Published:Updated:

“நான் என்னவாக இருக்கிறேனோ, அதுவே என் எழுத்து!” - சுகுமாரன்

“நான் என்னவாக இருக்கிறேனோ, அதுவே என் எழுத்து!” - சுகுமாரன்
பிரீமியம் ஸ்டோரி
“நான் என்னவாக இருக்கிறேனோ, அதுவே என் எழுத்து!” - சுகுமாரன்

சந்திப்பு : விஷ்ணுபுரம் சரவணன், அழகுசுப்பையா ச. - படங்கள் : ரா.ராம்குமார்

“நான் என்னவாக இருக்கிறேனோ, அதுவே என் எழுத்து!” - சுகுமாரன்

சந்திப்பு : விஷ்ணுபுரம் சரவணன், அழகுசுப்பையா ச. - படங்கள் : ரா.ராம்குமார்

Published:Updated:
“நான் என்னவாக இருக்கிறேனோ, அதுவே என் எழுத்து!” - சுகுமாரன்
பிரீமியம் ஸ்டோரி
“நான் என்னவாக இருக்கிறேனோ, அதுவே என் எழுத்து!” - சுகுமாரன்

டுங்குளிராக இருக்குமென நினைத்த திருவனந்தபுரம், பளீரென்ற சூரிய ஒளியில் வரவேற்றது. ‘ஆனையிரா போகணும்’ என ஆட்டோ ஓட்டுநரிடம் சொன்னோம். கறாராகப் பேசியவர், சந்திக்கப்போவது எழுத்தாளர் என அறிந்ததும் நெகிழ்ந்தார். பத்து நிமிடப் பயணத்தில் கவிஞர் சுகுமாரனின் வீட்டை அடைந்தோம். கருநீல டீசர்ட்டில் சிரித்த முகத்தோடு வரவேற்றார் கவிஞர். வாசல் கடந்து வரவேற்பறை போனால், சிறிய ஊஞ்சல். அதில், நடராஜர் சிலையும் கு.அழகிரிசாமியின் மொத்தக் கதைகளின் தொகுப்பும் இமையத்தின் ‘செல்லாப் பணமு’ம் ஆடிக்கொண்டிருக்கின்றன. கோட்டோவியம் ஒன்றில் இளம்வயது சுகுமாரன் தீவிரமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார். தூரத்தில் நடக்கும் கட்டட வேலையின் சத்தம் உரையாடலின் பின்னொலியாகத் தன்னை மாற்றிக்கொள்ள, கேரளத் தேநீரின் துவர்ப்போடு கேள்விகளைத் தொடங்கினோம்...

“நான் என்னவாக இருக்கிறேனோ, அதுவே என் எழுத்து!” - சுகுமாரன்

“மீண்டும் மீண்டும் உங்கள் நினைவில் எழுந்தபடியிருக்கும் கவிதைகள் உண்டா?”

“நான் சோர்வாகவோ, உற்சாகத்துடனோ இருக்கும்போது, பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வரும். விரும்புகிற காரியத்தைச் செய்ய முடியாதபோது, மனச்சுணக்கம் வரும்போதெல்லாம்,

‘ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின் வாங்கலல்ல
பதுங்கல்...’

எனும் சுந்தர ராமசாமியின் கவிதை நினைவில் வரும்.”

“உங்களுடைய கவிதைகளில்...”

“என்னுடைய கவிதைகள் எப்போதும் என்னுள்ளே இருப்பவைதானே... அவற்றைத் திரும்ப நினைவுக்குக் கொண்டுவருவதற்கு என்ன தேவை’ என்று நினைத்திருக்கிறேன். ஆனால், என்னுடைய வரிகளை வேறொருவர் எடுத்துக் கூறும்போது, ‘அட, ஆமாம். இது நம்முடைய வரிதானே’ என ஆச்சர்யமாகத் தோன்றும். ‘கையில் அள்ளிய நீர்’ எனும் கவிதையைப் பலரும் பலமுறை குறிப்பிட்டிருக்கிறார்கள். நான் அதிகம் சிரமப்படாமல் எழுதிய கவிதை அதுதான். எனக்கு அவ்வளவாகப் பிடிக்காத கவிதையும் அதுதான். ஆனால், எல்லோரும் சொல்லிச் சொல்லி அந்தக் கவிதைக்கு ஓர் ஓவர்டோன் வந்துவிட்டது. அந்தக் கவிதையின் சாரத்திலும் மெருகு கூடிவிட்டது. அதுதான், நான் அடிக்கடி நினைவுகூர்கிற கவிதை.”

“இலக்கிய உலகுக்குள் எப்படி வந்தீர்கள்?”

“இலக்கியம், எனக்கு பெற்றோர் வழியாக வந்தது அல்ல. அப்படி வருவதற்கான வாய்ப்புகளும் இல்லாத சூழல். அப்பா, அம்மா இருவருமே எளிய மனிதர்கள்தான். அப்பா, கோவை மின்சார வாரியத்தில் பணிபுரிந்தார். இடதுசாரி மனோபாவம்கொண்டவர். தமிழில் எழுதவும் ஆங்கிலத்தில் கையொப்பமிடவும் தெரியும். அம்மாவுக்கு பெரிய படிப்பெல்லாம் கிடையாது. ஆனால், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய பாஷைகளைப் பேசத் தெரியும், வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களிடமிருந்து அவர் கற்றுகொண்டது அவை. குடும்பத்தின் முதல் பையன் நான். எனக்குப் பிறகு மூன்று தங்கைகளும் ஒரு தம்பியும்.

அப்பாவின் சகோதரி, (என்னுடைய அத்தை) வெல்லிங்டனில் இருந்தார். ராணுவத்தின் துணைப் பிரிவில் மாமாவுக்கு வேலை. அவர்களுக்குக் குழந்தை இல்லை என்பதால், பத்து மாதக் குழந்தையாக இருக்கும்போதே என்னைத் தூக்கிவந்து வளர்த்தார்கள். அங்கேதான் நான் பன்னிரண்டு வயது வரை வளர்ந்தேன். பெற்றோர்களிடமிருந்து பிரிந்து வளரும் குழந்தைகளிடம் ஓர் ஏக்கம் இருக்கும் இல்லையா... அந்த உணர்வை மிகுதியாகக் கொண்டிருந்தேன். அதுவும், வெளியே சென்று அதிகம் விளையாட முடியாத குளிர் மிகுந்த வெல்லிங்டன், எனக்கு  மிகுந்த தனிமையைத் தந்தது. அதிலிருந்து மீள்வதற்காக நான் வாசிக்க ஆரம்பித்தேன்.

“நான் என்னவாக இருக்கிறேனோ, அதுவே என் எழுத்து!” - சுகுமாரன்


அத்தைக்கு தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் வாசிக்கும் பழக்கம் உண்டு. மலையாளத்தின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளையெல்லாம் வாசிப்பார். அந்தப் பழக்கத்துக்குள் நானும் மெள்ள மெள்ள வந்து சேர்ந்தேன். வாசிப்பு சில விஷயங்களுக்கு உதவியாக இருந்தது. மற்ற சிறுவர்களின் முன்னால், நாம் புத்திசாலி என்பதாகக் காட்டிக்கொள்ள முடியும்; அக்கா வயதுள்ள பெண்களிடம் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.இவையெல்லாம் சந்தோஷத்தைக் கொடுத்தன. ஒருகட்டத்தில், எழுதுவதற்கும் நம்மிடம் விஷயம் இருக்கிறதே எனத் தோன்றியது; எழுதத் தொடங்கினேன். இப்படியாக, வாசிப்பும் எழுத்தும் ஓர் ஆர்வத்தினால் வந்ததுதான்.

பின்னாளில், இதை முறைப்படுத்த பள்ளியின் தமிழாசிரியர்கள் உதவினார்கள். அவர்களிடம் திராவிட இயக்கத்தின் பாதிப்பு இருந்தது. அதன் வெற்றி, தமிழின் வெற்றியாகக் கருதப்பட்டது. அதனால், அந்தப் பெருமிதத்தோடு தமிழாசிரியர்கள் கற்றுக்கொடுத்தனர். இன்றைக்கு என்னால் பிழையில்லாமல் தமிழ் எழுதமுடியும் என்றால், அது அவர்கள் கொடுத்த கொடைதான். அது எனது இலக்கிய ஆர்வத்தை வளர்த்தது.

வாசிப்பின் எல்லை விரிவடைந்தபோது, எனக்கான எழுத்தாளர்கள், கவிஞர்கள், புத்தகங்கள் எவை என்று தேர்வுசெய்ய முடிந்தது. என்னை முதலில் பாதித்தது பாரதியார். பாடப் புத்தகம் வழியேதான் அறிமுகமானார் என்றாலுமே, கடந்துவிட முடியாத ஆளுமையாக இன்றும் இருக்கிறார். அவர் அளவுக்கு என்னைக் கவர்ந்தது புதுமைப்பித்தன். 16, 17 வயதில் புதுமைப் பித்தனைப் படித்தபோது, இவர்தான் என்னுடைய எழுத்தாளர்; இதுதான் எனது இலக்கியம் என்ற முடிவுக்கு வந்தேன். பாரதி- புதுமைப்பித்தன் என்ற இந்த இரண்டு எல்லைகளுக்கு என்னைக் கொண்டுசேர்த்தது, (வெகுஜன எழுத்தாளர் என்று சொல்லலாமா எனத் தெரியவில்லை) ஜெயகாந்தன். பள்ளியில் படிக்கும்போதே, ஜெயகாந்தனை வாசிக்க ஆரம்பித்து விட்டேன். குறிப்பாக, ‘ஆனந்த விகட’னில் வந்த முத்திரைக் கதைகளும் நாவல்களும். அவரின் எழுத்துகளின் வழியேதான் கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி ஆகியோரின் பெயர்கள் எனக்குத் தெரியவந்தன. அவர் வழிகாட்டிவிட்டு அங்கேயே நின்றுவிட்டார். நாம் முன்னால் போய்விட்டோம்.”

“சிறு வயதில் வெல்லிங்கடன், வேலையின் நிமித்தமாக சென்னை, தற்போது திருவனந்தபுரம் எனப் பல்வேறு நிலப்பகுதியில் வாழ்ந்திருக்கிறீர்கள். உங்களுடைய சொந்த ஊர் என்ற எண்ணம் எந்த ஊரின் மீது கவிகிறது?”

“இந்த விஷயத்தில் நான் கனியன் பூங்குன்றனின் வாரிசுதான். எல்லா இடங்களிலும் பிடித்துதான் வாழ்ந்தேன்; வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எல்லா இடமும் அதற்கான அழகும் கோரமும் கொண்டவையாகத்தான் இருந்திருக்கின்றன. ஒவ்வோர் ஊரும் எனக்கு ஏதோ ஒன்றைத் தந்திருக்கிறது. வெல்லிங்டன் எனக்குத் தனிமையைத் தந்தது என்றால், கோவை மாதிரியான நகரம் நண்பர்களையும் வாசிப்புக்கான வாய்ப்புகளையும் தந்தது. சென்னை புதிய பார்வைகளையும், திருவனந்தபுரம் பல்வேறு மொழிகளின் கலாசார அசைவுகளைப் பார்க்கும் வாய்ப்பையும் தந்தது. ஒரு காலகட்டத்தில், மாதத்தில் 20 நாள்களும் ஊர்சுற்றித் திரிந்த ஆள்தான் நான். அதனால் வேறுவேறு முகம், வேறுவேறு காற்று, வேறுவேறு ஆகாயம், வேறுவேறு உதயம், வேறுவேறு நட்சத்திரங்கள் என எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். எந்த நிலத்திலும் அதன் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என  ஆசைப்பட்டிருக்கிறேன். அப்படியே இருந்திருக்கிறேன் என நம்புகிறேன். யாதும் எமக்கு ஊரே.”

“நான் என்னவாக இருக்கிறேனோ, அதுவே என் எழுத்து!” - சுகுமாரன்

“கவிதைக்கும் நிலத்துக்குமான உறவைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?”

“மொழி என்பது நிலம் சார்ந்தது. நிலம் என்பது மனிதர்கள் சார்ந்தது. இவை அடிப்படையில் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த உறவுகொண்டவை. ஆனால், அப்படி இல்லை என்று நான் நினைத்துகொண்டிருந்தேன். மொழி, நிலத்தைக் கடந்ததாக இருக்கக்கூடும்; மொழியின் கூறுகள் கவிதையில் பெரிய விஷயமில்லை என நினைத்திருந்தேன். அது தவறு என்பதை என்னுடைய கவிதை ஒன்றே எனக்குக் கற்றுக்கொடுத்தது.

சில வருடங்களுக்கு முன்னர், ஜெயமோகன் ஊட்டியில் தமிழ் - மலையாளக் கவிஞர்களின் கூட்டம் ஒன்றை நடத்தினார். அங்கே, என்னுடைய ‘கனிவு’ எனும் கவிதை மலையாளத்தில் மொழிபெயர்க்க எடுத்துக்கொள்ளப்பட்டது. ‘கனிவு’ என்ற சொல்லை எப்படி மலையாளத்தில் மொழிபெயர்ப்பது என்பது பற்றி நெடுநேரம் விவாதம் நடந்தது. ஒவ்வொரு பழத்தையும் நாம் என்னவாகப் பழுக்கவைக்கிறோம் என்பது பற்றியது கவிதை. அதை மலையாளத்தில் கொண்டு வரவே முடியவில்லை. ஏனென்றால், கவிதையும் கவிதைக்குள்ளிருக்கும் பண்பாடும் முழுமையாக தமிழ்நிலம் சார்ந்தவை. அந்தப் பண்பாடும் பழக்கமும் மலையாளத்தில் இல்லை. எனவே, அம்மொழியில் அதை மொழிபெயர்க்க இயலவில்லை. ‘மொழி என்பது நிலம் சார்ந்ததுதான்’ என்று உறுதிபட்டது. நமக்குள் தமிழ் மரபு இவ்வளவு ஊறிப் போயிருக்கிறதே என்று அந்த மகிழ்ச்சியை அனுபவித்தேன்.”

“ ‘கவிதைக்கான வரையறைகள் என நான் நினைத்திருந்தவையெல்லாம் பின்னாளில் தேவைப்படாமல் போய்விட்டது.’ என்பதாக ஒருமுறை குறிப்பிட்டிருந்தீர்கள். அவ்வாறு நீங்கள் கைவிட்டவை பற்றி?”


“2,500 ஆண்டுகளுக்கும் மேலாக ஆழமான கவிதையாக்க மரபு கொண்டுள்ள மொழி, தமிழ். அதனோடு நான் கவிதையின் வழியே உறவை நிகழ்த்துகிறேன். எனவே, அதற்குப் பொருத்தமானவாக நான் இருக்க வேண்டும். இரண்டாவது, தனக்கான தனிமொழியை ஒரு கவிஞன் உருவாக்கிக்கொள்ள வேண்டும். யாரோ பலமுறை சொல்லித் தேய்ந்த பொருளில், குரலில், ‘மொழியில்’ நான் ஏன் சொல்ல வேண்டும். பொதுவான காதலை, வருத்தத்தை, மகிழ்ச்சியை நான் சொல்ல வேண்டியதில்லை. எனக்கேயான பிரத்யேகமான காதலை, வருத்தத்தை, மகிழ்ச்சியைச் சொல்ல வேண்டும். அந்த வகையில், தொடக்கத்தில் எனக்கான கவிதை சார்ந்த சில கட்டுப்பாடுகளை வைத்திருந்தேன். ‘வெறும் முழக்கக் கவிதைகள்’, ‘காதல் கவிதைகள்’, ‘கவிதையைப் பற்றிய கவிதைகள்’ இவையெல்லாம் வேண்டாம் என நினைத்திருந்தேன். ஆனால், தொடர்ந்து கிடைத்த அனுபவங்கள் வேறுவகையில் அமைந்தபோது, நானும் என்னுடைய கவிதை முறையில் மாற்றங்களைக் கொண்டுவர முடிவு செய்தேன். கவிதையில் எதையும் விலக்கிவைக்க வேண்டியதில்லை, எல்லாமுமே பேசப்பட வேண்டியதுதான் என நான் என்னை மாற்றிக்கொண்டேன்.”

“கவிதையிலிருந்து வாசகன் முதலில் கருத்தைத்தான் எடுத்துக்கொள்கிறான் என்று ஒருமுறை கூறியிருந்தீர்கள். அதை விளக்க முடியுமா?”

“கருத்து என்று நான் சொன்னது, அந்தக் கவிதையிலுள்ள தகவலையோ, நீதியையோ அல்ல. கவிதையில் ‘மரம்’ என்று வாசித்தால், வாசகன் ஒரு மரத்தை மனதில் உருவாக்கிக்கொள்கிறான். அதாவது, மரம் என்ற கருத்தை உருவாக்கிக்கொள்கிறான். கவிதையில் வாசகன் பார்ப்பது, கவிஞன் பார்த்த, உருவாக்கிய மரமல்ல... அது வாசகன் உருவாக்கியது. அதில் வாசகனின் மரம் பற்றிய அனைத்து அறிதல்களின் வழியே உருவான மரம் பற்றிய கருத்து இருக்கிறது. அதுதான் கவிதையை அனுபவம்கொள்ளச் செய்கிறது. கவிதையில் உணர்வும் அறிவும் கருத்தும் இணைந்தேதான் இயங்குகிறது. உணர்வுப்பூர்வமான கவிதை ஒன்று பல நூறு பேரின் முன்னால் வாசிக்கப்படும்போது, எல்லோருக்கும் ஒரே உணர்வுநிலையா  ஏற்படுகிறது... இல்லையே. அதனால்தான், வாசகன் கவிதையிலுள்ள (தனது/தனக்கான) கருத்தைத்தான் முதலில் எடுத்துக்கொள்கிறான் என்று நம்புகிறேன். என்னுடைய கவிதையையே எடுத்துக்கொள்வோம், ‘கையில் அள்ளிய கடல்’ கவிதையில் ‘மெசேஜ்’ என எதுவும் இல்லை. ‘தண்ணீரை அள்ளி, நதியில் விட்டேன். அதில் எது என் நீர்?’ எனக் கேட்கிறேன். அதில் ஏதோ கருத்து நிலை இருக்கிறது. அதுதான் உங்கள் மனதில் நிற்கிறது. அதிலிருந்துதான் அந்தக் கவிதையை விரித்துக்கொள்கிறீர்கள். அப்போதுதான் கவிஞனுக்கும் வாசகனுக்குமான உறவு நெருக்கமாகிறது. இந்த அர்த்தத்தில்தான் அப்படிச் சொல்லியிருந்தேன்.”

“தொடக்கத்தில் உங்களைப் பாதித்தவர்கள்?”

“கவிதைகள் பற்றிய விவரம் தெரியாத வயதிலேயே எனக்கு மிகவும் பிடித்த கவிஞராக பாரதி இருந்தார். தொடக்கத்தில் இடதுசாரிக் கவிதைகள் என்னைப் பெரிதும் பாதித்தன. தமிழ்ப் புதுக்கவிதையில் பிரமிளின் படிமம், கவிதை வார்ப்புமுறை, மொழி என்னை ஈர்த்தது. ஒருவகையில் தமிழில், என்னைப் பாதிக்காத கவிஞர்கள் மிகக் குறைவு. ஆரம்பத்தில் கவிதைகளை எழுதும்போது, அதில் இன்னொரு நபரை நகலெடுக்கிறோம் எனப் புரிந்தது. அதுவல்ல நம் வேலை. நம்மை, நமது தனி மொழியை, நமது கவிதை முறையை முன்நிறுத்துவதுதான் முக்கியம் என நகர்ந்தேன்.”

“பாதிப்புகள் கூடாது என்கிறீர்களா?”

இல்லை. பாதிப்புகள் இயல்பானவை.அது ஒரு தொடக்க நிலை. இவ்வளவு காலம் இந்த மொழி உயிரோடு இருக்கிறது என்பதே பாதிப்புகளால்தானே. ஒரு கவிஞன் இன்னொரு கவிஞனைப் பாதிக்க வேண்டும். ஒரு போக்கு இன்னொரு போக்கைப் பாதிக்க வேண்டும். பாதிப்பில்லாமல் ஒரு கவிஞன் சுயம்புவாக உருவாக முடியாது.என்னுடைய முதல் தொகுப்பில் இருந்தவை 20 கவிதைகள்தான். அதற்கு முன், குறைந்தது 500 கவிதைகளாவது எழுதியிருப்பேன். அவையெல்லாம் ஓர் ஆர்வத்தில் எழுதப்பட்டவை. எனது ரத்தத்தையும் கண்ணீரையும் எந்த வரிகளில் என்னால் எழுத முடியுமோ, அதுவே என் மொழி எனத் தீர்மானித்தேன். பலரின் பாதிப்பும், தொடர்ச்சியான வாசிப்பும் உதவியது. எல்லாவற்றுக்கும் மேலாக, என்னுடைய வாழ்க்கையிலிருந்து பெற்ற அனுபவங்கள் துணையாக இருந்தன.

தன்னுடைய தனிமொழியை உருவாக்கி,  அதை மரபுமொழிக்குள் கொண்டு சேர்ப்பவன்தான் கவிஞன். அப்படித்தான் இதுவரை தமிழில் நிகழ்ந்திருக்கிறது. சங்க இலக்கியத்தில் ஒரேயொரு பாட்டுதான் எழுதியிருக்கிறார்; ஆனால் அவர், ‘செம்புலப்பெயல்நீரார்’ என்று நம் நினைவில் இன்றும் பதிந்திருக்கிறார். அவர், தன் தனிமொழியால் மொத்த மொழிக்கும் பங்களிப்பு செய்தவர். தமிழில் முக்கியமான கவிஞர்கள் என்று யாரெல்லாம்  அடையாளப்படுத்தப்படுகிறார்களோ, அவர்கள் எல்லோருமே அவ்வாறு செய்தவர்கள்தாம். அப்படிச் செய்வதன் வழியேதான் கவிஞர்கள் காலத்தில் நிற்க முடியும். பாரதி எழுதிக்கொண்டிருந்தபோது, எத்தனை நூறு பேர் எழுதியிருக்கக்கூடும். அவரது தனிமொழியால் காலத்தில்  வாழ்கிறார்.”

“பாரதிதாசன் பற்றிய உங்களின் பார்வை?”

“பாரதியின் ஆவேசமும் செறிவும் பாரதிதாசனிடமும் இருக்கிறதுதான். நான் அதிலுள்ள அரசியலைப் பேச விரும்பவில்லை. அதைக் காலம்தான் தீர்மானிக்க வேண்டும். பாரதிக்கு தேசியம் முக்கியமானதைப்போல, பாரதிதாசனுக்குத் திராவிடம் முக்கியமானதாக இருக்கலாம். ஆனால்,  நான் வேறோர் எல்லையிலிருந்து பார்க்கிறேன். ஒரு கவிதைக்குள் அந்தக் கவிஞன் இருக்கிறான்; அவனின் அனுபவம் இருக்கிறது; இருக்க வேண்டும். ஆனால்,  பாரதிதாசனின் பெரும்பாலான கவிதைகளில் அவரின் தனி அனுபவங்களே இல்லை. மொத்தமாகவே எதிர்வினை களாகவும் அல்லது சமூகத்துக்குச் செய்தி சொல்லும் வரிகளாகவும்தான் இருக்கின்றன. என்னுடைய பாரதிதாசன் வாசிப்பு ரொம்ப காலத்துக்கு முன்னால் நடந்தது. இப்போதைய நினைவிலிருந்து சொல்வதென்றால், ‘பயணம் பற்றிய ஒரு கவிதையில் மட்டும்தான் அவர் தன்னைப் பற்றி எழுதியிருக்கிறார். மற்ற அனைத்தும் அவருக்கு வெளியே உள்ள கவிதைகள்தான். ஆனால், சமூகத்தைப் பற்றிப் பாடிய வரிகளிலும் பாரதியார் இருக்கிறார். தமிழ்க் கவிதை என்பது கவிஞனுக்கு உள்ளிருந்து வரும் கவிதை என்றுதான் நான் நினைக்கிறேன். சங்ககாலம் தொடங்கி, இன்று வரைக்குமே அப்படித்தான். அப்படி இல்லை எனும்போது, பாரதிதாசனிடமிருந்து கொஞ்சம் தயக்கத்தோடு நான் விலகி நிற்கிறேன்.”

“பாரதிக்குப் பிறகு தமிழில் மகாகவிகள்....”

“அதற்கான தேவைகள் கிடையாதே.  தமிழில் மிக நன்றாகக் கவிதை எழுதும் எல்லோருமே மகாகவிகள்தான். ஒரு மொழியில் மகாகவி என்பது கட்டளைக் கல்லா என்ன?”

“உங்களது கவிதை வாசிப்பு முறைமையைப் பற்றி சொல்லுங்களேன்”


“என்னிடம் நீங்கள் ஒரு நல்ல எழுத்தாளரா, கவிஞரா எனக் கேட்டால், ‘எனக்குத் தெரியவில்லை’ என்றுதான் சொல்வேன். ஆனால்,  10, 12 வயது முதலே வாசித்து வருகிறவன் என்ற முறையில், என்னை ஒரு நல்ல வாசகன் என்று பெருமிதத்தோடு சொல்லிக்கொள்வேன்.

எனக்குப் புதுப் புது அனுபவங்கள் தேவைப்படுகின்றன. புதுப் புது இடங்கள், முகங்கள், குரல்கள் வேண்டும். அதற்காகத்தான் வாசிக்கிறேன். ‘இத்தனை கோடி காதல்களில் ஒரு காதல் குள்ளமானது’ என்று சொல்லும் இசையின் கவிதைப் படிமம்; ‘அம்மா இல்லாத வீட்டில் கண்ணாடிப் பார்த்துகொண்டிருந்த குழந்தை பிறகு காணாமல் போய்விடுகிறது’ என, வாழ்க்கையை இரண்டு வரிகளில் சொல்லும் ஷங்கர் ராமசுப்ரமணியனின் வரிகள்; ‘பக்கத்தில் இருந்த சின்ன வாஷ்பேசனில் யாரோ நிற்பதாகத் தண்ணீரைத் தெளித்துவிட்டு வந்தேன்’ என ஒரு புது மனநிலையைச் சொல்லும் முகுந்த் நாகராஜனின் உணர்வு; ‘தப்பட்டையோடு எங்க அப்பா தெருவில் வரும்போது ஒளிந்துகொள்வேன்; என் தோழிகள் முன் வரிசையில் அமர நான் கடைசியில் உட்காருவேன்; பல வீடுகளில் வாங்கி வந்த சாப்பாட்டைச் சுடுசோறு என்று சொல்லிச் சாப்பிடுவேன்.’ இத்தனையும் சொல்லி, ‘இப்போது யாரேனும் கேட்டால், ‘பறச்சி’ என்று சொல்வேன்’ எனும் சுகிர்தராணியின் குரல்... எனப் பலவிதமாகத்தான் என்னுடைய வாசிப்பு அமையும். நான் பார்த்திராத, எனக்குத் தெரியாத வாழ்க்கையை அல்லது வாழ்க்கையில் நான் தவறவிட்ட தருணத்தை யாரேனும் சொல்லும்போது, அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்; தரிசிக்க விரும்புகிறேன்.”

“நான் என்னவாக இருக்கிறேனோ, அதுவே என் எழுத்து!” - சுகுமாரன்

“45 ஆண்டுகளாகக் கவிதையுடன் பயணிக்கிறீர்கள். புதிதாகக் கவிதையொன்றை எழுதத் தொடங்கும்போது, ஏற்படுகிற அந்தப் பதற்றம் இன்னமும் இருக்கிறதா?”

“ரொம்ப நல்ல கதைகள் எழுதி, தொகுப்புகளெல்லாம் வந்த பின்பாக, தி.ஜானகிராமன் ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்று எழுதிய கட்டுரையில், ‘யாராவது சிறுகதை எழுதிக் கேட்டால், வயற்றில் புளியைக் கரைச்ச மாதிரி இருக்கு’ என்று எழுதியிருக்கிறார். எனக்கு இன்றைக்கும் அந்த மனநிலைதான் இருக்கிறது. ஒவ்வொரு கவிதை எழுதும்போதும், அது புதிதாக எனக்கே ஒரு நல்ல அனுபவமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இட்டுக்கட்டி கவிதை எழுதுவதில் ஆர்வமில்லை. தன்னியல்பாக நிகழ வேண்டும் எனக் காத்திருப்பேன். என் கவிதைகள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.”

“பைபிளின் தாக்கத்தை உங்களின் பல கவிதைகளில் காண முடிகிறது. பைபிள் வாசிப்பு, அதன் மீதான ஈர்ப்பு எப்போது ஏற்பட்டது?”

“நான் படித்தது ஒரு கிறிஸ்துவ நிறுவனம் நடத்திய பள்ளி. பிரார்த்தனைப் பாடலில் தொடங்கி, பல விஷயங்களில் கிறிஸ்தவச் சாயல் இருக்கும். அப்போது, வாழ்க்கையில் எனக்கு ரொம்பப் பெரிய ஆசை பாடகனாக வேண்டும் என்பதுதான். ஏதாவது பாடிக்கொண்டே இருப்பேன். எங்களின் கணித ஆசிரியர், ஜேம்ஸ் தேவதாஸ் இசைஞானம்கொண்டவர்; வயலினிஸ்ட். அவர் இசைக்குழு ஒன்றை உருவாக்கினார். அதற்குப் பாடல்கள் தேவைப்பட்டன. கவிஞர் என்று நண்பர்கள் என்னை அறிமுகப்படுத்திவிட்டதால், பாடல்கள் எழுதினேன். பள்ளியில் கிறிஸ்தவ மாணவர்களுக்கு எனத் தனியாக ஒரு வகுப்பு நடக்கும். மற்றவர்கள் விருப்பம் இருந்தால் செல்லலாம். அப்படிச் சென்றதன் மூலம் பைபிள் எனக்கு மிக நெருக்கமானது. உலகின் மிகச் சிறந்த நூல் பைபிள் என்று இப்போதும் சொல்வேன். பைபிளை இறைநூலாக நான் பார்க்கவில்லை, மனிதகுலத்தின் ஆவணமாகவே காண்கிறேன். மனிதனின் அத்தனை வேதனைகளையும் போராட்டங்களையும் பைபிளில் தொகுத்துவைத்திருக்கிறார்கள். அதன் சாயல்கள் என் கவிதைகளில் வெளிப்படுவதை மிகுந்த மகிழ்ச்சியோடு அனுமதித்திருக்கிறேன்.”

“வலியும் தனிமையும் இருத்தலியல் பிரச்னையும் உங்களது கவிதைகளில் மிகுதியாக தென்படுகிறது. அது அப்போதைய சமூகச் சூழலால் நிகழ்ந்ததா அல்லது உங்களின் தனிப்பட்ட வாழ்நிலை சார்ந்ததா?”

“நான் என்னவாக இருக்கிறேனோ, அதுவே என் எழுத்து. என்னுடைய எழுத்தில் வெளிப்படுகிற நானும் எழுத்துக்கு வெளியே இருக்கிற நானும் ஏறத்தாழ ஒருவர்தான். நானாகத் தேடிக் கண்டடைந்த இந்த இலக்கியத்திற்கு உண்மையானவனாக இருக்க வேண்டும் என்பதே என் அடிப்படியான கூறு. வாழ்க்கையின் ஒரு காலகட்டம் வரை அதாவது, பள்ளி இறுதி வகுப்பு வரை பெரிய துன்பங்கள் ஏதுமில்லை. அதற்குப் பிறகு வெவ்வேறு காரணங்களால், வெவ்வேறு சூழல்களால் இந்த வாழ்க்கை முற்றிலுமாகத் தடம்மாறிப்போனது. வறுமையால் வீட்டில் நிம்மதியின்மை நிலவியது. ஏற்கெனவே தனிமையானவன் நான், அதில் இவையும் சேர்ந்து அழுத்த, பெரும் துக்கத்தின் பாறாங்கல்லைச் சுமந்து செல்பவனாகவே மாறிப்போனேன். அதுதான் அந்தக் கவிதைகளில் இறங்கியது. அந்த நிலைமைதான் வெளி உலகிலும் இருந்தது. சந்தோஷத்தில் சிரித்து கொண்டிருக்கும் மனிதனைவிட, மிகுந்த துக்கத்தால் மனம் கோணிக் கிடப்பவன்தான் எனக்கு நெருக்கமானவனாகத் தெரிந்தான். அதனால், அவனின் துக்கம் எனது துக்கமாகத் தோன்றியது. அதைத்தான் நான் திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருந்தேன். சூழல்கள் மாற மாற, அவற்றைப் பற்றி கேள்விகளைக் கேட்கிற, அலசி ஆராய்கிற மனநிலைக்கு வந்தேன். அவையும் என் கவிதைக்குள் வந்தன. நான் என்னவாக வாழ்ந்தேனோ, வாழ்கிறேனோ அதை இன்னொரு மொழியில் இன்னொரு நிறத்தில் சொல்ல முயன்றிருக்கிறேன்.”

“குறைவாகவே கவிதைகள் எழுதியிருப்பதாக வருத்தம் உண்டா?”


“பொதுவாகவே நான் கொஞ்சமாகப் பேசுகிறவன். அதனால், கொஞ்சமாக விஷயங்கள் சொன்னால் போதும் என்ற எண்ணமும் உண்டு. முதலிலேயே சொன்னதுபோல, நான் தமிழின் நீண்ட கவிதைமரபைச் சேர்ந்தவன். நான் நினைப்பது போன்ற ஒரு விஷயத்தை ஏற்கெனவே ஒருவர் எழுதியிருந்தால், அதை நானும் ஏன் எழுத வேண்டும் என்று விலகிப் போகிறவன். உதாரணமாக, ‘மைதுனத்துக்கும் வேண்டுமொரு முகம்’ என்று விக்கிரமாத்தியன் எழுதியிருக்கிறார். இது எல்லோருக்கும் தோன்றக்கூடியதுதான். தமிழ் மொழிக்குள் அவர் எழுதிவிட்டதால், நாம் எழுத வேண்டாமே என்று நினைப்பேன். எண்ணிக்கை

“நான் என்னவாக இருக்கிறேனோ, அதுவே என் எழுத்து!” - சுகுமாரன்

குறைவானதற்கு இது ஒரு காரணம். அடுத்து, எல்லா அனுபவங்களுமே கவிதைகளுக்கானதுதான் என்றாலுமே, என்னை உந்தித் தள்ளுகிற, தொந்தரவு செய்கிற அனுபவங்களை மட்டும்தான் எழுதுகிறேன். இதை எழுதினால்தான் கொஞ்சமேனும் ஆறுதலடைய முடியும் என்றிருந்தால்தான் அதை நான் எழுதுகிறேன். நான் எழுதிய கவிதைகளை விடவும் எழுதாமல்விட்ட கவிதைகள் அதிகம். எண்ணிக்கை குறித்தெல்லாம் வருத்தம் ஏதுமில்லை. நான்  இவ்வளவுதான் செய்திருக்கிறேன். ஆனால், இதைச் சரியாகச் செய்திருக்கிறேனா என்பதுதான் முக்கியம். சரியாகச் செய்திருக்கிறேன் என நான் நம்புகிறேன்.”

“தற்காலக் கவிதைப்போக்கில் நீங்கள் பிரச்னைகளாகப் பார்க்கும் விஷயங்கள் எவை? என்ன மாற்றங்கள் நிகழ வேண்டும் என நினைக்கிறீர்கள்?”


“மாற்றம் குறித்து ஆரூடமெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியாது. மேலும், நானும் இன்றையவர்களோடு சேர்ந்து எழுதுகிறவந்தானே. (சிரிக்கிறார்) ‘என்னுடைய அனுபவத்துக்கு நேர்மையாக இருக்க வேண்டும்’ என்பது பழைய கருத்தாக இருக்கலாம். ஆனால், நான் எழுதுகிற காலம் வரை அப்படித்தான் இருப்பேன்.

உங்களின் தனி வாழ்க்கையிலோ, சமூக வாழ்க்கையிலோ தட்டுப்படாத விஷயங்களை எழுதுவது; ஏற்கெனவே இருக்கிற மோஸ்தர் சார்ந்து, பேர்ட்டன் சார்ந்து எழுதுவது எனப் பல விதக் கவிதைகள் எனக்குத் தொந்தரவு தருபவையாக இருக்கின்றன. மொழியை மரியாதையுடன் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், ஒரு கவிஞர் மொழிக்குத்தான் முதன்மையான பங்களிப்பைச் செய்கிறார். அது தவறானதாக அமைந்துவிடக் கூடாது. எது கவிதை என்பதில் ஒவ்வொருவருக்கும் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால், என்னுடைய அனுபவம் என்பது என்னுடையதுதான். ஆனபோதும், அந்த அனுபவத்தில் உங்களுக்கும் இடம் இருக்கிறது என்கிறபோதுதான் அதைக் கவிதையாக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். அதற்குப் பதிலாக, ‘நான் உன்னைவிட மிகச் சிறந்தவன்’ என்ற அனுபவத்தைவைக்கும் கவிதைகளில் எனக்கு உடன்பாடில்லை. பல கவிதைகளில் அப்படியான தொனி இருப்பதாக சந்தேகிக்கிறேன். ரொம்பவும் புத்திபூர்வமான வாக்கியங்களைவைத்து உருவாக்குகிற கவிதைகளிலும் ஈடுபாடு இல்லை.

இன்றைக்குப் பல நவீனக் கருவிகளைப் பயன்படுத்துகிறோம், நவீன சூழல்களில் இருக்கிறோம். இவை எல்லாவற்றையும் கவிதைக்குள் கொண்டுவர வேண்டும் எனும் நிர்பந்தமெல்லாம் கிடையாது. உதாரணமாக, அறிவியல் உண்மை ஒன்றைக் கவிதைக்குள் கொண்டுவரும்போது, அது அறிவியல் உண்மையாக மட்டுமே இருக்கிறது. கவிதையின் உண்மையாக மாறவில்லை. கவிதையின் உண்மையாக மாறும்போதே இலக்கிய வாசகன் அதை ஏற்றுக்கொள்வான். உதாரணமாக, பிரமிளின் கவிதை ஒன்றில்,  ‘கிரேன்’ மேல் உச்சியிலிருக்கும் தொழிலாளி துப்பும் எச்சில் கீழே வரும்போது, அதில் வானவில் பிறக்கிறது என்பதாகச் செல்லும். கவிஞனின் மனநிலையில் மட்டுமே இது சாத்தியம். ஒளி ஊடுருவும் அறிவியல் அனுபவத்தைக் கவிதையோடு இணைத்து, அதை எல்லோருக்குமான பொது அனுபவமாக மாற்றுகிறார். இப்படியாக அல்லாமல், ‘பத்து டெஸிபல் சத்தம் கேட்டது’ என எழுதும்போது ஒரு மயக்கத்தைத் தருகிறதே தவிர, கவிதை அனுபவத்தைத் தருவதில்லை.”

“சமூக ஊடகங்களில் ஒரு புதிய வாசிப்புத்தளம் உருவாகியுள்ளது. அதன்வழியே மட்டுமே எழுதி படைப்பாளிகளாகும் ஒரு தலைமுறை தோன்றியுள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இதைத் தவிர்க்க முடியாது. நானும் அதில் கொஞ்ச நேரம் செயல்படுபவன்தான். எல்லாவற்றிலும் இருக்கக்கூடிய நேர்மறை, எதிர்மறை அம்சங்கள் இதிலும் உள்ளன. பத்தாண்டுகளுக்கு முன்பு கவிதைகள் எழுதி, அதை பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு வருமா, வராதா என ஏக்கத்துடன் எதிர்பார்த்திருந்த நிலை இன்று மாறிவிட்டது. சமூக ஊடகத்தின் வழியே உடனடியாக வாசகனிடம் கவிதை சென்று சேர்கிறது; அதற்கான எதிர்வினைகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடிகிறது, இதுவொரு  முக்கியமான அம்சம். இந்த வசதியை வேண்டாம் என மறுத்தால் நம்மைவிட பிற்போக்குவாதிகள் இருக்கமுடியாது இல்லையா? அறிவியல் எல்லோருக்குமாக ஜனநாயகப்படுத்தப்பட்ட காலம் இது. எல்லோருக்கும் தன் கருத்துகளைச் சொல்ல உரிமை இருக்கிறதுதானே! அப்படிச் சொல்லும்போதே, ‘கொஞ்சம் பொறுப்புஉணர்வும் வேண்டும்’ என்ற மறைமுக நிபந்தனையும் இருக்கிறது. அதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். இணையம் மூலம்தான் முகுந்த் நாகராஜன் தெரியவந்தார். மலையாளத்தில் விஷ்ணு பிரசாத் எனும் கவிஞர் தன் கவிதைகளை இணையத்தில் மட்டுமே எழுதி, பிறகு அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக்கினார். என்னைப் பொறுத்தவரை ஒரு கவிதை, கவிதையாக இருக்கிறதா என்பதுதான் முக்கியமே தவிர, அது அச்சில் வந்ததா, இணையத்தில் வந்ததா என்பதல்ல.”

“கவிதை எழுதி முதலில் நண்பர்களிடம் காட்டுவது, பின்பு இதழுக்கு அனுப்புவது, ஆசிரியர்குழு படித்து கருத்து சொல்வது என படைப்பு பற்றிய ஓர் உரையாடல், செம்மையாக்க செயல்பாடு இருந்தது அல்லவா? இணையத்தில் அது இல்லாமல் போய்விட்டதே!”


“கருவிலே திருவுடைய கவிஞர்களுக்கு அது தேவையில்லை. மற்றவர்களுக்குக் குறைந்தபட்சம் செம்மைப்படுத்துதல் என்பது தேவை. அது இல்லாமல் பிரசுரமாகும்போது அக்கவிதைக்கான ஆயுளை அதுவே தீர்மானித்துகொள்ளும். அதேசமயம், இதுதான் வெற்றிபெறும், நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும் என்றுகூட தீர்மானமாக எதையும் நாம் சொல்லிவிட முடியாது. தமிழில் புதுக்கவிதை வடிவம் அறிமுகமாகி 80 வருடங்கள் ஆகிவிட்டதாகச் சொல்லப்படுகின்றது. அவ்வளவு பேர் எழுதியிருக்கிறார்கள். அவர்களில் எத்தனை பேரை நினைவில் வைத்திருக்கிறோம். அபிப்பிராயம் கேட்கப்பட்டு, எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட பல கவிஞர்களின் கவிதைகளும்கூட இப்போது இல்லை.

சி.சு.செல்லப்பா,  23 கவிஞர்கள் எழுதிய 53 கவிதைகள் அடங்கிய ‘புதுக்குரல்கள்’ எனும் தொகுப்பைக் கொண்டுவந்தார். அந்த 23 கவிஞர்களில் இன்றைக்கும் கவிஞர்கள் எனக் கருதப்படுபவர்கள் எத்தனை பேர்? கவிதை தன்னுடைய ஆயுளைத் தானே தீர்மானிக்கும். மொழி அந்தக் கவிதையை வாழ வைப்பதற்கான வரத்தைத் தரும்”

“நவீன தமிழ்க் கவிதை வரலாற்றில் கவிஞர்களுக்கும் அரசியலுக்குமான உறவு என்னவாக இருக்கிறது? ‘அரசியல் நீக்கம் செய்யப்பட்ட கவிதைகளே கொண்டாடப்படுகின்றன’ என்றொரு கருத்தும் இங்கு உண்டு...”


“அரசியல் நீக்கம் செய்யப்பட்டது என்று ஓர் எழுத்துகூட எந்த மொழியிலும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. நாம் பேசிக்கொண்டிருக்கும் எல்லா சொற்களிலுமே அரசியல் இருக்கிறது. அதில், நாம் எதற்கு முதன்மை தருகிறோம் என்பதைப் பொறுத்துதான் கருத்துகள் மாறுபடுகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்குத் தேவையான அரசியல் கேள்விகள், அறைகூவல்கள் எழுகின்றன. கவிஞனும் அவன் பங்கிற்கு அதற்கான ஏதோவொரு பதிலைக் கண்டுபிடிக்க முயல்கிறான். ந.பிச்சமூர்த்திக்கு இந்திய தேசியம், பின்னால் வந்தவர்களுக்கு இடதுசிந்தனை, திராவிடக் கருத்தியல்... இப்படியாக எப்போதும் எதோவொன்று தொடரும். தற்போது அரசியல், தன்னெழுச்சி சார்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அதாவது கட்சி சார்ப்பற்ற, பொதுவான எழுச்சி சார்ந்த அரசியல் பார்வையாக இருக்கிறது. இன்று வெற்றிபெற்ற அல்லது கவனம் ஈர்த்த எந்தப் போராட்டமுமே கட்சிகள் முன்னெடுத்தவை அல்ல. மாறாக, பொதுமக்கள் உருவாக்கிய போராட்டங்கள். அவை கட்சி சார்ந்ததாக இல்லை என்பதாலேயே அரசியல் இல்லை என்று சொல்ல முடியாது அல்லவா. பொது மனிதனுக்கும் சரி, கலைஞனுக்கும் சரி, அரசியல் இல்லாமல் எந்தவொரு விஷயமும் இல்லை. அதேசமயம், அரசியல்தான் எல்லாமும் என்பதும் இல்லை.”

“நான் என்னவாக இருக்கிறேனோ, அதுவே என் எழுத்து!” - சுகுமாரன்

“அரசியல் கவிதை என்று எப்படி வரயறுப்பது?”

“எல்லாக் கவிதைகளும் அரசியல் கவிதைகள்தான். அரசியல் கவிதைகள் என்று தனியாக இருக்கிறதா என்று கேட்டால், எனக்குத் தெரியவில்லை. மனித சமூகத்தின் அரசியல் எழுச்சிக்கு, அரசியல் மாற்றத்திற்கு உடன்நின்றதில் கவிதைக்கு முக்கியமான பங்கிருக்கிறது. ஆனால், ‘அவை மட்டும்தான் கவிதையா, கவிதையின் பணியா’ என்று கேட்டால், ‘இல்லை’ என்பதுதான் என் பதில். சுதந்திரப் போராட்டம் இல்லையென்றால், பாரதியாரின் தேசியக் கவிதைகள் எழுதப்பட்டிருப்பதற்கான சூழல் இருந்திருக்காது. அப்படியான சூழல் இல்லாத சமயத்தில் அவர் அதை எழுதியிருந்தால், அந்தக் கவிதைகள் போலியாக இருந்திருக்கும். அப்படிச் சூழல் இல்லாத காலத்தில்தான், ‘எழுந்து வா’ என்கிற தொனியில் இங்கே ‘அரசியல்’ கவிதைகள் எழுதப்பட்டன. தனிமனித அகவாழ்வைப்போலவே அரசியலும் அனுபவம்தான். அந்த அனுபவத்திலிருந்து வரக்கூடிய கவிதைகள்தான் கவிதையாக இருக்கும். மிகப் புகழ்பெற்ற அரசியல் கவிஞர்களாகக் குறிப்பிடப்படுகிற எல்லோருடைய வாழ்க்கையின் பகுதியாகவும் அரசியல் இருந்திருக்கிறது. இங்கே கவிஞன் ஏதோவாகவும் அரசியல் வேறு ஏதோவாகவும் இருந்ததால்தான் அதைப் போலி என்று சொல்ல வேண்டியதானது. மிக அரிதான நல்ல உதாரணங்கள் தமிழில் இருக்கக் கூடும். இன்குலாப் அப்படியானவர். அரசியல் அவரது வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது என்பதை அவரது கவிதைகள் நிரூபித்தன. அவரது வாழ்க்கையும் நீரூபித்தது. அவரது மரணத்திற்குப் பின்னாலும்கூட அதை அவர் நிரூபித்தார்.”

“அனுபவமாகாத ஒன்றைப் போலியாக எழுதுவது குறித்துச் சொன்னீர்கள். அதேசமயம், அகவாழ்வை எழுதுகிறவர்கள் புறச்சூழலில் எதுவும் நிகழாததுபோல போலியாக புறம் மறுத்து எழுதவில்லையா?”


“90-களுக்குப் பிறகு ‘அகம்-புறம்’ என்ற அந்தச் சுவரை நாம் உடைத்துவிட்டோமே. இப்போது, சமூகத்தில் நடக்கும் விஷயம் எதிலும் எனக்குத் தொடர்பில்லை; தெரியாது என்று கூற முடியாதே. யாரோ ஒருவரை மலம் தின்னவைக்கிறார்கள் எனும்போது, எனக்குக் குமட்டல் வருகிறதே. யாரோ ஒரு பெண்ணின் பிறப்புறுப்பு சிதைக்கப்படுவதைக் கேட்கும்போது எனக்கு வலிக்கின்றதே. இந்த அனுபவத்தை நான் சொல்லித்தானே ஆக வேண்டும். இதிலிருந்து விலகி, மறுத்து எப்படிக் கவிதை எழுத முடியும்?”

“மலையாளக் கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படும் அளவுக்கு, மலையாளத்தில் தமிழ் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படுகின்றனவா? நீங்கள் தமிழிலிருந்து மலையாளத்துக்கு மொழிபெயர்த்த கவிதைகளைப் பற்றி...”

“இந்தக் கேள்வி தொடர்ந்து கேட்கப்படுகிறது. அது குறித்த ஆதங்கமும் என்னிடமிருக்கிறது. பிற மொழிகளிலிருந்து தமிழுக்குப் பல படைப்புகளைக் கொண்டுவந்திருக்கிறோம். ஆனால், ஒப்பீட்டளவில் தமிழ்ப் படைப்புகளை மற்ற மொழிக்குக் கொண்டுசேர்க்கவில்லை. மலையாளத்திலிருந்து பல கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். 70-களில் இடதுசாரிச் சார்புநிலையில் என் மனம் இருந்தது. அதை வலுப்படுத்துவதற்கான கவிதைகளைத் தமிழில் தேடியபோது, வெறும் முழக்கங்களாக, பிரசாரங்களாக, அறைகூவல்களாக மட்டுமே இருந்தன. வாழ்க்கையோடு இணைந்த அந்த உணர்வை அல்லது போராட்டத்தை வெளிப்படுத்தும் விதமான கவிதைகள் எனக்குத் தென்பட்டது மலையாளத்தில்தான். அவற்றை நான் மொழிபெயர்க்க ஆரம்பித்தேன். அதற்கான தேவையும் நோக்கமும் இருந்தன. அவற்றிற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. அகம், புறம் இரண்டையும் வேறு வேறாகப் பார்த்த தமிழ்க் கவிதைச் சூழலில் இது இரண்டும் வேறல்ல, ஒன்றாகத்தான் இருக்க முடியும் என்பதாகச் சிறிய அளவிலான திறப்பையும் அது தந்தது. பின்னாளில், ஈழத்துக் கவிதைகள் இந்த உணர்வை வலுவாகச் சொல்லின. அரசியல் என்பது நமக்கு வெளியே உள்ளது அல்ல, நமக்கு உள்ளேயும் உள்ளதுதான் என்பதைச் சொல்லும் விதமாகத்தான் மலையாளக் கவிதைகளைத் தமிழுக்குக் கொண்டுவந்தேன். மேலும், எனது ரசனைக்காகவும் சில கவிதைகளை மொழிபெயர்த்தேன். அது என்னுடைய கவிதை மொழியை வளப்படுத்தவும் செய்தது.

தமிழிலிருந்து மலையாளத்துக்கு என்றால், சேரன், சே.பிருந்தா, சுகிர்தராணி போன்றோரின் சில கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். குறைவானவைதான். அவையும்கூட பெரும்பாலும் ஏதேனும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கானதாகவே இருக்கும். என்னுடைய மனதுக்குள் இருக்கும் மொழி தமிழ் என்பதால், தமிழ்க் கவிதையை மலையாளதுக்குக் கொண்டுச் செல்வதில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. தொடர்ச்சியான பயிற்சி தேவைப்படுகிறது. 50 வருடங்களாகத் தமிழிலிருந்து படைப்புகள் மலையாளத்துக்குச் சென்றுகொண்டுதான் இருக்கின்றன. சச்சிதானந்தம்கூட ஆங்கிலம் வழியே சேரன், பெருமாள் முருகன் கவிதைகளை மலையாளத்தில் மொழிபெயர்த் திருக்கிறார். ரமேஷன் நாயர் என்பவர் பாரதியார் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். ஆற்றூர் ரவிவர்மா 60-க்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதைகளை மொழிபெயர்த்து ‘புது நானூறு’ எனும் தொகுப்பை வெளியிட்டுள்ளார். முயற்சிகள் நடந்தாலும், மலையாளத்திலிருந்து தமிழுக்கு வரும் அளவுக்கு, தமிழிலிருந்து மலையாளத்திற்குச் செல்வதில்லை. வருத்தம்தான்!”

“தமிழிலிருந்து செல்லும் மிகக் குறைவான படைப்புகளைக்கொண்டு மலையாள இலக்கிய உலகம் தமிழ்ச் சூழலை எவ்வாறு பார்க்கிறது?”

“80-கள் வரை ‘தமிழ் இலக்கியம் என்றாலே, வெகுஜன இலக்கியம் மட்டுமே’ என்றுதான் மலையாள இலக்கியவாதிகள் நினைத்திருந்தனர். விதிவிலக்காக ஜெயகாந்தன் படைப்புகள் அறியப்பட்டன. மலையாளச் சிறுபத்திரிகைச் சூழலில், தமிழின் முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றியும்  தமிழில் நடைபெறும் முயற்சிகளைப் பற்றியும் கவனிப்பு இருந்திருக்கிறது. ஏனென்றால், தமிழில் அதே காலகட்டத்தில் சிறுபத்திரிகைகளில் மட்டுமே எழுதிவந்த நகுலன், சுந்தர ராமசாமி போன்றோருக்கு மலையாளத்திலிருந்து ஆசான் விருது தரப்பட்டது. அவர்களின் கவிதைகளை யெல்லாம் கவனித்திருக்கிறார்கள்.

“நான் என்னவாக இருக்கிறேனோ, அதுவே என் எழுத்து!” - சுகுமாரன்எம்.கோவிந்தன் நடத்திய ‘சமிக்‌ஷா’ எனும் பத்திரிகையில் தமிழ்க் கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ஆனாலும், தமிழ் இலக்கியம் என்பது வெகுஜன இலக்கியமே எனும் புரிதலே வெகுகாலம் மலையாளத்தில் இருந்தது. 80-களுக்குப் பிறகு, சுந்தர ராமசாமியின்  ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’ மலையாள இதழில் தொடராக வெளிவந்தபோது, பெரும் உடைப்பை ஏற்படுத்தியது. அதுதான் இரண்டு மொழிகளுக்கும் இடையே இல்லாது இருந்த கதவைத் திறந்துவிட்டது. அதன்பின், தமிழில் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகள் மலையாளத்துக்குச் சென்றன. இப்போது ஜெயமோகனின் புத்தகங்கள் விற்கும் எண்ணிக்கை தமிழைக் காட்டிலும் மலையாளத்தில் மிக அதிகம். ‘நூறு நாற்காலிகள்’, ‘யானை டாக்டர்’ போன்ற நூல்கள் லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்றன.”

“வாழ்க்கையோடும் உணர்வோடும் எழுதப்பட்ட அரசியல் கவிதைகளை மலையாளத்தில் காண முடிந்ததைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். தமிழில் அப்படியானவை எழுதப்படாமல் போனதற்கு என்ன காரணம் என்று  நினைக்கிறீர்கள்?”

“கேரளத்தில் மிகப் பெரிய சமூக அரசியல் இயக்கமாக உருவானவை, நாராயண குரு மறுமலர்ச்சி இயக்கமும் இடதுசாரி இயக்கமும்தான். 75 ஆண்டுகளாக, இடதுசாரி மனநிலை கேரளாவில் பயின்றுவருகிறது. தமிழகத்தில் 60-களுக்குப் பிறகு அந்த மனநிலை இல்லாமல் போய்விடுகிறது. சமூகப் பிரச்னைகளில் இடதுசாரி எதிர்கொள்ளல் குறைந்துபோய், திராவிடக் கட்சிகளின் பங்கு அதிகமானதும்கூட காரணமாக இருக்கலாம். கேரளாவில் தொடர்ச்சியாக, சமூகத்திற்கு ஆதரவான போராட்டங்களையும் சமூக மாற்றத்திற்கான அறைகூவலையும் இடதுசாரிகளே முன்வைத்தனர்; வைக்கின்றனர். இதற்கு மக்களின் ஆதரவும் இருந்துவருகிறது. சரியாகச் சொல்வது என்றால், கேரளாவில் இடதுசாரி உணர்வு என்பது, மக்களின் வாழ்க்கை உணர்வாக மாறியிருக்கிறது. அதனால்தான், அதைத் தாங்கிய கவிதைகள் அங்கிருந்து வருகின்றன. தமிழகத்தில் வாழ்க்கைக்கு வெளியே உள்ள உணர்வாக, இரவல் வாங்கப்பட்ட உணர்வாக இருப்பதால், நாளைக்கே புரட்சி வந்துவிடும் எனும் முழக்கமாகவும் சற்று கடுமையாகச் சொல்வதென்றால், போலித்தனமாகவும் தென்படுகின்றன.”

“தமிழ் மரபு, பண்பாடு குறித்து இன்று அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு படைப்பாளி எனும் அடிப்படையில், தமிழ் மரபு குறித்த மனப்பதிவு உங்களுக்குள் என்னவாக இருக்கிறது?”


“இது புலமை சார்ந்தவர்களிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வி. எனக்கு அவ்வளவு பெரிய புலமையோ, நிபுணத்துவமோ இல்லை. நான் படைப்பு சார்ந்து இயங்குகிறேன் என்பதால், மரபுக்குள் உள்ள படைப்பாக்கம் சார்ந்த கூறுகளை எடுத்துகொள்கிறேன். மேலும் சொல்ல வேண்டுமென்றால், வாழ்க்கையை முதன்மைப்படுத்திப் பேசிய மரபு, தமிழ் மரபு. அதில் கடவுளோ, முக்தியோ இல்லை. ஒரு முழுமையான மதச்சார்பற்ற மரபு நம்முடையது. இன்றைக்கும் இந்த இந்தியத் துணைக்கண்டத்தில் உயிர்ப்போடு இயங்கிகொண்டிருக்கும் ஓர் இனம், தமிழ் இனம். காரணம், அதனிடம் இருந்த இந்த விசாலமான மரபார்ந்த பார்வை.”

“தமிழ் - மலையாள இலக்கியப் போக்குகளை நீண்ட காலமாகக் கவனித்துவருகிறீர்கள் எனும் முறையில், இரண்டு மொழிகளின் தற்கால இலக்கியப் போக்குகள் எவ்வாறு இருக்கின்றன என்று சொல்ல முடியுமா?”

“இதற்கு ஒரு சமூகவியல் சார்ந்த காரணமும் இருக்கின்றது. மலையாளிகள் பெரும்பாலும் இடம்பெயர்ந்து வாழ்கிற ஆள்கள். கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகம். தொடர்ச்சியாக இடதுசாரி, மறுமலர்ச்சி இயக்கங்கள் ஏற்படுத்திய விழிப்புஉணர்வு. இன்றும் இங்கு அழிந்துபோகாமல் காக்கப்படுகின்றன. இங்கிருக்கும் ஒரு சாதாரண மலையாளியிடம் சென்று  ‘வைக்கம் முகம்மது பஷீர்’ என்று கேட்டால்,  ‘மலையாளத்தின் முக்கியமான எழுத்தாளர்’ என்று சொல்வான். தமிழ்நாட்டில் புதுமைப்பித்தன் பற்றிக் கேட்டால், ‘அது பார்த்திபன் நடித்த படம்’ என்று சொல்வான். மலையாளிகள் வெளிநாடு செல்லும்போது அங்கிருக்கும் இலக்கியத்தோடு ஒரு ஊடாட்டத்தை நடத்துகின்றார்கள். அங்கே நிகழும் புதிய முயற்சிகள் தொடர்பான மொழிபெயர்ப்புகளை மலையாளத்துக்குக் கொண்டுவருகின்றார்கள். தமிழில் அந்த மாதிரியான முயற்சிகள் காத்திரமாக நடக்கவில்லை. இவற்றைவைத்து தமிழ், மலையாளத்தைவிட ஒருபடி கீழ் என்பதாக நான் சொல்லவரவில்லை. மலையாள இலக்கியத்தின் பிரத்தியேகத் தன்மைகள் தமிழுக்கும் உண்டு. புதுமைப்பித்தன் போன்ற ஓர் எழுத்தாளர் மலையாளத்தில் இல்லை. இருப்பதற்கான சாத்தியங்களும் இல்லை. அதேபோல வைக்கம் முகம்மது பஷீர் போன்ற ஓர் எழுத்தாளர் தமிழில் இல்லை. தமிழில் இருக்க வேண்டிய தேவையும் இல்லை. இப்படித்தான் நான் பார்க்கின்றேன்.

மலையாளக் கவிதைகள் மேடைகளில் பாடுவதற்காகவே எழுதப்படுபவை. அவை அந்த மரபைச் சார்ந்தவை. எந்த மதமாக இருந்தாலும் பிரார்த்தனையின்போது கவிதை சொல்லும் மரபு அங்கே இருக்கின்றது. இது தமிழ்நாட்டில் ரொம்பவும் அபூர்வம். மலையாளக் கவிதைகள் கேட்பதற்கான ஒன்றாக இருக்கின்றது. ஆனால், தமிழில் கவிதைகளை வாசிப்பதற்கான ஒன்றாக வைத்திருக்கின்றோம். நம்மைப் பார்த்து, மலையாளக் கவிதைகளை வாசிப்பிற்குரியவையாக அவர்கள் மாற்றத் தொடங்கினார்கள். அதனால், கவிதைகள் வழவழவென்று பேச ஆரம்பித்தன. ஜெயமோகன், கலாப்பிரியா நடத்திய பட்டறைகள்தான் இதையெல்லாம் மாற்றின. சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே. சில குறிப்புகள்’, மிகுந்த ரொமாண்டிக்காகத் தொடங்கிய வாக்கியங்களை இயல்பாக எழுதுவதற்கு மலையாளிகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்தது. ஆனால் இந்த மாதிரி, மலையாள இலக்கியங்களைப் பார்த்துத் தமிழ் இலக்கியங்களில் எந்த மாற்றமும் நிகழ்ந்ததில்லை. தமிழ்க் கவிதைகளிலிருக்கும் குறைகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு, மலையாளக் கவிதைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தமிழ்க் கவிதைகள் மலையாளக் கவிதைகளைவிடவும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவே தோன்றுகிறது.

இன்றைக்கு மலையாளத்தில் நாவல் அவ்வளவு காத்திரமான வடிவமாக இல்லை. அது ஒரு செயற்கையான வடிவமாகத்தான் இருக்கிறது. தமிழில் நாவல் ஒரு வலுவான வடிவமாக உருவாகியிருக்கிறது. மலையாளத்தில் சிறுகதைகள் வேறுவேறு வகைமைகளில் வேறுவேறு கூறுமுறைகளில் எழுதப்படுகின்றன. தமிழில் சிறுகதைகள், கிட்டத்தட்ட இல்லாதுபோன தோற்றத்தைத் தருகின்றன. புதிதாக எழுதப்படும் கதைகளும், ஏதோவொரு பாவனையில் எழுதப்படுவதாகத் தோற்றமளிக்கிறது. கவிதைகளில், மலையாளக் கவிதைகள் ஒரு மையமில்லாமல் எதைப் பற்றிப் பேசுவது என்று தவித்துக்கொண்டிருக்கும்போது, தமிழில் குறிப்பிட்ட மையங்களிலிருந்து பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தமிழில் கேட்கும் அளவிற்கான தலித் குரல்கள் மலையாளத்தில் கேட்கவில்லை. தமிழில் தலித் கவிஞர்களாக, குறிப்பாகப் பெண் தலித் கவிஞர்களாக, குறைந்தது ஐந்து பேரையாவது சொல்லிவிடலாம். ஆனால், மலையாளத்தில் நான் பார்த்த அளவில் ஒரே ஒரு கவிஞர் மட்டும்தான் உள்ளார். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, நாவலிலும் கவிதையிலும் மலையாளத்தைவிட மேம்பட்ட இடத்திலும் சிறுகதையில் போதாமைகொண்ட ஒன்றாகவும் இருப்பதாக நான் உணர்கின்றேன்.”

“நான் என்னவாக இருக்கிறேனோ, அதுவே என் எழுத்து!” - சுகுமாரன்

“மலையாள எழுத்தாளர்களுடனான நட்பு எவ்விதமாக இருக்கிறது?”

ரொம்பக் குறைவான எண்ணிக்கையில்தான் நண்பர்கள் இருக்கிறார்கள். முதன்முதலாகத் தமிழ் வாசகன் ஒருவன், மலையாள எழுத்தாளரைப் பார்க்கும் பிரமிப்போடுதான் மலையாள இலக்கியத்தைப் பார்த்தேன். அப்படி நான் பிரமிப்போடு பார்த்த முதல் மலையாள எழுத்தாளார் வைக்கம் முகமது பஷீர். அப்படிப் பிரம்மித்துப் பார்க்க வேண்டிய ஆள்தான். பஷீரைப் பார்த்ததை ஆன்மிக அர்த்தத்தில் சொல்வதானால், ரொம்ப நாளாகத் தேடிக்கொண்டிருந்த குருவைப் பார்த்தது போன்றுதான் வியந்தேன். ஆனால், அவர் என்னைக் குருவாக்கக்கூடிய மனநிலையில் இருந்தார் என்பதுதான் ஆச்சர்யமானது. அதற்குப் பின், சில எழுத்துகள் சார்ந்து மொழிபெயர்ப்புகள் சார்ந்து சிலரோடு நட்பும் தொடர்பும் இருந்தது. சச்சிதானந்தத்துடன் நட்பு உண்டு. அவரது கவிதைகளைத் தமிழில் நான்தான் மொழிபெயர்த்தேன். மனதுக்கு நெருக்கமானவர் என்றால் சக்காரியா. அவருடனான நட்பு கொஞ்சம்  விஷேசமானது. மலையாள வாழ்வியல் சார்ந்த புதிய புதிய பார்வைகளை அவரிடமிருந்து பெற்றேன். அடுத்த தலைமுறையினரான அன்வர் அலி, அனிதா தம்பி, இவர்களை யெல்லாம்விட மலையாளத்தில் எனக்கு நெருக்கமான நண்பர் ரவிக்குமார். கவிஞர், பத்திரிகையாளர். அவர்தான் என்னுடைய சங்கீத ரசனையைக் கூர்மைப்படுத்தினார்.”

“தமிழ் இலக்கியம் என்றாலே தமிழகத்தில் உள்ளவர்களை மட்டுமே குறிப்பதாகச் சுருக்கி விடுகிறார்கள் எனும் தொனியில் ஷோபாசக்தி வருத்தப்பட்டிருந்தார். ஈழத்து இலக்கியம் தமிழுக்குச் சேர்த்திருக்கிற வளமாக நீங்கள் நினைப்பது?”

“தமிழ் இலக்கியம் என்பது தமிழ்நாடு என்ற நிலப்பகுதியோடு முடிந்துவிடுவதாக நான் கருதவில்லை. தமிழ் பேசுகிறவர்கள் வாழும் எந்த நிலத்தில் எழுதப்பட்டாலும் அது தமிழ்ப் படைப்புதான். ஆனால், தமிழ் தொடர்ச்சியாகப் பிழைத்திருப்பதற்கான, வளர்வதற்கான நிலம் இதுதான் என நான் நம்புகிறேன். புலம்பெயர்ந்து செல்லக்கூடிய இடங்களில் அடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பேசத் தெரியுமே தவிர, எழுதவோ படிக்கவோ தெரியாது. இது நேரடியாகப் நாம் பார்க்கும் உண்மை. அதனால், தமிழ் வளரவேண்டுமானால், தமிழ்நாட்டில் இருக்கும் ஏழு கோடிப் பேரிடையேதான் வளர முடியும்.

முதன்முதலில் தமிழன் பார்த்த யுத்தம் என்பது ஈழத்தில் நடந்த யுத்தம்தான். அதையும்கூட யுத்தம் என்று சொல்ல முடியாது. ஒட்டுமொத்தமாக ஒரு இனத்து மக்கள்மீது  நிகழ்த்தப்பட்ட அழித்தொழிப்பு என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு எதிர் நின்றதுதான் தமிழ் இலக்கியவாதிகளின் மிக முக்கியமான பங்களிப்பு. அரசியல் அல்லது சமூகம் என்பது நமக்கு வெளியில் இருக்கின்றது என்கிற மனநிலையை தமிழில் மாற்றியமைத்தவை ஈழப்படைப்புகள்தான்.தமிழில் எழுதக்கூடிய ஓர் எழுத்தாளனை அரசியல் அறிவு ஜீவியாகவும் நினைக்க வைத்தது ஈழப்படைப்புகள்தான். மிகப் பெரிய அழிவுக்கு முன், ஓர் இனம் தன்னையும் தன் மொழியையும் தனது பண்பாட்டையும் காப்பாற்றிக்கொள்ளச் செய்யும் பெருஞ்செயல்கள் இதுவரை நாம் வரலாற்றில் காணாதது.”

“கவிதையிலிருந்து நாவல் வடிவத்துக்கு வருவதற்கு நீண்ட காலம் எடுத்துகொண்டதாக நினைக்கிறீர்களா?”


“நாவலை என்னுடைய வடிவமாக யோசித்துப் பார்த்ததே இல்லை. திடீரென்று செய்து பார்ப்போமெனத் தோன்றியது. யுவன் சந்திரசேகருடன் உரையாடும்போது, ‘நீங்கள் நிறைய கதைகளைக் கட்டுரைக்குள் வீணாக்கிவிட்டீர்கள்’ என்பார். எனக்கு அப்படித் தோன்றவில்லை. அதற்கு அந்த வடிவம்தான் பொருத்தம் என்று தோன்றியது. நாவல் எழுதுவது, என்னுடைய வாழ்நாள் நோக்கமெல்லாம் இல்லை. எழுதிப் பார்ப்போமே என்று எழுதினேன். அது அவ்வளவு மோசமாக இல்லை என்று தெரிந்தவுடன் இரண்டாவது நாவல் எழுதினேன்
நான் முழுமையாகவே கவிதை சார்ந்தே இருக்க விரும்பும் நபர். கவிதைக்குள் அடக்க முடியாத பெரிய விஷயங்களை பெரிய தளங்களில் சொல்லிப் பார்ப்போமே என்றுதான் நாவலுக்குள் புழங்குகிறேன்.  ஒரு கவிதைக்கு நான் என்ன கவனத்தைக் கொடுக்கிறேனோ, அதே கவனத்தைத்தான் நாவலுக்கும் தருகிறேன். ஒரு கருத்தை உங்களிடம் நேரடியாக உரையாடியினால் நன்றாக இருக்கும் எனும்போது, கட்டுரை வடிவத்திடம் போகிறேன். இன்னும் கொஞ்சம் உங்களையும் என் தரப்பில் சேர்த்துக்கொண்டு பேசலாம் எனும்போது புனைவுப் பக்கம் போகிறேன். நீங்களும் நானும் சேர்ந்து சிந்திக்கலாம் எனும் கட்டாயம் ஏற்படுமானால், கவிதையை அழைத்துக்கொண்டு வருவேன்.”

“கவிஞர்கள் உரைநடை எழுதுகையில் அது கவித்தன்மையோடு இருப்பது இயல்பு. உங்களின் நாவல்களில் நேரடியான சொல்முறையைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?”


“இரண்டும் வேறு வறு வடிவங்கள் என்பது தீர்மானமான விஷயம். நான் நாவல் எழுதும்போது நாவலாசிரியன்; கவிஞன் அல்ல. நாவலாசிரியனுடைய வேலை அந்தக் கதைக்குள் இருக்கக்கூடிய கதைப் பின்புலத்துக்குப் பொருத்தமான மொழியில் இயங்குவதுதான். இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறேன், ‘வெல்லிங்டன்’ எனது முதல் நாவல். அதில் நான் கவிதை எழுதுபவன் என்பதற்கான எந்தச் சாயலும் இருக்காது. எங்காவது சில இடங்களில் இருக்கலாம். அதுவும் மொழியில் இருக்காது. உணர்வு வெளிப்படும் தருணத்தில் இருக்கலாம். அதில் எனக்குச் சின்னதொரு வரையறை இருந்தது. ஆறு வயதிலிருந்து 16 வயதாகும் ஒரு பதின்பருவப் பையனின் பார்வையில்தான் அந்த நாவல் சொல்லப்பட்டிருக்கிறது. அவன் கவிஞனாகவெல்லாம் இருக்க வாய்ப்பில்லை; இருக்கக் கூடாது என்கிற கோணத்தில் கவித்துவத்தைத் தவிர்த்துவிட்டேன்.  இண்டாவது, வரலாறு சார்ந்த நாவல் என்பதால், அதில் கவிஞனின் சில சித்துவேலைகளையெல்லாம் செய்ய முடியுமா எனப் பார்த்துள்ளேன்(சிரிக்கிறார்)’’.

“இந்தக் காலகட்டத்தில் முகலாய வரலாற்றுப் பின்னணியில் ஒரு நாவல் எழுத என்ன காரணம்?”

“இந்திய வரலாற்றில் மிகவும் ‘கலர் ஃபுல்லான’ வரலாறு முகலாயர்களுடையது என்று சொல்கிறார்கள். படித்துப் பார்த்தால் அப்படியான காலமாகவும் அது இருந்துள்ளது. எல்லோரும் இந்து ராஜாக்கள் பற்றி மட்டும்தான் சொல்லிக்கொண்டு இருக்க வேண்டுமா? நாம் இன்னொரு புறத்திலிருந்து பார்க்கலாமே என்ற யோசனை. ஷாஜகான், மும்தாஜ், ஔரங்கரசீப் பற்றிய பதிவுகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. ஔரங்கசீப் பற்றி மிகச் சமீபத்தில்கூடச் சில நூல்கள் வந்துள்ளன. அவரைப் பற்றிய ஆராய்ச்சிகளும் ஹிந்தி, உருது, ஆங்கிலம் எனப் பல மொழிகளிலும் புதிது புதிதாக வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், ஜஹானாரா பற்றி எதுவுமே வரவில்லை. சஹானாரா பற்றி இரண்டு வரிக் குறிப்புகள் மட்டுமே உள்ளன. நாவல்களாகவும் The princess of throne, the shadow princes என்ற இரண்டு மட்டுமே வந்துள்ளன. இவை இரண்டும் பெரும்பாலும் வரலாறாக அல்லாமல், கற்பனை கலந்தே எழுதப்பட்டுள்ளன. இந்த இரண்டு நூல்களையும் நான் என்னுடைய நாவலை எழுதி முடித்த பின்னர்தான் வாசிக்க முடிந்தது. என்னுடைய நாவல் ஜஹானாரா பற்றியக் கதை மட்டும் அல்ல, இன்றைக்கு இருக்கக்கூடிய மிகச் செல்வாக்கான பொருளாதார, அரசியல் குடும்பங்களில் இருக்கக்கூடிய பெண்களின் கதையும்தான். இதை யாராவது கண்டுபிடித்தார்கள் என்றால், அவர்களுக்கு என் வந்தனம்.”

இந்தியாவின் பல பகுதிகளில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராகப் படைப்பாளிகள் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் நடந்துவருகிறது. அதற்கு எதிரான வலுவான குரல் தமிழ் அறிவுத் தளத்திலிருந்து எழவில்லையே, ஏன்?

“எல்லாச் சமூகத்திலும் பொதுச் சான்றோர் என்று யாராவது இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் எழுத்து, இலக்கியம், கலை சார்ந்த ஆளுமைகளாக இருப்பார்கள். ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் சினிமா சார்ந்தவர்களாக மட்டுமே இருக்கிறார்கள்.   ‘காவிரியில் ஏன் தண்ணீர் வரவில்லை’ என்று அறிஞர்களிடமோ, நிபுணர்களிடமோ கேட்பதற்குப் பதிலாக, ரஜினிகாந்திடம் போய் கேட்கிறோம். மற்ற தேசங்களில், சமூகத்தில் ஒலிக்க வேண்டிய குரலை, கருத்தை உருவாக்குபவர்கள் அறிஞர்களாகவோ கலைஞர்களாகவோ எழுத்தாளர்களாகவோ இருக்கிறார்கள். அந்தக் குரலைக் கேட்பதற்கு சமூகத்தின் ஒரு பிரிவு தயாராக இருக்கிறது. அது விழிப்புற்று எழுந்து அதிகாரத்தைக் கேள்வி கேட்கிறது. நமக்கு அப்படிப் பேசக்கூடிய நபர்கள் இல்லை.  மெள்ள மெள்ள அப்படியானவர்கள் வருவார்கள். கௌரி லங்கேஷ் படுகொலை கர்நாடகத்தில் நடக்கிறது என நாம் பேசாமல் இருந்துவிட முடியாது. பெருமாள் முருகனுக்கு நடந்ததை நாம் பார்த்தோம். ஒரு கருத்து சமூகத்தில் வெளிப்படுத்தப் படவேண்டும் என ஒரு நபரோ, ஓர் அமைப்போ விரும்புமானால், அந்தக் கருத்து வெளிப்படுத்தப்பட வேண்டும். அதற்காகத்தான் இங்கே ஜனநாயகம் இருக்கிறது. அந்தக் கருத்தை எதிர்கொள்ள வேண்டியது இன்னொரு கருத்தால்தான். வைரமுத்து, ஆண்டாள் பற்றிய ஒரு அபிப்ராயத்தை வெளிப்படுத்துக்கிறார். அந்த அபிப்ராயம் ஒரு கருத்தால்தான் எதிர்கொள்ளப்பட வேண்டுமே தவிர, அவமதிக்கக்கூடிய சொற்களால் அல்ல. ஆனால், அவமதிப்புதான் தமிழில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அதற்குப் பயந்துதான் தமிழில் அறிவுஜீவிகள் யாரும் கருத்து சொல்வது இல்லை. இந்த நிலை மாறும்.”

“இதுபோன்ற சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவித்து பல மொழிகளில் பல விருதுகள் திருப்பித் தரப்பட்டன. தமிழில் அப்படியான கோபமே எழவில்லையே?”

“பொதுச் சான்றோன் என்று சொல்லக்கூடிய எழுத்தாளன், தன்னுடைய கருத்தால் ஒரு பத்து வாசகனைக்கூட ஈர்க்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிச் செய்ய முடிந்திருந்தால் எதிர்ப்பு இன்னும் காத்திரமாக இருந்திருக்கும். நமக்கு என்ன என்று எழுத்தாளனும் இங்கே ஒதுங்கிக் கொள்கிறான். எழுத்தாளருக்கே முதலில்   சரியான கருத்து இருக்குமா என்று தெரியவில்லை. எது எப்படியோ, அதிகார மையத்திலிருந்து வரக்கூடிய குரலுக்குச் செவிசாய்ப்பவன் அல்ல எழுத்தாளன். அதற்கு எதிர்வினை செய்பவன்தான் எழுத்தாளன், கலைஞன். முந்தின நாள்வரை சாகித்ய அகாடமியைக் கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு, விருது வாங்கிய பிறகு பேசாமல் இருந்தவர்களையும் நாம் பார்த்திருக்கின்றோம் இல்லையா!”

“நான் என்னவாக இருக்கிறேனோ, அதுவே என் எழுத்து!” - சுகுமாரன்

“இலக்கியவாதிகள் சினிமா பற்றி பேசத் தயங்கிய சூழலில், தமிழிலும் மலையாளத்திலும் சினிமாக்கள் குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறீர்கள். உங்களின் சினிமா பார்வைப் பற்றி..?”

“எல்லாக் காலத்திலும் தமிழ் இலக்கியவாதிகள் பலரும் சினிமாவுடன் தொடர்புடையவர்களாக இருந்திருக்கின்றனர். குறிப்பாகப் புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, தி.ஜானகிராமன் ஆகியோரைச் சொல்லலாம். அசோகமித்திரன் ஸ்டுடியோவிலேயே வேலைசெய்தவர்தான். நாம் இலக்கியம் மட்டும் பேசினால் போதும் என்பது, 70-கள் வரையில் ஓர் ஆசாரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதற்குப் பின்னால், எழுத்தாளன் என்பவன் இலக்கியம் சார்ந்தவன் மட்டுமல்ல, பல விஷயங்களையும் தொகுத்து தனக்குள் வைத்துக்கொள்பவன் என்ற கருத்து வந்தது. சினிமா பற்றிப் பேசத் தயங்கிய இடங்களி லெல்லாம் முன்னவர்கள், சங்கீதம் பற்றிப் பேசியிருக்கின்றனர். அப்படியானவர் கள்தான் ஜானகிராமன், நா.சிதம்பர சுப்ரமணியம். மௌனி போன்றவர்கள். சங்கீதத்தில் ருசியே இல்லாத புதுமைப்பித்தனே சங்கீதம் பற்றி எழுதியுள்ளார்.

நான் புதிய தலைமுறை ஆள்தான் இல்லையா! நான் வளர்ந்து வரும்போது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பொழுதுபோக்குச் சாதனம் என்பது சினிமாதான். ஒரு கட்டத்தில்,  சினிமா பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல, அதுவொரு கலை என்ற உணர்வு ஏற்பட்டது. உலக சினிமாக்களைத் தேடித் தேடிப் பார்க்க ஆரம்பித்தேன். இலக்கியம் என்ன இன்பத்தைக் கொடுத்ததோ, என்ன கற்றுக்கொடுத்ததோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாத அளவில் சினிமாவும் கற்றுக் கொடுத்தது.

தமிழில் ஆரம்பத்திலிருந்தே சினிமா கேளிக்கை விஷயமாகவே பார்க்கப்பட்டது. தமிழில் முதல் படம் வந்து, பத்துப் பதினைந்து ஆண்டுகள் கழித்துதான் மலையாளத்தில் முதல் படம் வந்தது. அதுவரை கேரளாவில் செல்வாக்கு செலுத்தியது இடதுசாரி இயக்கங்களின் பங்களிப்பாக உருவாகிய நாடகங்கள்தான். இடதுசாரிகள் எங்கே அமைப்பை உருவாக்கினாலும் ஒரு நூலகமும் நாடகக்குழுவும் இருக்கும். அவைதான் அவர்களின் அரசியலை முன்னெடுப்பதற்கு உதவி செய்தன. நாடகத்திற்கு ஓர் இலக்கிய அடிப்படை இருந்ததனால், அந்தத் தரத்தை சினிமாவிலும் கொண்டுவர வேண்டும் என அவர்கள் நினைத்தனர்.

“நான் என்னவாக இருக்கிறேனோ, அதுவே என் எழுத்து!” - சுகுமாரன்நமக்கு அப்படியில்லை. தமிழில் பொழுதுபோக்கின் விரிவாக்கமாகத்தான் சினிமாவைப் பாத்திருக்கிறோம். அதனால்தான் வெறுமனே பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டும் போதும் என்று குறுகிப் போய்விட்டோம். ஒட்டுமொத்தமாகத் தமிழ் சினிமா மோசம், மலையாள சினிமா மேலானது என்று சொல்லும் அபிப்பிராயங்கள் என்னிடம் இல்லை. பொழுதுபோக்கு சினிமாவுக்கும் அதற்கான இலக்கணம் இருக்கிறது. அதுவும் சமூகத்தின் தேவை என்றுதான் நினைக்கிறேன். சினிமா என்ற கலை இருக்கும் வரை இந்த இரண்டு அம்சங்களும் இருக்கும். வெளியிலிருந்து வரும் ஒருவருக்கு, இது எங்களுடைய கதை என ‘சகலகலா வல்லவனை’க் காட்ட மாட்டீர்கள். காட்ட முடியாது. தரமான சினிமாக்களாக மலையாளத்தில் பத்துப் படங்களையாவது சொல்ல முடியும். அதற்குக் காரணம், ஆரம்பம் முதலே அவர்களுக்கு சினிமா மீதிருக்கும் இலக்கியம் மற்றும் அரசியல் சார்ந்த பார்வை. நம்மிடம் அந்தச் சூழல் இன்றைக்குத்தான் உருவாகி வந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஓர் இளைஞர் மூளைச் சாவு அடைந்து இறந்து போகிறார். அவரது இதயம் தானம் செய்யப்பட்டு, உயிருக்குப் போராடும்  இன்னொருவருக்குப் பொருத்துவதற்காக எடுத்துச் செல்லப்படுகிறது. இது சென்னையில் நடந்த ஒரு சம்பவம். ஆனால், இது ஒரு சினிமாவுக்கான கதைப்பொருள் என்று தமிழ் சினிமாகாரர்களுக்குத் தெரியவில்லை. அது மலையாளத்தில் படமாக எடுக்கப்பட்டு வெற்றிபெற்ற பிறகு, அதைத் தமிழில் எடுத்தார்கள். கதையைக் கதையாகப் பார்ப்பதற்கும் கதையை வாழ்க்கையாகப் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.”

“உங்களுடைய இலக்கிய நண்பர்கள் குறித்துச் சொல்லுங்கள்...”


விஸ்வநாதன் (பாதசாரி) எனக்குக் கல்லூரியில் சீனியர். இரண்டு பேருக்கும் ஒரே மாதிரியான இலக்கிய விருப்பம் இருந்தது. எங்கள் கல்லூரியில் மாணவர்களுக்காக நடத்தப்படும் மாணவர் இதழில் நாங்கள் இருவரும் எழுதிப் பழகினோம். என்னுடைய வாசிப்பு அளவைக் கூட்டியதில் அவருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. பின்னால் ஓர் அற்பக் காரணத்துக்காக நட்பைத் தொடர முடியாமல் போனது. பிறகு, பிரம்மராஜனுடன் நட்பு ஏற்பட்டது. மிகுந்த  பயத்தோடு சென்று நட்பாகியது சுந்தர ராமசாமியிடம்தான். அவருடைய தோற்றம், அன்றைக்கு இருந்த அவரின் ஆளுமை, ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. அந்தப் பயமெல்லாம் நீக்கி, மிக நெருக்கமான நண்பராகப் பின் மாறினார். ஆறு ஆண்டுகள்- தொடர்ந்து எல்லா மாதமும் அவரைச் சந்திப்பது என்று வைத்துக்கொண்டேன். அவரால் என்னுடைய எழுத்து நடையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒரு கட்டத்தில் என்னுடைய எழுத்தில் அவருடைய எழுத்தின் தாக்கம் மிகுதியாக வர ஆரம்பித்தது. அவர் நம்மை விழுங்கிவிடுவார் என்ற பயத்தோடு அவரிடமிருந்து ஒதுங்கிவிட்டேன். கோவையில் ஞானி, இலக்கிய நண்பர்களின் சரணாலயமாக இருந்தார். பின்னர் நெருக்கமாக உணர்ந்தது மனுஷ்ய புத்திரனிடம்தான். பத்திரிகை  வேலைக்காக இரவும் பகலுமாய் எழுதிக்கொண்டிருந்த நான், முழுமூச்சாக எனக்காக எழுத ஆரம்பித்தது அவரால்தான். நான் மிகவும் உயிர்ப்போடு இருந்தது இந்தக் காலகட்டத்தில்தான். விமலாதித்த மாமல்லன் நல்ல நண்பர், அவர்தான் எனது முதல் நூலை வெளியிட்டார்.”

“தீவிர இலக்கியவாதியான நீங்கள் பத்திரிகையில் பணியாற்றிய அனுபவம் எப்படியானது?”

“பத்திரிகை உலகத்துக்குள் நுழைய வேண்டும் என்பது எனது திட்டமெல்லாம் இல்லை. வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றி, சொந்தமாகத் தொழில் தொடங்கி, நஷ்டமாகி, திசை தெரியாமல் திக்காடிக்கொண்டிருந்தேன். அப்போது என் மனைவி, ‘நீதான் நன்றாக எழுதுவாயே... ஏதாவது பத்திரிகையில் சேரலாமே’ என்றார். என் நண்பர் எஸ்.எம்.பன்னீர் செல்வம்  ‘குங்குமம்’ வளாகத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அவர்தான்  ‘முரசொலி’ வளாகத்தில் ‘தமிழன்’ என்ற தினசரி ஆரம்பிக்கப்போவதாகக் கூறி, அதில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். என்னை வேலைக்கு எடுத்தது சின்னக் குத்தூசி அவர்கள். அவரிடம் சென்று எனது சான்றிதழ்களை நீட்டினேன். அவர் அவற்றையெல்லாம் பார்த்துவிட்டு, ‘உங்கள் கவிதைகளை யெல்லாம் நான் படித்திருக்கேன். நீங்கள் சென்று வேலையைப் பார்க்கலாம்’ என்றார். அந்த வகையில் இலக்கியம்தான் எனக்கு இந்த வேலையை வாங்கிக் கொடுத்தது.

 அந்த ஒன்பது மாதங்களில் செய்தியாளர், செய்தி ஆசிரியர், பத்தி எழுதுபவர் எனக் கிடைத்ததெல்லாம் அரிய வாய்ப்புகள். ஒருநாள் காலையில் வேலைக்கு வந்தபோது, நாளையிலிருந்து பத்திரிகை வராது. நிறுத்திவிட்டோம் என்றார்கள். என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தபோது, அவர்களே எங்களைக் ‘குங்கும’த்தில் சேர்த்திருப்பதாகச் சொன்னது ஆறுதலாக இருந்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் ‘சூர்யா டி.வி’-யின் தலைமைப் பொறுப்புக்கு வந்தது. எனக்கு மலையாளம் தெரியும் என்பதோ, மலையாளக் குடும்பத்தில் பிறந்தவன் என்பதோ யாருக்கும் தெரியாது. ஏனெனில், அதைச் சொல்வதற்கான சூழலும் அமையவில்லை.

இதழியலில் நான் தீர்மானமாக இருந்தேன், எப்போதும் மக்களின் பக்கம் நிற்பது என்று. இடதுசாரிகள் ஆட்சி செய்யும்போது நான் வலதுசாரி. வலதுசாரிகள் ஆட்சி செய்யும்போது நான் இடதுசாரி. ஏனென்றால், பொதுவாக மக்கள் எப்போதும் அதிகாரத்துக்கு எதிரான நிலையில்தான் இருப்பார்கள்.”

“உங்கள் படைப்புகளுக்குப் போதுமான கவனமும் விமர்சனங்களும் கிடைத்துள்ளதாக நினைக்கிறீர்களா?”

“என்னுடைய படைப்புகளுக்குப் பொருட்படுத்தக்கூடிய கருத்துகளைக் கொண்ட விமர்சனங்கள் வந்திருக்கின்றன.கவனமும்தான். அப்படி வரவில்லை என்றால், நான் இன்றைக்கு வரைக்கும் தொடர்ந்து நின்றிருக்க முடியாது.”

“இதுவரை பத்திரிகைகளில் வெளியாகாத உங்களது கவிதை வரிகளோடு இந்தப் பேட்டியை நிறைவுசெய்யலாமா?”

 கலவி நுணக்கம்

அமுதையும் மிஞ்சிய அதிமதுரம்
அதர ருசி அன்று
ஏழிரண்டு உலகம் போய் அறிவிப்பேன்
எனில்
எட்டிச் சுவையை விடக் கொடுங் கசப்பு
காதுக் குறும்பி என்று
எந்த நரகத்தில் போய்ச் சொல்வேன்
கலவியின் உச்சத்தில் உற்றறிந்தேன்
இச்சுவைகள் என்று
எப்படிப் பெண்ணிடம்
உணருவேன் கொள்
வள்ளுவரே.