Published:Updated:

தென்பெண்ணை ஆற்றை அபகரிக்கும் கர்நாடகா!

தென்பெண்ணை ஆற்றை அபகரிக்கும் கர்நாடகா!
பிரீமியம் ஸ்டோரி
தென்பெண்ணை ஆற்றை அபகரிக்கும் கர்நாடகா!

சத்தமில்லாமல் ரூ.1,250 கோடி திட்டம்...

தென்பெண்ணை ஆற்றை அபகரிக்கும் கர்நாடகா!

சத்தமில்லாமல் ரூ.1,250 கோடி திட்டம்...

Published:Updated:
தென்பெண்ணை ஆற்றை அபகரிக்கும் கர்நாடகா!
பிரீமியம் ஸ்டோரி
தென்பெண்ணை ஆற்றை அபகரிக்கும் கர்நாடகா!

காவிரி நதி நீரில் தமிழகத்துக்கு உரிய பங்கைக் கேட்டு கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தின் அனைத்துக் கட்சியினரும் இப்போது காவிரிமீதே கவனம் குவித்துள்ளனர். நாம் இப்படிக் காவிரி பிரச்னை பற்றி மட்டுமே பேசும் நேரத்தில், சத்தமில்லாமல் தென்பெண்ணை ஆற்றை மொத்தமாக அபகரிக்கும் திட்டத்தைச் செய்துமுடித்துள்ளது கர்நாடகா.

ஆம்... கடந்த சில ஆண்டுகளாகவே தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்டு ஓடிய தண்ணீரைக் கவனத்தில்கொண்ட கர்நாடக அரசு, ‘ஏன் இந்தத் தண்ணீரை நமது விவசாயத்துக்குப் பயன்படுத்தக் கூடாது’ என்று சிந்தித்து, பல்வேறு திட்டங்களைத் தீட்டி அவசரமாக நிறைவேற்றி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் தென்பெண்ணை ஆற்றை மொத்தமாக நாம் இழந்துவிடப் போகிறோம்.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக தண்ணீர் அரசியல் சூடுபிடித்துவிடும். அதிலும், இந்த ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் வருகிறது என்பதால், காவிரிப் பிரச்னையில் சற்றுக் கூடுதல் பரபரப்பை எதிர்பார்க்கலாம்.  

தென்பெண்ணை ஆற்றை அபகரிக்கும் கர்நாடகா!

‘கர்நாடக மாநிலம் சிக்பெல்லாபூர் மாவட்டம் நந்தி துர்க்கத்தில் உள்ள நந்தி மலையில் பிறக்கும் தென்பெண்ணை, தமிழகத்தில் 391 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து விளைநிலங்களைச் செழுமைப் படுத்தி வருகிறது’ என்பது கடந்த கால வரலாறு. ஆனால், இப்போது நந்தி மலை தண்ணீர் தமிழகத்தை வந்து எட்டுவதற்கு முன்பாகவே, கர்நாடகாவில் பல இடங்களில் ஏரிகள் மற்றும் தடுப்பணைகளைக் கட்டி அதனை நிறுத்திவிட்டனர்.

பெங்களூரு நகருக்கு இப்போது காவிரி தண்ணீர் வந்தாலும், அந்த நகரத்தின் இயல்பான நீர் ஆதாரமாக இருப்பது தென்பெண்ணைதான். பெங்களூரு நகரில் உள்ள பெல்லண்டூர் ஏரியில் வந்து சேரும் நதிநீர், அங்கிருந்து வரதூர் ஏரிக்குச் செல்லும். இரண்டு ஏரிகளும் நிரம்பியபிறகு வெளியேறும் தண்ணீர், கிளைநதி மூலமாக மீண்டும் தென்பெண்ணை ஆற்றில் கலந்து தமிழகம் வரும்.

ஆனால், தறிகெட்ட வேகத்தில் பெங்களூரு வளர்ந்தபோது இந்த இயற்கை அமைப்பு சிதைந்து விட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்பெண்ணை ஆற்றுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது பெங்களூரு மற்றும் சுற்றுப்புறங்களில் பெய்யும் மழைநீரும், பெங்களூரு நகரிலிருந்து வெளியேறும் கழிவுநீரும்தான்.

பெங்களூரு நகரின் 40 சதவிகித கழிவுநீர், பெல்லண்டூர் ஏரியில்தான் கலக்கிறது. வரதூர் ஏரியையும் இதற்காகவே பயன்படுத்துகிறது கர்நாடகா. இப்போது இந்த இரண்டு ஏரிகளின் நீரையும் கோலார் மற்றும் சிக்பெல்லாபூர் மாவட்டங்களின் விவசாயத் தேவைகளுக்குத் திருப்பி விட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் நிதியுதவியுடன் 1,250 கோடி ரூபாய் திட்டத்தில் இந்த இரண்டு மாவட்ட விவசாயிகளுக்குப் பயன்தரும் வகையில் ராட்சதக் குழாய்கள் மூலம் தண்ணீரைக் கொண்டு செல்லப் பெரும் திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். கர்நாடக அரசு இந்தத் திட்டத்தை மூன்று வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டு, கட்டமைப்புப் பணிகளை வேகமாக முடித்து, கடந்த நவம்பர் மாதம் தொடக்க விழாவை நடத்தி முடித்துவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தென்பெண்ணை ஆற்றை அபகரிக்கும் கர்நாடகா!

இன்னொரு பக்கம் பெங்களூரு நகரின் கழிவுநீரைச் சுத்திகரித்து, தொழிற்சாலை மற்றும் குடிநீர்த் தேவைகளுக்கு மீண்டும் பயன்படுத்த மெகா சுத்திகரிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் பிரமாண்டமாக இவை கட்டப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் முடிந்தபிறகு, கர்நாடகாவின் மழைநீரும் தென்பெண்ணையில் வராது; கழிவுநீரும் வராது.

கர்நாடகா அரசு வகுத்துள்ள திட்டப் பணிகளைத் தமிழகச் செய்தியாளர்கள் சுலபத்தில் சென்று பார்க்கமுடியாது என்பதால், விவசாயிகளுக்கான கர்நாடக ராஜ்ய ராய்தா சங்க மாவட்டத் தலைவர் கெஞ்சே கவுடா துணையுடன் பெல்லண்டுர் மற்றும் வரதூர் ஏரிகளில் நடைபெறும் பணிகளைப் பார்வை யிட்டோம்.

‘‘இந்தத் திட்டத்தில் பெல்லண்டூர், வரதூர் ஏரிகளில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையங்கள் மூலமாக, பெங்களூரு நகரில் பெய்யும் மழைநீர் ராட்சதக் குழாய்கள் மூலம் பம்ப் செய்யப்பட்டு பெங்களூரூ புறநகர்ப் பகுதிகள், கோலார், சிக்பெல்லாபூர், சீனிவாசபுரா, முழுபாகல், கோலார், பங்காருபேட்டை பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட சிறு சிறு ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது. இதனால், இரண்டு மாவட்ட விவசாயிகள் பயன்பெறுவார்கள்.  இதேபோல, ‘பெங்களூரூ நீர் ஆதாரம் மற்றும் சுத்திகரிப்பு நிலைய’ திட்டத்தில், பெங்களூரு நகரத்தின் அன்றாடக் கழிவுநீரைச் சுத்திகரித்து, திடக்கழிவுகளை அப்படியே உரமாகப் பிரித்து எடுத்துவிட்டு, சுத்திகரிக்கப்பட்ட நீரை பெல்லண்டூர், வரதூர் ஏரிகளுக்குக் கொண்டு செல்ல மற்றொரு திட்டமும் தீட்டப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் கர்நாடகா தேர்தலுக்கு முன்பாகச் செயல்பாட்டுக்கு வந்துவிடும். இதனால், இங்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயம் செழிக்கும்’’ என்கிறார் கெஞ்சே கவுடா.

தென்பெண்ணை ஆற்றை அபகரிக்கும் கர்நாடகா!

தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் ராம கவுண்டர் இதன் ஆபத்துகளை விளக்கினார். ‘‘கர்நாடகா அரசின்  திட்டத்தால், தென்பெண்ணை ஆற்றை நம்பியுள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகள் முழுமையாக வாழ்வாதாரத்தை இழப்பார்கள். கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை, சாத்தனூர் அணை என எல்லாமே பயனற்றுப் போகும். பல நகரங்கள் குடிநீருக்காகத் தவிக்கும் நிலை ஏற்படும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பெல்லண்டூர் மற்றும் வரதூர் ஏரிகளில் கர்நாடகா பணிகளைத் தொடங்கியபோது, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா வரைக்கும் பிரச்னையைக் கொண்டுசென்று திட்டத்தைத் தாமதப்படுத்தினோம். ஆனால், இன்று தமிழகத்துக்காகக் குரல் கொடுக்க வலுவான தலைவர்கள் இல்லை என்பதை உணர்ந்த கர்நாடக அரசு, 1,200 கி.மீ நீளத்துக்கு ஆளுயர ராட்சதக் குழாய்கள் அமைத்து, சிறு சிறு ஏரிகளை இணைக்கும் திட்டத்தை 1,250 கோடி ரூபாய் மதிப்பில் முடித்துள்ளது. இதை யாரிடம் போய் முறையிடுவது?’’ என்று வேதனைப்பட்டார்.

காவிரிபோலவே தென்பெண்ணையிலும் நமக்கு உரிமை உள்ளது. காவிரிக்காக எழும் குரல்கள் தென்பெண்ணைக்காகவும் பேச வேண்டும்.

- எம்.வடிவேல், படங்கள்: க.மணிவண்ணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism