சமூகம்
Published:Updated:

“தலைப்பிரசவத்தின் பரவசத்தை உணர்கிறேன்!”

“தலைப்பிரசவத்தின் பரவசத்தை உணர்கிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“தலைப்பிரசவத்தின் பரவசத்தை உணர்கிறேன்!”

கன்னிப்பேச்சில் கலக்கிய துர்கா

ன்மிகத் தலங்களிலும், குடும்ப விழாக்களிலும் மட்டுமே முகம்காட்டி வந்த துர்கா ஸ்டாலின், முதல்முறையாக மேடையேறியுள்ளார். பல நூறு மேடைகளை ஐம்பதாண்டு அரசியல் பயணத்தில் அலங்கரித்த மு.க.ஸ்டாலின் மேடைக்குக் கீழே அமர்ந்திருக்க, துர்கா ஸ்டாலின் மேடையில் இருக்க, வித்தியாசமாக நிகழ்ந்தது புத்தக வெளியீட்டு விழா.

“தலைப்பிரசவத்தின் பரவசத்தை உணர்கிறேன்!”

ஸ்டாலினின் மனைவியாகவும், கருணாநிதியின் மருமகளாகவும் அறியப்பட்ட துர்கா, ‘தளபதியும் நானும்’ என்ற தலைப்பில் இதழ் ஒன்றில் தொடர் எழுதினார். அதை, ‘அவரும் நானும்’ எனப் புத்தகமாக வெளியிட்டுள்ளனர். புத்தக வெளியீட்டு விழா, சென்னை குமாரராஜா முத்தையா அரங்கத்தில் நடைபெற்றது. விழா நடைபெற்ற இடத்தில் தி.மு.க கொடியோ, பேனர்களோ தென்படவில்லை. ஆனால், விழா அரங்கு முழுவதும் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளே நிறைந்திருந்தனர். தன்னுடன் படித்த பள்ளித்தோழிகள், தன் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், உறவினர்கள் எனப் பலரையும் துர்கா அழைத்திருந்தார். செல்வி, மு.க.தமிழரசு, கனிமொழி உள்பட கருணாநிதியின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

குமாரராணி மீனா முத்தையா, நூலை வெளியிட, ஸ்டாலின்- துர்கா தம்பதியின் பேத்திகள் நிலானி சபரீசன், தன்மயா உதயநிதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். துர்காவைப் பெண்பார்க்க வந்த ஸ்டாலினை, முதன்முதலில் ஜன்னல் வழியாக துர்கா பார்த்த காட்சியை பேராசிரியர் பர்வீன் சுல்தானா வர்ணித்தார். அதைக்கேட்டு, மேடையில் அமர்ந்திருந்த துர்கா வெட்கத்தால் நெளிந்தார். ‘சாந்தா’ என்ற பெயர் கருணாநிதியால் துர்காவுக்கு வைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினர். திருமணமான சில நாள்களில் கோபாலபுரம் வீட்டுக்கு நாவலர் நெடுஞ்செழியன் வந்தபோது, ‘நெடுஞ்செழியன் வந்திருக்கிறார்’ எனச் சொன்னதற்காக ஸ்டாலினிடம் அறை வாங்கிய சம்பவத்தையும் மேடையில் சொல்ல, ஸ்டாலின் உள்பட அனைவரும் சிரித்தனர். துர்காவிடம் ஸ்டாலின் அடிக்கடி பாடும், ‘நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை’ என்ற பாடலை பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் பாடியபோது, ஸ்டாலின் - துர்கா இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர்.

“தலைப்பிரசவத்தின் பரவசத்தை உணர்கிறேன்!”

கையில் எழுதி வைத்திருந்த பேப்பரைப் பார்த்தபடி, பதற்றத்துடன் ஏற்புரை ஆற்றினார் துர்கா. ‘‘மாபெரும் சபையில் முதல்முறையாகப் பேசுவதால், எனக்குப் பதற்றமாக இருக்கிறது’’ என்று ஆரம்பித்து, ‘‘இந்தப் புத்தகத்தைக் கையில் வாங்கியபோது, தலைப்பிரசவம் முடிந்து குழந்தையைக் கையில் வாங்குவது போன்று பரவசமாக இருந்தது. அதிலும், நான் பொக்கிஷமாகக் கருதும் என் பேத்திகள் முதல் பிரதியைப் பெற்றது, பாட்டியான எனக்கு மகிழ்ச்சி. ஒரு சாதாரண குடும்பத்துப் பெண்ணான நான், பெரிய அரசியல் குடும்பத்துக்கு மருமகளாக வந்ததே பெருமைதான். என் கணவரின் அரசியல் பயணத்தில், அவருக்கு என்றும் உறுதுணையாக... பக்கபலமாக இருப்பேன்’’ என்று உரையை முடித்தார். எழுத்தாளர் இந்துமதி, நடிகை சரண்யா பொன்வண்ணன், கவிஞர் தமிழச்சி தங்க பாண்டியன் ஆகியோரின் உரைகள் கலகலப்பாக அமைந்தன.

‘‘அண்ணியாரின் அரசியல் பயணம் எப்போது?’’ என்ற கேள்வியை தி.மு.க-வினர் கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: கே.ஜெரோம்