Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 2

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 2
பிரீமியம் ஸ்டோரி
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 2

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 2

தமிழ்மகன்

Published:Updated:
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 2
பிரீமியம் ஸ்டோரி
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 2

வினோத் சப்தமில்லாமல் அங்கிருந்து வெளியேறினான். ரம்யா எந்தப் பக்கம் போனாள் எனத் தெரியவில்லை. சாலையின் இரண்டு பக்கங்களும் வெறிச்சோடிக் கிடந்தன. ஏதோ ஆட்டோ பிடித்துப் பறந்திருப்பாள். வினோத், மனத்துக்குள் ரீவைண்டு செய்து பார்த்தான். மரத்தின் பின்னாலிருந்துதான் ரம்யா வெளியேறியதுபோல இருந்தது. மரத்தின் அருகேதான் அந்த கார் நின்றிருந்தது. அவள் அந்தக் காரிலிருந்துதான் வெளியே வந்திருக்க வேண்டும். மரத்துக்கு அப்பால் சுவர் மட்டுமே இருந்தது. கொல்லும் வாய்ப்பு அவளுக்கு மட்டும்தான் இருந்தது.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 2

நினைக்கும்போதே சிலிர்த்து, ரோமங்கள் குத்திட்டு நின்றன. பியர் சாப்பிட்ட தடயமே இல்லை. போதை வழிக்கப்பட்டு நின்றிருந்தான். மணி 11. பார் மூடும் நேரம். ஒவ்வொருவராக வெளியே வருவார்கள். இன்னேரம் யாராவது காரைப் பார்த்திருப்பார்கள். இங்கே நிற்பது பிரச்னை. பைக்கை வீட்டை நோக்கித் திருப்பினான். அவனுக்குச் சற்றே நடுக்கமாக இருந்தது. வண்டியைச் சாலையோரக் கடையில் நிறுத்தி ஒரு சிகரெட் வாங்கிப் புகைத்தான். ‘நாம் எதையும் பார்க்கவில்லை...’ மூளை முணுமுணுத்தது. கார் கதவில் கை வைக்கவில்லை என்பது நன்றாக நினை விருந்தது. அந்த இருட்டுப் பகுதியில் கேமரா பொருத்தியிருக்க மாட்டார்கள் எனவும் நம்பினான்.

பைக்கை எடுத்துக்கொண்டு சாலையின் முனைக்கு வந்தபோது, திருப்பத்தில் வாகனங்களை போலீஸ்காரர்கள் பரிசோதித்துக்கொண்டிருந்தார்கள். போதை இல்லை என்றாலும் வாசம் காட்டிக்கொடுத்துவிடும். ஃபைன் கட்டச் சொல்வார்கள். திரும்பி எதிர் திசையில் செல்லலாமா எனச் சற்று ஓரம் கட்டி நிலைமையை உத்தேசித்தான். எதிரிலிருந்து வந்தவன், ‘‘பாஸ்... அந்தப் பக்கமும் போலீஸ் நிக்கறாங்க’’ என்றான்.
அவனை நோக்கி டிஃபன்ஸ் புன்னகை புரிந்துவிட்டு, ஆனது ஆகட்டும் என்று பைக்கை எடுத்தான்.

வண்டியை ஓரங்கட்டச் சொல்லி வாயில் ஸ்ட்ரா போன்ற வஸ்துவைச் சொருகி ஊதச் சொன்னார்கள். உடனே பைக்கிலிருந்து சாவியை உருவி எடுத்தார் ஒரு காவலர். ‘‘வண்டியை ஓரமா நிறுத்திட்டு என்கூட வாங்க.’’ அவருடைய அழைப்பில் தெரிந்த விரோதம் அதிகமாக இருந்தது. ஓரமாக நிறுத்திய இடத்தில் வந்து முகத்தை ஏறிட்டார். ‘‘எந்த பார்?’’ என்றார்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 2

வினோத்துக்குப் பொறிதட்டியது. வேறு ஒரு பாரின் பெயரைச் சொல்ல வேண்டும். ‘‘ஆபீஸ் பார்ட்டி சார். சோலா.’’

‘‘என்ன ஆபீஸ்?’’

‘‘அனிடூன் மீடியா.’’

‘‘ப்ரஸ்ஸா?’’

அதையும் பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் கணத்தில் முடிவுசெய்தான். ‘‘புக் வொர்க் போலத்தான் சார். ஆனா அனிமேஷன்ல.’’

‘‘கார்டு காட்டுங்க.’’

அலுவலக கார்டில் இருந்த மீடியா என்ற பதம் கொஞ்சம் காப்பாற்றியது என்றுதான் சொல்ல வேண்டும். அதில் இருந்த அலுவலக முகவரி, போன் நம்பர் அனைத்தையும் குறித்துக் கொண்டார்.

‘‘எதுக்கு சார் இதையெல்லாம் நோட் பண்றீங்க?’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 2

ஏற இறங்கப் பார்த்தார். ‘இந்தக் கேள்வியெல்லாம் நீ கேட்கக் கூடாது’ என்ற பார்வை. ஒரு கட்டத்தில் சொல்லிவிடுவார் என நினைத்து, அவர் முகத்தையே வினோத் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஒரு கொலையைச் செய்துவிட்டு வந்த தடயம் தெரியவில்லை என உணர்ந்திருக்கலாம்.

‘‘பக்கத்து பார்ல ஒரு கொலை.’’

‘‘அய்யோ சார்!’’

‘‘தேவைப்பட்டா கூப்பிடுவோம்.’’

‘‘சார்... எனக்கு ஒண்ணும் தெரியாது சார்!’’

‘‘குடிச்சுட்டு வர்ற எல்லோரையும் செக் பண்ணச் சொல்லி அலெர்ட் குடுத்திருக்காங்க.’’

‘‘நா வேற பார் சார்.’’

‘‘வேற பாரா? அப்ப எந்த பார்ல கொலை நடந்ததுன்னு தெரியுமா?’’

‘‘நான் குடிச்ச பார்ல நடக்கலை சார்.’’

‘‘தேவைப்பட்டா கூப்பிடுவோம். எங்க தங்கியிருக்கீங்க?’’

‘‘கீழ்பாக்கம் குளோபஸ் காலனி.’’

‘‘மேரிட்?’’

‘‘பேச்சலர் சார்.’’

‘‘கிளம்புங்க.’’

‘‘ஓகே சார்!’’

‘‘அடுத்த தடவை பிடிச்சா லைசென்ஸை கேன்சல் பண்ணிடுவேன்.’’

‘‘இல்ல சார். ஸாரி சார்.’’

இதையெல்லாம் எதிர்பார்க்காமல் அடுத்து பைக்கில் வந்தவனை விசாரிக்கப் போய் விட்டார். வினோத் பைக்கை எடுத்துக்கொண்டு சந்தேகத்துக்கு இடம் தராமல் கிளம்பினான். அவனுக்குள் பதற்றம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. ‘எப்படியும் இரவே ரம்யா கைதாகி விடுவாள். எப்படியும் பாரில் கேமரா இருந்திருக்கும். போலீஸ் இன்னேரம் அந்தப் பையனின் ஜாதகத்தை அலசியிருக்கும். அவனுடன் இருந்த  இந்தப் பெண்ணை விசாரிப்பார்கள். இருவரும் ஒன்றாகக் கிளம்புவதை... பார்க்கிங் நோக்கிச் செல்வதை... நாம் போவதையும் அல்லவா பார்த்திருப்பார்கள்?’ என யோசனையின் குறுக்கே பயந்தான்.

அடுக்குமாடிக் குடியிருப்பின் வாட்ச்மேன் நள்ளிரவில் குட்மார்னிங் சொன்னார். பார்க்கும்போதெல்லாம் அதைத்தான் சொல்வார். ‘‘காலைல ஒரு லெட்டர் வந்துது சார். லெட்டர் பாக்ஸ்ல பாருங்க.’’

‘‘சரி.’’

அப்பாவிடமிருந்து வந்திருந்தது. கவரைக் கிழித்துப் படித்துக்கொண்டே படியேறினான். அவசரமாக ஐம்பதாயிரம் வேண்டும் என்பதுதான் சாரம். போனிலும் இரண்டு நாள்களாக அதைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். சோபாவில் போய் விழுந்தான். அவனுக்கு மட்டுமேயான சிங்கிள் ரூம் அப்பார்ட்மென்ட். ஆங்காங்கே கிடந்த சிகரெட் துண்டுகள், நேற்று சாப்பிட்டுவிட்டுச் சுருட்டிப் போட்ட பரோட்டா மிச்சம் எல்லாம் சேர்ந்து ஒரு கலவையான வாசனை அடித்தது.

வாயிலிருந்து ரத்தம்... நிலைகுலைந்த உடல்... கார் பார்க்கிங்... பார்... குளோஸ் சர்க்யூட் கேமரா... சப் இன்ஸ்பெக்டர்... வரிசையாக நினைவுக்கு வந்தன. ‘ரம்யா... யார் நீ? காலையில் ஒரு டிசைனிலும் இரவில் இன்னொரு டிசைனிலும் தோற்றமளித்தது ஏன்? கொன்றது ஏன்? காரில் வைத்து உன்னை ஏதேனும் செய்தானா? உன்னைக் காப்பாற்றிக்கொள்ளத்தான் கொன்றாயா? காப்பாற்றிக்கொள்வதற்கான ஒரு நோக்கமும் உன்னிடம் தெரியவில்லையே? பணத்துக்காகக் கொன்றாயா? சாதாரணமாக நடந்துபோனாயே? நீீ எங்கே இருக்கிறாய்? எங்கிருந்து வந்தாய்? எல்லாவற்றையும் கண்டுபிடிக்கிறேன். முத்துராஜா ‘கூல்டூன்ஸ்’ எனச் சொன்னதாக ஞாபகம். விசாரிக்கிறேன். அங்கே உன் ராவடிகளைக் கண்டுபிடிக்கிறேன். போலீஸ் வரட்டும்... எல்லாவற்றையும் சொல்கிறேன்.’

டி.வி-யைப் போட்டான். ‘பாரில் நடந்த கொலை’ என அதற்குள் ப்ரேக்கிங் நியூஸ் போட்டார்கள். ஹெச்.பி.ஓ-வில் பல தடவை பார்த்த ‘அல்மைட்டி’ படத்தையே போட்டிருந்தார்கள். தூக்கம் வருவதற்கு அது போதுமானதாக இருந்தது. டி.வி-யை சைலன்ட் மோடில் போட்டுவிட்டு, கண் சொக்கும் வரை பார்த்தபடி இருந்தான். சோபாவிலேயே தூங்கி எழுந்தபோது, யாரும் படபடவென கதவைத்தட்டியதால், தான்  எழுந்திருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டான். டி.வி-யில் ஹாரிசன் போர்டு ஓடிக்கொண்டிருந்தார். நிறுத்தினான். மணி 9.10. பாத்ரூமிலிருந்து பேன்ட் சட்டைக்குள் நுழைந்தான். தமிழ் நியூஸ் சேனலில் ‘கண்டுபிடித்துவிட்டார்களா’ எனப் பார்த்தான். ஏதோ ஓர் அமைச்சர் வீட்டில் ரெய்டு நடந்துகொண்டிருந்தது. பார் பற்றிக் கேட்‘பார்’ இல்லை.

அலுவலக பார்க்கிங். ரம்யாவை எப்படி எதிர்கொள்வது என்று பயமாகத்தான் இருந்தது. இன்று போலீஸில் சிக்கப் போகிறவள். எங்காவது ஹோட்டலில் நிறுத்திச் சாப்பிடாமல்கூட வந்தான். அவள் செய்த கொலைக்கான காரணத்தை அறியவேண்டும்.

வினோத் நுழைந்தபோதே அவள் இருந்தாள். நேற்று காலையில் பார்த்த அதே பளிச். கண்ணாடி அறைக்குள்ளிருந்து கவனித்துவிட்டுக் கையசைத்தாள். வினோத் மோப்ப நாய் போல அவளையே பார்த்தபடி அங்கே சென்று நின்றான். ‘கையும் களவுமாகக் கவ்வ வேண்டும்.’

‘‘வெல்டன் வினோத். ஷெட்யூலிங் சூப்பர்ப்’’ என்றாள். கண்களில் துளி கல்மிஷம் இல்லை. அதே பூச்சரம், சந்தனம், குங்குமம். வினோத் பார்த்துக்கொண்டே இருந்தான்.

‘‘ஒரு வருஷத்தில நிச்சயம் அச்சீவ் பண்ண முடியும். எம்.டி வரட்டும். ரெண்டு பேரும் போய்ப் பேசிடுவோம்.’’

‘நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறவ பேசுற பேச்சா?’

‘‘என்ன வினோத்... ஒரு மாதிரியா இருக்கே?’’

‘‘நத்திங்.’’

அதே நேரத்தில் டெலிபோன் அடித்தது.

‘‘யாரு? இன்ஸ்பெக்டர்... ஓகே... உங்களுக்கு யார் வேணும்... ரிகார்டிங்? இல்லையே... ஓ காட்.’’

வினோத் ‘இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்க வில்லை’ என்ற பாவனையில் பார்த்துக் கொண்டிருந்தான். ஆபீஸில் ஒவ்வொருவராக வந்துவிட்டிருந்தனர். 19 பேர் கொண்ட குழு இருந்தது. கண்ணாடி வழியே எல்லோரையும் பார்த்தான். இன்னும் சில நிமிடங்களில் எல்லோரும் அடையப் போகிற அதிர்ச்சியை உத்தேசித்தான்.

‘‘வினோத்...’’ என்றாள் ரம்யா. ‘‘உனக்குத்தான் போன்... ஏதோ இன்ஸ்பெக்டர் பேசுறார். நேத்து உன்னை விசாரிச்சாராமே? இந்தா பேசு.’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 2

வினோத், ‘‘எஸ் ஸார்’’ என்றான் சற்றே பயமில்லாமல்.

‘‘வினோத்... நான் இன்ஸ்பெக்டர் ரமேஷ். நேத்து நீங்க எந்த பார்ல இருந்தீங்கன்னு தெரியும். அந்த பார்ல உங்க ஆபீஸ் பார்ட்டி எதுவும் நடக்கலைன்னு மேடம் சொன்னாங்க. எல்லா வீடியோ ஃபைலும் கையில இருக்கு. நீங்க ஏன் கொலை பண்ணீங்கன்னு தெரியணும். நான் உங்க ஆபீஸ் வாசல்ல நின்னுதான் பேசிக்கிட்டு இருக்கேன். கொஞ்சம் மரியாதையா சரண்டர் ஆனீங்கன்னா நல்லா இருக்கும். வெளிய வாங்க’’ என்றது குரல்.

‘‘சார்... என்ன சார் சொல்றீங்க?’’

‘‘நேர்ல வாங்க மிச்சத்தைச் சொல்றேன். இந்த ஆபீஸுக்கு இது ஒண்ணுதான் வழின்னு தெரியும்.’’

வினோத் போனை வைத்துவிட்டு ரம்யாவைப் பார்த்தான். அவள், ‘‘என்ன சொல்றாரு... ஒண்ணுமே புரியலை’’ என்றாள். ‘செய்றதையும் செஞ்சுட்டு புரியலையா... என்ன நெஞ்சழுத்தம்?’ நேற்று பார்ட்டி ட்ரஸ்ஸில் பார்த்தது நினைவுக்கு வந்தது. ‘போய் எல்லாவற்றையும் இனஸ்பெக்டரிடம் சொல்கிறேன். இருடீ.’

வினோத் வெளியே வந்தான். இன்ஸ்பெக்டர் ரமேஷ். நேற்று ஊதச் சொல்லி செக் செய்தவர். புன்னகையுடன் தோளில் கைபோட்டுக் கீழே அழைத்துச் சென்றார். சாலையில் இருந்தபடி அலுவலக மாடியைப் பார்த்தான். ரம்யா ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

(தொடரும்...)