Published:Updated:

நீரின் வடிவம் - செழியன்

நீரின் வடிவம் - செழியன்
பிரீமியம் ஸ்டோரி
நீரின் வடிவம் - செழியன்

நீரின் வடிவம் - செழியன்

நீரின் வடிவம் - செழியன்

நீரின் வடிவம் - செழியன்

Published:Updated:
நீரின் வடிவம் - செழியன்
பிரீமியம் ஸ்டோரி
நீரின் வடிவம் - செழியன்

“நான் அவளை, எலிஸாவை நினைக்கும்போது
என் மனதில் தோன்றும் ஒரே விஷயம்
ஒரு கவிதை.
அது காதலில் யாரோ கிசுகிசுக்கிற ஒரு கவிதை.
நூறு வருடங்களுக்குமுன்பு
உன் வடிவத்தை என்னால் உணர முடியவில்லை.
என்னைச் சுற்றிலும் உன்னையே காண்கிறேன்
உன் இருப்பு என் கண்களை நிறைக்கிறது
எங்கும் இருக்கிற நீ உன் காதலினால்
என் இதயத்தை மேலும் பணிவுடையதாக்குகிறாய்”


சினிமாவில் கதை சொல்வதில் என்ன இருக்கிறது? கேட்டு முடித்ததும்  ஒரு கதை முடிந்து விடுகிறது. குழந்தையிலிருந்தே கதையும் இசையும் நம்மைத் தூங்கவைக்கின்றன. தூக்கம் கெடுப்பது எது? விழித்திருக்கவைத்திருப்பது எது? காதல். எனவேதான் காதலினால் மானுடர்க்குக் கவிதை உண்டு. ஒரு கவிதையைத் திரைக்கதையாகச் சொல்லும்போது அது நம்மை நெகிழ்த்துகிறது. எனவேதான் அப்பாஸ் கியாரெஸ்தமி, ‘சினிமாவில் கவிதையைத்தான் சொல்ல முயல்கிறேன். கதையை அல்ல’ என்று சொன்னார்.

நீரின் வடிவம் - செழியன்

நீருக்கு வடிவம் இல்லை. அது நிரம்பும் கலனின் வடிவம்கொள்கிறது. காதலுக்கும் வடிவம் இல்லை. அது கொள்பவரின் வடிவம்கொள்கிறது. அன்பு என்பது என்ன?அது பிடித்தமானவரின் முகம். அதுதான் அன்பின் வடிவம். எனவே, நீரும் காதலும் ஒன்றுதான். சுகுமாரனின் கவிதையில் சொன்னால்,  ‘கைப் பள்ளத்தில் தேக்கிய நீர்.’ அந்த எளிமையான, எதிர்பார்ப்பில்லாத அன்புதான் இதயத்தைத் பணிவுமிக்கதாக ஆக்குகிறது. உயரத்திலிருக்கும் எதை நோக்கியும் தண்ணீர் செல்வதில்லை. தண்ணீர் தாழ்ச்சியான இடத்தை நோக்கித்தான் பாய்கிறது. காதலும் அப்படித்தான். ஆன்மிகத்திலும் காதலிலும் ஒரு பக்தனின் நிலை என்பது சரணாகதிதான். நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா...

எலிஸா தனிமையில் வசிக்கிறாள். ஒருவனைக் காதலிக்கிறாள்.எதிர்ப்புகள் கடந்து அவனுடன் சேர்கிறாளா, இல்லையா? ‘The Shape of Water’-ன் கதை இவ்வளவுதான். கதை யாருக்கு வேண்டும்? இந்தச் சாதாரணமான கதையில் கொஞ்சம் தண்ணீரைக் கலந்துவிடுங்கள். கதை நடக்கும் அறையைத் தண்ணீரில் மிதக்கவிடுங்கள். ‘தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்’ என்கிறது வேதாகமம். ‘பாற்கடலுள் பையத் துயின்ற பரமன்’ என்கிறது திருப்பாவை. நீரின் உள்ளே வசிப்பது என்பது தேவதைக் கதையின் தொன்மம். படம் அவ்வாறே தொடங்குகிறது.

கடலுக்குள் இருப்பது போன்ற அறையினுள் விளக்குகள் எரிகின்றன. மீன்கள் நீந்துகின்றன. நாற்காலிகள் மிதக்கின்றன. எரியும் குடை விளக்குகளும் மேசைக் கடிகாரமும் மிதக்கின்றன. அந்த நீரில் ஒரு கட்டிலும் மிதக்கிறது. அவள் அந்தரத்தில் மிதந்துகொண்டே தூங்குகிறாள்.

‘இதைப் பற்றிப் பேசத்தொடங்கினால்; நான் என்ன சொல்வது?

முன்பு ஒரு காலத்தில் இந்தக் கதை நிகழ்ந்தது.

அரச வம்சங்களின் கடைசிக் காலத்தில். 

இடம் கடற்கரைக்கு அருகில் இருந்த ஒரு சிறிய கிராமம்.

அது சகலவற்றிலும் இருந்து வெகுதொலைவில் இருந்தது.

அந்த இளவரசி அவளைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.

அவள் குரல் இல்லாதவள்.

செய்திகளின் வழிவழி வந்த இது உண்மை.

காதலும் அதன் இழப்பும் கலந்த கதை.’

கதைசொல்லியின் குரல் முடிகையில், மிதக்கும் எலிஸா கட்டிலை அடைகிறாள். மிதக்கும் கடிகாரம் மேசையில் அமர்கிறது. அலாரம் அடிக்கிறது. நீர் எதுவும் இல்லாத சாதாரணமான அறை. கதை தொடங்குகிறது. அவளது முதல் நாள் தொடங்குகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீரின் வடிவம் - செழியன்

ஓர் ஆய்வகத்தில் கழிப்பிடங்களையும் அறைகளையும் துப்புரவு செய்கிற வேலைக்காரியாக எலிஸா இருக்கிறாள். ஒரு நதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டு அநாதை விடுதிதியில் வளர்ந்த எலிஸாவினால் கேட்க முடியும்; பேச முடியாது. அவள் பேச முடியாமல் போனதற்கான காரணம், அவள் கழுத்தில் மூன்று விரல்கள் ஏற்படுத்திய காயத்தின் தழும்பும் இருக்கிறது. அவள் ஒரு திரையரங்கத்தின் மேலே இருக்கும் அறையில் தங்கியிருக்கிறாள். அவளது அறைக்குப் பக்கத்தில் வயதான ஓர் ஓவியரும் தங்கியிருக்கிறார். தினமும் மாலை வேளைகளில் தனது துப்புரவு வேலைக்குக் கிளம்புகிறாள்.

அன்று அந்த ஆய்வகத்திற்குக் கடலிலிருந்து பிடித்து வரப்பட்ட ஓர் உயிரினத்தை ஆய்வுக்காகக்கொண்டுவருகிறார்கள். முதன்முறையாக அந்த உயிரினம் அடைக்கப்பட்டிருக்கும் நீர் நிரம்பிய கண்ணாடிப் பெட்டி அருகில் எலிஸா சென்றதும், அந்த உயிரினம் சிலிர்ப்புற்றுக் கண்ணாடியைத் தட்டுகிறது. நீர்வாழ் உயிரினம்போலவும் மனிதனின் உடற்கூறுபோலவும்  உள்ள அந்த உயிரினத்தைப் பார்த்த கணத்திலிருந்து எலிஸாவின் மனதில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அவளுள் அன்பும் கருணையும் மேலிடுகின்றன. அந்த உயிரினமும் தன்னைப்போலப் பேச முடியாது என்பதால், யாரும் இல்லாத தன்னைப் பார்ப்பதற்காகவே இங்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்று நம்புகிறாள். பேச முடியாத எலிஸாவின் சைகை மொழியை அது புரிந்து கொள்கிறது. அந்தக் கணத்திலிருந்து எலிஸாவின் நாள்கள் அன்பினால் எழுதப்படுகின்றன.

அந்த ஆய்வகத்தின் தலைமை அதிகாரியின் இரண்டு விரல்களை அந்த உயிரினம் கடித்துத் துப்புகிறது. அதனால் அவரது கடுமையான தண்டனைக்கும் கோபத்திற்கும் ஆளாகிறது. இதை எல்லாம் எலிஸா இரக்கத்துடன் பார்க்கிறாள். தன் உணவான அவித்த முட்டைகளை யாரும் இல்லாதபோது அதற்கு உண்ணக் கொடுக்கிறாள். தனக்குப் பிடித்த இசையை அதன் முன்னால் இசைக்கவிடுகிறாள்.

அந்த உயிரினம் குறித்த வேறு வேறு விவாதங்கள் ரஷ்ய, அமெரிக்க ஆய்வாளர்களிடம் நடந்து கொண்டிருக்கி ன்றன. ஒரு நிலையில் அதை அறுத்து அதன் உடற்கூறுகளை ஆராய்ச்சி செய்யலாம் என்கிற நிலை வருகையில் எலிஸா பதறுகிறாள். அதை எப்படியாவது காப்பாற்றிக் கடலுக்குள் விட வேண்டும் என்று விரும்புகிறாள். தான் எதிர்பார்க்கிற நாளில் மழைவரும் என்று நாள்காட்டியில் அந்த நாளைக் குறித்துவைக்கிறாள். மழை வந்தால் கடலுக்குச் செல்லும் கால்வாய் நிரம்பும். அதன் வழியே இதைக் கடலுக்கு அனுப்பிவிடலாம் என்பதுதான் எலிஸாவின் திட்டம்.

அதற்காகத் தன் அறைக்குப் பக்கத்தில் வசிக்கிற ஓவியரின் துணையுடன் அந்த உயிரினத்தைக் கடத்தித் தன் வீட்டுக்குக் கொண்டுவருவதற்கு முயற்சி செய்கிறாள். பரபரப்பான சூழலில், ஆய்வகத்திலிருந்து சலவைத் துணிகள் எடுத்துச் செல்லும் வாகனத்தில், அந்த உயிரினத்தைக் கடத்தி வந்து தன் அறையில் குளிக்கும் தொட்டியில் நீரை நிரப்பி அதில் அதைத் தங்க வைக்கிறாள். அதனோடு அமர்ந்து இரவு உணவு அருந்துகிறாள். கதவுகளின் வழியே கசிவுகள் நிகழாமல் அறையை அடைத்து வைத்து, தன் வீட்டிலிருக்கும் தண்ணீர்க்குழாய் அனைத்தையும் திறந்துவிட்டு அறையையே தண்ணீர்த் தொட்டியாக மாற்றுகிறாள். காதல் கொள்கிறாள்.

தலைமை அதிகாரி அந்த உயிரினத்தைத் தேடுகிறான். எலிஸாதான் காரணம் என்கிற தகவல் தெரிகிறது. அவளைத் தேடி வருகிறான். ஒரு கெடுவுக்குள் நினைத்ததை நிகழ்த்திவிட வேண்டும். எலிஸாவும் அதிகாரியும் முயற்சி செய்கிறார்கள். வழக்கமான பரபரப்புகள், நடுவில் கதை நிறைவுறுகிறது.

நீரின் வடிவம் - செழியன்

குழந்தைகளுக்கான தேவதைக் கதைகள் போல இது பெரியவர்களுக்கான தேவதைக் கதை என்றுகூடச் சொல்லலாம். இது தேவதைக் கதை (Fairy Tale) வகையைச் சேர்ந்தது என்பதால், இதில் தர்க்கரீதியான கேள்விகளுக்கும் பதில் இருக்காது. அது இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. ஒருவிதமான மாயப் புனைவுதான். எனவே, முழுப் படத்தையும் படத்தின் முதல் காட்சியின் வழியாகவே புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு நவீன தேவதைக் கதை நிகழும் காலமும் சூழலும் சுவாரஸ்யமானது. எலிஸா ஒரு திரையரங்கத்தின் மேலே வசிக்கிறாள்... சிறுவயதில் சிவகங்கையில் என் அப்பத்தா வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டிலிருந்து கொஞ்சம் தொலைவில் அமுதா திரையரங்கம் இருந்தது. நள்ளிரவு நேரங்களில் இரண்டாவது காட்சி ஓடும் படத்தின் வசனமும் பாடலும் ஓர் அசரீரி போலக் காற்றில் கேட்டுக்கொண்டே இருக்கும். அதுபோல இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் கீழே திரையரங்கில் ஓடும் காட்சிகளின் உரையாடலும் இசையும் கேட்டுக்கொண்டே இருக்கும். இது ஒரு கவித்துவமான கற்பனைதான்.

எலிஸா தன் பக்கத்து அறையில் வசிக்கிற ஓவியரிடம் தன் காதல் உணர்வுகளைப் பேசுகிற காட்சி அழகானது. வாய் பேசாத பெண் தன் உணர்வுகளைச் சொல்ல வேண்டும் என்பதால், அவள் சைகையாகச் சொல்வதை ஓவியர் மொழி பெயர்க்கிறார். படம் முழுக்க ஒரு வார்த்தைகூடப் பேசாமல் சிறப்பாக நடித்த சேலி ஹாக்கின்ஸின் பங்களிப்பு இந்தக் காட்சியில் அற்புதமானது. ‘நான் யார்? அவன் என்னை மாதிரி வாயசைக்கிறான். என்னை மாதிரியே அவனாலும் பேச முடியாது. அவனும் என்னை மாதிரியே தனியாக இருக்கிறான். நான் இத்தனை நாளும் இங்கு இருப்பதே அவனுக்காகத்தான். அவன் என்னைப் பார்க்கிற விதம்... அவன் என்னைக் குறையற்றவளாகப் பார்க்கிறான். என்னைப் பார்க்கும்போது சந்தோஷமடைகிறான்.’

நீரின் வடிவம் - செழியன்


‘ஓ அதுவாக இருந்தது இப்போது அவன் ஆகிவிட்டானா’ என்று ஓவியர் கேட்கிறார். அதுபோல, படத்தின் இறுதியில் எலிஸாவும் அவனும் உணவு மேசையின் முன்னால் அமர்ந்திருக்கும்போது ‘உன்மேல்  நான் கொண்டிருக்கும் காதல்...’ என்று சைகையில் சொல்கிறாள். அதற்குமேல் சைகை மொழியால் தன் காதலைச் சொல்ல முடியாமல் போகும்போது, அவள் வாய் திறந்து பேசத் தொடங்குகிறாள்.  ‘நான் உன்மேல எவ்வளவு காதல் வெச்சிருக்கேன்கிறது உனக்கு எப்பவுமே புரியாது’ என்று கண்கள் கலங்கச் சொல்லும்போது, இசையைப்போல ஒளியும் தேய்ந்து மங்குகிறது. காட்சியின் வெளிச்சம் அவரோகணத்தில் அணைந்து அவள் மட்டுமே இருக்கிறாள். இந்த இடத்தில் வாய் திறந்து பேசியும் போதவில்லை. வார்த்தைகள் பாடலாக மாறுகின்றன. காட்சியின் வண்ணமும் கனவுநிலையில் கறுப்பு வெள்ளையாக மாறி, திரும்ப வண்ணத்துக்குத் திரும்புகையில் நிஜத்துக்கும் கனவுநிலைக்குமான முயங்கு நிலையை  வெகு அழகாகக் காட்சிப்படுத்தி யிருக்கிறார்கள்.

படத்தின் இயக்குநர், கிலர்மோ தெல் தோரோ, மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவர். மார்க்வெஸ்ஸின் மேஜிக்கல் ரியலிஸம் வழியாகவும் லத்தீன் அமெரிக்காவின் மாயப்புனைவுகள் வழியாகவும் பார்க்கும்போது, இந்தப் படம் தரும் அனுபவம் வித்தியாசமானது. நீலமும் பச்சையும் கலந்த வண்ணங்களின் வழியே படத்தை வடிவமைத்திருப்பதும் சிறப்பாக இருக்கிறது.

வாய் பேச முடியாதவர்களுக்கென ஒரு முகம் இருக்கும். ஒலியைப் பாவனைகளால் மொழிபெயர்க்கும் சோர்வும், எதையும் கண்களின் வழியே சொல்ல விரும்புகிற ஆர்வமும், ஓர் அமைதியும் இருக்கும். அதே முகத்தோடு தோள்களைச் சற்றே அசைத்தும் புருவங்களை உயர்த்தியும் வாய் பேசாதவர்களின் உடல்மொழியைச் சேலி ஹாக்கின்ஸ் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

Beauty and The Beast என்கிற படத்தின் கருதானே இது. E.T படத்தின் கதையை அந்தச் சிறுவனுக்கும் E.T-க்குமான காதல் கதையாக எழுதிப் பார்த்தால் இப்படித்தானே இருக்கும். படத்தின் நாயகியான எலிஸாவும் ஏன் இசையின் தொனியும்கூட ‘Amelie’ படத்தைத்தானே நினைவுபடுத்துகின்றன. இதற்கு வெனிஸில் தங்கக்கரடி... ஆஸ்கரில் நான்கு விருதுகள்... இருக்கட்டுமே. முதன்முறை பார்க்கையில் இந்தப் படம் எனக்குப் பிடிக்கவில்லை.

தண்ணீரில் என்ன இருக்கிறது? அதற்கென ஒரு வடிவம் இல்லை; நிறம் இல்லை; சுவையும் இல்லை. எழுதுவதற்காக இரண்டாவது முறை பார்த்தேன். கொஞ்சம் பிடித்தது. மூன்றாவது முறை எலிஸாவை மட்டும் பார்த்தேன். அவளின் கண்களின் வழியாக... உறவுகளே இல்லாத அந்தத் தனிமையின் வழியாக... வாய் பேச இயலாத பெண்ணின் காமத்தின் வழியாக... வீட்டில் தங்கவைத்தவன் காணாமல் போனதும் பதறிப்போய்த் தேடி தியேட்டரில் நிற்கும் அவனைப்  பார்த்ததும் ஆசுவாசம்கொண்டு தொடுகிற கரிசனத்தோடு பார்த்தேன். அவள் குறித்த நாளில் மழை வருகிறது.பேருந்துக் கண்ணாடியின் மறுபக்கம் ஓடும் மழைத்துளியை அவள் விரல்களால் பின் தொடர்கிறாள். இசை பெருகுகிறது.  கண்ணீர் வழியத் தொடங்குகிறது.

அவ்வளவுதான் நீரின் வடிவம்.

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தி லிருக்கும் கவிதையைத் திரும்ப வாசியுங்கள். நீரிலிருந்து கண்டெடுக்கப்பட்டவள் நீருக்கே திரும்புகிறாள். கடல் அவளது அறையாக மாறுகிறது. ஆழத்தில் அவள் உறங்குகிறாள். படத்தின் முதல் காட்சிக்குத் திரும்பவும் வாருங்கள்.

நீர்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism