Published:Updated:

நசுக்கப்படும் மொழிகளின் கெளரவத்தை மீட்க வேண்டும்! - கார்லஸ் டோர்னர்

நசுக்கப்படும் மொழிகளின் கெளரவத்தை மீட்க வேண்டும்! - கார்லஸ் டோர்னர்
பிரீமியம் ஸ்டோரி
நசுக்கப்படும் மொழிகளின் கெளரவத்தை மீட்க வேண்டும்! - கார்லஸ் டோர்னர்

சந்திப்பு: வெய்யில், தமிழாக்கம்: கவிதா முரளிதரன் - படங்கள்: க.பாலாஜி

நசுக்கப்படும் மொழிகளின் கெளரவத்தை மீட்க வேண்டும்! - கார்லஸ் டோர்னர்

சந்திப்பு: வெய்யில், தமிழாக்கம்: கவிதா முரளிதரன் - படங்கள்: க.பாலாஜி

Published:Updated:
நசுக்கப்படும் மொழிகளின் கெளரவத்தை மீட்க வேண்டும்! - கார்லஸ் டோர்னர்
பிரீமியம் ஸ்டோரி
நசுக்கப்படும் மொழிகளின் கெளரவத்தை மீட்க வேண்டும்! - கார்லஸ் டோர்னர்

த்தலோனிய எழுத்தாளர் கார்லஸ் டோர்னர், சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது ஒரு தங்கும் விடுதியில் வைத்துச் சந்தித்தோம். பிற்பகல் வேளை, காபி வாசனை, ஜன்னலின் இயல்பு வெளிச்சம், கண்களில் கேள்விகளின் மீதான எதிர்பார்ப்பு என வீற்றிருக்கிறார். நேர நினைவின்றி இரண்டு மணி நேரம் உரையாடினோம். வேற்றுமொழிக்காரர்களிடம் பேசும்போது இயல்பாகவே மிகுந்துவிடுகிற உடல்மொழியுடன் காற்றில் கைகள் வீசி வீசிப் பேசுகிறார் கார்லஸ்!   

நசுக்கப்படும் மொழிகளின் கெளரவத்தை மீட்க வேண்டும்! - கார்லஸ் டோர்னர்

“இந்த இந்தியப் பயணத்தை எப்படி உணர்கிறீர்கள்?”

“இந்தியா வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான விஷயம். இப்போது கூடுதல் மகிழ்ச்சியோடு வந்திருக்கிறேன். ‘பென்’ (PEN) இன்டர்நேஷனல் அமைப்பின் தென்னிந்தியப் பிரிவு தொடங்கப் பட்டிருக்கிறது. அது சார்ந்த சந்திப்புகளுக்காக வந்திருக்கிறேன். தமிழ், கேரள, கர்நாடக இலக்கிய ஆளுமைகளைச் சந்திப்பது பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட பெருமாள் முருகனின் நாவலை, நான்கு தமிழ்ப் பெண்கவிஞர்களின் கவிதைகளை (Wild Words – Four Tamil Poets) இப்போது வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். இந்தத் தொகுப்பில் உள்ள மீனவச் சமூகத்தின் வாழ்க்கை பற்றிய முதல் கவிதை என்னை மிகவும் ஈர்த்தது. இந்தப் பயணம், எல்லா விதத்திலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.”

“இந்திய இலக்கியம் என்பதைப் பற்றிய உங்களது மனப்பதிவு என்னவாக இருக்கிறது?”

“இந்திய இலக்கியத்தை இப்போதுதான் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். வாசிக்க வாசிக்க, அதை வெறும் இந்திய இலக்கியம் என்கிற ஒற்றைச் சட்டகத்துக்குள் அடைத்துவிட முடியாது என்று புரிகிறது. பல மொழிகள், பல்வேறு இலக்கியங்கள் என்று பன்முகத்தன்மைகொண்ட ஒரு தளமாக இருக்கிறது இந்திய இலக்கியம். ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் மட்டுமே அதிக அளவில் வெளியே அறிமுகமாகியிருக்கிறார்கள். பல்வேறு பிராந்திய மொழிகளில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களை மொழிபெயர்க்கும்போது, அதற்கான வெளியை உருவாக்கும்போது, அந்தப் படைப்புகள் சர்வதேச அளவில் கவனத்தைக் கோரும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. அதிகம் அறியப்படாத கத்தோலினிய மொழி இலக்கியத்தின் பின்புலத்தில் வந்ததால் சொல்கிறேன், மொழிபெயர்ப்புகள் மூலம் இந்திய இலக்கியங்களுக்கு உலக அளவில் இன்னும் அதிக அங்கீகாரம் கிடைக்கும். தமிழ், மலையாளம், தெலுங்கு என்று இங்கிருக்கும் மொழிகளில் எழுதிக்கொண்டிருப்பவர்கள், சர்வதேசத் தரத்தில் எழுதுகிறார்கள் என்பதைக் கொஞ்சமாக வாசிக்கும்போதே புரிந்துகொள்ள முடிகிறது. எனவே, இப்போது எழுதிக்கொண்டிருக்கும் இந்திய எழுத்தாளர்கள் பற்றி இன்னும் நிறைய அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.”

“மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளருக்கு, சமூகத்துக்கு எவ்வளவு தூரம் முக்கியமானவர்?”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நசுக்கப்படும் மொழிகளின் கெளரவத்தை மீட்க வேண்டும்! - கார்லஸ் டோர்னர்


“மொழி பொயர்ப்பாளர் என்பவர் இரண்டு மொழிக் குடும்பங்களுக்கிடையே முழுமையாக வாழ்வதற்கான சலுகையைப் பெற்றவர். என்னைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்பாளர் என்பவரும் ஒரு படைப்பாளரே. மொழிபெயர்ப்பின் மூலம் இருவேறு மொழிக் குடும்பங்களுக்கிடையே பண்பாட்டுப் பரிமாற்றம் நிகழ அவர் காரணமாக இருக்கிறார். இரண்டு மொழிகளுக்கு இடையில் பாலத்தை ஏற்படுத்தி, மொழியறியாத எழுத்தாளர்களை வேற்று மொழிகளில் அறிமுகப்படுத்துகிறார். எழுத்தாளர்களிடத்தில் உள்ள அதே படைப்பூக்கம் அவரிடமும் இருக்கிறது. ஒரு படைப்பை மொழிபெயர்க்க அது எழுதப்பட்ட மொழியறிவு மட்டும் போதாது. படைப்பு எழுதப்படும் சூழல், அது நிகழும் நிலத்தின் நுணுக்கமான அரசியல், பண்பாட்டுக்கூறுகள் தெரிந்திருக்க வேண்டும். அப்படித் தேடித் தெரிந்துகொண்டு மொழியாக்கம் செய்யும்போது, அவர் அந்தப் படைப்பை ஒரு புதிய மொழியில் புதிய உருவாக்கம் செய்கிறார். எனவே, எந்த ஒரு படைப்பும் விரிந்து பயணப்பட மொழிபெயர்ப்பாளர் அவசியமானவர்.

கத்தலோனிய மொழியில் பத்து புத்தகங்களும் பிரெஞ்சு மொழியில் இரண்டு புத்தகங்களும் எழுதியிருக்கிறேன். பிரெஞ்சு மொழியில் எழுதிய புத்தகங்கள் ஸ்பானிஷ் மற்றும் கத்தலோனிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. என் கவிதைகள் ஸ்பானிஷ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. சிமோனா ஸ்க்ராபெக் என்ற மொழிபெயர்ப்பாளர், எனது கவிதைகளை ஸ்லோவெனிய மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். அவரால் எனக்கு ஸ்லோவெனிய நாட்டு இலக்கியத் திருவிழாக்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது; வாசகர்களும் கிடைத்தார்கள். இத்தகைய வாய்ப்புகளை எழுத்தாளர்களுக்கு ஏற்படுத்தித் தருபவர்கள் மொழிபெயர்ப்பாளர்கள்.”

“மொழி சார்ந்த ஓர் அரசியல், அதன் மீதான ஒடுக்குமுறை இங்கு எப்போதும் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்னையாக இருந்து வருகிறது. உலகளாவிய அளவில் இந்தப் பிரச்னைகள் பற்றிய உங்கள் பார்வை?”

“முழுவதுமாக விளக்க முடியாத பல்வேறு தன்மைகள் இதில் உள்ளன. முதலாவது தன்மை இந்த உலகம் மிகத் தீவிரமாக ‘ஒற்றை மையம்’ என்ற தன்மையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. உலகத்தில் இப்போது 6,000 மொழிகள் பேசப்பட்டு வருவதாக மொழி வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த 6,000-த்திலும் பல மொழிகள், சில நூறு பேர்களால் மட்டுமே பேசப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, இந்த மொழிகள் கவலைக்குரிய நிலையிலேயே இருக்கின்றன. 21-வது நூற்றாண்டின் முடிவில், இதில் பாதி மொழிகள் அழிந்துபோய்விடும். அதுபோலவே, பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளாத ஒரு போக்கும் எங்கும் நிலவுகிறது. இந்தப் போக்கு எப்போதுமே இருந்து வருவதுதான் என்றாலும், பெரிய அளவில் கவனம்பெறுவதில்லை. காரணம், அது இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.  எழுத்தாளர்களாக, இந்த ஒற்றை மையப் போக்கைக் குறித்த விமர்சனத்தை  வெளிப்படுத்த வேண்டியது நமது கடமை.  சில மொழிகள், அந்தப் பகுதிகளில் உள்ள சிறுபான்மை மொழிகளைத் தழுவிக்கொண்டு பின்னர் பன்முகத்தன்மையைக் குலைப்பதில் முடிகின்றன. இங்கு இந்திபோல அரேபிய மொழியும், ரஷ்ய மொழியும், சீன மொழியும் பிற மொழிகளின் மீது ஆதிக்கம் செலுத்தும் போக்கு நிலவுகிறது. ஆங்கிலம் இப்போது உலகப் பொதுமொழியாக இருக்கிறது. அதில் ஏராளமான நல்ல விஷயங்கள் உண்டு என்றாலும், நாம் கவனமாக இருக்க வேண்டும்.

என் மொழி 40 ஆண்டு காலத் தடையைச் சந்தித்தது. சிங்கப்பூருக்குப் போனால், மாண்டரின் மொழியில் பேசுங்கள் என்று சொல்லும் போஸ்டர்களைப் பார்க்கலாம். சீனாவில் இருந்துகொண்டு வேற்று மொழியில் எழுதியதற்காகப் பிரச்னைகளைச் சந்திக்கும் எழுத்தாளர்களுக்கு ‘பென்’ அமைப்பு உதவிசெய்து வருகிறது. வடசீனாவில் பேசப்படும் வீகர் (Uyghur) என்றொரு மொழி, அதைக் குறிப்பிட்ட இன மக்களே பேசுகிறார்கள். அந்த மொழியில் எழுதியதற்காக எழுத்தாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சீனா பன்முகத்தன்மைக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதற்கான பெரிய உதாரணம், திபெத். திபெத்திய பள்ளிக்கூடங்களில் அந்த மொழியை நசுக்குவது திட்டமிட்டு நடக்கிறது. நாடுகடத்தப்பட்ட திபெத்திய எழுத்தாளர்களின் ‘பென்’ குழு ஒன்று, இந்தியாவில் தர்மசாலாவில் இருக்கிறது. அவர்களைச் சமீபத்தில் சந்தித்தேன். அவர்கள் சில ஆவணங்களைக் காட்டினார்கள். திபெத்தில் உள்ள பள்ளிகளில் திபெத்திய மொழி, சீன மொழி வழியாகச் சொல்லித் தரப்படுகிறது. சீன மொழிதான் முக்கியம் என்று அவர்கள் மனதில் நிலைநிறுத்துவதன் நோக்கம் அது. திபெத்திய மொழியை அழித்து, சீன மொழியை அங்கு நிறுவுவதுதான் நோக்கம்.இதுபோலவே பல இடங்களிலும் நடக்கிறது. இதில் முக்கியமான ஒன்றாக நான் நினைப்பது, நசுக்கப்படும் மொழியைப் பேசும் மக்களின் கௌரவத்தை மீட்பது. அவர்களில் பலர், நாம் முக்கியமானதொரு மொழியைப் பேசுகிறவர் இல்லைபோல என்ற எண்ணத்துக்கு வந்துவிடுகிறார்கள்; நம்பிவிடுகிறார்கள். நாம் அவர்களின் பக்கம் நின்று அவர்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டும்.”

நசுக்கப்படும் மொழிகளின் கெளரவத்தை மீட்க வேண்டும்! - கார்லஸ் டோர்னர்

“மொழி காக்கப்பட நாம் செய்ய வேண்டிய அடிப்படையான விஷயங்கள் என்ன?”

“ஒரு குழந்தை பிறக்கும்போது, அதனிடம் அந்த மொழியைக் கொண்டுசேர்க்க வேண்டும். அதுதான் முக்கியமான பணி. உலகெங்கும் சிறுபான்மை மொழி பேசும் மக்கள், இதைச் செய்துகொண்டிருக்கிறார்கள். கொலம்பியக் காடுகளில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனத்தில், அந்த மொழி பேசக்கூடிய மக்கள் வெறும் 600 பேர் மட்டுமே இருந்தார்கள். தங்களது மொழியைக் காக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தங்களது இனத்தின் கட்டுப்பாட்டை உடைத்து வேறு பல இனங்களில் திருமணம் செய்யத் தொடங்கினார்கள். திருமணத்திற்கு அவர்கள் வைத்த ஒரே நிபந்தனை, ‘எங்கள் மொழியைக் கற்க வேண்டும்’ என்பதுதான். இப்போது அந்த மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை 600-லிருந்து சில ஆயிரங்களுக்கு உயர்ந்திருக்கிறது. கிடைக்கும் அத்தனை வழிகளிலும் மொழிகளைக் காக்க நாம் முயல வேண்டும். இவை போதாது எனில், புதிய வழிகளைக் கண்டடைய வேண்டும். அது ஒரு கூட்டு முயற்சி!”

“தமிழ்ங்கிலிஷ் என்கிற ஒரு எழுத்துமுறை,  தமிழின் புதிய தலைமுறையிடம் உருவாகியிருக்கிறது. இதில், ‘பிரச்னை - காலத்தின் தேவை’ என்கிற இரு தரப்புகள் உள்ளன. உங்கள் அபிப்ராயம் என்ன?” (தெளிவாக இது பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்)


“எல்லா மொழிகளிலுமே இது நடக்கிறது. கென்யாவில் இதுபோல ஆங்கில மொழி ஆதிக்கம் நிறையவே இருக்கிறது. கென்ய மொழியான சொக்கிலியனுடன் ஆங்கிலம் பிரிக்க முடியாத அளவு கலந்து சொக்லிங்லிஷ் என்ற ஒரு மொழியே உருவாகியுள்ளது. இது சுவாரஸ்யமானது, புதிய திறப்புகளை உருவாக்குகிறது. ஆனால், ஒரு விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். அந்நிய மொழியின் எல்லை எது, அதன்  சொல்லாடல்கள் எதுவரை அனுமதிக்கப் படலாம் என்பதில் ஒரு தெளிவு வேண்டும். இப்படியான மொழிக் கலப்புதான், மொழி ஆதிக்கத்திற்கும் வழி வகுக்கிறது. ஆகவே, இதில் கவனமாக இருக்க வேண்டும். ‘இது தமிழ் இல்லை. ஆனால், சுவாரஸ்யமான வேறு ஏதோ ஒன்று’ என்கிற தெளிவு வேண்டும்.”

“வட்டாரத்தன்மைகொண்ட படைப்புகள் மொழிபெயர்க்கப்படுவதில், புரிதல்கள் குறித்த சிக்கல்கள் நிறைய உள்ளன. அதை எப்படிக் கையாள்வது?”


“ஒரு மொழியில் அதன் வட்டார வழக்குகள்தான் மொழியின் வளத்தைக் கூட்டுகின்றன. வட்டார வழக்குகளை மொழிபெயர்ப்பது ஆகப்பெரிய சவால்தான். ஆனால், அதனால்தான் மொழிபெயர்ப்பாளரை ‘படைப்பை மறு உருவாக்கம் செய்பவர்’ என்று நான் சொல்கிறேன். ஒரு தமிழ் வட்டார வழக்குக்குச் சொல்லுக்கு இணையான சொல் ஆங்கிலத்தில் இருக்காது. அதை  மொழிபெயர்ப்பாளர் புதிதாக உருவாக்க வேண்டும். அது சவால்தான். ஆனால், முன்னேற்றம் என்பது, கொஞ்சம் கடினமான வழியில்தான்

நசுக்கப்படும் மொழிகளின் கெளரவத்தை மீட்க வேண்டும்! - கார்லஸ் டோர்னர்

சாத்தியமாகும். ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து எழுத வருபவர்களின் கதைகள், கவிதைகள், அவர்களது வட்டார மொழியில் எழுதப்படும்போதுதான் அதன் தீவிரம் படைப்பில் பதிவுபெறும்.  அதற்கான மதிப்பை முக்கியத்துவத்தை  படைப்புவெளியிலும் கல்விப்புலத்திலும் உள்ளவர்கள்தான் பெற்றுத்தர வேண்டும்; உணர்த்த வேண்டும்.”

“உங்கள் தாய்மொழி, அதன் சிறப்புகள் பற்றி எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?”

“அது ஒரு பெரிய கதை. நான் கொஞ்சம் சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன். 14,15,16 நூற்றாண்டுகளில், கத்தலோன் ஒரு வளமான மொழியாக இருந்தது. பிறகு ஒரு போர் மூண்டது. அந்தப் போரில் ஃபிரான்ஸிடமும் ஸ்பெயினிடமும் நாங்கள் தோற்றோம். எங்களது நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது. இது 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்தது. பின்னர், ஸ்பெயினின் ஆக்ரமிப்பு வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்தது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு மறுமலர்ச்சி காலகட்டம் உருவானது. ஜனநாயகம் மலர்ந்தது. தெற்கு ஸ்பெயினில்  தன்னாட்சி உரிமை கிடைத்தது. மொழி, இழந்த வளத்தை மீண்டும் பெற்றது. பின்னர், 1936-ல் ஸ்பெயினில் ராணுவப் புரட்சி வெடித்தது. அதனால், கத்தலோனியாவில் உள்நாட்டுப் போர் மூண்டது. மூன்றாண்டுகள் நீடித்த இந்தப் போரில் நாங்கள் தோற்றோம். அதன் பிறகு எங்கள் மொழி, தடைசெய்யப்பட்டது. நூலகங்கள் கொளுத்தப்பட்டன. மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டார்கள். திட்டமிட்ட அடக்குமுறை எங்கள் மொழி மீதும் மக்கள் மீதும் ஏவப்பட்டது. அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்த ராணுவ அதிகாரி ஃப்ரான்சிஸ் ஃப்ராங்கோ, ஹிட்லர் மற்றும் முசோலினியோடு கூட்டணியில் இருந்தவர். ஆனால், கத்தலோனியாவின் துயரம் என்ன தெரியுமா? இரண்டாம் உலகப் போரில் ஜனநாயகச் சக்திகள் ஜெயித்தபோது, அவர்கள்  ஃப்ராங்கோவை  எதிர்த்துப் போரிடுவதைத் தொடரவில்லை.  அதனால், 1975 வரை நாங்கள் ஃப்ராங்கோவின் ஆளுகையின்கீழ் இருந்தோம். மொழியைப் பொறுத்தவரையில் அது இருண்டகாலம். புத்தகங்கள் திருட்டுத்தனமாகப் பதிப்பிக்கப்பட்ட காலம். மொழி தடைசெய்யப்பட்ட காலம். ஃப்ராங்கோ 1975-ல் இறந்துபோனார். அதன் பிறகு நிலைமை மாறியது. ஸ்பெயின் ஜனநாயக நாடானது. கத்தலோனிய தன்னாட்சி உரிமை மீட்கப்பட்டது. கத்தலோன் மொழி பள்ளிகளில் சொல்லிக்கொடுக்கப்பட்டது. இப்போது மீண்டும் நிலைமை மாறியிருக்கிறது. தனது கலாசார அடையாளத்தை, ஜனநாயகத்தை மீட்க, தழைக்கச் செய்ய கத்தலோனியா போராடிக் கொண்டிருக்கிறது. ஸ்பெயினில் இன்று ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது.

ஆனால், இந்தத் துயர்தோய்ந்த கத்தலோனிய வரலாற்றில் எங்கள் நம்பிக்கையாக எஞ்சியிருப்பது, எங்கள் இலக்கியம் மட்டுமே. அடக்குமுறைக் காலங்களில் நாடு கடத்தப்பட்ட கத்தலோனிய மக்களிடத்தில் இலக்கியம் தழைத்தது. அர்ஜென்டைனாவில், நியூயார்க்கில் இன்னும் பற்பல இடங்களில் கத்தலோனியப் புத்தகங்கள் எழுதப்பட்டன; பதிப்பிக்கப்பட்டன. அடக்குமுறைக் காலங்களில் இலக்கியத்தில் ஒரு புரட்சி நடந்தது. அது எங்கள் மொழியை ஏந்திப் பிடித்தது.”

 “கவிஞர் - நாவலாசிரியர், எந்த அடையாளம் உங்களுக்கு நெருக்கமானது?”

“ஒரு நாவலாசிரியராக வெற்றி பெற்றிருக்கிறேனா என்று தெரியவில்லை. காரணம், விமர்சகர்கள் எனது நாவல்களை  ‘ஒரு கவிஞரின் நாவல்கள்’ என்றுதான் சொல்கிறார்கள். எனது படைப்புகளில் உருவகங்களை அதிகம் பயன்படுத்துவது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். நாவல்களைத் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினேன். ஆனால், நான் எப்போதும் ஒரு கவிஞனாகவே இருப்பேன் என்று நம்புகிறேன்.”

“உங்கள் கவிதைகளைத் தீர்மானிக்கும் விஷயம் எதுவென்று நினைக்கிறீர்கள்?”

“கிறிஸ்துமஸ்-க்குக் கவிதை எழுதுவது என்பது, நான் வாழும் பகுதில் ஒரு மரபாக இருக்கிறது. பொதுவாக அப்படி எழுதப்படும் கவிதைகளில் ஒரு கொண்டாட்ட மனநிலை இருக்கும். ஆனால், கடந்த வருடம் எனது கிறிஸ்துமஸ் கவிதை, ‘சிரியப் போர்’ பற்றியதாக இருந்தது. எங்கள் கத்தலோனியா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் நாடு கடத்தப்பட்டு, இப்போது பிரஸ்ஸல்ஸ் நகரில் வாழ்கிறார். இந்தமுறை எனது கவிதை, நாடு கடத்தப்படுவதன் துயர் பற்றிப் பேசுகிறது.” (சிரிக்கிறார்)

நசுக்கப்படும் மொழிகளின் கெளரவத்தை மீட்க வேண்டும்! - கார்லஸ் டோர்னர்

“கவிதையில் வடிவம் முக்கியமானதென்று கருதுகிறீர்களா?”

“ஆமாம். வடிவத்தின் ஆற்றலில் எனக்கு அசாத்தியமான நம்பிக்கை இருக்கிறது. கவிதையைப் பொறுத்தவரையில் ஒரு சில வரிகளில் எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட வேண்டும். எனது கவிதைகளில் ஒலி இருக்கிறது, மரபான சில கூறுகள் இருக்கின்றன. ஆனால், வடிவம் மிக முக்கியம். அதுதான் பொருளை உருவாக்குகிறது. ஒரு கவிதை உருவாவது என்பது, நெஞ்சில் நெருப்பைச் சுமந்து திரிவதைப்போல. சில நேரங்களில் அது ஒரு விளையாட்டுபோல. எழுதுவதும் திருத்துவதும், எழுதியெழுதி மாற்றுவதும் எனக் கவிதையோடு, வடிவங்களோடு விளையாடுகிறேன். அது எனக்குப் பிடித்திருக்கிறது.”

“உங்களது மொழியில் எழுதிக்கொண்டிருக்கிற படைப்பாளிகளில், இந்திய வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டும் என்று நீங்கள் பரிந்துரைப்பவர்?”


“மெர்செ ரொடொரெதா (Merce Rodoreda) கத்தலோனியப் பெண் எழுத்தாளர். உள்நாட்டுப் போருக்கு முன்பு மூன்று நாவல்களை வெளியிட்டிருந்தார். போர் சமயத்தில் நாட்டைவிட்டு வெளியேறிய பின்னர், கடும் நெருக்கடிகளைச் சந்தித்தார். அந்தச் சமயத்தில்தான் அவர் ஓவியம் வரையவும் கவிதைகள் எழுதவும் தொடங்கினார். அதுவரை கவிதைகள் எழுதியவரில்லை அவர். அதன் பிறகு, அவர் எழுதிய நாவல்களில் பெண்கள் பிரதானமான கதாபாத்திரங்களாக இருந்தார்கள். போரில், பாலியல் வல்லுறவுகளில் சிக்கிய பெண்கள் அவரது படைப்புகளில் இடம்பெற்றார்கள். அவர்களுக்காக அவர் ஒரு பிரத்யேகமான மொழியை உருவாக்கினார். எதிர்ப்பு உணர்வின் சாத்தியங்களை அவர் விரிவுபடுத்தினார்.”

“ ‘பென்’ அமைப்பின் வழியான உங்களின் பணி எப்படியானது?”

நசுக்கப்படும் மொழிகளின் கெளரவத்தை மீட்க வேண்டும்! - கார்லஸ் டோர்னர்“பென் சர்வதேச அமைப்பின் இயக்குநராக எனது பணி, மெஷினை ஓடவைப்பதுதான். 145 கிளைகள் இருக்கின்றன. எல்லாக் கிளைகளுக்கும் தன்னாட்சி சுதந்திரம் உண்டு. சர்வதேச அளவில் மொழியுரிமைப் பாதுகாப்புக்காக, கருத்துச் சுதந்திரத்துக்காக, அமைதிக்காக இப்படி ஒரு வலிமையான சமூகம் உருவாகியிருக்கிறது என்பது மிகவும் ஆசுவாசமான விஷயம். இந்த ஒருமைப்பாடு எப்படி வேலை செய்கிறது என்று நேரடியாகப் பார்க்கும், அறியும், அதில் பங்கெடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.

2014-ல் நான் எனது பணியைத் தொடங்கிய அதே நேரத்தில்தான், உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பும் தொடங்கியது. அப்போது, ரஷ்ய ‘பென்’ அமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர்கள் உக்ரைன் எழுத்தாளர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்கள். “நாங்கள் எழுத்தாளர்கள், உங்களோடு போர் புரியவில்லை. எதேச்சதிகார அரசை உங்களோடு சேர்ந்து எதிர்ப்பதே எங்களது வேலை” என்றார்கள். இப்படி, பிரச்னையிலுள்ள நாடுகளின் எழுத்தாளர்களுக்கிடையில் உரையாடலை நகர்த்துவதில் பென் அமைப்பு, முக்கியமான பணிசெய்கிறது. எழுத்தாளர்கள் முன்னெடுக்கும் எந்த முயற்சிகள் குறித்தும் நாங்கள் திறந்த மனதுடனேயே இருக்கிறோம். இப்போது, பென் அமைப்பின் ஒரு பகுதியாகச் சிறையில் இருக்கும் எழுத்தாளர்களுக்கான குழு ஒன்று இயங்குகிறது. சர்வதேச அளவில் ஒடுக்குமுறைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் 900 எழுத்தாளர்களின் வழக்குகளை இப்போது இந்தக் குழு முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது.

 1970-களில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர்தர் மில்லர், பென் அமைப்பின் சர்வதேசத் தலைவராகவும் ஹெரால்ட் பிண்டர், இங்கிலாந்து பென் அமைப்பின் தலைவராகவும் இருந்தபோது, இந்தக் குழு தொடங்கப்பட்டது. அப்போது துருக்கியில் கடுமையான ஒடுக்குமுறை நிலவியது. இவர்கள் இருவரும் துருக்கிக்குச் சென்றபோது, இவர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக உதவி செய்தவரின் பெயர், ஓரான் பாமுக்!

பல எழுத்தாளர்களை, பத்திரிகையா ளர்களை இந்தக் குழு சந்தித்தது. அவர்கள் தொடங்கிய பணி இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் கேமரூனைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், அரசை விமர்சித்து எழுதிய ஒரு கட்டுரைக்காகச் சிறையில் அடைக்கப் பட்டபோது, பென் அமைப்பு அதில் தலையிட்டு நியாயம் கோரியது. தற்போது அவர் விடுதலையாகியிருக்கிறார். பென் அமைப்பு குறித்தும் நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றியும் ஓரளவு தெளிவுபடுத்திவிட்டேன் என்று நினைக்கிறேன்.” (சிரிக்கிறார்)

“சிறையில் அடைக்கப்பட்ட எழுத்தாளர்கள் பற்றியும் அவர்களுக்கான உங்களது செயல்பாடுகள் குறித்தும் விரிவாகச் சொல்லமுடியுமா?”

“ஓர் எழுத்தாளர் சிறையில் அடைக்கப்படும்போது, பென் சந்திப்புகளில் காலி இருக்கைகளை நாங்கள் ஒரு குறியீடாகப் பயன்படுத்துகிறோம். அவருக்கான இருக்கை எங்கள் மேடைகளில் காலியாக இருக்கும். அதை ஒரு சர்வதேசப் பிரசாரமாக முன்னெடுக்கிறோம். எல்லாக் கிளைகளுக்கும் தகவல் அனுப்பி அவர்களை அதில் பங்கெடுக்கச் சொல்கிறோம். துருக்கியில் ஓர் எழுத்தாளர் கைது செய்யப்பட்டார் என்றால், தில்லியிலுள்ள துருக்கித் தூதரகத்துக்கு இந்திய பென் கிளையை எதிர்ப்பு தெரிவித்துக் கடிதம் எழுதச் சொல்வோம். அதேபோல, அந்த எழுத்தாளருக்கும் ஆதரவு தெரிவித்துக் கடிதம் எழுதக் கேட்போம். மேலும், அது  சார்ந்த இயக்கங்களை உருவாக்குவோம்.

1999-ல் அப்படியோர் இயக்கத்தில் நான் இருந்தேன். எட்டு வருடங்களை ஏற்கெனவே சிறையில் கழித்துவிட்டு, இன்னும் 20 வருடச் சிறையை எதிர்நோக்கியிருந்த ஓர் எழுத்தாளருக்கான இயக்கம் அது. நான்கு கிளைகளிலிருந்து அதில் பிரதிநிதிகள் இருந்தார்கள். நீதிக்கான அமைச்சரையும் ஆட்சி செய்துகொண்டிருந்த  சர்வாதிகாரியையும் சந்தித்தோம். நிறைய நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தோம். அப்போது அந்த இயக்கம் தோல்வியடைவதுபோல இருந்தது. ஆனால், ஆட்சி வீழ்ந்து சர்வாதிகாரி தப்பியோடிய பிறகு, விடுதலைசெய்யப்பட்டவர்களில் முதல் நபராக இந்த எழுத்தாளர் இருந்தார். காரணம், எங்களது பிரசாரம்மூலம் அவர் அங்கு நிலவிய எதேச்சதிகாரத்துக்கு எதிரான ஒரு குறியீடாக மாறியிருந்தார். பெரு நாட்டில் இது நடந்தது.

சமீபத்தில் கஸகிஸ்தானில் ஒரு பத்திரிகையாளரைச் சந்தித்தேன். அங்கு சுரங்கப் பணியாளர்களின் போராட்டத்தை அரசு கடுமையாக ஒடுக்கியது, 12 பேர் இறந்துபோனார்கள். அதைப் பற்றி எழுதிய விளாதிமிர் கொஸ்லோவ் என்கிற எழுத்தாளர் கைது செய்யப்பட்டார். அவரை நாங்கள் சிறையில் சந்தித்தோம். அதன் பிறகு நிலைமை மாறியது. சர்வதேசக் கவனம் அவர்மீது இருக்கிறது என்பதைச் சிறைத்துறை புரிந்துகொண்டது. ஒன்றரை வருடங்கள் கழித்து, அவருக்கு பரோல் கிடைத்திருக்கிறது.”

“அப்படியானால், உங்களது எல்லா முயற்சிகளுமே வெற்றி பெற்றிருக்கின்றன அல்லவா?”

“அப்படிச் சொல்ல முடியாது. எல்லா முயற்சிகளும் வெற்றியில் முடிவதில்லை. கடந்த வருடம் துருக்கியில் 150 ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப் பட்டார்கள். சிறைக்கு எதிரில் நின்று போராடினோம். பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. நடக்கவில்லை என்பதற்காக எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்காமல் இருக்க முடியுமா? அதேசமயம், அந்த 150 பேருக்கும் தங்களுக்காகக் குரல் கொடுக்கச் சர்வதேச எழுத்தாளர்கள் குழு ஒன்று வந்திருக்கிறது என்று தெரியும். அது எவ்வளவு நம்பிக்கையை அவர்களுக்குள் உருவாக்கும். அதுதானே மிக முக்கியம்!”

நசுக்கப்படும் மொழிகளின் கெளரவத்தை மீட்க வேண்டும்! - கார்லஸ் டோர்னர்

“இலக்கியத்தில் அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயம் என எதைக் கருதுகிறீர்கள்?”

“மரபு மற்றும் நவீனத்துக்கு இடையிலான விவாதங்களைச் சொல்லலாம். இது எல்லா இடங்களிலும் எப்போதும் நடந்து வந்திருக்கின்றன/நடந்துகொண்டிருக்கின்றன. நாமும் அந்த விவாதங்களைத் தொடர்ந்துகொண்டிருக்கிறோம். இன்றைய சூழலுக்காக, இன்றைய சவால்களுக்காக, இன்றைய உண்மைகளுக்காக, இன்றைய பிரச்னைகளுக்காக எழுதிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அப்படி எழுதும்போது கடந்த காலங்களின் விவாதங்களுடனும் சேர்த்துப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். நான் என்னுடைய படைப்புகளில் மரபின் கூறுகள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இன்றைய குறியீடுகளுக்குள்ளும் விவாதங்களுக்குள்ளும் அச்சங்களுக்குள்ளும் நம்பிக்கைகளுக் குள்ளும் மரபின் கூறுகளைக் கொண்டுவர பிரயத்தனப்படுகிறேன்.”

“உங்கள் கவிதைகளில் மீண்டும் மீண்டும் இடம்பெறும் விஷயம் ஏதேனும் உண்டா?”

நசுக்கப்படும் மொழிகளின் கெளரவத்தை மீட்க வேண்டும்! - கார்லஸ் டோர்னர்


“பென் அமைப்பில் 1990-களில் நான் பணிபுரியத் தொடங்கிய சமயம், போஸ்னியாவில் இஸ்லாமியர்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டார்கள். அப்போது எனக்குக் குழந்தைகள் பிறந்திருந்தன. இருவேறு மனநிலைகள். அந்தக் காலகட்டத்தில் போர் பற்றியும் குழந்தைகள் பற்றியும், தாலாட்டுப் பாடல்களையும் அதிகம் எழுதினேன். ஒரு பக்கம் தாலாட்டுப் பாடல்கள், இன்னொரு பக்கம் போரின் துயரங்கள்... திரும்பவே வராத ஆண்களுக்காகக் காத்திருக்கும் மனைவிகள், சகோதரிகள், குழந்தைகளின் வாதைகள்... அந்தக் காலகட்டத்தில் போர் பற்றியும் சிறுவர்கள் பற்றியும் மீண்டும் மீண்டும் எழுதும்படியான மனநிலையைக் காலம் தந்திருந்தது. மற்றபடி, நிரந்தரமாக எனது படைப்பில் மீண்டும் மீண்டும் வரக்கூடிய  விஷயங்கள் என்று எவையும் இல்லை.”

“உங்களது இலக்கியப் பயணத்தில் எழுதாத, எழுதவே முடியாத விஷயங்கள் என ஏதேனும் உள்ளதா?”

“மௌனம் ஒரு பேருணர்வு... பெரும் மொழி, அதைத்தான் என்னால் எழுதவே முடியவில்லை. சில நேரங்களில் நமது வாழ்வின் சில பகுதிகளை மௌனமாகத்தான் கடந்துசென்றாக வேண்டும்; அப்படித்தான் செல்கிறோம். வேறொரு சமயத்தில் அந்தச் சூழலுக்கான வார்த்தைகள் தோன்றலாம். ஆனால், மௌனத்தை நாம் அப்படியே அந்தந்தத் தருணங்களில் ஏந்திக் கடக்க வேண்டும். (சில நொடிகள் மௌனமாக இருக்கிறார்) இதுதான் பிரச்னை...மௌனத்தை விளக்கவோ, எழுதவோ முடியவில்லை.”

“நீங்கள் சினிமா விமர்சனங்களும் எழுதியிருக்கிறீர்கள் அல்லவா?”

“ஆமாம். எவ்வளவு காலமாகிவிட்டது... உங்களது நினைவூட்டலால் நான் இந்த நிமிடம் எனது கடந்த காலத்தை ஒரு பொருளைப் பார்ப்பதுபோலப் பார்க்கிறேன். அது வேறொரு வாழ்க்கை. நான்கு வருடங்கள் அதை ஒரு தொழிலாகச் செய்தேன். ஐரோப்பிய சினிமாவும் ஃப்ரெஞ்ச் சினிமாவும் எனக்கு மிகவும் பிடிக்கும். வுடி ஆலனின் ரசிகன் நான். முதல் மகன் பிறந்த பிறகு, அவனைக் கவனித்துக்கொள்வதில் வாரத்துக்கு நான்கு படங்கள் பார்ப்பது என்பது சாத்தியமற்றுப் போனது.”

“இலக்கியம் ஏன் முக்கியமானது என்பீர்கள்?”

இலக்கியம் ஒரு பொருளை உருவாக்குகிறது; சுதந்திரவெளியை உருவாக்குகிறது. அதுவரை சொல்லப்படாத ஒரு விஷயத்தை அந்தத் தருணத்தில் புதிதாகச் சொல்கிறது. இதுவரை சொல்லப்படாத விஷயம் என்று எதாவது ஒன்று இருந்தால், அதைச் சொல்ல முதலில் ஓர் எழுத்தாளரே முயற்சி செய்ய வேண்டும். அது அவருடைய கடமையும்கூட. மொழியின் ஆதாரமாக இலக்கியமே இருக்கிறது. ஒடுக்கப்பட்ட இனங்களுக்கென்று ஒரு குரல் தேவை. அது கவிஞரின், பாடகரின், நாவலாசிரியரின், ஊடகவியலாளரின் குரலாக முதலில் ஒலிக்கும். பிறகு அது சினிமாவாக, நாடகமாக வெளிப்படலாம். ஆனால், மனித இனங்களின் ஆதாரமாக மொழியும் இலக்கியமுமே இருக்கின்றன.”

“ ‘விகடன் தடம்’ வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”

“இப்போதுதான் தமிழ் இலக்கியம் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். அது மிகவும் உயிர்ப்பான சுவாரஸ்யமான தளமாக இருக்கிறது. எல்லா மொழிகளிலும் எல்லா இலக்கியங்களிலும் மொழிபெயர்ப்புகளை, அறிவுப்பகிர்வைச் சாத்தியப்படுத்தும் ஒரு வெளியை நாம் சேர்ந்து உருவாக்குவோம். அது நிச்சயம் சாத்தியமானதுதான். அது நடக்கும் என்றே நம்புகிறேன், நம்புவோம்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism