Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 1

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 1
பிரீமியம் ஸ்டோரி
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 1

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 1

தமிழ்மகன்

Published:Updated:
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 1
பிரீமியம் ஸ்டோரி
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 1
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 1

வ்வொருவரிடம் கைகுலுக்கி அறிமுகம் செய்துகொண்டு வந்தாள் அவள். ‘‘ஐ’ம் ரம்யா.’’ கிளிபோல அனைவரிடமும் அதையே சொன்னாள். கூடவே ஒரு புன்னகை வெகுமதி. தன் கையைக் குலுக்கும்போது ஏதாவது வித்தியாசமாகப் பேசி, அவள் மனதில் இடம் பிடித்துவிட வேண்டும் என வினோத் நினைத்தான். இன்னும் இரண்டு இருக்கை தூரம்தான்.

திருத்தமாக, அழகாக இருந்தாள். கண்ணுக்கு மை, நடுவகிடு, நெற்றியிலே குங்குமத்துக்குக் கீழே சந்தனக் கீற்று, ஜிமிக்கி கம்மல்... எனப் போன தலைமுறை அலங்காரம் மட்டும்தான் குறை. முகம் அடுத்த தலைமுறைக்கானது. இந்த முரட்டுத்தனமான வித்தியாசம் ஒருவகையில் கிளர்ச்சி யூட்டுவதாக இருந்தது. சல்வார் கம்மீஸ் அவளுக்குக் குழந்தைத் தோற்றத்தையே தந்தது.

‘‘ஐ’ம் ரம்யா.’’

‘‘வினோத்... ஓ! வாட் அ சில்! ஃபிரிட்ஜுக்குள்ள இருந்து வர்றீங்களா?’’ எனக் குலுக்கிய கையை உதறினான்.

‘‘என்னாச்சு?’’

‘‘ஐஸ் போல இருக்கு.’’

‘‘நீங்க சொன்னதா?’’ என்றாள் எதிர்பாராத தருணத்தில்.

ஒரு புன்னகைக்குப் பிறகு, அடுத்த இருக்கை பரந்தாமனை நோக்கிப் போனாள். அது மைக்ரோ ஆபீஸ். மொத்தமே 19 பேர்தான். முதலாளி, மேனேஜர், அனிமேட்டர், டிசைனர், அட்டெண்டர் எனச் சின்னக் குழு. ஒரு கட்டடத்தின் முதல் மாடியின் முழுத் தளத்தையும் வாடகைக்கு எடுத்திருந்தார் முத்துராஜா. 34 வயதே ஆன இளம் முதலாளி. அனிமேஷன் துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர். இந்த 19 பேரில் யாராவது ஒருவர் விலகினால்தான், புதிதாக யாராவது வேலைக்குச் சேர வேண்டும் என்ற கொள்கை வைத்திருப்பவர். போன மாதம் விலகிய ராஜ்குமாருக்குப் பதில் இப்போது ரம்யா. யார் புதிதாகச் சேர்ந்தாலும் அனைவரிடமும் கைகுலுக்கி அறிமுகம் செய்துகொள்ள வேண்டும் என்பது அவருடைய இன்னொரு கொள்கை. மற்ற கொள்கைகளை அவ்வப்போது சொல்கிறேன்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 1

அறிமுகப்படலம் முடிந் ததும் முத்துராஜா வந்தார்.

‘‘ரம்யா இதற்கு முன்னாடி பெங்களூர் கூல்டூன்ஸ்ல இருந்தவங்க. அனிமேஷன் கேம்ல நிறைய அனுபவம் இருக்கு. இன்ட்ராக்டிவ் கேம்ஸ்ல எக்ஸ்பெர்ட். ‘ஃபார்ம்வில்லி’ மாதிரி நிறைய கேம்ஸ்ல வொர்க் பண்ணியிருக்காங்க. நாம இப்ப எடுத்திருக்கிற ‘பொன்னியின் செல்வன்’ இன்ட்ராக்டிவ் ஸ்டோரி கேம்ல அவங்களுக்கு சீஃப் அனிமேட்டர் போஸ்ட். எல்லோரும் கோ ஆப்பரேட் பண்ணினா அடுத்த வருஷத்துல முதல் பாகம் முடிச்சுடலாம். என்ன சொல்றீங்க?’’ என்றார் மௌனம் கலைக்கும் விதமாக.

‘‘ஷ்யூர் சார்!’’ என்றனர் மொத்தமாக.

முத்துராஜா தம்ஸ் அப் காட்டிவிட்டு, கண்ணாடிச் சுவரால் ஆன அறைக்குள் போய் அமர்ந்தார். சற்று நேரத்தில் ஒரு இன் ஹவுஸ் மெயில். ரம்யாவிடமிருந்துதான். ‘12 மணிக்கு மீட்டிங் ஹாலுக்கு வரவும்.’ முதலாளி, காசாளர், மேலாளர், உதவியாளர்... இந்த நான்கு பேரைத் தவிர அனைவரையும் அழைத்திருந்தாள். மணி 11.25. வெளியே போய் டீயும் தம்மும் போட்டுவிட்டு வந்து அமரலாமா என வினோத் நினைத்தான். ஒருவேளை அவளுக்கு சிகரெட் வாசம் பிடிக்காமல் போனால்? வினோத்துக்கு, அவளைத் தன் வழிக்குக் கொண்டு வந்துவிட முடியும் என பித்ருக்கள் வாக்காக உள்ளே ஒலித்தது. பழைமையும் புதுமையும் கலந்த கலவையாகக் கவரும் அவளைக் காதலிக்கலாமா, கல்யாணம் செய்து கொள்ளலாமா என மன நாணயத்தைச் சுண்டிவிட்டான். கல்யாணம்!

நீள் கோளமான அந்த மேசையின் ஒரு கூர் பகுதியில் அவள் இருந்தாள். பவர் பாயின்ட் பிரசன்டேஷனுக்கான ஆயத்தங்கள் இருந்தன.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 1

‘‘தமிழ்ல பல லட்சம் பிரதிகள் விற்ற ஒரே நாவல் இதுதான். பொன்னியின் செல்வன். மக்களுக்கு இதன் மேல இருக்கிற கிரேஸ் ஒவ்வொரு வருஷமும் அதிகமாகிட்டே இருக்கு. முதல் பாகம், புதுவெள்ளம். இதை முடிக்க நமக்கு ஒரு வருஷம்தான் டைம். ஆடித் திருநாள்ல இருந்து மாய மோகினி வரைக்கும் 57 அத்தியாயங்கள். இதெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஒரு வருஷமா இந்த வேலையாத்தான் இருந்திருக்கீங்க. ஆனா, அதை எப்படி ஷெட்யூல் பண்ணி முடிக்கலாம்னு திட்டமிடணும். மெயின் கேரக்டர் அத்தனையையும் நீங்க ரெடி பண்ணியாச்சுன்னு எம்.டி சொன்னார். ஒவ்வொரு சேப்டரையும் விளையாடி ஜெயிச்சாதான் அடுத்த அத்தியாயத்துக்குப் போகமுடியும். அதுதான் இந்த கேம்ல சேலஞ்ச்.’’

‘‘புது வெள்ளம், விண்ணகரக் கோயில் ரெண்டும் ஆல்மோஸ்ட் முடிஞ்சுருச்சு.’’ வினோத் சொன்னான்.

‘‘பார்த்தேன். இன்னும் 55 சேப்டர்ஸ். நம்ம கையில இருப்பது 365 நாள்கள். வினோத், நீங்கதான் ஷெட்யூல் பிரிக்கணும். நம்மகிட்ட மாடல், டெக்ஸர், பேக்கிரவுண்டு எல்லாமே கிட்டத்தட்ட ரெடியா இருக்கு. குவாலிட்டி கன்ட்ரோல் நான் பார்க்கிறேன். வினோத், நீங்க ஷெட்யூலோட நாளைக்கு வாங்க. டிஸ்கஸ் பண்ணுவோம். ரிக்கிங், கம்போசிட்டிங், ரெண்டரிங் எல்லா வேலையையும் பிரிச்சுக்குவோம். எல்லாருக்கும் எல்லாம் தெரியணும். ஒவ்வொண்ணுல எக்ஸ்பெர்ட்டா இருக்கணும். ஓ.கே.?’’

‘‘ஓ.கே.’’- ரம்யாவைத் தவிர்த்த குரல்கள்.

சிரித்து தம்ஸ் அப் காட்டினாள். ‘‘மீட்டிங் ஓவர். அனிமேட்டர்ஸ் மட்டும் இங்க இருங்க.’’ கச்சிதமாகப் பேசவும் தெரிந்திருந்தாள். வினோத் மனத்தில் மதிப்பெண் கூடிக்கொண்டே இருந்தது.

ஐந்து பேர் மட்டும் அமர்ந்திருந்தனர். மற்றவரில் கடைசி நபரும் அறையைவிட்டுக் கலையும்வரை காத்திருந்தாள் ரம்யா. ‘‘வந்தியத்தேவன் குதிரையில வர்றார். ஆனா, அது பறக்கும் குதிரை மாதிரி இருக்கு. அனிமேஷன்ல எல்லாருமே ஒரு மாதிரி மிதந்துக்கிட்டே இருக்காப்ல இருக்கு. அனிமேட்டட் ஆசாமியா இருந்தாலும், அவங்களுக்குச் சரியான கிராவிட்டி கொடுக்கணும். ஐ வில் எக்ஸ்ப்ளைன்’’ என்றபடி ஆப்பிள் கம்ப்யூட்டரின் விசைப் பலகையை இழுத்து வாகாக வைத்துக்கொண்டாள். ஐந்து பேரும் அவளுக்குப் பின்னே குழுமி நிற்க, விசைப் பலகையில் விரல்களை நடனமாடவிட்டாள். மிக மிருதுவாக அந்த பொத்தான்களை அவள் கையாள்வதே அழகாக இருந்தது.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 1

மாலை 6 மணி சுமாருக்கு வினோத் இருந்த கேபினின் நான்கடி உயரத் தடுப்புப் பலகைமீது கன்னத்தை வைத்து, ‘‘கிளம்பலையா?’’ என்றாள். கண்களால் கேட்டது மாதிரி இருந்தது.

‘‘365 நாள் வேலையை ஒரே நாள்ல கொடுத்து ட்டீங்க. இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்’’ என்றான்.

கட்டைவிரல் தவிர்த்த நான்கு விரல்களால் காற்றிலே ஆர்மோனியம் போல வாசித்து ‘பை’ சொல்லி, புன்னகையோடு கிளம்பினாள்.

யார் யாருக்கு என்னென்ன வேலை, எந்த நாளில் எதை முடிக்க வேண்டும் எனப் பிரமாதமாக வரிசைப்படுத்தியிருந்தான். எப்போது டெக்ஸர்ஸ் முடிக்க வேண்டும், எந்த நாளில் அனிமேஷன், எந்த நாளில் ரெண்டரிங்... எல்லாவற்றையும் கிட்டத்தட்ட வரையறுத்துவிட்டான். யாருக்கு என்ன பணி, முடிக்க எவ்வளவு காலம் ஆகும் எனத் துல்லியமாகக் கணித்திருந்தான். அவன் வகுத்தபடி முடிந்தால் அடுத்த ஆண்டில் பொன்னியின் செல்வன் புதுவெள்ளம் இன்டராக்டிவ் கேம் நிஜமாகவே நிஜமாகிவிடும். சாதிக்க வேண்டும் என்பதிலும் கூடுதலாக ரம்யாவிடம் ஒரு பிரமிப்பைப் பெற்று, மனசாரக் கைகுலுக்க வேண்டும் என்பதிலும்  உள்ளூர ஓர் ஓட்டம் இருந்தது. ‘நாளைக்கு அது சாத்தியப்படலாம்’ என வேலையை முடித்துவிட்டு எழுந்தபோது மணி 9.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 1

‘இவ்வளவு வேலை செய்யும்போது மனுஷனுக்கு ஒரு பியர் வாங்கித் தருவதில் தப்பே இல்லை’ எனத் தன்னைத் தானே தட்டிக் கொடுத்தான். கொஞ்சம் காஸ்ட்லியான பார். பெண்களும் தாகசாந்தி செய்து கொள்வார்கள். தூணுக்குப் பக்கத்தில் எதிரெதிரே ஒற்றை நாற்காலிகளுடன் கொஞ்சம் ரம்மியமான இடம். கோட் போட்ட பேரரிடம் டன்கெல் பியர் ஒன்று சொன்னான். அதன் மால்ட் மணம், ஆர்டர் கொடுக்கும்போதே மூளை வரை சென்றது. ஊடுருவக்கூடிய அரக்குநிற திரவம். நீளமான பருத்த கோப்பையில் வந்தது.

தூரத்தில் அந்தப் பெண்... ஆ... அவளேதான். ரம்யா!

‘என்னது, ரம்யாவா’ என நம்ப மறுத்தது மூளை. அவள் அணிந்திருந்த ஆடை, கிட்டத்தட்ட மார்பிலிருந்துதான் ஆரம்பித்தது. உடையை ஒரு மாதிரி தாங்கிப் பிடித்திருந்ததும் அந்தப் பகுதிதான். முழுமையான கிளப்வேர் காஸ்ட்யூம். ‘அடிப்பாவி’ என முனகியது, யாரேனும் கேட்க விரும்பியிருந்தால் கேட்டிருக்கும். அவளுடன் சிவப்பான கட்டழகன் ஒருவன் இருந்தான். வினோத் மெல்லிய காதல் தோல்விக்கு ஆட்பட்டு, பொறாமையுடன் அவனைப் பார்த்தான். டேபிளுக்குக் கீழே இருவரின் கால்களும் உரசிக்கொண்டிருந்தன. உரசுவதற்குத் தோதாக பெர்முடா போட்டிருந்தான். சிவந்த உதட்டுக்கு மேலே மீசை கச்சிதமாக இருந்தது. கறுப்பான தலைமுடி. உதட்டில் ஒரு சிகரெட் எந்தத் தருணத்திலும் விழக்கூடிய நிலையில் தொங்கிக்கொண்டிருந்தது. ரம்யாவும் நிறைய குடித்ததுபோல இருந்தாள். முடிந்தவரை அவள் கண்ணில் படாமல் இங்கிருந்து போய்விட வேண்டும் என வினோத் நினைத்தான். தூண் வசதியாக இருந்தது. பியரை முடித்துவிட்டு அந்த டேபிளை மெதுவாகப் பார்த்தான். டேபிள் காலியாக இருந்தது. அதிர்ச்சியில் மனம் புண்ணாகியிருந்தது. ‘அதற்காக இப்படியா? சே.’ ஒரே நாளில் பட்டினத்தார் மனநிலைக்கு வந்துவிட்டான்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 1

பார்க்கிங் பகுதி வெறுமையாக இருந்தது. திடீரென ஒரு மரத்தின் மறைவிலிருந்து ரம்யா எதிர்ப்பட்டாள். ஆனால், வினோத்தை அவள் கவனித்ததுமாதிரி காட்டிக்கொள்ளவில்லை. நேராகப் பார்த்தது மாதிரியும் இருந்தது. திரும்பிப் பார்ப்பாள் என நினைத்தான். இல்லை. இருட்டு, போதை, அலட்சியம் எல்லாம் இருந்தது அந்தக் கண்களில். கான்டாக்ட் லென்ஸ் போட்டிருந்தாள். பாம்புக் கண் மாதிரி நீலமாக இருந்தது. 90 சதவிகித கால்கள் தெரிய, நிதானமாக வெளியேறிக்கொண்டிருந்தாள். அந்தப் இளைஞனைக் காணவில்லை. வினோத், பைக் இருந்த இடத்தை நோக்கிச் சென்றபோது ஒரு காரின் பின் கதவு தேவையில்லாமல் திறந்துகிடந்தது. மிகச் சிறிய சமூக சேவையாகப் பாவித்து அதை மூட எத்தனிக்.. ரம்யாவுடன் இருந்த அந்தச் சிவந்த உதடுடைய இளைஞன் அதில் உருக்குலைந்து சாய்ந்துகிடப்பது தெரிந்தது. வாயிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அவன் உயிருடன் இல்லை.

(தொடரும்...)