“செக்ஸ்னா ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றாங்களே... அது உண்மையா?” என்றாள் மாலினி.

இப்படிக் கேட்கும்போது அவள் கொஞ்சம்கூட வெட்கப்படவில்லை. வெட்கமோ தயக்கமோ கொண்டிருந்தாலும் அதைத் தப்பாகக் கருத இடமில்லை. காரணம், அவளுக்கு 43 வயது ஆகியிருந்தது; கல்யாணமாகிக் குழந்தைகளும் இருந்தன. மேலும் தமிழ்ப்பண்பாடு, தமிழ்ப்பெண்கள்... குறிப்பாக, செக்ஸ் பற்றிப் பேசக்கூடாது என்று தடுத்துவைத்துள்ளது என்று பொதுவாக நம்பப்படுவதாலும், அச்சம், மடம், பயிர்ப்பு வகையறாக்களுக்குள்தான் அவள் புழங்கியாக வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாலும், அவள் வெட்கப்பட்டிருந்தால் அது சரியான காரணமாகவே கருதப்பட்டிருக்கும்.எல்லாவற்றையும்விட, கணவன் அல்லாத ஒருவனிடம் இதைக் கேட்கிற தர்ம சங்கடம், அதனாலும் அவள் முகம் சிவந்து போயிருக்கலாம்தான்... ஆனால், அவளிடம் அப்படியெல்லாம் வேதியியல் மாற்றங்களோ, கலாசாரக் கலவரமோ எதுவுமில்லை. மிகவும் உறுதியாகக் கேட்டாள்.

சொல்லப்போனால், அதைக் கேட்ட சுந்தர்தான் மிரண்டுபோனான். அவள் சொன்னது காதில் சரியாக விழவில்லை என்கிற மாதிரி விழிக்க முயன்றான். ஆனால், அவள் மீண்டும் தெளிவாகத் தனது ஐயத்தை வெளியிட்டாள். அவளிடம் எந்தச் சலனங்களும் இல்லை. கேட்டுவிட்டு, முகத்தை வெகு இயல்பாக வைத்துக் கொண்டாள்.

சுந்தர் தவறாகத் தன்னை நினைக்க மாட்டான் என்று அவளுக்கு நிச்சயமாகத் தெரியும். அவள் அவனுக்கு அன்பான, மதிப்பிற்குரிய, கண்ணியத் திற்குரிய சிநேகிதி; காதலும் சகோதரத்துவமும் தோழமையும் கலந்த உறவு தந்த தைரியத்தால் எழுந்த இந்தக் கேள்வியைக் கேட்க நேரும் இடத்திற்கு வர அவர்கள் நிறைய பேசியிருக் கிறார்கள்; கருத்துச்சண்டை போட்டிருக்கிறார்கள்; நிறைய விவாதித்திருக்கிறார்கள்... எனவே அவன் இந்தக் கேள்வியை நிச்சயம் தவறாக எண்ண மாட்டான்.

சுந்தர் யோசித்தான். மாலினி நிறைய பேசியிருக்கிறாள்... அவள் பீரியட்ஸ் நேரத்து அவஸ்தைகளைக்கூடப் பகிர்ந்திருக்கிறாள்...எனினும் அவள் செக்ஸ் பற்றிக் கேட்கக்கூடும் என்று அவன் நினைத்ததில்லை. அவளது கேள்வியை மீண்டும் உள்வாங்கிக்கொண்டான்.

“செக்ஸ்னா ரொம்ப நல்லா இருக்கும்னு சொல்றாங்களே? அது உண்மையா?”

பொதுவாக நம்மூர்ப் பெண்களின் நிலை இதுதான்... கல்யாணமாகி, குழந்தையும் பெற்றிருப்பார்கள்... ஆனாலும் செக்ஸ் புரிந்து விட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் செக்ஸ் பற்றிய நினைப்புகளோ, சந்தேகங்களோ அவர்களுக்கு வருவதும் தவறு... இப்படியெல்லாம் அவளுக்கான பதிலை யோசித்தவாறே தனது பாதுகாப்பு கருதி தன் வீட்டின் உள்ளே பார்த்தான்...அவன் மனைவி ராதா வீட்டில் இல்லை என்பது உள்ளே பார்த்த பிறகுதான் அவனுக்கு நினைவு வந்தது.
அவள் இருந்திருந்தால் கண்டிப்பாக உடனே திட்ட மாட்டாள் என்றாலும், பொதுவாக ``நமக்கு சம்பந்தம் இல்லாத பொம்பளைங்ககிட்ட ஏன் இவ்வளவு வெட்டிப் பேச்சு?” என்பாள்.

அவள், `எதிர்வீட்டுப் பெண்ணிடம் பேசிய கணவனின் மேல் சந்தேகம். மனைவி தற்கொலை’, `நடத்தையில் சந்தேகம்... அதிர்ச்சியில் மனைவி தீக்குளிப்பு...’ ரக செய்திகளின் நாயகியாக மாறாத அளவிற்கு கணவனின் மீது நம்பிக்கை கொண்டவள்தான் என்றாலும், ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணிடம் நன்றாகப் பழகியிருந்தால் ஒழிய கேட்கத்துணியாத இந்தக் கேள்வியை, கணவன் அல்லாத ஓர் ஆணிடம், அதுவும் தன் வயதைவிடக் குறைந்த ஒருவனிடம் கேட்பதை எப்படி எடுத்துக்கொள்வாள் என்று தெரியவில்லை... மறந்தும் மாலினி கேட்ட இந்தக் கேள்வியை அவளிடம் சொல்லக் கூடாது.

சுந்தர் தன் அப்பார்ட்மென்ட்டைப் பார்த்தான்... அந்த ஃப்ளோரில் பார்க்க யாருமில்லை. அப்படியே இருந்தாலும்கூட எதிரெதிர் வீட்டில் குடியிருக்கும் இருவர் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வார்கள்... அப்படியே பார்த்தாலும், கண்டிப்பாக இந்தப் பகல் பன்னிரண்டு மணிக்கு செக்ஸ் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்க மாட்டார்கள்...

“ஏன், இந்தக் கேள்வியை அவள் தன் கணவனிடம் கேட்கவில்லை?” என்று நினைத்தவாறே தன் பதிலுக்காகக் காத்திருக்கும் மாலினியைப் பார்த்தான். அவளை முதன் முதலாகப் பார்த்தபோது ஏற்பட்டிருந்த அதிர்ச்சி அவனுள் இப்போதும் இருப்பதை அவனால் உணர முடிந்தது.

இந்த அப்பார்ட்மென்ட்டில் ஒரு வீடு காலியாக இருந்தது. வீட்டின் உரிமையாளர் சாவியை அங்கு ஏற்கெனவே குடியிருக்கும் ரத்தினசாமியிடம் கொடுத்து வைத்திருந்தார்.முதற்கட்ட இன்டர்வியூவை ரத்தினசாமி நடத்தினார். எளிய மனிதர்.
“சென்னையிலிருந்து 600 கி.மீ-க்கு மேல் பயணம் செய்து குலதெய்வக்கோயிலுக்குப் போய் வந்ததாகவும், டிக்கெட் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டதாகவும், எனினும் குலதெய்வம் எளியதாகப் பயணத்தை அமைத்துக்கொடுத்ததாகவும்” சொல்லியவாறே சர்க்கரைப்பொங்கலைக் கொடுத்தார் ரத்தினசாமி.

`குலதெய்வத்தின் பணிகளில் இதுவும் ஒன்றுபோலும்...’ என்று சொன்னால், தனக்கு வீடு கிடைக்குமா? சுந்தர் யோசித்தபோது இரண்டாம் கட்ட நேர்காணலுக்காக “மாலினி...” என்றழைத்தார் ரத்தினசாமி.

வெளிப்பட்ட மாலினி மிஞ்சிப்போனால் 40 கிலோவில் இருந்தாள்... பின்னாளில் ராதாகூடக் கேட்டிருக்கிறாள். ``இவ சைஸுக்கு பிரா கிடைக்குமாங்க?”

வறட்சியான புன்னகை. கண்களில் வெறுமை. காபி கொடுக்கும்போது இவ்வளவு ஒல்லியான கையை அவன் இதுவரை பார்த்ததில்லை. நரைக்கத் துவங்கிய முடி.சோடாப்புட்டிக் கண்ணாடி...

“குலதெய்வம் என்ன உங்க டூர் புரோகிராமைக் கவனிக்கற மேனேஜரா..?” என்றாள் வந்தவுடன். அந்தக் கேள்வி ஒத்த கருத்துடைய சுந்தரை ஈர்த்தது.

“இவ்வளவு தூரம் போய் அங்க ஒரு கிராமத்துல இருக்கிற தெய்வத்துக்கு நாமதான் சக்தி கொடுத்துட்டு வரோம்...” என்றாள் தொடர்ந்து. இதை, கணவனை நக்கல் செய்ய வேண்டுமென்று அவள் சொல்லவில்லை.வெகு இயல்பாகச் சொன்னாள்.

அன்று சுந்தருக்கு ஏற்பட்ட பிரமிப்பு தொடர்ந்துகொண்டே இருந்தது. பிறகு, அவளைப் பற்றி அறிந்துகொண்ட சந்தர்ப்பங்களின் போது…

ஒருமுறை சுந்தரின் மகளுக்கு ஜலதோஷம்.மாலினி “அலோபதி கொடுக்காதீங்க...”என்று ஹோமியோபதியை சிபாரிசு செய்தாள். ``அப்படீனா, நல்ல டாக்டரா சொல்லுங்க..?’’ என்ற சுந்தரிடம் “என் மேல நம்பிக்கை இருக்கா? நான் சொன்னா வாங்கிச் சாப்பிடுவீங்களா?” என்றாள்.

அப்போதுதான் அவளுக்கு ஹோமியோபதி மருத்துவம் தெரியும் என்று அவனுக்குத் தெரிய வந்தது. வீட்டிலேயே “மெட்டீரியா மெடிகா” வைத்திருந்தாள். ஒரு கோர்ஸ் படித்திருக்கிறாளாம்.கொஞ்சநாள் அவள் ஒரு ஹோமியோபதி டாக்டரிடம் வேலை பார்த்திருக்கிறாள். அதற்காக அவளுக்கு ஹோமியோபதி மட்டும்தான் தெரியும் என்று சொல்ல முடியாது. அலோபதியும் தெரியும்.வேலைக்கான போட்டித் தேர்வுகள் எழுதிய கால கட்டத்தில் ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்திருக்கிறாள். அவளால் இரண்டு பிரிவுகளின் நல்லதுகெட்டதுகளைப் பற்றிப் பேச முடியும்.

“எங்கம்மாவுக்கு ஒரு டாக்டருக்குத் தெரிகிற அளவுக்கு மெடிசின் தெரியும்...” என்றான் அவள் மகன் பெருமையுடன். ``அம்மாவோட ஆபீஸ்ல எல்லோருமே அம்மாகிட்ட அட்வைஸ் கேப்பாங்க.”

“என்னலாமோ தெரியுங்கறா... எதையாவது சாப்பிட்டு இவ உடம்பைத் தேத்தக் கூடாதா?” என்றாள் ராதா கவலையுடன். அக்காகூட சந்தைக்குப் போனேன்... பலமா காத்தடிக்கக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டே போனேன்...”

வேண்டுதலுக்காக சுந்தர் குடும்பத்துடன் திருப்பதி டூர் போனான். ரத்தினசாமி குடும்பத்தையும் அழைத்தான். காரில் போகும் போது “அங்கிள், அம்மா சூப்பரா ஓட்டுவாங்க” என்றான் மாலினியின் மகன்.

“எங்க, ஓட்டுங்க பாப்போம்...” என்றான் சுந்தர் ஆர்வமுடன். மாலினி கொஞ்சம் மறுத்துவிட்டு ஒப்புக்கொண்டாள். அடுத்து நடந்தவை சுந்தரால் ஆயுளுக்கும் மறக்க முடியாதவை. திருப்பதிக்குப் போகிறோமா, ரேஸ் ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறோமா?

ஏவுகணையின் வேகத்தில் மோதுவதுபோல் சென்று, நொடியில் விலகி, சாலையின் வாகனங்களைச் சட்டெனப் பின்னுக்குத் தள்ளி, ஏதோ கம்ப்யூட்டர் கேமில் நுழைந்தது போல்... அந்த வாகனம் மட்டுமல்ல, அந்தச் சாலையில் உள்ள அத்தனை வாகனங்களும் அவள் கட்டுப்பாட்டில் இருந்தன. `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ சினிமாவில் வருகிற வசனத்தை, மாற்றி “பதினெட்டு வயசுக்குக் கீழே உள்ளவங்க, இதயம் பலவீனமானவங்க, ப்ரக்னென்ட் லேடீஸ் இதுல பயணம் பண்ணாதீங்க...”என்று ராதா ரொம்ப நாள் சொல்லிக்கொண்டே இருந்தாள்.

வழியில் ஒரு வாகனம் கடந்து சென்றது.அதில் ஒரு பிரெஞ்ச் நாட்டுக்காரர், வேகத்தில் மிரண்டு கெட்ட வார்த்தை சொன்னார்.பதிலுக்கு மாலினியும் தன் ஒரு குச்சிக் கையால் ஸ்டியரிங்கைப் பிடித்தவாறு இன்னொரு குச்சிக்கையை உயர்த்தி, வெகு அலட்சியமாகத் தலையை உயர்த்தித் திட்டினாள், பிரெஞ்ச் மொழியில்!

அதற்குப் பிறகு சுந்தர் எதற்கும் ஆச்சர்யப்படவில்லை. ஏனென்றால், அவனது ஆச்சர்ய உணர்வு உச்ச நிலையை எட்டியிருந்தது.

ஒரு காலத்தில் அவள் உள்ளூர்த் தொலைக்காட்சிச் சேனலில் `ஆகவே, நடுவர் அவர்களே...’ என்று முழங்கியிருக்கிறாள்; கவிதை வாசித்திருக்கிறாள்; இவை இன்று, நேற்றிலிருந்து இல்லை... கல்லூரி தினங்களிலிருந்தே, மாநிலம் முழுவதும் பேச்சுப்போட்டிக்கு அவளை அழைத்துச் சென்ற நாவையும், தமிழறிவு கொண்ட மூளையையும் உடையவள். இதைச் சொல்லும்போது “அப்பவே, நான் இவ்வளவு ஒல்லிதான். என்னை யாருமே தப்பான எண்ணத்தோடவே பாக்க மாட்டாங்க...” என்றாள். ``அதனால நான் கத்துக்கிட்ட கராத்தே கலையைக் கடைசி வரை பயன்படுத்த முடியாமலேயே போயிருச்சு...”

என்னது, கராத்தேவும் தெரியுமா?

“கொஞ்சம் விசாரிச்சுப் பாருங்க... அக்கா நாசால சேந்து சந்திர மண்டலத்துக்கோ, செவ்வாய் கிரகத்துக்கோ போறதுக்குக்கூட ஏதாவது பயிற்சி எடுத்திருக்கப் போறாங்க...” என்றாள் ராதா. அவ்விதமான பயிற்சிகள் எடுத்திருக்கவில்லை. ஆனால், சதுரங்க விளையாட்டில் பயிற்சி எடுத்திருக்கிறாள்.

“நாலாம் கிராண்டு மாஸ்டரா வந்திருக்க வேண்டியவ... ம்ம்ம்..! இந்தப் பையனை எல்லாம் ரொம்ப ஈஸியா தோக்கடிச்சுருவேன்... ஆனா, விஸ்வநாதன் ஆனந்த் என்னவோ இந்தத் திணறு திணர்றாரு..” என்றாள், மேக்னஸ் கார்ல்சன் சென்னையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற போது.

அவள் செய்யக்கூடியவள்தான்.

சுந்தர் அவளையே பார்த்தான். கொஞ்சம் சதை போட்டிருந்தால் நன்றாக இருப்பாள்.வெளிறிய உருவம். தலைமுடியில் அடர்த்தி இல்லை. முகத்தில் கொஞ்சம்கூட சந்தோஷம் இல்லை. சொல்லப்போனால், இந்த ஜென்மத்தில் இதுவரை சந்தோஷப்பட்டிருப்பாளா என்றே தெரியவில்லை.

“ஏன் இந்த அக்கா முகம் எப்பவும், எதையோ பறிகொடுத்த மாதிரியே இருக்கு?” என்று ராதா அடிக்கடி விமர்சிப்பாள்.

சுந்தர் மாலினியிடமே இதைக் கேட்டான். ``பெரிய அளவுல நான் சந்தோஷமும் பட்டதில்ல; சோகமும் பட்டதில்ல. ஏன்னா... என் ஜாதகத்துல பன்னிரண்டாம் இடத்துல...’’

என்னது, ஜோசியமும் தெரியுமா?

“அதனாலதான் என்னோட கல்யாணத்துக்கு முன்னாடியே, எனக்கு மணவாழ்க்கை சரியா அமையாதுன்னு தெரியும்... என்னை மதிக்காத ஆணாதிக்கர் ஒருத்தர்தான் எனக்கு அமைவார்னு தெரியும்...”

அன்றுதான் இப்போதெல்லாம் ஏன் இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுவதில்லை என்ற கேள்விக்குப் பதிலும் சொன்னாள். ``அவருக்குப் பிடிக்காதுங்க... எங்க ரெண்டு பேருக்கும் எதுவுமே ஒத்துப்போகாதுங்க. கல்யாணத்துக்கு முன்னாடி நல்ல மாப்பிள்ளை கிடைக்கணும்னு கோயில்ல விளக்குகூடப் போட்டிருக்கேன். இப்ப நினைச்சா, சிரிப்பா இருக்குது. பொண்ணுங்க எல்லாம் கோமாளிங்க... எந்த ஆணாவது தனக்கு நல்ல மனைவி வேணும்னு கோயில்ல விளக்கு போட்டிருக்கானா, சொல்லுங்க...”

“நாங்கெல்லாம் ப்ளான் பண்ணிக்கிட்டாங்க பொண்ணாப் பிறக்குறோம்?” ஒரு ஆணுக்காக ஒரு பொண்ணு அவ அப்பா, அம்மா, குடும்பம், சாதி சனம், அவளோட தெரு மனுசங்க, அவளோட கடவுள்னு அவ அதுவரை வாழ்ந்த வாழ்க்கை எல்லாத்தையுமே தூக்கி எறிஞ்சுட்டு வர்றா... புதிய தெரு, புதிய மனுசங்க, புதிய சாமி, புதிய கோவில்னு ஒரு புது வாழ்க்கை அவ மேல திணிக்கப்படுது... அந்தத் தியாகத்தை மதிக்க வேண்டாம்; அவமானப்படுத்தாமலாவது இருக்கலாமே... அவளை ஏன் இரண்டாம் கட்ட பிரஜையா நடத்தறீங்க..?”

கூடவே, அவள் அவளுக்கும் சுந்தருக்கும் எப்படியெல்லாம் ரசனைகள் ஒத்துப்போகின்றன என்பவற்றையெல்லாம் விவரிக்கத் துவங்கினாள்.புதிய இயக்குநர்களின் படங்கள், தற்போதைய அரசியல் சூழல், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, புத்தகக் கண்காட்சிகள்... எல்லாவற்றையும் பகிர்ந்தாள். ``கடைசீல எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்டு கிடைச்சிருக்கீங்க...” என்றாள்.

ரத்தினசாமியை ஓர் ஆணாதிக்கம் கொண்ட ஆணாக நினைத்துப் பார்க்க சுந்தருக்குக் கஷ்டமாக இருந்தது. அவர் நல்லவர், பழக இனிமையானவர் என்பதைத் தாண்டி அவன் அதற்கு மேல் யோசித்ததில்லை. ஆனால், மனைவிக்கு மட்டுமே தெரிந்த கணவனின் ஒரு பகுதியை, பிறரால் எப்படி அறிந்துகொள்ள முடியும்?

அன்றிரவு சுந்தர் ராதாவிடம் இவற்றைச் சொன்னபோது அவள், ``ஆனா, மாலுக்கா என்கிட்ட என்ன சொன்னாங் கன்னா, அவங்க ஹஸ்பெண்டு மாதிரி ஒருத்தரைப் பாக்கறது அபூர்வம்னு சொன்னாங்க. அவர் கிடைக்கறதுக்கு புண்ணியம் பண்ணியிருக் கணும்னு சொன்னாங்க” என்றாள்.

“அதுமட்டுமா, கணவன் நல்லா இருக்கணுங்கறதுக்காக கோயில்ல ஏதோ விளக்கு போடப் போறாங்களாம்... என்னையும் கூப்பிட்டிருக்காங்க.”

ராதாவுக்கு மாலினியிட மிருந்து வந்த வாட்ஸ் அப் தகவல்படி, ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறை கிரகங்கள் ஒரு நேர்க்கோட்டிலோ, வட்டமாகவோ, தாறுமாறாகவோ சஞ்சரிப்பதாகவும், அவற்றின் நோக்கம் இந்தப் பிறவியில் யாரெல்லாம் கணவன் மனைவியாக இருக்கிறார்களோ, அவர்களை நூறு ஜென்மங்களுக்கு அதே போஸ்டிங்கில் உலவ விடுவதே...

மீண்டும் ஓர் அதிர்ச்சி.

“எனக்கு சமையல் வராது... வேலைக்குப் போற பொம்பளைங்க அப்படித்தான் இருப்பாங்க...” என்றாள் மாலினி.

“கத்துக்குங்க...” என்றான் சுந்தர்.

“நடுத்தர வயசு ஆன்ட்டி நான்... இனிமேல் கத்துக்கிட்டு என்ன சாதிக்கப்போறேன்..? பாதி வாழ்க்கை முடிஞ்சாச்சு. மெனோபாஸ் ஸ்டேஜ்ல இருக்கேன்... இனிமேல்..?”

“பொய்ங்க. அக்கா நல்லா சமைப்பாங்க..அவங்க லோக்கல் சேனல்லகூட சமையல் போட்டீல கலந்திருக்காங்க” என்றாள் ராதா அதிர்ச்சியுடன்.

இதுபோல்...

`இலக்கியத்துக்காக செத்தாக் கூடத் தப்பில்லை... இலக்கியம் சோறு போடுமா?’

`குல தெய்வம் நம்ம குடும்ப டாக்டர் மாதிரி; ஆயிரம் வேலை இருந்தாலும் போட்டுட்டு ஓடிப்போய் கால்ல விழணும்...’

`கலாசாரம், பண்பாடு எல்லாம் சும்மா... ஐயோ, அதுதானே எல்லாம்?’

``ஏன் இப்படி ஸ்ப்லிட் பர்சனாலிட்டியா பேசறா?”

அதிலிருந்து அவன் கவனிக்கத் துவங்கினான்.

மாலினி அவ்வப்போது நாங்குநேரியில் இருக்கும் அவளின் மாமனாரையும் மாமியாரையும் வசவுப்பொருள்களாக எடுத்துக் கொள்வாள். அதன்படி, அவர்கள் கீழ்க்காணும் குணாதிசயங்களைப் பெற்றிருந்தார்கள் அவர்கள் மருமகளை எப்போதுமே திட்டிக்கொண்டே இருக்கும் இயல்பினர். அவர்களுக்கு நரகத்தில் கடும் தண்டனை காத்திருக்கிறது. ஏனென்றால், மருமகளின் தவித்த வாய்க்கு ஒரு வாய் தண்ணீர் தர மறுத்திருக்கிறார்கள். கடவுள் இன்னொரு செய்தியையும் குறித்துக்கொண்டிருப்பார். அது மருமகள் கர்ப்ப வயிற்றுடன் இருக்கும்போது ஒரு பட்டாளத்தையே அழைத்து வந்து விருந்து தயாரிக்கக் கட்டளையிட்டது.

``நாட்டுல போலீஸ் ஸ்டேஷனெலாம் இருக்கப் போய் நானெலாம் உயிரோட இருக்கேன்... இந்தப் போலீஸ் மட்டும் ஒரு நாள் லீவ்ல போய்ட்டாங்கன்னா எங்கடா விஷம்னு அலையுற கூட்டம் இதுங்க. உங்ககிட்ட அணுகுண்டு இருக்குதுனு சொல்லிப்பாருங்க...உங்க கைல கால்ல விழுந்து வாங்கிட்டுப் போய் என்னைத் தீத்துக் கட்டிரும்ங்க.”

ஆனால், அவர்கள் வீட்டிற்கு வந்தபோது சுந்தர் எச்சிலை விழுங்கிக்கொண்டான். ``இந்த அப்பாவி 80,78 வயதுகளில் இருக்கும் கிழவனும் கிழவியுமா திருட்டுத்தனமாய் மண்ணெண்ணெய் சேகரிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்? இவர்களா கூலிப்படைத் தலைவர்கள்? அவர்களோ ரத்தினசாமி என்ன சொன்னாலும் சரி, “எதுக்கும் மாலினியைக் கேட்டுக்கோப்பா... எங்களுக்கு என்ன தெரியும்... அவ புத்திசாலிப் பொண்ணு” என்றோ, ``நீ சொன்னா சரிதாம்மா” என்றோ சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.

எது சரி?

“மாலுக்கா, அவங்க கணவனைப் பத்தி சொன்னதுகூடத் தப்போன்னு தோணுதுங்க. அந்த ஆள் அடிக்கவும் இல்ல... இவளைத் திட்டறதும் இல்ல... ராணி மாதிரிதான் வச்சிருக்காரு. இவதான் அவரைப் பத்தி என்னெலாமோ வாய்ல வந்ததைச் சொல்லீட்டு அலையறா.”

அந்தக் காட்சியையும் சுந்தர் கவனித்திருக்கிறான். அவள்தான் நேரம் கிடைத்த போதெல்லாம் கணவனைத் திட்டியிருக்கிறாளே தவிர, அவர் ஒரு வார்த்தைகூடச் சொன்னதில்லை.அவர் சொன்ன வார்த்தைகள், ``அவ புத்திசாலிங்க... அவ இருக்கப்போய் நான் நிறைய மேட்டர்ல கவனம் செலுத்தாம இருக்கேன்...யாருக்குக் கிடைப்பாங்க, இப்படி ஒரு அறிவான மனைவி? ஜி.எஸ்.டி ஆகட்டும், அடுத்த ஜெனரேஷன் கார் எப்படி இருக்கும்னு சொல்றது ஆகட்டும்... அவளுக்குத் தெரியும்.” அவளது அறிவையும் திறனையும் மதிக்கிற மாதிரிதான் தெரிந்தார்.

மாலும்மா, மாலுக்குட்டி, மாலூச்செல்லம்... என்றெல்லாம் அவரின் அன்பான விளிப்புகள்.

சுந்தருக்குத் தலை சுற்றியது.

“தலை சுத்துது இல்ல, நான் கேட்ட கேள்விக்கு?”

ஆணாதிக்கம். பெண்களுக்கு ஆசை கிடையாதா, உணர்வுகள் கிடையாதா? அவர்கள் உடலில் ஓடுவது ஒன்றும் பெட்ரோல் இல்லையே? தொடர்ந்து சகட்டுமேனிக்குத் திட்டு வாங்கியது சமூகம்.

அவன் அவளையே பார்த்தான்.

இவளிடம் என்ன சொல்ல? எதைச் சொன்னாலும் தப்பாகிவிடும்.சொல்லாவிட்டாலும் தப்பாகிவிடும்.

“அது, அவங்கவங்க அன்பையும் ஆசையையும் பொறுத்தது... நம்ம முயற்சிகள் எல்லாமே அடுத்தவங்க அன்புக்காகவும், அதை அடையறதுக்கும் எடுக்கப்படும் செயல்கள்தானே? செக்ஸ்ங்கறது அன்பை உடல் மூலமாகவும் வெளிப்படுத்தற ஒண்ணுதானே?” என்றான் யோசித்து.

இந்த ரீதியில் உரையாடல் தொடர்ந்தது.

“இப்போ நாம சாப்பிடற சாப்பாட்டையே எடுத்துக் குங்க... ஏனோதானோன்னும் சாப்பிடலாம். அழகா, அனுபவிச்சு, தெய்வத்துக்கு நன்றி சொல்லி, பரவசமாவும் சாப்பிடலாம்...அதுபோலத்தான்.”

அவள் வெகு கவனத்துடன் கேட்டுக் கொண்டாள். ``கரெக்ட்தான்” என்றாள். நன்றி சொல்லுகிற மாதிரி விடைபெற்று உள்ளே சென்றாள்.

உள்ளே வந்ததும் நிதானமாக, கண்ணாடித்தொட்டியில் நீந்திக்கொண்டிருந்த மீன்களுக்கு உணவிட்டாள். சலனமின்றிப் பார்த்தவளின் மூளைக்குள் ஒரு சில கேள்விகள் புகுந்தன.

“சே... போயும் போயும் தம்பிபோலவும் தோழன் போலவும் உள்ளவனிடமா போய் இந்தக் கேள்வியைக் கேட்டேன்..? வேறு யாருக்காவது தெரிந்தால் என்ன நினைப்பார்கள்..? அவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்? செக்ஸுக்கு அலைபவளாக, காம வெறி பிடித்த பெண்ணாக, அவனிடம் எதையோ எதிர்பார்க்கும் பெண்ணாக அவளை நினைக்க வாய்ப்பு இருக்கிறது.அவனிடம் ஏன் கேட்கத்தோன்றியது? ஒருவேளை என்னை அவனிடம் அசாதாரணப் பெண்ணாகக் காட்டிக் கொள்ள விரும்பினேனோ? ஆமாம், செக்ஸ் உண்மையிலேயே நன்றாக இருக்குமா? இல்லா விட்டால், உலகம் ஏன் அதன் பின்னால் சுற்ற வேண்டும்?

அவளுக்கு அவளைப் பார்க்கவே அசிங்கமாக இருந்தது. தனது இருண்ட பக்கம் அவனுக்கும், அவன் மூலம் உலகிற்கும் தெரிந்து விட்டதாகவே நம்பினாள். இனி அவன் கண்ணில் படுகிற ஒவ்வொரு நொடியும் அந்தக் கேள்வியுடனேயே அவன் அவளைப் பார்ப்பான்; அந்தக் கணங்கள் அவளுக்குக் கூச்சம் தரும்.எதையாவது செய்து அவன் கண்களிலிருந்து மறைந்து போக முடிந்தால் நல்லது. அல்லது, கேள்வி கேட்ட நொடியை அழிக்க முடிந்தால் நல்லது...

ஆனால், அவை யெல்லாம் சாத்தியம் அற்றவை. ஏதோ பலவீனமான நேரத்தில் அவள் அப்படிக் கேட்டு விட்டாள்... கேட்டிருக்கக் கூடாது.

அவள் சட்டென முடிவெடுத்தாள்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு, அப்பார்ட்மென்ட் லிப்ட்டில் இருவரும் தனியே போகிற சூழல் வந்தது. சுந்தர் ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக, ``ஆபீஸ் வேலையெல்லாம் எப்படிப் போகுது?” என்றான்.

மாலினி பதில் சொல்லாமல், ``அன்னிக்கு ஏன் அப்படி என்னைக் கேட்டீங்க... செக்ஸ்னா நல்லா இருக்குமா, இல்லையான்னு..?”

சுந்தர் திகைப்புடன் பார்த்தான். கைத்தறிச் சேலை; சிறு மலர் சூடியிருந்தாள்; சோடாப்புட்டிக் கண்ணாடி; கையில் அலுவலகக்கோப்பு.

“இல்ல... அன்னிக்கு நீ எங்கிட்ட செக்ஸ் பத்திப்பேசினியே... உனக்கு ஏன் கேக்கத் தோணுச்சு, என்னை என்னான்னு நினைச்ச?”

சுந்தர் ஆடிப்போனான். ஏதோ வீட்டிலிருந்து தொலைக்காட்சியின் விளம்பரம் அலறியது.அவள் சொன்னது புரியாமல் விழித்தான்.தன்னைப் பார்த்துதான் அவள் சொல்கிறாளா?

“மேடம்... புரியல... நீங்க விளையாடறீங்களா?”

“ஆமாம், நீயும் நானும் முறைப்பொண்ணு--மாப்பிள்ளை பாரு... என் பையனே காலேஜ் முடிக்கப்போறான்... எங்கிட்ட எதுக்கு செக்ஸ் பத்திப் பேசின?”

‘`நானா, நான் பேசினேனா?”

“நீதான்.”

“மேடம், நீங்கதான் பேசினீங்க... என்ன ஆச்சு, உங்களுக்கு..?”

“அப்ப நான் பொய் சொல்றானா? மூணு பிள்ளை பெத்தவ நான்... எனக்கு உங்கிட்டதான் செக்ஸ் பத்தித் தெரிஞ்சுக்கணுமா?”

அவன் விழித்ததும் தவித்ததும் அவளுக்குச் சிரிப்பாக இருந்தது. கொஞ்சம் பாவமாகத்தான் இருக்கிறது. ஆனால், மனசு மாறி விடக்கூடாது; இறங்கி வந்துவிடக் கூடாது. இவன் இங்கிருந்து போய்த்தொலைந்துவிட்டால் எல்லாப் பிரச்னைகளும் சரியாகிவிடும். கடவுளே, ஏன் விசித்திரமாக அந்த நேரத்தில் கேள்வி கேட்க வைத்தாய்? எப்படி அந்தக் கேள்வி - ரொம்ப முக்கியம், இப்போ - என் நாக்கில் வந்தது? எப்படியோ வந்துவிட்டது. அதைச் சரிசெய்தாக வேண்டும்.
சரிசெய்துவிடலாம், இந்தக் கேள்விக்கு சாட்சியாய் இருக்கும் இவன் இங்கிருந்து, என் கண்பார்வையிலிருந்து மறைந்துவிட்டால் போது, எல்லாம் சரியாகிவிடும். ``மிஸ்டர் சுந்தரம், இவ்வளவு எங்கிட்ட மிஸ் பிஹேவ் பண்ணுன பிறகு நீங்க இங்க இருக்கறது சரியில்ல... உங்களைப் பாத்தாலயே எனக்கு நீங்க எங்கிட்ட செக்ஸ் பத்திப் பேசினதுதான் நினைவுக்கு வருது.”

“அதனால... நீங்க வீட்டைக் காலி பண்ணிப் போயிருங்க...”

எது எப்படியோ சுந்தர் இங்கு இருக்கக் கூடாது. அவன் தம்பி மாதிரி பழகினவன்தான்; நல்ல பையன்தான்... ஆனால், எதற்கும் மசிந்து கொடுத்துவிடக் கூடாது. சுந்தர் அதிர்ந்துபோய் “விளையாடறீங்களா? இது ஒண்ணும் உங்க சொந்த வீடு இல்லை. சொந்த வீடா இருந்தாக்கூட சட்டரீதியான டைம் நீங்க கொடுத்தாகணும்...”

“அதெல்லாம் தெரியாது... நீங்க காலி பண்றீங்க. அவ்வளவுதான். இவ்வளவு இண்டீசன்டா பிஹேவ் பண்ணின பிறகு நீங்க இங்க இருக்கறது சரியில்ல...”

“முடியாதுங்க... நிச்சயமா முடியாதுங்க...”

இரண்டு நாள்களுக்குப் பிறகு இந்தப் பிரச்னை சரியாகிவிடும் என்று சுந்தர் நம்பினான்.ரத்தினசாமியிடம் சொன்னால் என்ன? ஆனால் எப்படிச் சொல்லுவது? ஒருவரின் மனைவியைப் பற்றி அவரிடமே எப்படி புகார் அளிப்பது? அதுவும் பிரச்னையின் காரணத்தை எப்படிச் சொன்னால், எப்படி எடுத்துக் கொள்வார்? அவரிடம் அவள் எப்படியெல்லாம் சொல்லி வைத்திருக்கிறாளோ?

மனம் சரியில்லாததால், ராதாவிடம்கூட சரியாகப் பேசவில்லை. அவள் அவனை சரி செய்யும் நோக்கத்துடன் “வெளியே சாப்பிடலாம்ங்க” என்று அழைத்துச் சென்றாள்.ஓட்டலிலிருந்து வெளியேறும்போது ராதாதான் அவர்களது பைக்கைப் பார்த்தாள். சீட்டின் அடிப்பகுதியில் யாரோ பிளேடு போட்ட மாதிரி இருந்தது. அப்போது அங்கிருந்த செக்யூரிட்டியிடம் “யாரோ, பிளேடால வண்டி சீட்டைக் கிழிச்சிருக்காங்க... நீ பாத்துட்டு சும்மா இருந்திருக்கற” என்றான்.

செக்யூரிட்டி தனது 40 வருட காவல் பணியில் இப்படியொரு சம்பவம் நடந்ததில்லை என்றும், அதற்கு தான் பொறுப்பில்லை என்றும் தெரிவித்தான். ``நீங்க வரும்போதே இருந்திருக்கலாமே... உங்க வீட்டுலயே ஏன் கிழிஞ்சிருக்கக் கூடாது? அதை நீங்க இங்க வச்சுப் பாக்கறீங்கன்னு ஏன் எடுத்துக்கக் கூடாது?”

சுந்தர் அந்தப் பதிலை ரொம்ப நேரம் யோசித்துக்கொண்டே இருந்தான்.

அடுத்த நாள்களில் இரு சக்கர வாகனம் அடுத்த அதிர்ச்சியை அளித்தது. வாகனத்தின் சாவியைக் காணவில்லை. எங்கு வைத்தோம்? ம்ம்ம்... நன்றாக நினைவிருக்கிறது; வாகனத்தை எனக்கான இடத்தில் நிறுத்தினேன். அப்போது வாகனத்தில் சாவியை நுழைக்கவும், போனை வீட்டிலேயே மறந்தது நினைவுக்கு வரவும் சரியாக இருந்தது. வீட்டினுள் சென்றேன்...திரும்பி வந்து பார்த்தால் வாகனத்தில் செருகப்பட்ட இடத்தில் சாவி இல்லை. எங்கு வைத்தோம்? இங்குதானே வைத்தோம்...என்றெல்லாம் யோசித்து அலைபாய்ந்து கடைசியில் மெக்கானிக்கைக் கூட்டி வந்து திறந்து, புதிய சாவி போட வேண்டியதாகி விட்டது.

அடுத்த வாகனத் தாக்குதல் கொஞ்சம் கடுமையாக இருந்தது.

அவனது அப்பார்ட்மென்ட் காம்பவுண்டு சுவரை ஒட்டி ஒரு சாக்கடை செல்லும். சற்றே பெரிய சாக்கடை. சுந்தர் வேலை முடிந்து உள்ளே வரும்போது தெரிந்த ஒரு நண்பர் அவனை அழைத்தார். உடனே வாகனத்தை வெளியே நிறுத்திவிட்டு அவரிடம் பேசியவாறு நின்றிருந்தான். கொஞ்ச நேரம் கழித்துப் பார்த்தால் அவனது வண்டியைக் காணவில்லை.காவலாளியைக் கேட்டான்; தெரிந்தவர்களிடம் கேட்டான்... வாகனத்தை யாருமே பார்க்கவில்லை என்றார்கள். ஒருவர் கத்தினார், ``சார், வண்டி சாக்கடைக்குள்ள கெடக்கு!”

சாக்கடைக்குள்ளிருந்து மீட்கப்பட்ட வாகனத்தைக் கழுவ மாலினியால் எப்படி உதவாமல் இருக்க முடியும்?

இன்னொரு நாள் ராதாவும் சுந்தரும் வெளியே சென்று திரும்புகையில் அவன் வீட்டு வாசலில் எலுமிச்சம் பழம் ஒன்று கிடந்தது.குங்குமத்தில் தோய்த்து எடுக்கப்பட்ட அது ரத்தத்தில் மிதப்பது போன்ற உணர்வைக் கொடுத்துக்கொண்டிருந்தது. அடித்த காற்றில் மெல்ல உருண்ட அது, சாதாரண மனிதர்களுக்குத் தெரியாத ஒன்று அதற்குத் தெரிந்தது போல், எதையோ உணர்த்த முயன்றது. அந்தக் காட்சி தந்த அமானுஷ்ய உணர்வில் ராதா ஆடிப்போனாள். ``பயமா இருக்குங்க.”

``மாலுக்காகிட்ட கேட்டுட்டு வரேன்...அவங்களுக்குத் தெரியாத சப்ஜெக்டே கிடையாதுங்க...” ராதா எதிர்வீட்டுக்குச் சென்று பல பீதிகளுடன் வந்தாள்.

மாலினி அறிவின் ஒட்டுமொத்த சாரம், ``முடிந்த அளவு விரைவாய் இந்த வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்பதே...’’

“இப்படீலாம் நடக்கறது குடும்பத்துக்கு ஆகாதாங்க. அப்புறம் எதையோ சொல்ல வந்தாங்க. ரொம்ப வற்புறுத்திக் கேட்ட பிறகு பயந்துதான் சொன்னாங்க... நம்ம குடும்பத்துக்கு ஆபத்து ஏதோ வர்ற மாதிரி கனவு கண்டாங்களாம்... காலி பண்ணிடறது நல்லதுன்னு சொன்னாங்க... அவங்களுக்கே இதைச் சொல்லக் கஷ்டமாத்தான் இருக்காம்...நாம காலி பண்ணறத நினைச்சா, கஷ்டமா இருக்குன்னு அவங்க கண்ணுல கண்ணீர் வந்திருச்சுங்க.”

சில நாள்களுக்குப் பிறகு ராதாவின் மொபெட் அருகில் எலுமிச்சம் பழத்தாக்குதல்.ராதாவிற்குக் காய்ச்சலே வந்துவிட்டது.ஆனால், இதற்கெல்லாம் காரணம் மாலினி என்றால் அவள் நம்பவே மாட்டாள்.

உளவியல் மற்றும் அமானுஷ்ய முறையில் பிரச்னையை அணுகுதல். எதிரியைக் குலைத்தல்...

ஆனால், எப்படி நிரூபிப்பது? யாரும் நம்பக்கூட மாட்டார்கள். ஒரு கம்பீர மனுஷி ஏன் இப்படி நடந்துகொள்ள வேண்டும்? அவளை நிறுத்தி வைத்து ``ஏன் இந்தச் சிறு பிள்ளைத்தனமான முயற்சிகள்? வண்டி சீட்டைக் கிழித்தல், சாவியை எறிதல், சாக்கடையுள் தள்ளுதல்... இதெல்லாம் அறிவாளியான, பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு அழகா?” என்றெல்லாம் நாக்கைப் பிடுங்குகிற மாதிரி கேட்க வேண்டும்போல இருந்தது.

ராதா வேறு, வீட்டை மாற்றிவிடலாம் என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். ஒரு கணம் காலி செய்துவிடலாமா என்றுகூடத் தோன்றியது. அடுத்த கணம் “நாம் என்ன தப்பு செய்தோம்?”

ஆனால், அவள் அடுத்த கணம் என்ன செய்வாள் என்ற ஆர்வமும் அவனிடம் ஏற்பட்டது. கொஞ்சம் கலவரமும்கூட...

சுந்தர் இந்த விளையாட்டை நிறுத்த முடிவு செய்தான். அவளிடம் பேச வேண்டும்.

“உங்க லெவலுக்கு என்னைக் கீழ இறக்காதீங்க... உங்களுக்கும் பொண்ணு இருக்கு...” என்றெல்லாம் எகிறிவிடாமல் நிதானமாகத் துவக்க வேண்டும்.

இந்த முடிவுடன் அவன் அவள் அலுவலகம் முடிந்து வண்டியை நிறுத்தும் நேரத்தையும், இடத்தையும் தேர்ந்தெடுத்தான்.

“மேடம்...” என்றான். ஏறக்குறைய பத்துநாள் இடைவெளியில் நெருக்கம் குறைந்திருந்தது. ஏனோ அச்சம் வந்தது. அவளோ பரிதாபமாக இருந்தாள். இவ்வளவு பலவீனமான ஒரு பெண்ணால் இவ்வளவு அச்சத்தைத் தர முடியுமா என்று யோசித்தவாறே, பதில் சொல்லாமல் நடந்துகொண்டிருந்த அவளை நிறுத்த முயன்றான். ``உங்களுக்கு நான் என்ன கெடுதல் பண்ணேன்... ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க... உங்களுக்கும் உங்க குடும்பத் துக்கும் நான் மனசளவுலகூட கெடுதல் பண்ணது இல்லையே.. உங்களை என் அக்கா மாதிரிதான நினைச்சிருக்கேன். உங்களை ஏன் இந்த அளவு தரம் தாழ்த்திக்கறீங்க...?” என்றெல்லாம் அவனுள் வெடித்து எழுந்த கேள்விகளை அடக்கி சாந்தப்படுத்திக் கொண்டு “மனசுக்குக் கஷ்டமா இருக்கு மேடம்” என்றான்.

அடுத்த கணம் அவளிட மிருந்து அந்தச் செயல் வெளிப்பட்டது. ஒரு செடி விழுவது போல் தன்னிலை இழந்து தரையில் விழுந்தாள்.அவளது வாகனத்தின் சாவியும், கைப்பையும் சிதறின. இதைப் பார்த்துவிட்டதால் சிலரும், இவனது அலறலால் சிலரும் ஓடி வந்தார்கள். ``தண்ணி கொடுங்க’’, ``சாருக்கு போன் பண்ணுங்க..”, ``காத்து வரட்டும்..” இந்தக் குரல்களுக்கு நடுவில் எல்லோரும் அசந்த ஒரு நொடியில் கண் விழித்து சுந்தரை மட்டும் பார்த்தாள். ``தொலைத்துவிடுவேன்...” என்பது போல் சுண்டு விரல் மடக்கி சைகை செய்தாள்.மீண்டும் மயங்கிக்கொண்டாள்.

ஒரு தேர்ந்த நடிகையின் நாடகத்தைக் கண்டு சுந்தர் வெலவெலத்துப் போனான்.இவளிடம் என்ன பேச முடியும்? ராதா “அக்கா சரியா சாப்பிடலையாங்க... அந்த நிலைலயும் நம்மளைப் பத்தியே புலம்பீட்டு இருந்தாங்க...உங்க வீட்டு வாசல்ல யாரோ எறிஞ்ச எலுமிச்சம் பழத்தைப் பாத்த எனக்கு இப்படி ஆகுதுனா, உங்களுக்கு என்ன ஆகும்னு நினைச்சு அழுதுட்டாங்க...”

அடுத்த நாள் அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. மொட்டைக் கடிதம்.

“உன் நல்லதுக்காக சொல்றேன்...மரியாதையா வீட்டைக் காலி பண்ணு... இல்லை, உன் மனைவியைக் கொல்வேன்... உன் குழந்தையின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்... நீ அநாதையாவாய்...”

ஒரு பெண்ணால் எப்படி இந்த அளவு கொடூரமான வார்த்தைகளை உருவாக்க முடியும்? அவளால் முடிந்திருக்கிறது. நிச்சயம் அவளால் கடிதத்தில் சொன்னவற்றைச் செய்துகாட்ட முடியும். இயற்பியல் படித்தவள்; மின்சாரம் அறிந்தவள்; மருத்துவம் தெரிந்தவள்; சதுரங்கம் அறிந்தவள்; சட்டம் படித்தவள்; எல்லா அறிவையும் ஒன்றாகக் கலந்து அவளால் சுலபமாக எதையாவது செய்ய முடியும்...

வெளியுலகில் அவள் அவளைப் பற்றிக் கட்டமைத்திருக்கும் பிம்பம் அற்புதமானது; அவளுக்கு உதவக் கூடியது... ``படித்தவள்; சரியாக சாப்பிடாமல் ஒல்லியான தோற்றத்தில் பரிதாபத்தை ஏற்படுத்துபவள்; தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவள்; அமைதியானவள்; தெரிந்தவருக்கு இந்தி வகுப்பு எடுப்பவள்; பிரெஞ்ச் சொல்லித்தருபவள்; மாத்திரைகள் பரிந்துரைப்பவள்; சமயங்களில் அன்னதானம் செய்பவள்; ஏழைகளுக்கு மனுக்களைப் பூர்த்தி செய்து தருபவள்...”
எல்லாவற்றையும்விட, மயங்கி விழ அறிந்தவள்...

யாரும் நம்பவே மாட்டார்கள்... அவள் முட்டாள் என்றால் அவளை வெல்லலாம்; அறிவாளி என்றால்கூட வெல்லலாம். ஆனால், அவள் தேவைப்படும்போது அடி முட்டாளாகவும் மாறத்தயங்காத ஆபத்தான அறிவாளி. அறிவைக் கட்டுப்படுத்தத் தெரிந்த பாதிமுட்டாள்.யாராலும் வெல்லவே முடியாது. நம்பவே மாட்டார்கள்... ``காத்தடிச்சா பறந்துர்ற மாதிரி இருப்பாங்களே..அந்த அம்மாவையா சொல்றீங்க..?”

சுந்தர் வீட்டைக் காலி செய்து போவதை மாலினி தனது ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டே இருந்தாள். நிம்மதி ஏற்பட்டது.மௌனமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். எப்பேர்ப்பட்ட சாதனை! வெற்றி! முதன்முதலாய் அவளது திட்டப்படி எல்லாம் நடந்திருக்கிறது! அவளது காய் நகர்த்தல்கள் அவளுக்கு வெற்றியைத் தந்திருக்கின்றன... நிச்சயம் இதுவரை அனுபவிக்காத உணர்வு...

அவளது களங்கம் துடைக்கப்பட்டது மாதிரியான உணர்வை அடைந்தாள். அவளது இருண்ட, நாற்றம் பிடித்த கேள்விகளுக்கு இனி சாட்சி இல்லை... நல்லவன்தான்... என்ன செய்ய? அவள் அதைவிட நல்லவளாக இருக்க வேண்டியது அதைவிட முக்கியம். நல்லவள் பிம்பம் அவளுக்கு முக்கியம். நாம் நல்லவர் என்று நிரூபிக்க பிறரைக் கெட்டவராக்கத்தான் வேண்டியிருக்கிறது!

கொஞ்சம் வெற்றிப் புன்னகை சிந்திவிட்டுக் கண்ணீரும் சிந்தினாள். அடுத்த கணம் அவளது மனம் தெளிவானது... தோழிக்கு போன் செய்தாள். ``டீ, எதிர்வீடு காலியா இருக்கு.யாராவது தெரிஞ்சவங்க இருந்தா, சொல்லு...”

மாலினி இருக்கிற திசையைக்கூடப் பார்க்காமல் சுந்தர் ரத்தினசாமியிடம் மட்டும் விடை பெற்றுக்கொண்டான்.

வாசல் வரை சென்றவன் ஒரு கணம் திரும்பி இரத்தினசாமியைப் பார்த்தான்.அவரிடம் நடந்ததைச் சொல்லிவிடலாமா என்று யோசித்தான்... சொன்னால், ஏதாவது உளவியல் நிபுணரை அணுகி ஆலோசனை பெற அது உதவுமே என்று தவித்தவன், பின், நாமே போகிறோம், இவர்களது குடும்பத்தில் ஏன் தேவையற்ற குழப்பம் நம்மால் வர வேண்டும் என்று அமைதியானான். சொன்னால் எப்படி நிரூபிப்பது? தவிர, அவள் உடனே மீண்டும் மயங்கிவிழுவாள்...

சுந்தர் சொல்லாதது தப்பு என்றுதான் தோன்றுகிறது. அவன் சொல்லியிருக்க வேண்டும்...இரத்தினசாமி அப்போதைக்கு அவற்றை நம்பாவிட்டாலும் அவளை உன்னிப்பாகக் கவனிக்க ஒரு வாய்ப்பாக அது இருந்திருக்கும்.

ஏனென்றால், இன்னும் ஆறு வருடங்கள் கழித்து எதிர்வீட்டிற்கு வரப்போகிற யோகேஷின் மனைவி நடத்தை கெட்டவள் என்று சொல்லப்பட்டு வீட்டை விட்டுக் கணவனால் துரத்தப்படப்போகிறாள்... அதற்கு இரண்டு வருடங்கள் கழித்து அலுவலகத்தில் ஒரு முக்கியமான கோப்பைக் காணவில்லை என்று உடன் பணிபுரியும் கோமதி என்பவள் சஸ்பெண்ட் ஆகி, வாழ்வையே தொலைக்கப் போகிறாள்... அதே வருடத்தில் அந்தத் தெருவில் ஓர் ஐந்து வயதுச்சிறுமி மர்மமான முறையில் இறந்தும்போவாள்...