Published:Updated:

பனி தேவதை

கண்ணா எஸ்.ராமகிருஷ்ணன்

பனி தேவதை

கண்ணா எஸ்.ராமகிருஷ்ணன்

Published:Updated:
##~##

யாருமே இல்லாத பனிப் பிரதேசம் ஒன்றில்  விறகுவெட்டிஒருவன் தனியாக வாழ்ந்துவந்தான். அவன் கடுமையான உழைப்பாளி. பனியின் ஊடாக தனது சறுக்கு வண்டியில் பயணம் செய்து, மரங்களை வெட்டி, தொலைவில் உள்ள சந்தைக்கு சுமையாகக் கொண்டுசென்று விற்பான். துணைக்கு யாருமே கிடையாது. அவனுக்கு இருந்த ஒரே பிரச்னை... பசி. எப்போதும் ஏதாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால், அவனுக்காக சமைத்துத் தருவதற்கு ஆள் யாரும் இல்லை. தேவையான உணவை வாங்கிக் கொள்ளும் அளவு அவனிடம் பணமும் இல்லை.

இருப்பதைக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருந்தான். பசி அதிகமாக இருந்தால், ''கடவுளே ஏன் இப்படி என்னைச் சோதிக்கிறாய்?'' என்றபடியே பிரார்த்திப்பான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருநாள் அப்படிப் பிரார்த்தித்தபோது... விறகு வெட்டி மீது கருணைகொண்ட ஒரு பனி தேவதை, வானத்தில் இருந்து தன் சிறகை விரித்துப் பறந்து வந்து, அவன் முன்னால் தோன்றினாள்.

அவன், ''நீ யார்?'' என்று கேட்டான்.

''நான்தான் பனி தேவதை'' என்றாள்.

''அதை நான் எப்படி நம்புவது?'' என்று கேட்டான்.

பனி தேவதை

''உனக்கு என்ன தேவை என்றாலும் கேள். உடனே தருகிறேன், அப்போதாவது நீ நம்புவாயா?'' என்று தேவதை கேட்டாள்.

அவனுக்கு என்ன கேட்பது என்று புரியவில்லை. ''உன் வாழ்க்கைக்குத் தேவையான எதை வேண்டுமானாலும் கேள்'' என்றாள்.

உடனே அந்த மனிதன், ''எனக்கு ஒரு பெரிய சாக்லேட் கேக் வேண்டும்'' என்றான். தேவதை சிரித்துக்கொண்டே... ''இதுதான் உன் ஆசையா?'' என்றாள்.

அவன், ''ஆமாம். சாக்லேட் கேக் சாப்பிட வேண்டும் என்று பல காலமாக ஆசை. பெரிய கேக்காகக் கொடு'' என்றான்.

'அய்யோ... இவ்வளவு அப்பாவியாக இருக் கிறானே’ என்று நினைத்த தேவதை, ''விறகுவெட்டியே, இது சாதாரண ஆசை, இதைவிடப் பெரியதாக வேறு ஏதாவது கேள்'' என்றாள்.

உடனே அவன், ''நீ தேவதை என்று நம்புவதற்கு இதுவே போதும்'' என்றான். உடனே தேவதை, ''ஒரு சாக்லேட் கேக் அல்ல, நூறு சுவை உள்ள கேக்குகள் இப்போது வரும் பார்'' என்று கையை உயர்த்தினாள்.

மறு நிமிடம் சிறியதும் பெரியதுமாக பல்வேறு சுவையான கேக்குகள் அங்கே தோன்றின. விறகுவெட்டியால் நம்பவே முடியவில்லை. ''இவ்வளவும் எனக்குத்தானா?'' என்று கேட்டான்.

''ஆமாம். வேண்டிய மட்டும் சாப்பிடு'' என்றாள் தேவதை.

அவன் அவசர அவசரமாக கேக்குகளைப் பிய்த்துச் சாப்பிட்டான். பிறகு, ''நீ தேவதையே தான். எதற்காக என்னைத் தேடி வந்திருக்கிறாய் ஏதாவது உதவி வேண்டுமா?'' என்று கேட்டான்.

தேவதை சிரித்தபடியே... ''நான் உனக்கு உதவி செய்ய வந்திருக்கிறேன். நீ மிகவும் நல்ல மனிதனாக இருக்கிறாய். வேறு ஏதாவது ஒரு வரம் கேள் தருகிறேன். அதை வைத்து உன் வாழ்க்கையை செழிப்பாக்கிக்கொள்ளலாம்'' என்றாள்.

விறகுவெட்டி யோசித்து யோசித்துப் பார்த்தான். அவனுக்கு ஆரஞ்சு பழச்சாறு குடிக்கப் பிடிக்கும் என்பதால், அதையே கேட்கலாம் என்று நினைத்து, ''நூறு பாட்டில் ஆரஞ்சுப் பழச்சாறு வேண்டும்'' என்றான்.

தேவதை சிரித்தபடியே ''சாப்பாட்டைத் தவிர வேறு ஆசைகளே உனக்குக் கிடையாதா? நான் உன் முன்னேற்றத்தில் அக்கறையுடன் கேட்கிறேன்'' என்றாள்.

விறகுவெட்டி குழப்பம் அடைந்தான். தனக்கு என்ன வசதி வேண்டும் என்றுகூட அவனுக்குத் தெரியவில்லை. கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, ''நீ சொல்வது புரிகிறது, என் வீட்டுக்குக் கதவு களே கிடையாது. அதனால், குளிர் காலத்தில் நன்றாக உறங்க முடியவில்லை. நல்ல கதவும், உறங்க நல்ல படுக்கையும் கொடு, அதுவே போதும்'' என்றான்.

'அய்யோ... இந்த விறகுவெட்டி பிழைக்கத் தெரியாதவனாக இருக்கிறானே’ என்று வருந்திய தேவதை, ''இது போதுமா?'' என்று கேட்டாள்.

''இது மட்டும் இருந்தால், கதவை மூடிக்கொண்டு நிம்மதியாகத் தூங்குவேன்'' என்றான்.

அவள் சிரித்தபடியே... ''உன் ஆசைப்படியே கதவும் படுக்கையும் தருகிறேன்'' என்று வானை நோக்கிக் கைகளை உயர்த்தி னாள்.

பனி தேவதை

மறு நிமிடம் அழகான கதவும் மிருதுவான படுக்கையும், தலையணையும், கம்பளியும் அங்கே தோன்றின. விறகுவெட்டி படுக்கையில் புரண்டபடியே, 'சுகமாக இருக்கிறது’ என்று பாடினான். அப்போதும் அந்த தேவதைக்கு விறகுவெட்டிக்குத் தேவையான உதவியைத் தான் செய்யவில்லை என்ற ஆதங்கமே இருந்தது.

''உனக்காக மூன்றாவது வரம் ஒன்றும் தர இருக்கிறேன், இதையாவது உருப்படியாகக் கேள்'' என்று சொன்னாள்.

விறகுவெட்டி நீண்ட நேரம் யோசித்தான். பிறகு, ''எனக்கு என்ன தேவை என்று புரிந்து விட்டது. எனது துணிகளைத் துவைக்கவும், எனக்காக சமைப்பதற்கும் இங்கே ஆளே கிடையாது. ஆகவே, நீ ஏன் எனது வேலைக்காரியாக இருக்கக் கூடாது?'' என்று கேட்டான்.

'அய்யய்யோ.... வரம் கொடுக்க வந்த நம்மையே வேலைக்காரியாகச் சொல்கிறானே’ என்று தேவதை பயந்துபோய்விட்டாள்.

உடனே விறகுவெட்டி, ''நான் கேட்டதை உன்னால் தர முடியுமா முடியாதா?'' என்று கேட்டான்.

வேறு வழி இல்லாமல் அந்தத் தேவதை விறகுவெட்டியின் வீட்டில் வேலைக்காரியாக மாறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அன்றில் இருந்து அந்த விறகுவெட்டி படும் எல்லாக் கஷ்டங்களையும் தேவதையும் சேர்ந்தே அனுபவிக்க நேர்ந்தது.

நன்றி: 'எழுதத் தெரிந்த புலி’
பாரதி புத்தகாலயம், சென்னை.