Published:Updated:

மாறப் போகுது மாஞ்சோலை எஸ்டேட்!

மாறப் போகுது மாஞ்சோலை எஸ்டேட்!
பிரீமியம் ஸ்டோரி
மாறப் போகுது மாஞ்சோலை எஸ்டேட்!

ஏக்கருக்கு 1.75 ரூபாய் குத்தகை... உச்ச நீதிமன்றம் வைத்த செக்...

மாறப் போகுது மாஞ்சோலை எஸ்டேட்!

ஏக்கருக்கு 1.75 ரூபாய் குத்தகை... உச்ச நீதிமன்றம் வைத்த செக்...

Published:Updated:
மாறப் போகுது மாஞ்சோலை எஸ்டேட்!
பிரீமியம் ஸ்டோரி
மாறப் போகுது மாஞ்சோலை எஸ்டேட்!

னங்களை அழித்தே உலகெங்கும் தேயிலைத் தோட்டங்களும் காபி தோட்டங்களும் உருவாகின. தோட்டமாக வனங்கள் மாறுவது தொடர்கிறது; ஆனால், தேயிலைத் தோட்டங்கள் அரிதாகவே மீண்டும் வனமாக மாறுகின்றன. நெல்லை மாவட்டத்தில் இருக்கும் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் விரைவில் வனமாக மாறவுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தின் வசமிருக்கும் 8,374 ஏக்கர் நிலத்தை, பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (பி.பி.டி.சி) நிறுவனம் சொந்தம் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது வனத்துறையினர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை மகிழ்ச்சியடைய வைத்திருந்தாலும், மாஞ்சோலையில் பணியாற்றும் சுமார் 3,000 தொழிலாளர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

மாறப் போகுது மாஞ்சோலை எஸ்டேட்!

மேற்குத் தொடர்ச்சி மலையில், குமரி முதல் குமுளி வரை உள்ள பகுதி, அகத்தியர் மலை என அழைக்கப்படுகிறது. பல்லுயிர் மையமான இந்த அடர்ந்த வனப்பகுதியில், அரிய வகை உயிரி னங்கள் வாழ்கின்றன. தாமிரபரணியும், 14 கிளை நதிகளும் இங்குதான் உருவாகின்றன. இந்த மலையில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் 1988-ல் உருவாக்கப்பட்டது. இந்தப் புலிகள் காப்பகத்தின் நடுவே, 8,374 ஏக்கர் நிலம் பி.பி.டி.சி-யின் வசம் உள்ளது. இந்த நிறுவனம், சிங்கம்பட்டி ஜமீனிடமிருந்து 1929-ல் இந்த நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துத் தேயிலை எஸ்டேட்டை உருவாக்கியது. ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்த பின், சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமான 23,000 ஹெக்டேர் வனத்தை அரசு கையகப்படுத்தியது. ஆனால், 1958-ம் வருடம், சில நிபந்தனைகளுடன் பி.பி.டி.சி நிறுவனம் குத்தகையைத் தொடர அரசு அனுமதியளித்தது.

இந்த நிலையில் 1978-ம் வருடம் தமிழக அரசு, மலைப் பகுதிகளில் இருந்த குத்தகை நிலங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஒன்றிணைத்துப் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்தது. இதற்கு, பி.பி.டி.சி நிறுவனம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, குத்தகை எடுத்த நிலங்களுக்கு உரிமை கோரி நீதிமன்றத்துக்குச் சென்றது. இது தொடர் பான வழக்கு, நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. அங்கு வழக்குத் தள்ளுபடியாக, பின்னர் உயர் நீதிமன்றத்தில் பி.பி.டி.சி மேல்முறையீடு செய்தது. அங்கும் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்புக் கிடைக்கவில்லை. அதனால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கும் அவர்களின் வாதம் எடுபடவில்லை. எனினும், ‘குத்தகைக்காலம் முடியும் 2028-ம் ஆண்டுவரை அந்த நிறுவனத்தின் பராமரிப்பில் தேயிலைத் தோட்டம் இருக்கலாம். அதன்பிறகே அந்த இடம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் வரும்’ என நீதிமன்றம் கூறியுள்ளது.

இது பற்றிச் சுற்றுச்சூழல் ஆர்வலரான ‘ஓசை’ காளிதாஸிடம் பேசினோம். ‘‘களக்காடு-முண்டந் துறை பகுதியில், ஏராளமான மூலிகைகள் இருக் கின்றன. புலிகள், யானைகள் உள்ளிட்ட விலங்கு கள் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு நடுவே தேயிலைத் தோட்டம் இருப்பதால், விலங்குகளின் வாழ்விடங்கள் பாதிப்புக்கு உள்ளா கின. இந்தத் தீர்ப்பால், ‘இனி விலங்குகள் பாது காக்கப்படும்’ என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நீலகிரி கூடலூர் தனியார் எஸ்டேட் பகுதியை வனத்துடன் சேர்த்த பின்னர், அங்கு நிறைய மரங்கள் வளர்ந்துள்ளன. அந்தப் பகுதியில், விலங்குகள் வசிக்கத் தொடங்கியிருப்பது கணக் கெடுப்புகள் மூலம் நிரூபணமாகியுள்ளது. அதனால், தேயிலைச் செடிகளைச் சிறிது சிறிதாக அகற்றினாலே தானாக மரங்கள் வளர்ந்து வனமாக மாறிவிடும். அதற்கான பணிகளை வனத்துறை செய்ய வேண்டும். தேயிலைத் தோட்டத்தை நம்பியுள்ள 3,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வனத்துறைத் திட்டமிட்டு உதவி செய்ய வேண்டும்’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாறப் போகுது மாஞ்சோலை எஸ்டேட்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளைச் செய்துவரும் ‘ஏ ட்ரீ’ என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான மதிவாணன், ‘‘தேயிலைத் தோட்டங்களை வனப் பகுதியாக மாற்றும் நடவடிக்கை குறித்து வனத் துறை திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும். தேயிலைத் தோட்டப் பகுதியில், 3,000 குடும்பங்கள் வசித்தன. தோட்டத்துக்கு ஏராளமான தண்ணீர் தேவைப்பட்டிருக்கும். எஸ்டேட் இருக்கா விட்டால், அந்தத் தண்ணீரும் மணிமுத்தாறு அணைக்கு வந்துசேரும். தேயிலைகளுக்குப் பூச்சி மருந்தும் உரமும் வைப்பதால், சுற்றுச்சூழல் சீர்கெட்டதுடன், தாமிரபரணிக்கு வரும் தண்ணீரும் மாசுபடும் ஆபத்து இருந்தது. இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

செங்கல்தேரி, சின்னமாஞ்சோலை பகுதிகளில் கைவிடப்பட்ட தனியார் எஸ்டேட்களில்  தேயிலைத் தோட்டங்களுக்கு நடுவே ஆங்காங்கே நிழல் தரும் மரங்கள் இருந்தன. அவை வெட்டப் படாத இடங்களிலெல்லாம், பறவைகளின் எச்சத்தில் விழுந்த விதைகள் முளைத்துத் தானாகவே காடுகள் உருவாகியுள்ளன. எனவே இங்கு, தேயிலைத் தோட்டத்தின் நடுவே உள்ள நிழல் தரும் மரங்களை வெட்ட அனுமதிக்கக் கூடாது’’ என்றார் அக்கறையுடன். 

இது குறித்து களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநரான வெங்கடேஷிடம் பேசியபோது, “கடந்த 40 வருட காலமாக வனத்தைக் காப்பாற்றும் முயற்சியாக பி.பி.டி.சி நிறுவனத்துடன் சட்டப் போராட்டம் நடத்தி வந்தோம். இப்போதுதான், நல்ல முடிவு கிடைத் துள்ளது. 1906-ல் வெளியிடப்பட்ட நெல்லை கெஜெட்டில், அகத்திய மலைப் பகுதி மிகச்சிறந்த வனம் என்றும், அதன் காரணமாகவே அங்கிருந்து தாமிரபரணி உற்பத்தியாகிறது எனவும் குறிப்பிடப் பட்டு உள்ளது. மீண்டும் அத்தகைய நிலையை உருவாக்க இந்தத் தீர்ப்பு வாய்ப்பு அளித்திருக்கிறது.

பி.பி.டி.சி நிறுவனத்துக்கு ஓராண்டுக்கு ஓர் ஏக்கருக்கு வெறும் ரூ.1.75 என்கிற குத்தகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது மிகவும் சொற்பத் தொகை என்பதால், அதனை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தோம். குத்தகை மறுவரையறை தொடர்பாக தேயிலைத் தோட்ட நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அத்துடன், பாது காக்கப்பட்ட வனமாக அகத்தியர் மலையை அறிவிக்க, வருவாய்த் துறை அதிகாரி தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டு சில உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டன. அதை எதிர்த்துத் தேயிலைத் தோட்ட நிறுவனத்தினர் செய்த முறையீடு தொடர்பான தீர்ப்பு ஜனவரி 19-ம் தேதி வெளியானது.

மாறப் போகுது மாஞ்சோலை எஸ்டேட்!

குத்தகை மறுவரையறையை எதிர்த்ததுடன், தாங்கள் வனப் பகுதியில் விவசாயம் செய்வதால் அந்த நிலத்துக்குப் பட்டா வழங்கவும் கோரினார்கள். ஆனால், பி.பி.டி.சி நிறுவனத்தின் கோரிக்கைகள் அனைத்தும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன.

அதனால், பி.பி.டி.சி நிறுவனத்திடம் குத்தகையை அதிகரித்து நோட்டீஸ் வழங்க உள்ளோம். 1958 முதல் 2017 டிசம்பர் வரையிலான காலத்துக்கான குத்தகை பாக்கி வட்டியுடன் சேர்த்து ரூ.223.96 கோடி வருகிறது. அதனை உடனடியாகச் செலுத்த வலியுறுத்துவோம். அனைத்து வனப்பகுதிகளையும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்போம். அதனால், அந்த நிலப்பரப்பில் இனி தேயிலை பயிரிட மத்திய, மாநில அரசுகளிடம் அனுமதி பெற வேண்டும். அது சுலபமான செயல் அல்ல என்பதால் விரைவில் அந்தப் பகுதி வனமாக மாறும்’’ என்றார் நம்பிக்கையுடன்.

ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தின் நெல்லை மாவட்டத் துணைச் செயலாளரான ராமலிங்கம், ‘‘மேற்குத் தொடர்ச்சி மலையில் பி.பி.டி.சி நிறுவனத்தின் குத்தகை 2028-ல்தான் முடிவடை கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், குத்தகையை ரத்து செய்ய உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. ஆனால், 8,374 ஏக்கர் நிலமும் வனத்துறைக்குச் சொந்தமானது எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எஸ்டேட் நிலத்துக்கான குத்தகையை வனத்துறை அதிகரித்துக் கேட்கிறது. இதுவரை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொடுத்துவந்த எஸ்டேட் நிர்வாகம், கூடுதல் தொகையைத் தர மறுக்கிறது. இந்த நிலத்தைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக வனத்துறை அறிவித்துக்கொள்ளலாம் என்ற உத்தரவால், வனத்துறையினர் நெருக்கடி கொடுக்கும் வாய்ப்புள்ளது. தற்போது, மாஞ் சோலை எஸ்டேட் பகுதியில் 1,620 குடும்பங்கள் உள்ளன. 4,000 பேருக்கு மேல் இருக்கிறார்கள். அத்துடன், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 600 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்குக் குடும்ப அட்டைகள் கிடையாது.

மாறப் போகுது மாஞ்சோலை எஸ்டேட்!

இத்தனை தொழிலாளர்கள் இருக்கும் நிலையில், நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி, தொழில் செய்ய விடாமல் நெருக்கடி கொடுத்தால், தொழிற்சங்கம் சார்பாக வனத்துறையை எதிர்த்துப் போராடவும் தயங்க மாட்டோம். ஒருவேளை, நிலத்தையெல்லாம் வனத்துறையே எடுத்துக்கொள்ளுமானால், பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 25 லட்சம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என வனத்துறையை வலி யுறுத்துவோம்’’ என்றார்.

பி.பி.டி.சி நிறுவனம் சார்பாக நம்மிடம் பேசிய வர்கள், ‘‘இந்த இடத்தில் சட்டப்படி குத்தகைத் தொகை செலுத்தியே தேயிலை பயிரிட்டு வருகிறோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருகிறோம். எங்களுக்கான குத்தகை அடுத்த 10 வருடங்கள் வரை இருக்கிறது. அதற்குள் நிலத்தை வனத்துறை எடுத்துக்கொள்ளுமாறு தீர்ப்பில் எங்குமே குறிப்பிடப்படவில்லை. அதனால், தேயிலை பயிரிடும் அனுமதிக்கு சட்டப்படி விண்ணப்பித்துத் தொடர்ந்து செயல்படுவோம்’’ என்றனர். 

- பி.ஆண்டனிராஜ்
படங்கள்: தி.விஜய், எல்.ராஜேந்திரன், ரா.ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism