Published:Updated:

மூகம்மா காடு - ஜெயராணி

மூகம்மா காடு - ஜெயராணி
பிரீமியம் ஸ்டோரி
மூகம்மா காடு - ஜெயராணி

ஓவியங்கள் : செந்தில்

மூகம்மா காடு - ஜெயராணி

ஓவியங்கள் : செந்தில்

Published:Updated:
மூகம்மா காடு - ஜெயராணி
பிரீமியம் ஸ்டோரி
மூகம்மா காடு - ஜெயராணி

சுமையை வெளுத்துப் பார்க்கும் வெயில் காலம். ஸ்ரீசைலம் என்ற அந்தச் சிறிய நகரம், சற்று அதிகமாகவே

மூகம்மா காடு - ஜெயராணி

வெயிலூட்டப்பட்டிருப்பதாகத் தோன்றியது.

``மலை மேலயும் இவ்ளோ வெயில் தெரியுமா?!’’ உடலை நனைத்த பிசுபிசுப்பும் பயணக் களைப்பும் அலுப்புடன் இந்தக் கேள்வியைக் கேட்கத் தூண்டின.
 
``ஏறக்குறைய நடுக்காட்டுக்குப் போகப் போறோம். போய்ச் சேரவும் ராத்திரியாகிடும். அந்நேரத்துக்கு பூமி குளிர்ந்திருக்கும்’’ என்றார் சோலையன். 

நடுக்காட்டில் குடியிருக்கும் பழங்குடி மக்களைச் சந்திக்க, இரவு நேரத்தில் போக நேரிடும் என நினைக்கவில்லை. ஆனால், பயணத்தில் ஏற்பட்ட இடர்ப்பாடுகளால் இப்படி ஆகிவிட்டது.

``ராத்திரியில போறதுல ஒண்ணும் சிக்கல் இல்லையே?’’ - வந்த வேலை திட்டமிட்டபடி முடிய வேண்டும் என்ற பதற்றம் எனக்கு. இரண்டு நாள்களுக்குள் ஊர் திரும்பி, செய்திக் கட்டுரையைச் சமர்ப்பித்தாக வேண்டும்.

மூகம்மா காடு - ஜெயராணி

``இவ்ளோ தூரம் வந்துட்டீங்க... போய்ப் பார்க்கலாம்’’ சோலையனின் குரலில், ஒரு நிதானமும் நம்பிக்கையின்மையும் வெளிப்பட்டன.

தூரத்தே தெரிகிறது நல்லமல்லா. உயிர்கள் அடர்ந்த பெருவனம் அது. மான்கள், காட்டெருமைகள், பன்றிகள், கரடிகள், நரிகள் எனப் பலவும் உலவும் காடு என்றாலும், புலிதான் ராஜா. தோன்றிய காலத்திலேயே ‘புலிக்காடு’தான். எனினும், புலிகளைப் பாதுகாக்கும் காடாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதுதான் பிரச்னையே. புலிகளைக் காப்பாற்ற, காட்டில் வசிக்கும் மனிதர்களை வெளியேற்ற முயல்கிறது அரசு. அது குறித்து எழுதுவதற்குத்தான் நான் வந்திருந்தேன். காட்டுக்குள் செல்வதற்கான அனுமதியோடு வனத்துறை எனக்கு ஒரு ஜீப்பையும் ஓட்டுநரையும் தந்தது.

``ரெண்டு மணி நேரத்துக்குள்ள நாம கிராமத்துக்குப் போயிரணும். இல்லைன்னா, நடுக்காட்டுல மாட்டிக்குவோம்’’ என்றார் சோலையன். ஒல்லியான, வலுவான, கறுத்த தேகத்துடன் தென்பட்ட சோலையன், ஒரு தன்னார்வலர்; தமிழ்நாட்டுக்காரர். மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சத்தியமங்கலம் வனப்பகுதியில் பிறந்தவர். அவரிடம் ஒருவிதமான பேரமைதியும் சோகமும் குடிகொண்டிருப்பதாகத் தோன்றிக்கொண்டே இருந்தது.

அவருடனான சீரானதோர் உரையாடலைத் தொடங்க முற்பட்டேன்.

``ஊரைவிட்டு ரொம்பதூரம் வந்துட்டாலும், பிடிச்ச வேலையைச் செய்றதே இயற்கையின் பரிசுதான்’’ என்ற என்னுடைய புரிதலை, சட்டென நிராகரித்தார் சோலையன்.

``இல்லைங்க... எனக்கு இந்த வேலை கிடைச்சப்போ, அதை ஆகாத துரதிர்ஷ்டம்னு நினைச்சேன்.’’

``ஏன்?’’

``என் மனசு இருக்கிற இடத்துல இருந்து என் உடம்பை இந்த வேலை பிரிச்சு கொண்டுவந்திருச்சு. அந்தத் துண்டிப்பு தாங்க முடியாத வதை.’’

``எங்களைக் காட்டுலருந்து விரட்டுறது, கடல்ல இருந்து மீனைத் தூக்கி வீசுறதுக்குச் சமம்’’ என்று தொலைவில் நிலைகுத்திய பார்வையோடு சொன்னார் சோலையன். சொந்த மண்ணைவிட்டு விரட்டப்பட்ட வேதனை, அவரது குரலில் நிறைந்திருந்தது.

சோலையனுக்கு, அவரது மலைகிராமத்தின் ஞாபகம் வந்திருக்கலாம் என்று நான் நினைத்துக்கொண்டேன்.  புற உலகின் ஒளியோ, ஒலியோ துளியும் படாமல் காட்டுவாசிகளாகவே வாழும் சென்ச்சுக்களுக்காக ஆந்திரா வந்ததன் மூலம் சோலையன் தன் வதைபட்ட மனதுக்கு மருந்திட முயல்வதாகப்பட்டது. 

செம்பழுப்பு நிறத் தோள்பையிலிருந்து டார்ச்லைட்டை எடுத்து பேட்டரியை சோலையன் மாற்றும்போது, அலுவலகச் சம்பிரதாயங்களை முடித்து ஓட்டுநர் ஒருவழியாக வந்து சேர்ந்தார். கிளம்பும்போது மணி பிற்பகல் 3:30.

பெருமழை மாதிரி பொழிந்த கடும் வெயிலில் நல்லமல்லாவின் மரங்கள் வெளுப்பேறித் தெரிந்தன. தொலைவிலிருந்து அடர்த்தியாகத் தெரிந்தாலும் கிட்டத்தில் பார்க்க அவை அவ்வளவு நெருக்கமாக இல்லை. கோடையின் சீற்றம், தகிக்கும் கானலில் வெளிப்பட்டது. சோலையன் பின் இருக்கையில் அமைதியாக அமர்ந்திருந்தார். கற்சாலையின் இருபுறங்களும் புதர்கள் மண்டிக்கிடக்க,  அதனிடையே சில மான்கள் ஓடுவது தெரிந்தது. மனிதக் கண்களுக்குத்தான் மான்கள், புலியின் இரை. ஆனால், மான்கள் தம்மை அப்படிக் கருதிக்கொள்வதில்லை என்பது அவற்றின் சுதந்திரத் துள்ளலில் வெளிப்பட்டது.

ஜீப், நல்லமல்லா வனப்பகுதிக்குள் ஒற்றையடியும் சறுக்கலுமாக இருந்த பாதைக்குள் இறங்கியும் ஏறியும் வளைந்தும் சென்றது. வழியை நிறைத்துக் கிடந்த கற்கள், வாகனத்தின் சக்கரத்தையே இடறச்செய்யும் வல்லமை படைத்திருந்தன.

``இந்தப் பாதையில் பயணங்களே நிகழ்வதில்லையா?’’

``சென்ச்சுப் பழங்குடிகள் வனத்தைவிட்டு வெளியே வருவது அரிதான விஷயம்’’ என்று சோலையன் கூறினார்.

``அவங்க நம்ம பாதையைப் பயன்படுத்துறதில்ல. விலங்குகள் மாதிரியே இந்தக் காட்டின் நீள அகலத்தை அளக்க சென்ச்சுக்கள் அவங்களுக்குனு தனிப்பாதை வெச்சிருக்காங்க. அது நம்ம கண்களுக்குத் தெரியாது.’’

ஆச்சர்யமும் ஆர்வமும் வண்டியில் பூட்டப்பட்ட மாடுகளாக என்னை இழுத்துப்போயின.

``கால்களே சென்ச்சுக்களின் வாகனம்’’ என்று சொல்லி, மெல்லிதாகச் சிரித்தார் சோலையன்.  அவரும்கூட குறுக்கு வழியில் நடந்தோ, இருசக்கர வாகனத்திலோதான் எப்போதாவது மலைக்குள் வருவார். மற்றபடி, மலையைவிட்டு வெளியேற்றப்பட்டு அனாமத்தான சாலைகளில் வீசப்பட்ட சென்ச்சுக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதுதான் அவரது பணி. 

நேரம் வேகமாகக் கடந்து, மலையின் மாலைப் பொழுதை இரவை நோக்கி இழுக்கத் தொடங்கியது.

``இருட்டுவதற்குள் நம்மால் கிராமத்துக்குச் சென்று சேர முடியுமா?’’ என்று ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை கேட்கத் தொடங்கினேன். செல்போன் சிக்னல் எப்போதோ துண்டிக்கப்பட்டிருந்தது.

ஓர் இடத்தில் ஜீப்பை நிறுத்திய டிரைவர், வழியைத் தவறவிட்டுவிட்டதாக சோலையனிடம் தெரிவித்தார். முழுக் காடும் இருளில் மூழ்கியிருக்க, ஜீப்பின் ஹெட்லைட் ஆன் செய்யப்பட்டது. ஜீப்பைவிட்டு நான் இறங்க முற்பட்டபோது, இது புலிக்காடு என்பதை நினைவூட்டி சோலையன் தடுத்தார்.

மூகம்மா காடு - ஜெயராணி``பரவாயில்லை!’’ என்று சொல்லிவிட்டு இறங்கினேன். என்னைப் போன்ற வெளிநபர்களுக்கு வனம் குறித்தும் வனவிலங்குகள் குறித்தும் குறைவான மதிப்பீடே இருப்பதாகக் குறைபட்டுக்கொண்டே சோலையனும் இறங்கினார். ஹெட்லைட் வெளிச்சத்தில், கற்களற்ற பாதை பளிச்செனத் தெரிந்தது. வழி தேடிச் சிறிது தூரம் நடந்து சென்ற ஓட்டுநர், வேகமாகத் திரும்பி வந்தார்.

``வண்டிக்குள்ள ஏறுங்க. தூரத்துல ஏதோ பெரிய விலங்குக் கூட்டம் வருது!’’.

மூகம்மா காடு - ஜெயராணி

அவரது குரலில் தெரிந்த விரட்டல், என்னையும் சோலையனையும் ஜீப்புக்குள் பாய்ந்து ஏறவைத்தது. சட்டென வியர்த்துப்போனேன். மூச்சுக்கூட விடாமல் ஹெட்லைட்டை அணைத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தோம். பூச்சிகளின் ரீங்காரமும், காற்றின் ஓசையும் சலசலக்கும் இலைகளுமாக `காடு’ தனது இரவுப்பாடலை இசைக்கத் தொடங்கியிருந்தது. ஆனால், அந்த மனநிலையில் அது அவ்வளவு இனிமையாக இல்லை. சற்று நேரத்துக்கெல்லாம் பாதையில் பெரிய பெரிய உருவங்கள் நடந்து வருவதைக் கண்டு சோலையன் தயக்கத்தோடு டார்ச்லைட்டை அடித்துப் பார்த்தார்.

``ஓ...இவை வளர்ப்பு எருமைகள். அப்படின்னா, நாம கிராமத்துக்குப் பக்கத்துலதான் இருக்கோம். உடனே கிளம்பலாம்’’ என்று ஓட்டுநரின் தோளைத் தட்டினார். குரலில்  உற்சாகம் தளும்பியது. 

பாதை போன வழியில் அப்படியும் இப்படியுமாகச் சுற்றி வந்ததில், அடுத்த முக்கால் மணி நேரத்தில் ஒரு கிராமத்துக்குள் நுழைந்தோம். அதை `கிராமம்’ என்று சோலையன்தான் சொன்னார். நான் இருளுக்குள் கண்களை உருட்டி, மனிதர்களையும் வீடுகளையும் தேடிக்கொண்டிருந்தேன்.

ஜீப் சத்தம் எங்களது வருகையை அங்கு உள்ளவர்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும். சில மனிதர்கள் எங்களை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. மெலிந்த தேகத்தினர் என்பதைத் தாண்டி, சொல்ல வேறு அடையாளம் இல்லை. எங்கள் முகம் அவர்களுக்கோ, அவர்களின் முகம் எங்களுக்கோ புலப்படவில்லை.

வந்ததும் வராததுமாக வண்டியையும் ஹெட்லைட்டையும் நிறுத்தச் சொன்னார்கள். ஏறக்குறைய அது ஓர் உத்தரவாக இருந்தது. ஹெட்லைட் அணைக்கப்பட்டுவிட்டதால், அங்கு இருந்த இருள் கண்களுக்குப் பழக சில நிமிடம் பிடித்தது. நிலவொளியில் மெள்ள மெள்ள சின்னஞ்சிறு குடிசைகள் புலப்படத் தொடங்கின. சோலையன் டார்ச்லைட்டை எரியச் செய்தபோது அதையும் உடனே அணைக்குமாறு கூறினர். 

``வனவிலங்குகள், ஊர்க் குட்டையில் நீர் அருந்த வரும் நேரம். அவற்றை, உங்கள் வெளிச்சம் தொந்தரவு செய்யும்.’’

சோலையன், அவர்களது மொழியிலும் சைகையிலும் என் வருகை பற்றிப் புரியவைக்க முயன்றார். ஆனால், அவர்கள் எதையும் கேட்கத் தயாராக இல்லை. சரிதான், பகலிலேயே அந்நியர்களை ஏற்கத் தயங்குபவர்கள், இரவில்... அதுவும் இந்தக் கும்மிருட்டில் எப்படி நம்புவார்கள்?

`மின்விளக்கு’ எனும் தானே அஸ்தமிக்காத சூரியனை அந்த ஊர் கண்டதில்லை. இருள் கவிந்துவிட்டால் ஊரே உறங்குகிறது.

``நாளை மாலை நான்கு மணிக்குள் வேலையை முடித்துவிடுங்கள்’’ என்று சொல்லிவிட்டு ஜீப்பைக் கிளப்பினார் டிரைவர். அவரது டியூட்டி எப்போதோ முடிந்திருந்தது.

காலையில் பேசிக்கொள்ள அனுமதி கேட்டுவிட்டு, சோலையன் என்னிடம் திரும்பினார்.

``வெளிச்சத்தோடு  வந்திருந்தா, ஒருவேளை இவங்களுக்கு நம்ம மேல நம்பிக்கை வந்திருக்கும். அதனால தங்குறதுக்கு இடம் தரல. நாம இங்கேயே எங்கேயாவது உட்காரலாம்.’’

நிலவொளியில், வெட்ட வெளியில் இளைப்பாற ஏதுவான ஓர் இடத்தைத் தேடினோம்.

``நல்லவேளை, நாம வனத்துறை ஜீப்பில் வந்தோம். இல்லைன்னா நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்’’ என்று சொல்லிக்கொண்டே அந்த ஊரை ஒரு சுற்று பார்த்தேன். நள்ளிரவுபோல தென்பட்ட முன்னிரவு அது. ஒரு பெட்டிக்கடையோ மெழுகுத்திரி வெளிச்சமோகூட இல்லை. பசிக்கத் தொடங்கியது. பொதுவாக இதுபோன்ற உள்ளடங்கிய கிராமங்களுக்குப் போனால், இந்த வேளைக்கு ஒரு தேநீராவது குடிக்க முடியும். அதற்குக்கூட வழியில்லை.

ஒருவழியாக, அந்த இருள் பிரதேசத்தில் ஓர் இடத்தைக் கண்டுபிடித்து அமர்ந்தோம். நடுவனத்தின் புதிய வாசனையும் பேரமைதியும் பரவிக் கிடந்தன. என் பைக்குள்ளிருந்து பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து சோலையனிடம் கொடுத்தேன். இப்போதைக்கு அதுதான் எங்களின் பசியை ஆற்றும் பெருவிருந்து. 

சென்ச்சுக்கள் பற்றிச் சொல்லுமாறு சோலையனிடம் கேட்டேன்.

``செஞ்சேத்துல மண்ணும் நீரும் எப்படியிருக்கும்! அப்படித்தான் காட்டோட  பழங்குடிகளுக்கு இருக்கும் உறவு. புலிகள் பாதுகாப்புங்கிற பேருல எங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் எல்லாம் உச்சந்தலையில இறங்கிய பேரிடி!’’

இது தனது வாழ்க்கைக் கதையும்தான் என்பதால், சோலையனுக்குத் தொண்டை அடைத்தது.

``ஒவ்வொரு காட்டுலயும் வாழ்ற மலைவாசிங்களுக்கு இது எத்தனையாவது தலைமுறைனு தெரியாது. பூமி பிறந்தப்பவே காடுகளும், காடுகள் உருவானப்பவே நாங்களும் பிறந்துட்டதாவே நம்புறோம்’’ என்று வேர் அரிபட்ட மரத்தின் கூட்டில் வாழும் பறவையின்  பரிதவிப்பில் இருந்தார் சோலையன். 

அவர் தலைகுனிந்து இருந்த அந்த நேரம்… கும்மிருட்டில் முதுகுக்குப் பின்னால் ஏதோ நடந்து வருவதுபோலத் தோன்றவே சட்டென எழப்போனேன். தன்னிலையை சுதாரித்தபடி சோலையன், ``அசைய வேண்டாம்’’ எனத் தடுத்தார்.  அங்கே ஒரு காட்டெருமை நின்றுகொண்டிருந்தது.

அடேங்கப்பா... என்னவொரு கம்பீரம்! எருமையின் கண்கள் இருட்டில் பொன்வண்டைப்போல மின்னின. உறுதியான மரக்கிளையைப்போல அதன் கொம்புகள் வளைந்திருந்தன. முதுகின் அருகே ஒரு வனப் பெருவிலங்கு நின்று புசுபுசுவென மூச்சுவிட, பயமும் குறுகுறுப்பும் உடலை நெளியச் செய்தன. சற்று நேரம் அப்படியே உட்கார்ந்திருந்ததில் அசம்பாவிதம் எதையும் நிகழ்த்தாமல், இருட்டு வழியில் காட்டெருமை திரும்பி நடந்தது.

சென்ச்சுக்கள் பற்றிச் சோலையனிடம் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. ``வேட்டைதான் சென்ச்சுக்களின் வாழ்வாதாரம், பொழுதுபோக்கு, கொண்டாட்டம், துயரம் எல்லாம்’’ என்ற சோலையனின் வார்த்தைகள், என் மனக்கண்ணில் காட்சியாக விரிந்தன. அதில், வில் அம்புடனும், அம்பின் நுனியைவிட கூரிய பார்வைகொண்ட கண்களுடனும் மெலிந்து முறுக்கேறிய தோள்கள்கொண்ட இளைஞர்கள் வனவிலங்குகளைத் துரத்திச் சென்றனர்.

`இங்கேயே படுத்துத் தூங்கலாம்’ என முடிவுசெய்து பையைத் தலைக்கு வைத்து, கொண்டுவந்திருந்த போர்வையைப் போத்தி உடலை வெறும்தரையில் கிடத்தினேன். கோடையின் இதமான குளிர் நிரம்பியிருந்தது. சோலையன் தனக்கு உறக்கம் வரவில்லை என்றார். எருமையின் வருகைக்குப் பிறகு, அவர் என்னுடைய பாதுகாப்பு குறித்து யோசிக்கிறார் எனப் புரிந்தது.

 பயண அசதி, என்னைப் படுத்துக்கொள்ளப் பணித்தது.

வானத்தைப் பார்த்தேன். அங்கே தெரியும் நிலா, முற்றிலும் புதியது. நடுவனத்தில் கால்கள் நீட்டிப் படுத்து, மொழியும் முகமும் தெரியாத தொல்குடி மனிதர்கள் சூழ இந்த வனநிலவைப் பார்ப்பது, ஆதிகால உணர்வைக் கொடுத்தது. நிலவு, என்மீது அளவில்லாத ஒளியைப் பொழிவதாகத் தோன்றியது.

தலையைத் தூக்கிச் சுற்றிலும் பார்த்தபோது, குடில்களின் அமைவிடங்கள் இப்போது நன்றாகத் தெரிந்தன. இப்படி இரண்டு அந்நியர்கள் வந்து இருட்டில் அமர்ந்திருக்கிறார்களே என்ற கவலையின்றி, அந்த ஒருசில மனிதர்களும் தத்தம் குடில்களுக்குள் அடங்கிவிட்டனர். அவர்கள் உண்மையாகவே உறங்கியிருக்கலாம் அல்லது தேடுதல் கூர்மைகொண்ட அவர்களது வேட்டைக்கண்கள் எங்களின் அசைவை கவனித்துக்கொண்டும் இருக்கலாம் என்பது அந்த இரவின் எனது இறுதிச்  சிந்தனை.

சூரியன் வருவதற்கு முன்பான சாம்பல் காலை. மொத்தமே 20 - 25 குடில்கள் இருக்கும். எல்லாமே மிகச் சிறியவை. மணலும் காய்ந்த புற்களுமாக இருந்தது பூமி. இரவின் பனியில் அவை ஈரமேறி காணப்பட்டன. உடலில் உடையைத் தவிர, ஆடம்பரமான வேறு விஷயம் எதையும் பார்க்க முடியவில்லை. இரவைப்போலவே அந்த ஊரின் பகலிலும் பேரமைதி. தொல்குடி முகங்களைப் பார்க்கும் ஆவலுடன் நான் எழுந்து அமர்ந்தேன். சோலையன், அந்தக் குடியிருப்பின் மையப் பகுதியில் நின்று சில ஆண்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்தக் குடிலில் யாரைப் பார்த்தாலும் அவர்களின் கண்கள் என்னைப் பார்ப்பதும் விலகுவதுமாக இருந்தன.

``காலைக்கடன்களை முடித்து நாம் வேலையைத் தொடங்கலாம்’’ என்றார் சோலையன். முதல் கேள்வியை எடுத்துவைப்பதற்கான ஆளைத் துழாவிக்கொண்டிருந்தன என் கண்கள்.  நாங்கள் அப்படியே நடந்து குடில்கள் இருந்த பகுதிக்குச் சென்றோம். கால்கள் நின்ற முதல் குடிலின் வாசலில் ஒரு பெண் அமர்ந்து அவர் முன்னால் கிடந்த ஒன்றிரண்டு பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்தார். சோலையன் அவரை ``அம்மா...’’ என்று அழைத்தவுடன் அவரது தலை வேகமாக எங்கள் பக்கம் திரும்பியது.

அவர்தான் மூகம்மா. சென்ச்சுக்களில் நான் பார்த்த முதல் பெண் முகம். கலைநயமிக்க, விலைமதிப்பற்ற பழம்பொருள் ஒன்றைப் பார்க்கும் உணர்வை, அந்த முகம் அளித்தது. பார்வையில் வெப்பம் இருந்தது. சிவப்பு நிறப் புடவையை முதுமைக்கேற்ற தளர்வோடு அலட்சியமாக அணிந்திருந்தார்.

மூகம்மா காடு - ஜெயராணி

முகச்சுருக்கங்களும் வெண்தலையும் அவரது வயதைச் சொல்லின. அந்தக் கண்கள்... அதன் ஒளி... நூற்றாண்டுகால மடையைத் திறந்து எதிரில் இருப்போர் மீது பாயும் வேகமுடையதாக இருந்தன. அந்த வனக்கிழவி வாய் திறந்தாள். 

``யாரு நீங்க?’’

சோலையன் என்னை அறிமுகப்படுத்திய அந்தக் கணம், அவர் என்னோடு ஒட்டிக்கொண்டார். எனக்குப் புரிகிறதா இல்லையா என்பதைப் பற்றி அவர் கவலைப்படவே இல்லை. என் கேள்விகளை மொழிபெயர்த்துச் சொல்லும் சோலையனைப் பார்க்காமல், மொழி தெரியாத என் கண்களைப் பார்த்து மிகச் சரளமாகப் பேசினார். ஆலம்விழுதைப்போல அவர் உடலில் தொங்கிய கைகளால் மலையைச் சுட்டிக்காட்டி ஏதேதோ விவரித்தார். தான் பேசுவது எனக்குப் புரியும் என  அவர் எப்படி நம்பிக்கைகொண்டார் என நான் வியப்புற்றேன். தொடக்கத்தில், புரியாத வார்த்தைகளுக்குத் தலையசைக்க முடியாமல் தடுமாறினேன். ஆனால், கொஞ்ச நேரத்தில் அவரது உடல் அசைகளும் உணர்வுகளும் புரியத் தொடங்கின.

அவர் பரிதவிப்பில் இருக்கிறார். `இந்த வனத்திலிருந்து தான் விரட்டப்படுவோம்!’ என்ற அச்சத்தில் அந்த முதியவள் துடித்திருக்கிறாள். மலை உச்சியிலிருந்து தூக்கி எங்கோ தூரத்தில் வீசப்படுவதாக அவளுக்குக் கொடுங்கனவுகள் வருகின்றனவாம்! அதற்குக் காரணம் இருந்தது. ஓரிரு மாதங்களுக்கு முன்னர்தான் இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறொரு குடியிருப்பு அப்புறப்படுத்தப்பட்டது.

நானும் சோலையனும் குடில் வாயிலில் சப்பணமிட்டு அமர்ந்து மூகம்மாவைப் பார்த்திருந்தோம். பேசிக்கொண்டே... அன்றைய பொழுதின் முதல் உணவை, சூடான ஒரு பானத்தின் மூலம் கொடுத்து அருளினார் மூகம்மா. காபி மாதிரியான சுடுபானம். அந்த ஒரு டம்ளர் பானத்தில், ஒடுக்கப்பட்ட ஒரு தொல்குடியின் எளிமையும் வரவேற்பும் நிறைந்திருந்தன.

``இது என்னோட காடு!’’ - அந்தக் குடியிருப்புக்கு அருகே ஓடும் சிற்றோடையில் குளிக்கப் போகும் வழியில் மாரில் தட்டி நெஞ்சை நிமிர்த்தி மூகம்மா சொன்ன முதல் வார்த்தைகள் இவைதான். அந்த இடத்தைக் கடந்து சென்ற இளைஞர்கள், கேலி செய்தபடி நகர்ந்தனர். நாங்கள் சரியான ஆளிடம்தான் சிக்கி இருக்கிறோம் என நகைத்தனர். மூகம்மா, அதைப் பொருட்படுத்தாமல் ``இதோ இந்தப் பையன்களோட காடு’’ என்றார். அவரது பேச்சில் பதில் கிண்டல் இல்லை. மாறாக, அசராத உண்மை இறுக்கமாக வெளிப்பட்டது.

``எத்தனை நூறு வருஷங்களா நாங்க இங்கே இருக்கோம் தெரியுமா? இந்தக் காடு எங்களுக்கு உணவை அள்ளிக் குடுக்குது. பசியெடுத்தா காட்டுக்குள்ள போய் தேனும் கிழங்கும் பழங்களும் பறிச்சுக்கும் வரம் யாருக்காவது கிடைச்சிருக்கா? சென்ச்சுக்களுக்கு இருந்துச்சு’’ என்ற மூகம்மாமீது சூரியன் படாத ஓடை நீர் குளிர்ந்திருந்தது; முழங்கால் அளவு தண்ணீரில் நின்றிருந்தார்.

``இந்தக் காட்டைப் பற்றிச் சொல்லுங்க?’’

``நான் சின்னப்புள்ளையா இருந்தப்போ, எங்க அப்பா-அம்மாவோடு இந்தக் காடு முழுக்கச் சுத்தி வந்திருக்கேன். எங்க அம்மா மடி நிறைய புளியம்பழங்களையும், விதவிதமான வேர்களையும், இலுப்பைப் பூக்களையும் அள்ளிட்டு வரும். அப்பாவோடு வேட்டைக்குப் போற ஆம்பளைங்களோட அம்புக்கு மான், முயல், பன்னியெல்லாம் ஒரே அடியில விழுந்திரும். என் புருஷனுக்கு, சுட்ட பன்னிக்கறின்னா உசிரு. அவரு பன்னியை வேட்டையாட அலையா அலைவார். அம்பு குத்தி ரத்தம் சொட்ட காட்டுப்பன்னியைத் தூக்கிட்டு வர்றத பார்க்கிறப்போ, வனதேவனைப் பார்க்கிற மாதிரி இருக்கும். சூரியன் சாயுறப்போ நெருப்பு மூட்டித் துண்டங்களைச் சுட்டா... இந்தக் காடே மணக்கும். காட்டுப்பன்னிக்கே வயிறு பசிக்கும்’’ என்ற மூகம்மா, களுக்கெனச் சிரித்தார்.அவரது  விவரணையில் ரசனை வழிந்தது. காட்டுப்பன்றியின் இறைச்சியைச் சுட்டுக்கொண்டிருக்கும் மணம் அங்கே பரவியது. குளியலை முடித்துக் கரையேறி, மீண்டும் குடிலுக்கு நடந்தோம்.

 ``இந்தக் காட்டுல நீங்க என்ன வேலை செய்வீங்க?”

``வேலையா? `வனத்துக்கு வெளியில வாழ்றவங்க, உணவுக்காக வேலை செய்றாங்க’னு எங்க அப்பா ஆச்சர்யத்தோடு சொல்வார். எங்களுக்குப் பசியெடுத்தா, நாங்க காட்டுக்குள்ள ஓடுவோம். கிடைச்சதைத் தின்போம். விரும்பினது கிடைச்சா ரொம்ப சந்தோஷமாத் தின்போம். வேட்டையாடுறது, தேன் எடுக்கிறது இதெல்லாம் எங்க வாழ்க்கை; வேலை இல்லை.’’

மூகம்மாவின் பேச்சும் அதிலிருந்த தெளிவும் உணர்வும் வியப்பூட்டின. இந்தக் கிழவி, சோலையனுக்குப் புதுத் தெம்பை அளித்திருந்தாள். அவரின் உணர்வுகளுக்கு அவள் உயிர் கொடுப்பதால் பெற்ற உற்சாகம் அது.    
சென்ச்சுக்கள் உணவு சேகரிக்கும் பழங்குடிகள் என்பதை, தன் வார்த்தைகளால் உறுதிசெய்தார் மூகம்மா. அப்போதெல்லாம் காலையில் கிழங்கை அவித்துத் தின்றுவிட்டுக் கிளம்பினால், மாலையில் வீடு திரும்பி வேட்டையில் சிக்கியதைச் சுட்டோ, பச்சைமிளகாயும் உப்பும் சேர்த்து வேகவைத்தோ உண்டுவிட்டு உறங்கப் போகின்றனர். என்ன ஓர் அற்புதமான வாழ்க்கை!

`பணம் இல்லை, கடனில்லை, இன்ஷூரன்ஸ், மருத்துவச் செலவில்லை. என்னே ஒரு சுதந்திரம்!’ - என் நகர மூளை சஞ்சலப்பட்டது.

ஓடையிலிருந்து நேராக மூகம்மா என்னை வேறொரு குடிலுக்கு அழைத்துச் சென்றார். அங்கே பருவ வயதைச் சற்றே கடந்திருந்த சின்னஞ்சிறு இளைஞனும் அவன் மனைவியும் இருந்தனர். அவர்களுக்கு மணமாகி, சில மாதங்களே கடந்திருந்தன. காட்டுப்புற்களை வேய்ந்து தமக்கான குடிலை அந்தத் தம்பதி புதிதாகக் கட்டி முடித்திருந்தனர். இங்கே அதுதான் வழக்கம்.

மூகம்மா அந்த இளைஞனிடம், உள்ளே சென்று எதையோ எடுத்து வரச் சொன்னார். அவன் திரும்பி வரும்போது கைகளில் பளபளக்கும் வில்லையும் அம்பையும் கொண்டுவந்தான்.

மூகம்மாவின் கட்டளைக்கு இணங்கி அந்தப் பையன் என் கண்ணெதிரே ஒரு வில்லை செய்து, குறி பார்த்து அம்பெய்தியும் காட்டினான். அது பாய்ந்து போய், தூரத்தில் இருந்த மரத்தின் கிளையில் குத்தி நின்றது. மூகம்மாவுக்கு அதைப் பார்க்கும்போது முகமெல்லாம் மலர்ச்சி.

``நாங்க கரடி, மான் எல்லாத்தையும் வேட்டையாடினோம். இப்ப இதுங்க பல்லியையும் சில பறவைகளையும் வேட்டையாடுதுங்க. எங்க வில்-அம்புக்கு வேலை இல்லாமப்போச்சு!’’

சூரியன் பளீரென ஒளி வீசி முற்பகலென அறிவித்தது. எனக்குப் பசியெடுத்தது. சோலையனும் அதை உணர்ந்திருந்தார்.

``ஒரு பெட்டிக்கடைகூட இல்லாத ஊரில் உணவுக்கு எங்கே போவது? சாப்பிட ஏதாவது கிடைக்குமா..?’’ என சோலையன், மூகம்மாவிடம் கேட்டார். சுடச்சுட சோளக்கஞ்சியும் பச்சைமிளகாய்த் துவையலும் வனக்கிழவியின் விருந்தாகக் கிடைத்தன. 

அந்தக் குடிலின் ஓர் ஓரத்தில் செந்நிற கூம்புப் பூக்கள் பரப்பி வைக்கப்பட்டிருந்தன.  சோலையன் அதை இலுப்பைப் பூ எனக் குறிப்பிட்டார். சென்ச்சுக்களுடைய வாழ்வின் ஓர் அங்கம் இந்தப் பூக்கள்.

மூகம்மா காடு - ஜெயராணி

இவற்றைக்கொண்டுதான் மதி மயங்கச் செய்யும் மதுவைக் காய்ச்சுகின்றனர். விருந்து சமைப்பதற்கு இணையான கொண்டாட்டம் அது. திருவிழா, கல்யாணம் எதுவும் மது இல்லாமல் மகிழ்வைத் தருவதில்லை. பார்க்க அழகாக இருந்த அந்தப் பூவை எடுத்து முகர்ந்தேன். ஏகாந்தமான மணம் மூளையைத் தாக்கியது.

``நீ ரெண்டு நாள் தங்கினா, இலுப்பை மலர் மதுவைக் காய்ச்சித் தர்றேன். நீ குடிப்பியா?’’

``நிச்சயமா. ஆனா, நான் இன்னிக்கே கிளம்பணுமே!’’

மூகம்மா காடு - ஜெயராணி

``சரி போ. உனக்குத்தான் கொடுப்பினை இல்லை’’ என மூகம்மா சிலிர்த்துக்கொண்டதைப் பார்க்க, எனக்கு சிரிப்பு வந்தது. மது காய்ச்சுதல், மூகம்மாவுக்குக் கைவந்த கலை. களிப்பூட்டும் அந்த அருமருந்துக்குத் தான் அடிமை எனச் சொல்வதில், அந்தக் கிழவி பெருமிதம்கொண்டாள். 

``நான் சாகுறப்போ என்னை இந்தக் காட்டுல புதைப்பாங்கள்ல… அப்ப என் சமாதி முழுக்க இந்த இலுப்பை மலரைத் தூவி இருக்கணும்’’ மூகம்மாவின் குரல் தழுதழுத்தது.

கொஞ்சம் இலுப்பை மலர்களை எடுத்துப் பையில் போட்டுக்கொண்டு, குடிலைவிட்டு வெளியேறினேன்.

மூகம்மாவின் பழங்கதைகளையும் பழைய மகிழ்ச்சிகளையும் முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.

``வனத்துறை, உங்களை இந்த இடத்தைவிட்டு போகச் சொல்லுதே?’’

``ஆமாம். இந்த இடம் புலிக்காடாக அறிவிக்கப்பட்ட பிறகு சென்ச்சுக்களின் வாழ்க்கையே மாறிப்போனது. சிறு சிறு குழுக்களாக இந்த வனம் முழுக்க மரங்களோடு மரமாக, விலங்குகளோடு விலங்குகளாக வேரூன்றி இருந்தவர்களில் பாதிப் பேர் அப்புறப்படுத்தப்பட்டனர். மீதிப் பேர் காட்டுக்குள்ளேயே சிறைவைக்கப்பட்டுள்ளனர். வளம் நிறைந்த இந்தப் பூமியில், வறுமை என்பது இயற்கையானதல்ல. அது மனிதர்களால் உருவாக்கப்படும் சதி. கைக்கெட்டும் தூரத்தில் காடே இருந்தும் சென்ச்சுக்கள் வறுமையின் படுகுழியில் தள்ளப்பட்டனர்.  அரசாங்கம் எங்க காட்டை அபகரித்துக்கொண்டது. இது எங்க காடு இல்லையாம்!  நாங்க இங்கே இருக்கிற புலிகளைக் கொன்னுடுவோமாம். இங்கே வாழும் புலிகளுக்கு எங்களைத் தெரியும். நாங்க காலம்காலமா அதுங்களோடு வாழ்றோம். அது இந்தக் காட்டுக்குத் தெரியும் மகளே!’’

மூகம்மா, முதல்முறையாக என்னை `மகளே’ என்றழைத்தார்.

என் கேள்வி, அவரை உணர்வுச் சஞ்சலத்தில் தள்ளியிருந்தது. அவர்  பரிதவிப்பில் அங்குமிங்கும் நடந்தார். சோலையனிடம் வெளிப்பட்ட அதே பரிதவிப்பு. இப்போது சென்ச்சுக்கள் காட்டிலிருந்து எதை எடுத்தாலும் அதற்குக் கணக்குச் சொல்லும் கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். வனத்தின் குடிமக்களாக வாழ்ந்தவர்கள், இப்போது வனத்துறையின் கூலித் தொழிலாளர்கள்! வேர்கள், கிழங்குகள், பூக்கள், தேன், பசை என எதை எடுத்தாலும் அதைக் கூட்டுறவு வங்கியில் சேர்த்துவிட வேண்டும். கூலி கிடைக்கும். அந்தப் பணத்தை வைத்துத் தங்களுக்குப் பழக்கப்படாத பொருள்களை அவர்கள் வெளிக்கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.

மூகம்மா வயதுடைய ஆண்கள் கோவணத்துணியை மட்டுமே உடுத்திக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். இளைஞர்கள், விலை மலிவான ஜீன்ஸ் டீஷர்ட் அணிந்திருந்தனர். ``கூலிப்பணத்தைக்கொண்டு வெளிக்கடைகளில் அவர்கள் இந்த உடையை வாங்கி அணிகின்றனர். பாருங்கள் இந்தப் பையன்களை, புளியமரத்துக்குத் துணி தைத்துப் போட்டதைப்போல’’ என்று மூகம்மா வெறுப்பாகச் சொன்னார். அவருக்கு இந்த ஆடை கலாசாரமே பிடிக்கவில்லை.

என் கேள்வியிலிருந்து தன்னை வலுக்கட்டாயமாக அவர் நகர்த்திப்போவது தெரிந்தது.

``உங்களால இந்தக் காட்டைவிட்டு வெளியில போய் வாழ முடியுமா?’’ - மூர்க்கமாகவே மூகம்மாவை என் கேள்விக்குள் இழுத்து வந்தேன்.

``வெளில போயிரலாம். ஆனா, வாழ முடியாது மகளே!’’ சொல்லிவிட்டு சில நிமிடம் அமைதியாக இருந்தார்.

``எங்களுக்குக் காலம்தான் கடவுள்; காலம்தான் சாத்தான். இயற்கையோடு வாழுற மனிதர்கள் கடவுளையும் ஏத்துக்கணும், சாத்தானையும் ஏத்துக்கணும். நீங்கள்லாம் வெயில்ல இருந்தும் மழையில இருந்தும் தப்பிப் பிழைக்கிற தவறான வித்தையைக் கத்துக்கிட்டீங்க. கொடும் வெயில்ல புலிகளை மாதிரி, மான்களை மாதிரி தண்ணி இல்லாமச் செத்திருக்கோம். மழைக்காலத்துல காட்டாத்து வெள்ளம் எங்களை இழுத்துப்போயிருக்கு. எங்களுக்கு ரெண்டுமே வாழ்க்கை, ரெண்டுமே இயற்கை. நாங்க இதோடு வாழவும் போராடிச் சாகவும் பழக்கப்பட்டவங்க. இங்கே இருந்து நான் வெளியேற மாட்டேன். இந்தத் தலைமுறைக்குக் காடு இல்லாம வாழ்ந்துர முடியும். ஆனா, என்னால முடியாது. என்னோட வாழ்க்கையில இருந்து நீங்க காட்டை அழிச்சுரலாம்.  ஆனா, என் மனசுல இருந்து அழிக்க முடியாது. இந்தக் கிராமத்தை இந்த மலையில இருந்து அப்புறப்படுத்துறது க்குள்ள என் உசிரு போயிரணும். நான் வாழ்ந்த இந்தக் காட்டுக்குள்ளதான் என்னைப் புதைக்கணும்.’’ மூகம்மாவின் வார்த்தைகளை மொழிபெயர்த்துச் சொன்ன சோலையன், அமைதியாக என்னைவிட்டு விலகி நடந்தார். 

தோல் சுருங்கிய அந்த வனக்கிழவியின் கண்களிலிருந்து விழுந்த நீருக்கு, காட்டருவியின் சாயல் இருந்தது. துக்கத்தில் புடைத்த அவரது கழுத்து நரம்புகளை, காட்டுமரத்தின் வேர்கள் என உணர்ந்தேன். அந்தப் பெண் ஒரு முதிய மரமெனத் தன் நிலத்தில் காலூன்றி நின்றாள். இந்தக் காடு, மூகம்மாவுக்குச் சொந்தமானது; மூகம்மாவைப் போன்ற தொல்குடி மனிதர்களுக்குச் சொந்தமானது. ஒரு சதுரஅடிகூட பட்டா போட்டுக்கொள்ளப் படவில்லை என்றாலும், இது மூகம்மாவின் காடு. தன் மூதாதையரிடமிருந்து பெற்று, இனி வாழப்போகிறவர்களுக்கு பத்திரமாக விட்டுத் தர விரும்புகிறார். இது இயற்கையுடன் அவர் போட்டுக்கொண்ட ஒப்பந்தம். அது நீரால், மண்ணால், காற்றால் இந்தப் பிரபஞ்சத்தில் எழுதப்பட்டது; காகிதங்களில் அல்ல.

``வெளில போயிரலாம். ஆனா, வாழ முடியாது மகளே!’’

மலையைவிட்டு வெளியேறும்போது மூகம்மாவின் குரல் வனத்துக்குள்ளிருந்து எதிரொலியாகக் காதில் ஒலிக்க, பைக்குள் கிடந்த இலுப்பைப் பூவை எடுத்தேன். வனத்தையே தூக்குவதுபோல அத்தனை கனமாக இருந்தது அந்த ஒற்றைப் பூ.