Published:Updated:

“அவ வருவா... வந்து ரைம்ஸ் சொல்லுவா!”

“அவ வருவா... வந்து ரைம்ஸ் சொல்லுவா!”
பிரீமியம் ஸ்டோரி
“அவ வருவா... வந்து ரைம்ஸ் சொல்லுவா!”

“அவ வருவா... வந்து ரைம்ஸ் சொல்லுவா!”

“அவ வருவா... வந்து ரைம்ஸ் சொல்லுவா!”

“அவ வருவா... வந்து ரைம்ஸ் சொல்லுவா!”

Published:Updated:
“அவ வருவா... வந்து ரைம்ஸ் சொல்லுவா!”
பிரீமியம் ஸ்டோரி
“அவ வருவா... வந்து ரைம்ஸ் சொல்லுவா!”

யரத்திலிருந்து சின்னதாக ஒரு பொருள் நம்மீது விழுந்தாலே தாங்கிக்கொள்ள முடியாது. 70 கிலோ எடையுள்ள மனிதன் விழுந்தால்? அதுவும் நான்கு வயதுக் குழந்தைமீது விழுந்தால்? நினைத்துப் பார்க்கவே முடியாத இப்படிப்பட்ட சோகம், சென்னையில் நடந்தது. நெற்றியிலும் கழுத்திலும் எலும்புகள் நொறுங்கி, குழந்தை ‘கோமா’விலும், குழந்தைமீது விழுந்த ஆசாமி தீவிர சிகிச்சைப் பிரிவிலும் இருக்கிறார்கள்.

தண்டையார்பேட்டை நரசய்யர் தெருவில் வசிக்கும் ஸ்ரீதர் - யமுனாதேவி தம்பதியரின் குழந்தை தன்யஸ்ரீ. வீட்டுக்கு வீடு தண்ணீர் கேன் போட்டு, அதில் வருகிற வருமானம்தான் ஸ்ரீதரின் குடும்பத்தை நகர்த்திக்கொண்டிருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அரக்கோணத்திலிருந்து தன்யஸ்ரீயின் தாத்தா அருணகிரி வந்துள்ளார். இரவு 9 மணியளவில் தன்யஸ்ரீயை மட்டும் அழைத்துக்கொண்டு அருகிலுள்ள சஞ்சீவிராயன் கோயில் தெருவில் அருணகிரி நடந்து வந்திருக்கிறார்.

“அவ வருவா... வந்து ரைம்ஸ் சொல்லுவா!”

யு.கே.ஜி படிக்கும் தன்யஸ்ரீக்கு, புதிதாய்க் கற்ற ‘ரைம்’களைச் சொல்வதில் கொள்ளை விருப்பம். தாத்தாவின் விரலைப் பிடித்துக்கொண்டே உடலை ஆட்டியபடி ரைம்ஸ் சொன்னபடி நடந்திருக்கிறாள். தாத்தாவின் பாவனைகளைப் பேத்தியும், பேத்தியின் அழகைத் தாத்தாவும் ரசித்தபடி வீதியோரமாக நடந்தபோதுதான்... அந்தக் கொடூரம் நிகழ்ந்தது.

அந்தத் தெருவில் இருந்த வீடு ஒன்றின் மூன்றாவது மாடியிலிருந்து ஒருவர் நிலைதடுமாறி, குழந்தை தன்யஸ்ரீ மீது விழுந்தார். என்ன நடந்தது என்பதை யூகிக்கவே சில நிமிடங்கள் ஆகிவிட்டன. செய்வதறியாது பதறிப் போயிருக்கிறார் அருணகிரி. குழந்தையிடமிருந்து எந்தச் சத்தமும் வராமல், அவள் தரையோடு அழுந்திக் கிடக்க... குழந்தைமீது விழுந்தவரோ, அங்கிருந்து எழுந்து, தட்டுத் தடுமாறி இருட்டில் கலந்து காணாமல் போனார். ஞாயிறு விடுமுறை என்பதால் தெருவில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. பேத்தி உயிரைக் காப்பாற்ற அருணகிரி எழுப்பிய அபயக்குரலும் வெளியில் கேட்கவில்லை. பைக்கில் அந்தப் பக்கம் வந்த இளைஞர்கள், குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உதவியிருக்கிறார்கள்.

தண்டையார்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், எஸ்.ஐ. பாலு ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் போய்ப் பார்த்துள்ளனர். குழந்தையின் தாத்தா அருணகிரியிடம் விசாரித்திருக்கிறார்கள். ‘‘மேலேயிருந்து குண்டு ஆசாமி ஒருவன் குழந்தைமீது விழுந்து, எழுந்து போய் விட்டான். இருட்டில் அதற்குமேல் தெரியவில்லை. எனக்குக் குழந்தையின் உயிர்தான் முக்கியமாகத் தெரிந்தது, அதனால் நான் ஓடி அவனைப் பிடிக்க முயற்சி செய்யவில்லை’’ என்றிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இவ்வளவு உயரத்திலிருந்து கீழே விழுந்தவருக்குக் கண்டிப்பாகக் காயம் ஏற்பட்டிருக்கும் என்ற யதார்த்தம் போலீஸை உறுத்தவே, சென்னையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். ‘இரவு 9 மணிக்கு மேல் காயத்துடன் யார் சிகிச்சைக்கு வந்தாலும் உடனே எங்களுக்குத் தெரிவிக்கவும்’ என்று சொல்லிவிட்டு போனுக்காகக் காத்துக் கிடந்துள்ளனர். ‘ராயபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் படுகாயத்துடன் ஒரு வாலிபர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்’ என்று போலீஸ் எதிர்பார்த்த தகவல் வர, அங்கே விரைந்துள்ளனர்.

அவர் சொன்னது அதிர்ச்சி ரகம். “என் பெயர் சிவா. அப்பா ராமு கூலித் தொழிலாளி. சொந்த ஊர் வத்தலக்குண்டு. பெற்றோரோடு நான் மட்டும்தான் இருக்கிறேன். எனக்கு வீட்டிலேயே டெய்லரிங் வேலை. ஞாயிற்றுக் கிழமை என்பதால் மது அருந்திவிட்டு வீட்டு மொட்டை மாடியில் உட்கார்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தேன். நிலைதடுமாறிக் கீழே விழுந்துவிட்டேன். அப்படியே எழுந்து நடந்தே ராயபுரம் வரை வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகி விட்டேன். என்னால் முடிந்த அளவுக்குக் கடன்பட்டாவது அந்தக் குழந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்கிறேன்” என்று மிகத் தெளிவாகவே பேசியிருக்கிறார் சிவா. முழங்கால், கை, முதுகு என்று பல இடங்களில் சிவாவுக்கும் பலத்த காயம். அறுவை சிகிச்சைக்காக சிவாவை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். அங்கே சிவாவுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

“அவ வருவா... வந்து ரைம்ஸ் சொல்லுவா!”

சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோவின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் குழந்தை தன்யஸ்ரீ இருக்கிறாள். சிகிச்சைக்குத் தேவைப்படும் ‘பணம்’ பிரதான விஷயமாக இருக்கிறது. தன்யஸ்ரீயின் குடும்பச் சூழ்நிலையை அறிந்த வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் ஷசாங்சாய், மருத்துவமனையைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இன்னொரு பக்கம் போலீஸாரும் தன்யஸ்ரீயின் பெற்றோர் மொபைல் எண், வங்கிக்கணக்கு போன்ற தகவல்களை போலீஸ் குடும்பத்தாருக்கு மெசேஜ் மூலம் அனுப்பி உதவி கோரியுள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த மெசேஜ் பொதுவில் வரவே, உதவிகள் அணிவகுக்கத் தொடங்கியுள்ளன.

போலீஸார், உறவினர்கள், அறிமுகமே இல்லாத மனிதர்கள் என்று பலர் தன்யஸ்ரீயைக் காப்பாற்ற சிகிச்சைக்குப் பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவமனைக்கு வந்து குழந்தையைப் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்.

‘‘குழந்தை தேறிடுவா சார்” என நர்ஸ் சொன்ன ஒற்றை வாக்கியத்துக்கு உயிர்கொடுக்கத் தவமிருக்கின்றன நம்பிக்கை மனங்கள். ‘‘அவ வருவா... வந்து ரைம்ஸ் சொல்லுவா’’ என அரற்றியபடியே கண்ணீரோடு காத்திருக்கிறார், தாத்தா அருணகிரி.

- ந.பா.சேதுராமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism