சமூகம்
Published:Updated:

“ஆங்கிலேயர்களுக்கு இருந்த அக்கறைகூட நம் அரசுக்கு இல்லை!”

“ஆங்கிலேயர்களுக்கு இருந்த அக்கறைகூட நம் அரசுக்கு இல்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“ஆங்கிலேயர்களுக்கு இருந்த அக்கறைகூட நம் அரசுக்கு இல்லை!”

“ஆங்கிலேயர்களுக்கு இருந்த அக்கறைகூட நம் அரசுக்கு இல்லை!”

‘‘பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்குத் தாரைவார்க்கிறது. ‘பெரு நிறுவனங்களுக்காக பிரதமர் மோடி செயல்படுகிறார்’ என்ற விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் வைத்தால், பி.ஜே.பி-யினருக்கு ஆத்திரம் வருகிறது. அந்தக் கோபத்துடன்தான் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இங்கு பேசினார். ‘திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையைத் தனியார்மயம் ஆக்கவில்லை’ என்று கூறிக்கொண்டே, சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளிடம் பணிகளை ஒப்படைக்கப் பார்க்கிறது மத்திய அரசு’’ என்று குமுறினார்கள், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை தொழிலாளர் சங்கத்தினர்.

மத்திய பாதுகாப்புத் தளவாட உற்பத்தி குறித்த கருத்தரங்கம், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை சார்பில் மார்ச் 16-ம்தேதி திருச்சியில் நடைபெற்றது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அரசின் தொழில்துறைச்  செயலாளர் ஞானதேசிகன், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பெஞ்சமின், எஸ்.வளர்மதி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதுமிருந்து சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

“ஆங்கிலேயர்களுக்கு இருந்த அக்கறைகூட நம் அரசுக்கு இல்லை!”

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், ‘‘ வானூர்தி உதிரிபாகங்கள் தயாரிக்கும் 120-க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், 700-க்கும் மேற்பட்ட சிறு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் உள்ளன. இவை, ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலை மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை தொழில் நிறுவனங்களுக்குப் பொருள்களை உற்பத்தி செய்கின்றன. ஸ்ரீபெரும்புதூரில், 260 ஏக்கரில் ரூ.180 கோடி மதிப்பில் வானூர்திகள் மற்றும் பாதுகாப்புத் துறை தளவாடங்கள் உற்பத்தித் தொழில் பூங்கா உருவாக உள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் நவீன 5-ம் தலைமுறை போர் விமானங்களைத் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தினால், தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும்” என்றார்.

நிர்மலா சீதாராமன், ‘சம்பத்’ என்பதற்குப் பதிலாக “அமைச்சர் பாலாஜி...” என்றபடி ஆரம்பித்தார். உடனே, நிர்மலா சீதாராமனிடம் பி.ஜே.பி நிர்வாகியான ராகவன் ஒரு துண்டுச்சீட்டு கொடுத்தார். அதைப் பார்த்துப் பதறிய நிர்மலா சீதாராமன், “பாலாஜி என்றாலும் சம்பத் என்றாலும் ‘செல்வம்’ என்றுதான் அர்த்தம்” என்று சமாளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தயாரிப்புகளை அதிகரிக்க வேண்டும். இதற்கு சிறு மற்றும் குறு முதலீட்டாளர் களின் பங்களிப்பு அவசியம். நீங்கள் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான உதிரிபாகங்களைத் தயாரித்து அரசுக்கு வழங்குவதுடன், வெளிநாடு களுக்கும் ஏற்றுமதி செய்யலாம். பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், தேஜஸ் என்ற விமானத்தை வடிவமைத்து வருகிறது. இதைப்போல, 123 தேஜஸ் விமானங்கள் தேவைப்படுகின்றன. ஆனால், அவர்களால் வருடத்துக்கு 7-8 விமானங்களை மட்டுமே தயாரிக்க முடிகிறது. சிறு மற்றும் குறு தொழிற் சாலைகள், தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் முன்வந்து மற்ற பாகங்களைத் தயாரித்தால், ஓர் ஆண்டில் கூடுதலான விமானங்களை உருவாக்க முடியும். நாங்கள் பொதுத்துறை நிறுவனங்களை விற்க முயற்சி செய்யவில்லை. அவற்றை உயிர்ப்பிக்கவே அக்கறை காட்டுகிறோம்’’ என்றார்

“ஆங்கிலேயர்களுக்கு இருந்த அக்கறைகூட நம் அரசுக்கு இல்லை!”

நிர்மலா சீதாராமனிடம், ‘துப்பாக்கித் தொழிற் சாலையைத் தனியார்மயமாக்கக் கூடாது’ என்று திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். அவர்களிடம் பேசினோம். ‘‘நிதி ஆயோக் பரிந்துரைப்படி, திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலை யைத் தனியார்மயமாக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது. அதனை எதிர்த்து, அனைத்துச் சங்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடத்தியுள்ளோம். திருவெறும்பூர் எம்.எல்.ஏ அன்பில் மகேஷ், எங்கள் கோரிக்கை குறித்து சட்டமன்றத்தில் பேசினார். அப்போது, ‘தனியார் மயமாக்கலைத் தடுத்து நிறுத்துவோம்’ என்று அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதியளித்தார். தமிழக எம்.பி-க்களான ரத்தினவேல், குமார், அன்புமணி உள்பட பலர் இதுபற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். அதன்பிறகு, தனியார் மயமாக்கல் முயற்சி கைவிடப்பட்டதாகக் கூறப் பட்டது. ஆனால், துப்பாக்கித் தயாரிப்பு ஆலையைத் தனியார் துறையுடன் இணைந்து செயல்படுத்தப் போவதாக நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இந்தத் தொழிற்சாலையை ஆரம்பித்தது ஆங்கிலேயர்கள். அவர்களுக்கு இருந்த அக்கறை கூட நம் அரசுக்கு இல்லை” என்றனர் வேதனையுடன்.

- சி.ய.ஆனந்தகுமார்
படம்: என்.ஜி.மணிகண்டன்

“ஆங்கிலேயர்களுக்கு இருந்த அக்கறைகூட நம் அரசுக்கு இல்லை!”

திருச்சி அழகம்மாள்... நெகிழ்ச்சி நிர்மலா!

தி
ருச்சி குடிமக்கள் சங்கம் சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மார்ச் 16-ம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய நிர்மலா, ‘‘எங்கு போனாலும் திருச்சியின் நினைவுகளை மறந்ததில்லை. என் இளமைப் பருவத்தில் எங்கள் குடும்பத்துக்குப் பேருதவியாக இருந்த அழகம்மாள் இங்கு வந்திருக்கிறார். அவரின் அன்பு என்னை எப்போதும் ஏங்க வைக்கும்’’ என நெகிழ்ந்துவிட்டார். பார்வையாளர் வரிசையில் இருந்த அழகம்மாள், கண்கலங்கி அமைச்சரைக் கும்பிட்டார். நிகழ்ச்சி முடிந்தபிறகு அழகம்மாளிடம் பேசினோம். ‘‘என் பேரன் மணிகண்டன்தான் என்னைக் கவனிச்சுக்குறான். என் உடல் நிலை ரொம்ப மோசமா இருக்கு. நிர்மலாகிட்ட உதவிக் கேட்கலாம்னு நெனச்சேன். ஆனா, கேட்க முடியலை. நிர்மலா சின்னப் பிள்ளையில ரொம்ப துறுதுறுன்னு இருக்கும். நிர்மலா நல்லா இருக்கணும்” என்றார்.