Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

‘பஸ் கட்டண உயர்வு இன்று ஒரு பிரச்னையே அல்ல, இன்று பிச்சைக்காரர்களுக்கே 5 ரூபாய் போட வேண்டி உள்ளது’ என்று சொல்கிறாரே அமைச்சர் செல்லூர் ராஜு?


தினமும் எத்தனை பிச்சைக்காரர்களுக்கு இவர் 5 ரூபாய் போடுகிறார் என்பதை அவர்களின் முகவரியுடன் சொன்னால் வசதியாக இருக்கும்!

கழுகார் பதில்கள்!

எம்.பழனிவேலு, சங்கரன்கோவில்.

மேகாலயாவுக்கு ராகுல் காந்தி அணிந்துசென்ற மேலாடை பற்றி சர்ச்சை எழுந்துள்ளதே?


ஓர் இசை நிகழ்ச்சிக்கு ராகுல் அணிந்து சென்ற கறுப்பு கோட்டின் விலை 63 ஆயிரம் ரூபாய் என பி.ஜே.பி குற்றம் சாட்டியது. அது என்ன பிராண்ட், அதன் விலை என எல்லாவற்றையும் படங்களாக பி.ஜே.பி வெளியிட்டது. ஆனால், காங்கிரஸ் சீனியர் தலைவர் ரேணுகா சௌத்ரி, ‘‘அந்த மேலாடையின் விலை 700 ரூபாய்தான்’’ என்றார். டெல்லி பி.ஜே.பி பிரமுகர் தேஜிந்தர் பாக்கா 700 ரூபாயை ரேணுகாவுக்கு அனுப்பி, தனக்கு அதேபோல ஒரு மேலாடை வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவை வரவேற்றபோது பிரதமர் மோடி அணிந்திருந்த சூட் பற்றி காங்கிரஸ் சர்ச்சை கிளப்பியது. அதை ஏலம் விட்டபோது சூரத் தொழிலதிபர் ஒருவர் 4 கோடியே 30 லட்ச ரூபாய்க்கு வாங்கினார். அதேபோல ராகுலின் மேலாடையையும் ஏலம் விட்டால், அதன் மதிப்புத் தெரிந்துவிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கழுகார் பதில்கள்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘‘தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது’’ என்கிறாரே ஜி.கே.வாசன்?


‘‘எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது’’ என்றுதானே சொல்கிறார். ‘நாங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது’ என்று சொல்லவில்லை அல்லவா? அதற்காக ஜி.கே.வாசனைப் பாராட்ட வேண்டும்.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

‘‘அ.தி.மு.க-வின் 90 சதவிகிதத் தொண்டர்கள் எங்களிடம்தான் உள்ளனர்’’ என்று சொல்லியிருக்கிறாரே தினகரன்?


அது உண்மையா என்பது அவர் தொடங்கியுள்ள சுற்றுப்பயணத்தில் தெரிந்துபோகும். ‘மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம்’ என்று அதற்குப் பெயர் சூட்டியிருக்கிறார் தினகரன். அப்படி இருக்கப் போகிறதா என்று பார்ப்போம்!

கழுகார் பதில்கள்!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

தீபா, மாதவன், ராஜா ஆகிய மூவருக்கும் என்னதான் பிரச்னை?


பணம்தான்!

மீஞ்சூர் கோதை ஜெயராமன், சென்னை-106.

‘2ஜி விவகாரத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மவுனமே காங்கிரஸ் ஆட்சிக்குத் தோல்வியைத் தேடித் தந்தது’ என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளாரே?


ஆ.ராசாவின் குற்றச்சாட்டுகள் அதிரத்தான் வைக்கின்றன. ‘பிரதமர் மன்மோகன் சிங்கிடம் 2ஜி அலைக்கற்றைகளைப் புதிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பான முழு செயல்முறையையும் விளக்கினேன். அதைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு அவரது ஒப்புதல் பெற்றேன். ஆனால், பிரதமருக்கு அவரின் ஆலோசகர்கள் தொடர்ந்து தவறான தகவல்களை அளித்து வந்தனர். பிரதமர் அலுவலகத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அதிகாரம் மிகுந்த நபர்களுக்குச் செல்வாக்கு இருந்தது. எனது முழுமையான, நியாயமான நடவடிக்கைகளைக் காப்பதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், பிரதமர் மன்மோகன் சிங்கும் காட்டிய உணர்ச்சிமிகுந்த மௌனம், நமது நாட்டின் கூட்டு மனசாட்சியை மௌனம் ஆக்குவதுபோல அமைந்தது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் புகார்கள் தொடர்பாகத் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்திலும், சில தொலைத்தொடர்பு நிறுவன அலுவலகங்களிலும் சி.பி.ஐ சோதனைகள் நடந்த பின்னர் 2009-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 22-ம் தேதி மாலை சுமார் 7 மணியளவில் பிரதமரை அவரது சவுத் பிளாக் அலுவலகத்தில் சந்தித்தேன். பிரதமர் அலுவலகத்தில் அப்போது முதன்மைச் செயலாளராக இருந்த டி.கே.ஏ.நாயர் உடன் இருந்தார். சி.பி.ஐ நடத்திய சோதனைகளைப் பற்றி நான் கூறியபோது பிரதமர் அதிர்ச்சி அடைந்தார் என்பதை மக்கள் நம்ப மாட்டார்கள்.

இரண்டாவது முறையாக அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அரசை வீழ்த்தவேண்டும் என்ற அரசியல் நோக்கத்தோடு, தலைமை கணக்குத் தணிக்கையரான வினோத் ராயின் தோளில் அதற்கான துப்பாக்கி வைக்கப்பட்டது என்பது எனது நம்பிக்கை’ என்று ஆ.ராசா தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோர் இப்போதும் அனுசரித்து வரும் மௌனம் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.


‘என் ஆயுளுக்குள் இந்தியாவைப் பெருமை அடையச் செய்வேன்’ என்கிறாரே கமல்?

ஓ! அவர் குறி வைப்பது பிரதமர் பதவியையா? அதுவே இப்போதுதான் புரிகிறது!

கழுகார் பதில்கள்!

தாமஸ் மனோகரன், புதுச்சேரி.

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் சந்தோஷமாக இருக்கிறார்களா?


முதலில், இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. அதன்பிறகுதான் ‘சந்தோஷமாக இருக்கிறார்களா, சங்கடமாக இருக்கிறார்களா’ என்று பார்க்க வேண்டும்.

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

தவறு செய்யும் அனைவருக்குமே தண்டனை கிடைத்துவிடுகிறதா?


தவறு செய்யும் அனைவருக்குமே தண்டனை கிடைத்துவிட்டால் இவ்வளவு தவறுகள் நடக்காதே! தண்டனை கிடைக்காததால்தானே குற்றங்கள் பெருகுகின்றன.

காஞ்சி எஸ்.ஃபைசுதீன், காஞ்சிபுரம்.

அ.தி.மு.க-விலிருந்து தினமும் நீக்கப்படும் தினகரன் ஆதரவாளர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், கொஞ்ச நாளில் அந்தக் கட்சியில் யாருமே இல்லாத நிலை ஆகிவிடும் போலிருக்கிறதே?


தினகரனுக்கு ஆதரவு இல்லை என்று சொல்லிவிட்டுத் தினமும் இப்படியா கொத்துக் கொத்தாக நீக்குவது? எடப்பாடிக்கு யார் அட்வைஸர் என்று தெரியவில்லை. யாரோ ஒரு ‘ஸ்லீப்பர் செல்’தான் அட்வைஸராக இருப்பாரோ?

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

திராவிட அரசியலுக்கு முடிவுகட்டும் பலம் கொண்டது ரஜினியின் ஆன்மிக அரசியலா, கமலின் நாத்திக அரசியலா?


தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் நடத்துவது திராவிட அரசியலே அல்ல. இவர்களால் ஆன்மிக அரசியலையோ, நாத்திக அரசியலையோ நடத்தவும் முடியாது.

படம்: வி.பால் கிரகோரி

சாரு நிவேதிதா, எழுத்தாளர்

கழுகார் பதில்கள்!

இந்திய அளவில் தமிழ்நாட்டு அரசியல் மட்டும் விநோதமாக இருக்கிறதே... இதற்கு என்ன காரணம்? யார் காரணம்?

பொதுவாக, இந்திய அரசியலே விநோதமானதுதான். ஊழல், அராஜகம், வன்முறை, பணம், அதிகாரம், சாதி ஆகிய அரசியல் கூறுகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானவைதான். மாநிலத்துக்கு மாநிலம் இதன் அளவு மாறுபடலாமே தவிர, இவை இல்லாத மாநிலம் என்று எதுவும் இல்லை. கர்நாடகா போன்ற மாநிலங்களில் வன்முறை குறைவாக இருக்கும்; ஆனால், ஊழல் அதிகமாக இருக்கும். மேற்கு வங்காளத்தில் வன்முறை அதிகமாக இருக்கும்; ஊழல் கொஞ்சம் குறைவாக இருக்கும். இவை, இந்திய அரசியலின் பொதுக்குணங்கள்.

இதில், தமிழக அரசியல் இன்னும் விநோதமாக இருப்பதற்குக் காரணம், சினிமா மயம் ஆனதும், தேர்தலே பணநாயகம் ஆனதும்தான். ஹீரோக்கள் ஹீரோக்களாக மட்டுமே பார்க்கப்படுகிறார்கள். மகாராஷ்ட்ராவில் நம்மைவிட சினிமா மோகம் அதிகம் என்றாலும், அங்கு சினிமா அரசியல் இல்லை. ஆனால், இங்கு அரசியலும் சினிமாவும் பின்னிப் பிணைந்துள்ளன. அதுபோல், வாக்களிக்கப் பணம் கொடுப்பதை அரசியல் கட்சிகள் பழக்கியதும், அதை மக்கள் எதிர்பார்ப்பதுமான சூழ்நிலை மற்ற மாநிலங்களில் இன்னமும் உருவாகவில்லை. இதற்கு, தமிழகத்தை ஆண்ட கட்சிகளும், அவர்களுக்கு வாக்களித்த மக்களும்தான் காரணம்.

 கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற  இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism