Published:Updated:

“புத்தகங்களின் நிரந்தர மாணவி நான்!” - பாமா

“புத்தகங்களின் நிரந்தர மாணவி நான்!” - பாமா
பிரீமியம் ஸ்டோரி
“புத்தகங்களின் நிரந்தர மாணவி நான்!” - பாமா

படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்

“புத்தகங்களின் நிரந்தர மாணவி நான்!” - பாமா

படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
“புத்தகங்களின் நிரந்தர மாணவி நான்!” - பாமா
பிரீமியம் ஸ்டோரி
“புத்தகங்களின் நிரந்தர மாணவி நான்!” - பாமா

“பெரிய நூலகமெல்லாம் இல்லையே! தேவையான புத்தகங்களைத் தவிர மத்ததையெல்லாம் அட்டைப் பெட்டிக்குள்ளத்தான் வெச்சிருக்கிறேன்” என வெள்ளந்தியாகச் சிரிக்கிறார் எழுத்தாளர் பாமா. உத்திரமேரூரிலுள்ள பாமாவின் வீட்டுக்குள் நுழைந்தால், அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை மட்டும் தாங்கிய சின்ன அலமாரி, அந்த வீட்டை இன்னும் அழகாக்கிக் கொண்டிருந்தது. தமிழக இலக்கிய வெளியில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்திய ‘கருக்கு’ நாவலுக்கு இது 25-ம் ஆண்டு. வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.

“புத்தகங்களின் நிரந்தர மாணவி நான்!” - பாமா

“கிராமத்தில் வளர்ந்தவள் நான். முதன்முதலாகப் பார்த்த புத்தகம் என்பது, பள்ளிக்கூடத்தில் கிடைத்த வாய்ப்பாடுதான். அப்போதெல்லாம் மூன்றாவது, நான்காவது வகுப்பு படிக்கும்போதுதானே புத்தகங்கள் தருவார்கள். அந்தப் புத்தக வாசனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அண்ணன் ராஜ்கெளதமன், நூலகத்திலிருந்து பெரிய பெரிய புத்தகங்களாக எடுத்து வருவார். எனக்குப் பத்து, பன்னிரெண்டு வயதிருக்கும். அந்தப் புத்தகங்களை வாசித்துப் பார்த்தால் ஒன்றும் புரியாது. ஆனாலும், ஆச்சர்யத்துடன் வாசித்துப் பார்ப்பேன். ஒருமுறை அண்ணன் எழுதிய கவிதை ஒன்றை, நான் ராகம் போட்டுப் பாடினேன். அது அவருக்குப் பிடித்துவிட்டது. அப்போதிருந்து, புத்தகத்தை என்னிடம் கொடுத்து, படிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருப்பார். இந்தப் பழக்கத்தால் எனக்கும் புத்தக வாசிப்பின்மீது ஈடுபாடு வந்துவிட்டது. ஜெயகாந்தன் புத்தகங்களை ஆர்வமாக வாசித்தேன். அண்ணனும் சில புத்தகங்களை வாசிக்கச் சொல்லிக் கொடுப்பார். அப்படித்தான், மணியன், அகிலன், கொத்தமங்கலம் சுப்பு போன்றவர்களின் நூல்களை வாசித்தேன். பள்ளிக்கூடம்விட்டு வீட்டுக்கு வரும் வழியில் ஒட்டப்பட்டிருக்கும் சினிமா போஸ்டரில், என்ன எழுதியிருக்கிறது என்று நின்று நிதானமாக வாசிப்பேன். வாசிப்பதே சாதனை பண்ணுவதைப்போல இருக்கும். அப்பா ராணுவத்தில் இருந்தார். அம்மா, ஐந்தாம் வகுப்புதான் படித்திருந்தார். ஆனாலும், அவரும் புத்தகங்களை விரும்பி வாசிப்பார். யார் முதலில் வாசிப்பது என எங்களுக்குள் சண்டையே வரும். கொத்தமங்கலம் சுப்புவின் ‘தில்லானா மோகனாம்பாள்’ நாவலின் இரண்டு பாகங்களையும் வாசித்திருந்தார். அதில் வரும் ‘வைத்தி’ பாத்திரத்தை அவருக்குப் பிடிக்காது. ‘ஏன் இப்படி வம்பு இழுத்துட்டு இருக்கான்’னு சொல்வார். வடிவாம்பாளையும் திட்டிக்கொண்டே யிருப்பார். ‘அதெல்லாம் கதைதாம்மா’ என்று சொன்னாலும் கேட்கமாட்டார். ‘கதைன்னாலும் காசுக்காக வடிவம்மா அப்படிப் பண்ணலாமா’ என்பார். நாங்கள் அம்மாவுக்குக் கோபம் வரவழைக்க வேண்டுமென்றால், ‘வடிவம்மா’ எனக் கூப்பிடுவோம்.

எனக்கு ஜெயகாந்தனின் கதைகளைப் பிடித்தற்கான காரணம், அதில் வரும் கதாபாத்திரங்கள் போன்ற மனிதர்கள், எங்கள் வீட்டைச் சுற்றி இருந்தனர் என்பதால்தான். எளிய, கூலிவேலை செய்பவர்கள், தலித் மக்கள் பற்றியவையாக ஜெயகாந்தனின் கதைகள் இருந்ததால், அவை எனக்கு நெருக்கமாக இருந்தன. மற்றவர்களின் கதைகளில் வருபவர்களை நான் பார்ப்பதற்கான வாய்ப்பே இல்லை. அதனால், அவற்றைக் கற்பனைக் கதைகள் என்றுதான் நினைப்பேன். மேலும், அதில் வரும் பாட்டு, இசை ஆகியவற்றைக் கற்பனையில்கூடக் கொண்டுவர முடியாது என்னால். ஆகவே அவை, என் வாழ்விலிருந்து ஒருவகையில் தூரமாக இருந்தன.

எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு, தூத்துக்குடி கல்லூரியில் சேர்ந்தபோதுதான் பெரியாரைப் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெண் விடுதலை, சாதி ஒழிப்பு பற்றிய பெரியாரின் எழுத்துகள் ஆச்சர்யத்தைத் தந்தன. இவ்வளவு நாள் இதெல்லாம் நமக்குத் தெரியவில்லையே என்ற எண்ணம் வருத்தியது. பிறகு, கவிதைகள் எழுதினேன். உயர்நிலைப் பள்ளிக் காலத்தில் ‘ஐந்து ரூபாய் நோட்டு’ என்ற ஒரு கவிதையை எழுதியிருந்தேன். ‘ஒவ்வொரு வரியையும் டா... டா... என முடித்திருந்தேன். என் அண்ணனிடம் காட்டியபோது, ‘கவிதையெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, இந்த வயசுலேயே வாசகர்களை ‘டா’ போட்டு எழுதியிருக்கியே’ என்றார்.

“புத்தகங்களின் நிரந்தர மாணவி நான்!” - பாமா

கல்லூரியில் படிக்கும்போது, நிறைய கவிதைகள் எழுதினேன். எங்கள் வகுப்பு மாடியில் இருந்தது. அதனால், என் கவிதைகளெல்லாம் இயற்கையைப் பற்றியதாகவே இருந்தன. கல்லூரி மலரில் தோழிகளுக்கெல்லாம் கவிதை எழுதிக் கொடுப்பேன். கல்லூரியில்தான் சித்தர் பாடல்கள், ஷேக்ஸ்பியர் நாடகங்களை வாசித்தேன். துணைப்பாடங்களில் வைத்திருந்த புதுமைப்பித்தன் கதைகள் நெருக்கமாகின. புத்தகங்களைப் பணம் கொடுத்து வாங்கும் சூழல் இல்லை. எனவே, நூலகத்தில் கிடைத்தவையைத்தான் வாசித்தேன். வேலைக்குச் சென்றதும் கண்ணதாசனின், ‘அர்த்தமுள்ள இந்து மதம்’, ‘பைபிள்’ என ஆன்மிகம் சார்ந்த புத்தகங்களை வாசித்தேன். நான் முதன்முதலில் பணம் கொடுத்து வாங்கிய புத்தகம் என்றால், அது ஓஷோவுடைய புத்தகம்தான். என் அண்ணன் பெரிய நூலகம் வைத்திருந்தார். அவர்தான் அம்பை, பூமணி, சுந்தர ராமசாமி எனப் பல எழுத்தாளர்களின் படைப்புகளை அறிமுகப்படுத்தினார். ‘படிப்பைத் தவிர நம்மிடம் வேறு சொத்து இல்லை’ என்பதை எனக்குச் சிறு வயதிலிருந்தே சொல்லாமல் கற்றுக்கொடுத்தார் அண்ணன். வாசிப்பு எனக்கு ஒரு புது உலகத்தைத் தந்ததால் விடாமல் வாசித்தேன். ஆங்கிலத்திலும் தமிழிலும்!

“புத்தகங்களின் நிரந்தர மாணவி நான்!” - பாமா


என்னுடைய முதல் புத்தகமான ‘கருக்கு’ 92-ல் வெளிவந்தது. முதலில், அதை நான் வெளியிடுவதற்காக எழுதவில்லை. சந்தோஷமாக இருந்தாலும் துக்கமாக இருந்தாலும் எழுதுவதை ஒரு வழக்கமாக வைத்திருந்தேன். எழுதி முடித்ததும் அவற்றைக் கிழித்துவிடுவேன். அது என்னைக் குணப்படுத்துவதாக ஓர் எண்ணம். மதுரையில், ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டி ருந்தேன். அங்கிருந்த ஃபாதரிடம் வேலை கிடைக்காததைப் பற்றிப் புலம்புவேன். அவர்தான் ‘என்னிடம் சும்மா புலம்புவதை ஒரு பேப்பரில் எழுது’ என்று சொன்னார். மனதில் தோன்றியதையெல்லாம் எழுதினேன். எழுதியதை வாசித்துப் பார்த்த ஃபாதர், ‘நல்லாருக்கு, புத்தகமாகப் போடலாம்’னு சொன்னார். நான் மறுத்துவிட்டேன். ஏனென்றால், உண்மையான மனிதர்களை அவர்களின் அடையாளத்துடன் எழுதியிருக்கிறேன், அவர்கள் வாசித்தால் என்னாவது என்ற யோசனை. விடாமல் வற்புறுத்தி என்னைச் சம்மதிக்கவைத்துவிட்டார் ஃபாதர். ஆனால், பதிப்பிக்க ஆள் கிடைக்கவில்லை. படித்தவர்களுக்கும் பெரிய அபிப்ராயம் இல்லை. ஒருவர் படித்துவிட்டு, ‘வெறும் குப்பை’ என்று சொன்னார். அந்தத் தொண்டு நிறுவனமே பதிப்பித்தது.வெளியானதும் நல்லவிதமாகவும் ‘கெட்டவிதமாகவும்’ பெரிய தாக்கம் இருந்தது. யாக்கன்தான்  நாவலைப் படித்துவிட்டு பாஸிட்டிவான நீண்ட விமர்சனம் ஒன்றை எழுதி, நேரில் வந்து கொடுத்தார். நாவலை வாசித்த எங்கள் ஊர் ஆள்கள் சிலர், எங்கள் அப்பா அம்மாவை மிரட்ட, பயந்துவிட்டார்கள். ஊருக்குள் நுழைய முடியாத அளவுக்குப் பிரச்னை. பின்பு, அங்கிருந்த இளைஞர்கள் படித்துவிட்டு, ஊர் மக்களிடம் விளக்கினார்கள். பிறகு, அம்பேத்கர் சிலையைத் திறக்க அழைத்தார்கள். இப்போது, அந்த நாவல் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை, தெருவெல்லாம் பறை அடித்து, ஆட்டம், பாட்டம் என ஒரு திருவிழாபோலக் கொண்டாடினார்கள்.

ஊர்மக்களில் சிலர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த வழியே போகிறவர்கள், “அவங்கக்கிட்ட எதுவும் சொல்லாதீங்க... புத்தகமா எழுதிடுவாங்க’னு சொல்வார்கள். சிலர், ‘இதையெல்லாம் எழுதுங்க’னு அவர்கள் படும் பாட்டைச் சொல்வார்கள். அவைதான் என் எழுத்து. அப்படி ஒரு தம்பி சொன்ன விஷயம்தான் ‘அண்ணாச்சி’ கதை. அது வெளியானதும் அவனைக் கூப்பிட்டு வாசித்துக்காட்டினேன், அவனின் மகிழ்ச்சியைச் சொல்லிக்காட்ட முடியாது!

‘கருக்கு’ நாவல் வந்ததும் நிறைய இடங்களில் பேசக் கூப்பிட்டார்கள். அங்கே பேசுவதற்குத் தயாரிப்பெல்லாம் செய்துகொண்டு போகமாட்டேன். என் அனுபவங்களைத்தான் பேசுவேன். நிகழ்ச்சியில் எனக்கு நினைவுப் பரிசாகப் புத்தகங்கள் கொடுப்பார்கள். சால்வையெல்லாம் போத்தாமல் புத்தகங்களாகக் கொடுப்பது நல்லது என நினைப்பேன். அப்படி ஒரு விழாவில் பரிசாகக் கிடைத்ததுதான் கலீல் ஜிப்ரானின் The Broken Wings. அதிலிருந்து அவரைத் தொடர்ந்து வாசிக்கிறேன். அவரின் எழுத்துகளை இன்றைக்கும் ஆராதிக்கிறேன். அவரின் தைரியம், ஆழ்மனதிலிருந்து விஷயங்களைக் கொண்டுவருவது என என்னைப் பிரமிக்கவைக்கிறார். எளிமையான வார்த்தைகளால் எளிதாக உங்களை இழுத்துவிடுவார். அவரின் எழுத்துகளின் பெரிய வால்யூமைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். பைபிளைப் படிப்பதைப்போல அடிக்கடி எடுத்து வாசிப்பேன்.

“புத்தகங்களின் நிரந்தர மாணவி நான்!” - பாமா

எனக்கு ஜீசஸ்மீது ஆழ்ந்த பற்றுண்டு. அவர் வாழ்ந்த காலத்தில் பெரிய புரட்சியாளன். பெண்களுக்கு, தொழுநோயாளிகளுக்கு என விளிம்புநிலை மக்களுக்காக மட்டுமே வந்தேன் எனப் பேசுவார். அதனால், நான் தொடர்ந்து வாசிக்கும் நூலாகப் பைபிள் இருந்துவருகிறது. தாகூரின் ‘கீதாஞ்சலி’ பிடிக்கும். கிடைத்தவற்றை, முடிந்தளவு வாசிக்கிறேன். நீண்ட நாள்கள் தங்கும் சூழல் வந்தால் அம்பேத்கர், பெரியார் புத்தகங்களைத்தான் எடுத்துச் செல்வேன்.

வாசிப்பும், எழுத்தும் என் வாழ்க்கையில் தொடர்ந்தே வந்தாலும், புத்தகங்களை அதிகம் வாங்கியதில்லை. அதற்கான பொருளாதாரச் சூழலும் அமையவில்லை. மேலும், என் நண்பர்கள் வாங்கும் புத்தகங்களை வாங்கிப் படித்துக்கொள்வேன். ஆனால், அம்பேத்கர், பெரியார் புத்தகங்கள் என்றால் உடனே வாங்கிவிடுவேன்.

கலீல் ஜிப்ரானின் பூக்கள் பற்றி ஒரு கதையை எனது மாணவர்களிடம் அடிக்கடி சொல்வேன். ‘மாடியில் இருக்கும் ரோஜா பூக்களைப்போல, தானும் உயரத்தில் வாழ வேண்டும்’ என்று சாலையில் இருந்த மஞ்சள் பூ ஆசைப்பட்டதாம். கடவுளும் அதற்கு உதவிசெய்ய ஒருநாள் பெரிய பூவாக மாறி மாடி வரை வளர்ந்துவிட்டதாம். அந்த நேரத்தில் மழை பெய்ய, ஒடிந்து கீழே விழுந்துவிட்டதாம். கீழே இருந்த மற்ற பூக்கள் அதைப் பார்த்து, ‘இதுக்குத்தான் அவ்வளவு உயரம் செல்லக் கூடாது என்று சொன்னோம்’ எனச் சிரித்ததாம். அதற்கு, அந்த மஞ்சள் பூ, ‘காலில் விழுந்துகிடந்து 1000 ஆண்டுகள் வாழ்வதைவிட விரும்பியதைச் செய்து, மரியாதையுடன் ஒரு நாள் வாழ்ந்தால் போதும்’ என்றதாம். இப்படிக் கதையை முடித்துவிட்டு, ‘யாரெல்லாம் உயர வளர்ந்த அந்த மஞ்சள் பூக்கள், யாரெல்லாம் கீழேயே வாழ்கின்ற மற்ற பூக்கள்?’ என்று கேட்டால், பிள்ளைகள் எல்லோரும் தாங்கள்தான் அந்த மஞ்சள் பூக்கள் என்று உற்சாகமாகக் கைகளைத் தூக்குவார்கள். மனத்தில் ஒரு தன்னம்பிக்கையை விதைக்கும் அந்தக் கதையை, பள்ளியிலிருந்து விலகிய பின்னும்கூடப் பிள்ளைகள் நினைவில் வைத்திருப்பார்கள். பள்ளியில் கதை சொல்வதற்கென்றே வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு வகுப்புகளை ஒதுக்கிவிடுவேன். சமீபத்தில், சினிமா எடுத்துக்கொண்டிருக்கும் எனது மாணவன் ஒருவன் என்னை வந்து சந்தித்தான். அவனின் நினைவில் அந்த மஞ்சள் பூ இருந்தது. என்னுடைய மாணவர்களிடமும் நான் நிறைய கற்றுக்கொள்கிறேன். என்னை ஆசிரியர் என்கிறார்கள், நானோ புத்தகங்களின் நிரந்தர மாணவி!

சந்திப்பு : விஷ்ணுபுரம் சரவணன்