Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 3

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 3
பிரீமியம் ஸ்டோரி
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 3

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 3

தமிழ்மகன்

Published:Updated:
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 3
பிரீமியம் ஸ்டோரி
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 3

கையில் விலங்கு மாட்டாமல் அழைத்துச் செல்வதில் சற்றே குற்றவுணர்வு குறைந்திருந்தது. ஆனால், தோளில் இருந்த கையில் நட்பு இல்லை. கீழே வந்து ஜீப்பின் பின் சீட்டில் ஏறச் சொல்லி, அவரும் பக்கத்தில் உட்கார்ந்தார். வினோத், ‘‘சார்... என் மேல சந்தேகப்படாதீங்க சார்!’’ என்றான்.

‘‘ஏன்?’’

‘‘நேத்து நான் பியர் சாப்பிட்டிருந்தேன். போலீஸ் செக் பண்றாங்கன்னதும் கொஞ்சம் பதறிட்டேன். இல்லாட்டி நேத்தே எல்லா உண்மைகளையும் சொல்லியிருப்பேன்.’’

‘‘இன்னைக்கும் சொல்லலாம். டயம் இருக்கு’’ குரலில் எச்சரிக்கை, அனுமதி இரண்டும் இருந்தன. வினோத் வெறுமையாக விழுங்கினான்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 3

‘‘நான் பைக்கை எடுக்கும்போது ஒருத்தன் கார்ல வாயைப் பிளந்துக்கிட்டுச் சாஞ்சியிருந்தான் சார். கிட்ட போய்ப் பார்த்தேன். வாய்ல ரத்தம் இருந்துச்சு. பயந்துட்டேன். எதுக்கு வீண் பிரச்னைனு உடனே அங்கிருந்து கிளம்பிட்டேன். போலீஸ் செக் பண்ணும்போது வேற பாரைச் சொன்னா நாம இந்த வம்புல மாட்டாம இருக்கலாம்னு நினைச்சேன். அவ்வளவுதான் சார்.’’

இன்ஸ்பெக்டரின் புன்னகையில் கேலியும், கண்களில் சந்தேகமும் இருந்தன. கார் கிளம்பியது. எழும்பூர் குழந்தைகள்நல மருத்துவமனையைக் கடந்து போலீஸ் ஸ்டேஷன் வாசலில் நின்றது. காரிலிருந்து இறங்கி, வினோத் இறங்குகிறவரை கதவைப் பிடித்தபடி நின்றிருந்தார். ‘மரியாதையா, வெச்சு செய்வதற்கா?’ அச்சத்துடன் இறங்கினான். ‘‘எனக்கு வேற எதுவும் தெரியாது சார். பொய் சொல்லிட்டேன்... அதுதான் நான் பண்ண தப்பு’’ என்றான், உண்மையை ஏற்று மன்னித்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன்.

‘‘கொஞ்ச நேரத்தில தெரிஞ்சுடும்’’ என்றார்.

‘‘சார், நான் என் ஆபீஸுக்கு ஒரு போன் பண்ணிக்கட்டுமா?’’

அவனுடைய செல்போனை வாங்கிக்கொண்டார். ‘‘நானே பண்றேன்... வாங்க.’’

‘ரம்யாவை அங்கே பார்த்ததைச் சொல்லிவிட்டால் தப்பிக்க முடியும்’ என நினைத்தான். ஏனோ உதடு சம்மதிக்கவில்லை. தொட்டிக்கு ஓட்டி வந்த ஆடு மாதிரி விருப்பமின்றிப் பின்தொடர்ந்தான். இன்ஸ்பெக்டர் உட்காரச் சொன்ன நாற்காலியின் ஒரு காலில், ஜட்டியோடு இருந்த ஒருவனை சங்கிலியால் பூட்டியிருந்தனர். அவன் நாற்காலிக்கு மிக அருகில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தான். உட்காரச் சங்கடப்பட்டு நின்றபடியே இருந்தான்.

‘‘உட்கார் மிஸ்டர்.’’

வினோத் உடனே உட்கார்ந்தான். ‘‘உரிச்சிடவா?’’ என இன்ஸ்பெக்டரைப் பார்த்துக் கேட்டார் ஹெட் கான்ஸ்டபிள். இன்ஸ்பெக்டர் ‘இரு’ என்பதுபோல் ஜாடை காட்டினார்.

வினோத்துக்கு நாடி ஆடியது. உரிப்பது என்றால் சட்டை, பேன்டைக் கழற்றி ஜட்டியோடு உட்காரவைப்பது எனக் கேள்விப்பட்டிருக்கிறான். உடன் படித்த வேலு, வள்ளியூரில் கான்ஸ்டபிளாக இருக்கிறான். ‘போலீஸுக்கு ஐம்பது சதவிகித சந்தேகம் வந்துவிட்டால், எதிர்பார்க்காத நேரத்தில் பிடறியில் ஒரு அடி அடித்து முட்டிபோட்டு உட்கார வைப்பார்கள். கொஞ்ச நேரம் லட்டியால் வெளுப்பார்கள். உள்ளங்கையில் மை தடவி ரேகை எடுப்பார்கள்’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறான். ‘போலீஸ் என்ன எதிர்பார்க்கிறதோ, அதையே சொல்லிவிடுவதுதான் பலத்த அடியிலிருந்து தப்பிக்க ஒரே வழி’ எனச் சொல்லியிருந்தான்.

இன்ஸ்பெக்டர் தீவிரமாக யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தார். போன் முடிவில் உரிப்பதைப் பற்றிய தலையசைப்பு இருக்கலாம். போலீஸ் ஸ்டேஷனுக்காகவே கட்டப்பட்ட பழைய கட்டடம். பழங்கால வெள்ளைநிற பெரிய சைஸ் ஃபேன் ஒன்று சோம்பலாகச் சுற்றிக்கொண்டிருந்தது. ரைட்டர் என்பவர் சபரிமலை செல்வதற்கான அடையாளங்களுடன் சந்தனம், குங்குமம், விபூதி இட்ட நெற்றியுடன் சால்ட் பெப்பர் தாடி வைத்திருந்தார். அவர் தவிர இன்னும் மூன்று போலீஸ்காரர்கள் அங்கே இருந்தனர். வேட்டைக்குத் தயார் போல முறைத்துப் பார்த்துக்கொண்டி ருந்தனர். இன்ஸ்பெக்டரின் ஆணைக்காகக் காத்திருப்பது தெரிந்தது. ‘‘ரம்யா தான் கொன்றாள். அவளைக் காட்டுகிறேன்’’ என முதல் அடி விழுவதற்குள் கத்திவிட வேண்டும்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 3

போன் பேசிவிட்டு இன்ஸ்பெக்டர், ரைட்டரை நோக்கி வந்தார். ‘‘அட்ரஸ் வாங்கிக்கிட்டு இவரை அனுப்பிடு’’ என்றார். முகம் சாதாரணமாக இருந்தது. குரல் இனிமையாக இருந்ததாகவும் தோன்றியது. ரைட்டரிடம் அட்ரஸைக் கொடுத்துவிட்டு உடனே வெளியேற வேண்டும் என்பது மட்டும்தான் அவன் நோக்கமாக இருந்தது. ‘‘வர்றேன் சார்’’ எனக் கும்பிட்டான்.

போனைத் திருப்பிக்கொடுத்து, ‘‘வேற ஏதாவது விஷயம் தெரிஞ்சா சொல்லணும்’’ என்றார் வீறாப்பு குறையாமல். வினோத் தலையசைத்தான். ‘‘கிளம்புங்க.’’ ரம்யா பற்றிச் சொல்லிவிட மூளை வரை வந்த வாக்கியத்தை, இதயம் தடுத்தது. யோசனையோடும் தயக்கத்தோடும் நடந்தான். ஸ்டேஷன் வாசலைத் தாண்டுகிற வரை தப்பித்தது உறுதியில்லைபோல இருந்தது. முதுகில் கண்கள் மொய்ப்பதை உணர முடிந்தது. திரும்பிப்பார்க்காமல் வெளியே வந்து ஜனத்திரளில் கலந்தபோது, நிஜமான ஆக்சிஜனை சுவாசிக்க முடிந்தது.

உச்சிவெயில். பசி எடுத்து அடங்கி விட்டது தெரிந்தது. சில்லென ஏதாவது குடிக்கலாம். ‘ஏன் திடீரெனப் போகச் சொன்னார்கள்’ என ஆச்சர்யமாக இருந்தது. ‘இன்ஸ்பெக்டருக்கு எங்கிருந்தோ தகவல் வந்திருக்கிறது. போன் பேசி முடித்ததும் மிக உறுதியாகப் போகச் சொன்னார். இன்னும் கொஞ்ச நேரத்தில் ரம்யாவைத் தேடி வருவார்கள். ஆனால், அவளும் என்னுடன்தான் வேலை செய்கிறாள் என அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கேமராவில் அவளுடைய முகம் நன்றாகவே பதிவாகியிருக்கும். தொலைக்காட்சிகளில், கொலைகாரி இவள்தான் என விளம்பரம் வரும்...’

அன்னாசிப்பழச்சாறு குடித்தான். ஆட்டோ பிடித்தான். அவன் நெஞ்சமெல்லாம் எரிந்துகொண்டிருந்தாள் ரம்யா. ஆபீஸ் வாசலில் இறங்கிய வேகத்தில் ரம்யாவின் அறையை நோக்கிப் போனான். எம்.டி-யின் அறையில் அவள் இருந்தாள். இருவருமாக அங்கே வரச் சொல்லி அவனை அழைப்பது தெரிந்தது. ரம்யா மட்டும் கவனிக்கும் படியான முறைப்புடன் உள்ளே போனான்.

‘‘போலீஸ் ஜீப்ல போனீங்களாமே... எதுக்கு?’’ என்றார் எம்.டி. வினோத், ரம்யாவைப் பார்த்தான். அவள் தனக்கு சம்பந்தமில்லாத விஷயம்போல மாங்கா காமிக்ஸ் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள். ‘‘யாரோ செஞ்ச கொலைக்கு என்னை விசாரிக்கக் கூப்பிட்டாங்க’’ என்றபடி ரம்யாவைப் பார்த்தான். அவள், ‘‘என்னது... கொலையா?’’ என்றாள்.

‘‘யார் கொன்னதுன்னு போலீஸுக்குத் தெரிஞ்சுடுச்சுன்னு நினைக்கிறேன்.’’

எம்.டி-க்கு ஒன்றும் புரியவில்லை... ‘‘என்ன கொலை... என்ன விசாரணை... உன்னை எதுக்குக் கூப்பிட்டாங்க?’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 3

‘‘சார், அது ஒரு பார்ல நடந்தது. அங்க இருந்தவங்க எல்லாரையும் விசாரிக்கிறாங்க. அவ்ளதான்.’’

‘‘ட்ரிங்க் பண்ணா அப்படித்தான்... நீங்க பேசிக்கிட்டு இருங்க’’ என்ற ரம்யா, கேஷுவலாக வெளியேறி அவளுடைய அறைக்குச் சென்றாள். அவசரமாக யாருடனோ அவள் செல்போனில் பேசுவதை வினோத் கவனித்தான். ‘காப்பாற்றலாமா... காட்டிக்கொடுக்கலாமா... கண்டுபிடிக்கலாமா...’ என பல ‘லாமா’க்கள். ரம்யா தன் ஹேண்ட்பேக்குடன் வந்து, ‘‘லிட்டில் அர்ஜென்ட்... கிளம்பறேன்’’ என வேகமாக வெளியேறினாள்.

பொன்னியின் செல்வனில் பழுவேட்டரையர், நந்தினி போன்றவர்களை மாடலிங்கில் பிரமாதப்படுத்தியிருந்ததைக் காட்டினார் முத்துராஜா. ‘ம்...’, ‘ஆமா’ போன்ற பதில்களில் சீக்கிரமே வெளியே வந்தான். இருக்கைக்கு வந்து அக்கவுன்ட் செக்‌ஷன் ஐஸ்வர்யாவிடம் சொல்லி, ரம்யாவின் முகவரியை அறிந்தான். அது உண்மையான முகவரியாக இருக்குமா? உண்மையாக இருந்தாலும் இரவுக்குள் அவள் வீட்டைக் காலி செய்துவிடுவாள் எனப் படபடத்தது. வீட்டுக்குப் போய்ப் பார்த்துவிட வேண்டும்... அபிராமபுரம், சுப்ரமணியம் தெரு. தப்பிப்பதற்குள் பிடிக்க வேண்டும். பெங்களூரில் என்ன செய்துவிட்டு இங்கு வந்தாள்... எதற்காகக் கொன்றாள்... அவனுக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக இரவில் அப்படி இருந்தாள்?

கிளம்பினான். ஆறு மணி டிராஃபிக் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்தது. பனிக்கால ஈரம் பிசைந்த இரவு. நுங்கம்பாக்கம் சிக்னலில் நின்றபோது, அவசரமாக ஹெல்மெட்டைக் கழற்றி பான் பராக் துப்புகிறவர் களைப் பார்த்தான். சிக்னலுக்குச் சிக்னல் துப்புகிறார்கள். சிலர் செல்போனை எடுத்து மெசேஜ் பார்க்கிறார்கள். சிலர் தலை வாருகிறார்கள். சிலர் ரியர்வியூ கண்ணாடியில் முகம் ரசிக்கிறார்கள். சிக்னலில் செய்ய வேண்டிய கடமைகள் எனச் சில பட்டியல் வைத்திருந்தார்கள்.

கண்ணெதிரே ரம்யா. சாலையைக் கடந்து எதிரில் இருந்த ஒரு கட்டடத்துக்குள் நுழைந்தாள். வினோத் தைக் கவனித்திருக்க வாய்ப்பில்லை. முக்கியமாக, நேற்று பார்த்த அதேபோன்ற ஆடையில்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 3

சிக்னலுக்கு நின்றிருந்த அத்தனை பேரும் பார்த்தார்கள். வாகனங்கள் செல்வதற்கான சிக்னல் விழுந்தது. ஹார்ன் சப்தங்கள் வினோத்தை உசுப்பின. யூடர்ன் அடித்து, அந்தக் கட்டடத்துக்கு வந்தான். ஏதோ மருத்துவமனை. பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினான். ரம்யா எந்தப் பக்கம் போனாள் எனத் தெரியவில்லை.

ரிஸப்ஷனில் பொதுவாகக் கேட்டான்.‘‘இது என்ன ஹாஸ்பிடல்?’’

‘‘உங்களுக்கு என்ன வேணும்... அதைச் சொல்லுங்க?’’

பதில் சொல்ல விருப்பமின்றி நீண்ட நீண்ட காரிடாரில் எல்லா திசைகளிலும் ஓடிப் பார்த்தான். ஆண்கள், பெண்கள், குழந்தைகள்... ‘குழந்தை இல்லைனு கவலை வேண்டாம்’ என போர்டு. இது குழந்தை பிறக்க வைக்கிற மருத்துவமனை என யூகித்தான். மொத்தம் நான்கு மாடிகள். மாடி மாடியாக ஓடினான். மேலே இருந்த மூன்று மாடிகள் தங்குவதற்கான அறைகள், வார்டுகள் போல இருந்தன. கீழே மட்டும் டாக்டர்கள். எங்கே போனாள் எனத் தெரியவில்லை. நான்காவது மாடியின் ஜன்னல் வழியே தற்செயலாகப் பார்த்தபோது... படுவேகமாக ரம்யா வெளியேறுவது தெரிந்தது. லிஃப்ட் பிடித்து வேகமாகக் கீழே வந்தான்.

‘‘சீஃப் டாக்டர் செத்துக்கிடக்கிறாரு. வாயெல்லாம் ஒரே ரத்தம்’’ என்றபடி நர்ஸ் ஒருத்தி கத்திக்கொண்டே ஓடிவந்தாள்.

(தொடரும்...)