Published:Updated:

நேற்றுவரை மணல் மாஃபியா... இனி எம் சாண்ட் மாஃபியா!

நேற்றுவரை மணல் மாஃபியா... இனி எம் சாண்ட் மாஃபியா!
பிரீமியம் ஸ்டோரி
நேற்றுவரை மணல் மாஃபியா... இனி எம் சாண்ட் மாஃபியா!

தமிழக மலைகளுக்கு ஆபத்து

நேற்றுவரை மணல் மாஃபியா... இனி எம் சாண்ட் மாஃபியா!

தமிழக மலைகளுக்கு ஆபத்து

Published:Updated:
நேற்றுவரை மணல் மாஃபியா... இனி எம் சாண்ட் மாஃபியா!
பிரீமியம் ஸ்டோரி
நேற்றுவரை மணல் மாஃபியா... இனி எம் சாண்ட் மாஃபியா!

‘தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டில், ‘இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது’ என இரண்டு நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வும் உறுதிபடத் தெரிவித்திருக்கிறது. நீர்வளத்தை மீட்க முடியாத அளவுக்குத் தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை நடைபெற்றது. வெளிநாட்டு இறக்குமதி மணலுக்கு அனுமதி கொடுத்து, தங்கள் சட்டவிரோத வருமானத்துக்கு வேட்டு வைத்துக்கொள்ள தமிழக ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. இந்நிலையில், இப்போது நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி ‘மாற்று’ என்ற பெயரில் ‘எம் சாண்ட்’ எனப்படும் செயற்கை மணல் தயாரிக்க மலைகளை மொட்டையடிக்கப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றுவரை மணல் மாஃபியா... இனி எம் சாண்ட் மாஃபியா!

தடையற்ற மணல் கடத்தல்!

தமிழகத்தில் தற்போது ஏழு மணல் குவாரிகள் மட்டுமே செயல்படுகின்றன. அங்கு அள்ளப்படும் மணலை வாங்குவதற்கு அரசின் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்து ஒரு மாதம் கழித்து, பதிவு முன்னுரிமைப்படி மணல் வழங்கப்படுகிறது. இந்த ஏழு மட்டுமே அரசின் அனுமதியுடன் நடத்தப்படும் மணல் குவாரிகள். இவை தவிர, பல ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. தற்போது, மணல் தட்டுப்பாடு நிலவுவதால், ஒரு யூனிட் மணல் 30 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவதும் இன்னும் தொடரவே செய்கிறது. சட்டவிரோதமாக மணல் அள்ளுவதற்கு மாட்டு வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படிக் கொண்டுவரப்படும் மணல், ஓர் இடத்தில் மொத்தமாகக் கொட்டப்பட்டு, அங்கிருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு, மணலுக்கு மேலே சிமென்ட் மூட்டைகள் அடுக்கப்படுகின்றன. மேலே தார்ப்பாயைப் போட்டு மூடி, வெளிமாநிலங்களுக்குக் கடத்திச் செல்லப்படுகின்றன. ‘‘நீதிமன்ற உத்தரவை மீறி மணல் குவாரிகள் திறக்கப்படவில்லை என்று காட்டிக்கொள்ளும் தமிழக அரசு, சட்டவிரோதமாக ஆறுகளில் மணல் அள்ளுவோருக்கு உள்ளூர்க் கட்சிக்காரர்கள் மூலம் பாதுகாப்பு அளிக்கிறது’’ என்கிறார் உள்விவரம் தெரிந்த மணல் லாரி உரிமையாளர் ஒருவர். 

குறிவைக்கப்படும் மலைகள்!

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த சம்மேளனங்களின் தலைவர் பன்னீர்செல்வம், ‘‘நீதிமன்றத்தின் தடையால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைப் பயன்படுத்தி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில அரசியல் பினாமிகள், எம் சாண்ட் வணிகத்தில் இறங்குவதற்குத் தயாராகிவிட்டனர். கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில மலைகளை அவர்கள் குறிவைத்துள்ளனர். ஆற்றுமணலைக் கொள்ளையடித்ததுபோல, இப்போது மலைகளைக் காலி செய்யப்போகிறார்கள். ஆறு மாதங்களுக்கு முன்பு எம் சாண்ட் டன் ஒன்றுக்கு 300 ரூபாய் விற்றது. இப்போது மணல் தட்டுப்பாடு காரணமாக, ஒரு டன் எம் சாண்ட் விலை ரூ. 1,600 என உயர்ந்துவிட்டது. கல்குவாரிகளில் கிடைக்கும்  எம் சாண்ட், சுத்தம் செய்துதான் விற்பனை செய்யப்பட வேண்டும்.பெரும்பாலானவர்கள், எம் சாண்ட் என்ற பெயரில் கல்குவாரியின் தூசியை விற்பதாகத் தெரிகிறது. இதை வைத்துக் கட்டடம் கட்டினால், கட்டடம் தரமானதாக இருக்காது. அதேபோல, ‘தரமான எம் சாண்ட்தான் விற்பனை செய்யப்படுகிறதா’ என்பதை அரசு கண்காணிக்க வேண்டும். விலையையும் அரசே நிர்ணயிக்க வேண்டும்; கனிம சுரங்கத்துக்கான விதிமுறைகளை எம் சாண்டுக்கும் அமல்படுத்த வேண்டும்.

மணல் என்றாலும்  எம் சாண்ட் என்றாலும், இரண்டையும் அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் கொண்டுவந்து பொதுமக்களுக்கு உரிய விலையில் அரசே விற்பனை செய்ய வேண்டும். சி.எம்.டி.ஏ அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் வீடு கட்ட பிளான் அப்ரூவல் வாங்கும்போதே, ஒருவருக்கு எவ்வளவு மணல் தேவைப்படும் என்பதை அரசே குறித்துக்கொடுக்க வேண்டும். அந்த அளவின்படி, எம் சாண்ட் அல்லது மணலை அரசே விற்க வேண்டும்.  எம் சாண்டும் ஆன்லைனில் விற்பனை செய்யப்பட வேண்டும். ஒரு கனிமத்தைப் பாதுகாக்க, இன்னொரு கனிமத்தை அழிக்கக் கூடாது. மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறார்கள். இதுவரை மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களிடமிருந்து அபராதமாக எவ்வளவு வசூலிக்கப் பட்டுள்ளது என்பதைச் சொல்வார்களா?’’ என்றார்.

எம் சாண்ட் விலையும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொருவிதமாக உள்ளது. கோவையில் ஒரு யூனிட் எம் சாண்ட் 4,750 ரூபாய். சென்னைப் புறநகர்களில் 7,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னை நகருக்குள் என்றால், இந்த விலை 8,000 ரூபாயைத் தாண்டுகிறது.

மாற்றுத் தொழில்நுட்பம் தேவை!

‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜன், ‘‘ கல்குவாரிகளிலிருந்து எம் சாண்ட் தயாரித்தால், அதை விற்பதற்கு அரசு அனுமதிக்கலாம். ஆனால், எம் சாண்ட் தயாரிப்பதற்கென்றே மலையைக் குத்தகைக்கு எடுத்து உடைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்டுமானப் பணிகளுக்கு மணல், சிமென்ட் ஆகியவற்றுக்கு மாற்றாக ஜிப்சம் போர்டுகளைப் பயன்படுத்தலாம் என்று சென்னை ஐ.ஐ.டி ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மாற்றுத் தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்தால் இயற்கையைப் பாதுகாக்கலாம். ‘வீடு கட்டாதீர்கள்’ என்று மக்களிடம் சொல்ல முடியாது. இப்போதைய சூழலுக்கு ஏற்ப மாற்றுத்தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்றார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நேற்றுவரை மணல் மாஃபியா... இனி எம் சாண்ட் மாஃபியா!

பொதுப்பணித்துறைத் தலைமைப் பொறியாளர் பக்தவச்சலத்திடம் பேசினோம். ‘‘மணல் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு நடவடிக்கையை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். நீதிமன்றத்தில் தடை இருப்பதால், எதுவும் செய்ய முடியவில்லை. புதிய மணல் குவாரி தொடங்குவதற்கும் அரசு யோசனை செய்தது. ஆனால், ‘மணல் குவாரிகளை மூட வேண்டும்’ என்று நீதிமன்றம் சொன்னதால், அதைச் செயல்படுத்தவில்லை. மணலுக்கு மாற்றாக எம் சாண்ட் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம்.

எம் சாண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்குத் தரச் சான்றிதழ் வழங்குவது குறித்துத் துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். விரைவில் அரசு இதில் நல்ல முடிவு எடுக்கும்” என்றார்.

சிக்கனம்... தேவை இக்கணம்!

சூழலியலாளர் நக்கீரன், “மணல் கொள்ளை என்பது தமிழகத்தின் தேவைக்கு மட்டும் நடக்கவில்லை. வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும்கூட தமிழகத்திலிருந்து மணல் கடத்தப்படுகிறது. விதிமுறைகள் மீறப்படும்போது தான், இயற்கை வளத்தைச் சுரண்டுவதைத் தடுக்க வேண்டும் என்கிறோம். மணலைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டி, அதில் மணலை நிரப்புவோம். அதற்குப் பதிலாக வேறு வகையான மண்ணைப் பயன்படுத்த வேண்டும். ஹாலோ பிளாக் கற்களால் வீடு கட்டினால், மணல் தேவை குறைவாக இருக்கும். வெளிப்பூச்சு இல்லாத கட்டடங்கள் கட்டுவதை ஊக்குவிக்க வேண்டும். மணலே இல்லாத வெளிநாடுகளில் எப்படிக் கட்டடம் கட்டுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். நிலக்கரி சாம்பலைப் பயன்படுத்தலாமா என்று பார்க்கலாம்.

நேற்றுவரை மணல் மாஃபியா... இனி எம் சாண்ட் மாஃபியா!

எம் சாண்ட் கொண்டுவருவது இயற்கையைப் பாதிக்கும். ஏனென்றால், மலையை உடைத்துதான் எம்.சாண்ட் தயாரிக்கின்றனர். மழையின் உற்பத்தி இடமாக மலைகள் உள்ளன. ஆற்று மணலைப் போல எம் சாண்டையும் வெளிமாநிலங்களுக்குக் கடத்தினால், தமிழ்நாட்டில் உள்ள மலைகள் காணாமல்போய்விடும்.

தற்போது, அதிகமான கட்டுமானங்கள் நடைபெற்று வருகின்றன. நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்குக்கூட ஐயாயிரம் சதுர அடி கொண்ட பிரமாண்ட வீட்டைக் கட்டுகின்றனர். இது தேவையா என்பதையும் யோசிக்க வேண்டும். வீடு என்பது அவசியத் தேவை என்பது மாறி, பகட்டைக் காட்டுவது என்பதுபோல ஆகிவிட்டது. அம்பானி 27 மாடிகள் கொண்ட வீடு கட்டுகிறார். அவர் குடும்பத்தில் இருப்பவர்கள் ஐந்து பேர்தான். பணம் இருக்கிறது என்பதற்காக, இயற்கை வளங்களைச் சூறையாடுவது நியாயமா? மணலுக்கு மாற்று என்ன என்பதைப் பொறியாளர்களால் கண்டுபிடிக்க முடியும். இதுபோன்ற நெருக்கடிகள் உருவாகும்போதுதான், மாற்று வழிகள் சாத்தியப்படும்” என்றார்.

- கே.பாலசுப்பிரமணி
படம்: சாய்.தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism