Published:Updated:

மீன் முள்ளின் இரவு - பா.திருச்செந்தாழை

மீன் முள்ளின் இரவு - பா.திருச்செந்தாழை
பிரீமியம் ஸ்டோரி
மீன் முள்ளின் இரவு - பா.திருச்செந்தாழை

ஓவியம் : ரமணன்

மீன் முள்ளின் இரவு - பா.திருச்செந்தாழை

ஓவியம் : ரமணன்

Published:Updated:
மீன் முள்ளின் இரவு - பா.திருச்செந்தாழை
பிரீமியம் ஸ்டோரி
மீன் முள்ளின் இரவு - பா.திருச்செந்தாழை
மீன் முள்ளின் இரவு - பா.திருச்செந்தாழை

புறநகர்ப் பகுதியின் கடைசி வீட்டில் வசிப்பவன் நான். என் வீட்டையடுத்து விரியும் புதர்மண்டிய நிலக்காட்சியையும், கைவிடப்பட்ட தூரத்துக் குவாரியின் தனிமையையும் ரசிப்பதற்கென்றே கடைசி வீட்டுக்காரனானேன். நகரங்கள் மென்று துப்பும் எச்சங்களின் மீது அருவருப்படைந்து மரங்கள் நடந்து விலகிச் செல்வதையும், துர்கனவின் வரைபடம்போல நகரின் சித்திரத்தை அஞ்சியபடி எளிய பறவைகள் தத்தி ஓடுவதையும், வழியின்றி பார்த்தபடியிருக்கும் கடைசி வீட்டுக்காரர்களின் முகத்தில், புத்தனின் மிகவும் தேய்ந்த நிழலை அவ்வப்போது காண முடியும்.

மேலும், இங்கே பன்றி வேட்டைக்குப் பழக்கப்படுத்தப்பட்ட வேட்டை நாய்களை, பருவங்கள் தீர்ந்து கிழடான பின் அவிழ்த்து விட்டுவிடுவார்கள். மெலியத்தொடங்கிய அந்நாய்களின் வேட்டைத் தகுதியான கூர் பற்களில் துருப்பிடிக்கத் தொடங்கும் நாள்களில், அவை ஒரு வாய் பால்ச்சோறு வேண்டி எல்லா வீடுகளின் வாசலிலும் தவங்கிக் கிடக்கின்றன. அப்போதெல்லாம் அவற்றின் கோலிக்குண்டு கண்களில் வன்மம் ஒளிரும். அந்தப் பிச்சைச் சோற்றை அவை வெறுக்கின்றன. அதற்காக ஏங்கி நெளியும் தங்கள் குடல்களின் மீது வெறிகொள்கின்றன. ஒரு கட்டத்தில் வாலைக் கடித்து பின்னுடம்பை விழுங்குவதற்கான ஆவேசமெழ உடலை வட்டமாய் மடித்து ஒரே இடத்தில் சுழல்கின்றன. வேட்டைக் காலத்தில் அடிபட்டுப் புண்ணாகிப்போன காயத்தடங்களை அவை நக்கும்போது, அழுகலின் உன்னத வீச்சத்தை நீர் ததும்பும் கண்களில் வெளிப்படுத்துகின்றன. நான் என் மனைவியிடம் வேட்டை நாய்கள்மீது கவனமாயிரு என்று மட்டும் கூறியிருந்தேன்.

மீன் முள்ளின் இரவு - பா.திருச்செந்தாழை

ஓர் இலையுதிர் காலத் தொடக்கத்தில் அவன் எங்கள் பகுதிக்கு வந்தான். அவனது நைந்த உடைகள், வெவ்வேறு நிறம்கொண்ட செருப்புகள், வினோத உலோகப் பொருள்களாலான கழுத்து டாலர் என மொத்தத்தில் அவன் வரையறைகளுக்கு வெளியே தன்னைச் சிதைத்திருந்தான். தனிமையும் குளிரும்கொண்ட கைவிடப்பட்ட குவாரியைத் தனது வாழிடமாக வரித்துக்கொண்டான். வேட்டை நாய்களின் வாழிடமான அதில், அவர்கள் எவ்வாறு சமரசப்பட்டுக்கொண்டார்களென யூகிக்க முடியவில்லை.

சில நாள்களிலேயே வேட்டை நாய்கள் புடைசூழ அவன் குடியிருப்புப் பகுதிகளுக்குள் மாலை வேளைகளில் உலா வந்தான் (வந்தார்கள்). சொல்லிவைத்ததைப் போல ஒரு மையிருட்டு அவனுக்குப் பின்னால் வந்து இரவாகிவிடும். சில மதியங்களில் விற்பனை முடிந்த இறைச்சிக் கடைகளில் கழிவுகளை இரப்பவனாகத் தனது படையுடன் வெயிலில் மௌனமாக நின்றபடி... மண்பானைகள் வனைகின்ற குடும்பத்தில் நிகழ்ந்த சிசு மரணத்தின்போது, மரணவீட்டுக்குச் சற்றுத் தள்ளியிருந்த மரநிழலில் படுத்தபடி... தனது முன் அமர்ந்திருக்கும் நாய்களுக்கு ரகசியங்களைக் கூறியபடி... தொலைதூர வாகனங்கள் கடக்கும் புறவழிச்சாலையில் நிகழ்ந்த தசைகள் சிதறிக்கிடக்கும் ஒரு மரணத்தை அனுதாபித்துக் கடப்பவர்களுக்கு எதிர்ப்புறத்தில் விசிலடித்தபடி... கருவேலங்காட்டுப் புதர்ச் சரிவுக்குள் சென்று மறைகின்றபடி... ஆம். அச்சமூட்டும் நிறம்கொண்ட மலரைப்போல அவர்கள் துயரகணங்களின் மேல் அசைந்து கொண்டிருந்தார்கள்.

மீன் முள்ளின் இரவு - பா.திருச்செந்தாழை

அதிகாலையில் சிறிய உடற்பயிற்சி களுக்காக மொட்டை மாடிக்கு வந்தவன், தன்னிச்சையாகக் குவாரியைப் பார்த்தேன். பனிமூட்டம் கிளம்பியபடி ஒரு வேட்டையை, ஒரு விருந்தை, ஒரு நடனத்தை முடித்த அடர் உறக்கத்தின் அமைதி குவாரி முழுவதும் நிரம்பியிருந்தது. குறிப்பாக அவன் வந்த பிறகு வேட்டை நாய்கள் உணவு வேண்டி குடியிருப்புப் பகுதிக்கு வருவதில்லை. நான் என்னையறியாமலேயே இவற்றைக் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தேன்.

ஓர் இரவு, உடைகள் விலகியபடி என் மனைவி பிணத்தைப்போல உறங்கிக்கொண்டிருக்க, என் சிறு குழந்தையின் தூக்கமோ ஒரு மலரின் தனிமையைப்போல அமைதிகொண்டிருந்தது. சட்டென நான் விழித்தேன். ஏதோவொரு தூரத்து சப்தம். அது எனது அனிச்சையான கண்காணிப்பின் கீழிருந்து வந்த விழிப்பெனப் பின் உணர்ந்தேன். என் மனம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காட்சி சமீபித்துக்கொண்டிருக்கிறது.

நான் மெதுவாக எழுந்து சமையலறை ஜன்னலில் உள்ள சிறு துளை வழியே வீதியைப் பார்த்தேன். நிசியின் காற்று வீட்டுக்கு வெளியுள்ள சிறு பொருள்களை உலோகபாஷை பேசச் செய்து
கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் பாதங்கள் மண்ணை நொறுக்கிவிடுகின்ற சப்தம். அதுவொரு சிறுபடையின் அணிவகுப்பு சப்தத்தைப் பிரதிபலிக்க, நான் மிகவும் தீவிரமான உன்னிப்புடன் வீதியைப் பார்த்தேன். கைவிடப்பட்ட வேட்டை நாய்களின் கண்கள் இருளில் கோலிகளைப்போல மினுங்க, அவனைச் சுற்றி நாய்கள் அவனுக்குச் சமமாக விரைந்தன. நாய்களின் உடலில் வேட்டைக்கால இறுக்கமும், முகத்தில் கருணையின்மையும் மிளிர்ந்தன. மையமாக நடந்து வந்த அவன் கண்ணையும், வாயையும், நாய்கள் பார்த்தபடி வர, ஒரு கட்டளையைப் பிறப்பிக்கப்போகும் தீவிரத்துடன் அவன் உதடுகள் துடித்தன. நான் பீதியாய் உணர்ந்தபடி, என் மூச்சை இறுக்கி, அதிர்ச்சியுறைந்த என் கண்களை அங்கிருந்து எடுக்க விரும்பினேன். உண்மையில் நான் அங்கே  ஸ்தம்பித்திருந்தேன். என் மூளையின் கதறல்கள் உடலுக்குச் செல்லவேயில்லை.

மீன் முள்ளின் இரவு - பா.திருச்செந்தாழை

இதோ என் வீட்டை அவர்கள் கடந்துகொண்டிருக்கிறார்கள். சிறுதுளை வழியான என் பார்வையின் நேர்கோட்டை அவன் தாண்டுகையில் விநாடிக்கும் குறைவாய் தாமதித்து நின்றான். அவனது காதுகள் விடைத்தன. மெதுவாக என் பக்கம் அவன் திரும்பத் தொடங்கிய நொடியில் நான் மயங்கிச் சரிந்தேன்.

அடுத்து வந்த தினங்களில், என் மனைவியிடம் திரும்பத் திரும்ப ‘வீட்டில் பால்வாடை வீசாமல் பார்த்துக்கொள்...’ என்றும்  ‘பாலருந்திய குழந்தையின் உடலை வெதுவெதுப்பான நீரால் வாடை போகக் குளிப்பாட்டு...’ எனவும் ‘மீன் முள்கள், எலும்புத் துண்டுகளை வாசலில் போட வேண்டாம்...’ என்றும் வலியுறுத்தினேன். ஏனென்ற அவளிடம், என் பயத்தை விதைக்கத் தயங்கினேன். வீட்டுக் கதவுகளின் மெலிந்த உடலும், சிறிய பூட்டுகளின் எளிய தைரியத்தையும் நான் இழந்தேன்.

மீன் முள்ளின் இரவு - பா.திருச்செந்தாழை

எதிர்பாராமல் இன்று மதியம் இறைச்சி வாங்க நின்றிருக்கையில், அவன் வந்தான். உண்மையில் அதுவொரு அற்புதமான மாறுவேஷம். கோமாளியின் உடலசைவுகளும், இரப்பவனின் துயர முகபாவனை
யும்கொண்டு நின்றபடி இறைச்சிக் கழிவுகளை அசுவாரஸ்யமாகப் பார்த்தபடியிருந்தான். நாய்கள்கூட அப்போது ஒரு பொம்மைத்தன்மைக்கு தங்களை மாற்றிக் குழைத்து நடித்தன. நான் மேலும், அவனை உன்னிப்பாகக் கவனித்தபடியிருக்கையில், சட்டெனத் திரும்பிப் பார்த்தான். அவனது கோமாளித்தனம் மறைந்து இரவு வேட்டை முகம் தோன்ற, தனது கண்களை நாயின் கோலிக்கண்களாக மாற்றி தீப்பார்வை பார்த்தான்.

இரவு... மிருதுவான கனவில் நீந்திக்கொண்டிருக்கும் என் சிறிய குடும்பத்தைப் பார்த்தபடி விழித்துக்கிடக்கும் நான், நகரின் புறநகர்ப் பகுதியின் கடைசி வீட்டுக்காரன். குவாரியிலிருந்து தொடங்குபவர்களுக்கு இள உடல்கள் நிறைந்திருக்கும் முதல் வீடு இது. மெலிந்த கதவும் உறுதியற்ற பூட்டும்கொண்ட இங்கிருந்து, கடுமையான வீச்சத்துடன் இறைச்சிகள் வெந்துகொண்டிருக்கும், தீச்சுவாலைகள் எதிரொளிக்கும் பாறைகளுக்கு நடுவே, ஒரு வேட்டைக் கும்பலின் நள்ளிரவு உணவை அச்சம் வழியும் எனது கண்கள் நடுங்கியபடி பார்த்துக்கொண்டிருக்கின்றன.