Published:Updated:

`` `இவர் பேரு கதிர்ஆறுமுகம், பெரிய டிசைனர்'னு உதயசந்திரன் சார் சொன்னதை மறக்கவே முடியாது!"

``ஊர்ல பசங்க கையில இருக்குற புத்தகங்களப் பார்த்துட்டு அம்மா ரொம்ப சந்தோசப்பட்டு கண்ணு கலங்கிட்டாங்க. உண்மையா ஒரு வேலையைச் செஞ்சா நிச்சயமா ஒருநாள் அந்த வேலைக்குப் பெரிய பாராட்டும், அங்கீகாரமும் கெடச்சே தீரும். வாய்ப்புகளும் நிச்சயம் வரும்."

`` `இவர் பேரு கதிர்ஆறுமுகம், பெரிய டிசைனர்'னு உதயசந்திரன் சார் சொன்னதை மறக்கவே முடியாது!"
`` `இவர் பேரு கதிர்ஆறுமுகம், பெரிய டிசைனர்'னு உதயசந்திரன் சார் சொன்னதை மறக்கவே முடியாது!"

ட்டாம்பூச்சி, பறவையின் இறகு, இலைகள், கலைத்துப்போடப்பட்ட சூத்திரங்கள், தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துகளை மட்டுமே வைத்துக் குழைத்த உருவமைப்புகள் என்று தமிழகத்தின் நடப்புக் கல்வியாண்டில் 1 ம் வகுப்பு, 6 ம் வகுப்பு, 9 ம் வகுப்பு, 11 ம் வகுப்பு மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், இயற்பியல், வேதியியல், புள்ளியியல் புத்தகங்களின் அட்டைப்பட வடிவமைப்புகள் அனைத்தும் புதுமையாகவும், வண்ணமயமாகவும், கலை நுட்பமாகவும், கவித்துவமாகவும் காட்சி தருகின்றன. இது தமிழக மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமன்றி பொதுமக்களையும் வெகுவாக ஈர்த்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் கிராமத்தில் பிறந்து, 9ம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு குடும்ப வறுமையினால் வீட்டை விட்டு வெளியேறி, பேப்பர் போட்டு, சித்தாள் வேலைக்குப்போய், திருப்பூர் பனியன் ஆலைகளில் வேலைப்பார்த்து, நூல் பாவு சுத்தி, ஹோட்டல்களில் சப்ளையராக இருந்து, சேமியா கம்பெனிகளில் மாவு பிசைந்த, 33 வயதான ஓவியர் கதிர் ஆறுமுகம் என்னும் கலைஞன்தான் இந்த ஓவியங்களுக்கும், வடிவமைப்புகளுக்கும் சொந்தக்காரர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கூலியாளாக வேலைபார்த்துக் காலமாகிவிட்ட கதிரின் அப்பா, ஆறுமுகம் அடிப்படையில் தெருக்கூத்து கலைஞர். ஊரில் கூத்துக் கட்டுவது, தவில் வாசிப்பது, இசைக்கலைஞர்களை வீட்டுக்கு அழைத்து வந்து இசைக்கச்சொல்வது என வாழ்வின் பாடுகளுக்கு நடுவிலும் ரசனையாகவும், கலைஞனாகவும் வாழ்வைக் கடத்தியுள்ளார். தனது அப்பா பனையோலையில் விசிறி  செய்வதை, கயிற்றுக்கட்டிலில் கயிற்றைச் சுற்றுவதைக்கூட சிறுவயதில் இருந்தே உன்னிப்பாகக் கவனித்து வந்த சிறுவன் கதிருக்கு இங்கிருந்துதான் கலையின் மீதும் ஓவியங்களின் மீதும் நாட்டம் வந்திருக்கிறது. பிறகு, களிமண்ணில் சிற்பங்கள் செய்வது, பாடப்புத்தகங்களிலும், நோட்டுகளிலும் தமிழ், ஆங்கில எழுத்துகளை விதவித வடிவங்களில் தோரணையாக எழுதுவதென இருந்துள்ளார்.

7 வது படிக்கும்போது ஓவியர் ட்ராட்ஸ்கி மருது வரைந்திருந்த பாரதியாரின் பெரிய ஓவியத்தை `குக்கூ' காட்டுப்பள்ளி சிவராஜ் வீட்டில் முதன்முதலாகப் பார்த்து வியந்துள்ளார். பிறகு பாரதியார், நியூட்டன், ஒரு மாற்றுத்திறனாளி கால்பந்தை எட்டி உதைப்பது போன்ற பல படங்களைக்கொடுத்து தொடர்ந்து வரையச்சொல்லி கதிரை ஊக்கப்படுத்தியுள்ளார் `குக்கூ' சிவராஜ். முதன்முறையாக ஜெல் பேனாவில் வரையத்தொடங்கிய கதிர் படிப்படியாக பெயின்ட் பிரஷ்களைப் பிடித்து சைக்கிள்களில் பெயர் எழுதித்தருவது, மளிகைக்கடைகள், போன்பூத்துகள் போர்டுகளில் பெயர் எழுதித் தருவதெனச் சுற்றித்திரிந்துள்ளார்.

குடும்பச்சூழல் காரணமாக குழந்தைத்தொழிலாளியாக பல ஊர்களில் பல வேலைகள் செய்து கொண்டிருந்த கதிருக்கு ஓவியங்கள், வண்ணங்கள் மீதிருந்த தவிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்திருக்கின்றன. திருப்பூரில் நைட் ஷிப்ட்டில் வேலை  பார்த்துக்கொண்டிருக்கையில், கத்தரித்த பனியனில் தானே யோசித்த ஓர் உருவத்தை நூலில் தைக்கும் போது முதலாளியிடம் வாங்கிய அடிகள் அந்தத் தவிப்புகளைக் கண்ணீரோடு அதிகப்படுத்தியிருக்கின்றன. அதன்பிறகு, ஈரோட்டில் ஒரு தனியார் வடிவமைப்பு நிறுவனத்தில் டீ வாங்கிக்கொடுக்கும் ஆபீஸ் பாயாக வேலைக்குச்சேர்ந்த கதிர், அங்கு நவீன வடிவமைப்பு மென்பொருள் தொழில்நுட்பங்களைத் தூரத்திலிருந்தே பார்த்துப் பார்த்துக் கற்றிருக்கிறார்.

பிறகு, சென்னை வந்து வேலை தேடி அலையும் போதுதான் தமிழகத்தின் ஒரு முன்னணி பதிப்பகத்தில் வடிவமைப்பாளராக வேலை  கிடைத்துள்ளது. தமிழ் இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்களின் புத்தகங்களையும், பல நிறுவனங்கள், பதிப்பகங்களின் `லோகோ'க்களையும் வடிவமைக்கத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் சைக்கிள்களில் பெயர் எழுதித்தரும்போது கிடைத்த 50 ரூபாய்தான் தனது ஓவியத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய தொகை என்று நினைத்த கதிருக்கு, சென்னையில் முதல் மாத சம்பளமாக 5,000 ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாழ்வில் திகட்டத்திகட்ட கிடைத்த வலிகளுக்குப் பின்னால் கிடைத்த வாய்ப்புகளைத் தவறவிடாமல் வடிவமைப்புகளின் வளர்ச்சிகளைப் படிப்படியாகக் கற்றுக்கொண்டு பல முன்னணி நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்களிலும் தனது திறமையினைக் காட்டியிருக்கிறார். 

`டைப்போகிராபி', 'போஸ்டர்கள்' என்று தனது படைப்புகளைச் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து பதிவேற்றி வருவதால் பல தளங்களில் கதிர்ஆறுமுகத்தின் படைப்புகள் கவனிக்கப்பட்டும், பாராட்டப்பட்டும் வருகிறது.

`இவர் பேரு கதிர்ஆறுமுகம், பெரிய டிசைனர்'னு முதன்முதலா ஆபீஸ்ல எல்லார் முன்னாடியும்  உதயசந்திரன் சார் என்னை அறிமுகப்படுத்தின தருணத்தை எப்பவும் என்னால மறக்க முடியாது. தமிழ்நாடு பாடநூல் கழகத்துல, நம்ம தமிழ்நாட்டுப் புள்ளைங்க படிக்கப்போற புத்தகங்கள நான்தான் டிசைன் பண்ணப்போறேன்னு தெரிஞ்ச உடனேயே எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டு ஆத்மார்த்தமாவும், நம்பிக்கையாவும் வேலை செய்ய ஆரம்பிச்சேன். புள்ளைங்க புத்தகங்களை ஒருவித வெறுப்போடவும் பயத்தோடயும் ஒதுக்கிடக் கூடாதுன்னு நெனச்சேன். புத்தகத்தைப் பார்த்தவுடனேயே ஆர்வமா கையில எடுத்துத் திறந்து, பல பேருக்குக் கெடைக்காத அந்தப் படிப்பை அவுங்க படிக்கப் போறாங்க என்ற நெனப்போடுதான் கவனமா டிசைன் பண்ணினேன். எழுத்து, கலர், ஓவியம் எல்லாத்தையும் புதுமையா ஈர்ப்பா தயார் செஞ்சோம். பல தரவுகளைத்தேடி ஒரு புத்தகத்துக்கு ஒண்ணுக்குப் பத்து டிசைன் பண்ணி, அதுல ஒண்ண தேர்வு செஞ்சோம். அந்தளவுக்கு என்னோட படைப்பை மதிச்சு, வேலை செய்ய அதிகச் சுதந்திரம் கொடுத்தாங்க. 

எப்பவும் நான் ஓவியக்கலையைக் கத்துக்கிட்டேதான் இருப்பேன். சவாலான வேலைகளையும் ஈடுபாட்டோட செஞ்சுக்கிட்டு இருக்கேன். இப்போ இருக்குற புதுமைக்கு ஏத்த மாதிரி என்னைத் தயார் செஞ்சுக்கிட்டு, அதேநேரத்துல என்னோட தனித்துவத்தையும் இழக்காம இன்னும் பல படைப்புகளைத் தர காத்துட்டு இருக்கேன். உண்மையா ஒரு வேலையைச் செஞ்சா நிச்சயமா ஒருநாள் அந்த வேலைக்குப் பெரிய பாராட்டும், அங்கீகாரமும் கெடச்சே தீரும். வாய்ப்புகளும் நிச்சயம் வரும். ஊர்ல பசங்க கையில இருக்குற புத்தகங்களப் பார்த்துட்டு அம்மா ரொம்ப சந்தோசப்பட்டு கண்ணு கலங்கிட்டாங்க. இந்தப் பெரிய வாய்ப்பு கிடைக்க காரணமா இருந்த என்னோட மானசீக குருவா நான் நெனைக்கிற டிராட்ஸ்கி மருது சார், உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் சார், `பூவுலகின் நண்பர்கள்' சுந்தர்ராஜன் சார், தனபால் பத்பநாமன் சார் எல்லாருக்கும் இந்த நேரத்துல நன்றி சொல்லிக்கிறேன்" என்று நிதானமாகவும், உறுதியாகவும் பேசுகிறார் ஓவியர் கதிர் ஆறுமுகம். 

இந்தப் புத்தகங்களைப் பைண்டிங் போடவோ இல்லை அட்டைப்போட்டு மறைக்கவோ எந்தப் பிள்ளைகளுக்கும் விருப்பம் வராது. அப்படிச் செய்யச்சொல்ல எந்த ஆசிரியருக்கும், பெற்றோருக்குமே மனம் வராது.

புகைப்படங்கள்: ஜோதி