Published:Updated:

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 4

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 4
பிரீமியம் ஸ்டோரி
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 4

தமிழ்மகன்

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 4

தமிழ்மகன்

Published:Updated:
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 4
பிரீமியம் ஸ்டோரி
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 4
நான் ரம்யாவாக இருக்கிறேன் - 4

ஹாஸ்பிடல் ரிசப்ஷனைச் சுற்றி கூட்டம் பரபரப்புடன் கூடியது. பலருக்கு அந்த நர்ஸ் கத்தியது புரியவில்லை. புரிந்த சிலரும் அதை மறுபடி கேட்பதில் ஆர்வமாக இருந்தனர். சிலர், அவள் காட்டிய திசையில் ஓடி அங்கே டாக்டர் இறந்து கிடப்பதைப் பார்த்தனர். வினோத்தும் அதில் ஒருவன். டாக்டர் இறந்துவிட்டதைத் திட்டவட்டமாகத் தெரிந்துகொண்ட அவன், ரம்யாவின் தொடர் கொலை முயற்சிகளை நினைத்துப் பயந்தான். குழந்தைத்தனமான தோற்றத்தோடு அவள் ஆடும் பகடை ஆட்டம் வினோத்தை கிறுகிறுக்க வைத்தது.

பாரில் காருக்குள் இறந்துகிடந்த அந்த சிவந்த இளைஞன் போலவே வாயில் ரத்தம் கொப்பளிக்க இருக்கையில் சாய்ந்துகிடந்தார் டாக்டர். அதே பாணியில் இரண்டாவது கொலை. கொலையின் சூட்டோடு அவளைப் பிடித்துவிடும் எத்தனிப்பில் ஹாஸ்பிடல் வாசலை அடைந்தான். யாரையும் வெளியில் போக வேண்டாம் என செக்யூரிட்டி தடுத்தார். போலீஸ் வரும் வரை யாரும் செல்ல வேண்டாம் எனவும் சொல்லிக்கொண்டிருந்தார். சிலர் தங்கள் அவசரங்களைச் சொல்லி வெளியில் செல்ல மன்றாடிக்கொண்டிருந்தனர். வினோத், இந்தக் கொலையிலும் தான் சிக்கிக்கொண்டதை நினைத்து அச்சமும் அலுப்புமாகத் தவித்தான்.

செக்யூரிட்டி ஆசாமி இரும்பு கேட்டை முக்கால்வாசி இழுத்து அடைத்துவிட்டு, உள்ளே வருபவர்களுக்கு மட்டும் வழிவிட்டார். இது போலீஸ் சொன்ன அறிவுரையாக இருக்கக்கூடும்.

போலீஸ் ஜீப்களின் சத்தம் வாசல்முன் வந்து அடங்கின. காக்கிச் சட்டை போட்டவர்கள் அந்தக் கால் பங்கு கதவு இடுக்கு வழியாக உள்ளே வந்து வயதானவர்கள், குழந்தைகள் சிலரை விலக்கி இளம்வயதினரை, சந்தேகப்படும் தோற்றத்தில் இருந்தோரைக் குத்துமதிப்பாக விசாரிக்க ஆரம்பித்தார்கள். வினோத்தை எஸ்.ஐ. விசாரித்தார்.

‘‘நீங்க எதுக்கு ஹாஸ்பிடல் வந்தீங்க?’’

‘‘ஒருத்தரைப் பார்க்கறதுக்காக வந்தேன்.’’

‘‘என்ன வார்டு... என்ன பேரு?’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 4

‘‘வார்டு இல்ல சார். எனக்குத் தெரிஞ்சவங்க ஒருத்தர் ஹாஸ்பிடலுக்குள்ள போறதைப் பார்த்தேன். அவங்களைப் பார்க்கலாம்னு வந்தேன். எங்க போனாங்கன்னு தெரியலை. அதனால எல்லா இடத்திலும் பார்த்துக்கிட்டு இருந்தேன். அந்த நேரத்துல இந்தச் சம்பவம் நடந்திருக்கு’’ என்றான். 

எஸ்.ஐ-க்கு வினோத்தின் இந்த மாதிரியான பதிலில் ஆர்வமும் சந்தேகமும் அதிகமானது.  கொஞ்ச நேரம் இருக்கச் சொல்லிவிட்டு, ஹாஸ்பிடலின் சி.சி ரெக்கார்டிங் யூனிட்டில் யாராவது இருந்தால் வரச்சொன்னார். ஒல்லியாக தாடிவைத்த 20 வயசுப் பையன் ஒருவன் வந்தான். வினோத்தைக் காட்டி, ‘‘இவரைக் கொஞ்சம் பாருங்க’’ என்றார்.

‘‘வாங்க சார் பார்க்கலாம்.’’

சிறிய குடோன் போன்ற அறையில் சிசி டிவி யூனிட் இருந்தது. குளோஸ் சர்க்யூட் பதிவுகளில், வினோத் பதற்றமாக வருவதும், ரிசப்ஷனில் விசாரிப்பதும், ஒவ்வொரு மாடியாக ஏறுவதும், ஓடிப்போய் இறந்து கிடக்கும் டாக்டரைப் பார்ப்பதுமாக வெவ்வேறு கேமராக்கள்வழி பதிவானவற்றைத் துரிதமாகச் சேகரித்தார்கள்.

‘‘என்ன தேடறீங்க?’’

‘‘சொன்னேனே சார்... ஒருத்தரைப் பார்த்துப் பேச வந்தேன்னு!’’

‘‘உங்க ஆபீஸ் ஐ.டி கார்டு காட்டுங்க...’’ காட்டினான்.

‘‘டிரைவிங் லைசன்ஸ் இருக்கா?’’ காட்டினான்.

இரண்டிலும் ஒரே பெயர், ஒரே முகவரியா எனப் பார்த்தனர். அதற்குமேல் கேள்விகள் ஏதும் கேட்காமல், ‘‘போங்க’’ என்றார் எஸ்.ஐ.

பைக்கை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தபோது, ஜனத்திரளில் சுற்றும் முற்றும் பார்த்தான். ரம்யா அங்கு இருப்பதற்கான தடயமே இல்லை. அபிராமபுரம் நோக்கிப் பறந்தான். அந்தத் தெருவிலேயே அந்த வீடுதான் பழையதாக இருந்தது. இரும்பு கேட்டைத் திறந்து சரளைக்கல் பாதையில் நடந்து, வீட்டின் கீழ் போர்ஷன் கதவைத் தட்டினான். வயதான ஒருவர் வந்து, ‘‘யார் வேணும்?’’ என்றார் எச்சரிக்கை தொனிக்க. வீட்டின் விளக்கொளியே அழுதுவடியும்படி இருந்தது. வாசலில் இன்னமும் குண்டு பல்பு.

‘‘இங்க ரம்யான்னு யாராவது புதுசா குடி வந்திருக்காங்களா... பெங்களூர்ல இருந்து?’’

பாதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ‘‘அப்படில்லாம் யாரும் இல்லை’’ என்பதைச் சொல்லிமுடித்தார்.

‘‘இந்த அட்ரஸ்தான் கொடுத்தாங்க.’’

‘‘மாடியில இருந்த பொண்ணு மல்லிகாதானே? இவரு ரம்யான்னு சொல்றாரு?’’ உட்பக்கம் திரும்பி சத்தம் கொடுத்தார். உள்ளிருந்து ஒரு பெண் குரல் திரும்பி வந்தது. ‘‘மல்லிகாதான். அவளோட ஃப்ரெண்ட் ஒருத்தி பெங்களூர்ல இருந்து வந்தா... அவளா இருக்கும்.’’

‘‘ஓ... அவளா? அவாள்லாம் காலி பண்ணிண்டு போய்ட்டா!’’

‘‘எங்கே?’’

‘‘மல்லிகாவுக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுத்துன்னு போனா. இவ எங்க போனாள்னு தெரியாது.’’

அதற்கு மேல் விசாரிப்பதை அவர் விரும்பவில்லை எனப் புரிந்தபோது, அவர் கதவைச் சாத்திவிட்டார்.

‘போலீஸ் ரம்யாவைத் தேட ஆரம்பித்துவிட்டது. இவள் ஓடி ஒளிய ஆரம்பித்திருக்கிறாள்’ என அவனுக்குப் புரிந்தது. வினோத் பைக்கை கிளப்பும்முன் இருண்ட அந்த மாடிவீட்டைப் பார்த்தான். யாரோ அங்கே இருப்பதுபோலவே உள்மனதில் ஓர் அச்சத் தோற்றம் ஊறி மறைந்தது.

‘என்.சுசீந்திரன், பிசிக்ஸ் புரொபஸர், ஐ.ஐ.டி’ என்ற போர்டு சாயம்போய் இருந்தது. அதன் ஒரு பக்க ஆணியின் மறை கழன்றிருக்க, ஒரு பக்கம் சாய்ந்து காத்தாடியாக ஆடிக்கொண்டிருந்தது. ‘ஆராய்ச்சி செய்கிறேன் பேர்வழி’ என நல்ல வேலையை விட்டுவிட்டு வந்தவர் என்பது அந்த ஆட்டத்தில் தெரிந்தது. பழைய டெல்லியின் மசூதி தெருவின் நெரிசலில் இருந்தது அவருடைய குடியிருப்பு. வீட்டில் அவருக்கான ஆய்வறையில் தீவிரமாக இருந்தார். கடவுள் துகள்தான் அவருடைய ஆய்வின் அடிப்படை. ‘லிட்டில் பாங் தியரி’யை ஏகத்துக்கு விளாசியதில் உலக இயற்பியலாளர்களிடம் போதுமான எதிர்ப்பைச் சம்பாதித்திருந்தார்.

உலகத்தைப் பற்றி கணிக்க இயலாத கவலை அவரைச் சமீபகாலமாக அழுத்தியபடி இருந்தது. நிரூபிக்க இயலாத அச்சம். தியரி. லாஜிக்கல் பாஸிபிலிட்டீஸ். அறிவியல் சமூகம் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘ஆற்றில் மணலை அள்ளிக் கோபுரம் உருவாக்கினால், உங்களுக்கே தெரியாமல் ஒரு பள்ளத்தையும் உருவாக்குகிறீர்கள்’ எனச் சொன்னார். கோபுரத்தை மட்டும் உலகம் பார்க்கிறது.  ஆபத்தான பள்ளத்தைக் கவனிப்பதில்லை. ‘கடவுள் துகள் ஆராய்ச்சி, ஒரு சைத்தானை உருவாக்கிவிட்டதைக் கவனியுங்கள்’ என்கிறார். யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

லேப்டாப் பேட்டரி ஃபுல் சார்ஜில் இருந்தது. ‘இன்னும் சில நிமிடங்களில் முடிக்க இருக்கும் கட்டுரைக்கு  இது போதும்’ எனத் தேற்றிக்கொண்டார். தனக்குத் தெரிந்துவிட்ட உண்மையைச் சகலருக்கும் அறிவிக்க வேண்டிய பதற்றம்... எச்சரிக்க வேண்டிய நெருக்கடி... எல்லாமும் அவருக்கு இருந்தது. ‘Our world is just one of many...’ என 24 பாயின்ட் எழுத்தில் டைப் செய்திருந்தார். அதுதான் அவர் எழுதிக்கொண்டிருக்கும் ஆய்வுக் கட்டுரையின் தலைப்பு. ‘நாம் இருக்கும் உலகம் இதுபோன்ற பலவற்றில் ஒன்று...’ - இப்படி மொழிபெயர்க்கலாம். ஆனால், அவர் சொல்ல வருவது அந்த அர்த்தத்தில் இல்லை. அப்படியான தத்துவார்த்தத் தேடலில் அவர் அதை எழுதவில்லை. அவர் ஓர் அச்சத்தில்... இன்னும் சொல்லப்போனால் நடுக்கத்தில் அதை எழுதிக்கொண்டிருந்தார்.

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 4

பிரான்ஸுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையே 574 அடி ஆழத்தில் நிகழ்த்தப்பட்ட, ‘கடவுள் துகள்’ என மலினப்படுத்தப்பட்ட அந்த ஆராய்ச்சிதான் அவருடைய பதற்றத்தின் அடிப்படை. அவர் எழுதிக்கொண்டிருந்ததை ஆய்வுக்கட்டுரை என்பதைவிட, ஜோசப் இன்கண்டேலாவுக்கான மாபெரும் கண்டனம் என்று சொல்லலாம். செர்ன் நடத்திய அந்த ஆராய்ச்சியின் ஆரம்பத்திலேயே, அதில் இருக்கும் ஆபத்தை சுசீந்திரன் எச்சரித்தார். அந்த ஆராய்ச்சி நடந்துமுடிந்து ஆறு ஆண்டுகள் கழித்து அவர் நடுங்குவதற்கு ஒரே ஒரு காரணம்... அவருக்குக் கிடைத்த சமிக்ஞை.

கட்டுரையின் நிறைவுப் பகுதியில் இருந்தார். ‘அந்த சமிக்ஞை எதிர்பாராதது; ஆபத்தானதும்கூட. இன்னும் சில நாள்களில் நீங்கள் அறிவீர்கள். அப்போது நம்மால் எதுவும் செய்ய முடியாமல் போகலாம். நாம் எல்லோருமே பலவற்றின் ஒரு பதிப்பு என்பதில்...’

அவரின் மனைவி நிர்மலா வந்து, யாரோ பார்க்க வந்திருப்பதாகச் சொன்னாள். ‘இந்த இரவிலா?’ எனச் சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தார்.

‘‘பேரு ரம்யாவாம். இளம்பெண். அவசரமாம்... ‘ஹிக்ஸ் போசான் சம்பந்தமாக எனச் சொல்லுங்கள்’ என்றாள்.’’

சுசீந்திரன் நெற்றி சுருக்கினார். ‘‘ஹாலில் உட்கார வை. வருகிறேன்’’ என்றார்.

கட்டுரையை ‘சேவ்’ செய்துவிட்டு ஹாலுக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் வெகுநாள்கள் தெரிந்த நபர் போன்ற பாவனையில் ‘‘ஹாய்’’ என்றாள் ரம்யா. டெல்லி குளிருக்கு லெதர் ஜெர்கின் போட்டிருந்தாள்.
சுசீந்திரன், தான் அப்படி விளிக்கப்பட்டதை விரும்பாதவராக, ‘‘என்ன வேணும்?’’ என்றார் ஆங்கிலத்தில். நிர்மலா, ‘‘காபி கொண்டுவர்றேன்... குடிப்ப இல்ல?’’ என ரம்யாவின் சம்மதம் வாங்கிக்கொண்டு சமையல் அறைக்குப் போனாள்.

‘‘நீங்கதான்.’’ சுத்தத் தமிழில் குனிந்த தலை நிமிராமல் சொன்னாள்.

‘‘எந்தா... தமிழா?’’ சுசீந்திரனின் நாகர்கோவில் தமிழோசை அவளுக்குப் புதிதாக இருந்தது. ‘‘மனசுலாகிறா மாதிரி சொல்லு.’’

‘‘நீங்க எழுதுற கட்டுரை... அப்புறம் நீங்க. ரெண்டும் வேணும்.’’

நான் ரம்யாவாக இருக்கிறேன் - 4

‘‘புரியலை. நீ பிரஸ்ஸா? ஆர்ட்டிகல் வேணுமா?’’

‘‘ஹிக்ஸ் போசான் ஆர்ட்டிகல் முடிச்சுட்டீங்களா?’’

‘‘ஏன்.. லேப்டாப்ல இருக்கு.’’ அவர் கண்கள் அவரையும் அறியாமல் அவர் வெளிப்பட்ட அறையின் பக்கம் திரும்பியது. அவள் வேகமாக அந்த அறையை அடைந்து, டேபிளின் மீதிருந்த லேப்டாப்பை எடுத்துக் கீழே போட்டாள். மூன்று பாகங்களாகச் சிதறியது. குனிந்து ஹார்ட் டிஸ்க்கை எடுத்துக்கொண்டாள்.

என்ன நடக்கிறது என அவதானிக்க நேரம் தேவையாக இருந்தது. பதற்றமும் கோபமுமாக, ‘‘ஹேய்... பொண்ணே... யார் நீ?’’ என்றார் டாக்டர்.

ஹைட்ராலிக்தனமாகக் கழுத்தைத் திருப்பினாள். சுரேந்திரன் துணுக்குற்றார். அவள் முகம் ஒரு கண நேரத்தில் அவருக்கு அதை உணர்த்தியது. ‘‘யார் நீ?’’ என்றார் அதீதக் குரல் எடுத்து.

அவள் நிதானமாகச் சொன்னாள்: ‘‘நான் ரம்யாவாக இருக்கிறேன்.’’ கூடவே ஒரு குரூரப்புன்னகை புரிந்தாள் ரம்யா. அங்கிருந்து ஓட எத்தனித்தார். அந்த வயதானவரால் அவ்வளவு தூரம் ஓடிவிட முடியவில்லை.

(தொடரும்)