
துயில்நடை பயில்கிறேன் மகளே
நீ தூங்கிவிட்டாய் போலும்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தக் குளிர் இரவில் யாவரும் துயில்வார்கள்
எனக்கு வாய்த்த இரவுக்குத் திருகுமணையின் முனகல்.
நீலக் குறியிட்ட என் மார்புக்குள் எலெக்ட்ரான்கள் பயணித்த பரப்பு
புனிதமுற்றுப் பேராழி மேற்வண்ணத்தில் அடர்ந்து தீயும் மணம்
உயிர் தழைக்கும் வாய்ப்புகளை அச்சுறுத்துகின்றன மகளே
எதிர்வரும் இரவுகளில் கனாக்களைவிட அச்சங்கள் தாழ்ந்திறங்குகின்றன
ஆனாலும்
களிம்பு வாசமும் ஊன் நீரின் பிசுக்கும்
வரும் பொழுதை மாயவசியமாய் தெளிவற்று அச்சுறுத்தும் புள்ளியில்
சுணங்காத அதே பேரெழில் புன்னகையோடு
என் பிணி வாதைகளை நான் வாதையுற்றுக் கசியும் பொழுது யாவும்
சுகாசுகமின்றி சுமப்பவள் மீதான பேராழ அன்பு பிழம்பெனப் பெருகுகையில்
வேதி மருந்துகள் நாளங்களை உதறி ஒடவிட்டு
ரோமங்களற்ற தேகம் கசந்த சிலிர்ப்பை விடுவித்து
கரு வளையங்கள் படர்ந்த விழிகள் ஞாபகமுறும் காலத்தை
மீண்டும் வாழ விழைகிறேன் உன்போல் நானும்
உனக்கு வலதும் எனக்கு இடதும் இனி சிலிக்கான் மார்புகள் சுரக்கும்
இருளின் கருமைக்குள் முதிரவே இயலாத சுடரை ஏற்றுகிறேன்
நமதன்பும் அவ்வாறே ஆயிரம் கண்கள்கொண்டது மகளே.