Published:Updated:

அடுத்து என்ன? - கண்மணி குணசேகரன்

அடுத்து என்ன? - கண்மணி குணசேகரன்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - கண்மணி குணசேகரன்

பேரழகி வந்துவிடுவாள்கண்மணி குணசேகரன் படங்கள் : தே.சிலம்பரசன்

அடுத்து என்ன? - கண்மணி குணசேகரன்

பேரழகி வந்துவிடுவாள்கண்மணி குணசேகரன் படங்கள் : தே.சிலம்பரசன்

Published:Updated:
அடுத்து என்ன? - கண்மணி குணசேகரன்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - கண்மணி குணசேகரன்

நான் எப்போதுமே கவிதை எழுதிக்கொண்டிருந்தால் கவிதை. கதை எழுதிக்கொண்டிருந்தால் கதை. அதுபோலவே நாவல், அகராதி என ஒரு படைப்பு அல்லது ஒரு தொகுப்பு முயற்சியில் இருக்கும்போது, ஒன்றை முடித்து விட்டுத்தான் அடுத்ததை ஆரம்பிப்பேன். இந்த மாதிரி கறாரான ஒரு கட்டுப்பாட்டில் எனது எழுத்துப் பணிகளை வைத்துக்கொண்டிருந்ததால்தான் பணிமனை, கொல்லைவெளி, முந்திரி, குடும்பம் என எல்லா திக்குகளுக்கும் என்னால் இடறில்லாமல் ஓட முடிந்தது; ஓடிக்கொண்டும் இருக்கிறேன். இந்த முறையான பணிச் சுழற்சியில், முன்னர் எப்போதும் இல்லாதபடி இப்போது சிக்கல் நேர்ந்துவிட்டது. மெய்தான். தற்போது முடிந்திருக்கும் எனது `நடுநாட்டுச் சொல்லகராதி’யின் இரண்டாம் பதிப்புதான் இந்தக் குளறுபடி வேலையைச் செய்துவிட்டது. இல்லையென்றால், போன ஆண்டு நான் முடிவெடுத்ததன்படி, டிசம்பர் 2017-ல் எனது `பேரழகி’ நாவல் வெளிவந்திருக்கும்.

`நடுநாட்டுச் சொல்லகராதி’யின் மீள்பதிப்புக்காகச் சொற்களை ராப்பகலாகச் சேர்த்து அலுத்த ஒரு கட்டத்தில், சேர்த்தவரை அகரவரிசைப்படுத்தி அச்சுக்கு (பி.கி.ராம்குமார், மதுரை) அனுப்பி, சீலைப்பேன் பொறுக்குகிற மாதிரி மெய்ப்புத் திருத்தமும் பார்த்து, மீண்டும் அனுப்பிவைத்துவிட்டு `அப்பாடா… இனிமேல் எந்தச் சிக்கலும் இல்லாம `பேரழகி’ வேலையைப் பார்க்கலாம்’ என ஆரம்பித்திருந்தேன். பத்து இருபது பக்கங்களுக்கு மேல் கிடுகிடுவென எழுதியும்விட்டேன். எழுத்தின் ஊடே திடுமென ஒருநாள் `காதுக்கட்டை’ (காதுக்கட்டை - தெருக்கூத்தில் ஆண் வேடக்காரர்கள் காது மடலை மறைத்து அணியக்கூடிய ஓர் அணிகலன்) என்ற ஒரு சொல் ஞாபகத்துக்கு வந்தது. கூடவே `மதத்துக்கு மருந்தைத் தின்னுட்டு பத்தியத்துக்கு வெயில்ல காஞ்சாளாம்’ பழமொழி, `கெடந்த கழியை எடுத்து, நின்ன மாட்ட ஓட்டின கதையா’ மரபுத்தொடர் என வரிசைக்கட்டி நாவல் எழுதுவதை மறித்துக்கொண்டு நின்றன. அவ்வளவுதான், ‘பேரழகி’யை நின்ற இடத்தில் அப்படியே போட்டுவிட்டு, புதுவெள்ளம் கண்ட கெண்டைக்குஞ்சு மாதிரி மனம் சொற்சேகரத்தில் இறங்கி அகராதிப் பணிக்குத் தாவினேன்.

அடுத்து என்ன? - கண்மணி குணசேகரன்

பழையபடி சொற்கள், பழமொழிகள், மரபுத்தொடர் என நீண்டு, அகரவரிசை அச்சு மெய்ப்புத் திருத்தம் என அனுப்பி முடித்து, கடைசியில் `பழைய குருடி கதவைத் திறடி’ என்பதாக மனம் நாவலில் இறங்கியது. பிறகு, சொற்கள் கூடு கட்டி அகராதிக்குப் போயின. இந்த மாதிரியான ஒரே பூட்டில் முடியாமல் `கொந்தாங்குறை’ உழவாய் நாவல், அகராதி என மாறி மாறிக் கிடந்து கிடந்து இப்போது முற்றுமாக அகராதி வேலை முடிந்துவிட்டதில் (தமிழினி வெளியீடு) பெருமகிழ்ச்சி. இனிமேல் `பேரழகி’ நாவல்தான்.

ழக்கம்போலவே இந்த நாவலும், எனது நடுநாட்டு மொழியில் எம் மண்ணில் கண்ட, நிகழ்ந்த சம்பவங்களைப் பின்னணியாகக்கொண்டதுதான். ஓர் அழகுப்பெண்ணும் அவளைச் சார்ந்த நிகழ்வுகளும்தான் கதை. குறிப்பாக, இரு சம்பவங்கள் இந்த நாவலை எழுத என்னை நிர்பந்தித்தன.

 முதலாவது, நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் என் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் கண்டது. பெண் அழைப்புக்காக, மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் ஊர் ஜனங்களும் கல்யாணப் பந்தலில் கூடியிருந்த தருணம். புகைப்படக்காரர் வந்து குவியாடியைத் துடைத்து கேமராவைத் தோளில் மாட்டிக்கொண்டு படம் பிடிக்க ஆயத்தமான நேரம். திடுமென பெண்ணழைக்க வந்தவர்கள், ஊர்க்காரர்கள், பெண்ணின் தோழிகள் என எல்லோருடைய பார்வையுமே பந்தலின் வாயில் பக்கம் திரும்புகிறது. நிலாவைப் போன்று அழகான ஒரு பெண் உள்ளே காலடி எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். பக்கத்து ஊர் பெண்தான் அவள், மணப்பெண்ணின் தோழி. இயல்பாக இருக்கும்போதே அழகாக இருப்பவள், புதிதாகப் புடைவை கட்டியதில் அவள் எல்லோரையும் திரும்பிப் பார்க்கவைக்கிற `பேரழகி’யாகி இருந்தாள். பந்தலுக்குள் அடியெடுத்து வைத்ததுமே, அப்படியோர் அழகு தேவதையை இதுவரை யாரும் பார்த்ததே இல்லை என்கிற மாதிரி, மொத்தக் கண்களுமே அவளின் வயது, உறவுமுறை எல்லாவற்றையும் மீறி, வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டே இருந்தன.

 வெறும் வாயையே ரசித்து மெல்பவர்கள் புகைப்படக் கலைஞர்கள். நான்கு அவல் கிடைத்தால் விடுவார்களா? ஒரு பேரழகியைக் கண்டுவிட்ட போட்டோக்காரன், வளைத்து வளைத்து அவளைப் படங்களாக எடுத்துத் தள்ளுகிறான். எந்தப் புகைப்படத்தை எடுத்தாலும் ஓரத்திலோ, நடுவிலோ, மணப்பெண் கூடவோ அவள் அதில் சிரித்தபடி, பேசியபடி இருப்பாள். புகைப்பட ஆல்பத்திலும் தவிர்க்க இயலாதபடிக்கு அந்தத் தேவதையின் நான்கைந்து படங்கள் நுழைந்துவிட்டன. மிக அழகாக நெற்றியில் சுருண்டு விழும் முடிச் சுருள்கள், மருதாணி விரல்கள் எல்லாமும் புகைப்படக்காரன் அவளை அணுஅணுவாக ரசித்து ரசித்து எடுத்தவையாக மினுங்குகின்றன. அவளின் புகைப்படத்தைப் பார்க்கும் எவருமே சற்றுத் தேங்கி நிற்காமல் நகர முடியாது என்கிற நிலை. அந்த அழகியை மானசீகமாக மனதில் இருத்திக்கொண்ட ஒருவனால் மட்டுமே புகைப்படம் எடுக்க முடிந்த எழிலோவியங்கள் அவை. ஆல்பத்தைப் புரட்டி முடித்த பிறகும் வேறு எந்த நிகழ்வோ, காட்சியோ எதுவும் மனதில் நிற்காமல், அந்த அழகுப் பெண்ணே மனதில் நின்றுகொண்டிருக்கிற வனப்பில் புகைப்படங்கள்.

 நண்பர்களுடன் பார்த்துக்கொண்டிருந்த கல்யாண மாப்பிள்ளைக்கும், அந்த அழகியின் புகைப்படத்தைப் பார்த்த கணத்தில் உள்ளுக்குள் ஒரு சொடுக்குச் சொடுக்கியது. அவனையும் அறியாமல் அவளின் முகத்தில் விரல்கள் தடவின. ``இது மாதிரி உன் பொண்டாட்டி முன்னால படத்தைத் தடவிக்கிட்டு நிக்காத. புதுக் கல்யாணம் எடுத்த எடுப்புல சிக்கல் வந்துடப் போவுது” கிண்டலாகவும் சொன்னார்கள்.

பார்க்கும் எவரையுமே திகைத்து நிற்கச் செய்துவிடும் அந்த அழகியை, ஆல்பத்தைப் புரட்டுகிற எவரையுமே தேக்கிவிடும் அந்தப் பேரழகை வைத்து ஒரு நாவல் எழுத வேண்டும் என அப்போதே முடிவெடுத்
திருந்தேன்.

ன் நண்பன் ஒருவன். நல்ல குணநலன் மிக்கவன். எவரிடமும் எளிதாகப் பழகக்கூடியவன். பால் பேதமில்லாமல், பேசிய சிறிது நேரத்திலேயே மிகவும் நெருக்கமாகிவிடக்கூடியவன். தெருவில் உள்ள எல்லா அண்ணிமார்களும் அவனிடம் ப்ரியமாகப் பேசுவார்கள்; கிண்டலடிப்பார்கள். நண்பன் நல்ல கறுப்பு நிறம். என்றாலும் பொசுக்கென எல்லோரையும் கவர்ந்துவிடும் தனது பேச்சால், கறுப்பு நிறத்தை எவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

நண்பரின் எதிர் வீட்டு அண்ணனுக்குத் திருமணமாகித் தனி உலைக்கு வீட்டைப் பிரித்து வாசற்படி வைத்தபோது, சொல்லிவைத்த மாதிரி இவன் வீட்டுவாசலுக்கு நேர் எதிரே வீட்டு வாசற்படி. குறுக்கில் ஒரு தோட்டம். மறைக்கிற மாதிரி எதுவும் இல்லாமல் நான்கைந்து தண்ணீர்க் குடங்கள், பத்து இருபது பூத்துக்குலுங்கும் கனகாம்பரச் செடிகள் அவ்வளவுதான். நண்பருக்கு, வாசலில் கட்டில் போட்டுப் படுப்பதுதான் வழக்கம். எதிர் வீட்டு அண்ணி, விடிந்து எழுந்தால் நண்பரின் முகத்தில்தான் விழிக்க வேண்டும். அண்ணி, மற்றவர்களைவிடவும் நன்றாக இவனிடம் பேசிக்கொண்டிருப்பாள்.

அண்ணியும் அண்ணனும் நல்ல சிவப்பு. ஆனால், இருவருக்கும் பிறந்த குழந்தை கறுப்பு. எப்போதும்போல இயல்பாகத்தான் அண்ணியிடம் கேட்டான். ``என்னா அண்ணி. நீங்களும் செவுப்பு, அண்ணனும் செவுப்பு. பொறந்த கொழந்த மட்டும் கறுப்பா இருக்குது?”

அவன் சொல்லி வாயைக்கூட மூடவில்லை. சிரித்துக்கொண்டே அண்ணி சொன்னாள், ``ராத்திரிக்கி ரெண்டு பேரும் படுத்துக் கெடந்துட்டு விடிஞ்சி எந்திரிச்சி ஓம் மொகத்துல முழிச்சேன். அதான் இப்பிடிக் கறுப்பாப் பொறந்துட்டுது. கன்னங்கரேல்னு ஓம்மொகத்துல முழிச்சா புள்ள செக்க செவேர்னா பொறக்கும்?” நம்ப ஆளுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. இத்தனைக்கும் அண்ணன்கூட இருந்திருக்கிறார்.

இந்தச் சேதியை நண்பர் சிரித்துக் கொண்டே சொன்னபோது, எனக்குள் ஒரு திடுக்கிடல். `அப்படி `பாய்படுக்கையாய்’ இருந்துவிட்டு, விடிந்து எழுந்து ஒருவரின் முகத்தில் முழித்தால் அதுபோன்றே பிள்ளை பிறக்குமா… இல்லை மனசுக்குள் அந்த நபரை நினைத்துக்கொண்டு `படுத்து’ எழுந்திரித்தால்… அப்படி நடக்குமா?’ என்கிற கேள்விகள் எனக்குள் எழுந்தன.

இரண்டையும் சேர்த்து `பேரழகி’யை எழுதினேன்.

ழகான எதிர் வீட்டுக்காரனின் முகத்தில் விழித்ததால் பிறந்த அழகான குழந்தைதான், கதையின் நாயகி. இந்த `முகத்தில் விழித்த கதை’ வெளிநாட்டுக்குப் போய் வரும் கணவனின் காதில் விழுந்ததும், பேய் பிடித்துக்கொண்டுவிட்டது. எதிர் வீட்டுக்காரனுடன் இவளைச் சந்தேகப்பட்டு, நாளும் குடித்துச் சண்டை வளர்த்து, போதையில் விழுந்து பின்மண்டை அடிபட்டு செத்துப்போகிறான். ஜனங்கள், உறவுகள் எல்லோரும் `எதிர்வீட்டுக்காரனைக் கையில் போட்டுக்கொண்டு, இவள்தான் கதையை முடித்துவிட்டாள்’ என எவரும் இவளிடம் பேசுவதில்லை. வளரும் குழந்தையின் அழகு, தெரு ஜனங்கள் எல்லோரையும் பழையபடி குடும்பத்தோடு ஒட்டவைக்கிறது. அழகுக் குழந்தை, பேரழகியாக வளர்கிறாள். வசதி அதிகமில்லாத அவளின் தாய், இவளின் பேரழகை வைத்து, வேலையில் இருக்கும் வசதியான ஒருவனுக்கு எப்படியாவது  திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என மனதுக்குள் திட்டம் தீட்டுகிறாள். 

இந்தச் சூழலில் தோழியின் திருமணத்துக்குப் போகும் அந்தப் பெண்ணின் பேரழகில் மயங்கி வீடியோ, புகைப்படம் என இரண்டிலும் கைதேர்ந்த ஒரு கேமராக்காரன் அவளை அழகழகான படங்களாக எடுக்கிறான். அதோடு அவளையே கட்டிக்கொள்ள வேண்டும் என மனதுக்குள் அலைபாய்கிறான். ஆல்பத்தைப் பார்த்த மேற்படி கல்யாணத்தின் மாப்பிள்ளையும் அந்தப் பேரழகியின் படத்தில் திகைத்துப்போகிறான். வீடியோவிலும் அந்தப் பெண்ணின் படம் வரும்போது ஃப்ரீஸ் செய்து, ஃப்ரீஸ் செய்து பார்க்கிறான். இதனால் புதுமணத் தம்பதிக்குள் சந்தேகம், சண்டை என நீள்கிறது.

அந்தப் பெண்ணின் தாய் விரும்பியபடியே அவளின் அழகில் மெய்மறந்து நெய்வேலியில் வேலை பார்க்கும் வசதியான ஒரு மாப்பிள்ளை கட்டிப்போகிறான். அங்கு பெரிய சிக்கல். வேலைக்கார மாப்பிள்ளை, அவளின் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். குழந்தை பெற்றால், அழகு குலைந்துபோய்விடும் என்கிற மாதிரியான மனநிலை. இந்த மாதிரி அழகான ஒரு பெண், அவளின் அழகால் குடும்பத்துக்கும் மற்றவர்களுக்கும் நேர்ந்த அவலம், சிக்கல் என மன உணர்வுகளைச் சொல்லும் நாவல். மீதி பிரதியையும் எழுதி முடித்து அண்ணன் வசந்தகுமாரிடம் காட்ட வேண்டும். பிரதி மேம்படுத்தும் வேலையை அவர் எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையையும் மிகச்சரியாகக் கடந்துவிட்டால், அடுத்த ஆண்டு நிச்சயம் `பேரழகி’ வந்துவிடுவாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism