Published:Updated:

“தமிழ் அழகியலைத் தேடிவந்த சக்கரவாகப் பறவை!” - இந்திரன்

“தமிழ் அழகியலைத் தேடிவந்த சக்கரவாகப் பறவை!” - இந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
“தமிழ் அழகியலைத் தேடிவந்த சக்கரவாகப் பறவை!” - இந்திரன்

படம் : க.பாலாஜி

“தமிழ் அழகியலைத் தேடிவந்த சக்கரவாகப் பறவை!” - இந்திரன்

படம் : க.பாலாஜி

Published:Updated:
“தமிழ் அழகியலைத் தேடிவந்த சக்கரவாகப் பறவை!” - இந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
“தமிழ் அழகியலைத் தேடிவந்த சக்கரவாகப் பறவை!” - இந்திரன்

ட்டு நிறைய ரகசியங்களை வைத்துக் காத்திருக்கிறது வாழ்க்கை. அன்றைக்கும் அப்படித்தான். தூங்கி வழியும் ஒரு பிற்பகல் நேரம். சென்னை அப்பாராவ் கேலரியின் உள்நுழைந்தேன். ஓவியக் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. அங்கே அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டிரு ந்தார் பிரெஞ்சுப் பெண்மணி ஒருவர். அழுத்தி வாரிய கேசத்தை ஒற்றைப் பின்னலிட்டிருந்தார். மிகக் கூர்மையான மூக்கு. நெற்றியில் திலகம். ஐரோப்பியர்களுக்கே உரிய வெள்ளை நிறம். இந்திய உடையில் இருந்த அவரைப் பார்த்தபோது, ஓர் ஜாடையில் பாலக்காட்டுத் தமிழ்ப் பெண்ணைப்போல் இருந்தார்.

அவருக்கு, என்னை ஒரு கலை விமர்சகர் என்ற முறையில் அறிமுகப்படுத்தினார் ஓவியர் கணபதி சுப்பிரமணியம். அப்போது தமிழர்களைப்போல் எழுந்து, அந்த பிரெஞ்சு ஓவியப் பெண்மணி எனக்கு வணக்கம் செய்தபோது, எனக்குச் சுருக்கென்றது. சென்னையில் யாரையாவது அறிமுகம் செய்வித்தால் “ஹாய்” என்பதாக முடித்துவிடுவதற்குப் பழக்கப்பட்டுப்போயிருந்தேன் நான்.

“தமிழ் அழகியலைத் தேடிவந்த சக்கரவாகப் பறவை!” - இந்திரன்

ஷந்தால் ழுமேள் (Chantal Jumel) – பிரான்சு நாட்டிலிருந்து வந்திருக்கும் ஓர் ஓவியர். எழுத்தாளர், ஆய்வாளர், கதகளி நடனக் கலைஞர், தமிழர்களின் கோலங்கள் பற்றி ஆய்வுசெய்து இரண்டு நூல்களை பிரெஞ்சு மொழியில் எழுதியவர். ‘வரைகலைரீதியான இந்தியாவுக்குள் ஒரு பயணம்’, ‘கோலம் மற்றும் காலம்: தமிழர்களின் குறியீட்டுரீதியான சரியை கிரியை ஓவியங்கள்’ (Voyage dans l’imaginaire Indien, Kolam, dessins éphémères des femmes Tamoules) ஆகியவை இவரது நூல்கள். இன்றைய தமிழகத்தில் சங்ககாலத்திலிருந்து ஒரு ஜீவநதியாகச் சலசலத்து ஓடிவரும் தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை அடையாளம்கண்டு போற்றிப் பாராட்டும் அவரது பண்பு கண்டு அதிர்ந்துபோனேன். இந்தியக் கலை வெளிப்பாட்டைப் பற்றிய அவருக்கே உரித்தான புரிதல், மிகவும் ஆழமானதாக இருந்தது. ஆனால், அவரது நேர்ப்பேச்சில் தனக்கு இவ்வளவு தெரியும் என்பதன் ஒரு சுவடைக்கூட வெளிக்காட்டாத அவரது எளிமை என்னைக் கவர்ந்தது.

“தமிழர்களின் கம்பிக் கோலங்கள் இவரைக் கவர காரணம் என்ன?” என்று நான் கேட்டதற்கு, அவர் தன் இளமைக்கால நினைவுகளுக்குத் திரும்பினார். இளமைக்காலத்தில் கிறிஸ்துமஸ், ஈஸ்டர் திருவிழா நாள்களில் ஐரோப்பியர்களான இவரது பாட்டி, தாய் ஆகியோர் செய்த ‘பூத்தையல்’ வேலைப்பாடுகள் இவரைக் கவர்ந்தது பற்றிக் கூறுகிறார். ஒரு பிறந்த நாளுக்கு இவரது தாய் பரிசளித்த ஒரு பரிசுப் பையின் மீது செய்த குறுக்குத் தையல் பூ வேலைப்பட்டை இன்னமும் ஓர் அரிய பொக்கிஷம்போல் கருதி வைத்திருப்பதையும் குறிப்பிட்டார். கோலங்களும் இத்தகைய குணாம்சம்கொண்டிருப்பதால் தன்னை உடனே கவர்ந்தன எனக் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“தமிழ் அழகியலைத் தேடிவந்த சக்கரவாகப் பறவை!” - இந்திரன்ஷந்தால் ழுமேள், தன் ஓவியங்களை ஒவ்வொன்றாக எனக்கு எடுத்துரைத்துக்கொண்டு வந்தபோது, எனக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. தனது ஓவியம் ஒன்றின் முன்னால் நின்று, “இது ஒரு சங்கக் கவிதையை அடிப்படையாகவைத்துத்  தீட்டப்பட்டது” என்று சொன்னார்.

 ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ...’

எனும் குறுந்தொகைப் பாடலை உள்வாங்கி அதன் சாரத்தை அவர் அற்புதமான ஓவியமாகப் படைத்திருந்தார். அந்த ஓவியத்தில் கூந்தலைக் குறிக்க சீராக வாரிப் பின்னலிட்ட இரட்டை ஜடைகளைப் போட்டு அதில் வண்ணத்துப்பூச்சி மொய்ப்பதுபோலத் தீட்டியிருந்தார். அவர் சொன்னார், “இந்த இரட்டை ஜடை கூந்தல் அலங்காரம் சங்க காலத்தில் இருந்ததா என்று நீங்கள் கேள்வி எழுப்பக் கூடாது. இன்றைய தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் காணப்படும் ஒன்றை நான் இங்கு பயன்படுத்தியிருக்கிறேன்.” அந்த ஓவியத்தைப் பார்த்தபோது, மூக்கினால் நுகரும் சுவையுணர்வு குறித்துத் தமிழ்க் கவிஞர்கள் இப்போது அதிகம் எழுதுவதில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் எழுந்தது. இன்றைய தமிழ்க் கவிஞர்கள் பலரும் கண்ணால் பார்க்கிற காட்சியனுபவத்தையே அதிகமாக எழுதும் போக்கு தலையெடுத்துள்ள நிலையில்,  ‘கொங்குதேர் வாழ்க்கை’ பற்றிய ஓவியம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. இவரது ஓவியங்கள் பல வண்ணங்கள்கொண்டவை யாக இல்லாமல் ஒரே வண்ணத்தில் இயங்குவதும் இவற்றின் இன்னொரு சிறப்பு. பிரிவாற்றாமை பற்றிய சங்கக் கவிதை ஒன்றை அரூப வகையிலான ஓர் ஓவியமாகவும் இவர் தீட்டிக் காட்சிப்படுத்தியிருந்தார். தனது ஓவியங்களை ‘INNER LANSCAPES – From Sangam poems of the interior to inner journey’ எனத் தலைப்பிட்டிருந்தார்.

“சங்கக் கவிதைகளோடு உங்களுக்கு எப்படி அறிமுகம் ஏற்பட்டது?”

“ஒருமுறை லண்டன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அப்போது அந்த ரயிலில், சங்கக் கவிதை ஒன்று தமிழ் மொழியிலும் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் எழுதப்பட்டு, இரண்டு பக்கங்களும் வரையப்பட்ட சிறு கோலங்க ளோடு ரயிலில் மாட்டப்பட்டிருந்தது.

“தமிழ் அழகியலைத் தேடிவந்த சக்கரவாகப் பறவை!” - இந்திரன்

ஏ.கே.ராமானுஜனால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ எனும் சங்கப் பாடலைப் படித்த போது எனது மனதைப் பறிகொடுத்தேன். இவ்வளவு உயர்வான சிந்தனைகளைச் சொல்லும் சங்கக் கவிதைகளை நான் தேடிப் பிடித்துப் படிக்கத் தொடங்கினேன். அண்மையில் ம.இலெ.தங்கப்பாவின் பெங்குவின் வெளியிட்ட ஆங்கில மொழிபெயர்ப்புகளைக் காண நேர்ந்தபோது, இன்னும் சங்கக் கவிதைகளை நெருக்கமாக உணர்ந்தேன். அன்று தொடங்கிய எனது தேடல், சங்கக் கவிதைகளின் உணர்வுகளைத் தனித்துவமான ஓவியங்களாகத் தீட்டுமாறு என்னைத் தூண்டிக்கொண்டேயிருக்கிறது.”

கடந்த 50 ஆண்டுகாலமாக, இந்தியாவிலுள்ள பல்வேறு ஓவியர்களுடனேயே இருந்து உருண்டு புரண்டு வந்த எனக்கு இதுவரை எந்த ஓர் இந்திய ஓவியனும் – ஏன் எந்த ஒரு தமிழ் ஓவியனும்கூட - ஓவியத்தில் இத்தகைய மகிழ்ச்சியைக் கொடுத்ததில்லை. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டபோது, தமிழக அரசின் சார்பாக நான் 133 திருக்குறள்களுக்கு 133 ஓவியங்களைப் படைக்குமாறு வேண்டிக் கொண்டபோதுகூட அந்தத் திருக்குறளில் ஆழ்ந்திருக்கும் கவியுளம் கண்டு ஓவியம் தீட்டியவர்கள் குறைவானவர்களே. தமிழக அரசு, 48 லட்சம் ரூபாய் செலவில் ஒவ்வோர் ஓவியருக்கும் பணம் கொடுத்து ஓவியம் தீட்டச் சொன்னது. இதில் பங்கெடுத்த 133 ஓவியர்களில் ஓர் ஓவியர்கூட அந்த ஒரு கண்காட்சிக்குப் பிறகு திருக்குறள் எனும் இலக்கியத்தைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. தமிழ் அழகியல் என்பதை முன்னெடுக்கும் ஒரு கலை விமர்சகன் என்ற முறையில், இந்த விமர்சனத்தை நான் இங்கே முன்வைக்கவேண்டியது கட்டாயமாகிறது. இந்தப் பின்னணியில்தான் ஷந்தால் ழுமேள் எனும் பிரெஞ்சுப் பெண்மணி ஒருவர் எந்த அரசாங்கத்தின் ஆதரவும் இல்லாமல், தனது சொந்த முயற்சியில் தமிழ்ப் பண்பாட்டின் பரிசான கோலங்களைத் தேடிப் பயணித்துத் தனது சுயமான அழகியல் காரணத்துக்காகப் படைத்த சங்கக் கவிதை ஓவியங்கள் மிக முக்கியமான அழகியல் சாதனை என்று உணர்கிறேன்.

1980-ல் 19 வயது இளம்பெண்ணாக இசை, கதகளி நடனம் ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதற்காக இந்தியா வந்த ஷந்தால் ழுமேள், கடந்த 37 ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூக வாழ்க்கையின் ஆன்மாவாக இருக்கும் கோலங்களைப் பற்றி ஆராய்ந்து வருகிறார். 2010-க்குப் பிறகு கோலங்களை ஆராய்வதற்கென்றே ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதத்தைத் தேர்ந்தெடுத்து இந்தியாவுக்கு வருகைதரும் ஷந்தால் ழுமேள், “கோலம் என்பது சாதி வித்தியாசங்களைக் கடந்த ஒரு தமிழ் அழகியல் வெளிப்பாடு” என்று குறிப்பிட்டபோது அவர் தமிழ்க் கலைகளை மட்டுமின்றி தமிழ்ச் சமூகத்தையும் அறிந்திருக்கிறார் என்பது எனக்குப் புலப்பட்டது. ‘கோலங்களைப் பற்றி ஆராய்வதற்கு என்ன இருக்கிறது?’ என்று தங்களுக்குள் சிரித்துக்கொள்ளும் தமிழர்கள், இவரது ஓவியங்களைப் பார்த்து ஆச்சர்யப்பட நேரலாம்.

தமிழ்நாட்டின் கோலங்களில் காணப்படும் கோடுகள்ரீதியான பொழிவை தன் ஓவியங்களுக்கான ஓர் வெளிப்பாட்டு உத்தியாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டார் இவர். ஓர் ஓவியன் தன் ஓவியத்தை வண்ணங்களால் வெளிப்படுத்துவதுபோல கோலங்களால் வெளிப்படுத்துவது ஷந்தால் ழுமேள் செய்த தனிப்பட்ட கண்டுபிடிப்பு. இவர், கோலங்களை அடிப்படியாகக்கொண்ட பிரத்தியேக ஓவியமொழியை உருவாக்கியிருக்கிறார். கோலங்களில் திரும்பத் திரும்ப வரும் அலங்காரப் பூவேலைப்பாடுகள் ‘ஓம்... ஓம்’ என்று திரும்பத் திரும்ப ஜபிக்கப்படுகிற ‘ஓம்’ எனும் மந்திரத்தைப்போல் இயங்குவதாக உணர்ந்திருக்கிறார். எனவே, அந்த வரிவடிவத்தைத் திரும்பத் திரும்பச் செய்து தனக்கான ஓவிய மொழியை உருவாக்கியிருக்கிறார். “முழுமையாகப் போட்டு முடிக்கப்பட்ட கோலங்களை மட்டுமின்றி, போட்டு முடிக்கப்பட்டு இரண்டு நாள்கள் கழித்துக் காணப்படும் அழிந்த கோலங்களிலிருந்தும் உத்வேகம் பெற்று நான் எனது கோலம் சார்ந்த ஓவிய மொழியை உருவாக்கியிருக்கிறேன்” என்கிறார். இந்த இடத்தில்தான் கோலங்களின் வரிவடிவங்களை ஒரு வண்ணத்தைப் பயன்படுத்துவதுபோல ஷந்தால் பயன்படுத்துகிறார் எனச் சொல்லத் தோன்றுகிறது. ஒரு நீர் வண்ணத்தைக் கித்தானில் வைத்து ஒரு ‘வாஷ் டெக்னிக்’ செய்வதுபோலக் கோலத்தின் சிதறிய வடிவங்களைவைத்து இவர் தனது ஓவியங்களைப் படைக்கிறார்.

இவரது ஓவியங்கள், தமிழ்க் கிராமத்துக் குடிசைகளுக்குள் செய்யப்படும் தரைப் பூச்சுகளையும் அதன் மீது வரையப்படும் கோலங்களைப் போன்ற வண்ண ஒழுங்கைக் கொண்டுள்ளன. நாம் கிராமத்துக் குடிசைக்குள் சென்றால், குடிசைக்குள் இருக்கும் மண்தரையில் சாணம் மெழுகியிருப்பார்கள். இதை ‘ஆலிவ் கிரீன்’ என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு. ஓரத்தில் ‘யெல்லோ ஆக்கர்’ என்று ஆங்கிலத்தில் சொல்லும் காவி நிற ஓரங்களைச் செய்திருப்பார்கள். சுவர்கள் சுண்ணாம்பு அடிக்கப்பட்டு வெள்ளை வெளேரென இருக்கும். இந்த வண்ண ஒழுங்கைக் கிராமத்து மக்கள் செய்து நம்மை வியப்பிலாழ்த்துகிறார்கள். இவர்களால் கவரப்பட்ட பிரெஞ்சு ஓவியர் ஷாந்தால் ழுமேள் இந்தக் கிராமத்துத் தமிழர்களைப் போன்றே இயங்கியிருக்கிறார். இவர் தனது ஓவியங்களை, பளிச்சிடும் பல வண்ணங்களால் நிறைப்பதில்லை. அடிப்படை வண்ணம் ஒன்றின்மேல் சிவப்புக் கோடுகளால் சில இடங்களில் அழுத்தமாகவும் சில இடங்களில் மெலிதாகவும் தீற்றுவதின்மூலம் தொனி வேறுபாடுகளைக் கொண்டுவருகிறார். கோலம் மட்டுமின்றி, தமிழ்நாட்டுப் புடவைகளில் கையாளப்படும் வங்கி, நெளி, மயில்கண், சலங்கை, பவுன், மல்லி மொக்கு, முத்து கட்டம், ரெட்டை நெளி, பாய் மடி, அரை மாடம், கோபுரம், குயில்கண், மாங்காய் புட்டா போன்ற பல்வேறு சித்திர அலங்காரச் சரிகை வேலைப்பாடுகளாலும் கவரப்பட்டிருக்கிறார்.

“தமிழ் அழகியலைத் தேடிவந்த சக்கரவாகப் பறவை!” - இந்திரன்

தமிழனின் முக்கியக் கலைமரபாகிய ‘சித்திரக் கவி’ மரபில், வார்த்தைகளை வைத்தே உருவங்களை வரையும் மரபு இருக்கிறது. இன்று தனது தீவிரத்தை இழந்து நிற்கும் கவிமரபான சித்திரக் கவிதைகளை, பலவிதங்களில் நினைவூட்டுபவையாக இவரது ஓவியங்கள் இருக்கின்றன. தமிழில் அகரம் எனும் எழுத்தை வடிவத்தால் நினைவூட்டுவதாக இருக்கும் அலங்கார வடிவத்தை ஒன்றன்மேல் ஒன்றாகவும், ஒன்றின் பக்கத்தில் மற்றொன்றாகவும் எழுதியிருப்பதினால், பூக்களையும், தோகை அடர்ந்த மயிலையும், பின்னிவிடப்பட்ட கூந்தலையும், பட்டாம்பூச்சிகளையும்,
தேர்களையும் இவர் ஓவியங்களாக வடிவமைத்திருக்கிறார்.

இது சாத்தியப்பட்டதற்குக் காரணம், இவரது இந்திய அழகியல் குறித்த அபார புரிதல்தான். அவருடனான உரையாடலில் கம்ப ராமாயணத்தில் ஒரு கவிதையில் ‘அல்லையாண்டமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச’ எனும் குகனின் வார்த்தை களை எடுத்துச் சொன்னேன். அதில், ‘இருட்டையே திரட்டி ஒரு கருமேனியனாகப் படைக்கப்பட்ட ராமன்’ என்று ராமனைப் பற்றி இரண்டு வரிகளில் வர்ணித்துவிட்டுச் சீதையைப் பற்றி, ‘அவள்’ எனும் ஒற்றை வார்த்தையில் குகன் குறிப்பிடுவது ஏன்? ராமனை தலை முதல் கால் வரை பார்த்திருக்கும் குகன், அவனை பல வார்த்தைகளில் வர்ணித்தான். ஆனால், குகன் பிறன்மனை நோக்காப் பேரண்மையினன் என்பதால், சீதையை ஏறிட்டுப் பார்த்ததில்லை. எனவே, அவளை வெறுமனே ‘அவள்’ எனும் சொல்லால் குறித்தான் என்பதை நான் அவருக்கு விளக்கினேன். இதைப் புரிந்துகொண்ட ஷந்தால் ழுமேள், உடனே இதற்கு இணையான இன்னொன்றை கதகளி நடன மரபிலிருந்து எடுத்துச் சொன்னார். சீதையைக் கவர்ந்து சென்ற இராவணன் சீதையிடம் காதலைச் சொல்லும் காட்சியில், கதகளி நடன மேடையில் இராவணன் வேஷம் கட்டியவன் மட்டுமே இருப்பான். ஆனால், சீதைக்குப் பதிலாகப் பெரிய குத்துவிளக்கு ஒன்று எரிந்துகொண்டிருக்கும். குத்துவிளக்கையே சீதையாகப் பாவித்து இராவணன் தன் நடனத்தை நிகழ்த்துவான் என்று அவர் சொன்னபோது, நான் பிரமித்துப்போனேன். இன்று நம்மைக் கவரும் ரங்கோலி கோலங்களைக் காட்டிலும் தமிழர்களின் கம்பிக் கோலங்கள், அழகியல்ரீதியாகத் தன்னைக் கவர்வதற்கான காரணங்களை இவர் ஆய்வுரீதியாக எடுத்துரைக்கிறபோது இவர் தேடல்கள் மிகுந்த ஓர் அபூர்வப் பறவை என்பது உறுதியாகிறது.

மேகத்திலிருந்து பூமியை நோக்கி விழும் மழைநீர் பூமியில் விழும் முன்னரே, அந்தத் தூய நீரை அருந்தி உயிர்வாழும் ஓர் அபூர்வப் பறவையை ‘சக்கரவாகப் பறவை’ என்று சொன்னார்கள் தமிழர்கள். இந்த சக்கரவாகப் பறவைதான் ஷந்தால் ழுமேள்.  பிரெஞ்சு நாட்டிலிருந்து பறந்து வந்து கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்வானத்தில் சிறகடித்துக்கொண்டிருக்கும் இவர், சங்க இலக்கியங்களை ஓவியங்களாகப் படைத்ததன் காரணமாக தமிழர்களின் மனதில் நீங்காத இடம்பெறுகிறார். இதன் மூலமாகச் சங்க இலக்கியம் தற்காலக் கலைவெளிப்பாடாகப் புதுமைக்கோலம் கொள்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism