சட்டமாகத்தான் இருந்தன. இந்தியாவில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்போல. இந்தச் சட்டங்களால் சாதியின் ஒரு வேரைக்கூடப் பிடுங்க முடியவில்லை. சாதி ஒழிப்பு என்பது எவ்வளவு பெரிய வேலைத் திட்டம்! சமூகத்தில் செய்ய வேண்டிய அடிப்படை வேலைத் திட்டம். அதைப் புலிகள் செய்யவில்லை என்பதுதான்  என் வருத்தம். 

ஈழ வரலாற்றிலேயே முதன்முதலாக எழுந்த வெள்ளாளர் அல்லாத தலைமை, புலிகளே. ஆனால், அவர்கள் சாதியொழிப்பில் கவனம் செலுத்தினால் யாழ்ப்பாணத்தின் ஆதிக்கச் சாதிகளிடமிருந்து குறிப்பாக, அனைத்து சமூக - பொருளியல் அதிகாரங்களையும் தங்கள் கைகளில் வைத்திருக்கும் வெள்ளாளர்களிடமிருந்து தாங்கள் ஆதரவை இழக்க வேண்டியிருக்கும் என நினைத்தார்கள். இதை அடேல் பாலசிங்கமே தனது நூலான ‘சுதந்திர வேட்கை’யில் சாடைமாடையாகக் குறிப்பிட்டிருப்பார்.”

“83-ல் தமிழீழம்தான் தீர்வு என இயக்கத்தில் சேர்ந்த நீங்கள், எந்த இடத்தில் அந்தக் கருத்திலிருந்து விலகினீர்கள்?”

“இன்றுவரைக்கும் எனக்குத் தமிழீழம் தவறான கோரிக்கை அல்ல. இதை நான் மட்டுமல்ல, டக்ளஸ் தேவானந்தாவைக் கேட்டால் அவரும் அப்படித்தான் சொல்வார். ஆனந்த சங்கரி சொல்லியே இருக்கிறார். நாங்கள் ஆயுதம் தூக்கியதற்கும் தமிழீழம் கோரியதற்கும் போதுமான நியாயங்கள் எங்களிடம் இருக்கின்றன. அவற்றை இலங்கை அரசே ஏற்படுத்திக் கொடுத்தது. ஏனென்றால், அவ்வளவு இனக் கலவரங்கள், அவ்வளவு இன ஒடுக்குமுறை, அவ்வளவு புறக்கணிப்புகளைச் சந்தித்திருக்கிறோம். ஆக, நாங்கள் தமிழீழம் கேட்டதில் எந்தப் பிழையும் இல்லை. இப்போது கிடைத்தால்கூட நாங்கள் அங்கே குடியேறிவிடுவோம். பிரச்னை என்னவென்றால், அதற்குச் சாத்தியமில்லை என்பதுதான்.

இந்த ஆயுதப் போராட்டம் வெல்லப்போவதில்லை என்பது எப்போது தெரியவந்தது என்றால், இந்தியா - இலங்கை ஒப்பந்தம் வந்தபோதுதான். இந்தியா நமது ஆயுதப் போராட்டத்துக்கு எதிராகத் திரும்புகிறது; பலவந்தமாக ஆயுதத்தை நம்மிடமிருந்து களைகிறது. இந்தியா எனும் பெரிய சக்தியை மீறி இலங்கையில் நாங்கள் தமிழீழத்தை ஏற்படுத்த முடியாது என்ற புரிதல் ஏற்பட்டது. இது ஓர் அவநம்பிக்கையான கூற்றாக உங்களுக்குப் படலாம். ஆனால், நான் சொல்வது புவியியல், ராணுவவியல், சர்வதேச அரசியல் போன்ற வலுவான காரணிகளின் அடிப்படையில். இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்குப் பின்பு நடந்த விஷயங்கள் அதை உறுதிப்படுத்தின.”

“நீங்கள் தலித் அரசியல் பேசியபோது, ‘ஈழச் சமூகத்தில் இல்லாத அரசியலை இறக்குமதி செய்வதாக’ விமர்சிக்கப்பட்டதே?”

 “ `தலித்’ என்பது தமிழ் வார்த்தை இல்லை என்றார்கள். தேசியம் தமிழ் வார்த்தை இல்லை; துப்பாக்கி தமிழ் வார்த்தை இல்லை; அவ்வளவு ஏன், பிரபாகரன்கூடத் தமிழ் வார்த்தை இல்லைதான்! இதுவா அரசியல் விமர்சன அளவுகோல்?”

“எங்கயோ இருந்த கார்ல் மார்க்ஸ், லெனின், பிடல், சேகுவேரா எல்லாம்  ஈழத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால், அருகிலேயே இருக்கும் அம்பேத்கரையும் பெரியாரையும் நாங்கள் பேசினால், அது இறக்குமதியா? இன்றுவரை இட ஒதுக்கீடு குறித்தோ, இந்துத்துவ ஒழிப்பு குறித்தோ சிந்தித்தறியா ஒரு சமூகத்திடம் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், தர்க்கபூர்வமாகப் பேசிக் கொண்டிருக்கிறோம். அதை எதிர்கொள்ள முடியாதபோது, இப்படியெல்லாம் முனகத்தான் செய்வார்கள்.”

“இன்றைக்கு அம்பேத்கரை முன்னிறுத்து பவர்கள் சிலர் பெரியாரை நிராகரிப்பது குறித்து?”

“அம்பேத்கரை முன்னிறுத்திப் பெரியாரை நிராகரிப்பவர்களை மட்டுமல்லாமல்,  பெரியாரை முன்னிறுத்தி அண்ணல் அம்பேத்கரை நிராகரிப்பவர்கள் குறித்தும் நாம் பேச வேண்டும். அண்ணல் அம்பேத்கரின், பெரியாரின் கருத்தியல்களை ஆழப் பயிலாமல் வெறும் பிம்ப வழிபாடு செய்பவர்களினால் எழும் கோளாறுகள் இவை. ஒருவர் தனது அரசியல் அடையாளமாக யாரை முன்னிறுத்துவது என்பது அவரது உரிமை. அண்ணல் அம்பேத்கரையே தனது முதன்மை வழிகாட்டியாக ஏற்ற ஒருவரிடம் போய், ‘நீ ஏன் பெரியாரைப் பேசவில்லை’ எனக் கேள்வி கேட்பது அவசியமற்றது. அவரவர் தனக்குச் சாத்தியமான வழியில் இந்தச் சாதியமைப்பு முறைக்கு எதிராகப் போராடட்டும். அதுதான் முக்கியம்.

அதேவேளையில் பெரியாரை முன்னிறுத்தி அம்பேத்கர்மீது அவதூறுகளோ அம்பேத்கரை முன்னிறுத்தி பெரியார்மீது அவதூறுகளோ அல்லது இவர்கள் இருவர் மீதும் மார்க்ஸியத்தை முன்னிறுத்தி அவதூறுகளோ செய்யப்படும்போது, நாம் எதிர்வினையாற்றியே தீரவேண்டும். ஆனால், நல்வாய்ப்பாகத் தமிழகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் அம்பேத்கரியர்கள் - பெரியாரியர்கள்- மார்க்ஸியர்கள் இடையே ஆழமான கருத்து முரண்களோ பரஸ்பரப் பகையோ பெரிதளவில் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த 20 வருடங்களில் இந்தச் சக்திகளிடையே ஒற்றுமை அதிகரித்திருப்பதையும் நான் பார்க்கிறேன். இந்தப் பலம்தான் இன்னும் இந்தப் பூமி இந்துத்துவவாதிகளுக்கு எட்டாக் கனியாக இருப்பதற்குக் காரணம். அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை.

சென்றவாரம் இயக்குநர் பா.ரஞ்சித்தோடும் அவரது தோழர்களோடும் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தேன். ரஞ்சித் பெரியாரை நிராகரிப்பதாக ஒரு பேச்சு இங்கு உண்டு. அது குறித்து அவரிடம் கேட்டேன். அவர், ‘பெரியார்மீது தனக்கு விமர்சனங்கள் ஏதுமில்லை’ என்றுதான் சொன்னார். அப்படி இருந்தால்தான் என்ன? விமர்சனங்களைக் கவனமாகச்  செவி குவித்துக் கேட்கும் மரபல்லவா பெரியார் மரபு. மறு ஆய்வுகள் வழியே தன்னை மறுபடியும் மறுபடியும் புதுப்பித்துக் கொண்டிருந்தவரல்லவா பெரியார்.

நாட்டில் இருக்கிற பிரச்னையை எல்லாம் விட்டுவிட்டு ஒரு கோஷ்டி ‘கபாலி படத்தில் ஏன் பெரியார் படத்தைக் காட்டவில்லை’ எனக் கேள்வி கேட்கிறது. `கபாலி’ படத்தில், ‘பறவையைக் கூண்டில் அடைத்து வைக்காதே, அதைச் சுதந்திரமாகப் பறக்கவிடு’ எனக் கபாலி ஜீவகாருண்ய வசனமொன்று பேசுவாரல்லவா... அதைச் சொல்ல முதலில் ஒரு 50 பேரைச் சுடுகிறார். சொன்ன பின்பு 100 பேரை வதைத்துச் சுடுகிறார். ரஜினிகாந்தின் பெரும் பிம்பம் வழியே உருவாக்கப்பட்ட அந்த டான் சினிமாவில் நம் அரசியல் மேதைகளுக்கு ஓர் இடமும் தேவையில்லை.

முன்பு ரவிக்குமார், பெரியாரைப் பெருமளவு அவதூறு செய்தார். அதெற்கெல்லாம் அப்போதே பதில் கொடுக்கப்பட்டது. அவரும் அண்ணா விருதைப் பெற்றுக்கொண்டு ஓய்ந்துபோனார். திராவிட இயக்கத்தை விமர்சிக்கிறோம் எனச் சொல்லிக்கொண்டு, அ.தி.மு.க-வையெல்லாம் திராவிட இயக்கமாகச் சொல்வது வரலாற்றுக் கயமை. தி.மு.க-வை திராவிட இயக்கத்தின் கருத்தியல் நீட்சியாகப் பெயரளவிற்குச் சொல்லிக்கொள்ளலாம், அவ்வளவுதான். இந்த ஊழல் கட்சிகளை முன்வைத்துத் திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பங்களிப்பை அளவிடுவது சரியற்றது.”

"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி

“2009- ஈழ இறுதிப் போருக்குப் பிறகு தமிழ்நாட்டில் உருவாகியுள்ள தமிழ் தேசிய எழுச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ‘தமிழ்நாட்டைத் தமிழன்தான் ஆளணும்’ என்பதுபோன்ற கோஷங்கள் முன்வைக்கப் படுகின்றனவே?”

“தமிழ் தேசிய முழக்கம் என்பது தமிழ்நாட்டுக்குப் புதியது அல்ல. ஆயுதம் ஏந்திய குழுக்கள்கூட இருந்தன அல்லவா! நிறைய பேர் இந்தக் கருத்தியலைப் பேசியிருக்கிறார்கள். 2009 என்பது ஒரு திருப்புமுனை. நம் பக்கத்தில் உள்ள நாட்டில் நம் மொழியைப் பேசும் மக்கள் கொத்துகொத்தாகக் கொல்லப்படும்போது, ‘இந்தியாவின் போரை நான் நடத்தியுள்ளேன்’ என ராஜபக்‌ஷே சொன்னபோது,   மக்கள் வீதிக்கு வருவது இயல்பானது; வரவேற்கக்கூடியது. எல்லா தமிழ்த்தேசிய குழுக்களும் மற்ற மொழியினரை விரட்டச் சொல்வது இல்லையே!

இன்றைக்குத் திராவிட இயக்கத்தினரின் செயலின்மையும் கம்யூனிஸ்டுகளின் உறுதியற்ற அரசியலும் தமிழ் தேசிய சக்திகள் வளர்வதற்கான ஒரு சிறுபாதையைத் திறந்துவிட்டுள்ளன. எல்லா அடிப்படை வாதங்களையும்போல தமிழ் அடிப்படைவாதமும் ஆபத்தான ஒன்றுதான். ஜனநாயத்தையும் பன்மைத்தன்மையையும் நிராகரித்து இவர்கள் இன வெறுப்பைக் கக்குவார்களானால், நீங்கள் ஒன்றுக்கும் கவலைகொள்ள வேண்டாம். இவர்களால் தமிழக மக்களிடம் செல்வாக்குப் பெறவே முடியாது. இவர்களது எழுச்சியெல்லாம் யூ-டியூப் அளவோடு நின்றுவிடும்.”

“உங்கள் கருத்தோடு முரண்படும் தியாகுவுடன் ஓர் உரையாடல் நிகழ்த்தி, அது புத்தகமாகவும் வெளியானது. அதுபோலப் புலிகள் இயக்கத்தினைச் சார்ந்தவர்களோடு நீங்கள் உரையாடியிருக் கிறீர்களா?”

``பகிங்கரமான உரையாடல் நிகழ்ந்ததில்லை. ஆனால், இயக்கத்தில் இருந்தவர்கள் என்னுடைய புத்தகங்களை வாசித்திருக்கிறார்கள். பொட்டு அம்மானின் மேஜையில்தான் ‘கொரில்லா’ புத்தகத்தைப் பார்த்தேன்’ என்று தமிழ்க்கவி அம்மா எங்கோ சொல்லியிருந்ததாக ஞாபகம். ‘ஷோபாசக்தி நூல்களை விற்கத் தடை வேண்டும்’ என்ற பேச்சு வந்தபோது ‘அவனை நீ எழுதித் தோற்கடி’ எனப் புதுவை இரத்தினதுரை சொன்னார் என்றொரு செய்தியையும் யாரோ எழுதியிருந்தார்கள். இப்படி மறைமுக உரையாடல் நடந்துகொண்டுதான் இருந்தது.’’

“ஷோபாசக்தி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று, அவர் சுற்றுப் பயணம் செய்வதற்குப் பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்பதுதான். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?”

“நான் 25 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருக்கிறேன். தேவையென்றால் வேலைக்குப் போவேன் அல்லது போக மாட்டேன். இந்தியாவுக்கு வந்துபோக விமான டிக்கெட் எவ்வளவு இருக்கும் என நினைக்கிறீர்கள். 30,000 லிருந்து 35,000 ரூபாய். மற்ற செலவுகளைக் கணக்கிட்டால் அதிகபட்சம் ஒரு லட்சம் ஆகுமா? அது நான் வேலைக்குப் போனால் வாங்கும் ஒரு மாதச் சம்பளத்திலும் குறைவான தொகை. வேலைக்குப் போகவில்லை என்றால், என் மாதச் சம்பளத்தில் ஒரு பகுதியை வேலையிழப்புக் காப்புறுதிப் பணமாக மாதா மாதம் அந்நாட்டு அரசாங்கம் தரும். இந்தச் சலுகைக்கும் ஆப்பு வைக்கத்தான் இப்போது பிரெஞ்சு அரசு தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறது. இது அவர்களது கவலை. இதைப்பற்றி உங்களுக்கு என்னப்பா வருத்தம். நான் வருடம் ஒருமுறை சென்னைப் புத்தகக் காட்சிக்கு வந்துபோவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா என்ன? என்னுடைய மற்ற பயணங்கள் எனது நுால்கள் மற்றும் சினிமாக்கள் சம்பந்தமானவை. கையில் வெறும் 300 ஈரோக்களோடு கியூபாவில் ஒரு மாதம் சுற்றித் திரிந்திருக்கிறேன். ’பயணம் செய்யக் காசு தேவையில்லை, கால்கள்தான் தேவை’ என்பார் கோணங்கி. என்ன சொல்கிறார்கள் இந்த விமர்சகர்கள்? வேலை என்ற பெயரில் என்னை பாரிஸின் குசினிகளுக்குள்ளேயே நெருப்போடும் புகையோடும் கிடந்து மடிந்துவிடச் சொல்கிறார்களா?”

“படைப்பாளிகள் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்திவிட்டால் படைப்புத்தன்மை கெட்டுவிடும் என்பார்கள். நீங்கள் அரசியல் விவாதங்கள் தொடங்கி இணைய விவாதம் வரை பல விஷயங்களுக்கு மல்லுக்கட்டுகிறீர்களே?”

“சமகாலப் பிரச்னைகளைப் பற்றிப் பேசி, விவாதித்து, மாறுபட்ட சக்திகளுடன் உரையாடிக் கருத்துகளைத் தொகுத்துக்கொள்வதன் மூலம்தான் ஒரு படைப்பாளி உத்வேகத்துடன் புதிய விஷயங்களைக் கண்டடைய முடியும். வீட்டு அறையைப் பூட்டி போட்டிருந்தால் ஒன்றும் எழுத முடியாது. அதனால்தான் அசோகமித்திரனின் படைப்புகள் எனக்குப் பிடிக்காமல் போனதோ என்னவோ!

இயங்கிக்கொண்டிருப்பவனால் மட்டுமே நல்ல இலக்கியத்தைப் படைக்க முடியும். ஜெயகாந்தனை அல்லது எஸ்.பொவை எடுத்துக்கொள்வோம். அவர்கள் போடாத சண்டையா, கூறாத கருத்தா, ஏறாத மேடையா? தொடர்ந்து இந்தச் சமூகத்துடனும் படைப்பாளிகளுடனும் முரண்பட்டவர்களுடனும் உரையாடிக்கொண்டே இருக்க வேண்டும். அதன்மூலம்தான் நம்மை வளர்த்துக்கொள்ள முடியும். புதியதைக் கண்டடைய முடியும்.”

“தமிழ் இலக்கியத்தில் உங்களை ஈர்த்தவர்கள் குறித்துச் சொல்லுங்கள்?”

“நிறைய பேர் இருக்கிறார்கள். கூத்துக் கலையிலிருந்து வந்ததால் குரு - சிஷ்யன் உறவில் எனக்கு நம்பிக்கை உண்டு. என்னை மிக ஆழமாகப் பாதித்த படைப்பாளி எஸ்.பொ. நான் எழுதும்போது பரிசுத்த ஆவிபோல என்னுள் இருப்பார். பூமணியின் ‘வெக்கை’ நாவல் என்னை மிகவும் பாதித்தது. சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென் ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்’ நாவலைப் படித்ததும்தான் நாவல் கட்டமைப்பில் சிதறல்களையும் ஓட்டையையும் போட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது, ரமேஷ் - பிரேம் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். நிறைய உரையாடியிருக்கிறோம். என் இலக்கிய முன்னோடிகளில் கு.அழகிரிசாமி மிக முக்கியமானவர். சுருக்கிச் சொன்னால் என் முன்னோடிகள் அனைவரிடமிருந்தும் நான் கற்றுக்கொள்ள ஒரே ஒரு விஷயமாவது இருக்கவே செய்கிறது.”

“ஈழத்திலிருந்து எஸ்.பொ. பெயரை மட்டும்தான் குறிப்பிட்டிருக்கிறீர்கள்?”

“நவீன இலக்கிய எழுத்து என வரும்போது எஸ்.பொவை முன்னிறுத்தத் தோன்றுகிறது. அதேவேளையில் மக்களிடம் சென்று கற்றுக்கொண்டு, அவற்றைச் சமூக மாற்றத்திற்கான கதைகளாக உருவாக்கி, அதைக் கிராமம் கிராமமாக எடுத்துச் சென்று பரப்பியவர் தந்தை கே.டானியல். ஓர் எழுத்தாளனின் சமூகப் பொறுப்பையும் அச்சமின்மையையும் நான் அவரிடமிருந்து வரித்துக்கொண்டேன்.”

“இப்போது என்ன எழுதிக்கொண்டிருக் கிறீர்கள்?”

“ ‘இச்சா’ எனும் நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘சொந்த அனுபவங்களையே சலிப்பூட்டும் சுயசரிதைப் பாணியில் எழுதாமல், தான் அறியாத உலகத்தைத் தன் கற்பனையூடாக உருவாக்குவதே எழுத்தாளர்கள் முன்னுள்ள சவால்’ என்பார் சார்லஸ் புக்கோவ்ஸ்கி. நான் இம்முறை அவரது சவாலை ஏற்றிருக்கிறேன். சென்ற ஆண்டின் கடைசியில் எனது சுயசரிதை ‘shoba: itinéraire d’un réfugié’ பிரெஞ்சில் வெளியானது. இவ்வாண்டு எனது சிறுகதைகள் மொழியாக்கப்பட்டு பிரெஞ்சில் வெளியாகவுள்ளன. மொழிபெயர்ப்பவர் வேறொருவர்தான் என்றாலும் சில விஷயங்களை நான் உடனிருந்து விளக்க வேண்டியுள்ளது. அரைஞாண் கயிற்றை நான் மொழிபெயர்ப்பாளருக்கு விளக்கப் பட்டபாடு பெரும்பாடு. மொழிபெயர்த்தவர் பூணூல் என்று எழுதிவிட்டார். ஏப்ரல் மாதத்தில் அடுத்த படத்தில் நடிக்க வேண்டியிருப்பதால், அதற்குள் மொழிபெயர்ப்பு வேலைகளை முடிக்க வேண்டும்”.

``2009-ம் ஆண்டுக்குப் பிறகு கருணாநிதி மீது தமிழ் தேசிய இயக்கங்களுக்கு அதிருப்தி இருந்த நிலையில் நீங்கள் ஒரு புத்தகத்தை கருணாநிதிக்குச் சமர்ப்பித்திருந்தீர்களே?’’

“கலைஞருக்கு நான் என் புத்தகத்தைச் சமர்ப்பிக்க முடிவெடுத்தபோதே விமர்சனங்களையும் எதிர்பார்த்தேன். ஆனால், அதெற்கெல்லாம் நான் அசருவதாக இல்லை. நான் என் தமிழ் ஆசானிற்கு ஆற்ற வேண்டிய கடமை அது.”

“ஈழத்தில் திராவிட இயக்கத்தின் தாக்கம் எந்தளவு இருந்தது?”

“மலையகத்தில் மட்டும் சிறிதளவு இருந்தது. அங்கு, தி.மு.க-வின் கிளைகூட ஒன்று இருந்தது. ஜே.வி.பி-யின் முதலாவது கிளர்ச்சிக் காலத்தில் மலையகத்தில் அரசால் தி.மு.க. தடை செய்யப்பட்டது. அதன் தலைவரும் கைது செய்யப்பட்டார். இப்போது நமது சினிமா ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் ஏறுக்குமாறாய்  திரைப்படங்களில் பல குறியீடுகளைக் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், அப்போதே ஜே.வி.பி ‘அடிமைப்பெண்’ படத்திலேயே குறியீட்டுக் குழப்பம் செய்தார்கள்.

எம்.ஜி.ஆர் அந்தப் படத்தில் பக்கத்து நாட்டில் உள்ள பெண்ணின் தலைமையிலான ஆட்சியை எதிர்ப்பார். அப்போது இலங்கையில் சிறிமாவோ பண்டார நாயகாவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. ‘அடிமைப்பெண்’ படம் இதைத்தான் சுட்டுகிறது, இலங்கையைத் தாக்கி ஆட்சியைப் பிடிப்பதே தி.மு.க-வின் நோக்கம் என ஜே.வி.பி-யினர் சீரியஸாகவே பரப்புரை செய்தார்கள். அவர்களது கட்சியில் இணைபவர்களுக்கு ஐந்து வகுப்புகள் நடத்தப்படும். அதில் இரண்டாவது வகுப்பில்  தி.மு.க. எதிர்ப்பு வலுவாக இருக்கும்.

மலையத்தில் சிறிய அளவு திராவிட இயக்கத்தின் தாக்கம் இருந்ததைத் தவிர்த்துப் பார்த்தால், வேறெங்கும் திராவிட இயக்கத்தின் தாக்கம் இருக்கவில்லை. ஆனால், தி.மு.க.வி-லிருந்து சிலவற்றை அப்போது தமிழர்களின் மிகப்பெரிய கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி இரவல் வாங்கியிருந்தது. கூட்டணியினரின் சின்னமும் உதயசூரியன்தான். இங்கேயிருந்து கருத்துகளைக் கடன் வாங்கிப் பேசுவார்கள். அங்கேயும் தீப்பொறி அந்தனிசில் என்ற ஒரு பேச்சாளர் இருந்தார். ‘அடைந்தால் தனி நாடு; இல்லையேல் சுடுகாடு’ போன்ற முழக்கங்களும் கடத்திவரப்பட்டன. இவ்வளவுதான்.”

“கருத்தியல் ரீதியாக ஆழமான எந்த விளைவையும் திராவிட இயக்கம் ஏற்படுத்தவில்லையா?”

“திராவிட இயக்கத்தின் சாதி மறுப்பு, பெண்விடுதலை, இடஒதுக்கீடு, கடவுள் மறுப்பு போன்ற எந்தச் சிந்தனைகளையும் ஈழத்தமிழ் அரசியலாளர்களோ, அறிவுஜீவிகளோ உள்வாங்கிக் கொள்ளவில்லை. அண்ணல் அம்பேத்கரை இன்று வரை ஈழத்து அரசியலாளர்களும் அறிவுஜீவிகளும் உச்சரிக்கக்கூட மறுக்கின்றனர். கேட்டால், இவையெல்லாம் தமிழக இறக்குமதிச் சிந்தனைகள் எனப் பழிப்புக் காட்டுகின்றனர். மார்க்ஸியம், தேசியவாதம், மாவோயிஸம் போன்ற சிந்தனைகளை இவர்கள் ஒருபோதும் இறக்குமதிச் சிந்தனைகள் எனச் சொல்வதில்லை.”

“நீங்கள் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக இருந்திருக்கிறீர்கள் என்பதைப் பதிவு செய்திருக்கிறீர்கள். உங்களை எம்.ஜி.ஆர் எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறார்?”

“சிறுவயதில் சாதி என்பது இயல்பான விஷயம் என்று மனப் பதிவானது. சாதியைக் கேள்வி கேட்க வேண்டும் என்று யாரும் சொல்லித் தரவில்லை. எங்கள் ஊரில் மாலை ஏழு மணியானால் மனைவியை, கணவன் தெருவில் இழுத்துப்போட்டு அடிப்பது ஓர் இயல்பான விஷயம் என நம்பி வளர்ந்தவன் நான். ஆனால், இவை இயல்பில்லை என்ற அரிச்சுவடியைச் சிறுவயதில் எனக்குக் கற்றுத்தந்தவை
எம்.ஜி.ஆர் படங்களும் கலைஞரின் வசனங்களும். எம்.ஜி.ஆர் படங்களின் முக்கியமான அம்சம், சாதி, மத அடையாளங்களை அவர் தன் படங்களில் தவிர்த்தது. அப்படி நடிக்க வேண்டியிருந்தாலும் மீனவ நண்பன், படகோட்டி, மதுரைவீரன் என்று ஒடுக்கப்பட்ட மக்களின் பாத்திரங்களை ஏற்று நடித்தார். சாதிவெறியூட்டும் இப்போதைய தமிழ் சினிமாக்களைவிட எம்.ஜி.ஆர். படங்கள் ஆயிரம் மடங்கு சிறந்தவை என்பேன்.”

"அம்பேத்கரும் பெரியாரும் இல்லாத அரசியல் இனி சாத்தியமில்லை!” - ஷோபாசக்தி“தொடக்கத்தில் சினிமா வழியாகத்தான், சாதி மற்றும் பெண்ணடிமைக்கு எதிரான உணர்வைப் பெற்றதாகக் குறிப்பிட்டீர்கள். ஆனால், இன்றைக்கு சினிமாவில் இயங்குகிற சாதி குறித்து உங்கள் கருத்து என்ன?”

“எந்தப் புரட்சிகர அமைப்புகளோ, கம்யூனிஸ்டுகளோ, திராவிட இயக்கமோ, அம்பேத்கரியமோ அறியப்படாத என் கிராமத்து மண்ணில், திராவிட இயக்கத்து சினிமாக்கள் ஒரு தட்டுத் தடுமாறிய தொடக்கமாக எனக்கு அமைந்துபோயின.   இன்றைய தமிழ் சினிமாவில் நிகழும் சாதியப் பெருமிதக் கூச்சல்கள் சகிக்க முடியாதவை. அவை சாதியைத் திரை வழியே புலம்பெயர் தேசத்தில் வளரும் குழந்தைகள் வரை கொண்டுவந்து சேர்த்துள்ளன. ஏதாவதொரு திரைப்படத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அண்ணல் அம்பேத்கர் உருவத்தையோ, பெரியாரின் தாடியையோ காட்டினால், உணர்ச்சிப் பெருக்கில் விம்மிடும் அளவிற்குத்தான் நமது பெரும்பாலான திரை விமர்சகர்களும் உள்ளார்கள். எப்பா! இதையெல்லாம் எம்.ஜி.ஆர் ‘உலகம் சுற்றும் வாலிபனி’லும் ‘பல்லாண்டு வாழ்க’விலும் 50 வருசத்துக்கு முன்னமே காட்டிவிட்டார். நாகராஜ் மஞ்சுளேயின் ‘ஃபன்ட்ரி’ போன்ற ஒரு அசலான சாதியெதிர்ப்புப் படத்தைத்  தமிழ்த்திரை காணும் நாள் எந்நாளோ என மனம் ஏங்கிக் கிடக்கிறது.”

“நீங்கள் ஈழத்துக் குடும்ப அமைப்பையும் பார்த்திருக்கிறீர்கள், ஐரோப்பியக் குடும்ப அமைப்பையும் பார்த்திருக்கிறீர்கள். இவற்றுக்கிடையிலான முக்கியமான வித்தியாசங்கள் என்ன? குடும்ப அமைப்பைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?”

“பெரியார் சொன்னதைத் தாண்டி நான் என்ன சொல்லிவிடப் போகிறேன்? திருமணம் செய்வதை கிரிமினல் குற்றமாக்க வேண்டும் என்றார் அவர். ‘குடும்பம் என்பது குட்டி அரசு’ என்றார் கார்ல் மார்க்ஸ். குடும்பம் என்பதே ஒரு வன்முறை அமைப்புதான். ஈழமோ, ஐரோப்பாவோ எல்லா வகையான குடும்ப அமைப்புகளும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. ஐரோப்பாவில் உள்ள சமூக நலக் கூடங்களில், ‘மனைவியை அடிப்பது தவறு’ என்று எழுதிப்போட்டுப் பிரசாரம் செய்யுமளவிற்கு அங்கே குடும்ப வன்முறைகள் பரவலாக நிகழ்கின்றன. ஐரோப்பாவில் நடக்கும் அதிகக் கொலைகள் தங்களை விட்டுச் சென்ற காதலியை அல்லது மனைவியைக் கொலைசெய்வது என்பதாகத்தான் இருக்கிறது. என்ன.... அங்கேயெல்லாம் எளிதாக விவாகரத்து வாங்கிப் பிரிந்துவிடுகிறார்கள். சமூகநல அரசுகள் என்பதால், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஓரளவுப் பொருளியல் பாதுகாப்பை அரசே வழங்கிவிடுகிறது. இங்கே, விவாகரத்துக்குச் சட்டம் அனுமதித்தாலும் குடும்பச் சூழல்கள், பொருளாதாரக் காரணங்கள், கலாசாரக் காரணங்கள், குழந்தை வளர்ப்பு போன்ற காரணங்களால் ஆணும் பெண்ணும் குடும்ப அமைப்பைப் பெரும்பாலும் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது”

“உங்கள் பதிலிலிருந்து ஒரு முரணான கேள்வி. மனைவி, குழந்தைகள் என்று உங்களுக்கென்று ஒரு குடும்ப அமைப்பை ஏற்படுத்திக்கொள்ளாதது குறித்து வருத்தமிருக்கிறதா?”

“நிச்சயம் இல்லை. இந்த உலகமே என் குடும்பம்தான்!”