Published:Updated:

புக்மார்க்

புக்மார்க்
பிரீமியம் ஸ்டோரி
புக்மார்க்

புக்மார்க்

புக்மார்க்

புக்மார்க்

Published:Updated:
புக்மார்க்
பிரீமியம் ஸ்டோரி
புக்மார்க்

நடிகர் சார்லி:

``நான் எப்போதும் கொண்டாடக்கூடிய எழுத்தாளர் கி.ராஜநாராயணன். அகந்தையைக் கரைக்கும் தன்மைகொண்ட அவரின் கதைகளைத் திரும்பத் திரும்ப வாசிக்கையில், புதிய புதிய திறப்புகள் எனக்குள் நிகழும்.அவரின் `கதவு’, என் வாழ்நாளில் மறக்க முடியாத சிறுகதை.’’

புக்மார்க்
புக்மார்க்

சென்னை ஐ.ஐ.டி மாணவர்களோடு இணைந்து `மார்க்சிஸ்ட்’ இதழ், புதிய முயற்சியை இதழியல் துறையில் நிகழ்த்தியுள்ளது. இதன்படி அவர்களது இதழில் வெளியாகும் அனைத்துக் கட்டுரைகளும் ஆடியோ வடிவில் marxist.tncpim.org என்ற வலைதளத்தில் தனித்தனிக் கட்டுரைகளாகப் பதிவிடப்படும். வாசகர்கள் விரும்பும் கட்டுரையை மட்டும் டவுன்லோடு செய்து கேட்கலாம். விழித்திறன் குறைபாடு உடையவர்கள் உட்பட பலருக்கும் உதவும் வகையில் இதைச் செய்துள்ளனர்.

புக்மார்க்

திருவனந்தபுரத்தில் வசிக்கும் ஷைலஜா ரவீந்திரன், தமிழில் வெளியான சில முக்கியமான படைப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்த்தவர். பொன்னீலனின் `கரிசல்’, பாமாவின் `கருக்கு’,
நீல.பத்மநாபனின் `போதையில் கரைந்தவர்கள்’, பெருமாள்முருகனின் `பூக்குழி’ போன்றவை அவரால் மொழியாக்கம் செய்யப்பட்டவை. திருக்குறளை மலையாளத்தில் மொழிபெயர்த்த இவர், இப்போது திருவள்ளுவர் குறித்த நூல் ஒன்றை மலையாளத்தில் எழுதிவருகிறார்.

புக்மார்க்

`ஆசிரியர்களும் குழந்தைகளும் பார்க்கவேண்டியது’ என  12 திரைப்படங்களைக்  குறிப்பிட்டு அவற்றின் கதைச்சுருக்கத்துடன் வந்திருக்கிறது `கரும்பலகைக்கு அப்பால்’ எனும் புத்தகம். ``இன்றைய பிள்ளைகளிடம் திரைப்படங்கள் வன்முறையை விதைக்கின்றன எனச் சொன்னால், நன்மையையும் எளிதில் விதைத்துவிட முடியுமல்லவா! ஆசிரியர்களும் குழந்தைகளும் சந்திக்கும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்களை இந்த நூல் முன்வைக்கிறது. இருதரப்பும் வாசிக்கவேண்டிய புத்தகம்” என்கிறார் நூலாசிரியர் `கலகல வகுப்பறை’ சிவா.

புக்மார்க்

10 வருடக் களப்பணிக்குப் பிறகு, கட்டுரைத் தொகுப்பு ஒன்றைக் கொண்டுவர இருக்கிறார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் பொதுவுடைமைக் கட்சிகளின் வளர்ச்சி, தொடக்ககாலப் போராட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி மாபெரும் ஆய்வுநூலாக வெளிவரவுள்ளது.

புக்மார்க்

`தனித்தனி வயிறு... தனித்தனிப் பசி’ - வெளிவர இருக்கும் அழகிய பெரியவனின் புத்தகம். ``வேலையில்லாமல் இருந்த காலகட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த நாவல். அரசு அலுவலகங்கள் எவ்வாறு சாதி, ஊழல் போன்ற கீழ்மைகளால் நிரம்பியிருக்கின்றன என்பதை இந்த நாவல் பேசும்” என்றார். ``சமீபத்தில் படித்ததில் ரகசியன் எழுதிய `காற்றில் கூனும் கிளை’ கவிதைத்தொகுப்பு மிகவும் பிடித்திருந்தது’’ எனச் சொன்னவர், ஹரிகிருஷ்ணன், சாம்ராஜ், சபரிநாதன், நவீன் போன்றோரின் எழுத்துகளும் சமீபத்தில் தன்னை ஈர்த்ததாகக் கூறினார். ``புதிதாக எழுதுபவர்கள், தனக்கு முன்னால் எழுதியவர்களின் எழுத்துகளை வாசிக்க வேண்டும். தாங்கள் நினைப்பதை உடனே எழுதாமல், மனதில் சில காலம் தேக்கி அதன் நுட்பத்தை வெளிக்கொண்டுவர வேண்டும்” என்றார் இந்த ‘வல்லிசை’க்காரர்.

புக்மார்க்

பெருந்தேவி: சாருநிவேதிதாவிடம் ஒரு கேள்வி.

லகில் வேறெங்கும் இல்லாதவிதமாக குண்டுப் புத்தக மாயை தமிழ் இலக்கியச் சூழலில் கண்களை மறைத்திருக்கிறது. அதனால்தான் `வரி எண்ணிக்கை குறைவாக இருப்பதால், கவிதை எழுதுவது எளிது அல்லது வீண்’ என்ற பிரமை இங்கே  நிலைபெற்றிருக்கிறது. இங்கேதான் புனைவு எழுத்தாளர்கள், கவிஞர்களிடம், `எதற்கு இன்னும் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?,  எப்போது சிறுகதை, நாவல் எழுதப்போகிறீர்கள்?’ என்று  `அடுத்த பதவி உயர்வு எப்போது?’ என்பதுபோன்று கேட்கிறார்கள். கவிதை தராத `சவாலையா’ உரைநடை தந்துவிடப்போகிறது?!

புக்மார்க்

``இலக்கிய நிகழ்வுக்காக சமீபத்தில் டோக்கியோ சென்று வந்தேன். அந்த மக்களின் வாய்மொழியும் உடல்மொழியுமே நாட்டியமும் இசையும்போல உள்ளன. அவ்வளவு நெருக்கமான டோக்கியோ நகரில் டிராஃபிக்கின்போது `ஹாரன்’ அடிக்காமல் பொறுமை காக்கின்றனர். இந்த விஷயத்தில் நம் ஊரைப் பற்றி நினைக்கும்போதே காது வலிக்கிறது.’’

- நாஞ்சில் நாடன்

புக்மார்க்

கண்ணாடி

சிறுகதைத் தொகுப்பு

ஜி.முருகன்


ஒரு கதையில், `கனவுக்கான மொழி நம்மிடம் இல்லாததாலேயே அதை எழுத முடிவதில்லை’ என்கிறார் ஆசிரியர். ஆனால், தொகுப்பின் பல கதைகள் கனவில் நிகழ்வது போன்ற மாயத்தோற்றத்தை உண்டாக்குகின்றன. வாழ்வின் சாபங் களையும் மனிதர் களின் அவலங் களையும் பூடக மொழியில் எழுதிச் செல்கிறார் ஜி.முருகன். எந்தக் கதையின் முடிவும் இன்னொரு தொடக்கத்தை வேண்டி நிற்பதே இதற்குச் சான்று. சமகால அரசியலைப் பகடி நடையில் சித்திரப்படுத்தி யிருக்கும்  `கைவிடப்பட்ட’ கதையும், ஆணவக் கொலைகளை விவரிக்கும் `பாம்பு’க் கதையும் தொகுப்பில் இரு வேறு நடையில் புதிய அனுபவத்தைத் தருகின்றன. ஏழு ஆண்டுகளாக எழுத்திலிருந்து விலகி இருந்த ஜி.முருகன், அந்த இடைவெளியை `கண்ணாடி’ சிறுகதைத் தொகுப்பின் மூலம் பூர்த்திசெய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

யாவரும் பதிப்பகம், விலை: 120