Published:Updated:

காலத்தின் களிம்பேறா கதைகள் - ரவிசுப்பிரமணியன்

காலத்தின் களிம்பேறா கதைகள் - ரவிசுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
காலத்தின் களிம்பேறா கதைகள் - ரவிசுப்பிரமணியன்

காலத்தின் களிம்பேறா கதைகள் - ரவிசுப்பிரமணியன்

காலத்தின் களிம்பேறா கதைகள் - ரவிசுப்பிரமணியன்

காலத்தின் களிம்பேறா கதைகள் - ரவிசுப்பிரமணியன்

Published:Updated:
காலத்தின் களிம்பேறா கதைகள் - ரவிசுப்பிரமணியன்
பிரீமியம் ஸ்டோரி
காலத்தின் களிம்பேறா கதைகள் - ரவிசுப்பிரமணியன்

“என்னால் எப்படி எழுத்தாளனாக முடிந்தது என்ற கேள்விக்கு, என்னிடம் பதில் இல்லை. எங்கள் குடும்பத்தில் படித்தவர்கள் யாருமில்லை. நண்பர்கள் கரிச்சான் குஞ்சு, தி.ஜானகிராமன் போன்றவர்களின் பெற்றோர்கள் படித்தவர்கள். கரிச்சான் குஞ்சுவின் தாயார் அழகாகப் பாடுவார். எனக்கு அப்படி ஒரு சூழல் இல்லை. எங்கள் குடும்பத்தில் எல்லோரும் உழைப்பாளிகள்; நெசவாளர்கள். என் தந்தையும்கூட நெசவாளர்தான். நான் எழுத்தாளனாக ஆனது விதி. பல பிறவிகளில் செய்த தீவினைகளின் பயனாகத்தான், நான் தமிழ் எழுத்தாளன் ஆனேன் என்று நம்புகிறேன்” என்று சொல்வார் எம்.வி.வெங்கட்ராமன்.

 1920-ல், கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தவர் எம்.வி.வி. வீரய்யர் - சீதையம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்து, மிகச்சிறு வயதிலேயே தாய்மாமன் தம்பதியர் மைசூரு வெங்கடாசலபதி – சரஸ்வதி ஆகியோருக்குத் தத்துப் பிள்ளையாகச் சென்றவர்.

வசதியான குடும்பம். எம்.எம்வி-யின் அப்பாவுக்கு தெய்வபக்தி அதிகம். பிறருக்கு உதவி செய்வதில் முனைந்து நிற்பவர். அவருக்கு ஒரு பழக்கம் இருந்துள்ளது. தனது பட்டு ஜவுளிக் கடையை மூடுவதற்கு முன்னால், தினமும் ஏதாவது ஒரு கதையைப் படிக்கச் சொல்லிக் கேட்பாராம். அதன் பின்புதான், கடையை மூடிவிட்டு, தூங்கச் செல்வாராம். சின்ன வயதிலிருந்து இப்படிப் பல புராணக் கதைகளைக் கேட்டு வளர்ந்திருக்கிறார் எம்.வி.வி. தவிர, வாராவாரம் சனிக்கிழமை, அவர் வீட்டில் பஜனைக் கச்சேரி நடந்துள்ளது. “அந்தக் கேள்வி ஞானம், நான் எழுத வருவதற்கு உந்துதலாக இருந்திருக்கும்” என்பார்
எம்.வி.வி.

 அவரது இளம் வயதில் வாசிக்க, புத்தகங்கள் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. ‘கலைமகள்’, ‘ஆனந்த விகடன்’ போன்ற பத்திரிகைகள் மட்டுமே கிடைத்துள்ளன. அவற்றை அவர் தொடர்ந்து வாசித்து வந்துள்ளார். தவிர, ஆரணி குப்புசாமி முதலியார், ஜே.ஆர்.ரங்கராஜீ, வடுவூர் துரைசாமி அய்யங்கார் போன்றவர்கள் எழுதிய பல நாவல்களை  வாசித்துள்ளார். இவற்றையெல்லாம் படித்த 13 வயது எம்.எம்.வி-க்கு, ‘நாமும் ஏன் எழுத்தாளனாகக் கூடாது’ என்ற எண்ணம் தோன்றியுள்ளது.

காலத்தின் களிம்பேறா கதைகள் - ரவிசுப்பிரமணியன்

எஸ்.எஸ்.எல்.சி படிக்க வருவதற்குள், 1000 பக்கங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். எழுதியதோடு மட்டுமல்லாமல், பத்திரிகைகளுக்கும் அனுப்பியுள்ளார். ஆனால், அவை திரும்பி வந்தவண்ணம் இருந்திருக்கின்றன. பத்திரிகைகாரர்கள் ஏன் திருப்பி அனுப்புகிறார்கள் என்று நிதானித்து யோசிக்க முடியாமல், பள்ளிப் படிப்பின் காரியங்கள் அவரைத் துரத்தியபடி இருந்திருக்கின்றன. கல்லூரியில் சேர்ந்ததும், ஆண்டன் செக்காவ், தஸ்தாயேவ்ஸ்கி, டால்ஸ்டாய், மபசான்... இப்படிப் பல மேல்நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்துள்ளார்.

அவருடைய இந்தி ஆசிரியர், பி.எம்.கிருஷ்ணசாமி வீட்டுக்கு ‘மணிக்கொடி’ இதழ் தொடர்ந்து வந்துள்ளது. நல்ல இந்திச் சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து, ‘மணிக்கொடி’ இதழுக்குக் கொடுத்து வந்திருக்கிறார். பிச்சமூர்த்தி, கு.ப.ரா. கதைகளையும், இந்தியில் மொழிபெயர்த்து வெளியிட்டு வந்திருக்கிறார். அவர் மூலமாகத்தான் எம்.வி.வி-க்கு ‘மணிக்கொடி’ இதழ் பரிச்சயமாகி உள்ளது. ஒருநாள், ஒரு கதை எழுதி, தன்னுடைய இந்தி ஆசிரியரிடம் கொடுத்து, “இது மணிக்கொடிக்குச் சரியாக இருக்குமா பாருங்கள்” எனக் கேட்டுள்ளார். இந்தி ஆசிரியர் அதைப் படித்ததும், “கு.ப.ரா. இங்கு வருவார், அவர் வரும்போது அவர்கிட்ட காண்பிக்கிறேன்” என்று சொல்லியுள்ளார். இந்தி ஆசிரியர் வீட்டுக்குக் கு.ப.ரா., பிச்சமூர்த்தி ஆகிய இருவரும் அடிக்கடி வருவார்களாம். அவர்கள் இருவரது கதைகளையும் மணிக்கொடியில் ஏற்கெனவே படித்து வந்ததால், அவர்கள்மீது எம்.வி.விக்கு ஒரு பக்தியே இருந்துள்ளது. மணிக்கொடியில் அப்போது கு.ப.ரா தொடர்ச்சியாக எழுதிவந்த, ‘கருவளையும் கையும்’ என்ற வசன கவிதை எம்.வி.வி-க்குள் ஒரு படைப்புக் கிளர்ச்சியையே உருவாக்கியுள்ளது. எம்.வி.வி-யின் கதையைக் கு.ப.ரா., பிச்சமூர்த்தி இருவருமே படித்துள்ளனர். படித்ததும், பி.எஸ்.ராமய்யாவுக்கு, ‘ஒரு புதிய எழுத்தாளர் உதயமாகியிருக்கிறார்’ என்ற அறிமுகக் கடிதத்தோடு கதையை அனுப்பி வைத்துள்ளனர். அந்தக் கதை 1935-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 15-ம் தேதியிட்ட மணிக்கொடியில் ‘சிட்டுக்குருவி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. எம்.வி.வி-யின் முதல் கதை அது. அப்போது அவருக்கு வயது 16.

காலத்தின் களிம்பேறா கதைகள் - ரவிசுப்பிரமணியன்எழுத்தாளராக மட்டுமல்லாமல், சிறுபத்திரிகை ஆசிரியராகவும் இருந்துள்ளார் எம்.வி.வி. 1948-ல் ‘தேனீ’ என்ற இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தியுள்ளார். தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்கள் பலரும் அதில் எழுதியுள்ளனர். ‘பாலம்’ இலக்கிய இதழின் கெளரவ ஆசிரியராகவும் இருந்துள்ளார். அவரது ‘காதுகள்’ நாவல் அதில் தொடராக வெளிவந்தது.

ம்.வி.வி-யின் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை வாசித்தவன் என்ற வகையிலும், அவரோடு நெருங்கிப் பழகியவன் என்ற வகையிலும், அவரது எழுத்துகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம் என்று எண்ணுகிறேன். ஒன்று, உண்மையான வாழ்க்கையைக் கற்பனை இல்லாமல் அப்படியே எழுதுவது. அப்படி எழுதும்போது, அது வெறும் செய்தி விவரணையாக மாறும் வாய்ப்புள்ளது. ஆனால், எம்.வி.வி தன் கலைத்திறனால், அதை அனாயாசமாகக் கடந்து செல்கிறார். இதற்கு உதாரணமாக, அவரது ‘பெட்கி’, ‘மாய்பாப்’ போன்ற கதைகளையும் ‘காதுகள்’ நாவலையும் குறிப்பிடலாம். ஒருவகையில், இவை அவரது சுயசரிதை சார்ந்த கதைகள்.

இரண்டாவது, கற்பனை கலந்து வாழ்வின் யதார்த்தத்தைச் சொல்லும் கதைகள். இதையும் அவர் சிறப்பாகவே கையாண்டிருக்கிறார். ‘வேள்வித் தீ’ நாவலையும் ‘வாழவைத்தவன்’, ‘இனி புதிதாய்’ போன்ற சிறுகதைகளையும் இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும்.

மூன்றாவது, கற்பனையில் எவ்வளவு உயரம் செல்லமுடியுமோ, அவ்வளவு உயர்வாக விரிந்து பறந்து, உலகத்தையே அவாவிப் பார்க்கும் ஆசைகொண்ட கதைகள். இதற்கு உதாரணமாக, மகாபாரதக் கதையின் சிறு பாத்திரங்களை அடிப்படையாக வைத்து அவர் எழுதிய, ‘நித்திய கன்னி’ நாவலையும், ‘திலோத்தமை’, ‘புலோமை’, ‘அழகி’, ‘பனிமுடி மீது ஒரு கண்ணகி’ போன்ற சிறுகதைகளையும் குறிப்பிடலாம். தன் கற்பனையின் வீச்சினை செயலாக்கிப் பார்க்க மகாபாரதத்தின் சில கதாபாத்திரங்களை அவர் ஒரு கருவியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

‘குயில்’ 1955, ‘மாளிகை வாசம்’ 1964, ‘வரவும் செலவும்’ 1964, ‘மோகினி’ 1965, ‘உறங்காத கண்கள்’ 1968, ‘அகலிகை முதலிய அழகிகள்’ 1969, ‘இனி புதிதாய்’ 1992, ‘எம்.வி.வெங்கட்ராம் சிறுகதைகள்’ 1999, ‘எம்.வி.வெங்கட்ராம் முத்துக்கள் பத்து’ 2007, போன்ற சிறுகதைத் தொகுதிகளையும் ‘நானும் உன்னோடு’ என்ற தலைப்பில் ஆறு குறு நாவல்கள் அடங்கிய தொகுதி ஒன்றையும் ‘என் இலக்கிய நண்பர்கள்’ கட்டுரைத் தொகுதியையும், ‘நித்திய கன்னி’ 1944, ‘உயிரின் யாத்திரை’ 1958, ‘இருட்டு’ 1958, ‘அரும்பு’ 1970, ‘வேள்வித்தீ’ 1975, ‘ஒரு பெண் போராடுகிறாள்’, ‘காதுகள்’ 1992 போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார் எம்.வி.வி.

கதைகள் நாவல்கள் தவிர, ராஜாராம் மோகன் ராய், மகாத்மா காந்தி, அரவிந்தர், பாரதியார், நேரு, இந்திரா, பகத் சிங் போன்ற 50-க்கும் மேற்பட்ட வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். ஏழுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், ‘மாதவம் புரிந்த மங்கையர்’, ‘வீரப்பெண்மணிகள்’ போன்ற பொதுத் தலைப்பில் சில கட்டுரை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். 200-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய எம்.வி.வியின் ‘காதுகள்’ நாவலுக்கு 1993-ம் ஆண்டு சாகித்ய அகாடமி பரிசு வழங்கப்பட்டது.

எம்.வி.வி ஓர் எளிய மனிதர். ஆனால், அவர் படைப்புகள் எளிமையானவை அல்ல. அவை நம் நுண்ணுணர்வைக் கோருபவை. மனித மனத்தின் ஆழங்களில் சலனிக்கும் நுட்பமான உணர்வுகளைத், தன் படைப்புகளின் வழியே வெளிக்கொண்டு வந்தவர். உளவியல் கோணத்திலும் அவர் சில படைப்புகளை எழுதியுள்ளார். அதற்குச் சரியான உதாரணமாக ‘அரும்பு’ நாவலைக் குறிப்பிடலாம். அதேசமயம் சுவாரஸ்யம் குன்றாதபடி கதைகளை வளர்த்துச் செல்வதில் வல்லவர். கவித்துவ வர்ணனைகள் அமைந்த நடையை, அவருடைய பல கதைகளில் காணமுடியும்.

அவருடைய ஒரு நாவல்போல் இன்னொரு நாவல், ஒரு சிறுகதைபோல இன்னொரு சிறுகதை இருக்காது. எம்.வி.வி-யின் பல கதைகளும், ஏதோ ஒருவகையில், மனித மதிப்பீடுகளின் மீது கேள்வியை எழுப்பி, அதை மறுபரிசீலனை செய்ய அல்லது அதற்கு விடை தேடத் தூண்டுகிறது. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட அவரது சில படைப்புகள், இன்றும் புதிய பொருள்கொள்ள ஏதுவாய் இருக்கின்றன. இது காவியத்தன்மைக்குரிய ஓர் அடையாளம். அவர் எழுத ஆரம்பித்த தொடக்கக் காலத்திலேயே, அவருடைய கதைகள் சிறந்த கதைகளாக அமைந்திருந்தன. ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன் போன்றவர்களின் தொடர்பும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. “ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, இருவரும் என்னையும் அவர்களுள் ஒருவனாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். 45, 40 வயதுக்காரர்களும் 24 வயதேயான நானும் சமமாக அமர்ந்து உரையாடினோம் என்பதைக் கர்வத்தோடு சொல்லிக்கொள்வேன். கு.ப.ராவும், பிச்சமூர்த்தியும், புதுமைப்பித்தனும் என்னை வலுவாக ஆக்கிரமித்துக்கொண்ட எழுத்தாளர்கள்” என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார் எம்.வி.வி.

காலத்தின் களிம்பேறா கதைகள் - ரவிசுப்பிரமணியன்

ம்.வி.வி-யின் முக்கியமான நாவல்களில் ஒன்று நித்திய கன்னி. ஒரு பெண்ணின் உடல் மற்றும் மனதிற்கிடையே நடக்கும் போராட்டமே இந்த நாவல். பெண்ணை மையப்படுத்தித் தமிழில் எழுதப்பட்ட ஒரு முன்னோடி நாவல். காலங்காலமாகப் பெண்ணை அடக்கி அடிமை செய்யும் ஆணைப் பலவிதமான கேள்விக்குள்ளாக்குகிறது நாவல். “விஸ்வாமித்திரனின் சீடன் காலவன். நல்ல அழகன். குருகுல வாழ்க்கை முடிந்ததும் குருதட்சணை கொடுத்தே தீருவேன் என்று பிடிவாதம் செய்கிறான். பொறுமை இழந்த விஸ்வாமித்திரர், உடல் வெள்ளையாகவும் காதுகள் மட்டும் கறுப்பாகவும் உள்ள 800 குதிரைகளைக் கொண்டுவந்து தருமாறு பணிக்கிறார். காலவன், குதிரைகளுக்காக யயாதி மன்னனிடம் செல்கிறான். அவனிடம் அத்தகைய பரிகள் இல்லை. அதனால், தன் மகள் மாதவியைக் காலவனுக்குத் தானம் செய்கிறான் மன்னன். அவள்தான் நித்திய கன்னி. ஒரு குழந்தை பெற்றதும் முன்போல் கன்னியாகக்கூடிய அதிசய வரம் பெற்றவள். அவளை அடுத்தடுத்து மூன்று அரசர்களுக்குத் திருமணம் செய்வித்து, 600 பரிகளைப் பெறுகிறான் காலவன். மீதி 200 குதிரைகளுக்குப் பதிலாக விசுவாமித்திரரே அவளைக் கல்யாணம் செய்துகொள்கிறார். மூன்று அரசர்களையும் ஒரு முனிவரையும் மணந்து, அவர்களுக்கு நான்கு குழந்தைகளையும் பெற்று, பெற்ற இடத்திலேயே அவற்றை விட்டுவிட்டுக் கன்னியாகவே தந்தையிடம் திரும்புகிறாள் மாதவி. இந்த அவலங்களுக்கிடையில், ஒருவரை ஒருவர் உயிராக நேசிக்கும் காலவனும் மாதவியும் எப்படி உணர்ச்சி வதைக்கு உள்ளாகிறார்கள் என்பதை நாவல் கூறுகிறது.

காலவன், மாதவி, யயாதி, விசுவாமித்திரர், மூன்று மன்னர்கள் என்று புராண காலத்திய கதாபாத்திரங்களை உருவாக்கி இந்நாவல் எழுதப்பட்டிருந்தாலும், இன்று வாசிக்கும்போதும், புது மினுக்கம்கொள்கிறது. அதுவே இந்நாவலின் பலம். எம்.வி.வி-யின் இன்னொரு முக்கியமான சமூக நாவல் ‘வேள்வித் தீ’. இது செளராஷ்ட்ர சமூகத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட நாவல். ஒரு கோணத்தில், அந்தச் சமூகத்தைப் பற்றிய சிறு ஆவணம் என்றுகூடச் சொல்லலாம். அவர்களைப் பற்றிய பதிவே இல்லாத காலத்தில் வந்த ஒரு நாவல். ஒரு நெசவாளியின் கஷ்ட ஜீவனத்தைச் சொல்லும் குடும்பக் கதை.
நாவலின் கதாநாயகன் கண்ணன். அவன் மனைவி கெளசலை. அவன்மீது மிகுந்த அன்புகொண்டவள். அவனின் கஷ்டகாலங்களில் அவனை உற்சாகப்படுத்துகிறவள். அவர்கள் வாழ்வில் புகும் பணக்கார இளம்விதவை ஹேமா. ஹேமாவுக்கும் கண்ணனுக்கும் இடையே உறவு ஏற்படுகிறது. அதைத் தடுக்க முற்படுகிறாள் கெளசலை. அவளால் முடியவில்லை. அதனால், குளத்தில் விழுந்து தன்னை மாய்த்துக்கொள்கிறாள். மனைவி இறந்த பின்னும் ஹேமாவின் உறவைத் தொடர்கிறான் கண்ணன். இப்படி எளிய சாதாரண கதையாகத் தோற்றம் தருகிற நாவல், வாழ்வின் அபத்தத்தை, மனித மனதின் அபிலாஷகளை, யதார்த்தமாகவும் நுட்பமாகவும் அதேசமயம் இலக்கிய மேன்மையோடும் முன்வைக்கிறது.

ஒரு நேர்காணலில் ‘வேள்வித் தீ’ பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு சுந்தர ராமசாமி இவ்விதம் பதிலளிக்கிறார்: “வேள்வித் தீ நாவல் நயமாக எழுதப்பட்ட ஒரு நாவல். ஒரு கைதேர்ந்த கலைஞனுக்குரிய ஆற்றல்கள் அந்த நாவலில் சீராக வெளிப்படுகின்றன. கதையைச் சொல்லிக்கொண்டு போகக்கூடிய முறையிலும், கதையை வளர்த்தெடுக்கக்கூடிய போக்கிலும், பாத்திர சிருஷ்டிகளின் வெளிப்பாடுகளிலும், அதற்கு அவர்

காலத்தின் களிம்பேறா கதைகள் - ரவிசுப்பிரமணியன்

பயன்படுத்தியிருக்கக்கூடிய தமிழின் அழகுகளிலும், அதிக அளவுக்குக் கவர்ச்சி தரக்கூடிய நாவலாக எனக்குப்பட்டது. அத்துடன் அந்த நாவலில், மனித மனங்களைச் சார்ந்த ஆழ்ந்த கவனிப்புகள், ஆங்காங்கே வெளிப்படுகின்றன. மனித மனங்களில் புதையுண்டுகிடக்கும், பொதுவாக நாம் வெளிப்படுத்தத் தயங்கக்கூடிய பல எண்ணங்களை அங்கு வெளிப்படையாக அல்லது நாம் நேராக நின்று உணரக்கூடிய வகையில், மிக எளிமையாகச் சொல்லிக்கொண்டு போகிறார். அந்த வகையில் ‘வேள்வித் தீ’ என் மனதை வெகுவாகக் கவர்ந்தது.’’

‘நித்திய கன்னி’, ‘வேள்வித் தீ’ போன்று எம்.வி.வியின் மற்றுமொரு குறிப்பிடப்பட வேண்டிய நாவல் ‘காதுகள்’. இந்த நாவல் ஒருவகையில் அவரது சுயசரிதை ஆகும். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கம், ஓர் எழுத்தாளன். செல்வத்தோடும் செல்வாக்கோடும் வாழ்ந்தவன். அவனுக்கு 36, 37 வயதாகும்போது, திடீரென்று உள்ளிருந்தும் வெட்டவெளியிலிருந்தும் பல குரல்கள் ஒலிக்கத் தொடங்குகின்றன. ஆபாசமாகவும் பயங்கரமாகவும் 24 மணி நேரமும் அவை கத்தத் தொடங்குகின்றன. அதைத் தொடர்ந்து, கற்பனை செய்ய முடியாத கோரமான உருவங்களும் அவனைச் சூழ்கின்றன. மகாலிங்கம் நிலைகுலைகிறான். ஆனால், அவனுடைய புத்தியோ, நான் என்னும் உணர்வோ சிறிதும் பிசகவில்லை. இந்த அனுபவங்களின் தொகுப்பே ‘காதுகள்’.

 இதுவும் ஒரு வித்தியாசமான படைப்பு. மனம் இவ்விதம் பழுதுபடும் ஒருவன், தன்னை மறப்பது இயல்பானது. ஆனால், அந்தச் சூழலிலும், தான் என்ற உணர்வு பிசகாமல் இருந்துள்ளார் எம்.வி.வி. அதோடு மட்டுமல்லாமல் அதை மறுபடி நினைவில் கொண்டுவந்து, எழுத்திலும் பதிவுசெய்துள்ளார். இந்த நாவல் மனோதத்துவ மருத்துவ இயலுக்கு எம்.வி.வி அளித்த கொடை என்றுகூட கூறலாம். ஏனெனில், ஆடிட்ரி ஹலூசினேஷன் தொடர்பாகத் தமிழில் அதற்கு முன்பும் அதற்குப் பின்பும் எந்த நாவலும் எழுதப்படவில்லை.

 ‘காதுகள்’ நாவலை டிரான்ஸ்கிரஸிவ் எழுத்து வகை என்று சாருநிவேதிதா குறிப்பிடுகிறார். ‘நேச்சுரலிஸம், ரியலிசம், ரொமான்டிசிஸம், மேஜிக்கல் ரியலிஸம், சர்ரியலிஸம் போன்ற பலவகைப்பட்ட எழுத்துகளில் டிரான்ஸ்கிரஸிவ் எழுத்து வகையும் ஒன்று. உலக அளவில், இந்த வகை எழுத்துகளில் ஈடுபட்டவர்கள் குறைவு. பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மார்க்கி தெ சாத், அமெரிக்காவைச் சார்ந்த வில்லியம் பர்ரோஸ், கேத்தி ஆக்கர், சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி, பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த ஜார்ஜ் பத்தாய் போன்ற ஒரு சிலரே இந்த பாணியில் எழுதியுள்ளனர். டிரான்ஸ்கிரஸிவ் எழுத்தைப் பற்றி சுருக்கமாகச் சொன்னால், எதையெல்லாம் சமூகம் பாவம் என்று ஒதுக்கி வைக்கிறதோ, விவாதிப்பதற்கேகூட அஞ்சுகிறதோ அதை எழுதுவதே. இந்த வகை எழுத்தை இலக்கியத்தின் ஒரு பாணியாக மட்டுமே கருதி ஒருவர் எழுதிவிட முடியாது. ஏனென்றால், அது அவரது புகழையும் அந்தஸ்தையும் நற்பெயரையும் - இன்னும் சொல்லப்போனால், மொத்த வாழ்க்கையையுமே பலியாகக் கேட்கும் தன்மைகொண்டவை’ என்கிறார் சாருநிவேதிதா.

`முருகன் என்கிற தெய்வத்தைத் குருவாக வரித்து, அவரைக் கண்டுபிடித்துவிட வேண்டுமென்று, எனக்குத் தெரிந்த பல வழிகளில் நான் முயற்சி செய்துகொண்டிரு ந்தேன். அதனால் அவர் சந்தோஷப்பட்டு, ஒரு கோஷ்டி வேதாளங்களை அனுப்பிட்டார் போல் இருந்தது. அவை எல்லாம் சேர்ந்து என்னுடைய மூளையின் மரைகளை ஓவ்வொன்றாகக் கழற்ற ஆரம்பித்துவிட்டன. வேறு யாருக்கும் கேட்காத ஒலிகளை எல்லாம், நான் கேட்க ஆரம்பித்தேன். வேறு யாரும் கற்பனை செய்ய முடியாத காட்சிகள், எனக்குத் தெரிந்தன. எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா அல்லது பிடிக்கப் போகிறதா என்று, என்னால் நிர்ணயிக்க முடியாத நிலைமை. வறுமை ஒரு பக்கம் என் காலைக் கவ்விக்கொண்டிருந்தபோது, அதே நேரத்தில், என் தலையை யாரோ திருகிக் கொண்டிருந்தார்கள்’ என்று அந்த அனுபவத்தைப் பற்றி குறிப்பிடுவார் எம்.வி.வி.

இந்த நாவலைப் படித்த, முற்போக்கு முகாமைச் சார்ந்த சிலர், சமூகப் பிரக்ஞை இல்லாமல், மக்கள் பிரச்னைகளை அணுகாமல், ஏதோ தெய்வீகமான, ஆத்மீகமான, உயர்மட்ட விஷயங்களையே கதைகளில் அணுகுகிறீர்களே என்று கேள்வி எழுப்பியபோது,  “சமூகப் பிரக்ஞை என்பதில், தெய்வீகம் பற்றிப் பேசுவதும் அடக்கம். நம்பாதவர்களுக்கு அது பழக்கமில்லை. நம்புகிறவனுக்கு என்று சில நியமனங்கள் உண்டு. தியானத்தில் உட்காருவது பற்றிக் கதை எழுதினால், அது சமூகப் பிரக்ஞை பற்றி எழுதியது ஆகாதா. எப்போது பார்த்தாலும் பசியைப் பற்றியும், உப்பு பருப்பு விலை பற்றியும் பேசுவதுதான் சமூகப் பிரக்ஞை என்று எழுதுவதை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. நானே ஏழையாய் வறுமையோடு போராடிக் கொண்டிருக்கிறவன். என்னைப் பற்றி எழுதினால், அது ஏழையைப் பற்றி எழுதியதாகத்தானே அர்த்தம்” என்று  பதில் அளித்தார்.

 நாவல்களில் மட்டுமில்லாது, சிறுகதைகளிலும் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்தவர் எம்.வி.வி. அவருடைய சிறுகதைகள் பலதரப்பட்டவை. பொதுவாகத் தாய்மை என்றாலே புனிதம் என்று தெய்வநிலைக்கு உயர்த்தும் போக்கு நிலவும் சூழலில் எம்.எம்.வி-யின் ‘பைத்தியக்காரப் பிள்ளை’ சிறுகதை, தாயால் மகனுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றிப் பேசுகிறது. இந்தக் கதையைத் தமிழின் ஆகச் சிறந்த கதைகளுள் ஒன்றாக அசோகமித்திரன் குறிப்பிடுகிறார். கதைச் சுருக்கம் இதுதான். ஆண் குழந்தைகள் ஐந்தும் பெண் குழந்தைகள் ஐந்துமாகப் பிறந்த ஒரு நெசவாளிக் குடும்பம். வயதுக்கு வந்த பிறகு, பெண்களுக்கு எப்படிக் கல்யாணம் செய்யப்போகிறேனோ என்று, குடித்தே உயிரைவிடும் தந்தை. வீட்டின் மூத்த மகன் ராஜம். தந்தை இறந்த பின், குடும்பப் பொறுப்பை ஏற்று, தன் தங்கைகளில் மூவருக்குத் திருமணம் செய்து, அந்தக் கடனையும் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து வருகிறான். அவன் தம்பிகள் பெரியவர்கள் ஆனதும் அம்மாவை விட்டுத் தப்பித்து, தனியே தொழில் செய்கிறார்கள். வீட்டுக்குப் பணமும் தருகிறார்கள். பேச்சாலும் செயலாலும் மூத்த மகன் ராஜத்தைக் கொடுமை செய்கிறாள் தாய். அயராத தறி வேலைகளுக்கிடையே, அவனுக்கு ஒரு காதல். அவன் காதலி பங்கஜம். அவளுக்காகப் பாடுபட்டு பட்டுப்புடவையும் தாலியும் பணமும் சேர்த்து ஒரு பெட்டியில் வைத்திருக்கிறான். அதைக் கள்ளச்சாவி போட்டு ரகசியமாகத் திறந்து பார்த்துவிடுகிறாள் தாய். அதை வைத்துக்கொண்டே அவனோடு சதா சண்டை பிடிக்கிறாள். சின்னச்சின்ன விஷயங்களுக்காக அவனை வார்த்தையால் கொல்கிறாள். பங்கஜத்தைப் பற்றித் தாறுமாறாக ஏசுகிறாள். அவளை இந்த குடும்பத்துக்கு மருமகளாக வரவிட மாட்டேன் என்று கத்துகிறாள். பங்கஜத்தின் பெற்றோருக்கோ, வேறு யாருக்கோ இவள் திட்டுவது கேட்டுவிடுமோ என்று பதறுகிறான் ராஜம். அதோடு நில்லாமல் அவனுக்கு உதவியாய் தறியில் வேலை செய்யும் தங்கையை அவனுக்கு உதவவிடாமல் செய்கிறாள். தங்கை அவனோடு வேலை செய்ய வேண்டுமென்றால், அதற்கு அட்வான்ஸாகத் தனியாகப் பணம் கொடு என்று கேட்டுத் தொந்தரவு செய்கிறாள். அடி மேல் அடி விழத் துவள்கிறான் ராஜம். தாயின் மனமோ அகங்காரத்தின் உச்சிக்குச் செல்கிறது. சதா அவள் பேச்சாலும் செயல்களாலும் கொடுமைக்கு ஆளான அவன், ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள் கிறான். நல்லவேளை கல்யாணத்திற்குப் பிறகு இப்படிச் செய்யாமல் இருந்தானே என்கிறாள் காதலி பங்கஜம்.

பெற்ற தாயின் மதிப்பீடும் செயல்பாடுகளும் ஏன் இப்படி மாறின என்ற கேள்வியை எழுப்புகிறது கதை. இப்படிப்பட்ட தாய்களும் உலகத்தில் இருக்கவே செய்கிறார்கள். சந்தர்ப்ப சூழல்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, தன் சுயநலம் ஒன்றே பிரதானமாகச் செயல்படுகிறாள் தாய். அவளுக்கு அவள் உலகத்தில் அவளைத் தவிர யாருமில்லை. அதன் பொருட்டே மகனை அந்தப் பாடு படுத்துகிறாள். தன்னைக் காதலித்தவன் பிணமானதைக் கண்டு, நல்லவேளை கல்யாணத்துக்குப் பிறகு இப்படிச் செய்யவில்லை என்று மன அமைதிகொள்கிறாள் காதலி. விதவையாகிருந்தால் காலம் முழுதும் எவ்வளவு துயரமாயிருக்கும் என்பதை நினைத்துத் தன்னை விதவையாக்காமல் போய்ச் சேர்ந்தானே என்ற ஆசுவாசம்தான் அவளிடம் எஞ்சுகிறது. அவன்மீது காதலோ, பரிதாப உணர்ச்சியோ ஏற்படுவதற்குப் பதிலாக அவளுக்குப் பதற்றமே ஏற்படுகிறது. காதல் என்ற உணர்வுக்குப் பின்னும் தாய்மை என்ற உணர்வுக்குப் பின்னும் சுயநலனே மறைந்திருக்கிறது.

 எம்.வி.வி. தனது சில படைப்புகளில் இதுபோன்று புனித பீடங்களை அனாயாசமாகத் தகர்த்தெறிகிறார். ‘காதுகள்’ நாவலிலும் `பைத்தியக்காரப் பிள்ளை’ சிறுகதையிலும் அது நடந்துள்ளதை அந்தப் படைப்புகளைப் படிக்கும்போது நாம் உணர முடியும். பொதுவாக, அவரது கதைகளில் மனித முரண்கள் சந்தித்து மோதுகின்றன. பாலியல் வேட்கையின் வெவ்வேறு கோணங்கள் வெளிச்சமாகின்றன. குறிப்பாக, மனப்போராட்டங்கள் நுட்பமாகவும் யதார்த்தமாகவும் காணப்படுகின்றன. சில கதைகளைப் படித்து முடித்ததும் அர்த்தம் புரியா வெறுமை சரிகிறது. மனதின் அடியாழத்தில் புதையுண்ட அற்ப உணர்ச்சிகளைச் சில கதைகள் பேசுகின்றன. மனித மனம் எப்படியெல்லாம் விசித்திரமாக மாறும் என்பதை அவர்

காலத்தின் களிம்பேறா கதைகள் - ரவிசுப்பிரமணியன்

படைப்புகளில் பார்க்க நேர்கிறது. அறங்களைக் கலைத்துப் போடுகின்றன சில கதைகள். தொலைந்து போன கலாசாரத்தின் நினைவுகளை மீட்டிக் காட்டுகின்றன சில கதைகள். இச்சைகளால் பாதை மாறும் மனிதர்கள் பாத்திரங்களாக வருகிறார்கள். வாழ்வின் அக-புற சவால்களுக்கு முன்னால் பாத்திரங்களின் போராட்டங்கள் வெகுநேர்த்தியாய் நெய்யப்பட்டுள்ளதை நாவல்களிலும் சிறுகதைகளிலும் காணமுடிகிறது. இப்படி அவர் படைப்புகளின் கூறுகளை விவரித்துக்கொண்டே செல்லலாம்.

 இலக்கியத் தளத்தில் தமிழ் எழுத்தாளர்கள் செய்திராத சில சோதனை முயற்சிகளை  செய்து பார்த்திருக்கிறார். அவர் இலக்கியத்தில் இயங்கிய 64 வருடங்களில் கிட்டத்தட்ட 20 ஆண்டு காலம் காதுகளில் கேட்கும் நாராச ஒலிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆயினும், பின்னாளில் அதையே படைப்பாகவும் உருவாக்கிக் காட்டினார். வறுமையோடும் நோயின் உபத்திரங்களோடும் முழுநேர எழுத்தாளனாக இயங்கி, அவர் தமிழுக்குத் தந்த பங்களிப்புகள் கணிசமானவை. தமிழின் நவீன இலக்கியம் மறுமலர்ச்சிகொண்ட காலம் ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மெளனி, போன்றவர்கள் இயங்கிய காலம். அந்தக் காலத்தில் அவர்களைவிட இளையவரான எம்.வி.வி அவர்களோடு பழகி இயங்கித் தன்னையும் அவர்களுக்குச் சமமான இலக்கிய ஆளுமையாகத் தனது படைப்புகளின் மூலம் நிறுவிச் சென்றிருக்கிறார்.

ஒரு புதிய வாசகன் இன்று அவர் படைப்புகளை வாசிக்க நேரும்போது, அவரது பல படைப்புகள் காலத்தின் களிம்பு ஏறாமல், இன்றும் புதியவையாகத் தோற்றம் தருவதை உணர்ந்துகொள்ள முடியும்.  இதுவே அவருடைய படைப்பின் வெற்றி.