Published:Updated:

“பன்றிக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!”

“பன்றிக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“பன்றிக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!”

ஒரு கிராமத்தின் விசித்திரப் பிரச்னை

“பன்றிக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!”

ஒரு கிராமத்தின் விசித்திரப் பிரச்னை

Published:Updated:
“பன்றிக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
“பன்றிக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!”

‘‘ஊர் பேரைக் காப்பாத்தணும்டா...’’ கிராமங்களில் இப்படிச் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், ‘‘நாங்க எங்கே போனாலும், இந்த ஊர் எங்க மானத்தை வாங்குது. எப்படியாவது எங்க ஊர்ப் பெயரை மாத்தணும்’’ என்று ஒரு கிராமமே சேர்ந்து சொல்வதையும், அதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடுவதையும் எங்கேனும் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

கோயம்புத்தூரிலிருந்து 12 கி.மீ தூரத்தில் இருக்கிறது பன்னிமடை. ஊருக்குள் நுழைந்ததுமே, அவர்களுடைய பிரச்னையின் தீவிரம் புரிந்தது. அரசு அலுவலகங்களில் ‘பன்னிமடை’ என்றும், தனியார் வணிக வளாகங்களில் ‘பன்னீர் மடை’ என்று மாற்றியும் ஊரின் பெயர் எழுதப்பட்டிருந்தது. ‘பன்னி மடை’ என்ற பெயரால் இந்த ஊர் மக்கள் சந்தித்துவரும் அவமானங்க ளும், அந்தப் பெயரை மாற்றுவதற்கு இவர்கள் செய்யும் முயற்சிகளும், கேட்பவர்களுக்கு வேண்டுமானால் காமெடியாகத் தெரியலாம். அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் அதன் துயரம்.

“பன்றிக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!”

தங்கள் ஊரின் பெயரை மாற்றுவதற்குப் பல ஆண்டுகளாகப் போராடி வரும் செல்வராஜிடம் பேசினோம். ‘‘எனக்கு இப்போ 50 வயசு. நான் ஸ்கூல் படிக்கிற காலத்துலயே இந்தப் பிரச்னை ஆரம்பிச்சிருச்சு. அப்போ பக்கத்து ஊரான கணுவாய்ல பள்ளிக்கூடம் கிடையாது. அந்த ஊர்ப் பசங்களெல்லாம் இங்கதான் படிக்க வருவாங்க. ரெண்டு ஊரு பசங்களுக்குள்ள சின்னதா சண்டை வந்தால்கூட, ‘டேய் பன்னி... பன்னி ஊருக்காரய்ங்களா’ன்னு சொல்லி எங்களைக் கிண்டல் பண்ணுவாங்க. எங்க ஊர் பசங்களை ‘பன்னி’னு சொல்லிச் சொல்லியே நோகடிச்சிருவாங்க. இதனால எங்க ஊர்க்காரப் பசங்களுக்கு ரோஷம் பொத்துக்கும். பேர்ப் பிரச்னையால ரெண்டு ஊர்ப் பசங்களுக்கும் அடிக்கடி சண்டை நடக்க ஆரம்பிச்சி ருச்சி.

ஒருமுறை பெரிய கைகலப்பு ஏற்பட்டு, எங்க ஊர்ப் பசங்களுக்குப் பயங்கரமான அடி விழுந்திருச்சு. அழுதுக்கிட்டே வந்து ஊர்ப் பெரியவங்ககிட்ட விஷயத்தைச் சொன்னோம். அப்போதான் எங்க ஊர்ப் பெயர் ‘பன்னிமடை’ இல்லை, ‘பன்னீர்மடை’ என்கிற உண்மை எங்களுக்குத் தெரிஞ்சது. அருகிலிருக்கும் பொன்னூத்து ஓடையிலிருந்து எங்க ஊருக்கு வரும் தண்ணீர் அப்போ பன்னீர் மாதிரி இருக்குமாம். அதனாலதான், ‘பன்னீர் மடை’ங்கிற பேர் வந்துச்சாம். அவ்வளவு அற்புதமான பெயர், பேச்சுவழக்குல பன்னிமடையா மாறிடுச்சு. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“பன்றிக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!”

அப்போதிலிருந்து எங்க ஊர்ப் பெயரைப் பழையபடி ‘பன்னீர்மடை’யா மாத்திடணும்னு ஊர் மக்கள் எல்லோரும் சேர்ந்து போராடிக்கிட்டு இருக்கோம். ஆனா, ‘உங்க ஊர்ப் பெயர் பன்னீர்மடை என்பதற்கு  ஆதாரமாகக் கல்வெட்டோ, செப்புத்தகடோ இருந்தா கொண்டு வாங்க. அப்போதுதான் மாற்ற முடியும்’னு அதிகாரிகள் சொல்றாங்க. அப்படியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கலை. பெயர் மாற்றத்துக்காகக் கிராம சபையில மூன்று முறை தீர்மானம் நிறைவேற்றியிருக்கோம். ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளரா போட்டியிடுறவங்ககிட்ட இந்தக் கோரிக்கையை வெக்கிறோம். ஜெயலலிதா அம்மா முதல்வரா இருந்தப்போ அமைச்சரா இருந்த தோப்பு வெங்கடாசலத்தைச் சந்திச்சு, இந்தக் கோரிக்கையைச் சொன்னோம். அவரும் செய்து கொடுப்பதாச் சொன்னார். பல முயற்சிகள் எடுத்தும் காரியம்  நடக்கலை. ‘இது சாதாரணப் பிரச்னை’ என்று அரசாங்கம் நினைக்குது. இந்தப் பெயரால் எங்கள் ஊர் பிள்ளைங்க பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பரிகாசத்துக்கு ஆளாவதால், அவங்களோட தன்னம்பிக்கை தளர்ந்துடுது. இது மறைமுகமாக எங்கள் ஊரின் வளர்ச்சியையே பாதிக்குது. உடனடியா எங்கள் ஊர்ப் பெயரை மாற்றித்தர அரசு முன்வரணும்’’ என்றார் கவலைதோய்ந்த குரலில்.   

“பன்றிக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!”

அடுத்ததாகப் பேசிய நவனீதன், ‘‘பொண்ணோ, மாப்பிள்ளையோ கேட்டு எந்த ஊருக்கும் எங்களால போக முடியலை. ‘என்னாது, பன்னிமடையா?’ன்னு இழுக்குறாங்க. எங்க முன்னோர்கள் ஏதோ பன்னி மேய்ச்சுக்கிட்டு இருந்தவங்கன்னு நெனைச்சு ஒருமாதிரிக் கேவலமா பாக்குறாங்க. ஆனா, பன்றிக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல. பாலமுருகன்னு ஒரு பையனுக்குப் பொண்ணு பார்க்குறதுக்காக சேலத்துக்குப் போயிருந்தோம். அந்தப் பொண்ணு ஐ.டி படிச்சிட்டு பெங்களூர்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்துச்சு. ‘பையன் ஊரு பன்னிமடை’ன்னு சொன்னதும் அந்தப் பொண்ணு சத்தம்போட்டு சிரிச்சிரிச்சு. அந்தப் பொண்ணே வேணாம்னு சொல்லிட்டுத் திரும்பி வந்துட்டோம்.

‘எதிர் நீச்சல்’ படத்துல சிவகார்த்திகேயன் தன் பேரைச் சொல்லக் கூச்சப்படற மாதிரிதான், எங்க ஊர்ல உள்ள இளவட்டப் பசங்க யாரும் ஊர்ப் பேரை வெளியில சொல்றது கிடையாது. யாராச்சும் கேட்டால் ‘துடியலூர்’னு சொல்லிடுவோம். சில பேரு ‘துடியலூர்ல எங்கே’ன்னு துருவித் துருவிக் கேப்பாங்க. பேரைத் திருத்தி ‘பன்னீர்மடை’னு சொல்வோம். ‘உங்க ஊரு பன்னிமடைதானே? அதென்ன பன்னீர்மடைனு சொல்றே’ன்னு கேட்டு எகத்தாளமா சிரிப்பாங்க. அப்போ உடம்பு முழுக்கப் பத்திக்கிட்டு எரியும்.

உள்ளூர்ல ஸ்கூல் முடிச்சிட்டு, வெளியூருக்கு காலேஜ் போற யாரும் ஊர் பேரைச் சொல்றதே கிடையாது. பேரு ஊரெல்லாம் கேட்டு இன்ட்ரோ கொடுக்கச் சொல்வாங்க. அதுக்காகவே, முதல் நாள் காலேஜுக்கு கட் அடிச்சிடுவோம். கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் பாஸ்போர்ட் ஆபீஸுக்குப் போயிருந்தேன். என்கிட்ட திரும்பத் திரும்ப ஊர் பேரைக் கேட்டாங்க. புரியும்படி சொன்னதும், ‘இப்படி ஓர் ஊரா’னு வாய்விட்டே சிரிச்சிட்டாங்க. ஒரு மாதிரியா ஆகிருச்சு. பன்றியும் ஒரு விலங்குதான். ஆனால், அருவருப்பான விலங்கா இருக்கிறதால, எங்களையும் அருவருப்பா பாக்குறாங்க. இந்தப் பெயரால ஒட்டுமொத்த கிராமமுமே அவமா னத்துக்கு ஆளாகுது. அதனால, ஆதாரமெல்லாம் கேட்காம எங்கள் ஊர்ப் பெயரை அரசு ஆவணத்தில் ‘பன்னீர்மடை’ன்னு மாத்தணும்’’ என்கிறார் கெஞ்சும் குரலில்.

“பன்றிக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!”

அடுத்ததாகப் பேசிய தியானேஷ்வரன், ‘‘அரசாங்கம் மாத்தமுடியாதுனு சொன்னதால, நாங்களே ஊர்ப் பெயரை ‘பன்னீர்மடை’னு மாத்திரலாம்னு யோசிச்சு ஒரு வருஷத்துக்கு முன்னாடி ஊர் முச்சூடும் உள்ள ஒவ்வொரு கடையிலும் ‘பன்னீர்மடை’னு போஸ்டர் அடிச்சி ஒட்டினோம். ஊருக்குள் அடிக்கும் ஃப்ளெக்ஸ்கள், நோட்டீஸ்கள் எல்லாத்திலும் ‘பன்னீர்மடை’ன்னே அச்சிட்டோம். வேலையில இருக்கும் ஒவ்வொ ருத்தரும் விசிட்டிங் கார்டு அடிச்சு அதில் ‘பன்னீர்மடை’னு போட்டோம். ஊருக்குள் வரும் பஸ்ஸில் ‘பன்னீர்மடை’ என்று போர்டு மாட்ட வைத்தோம். ஆனால், எதுவுமே சக்சஸ் ஆகல. கடைகள்ல ஒட்டுன போஸ்டர்களையெல்லாம் ஏதாவது பிரச்னை ஆகுமோன்னு பயந்துக்கிட்டு கடைக்காரங்களே கிழிச்சுப் போட்டுட்டாங்க. எஃப்.சிக்கு போன பஸ், பழையபடி ‘பன்னி மடை’ங்கிற ஸ்டிக்கரோடவே திரும்ப வந்துச்சு.  கேட்டதுக்கு ‘கவர்மென்ட் ரெக்கார்டில் இருக்கிற மாதிரிதான் பெயர் போடணும்னு டிரான்ஸ் போர்ட் அதிகாரிங்க சொல்லிட்டாங்க’னு காரணம் சொன்னாங்க. கவர்மென்ட் ரெக்கார்டுல மாத்தாம நாங்க என்ன பண்ணியும் பிரயோஜனம் இல்லைன்னு தெரிஞ்சிருச்சு. இதைப் படிச்ச பிறகாவது எங்களுடைய வலி என்னவென்பதை உணர்ந்து தமிழக அரசு எங்க ஊர்ப் பெயரை மாற்றித்தரும் என்று நம்புகிறேன்’’ என்றார்.

“பன்றிக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை!”

இது, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிச் சாதிக்க வேண்டிய விஷயம் இல்லை; மனதில் கொஞ்சம் இடம் ஒதுக்கித் தீர்க்க வேண்டிய பிரச்னை. புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி!

- எம்.புண்ணியமூர்த்தி
படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism