Published:Updated:

அடுத்து என்ன? - வா.மு.கோமு

அடுத்து  என்ன? - வா.மு.கோமு
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - வா.மு.கோமு

குடும்ப நாவல்படங்கள் : தி.விஜய்

அடுத்து என்ன? - வா.மு.கோமு

குடும்ப நாவல்படங்கள் : தி.விஜய்

Published:Updated:
அடுத்து  என்ன? - வா.மு.கோமு
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - வா.மு.கோமு

வா.மு.கோமு என்ற பெயரில் எழுதிவரும் வா.மு.கோமகன், ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலைக்கும் மேற்கே 12 கிலோ மீட்டரிலிருக்கும் வாய்ப்பாடி என்கிற கிராமத்தைச் சேர்ந்தவர். திருப்பூரிலிருந்து ‘நடுகல்’ என்கிற சிற்றிதழை நடத்தியவர், 90-களின் தொடக்கத்தில் எழுதத் தொடங்கியவர். மனதில் நினைத்தவற்றை எழுத்தில் சொல்ல, சிறிதும் தயக்கம் காட்டாத எழுத்தாளர் என்ற பெயரைக் குறுகிய காலத்தில் பெற்றவர். ‘கள்ளி,’ ‘சாந்தாமணியும் இன்னபிற காதல் காதல் கதைகளும்,’ ‘எட்றா வண்டியெ,’ ‘மங்கலத்து தேவதைகள்,’ ‘57 சினேகிதிகள் சினேகித்த புதினம்,’ ‘மரப்பல்லி,’ ‘நாயுருவி,’ ‘சயனம்,’ ‘ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி,’ ‘தானாவதி,’ ‘டுர்டுரா,’ ‘ராட்சசி’ ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். கொங்கு வாழ்வியல் சூழலை எழுதும் படைப்பாளி.

நாவல் என்கிற முயற்சியினுள் வருடம் ஒருமுறை இறங்குவது இயல்பான பழக்கமாகிவிட்டது. தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்க ஆசைப்பட்டாலும், சில பல திட்டங்கள் தீட்டினாலும், அதை அரங்கேற்றுவதில் எனக்கேயான சோம்பேறித்தனம் தலைதூக்கிவிடுகிறது. ‘நீண்ட காலம் ஒரு நாவலோடு இருந்து பார்!’ என்று பலர் என்னிடம் சொல்லிவிட்டார்கள். அதைச் செயல்படுத்த முடிவேனா என்கிறது. நீண்டகாலம் ஒரு நாவலோடு எப்படி வாழ்வது... அது ஒரு வேடிக்கையான செயலாகவே இருக்கும் எனத் தோன்றுகிறது. 20 நாள்கள் ஒரு நாவலோடு இருப்பதற்கே என்னால் முடிவதில்லை. ஏதேனும் முட்டுச்சந்து கிடைத்தால், முடித்துவிட மட்டுமே மனம் பறவாய்ப் பறக்கிறது.

அடுத்து  என்ன? - வா.மு.கோமு

வாழ்க்கை என்றால் பாலுறவும் சேர்ந்ததுதான். அதைத் தவிர்த்துவிட்டுச் சிலவற்றை நான் எழுதினாலும், அங்கே இன்னும் சொல்ல வேண்டிய விசயங்கள் பல உள்ளன என்பதை உணர்ந்துதான் இருக்கிறேன். இதை மகிழ்ந்து நான் ஏற்றுக்கொண்டு வருடங்கள் பல ஆகிவிட்டன. ‘பெண்களைப் பற்றிப் பெண்களுக்கே ஒன்றும் தெரியாது கோமு. ஆனா, நீங்க புட்டுப்புட்டு வைக்கறீங்க!’ என்றொரு நண்பர் நேர்ப்பேச்சில் மூன்று வருடத்துக்கு முன்பாகக் கூறினார். அதுகூட உண்மைதானோ என்கிற அளவுக்கு ‘ராட்சசி’ நாவலில் பயணப்படும்போது தெரிந்தது.

அவர் சொன்னதில் குறைந்தபட்சமாக உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஆண்களுக்கான புத்தகத்தை நான் இதுவரை எழுதவே இல்லை என்கிற உண்மை இப்போதுதான் தெரிகிறது. என் நாவல்கள் அனைத்தும் பெண்களுக்கானவை. ஆண்களின் மனநிலையை ஆணாக இருந்தும் நான் இன்னும் சொல்லவே ஆரம்பிக்கவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அடுத்து  என்ன? - வா.மு.கோமு


பெண்களை ஆண் ஒருவன் நேசிக்கிறான் என்றால், அந்தப் பெண்களின் பிரியத்திற்குரிய முட்டாளாக ஆண் மாறிவிடுவதை யாராலும் தடுக்க முடியாது. முதலாக நேசித்தல் என்பதே வேடிக்கை நிறைந்த கற்பனைதான். நேசித்தல், ரசித்தல் என்கிற விசயங்கள், சற்றுத் தள்ளிப் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருக்கும் பெண்களை டீக்கடையில் நின்றபடி ஓர் ஆண் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் வரை மட்டுமே சிறப்பாக இருக்கும். எவ்வளவு தூரம் பேருந்து நிலையத்தை ஆண் நெருங்குகிறானோ, அவ்வளவு தூரம் அவன் முட்டாளாக்கப்படுவான் அல்லது ஆகியே தீர வேண்டும். அந்தப் பெண்களிடம் சிக்கிக்கொள்வதற்கு எல்லா வழிகளிலும் அவன் முட்டாளாகவே நடந்துகொண்டி ருப்பான் அதனால்தான், அவனால் எளிதில் அதிலிருந்து வெளியில் வர முடிவதில்லை. காயங்களும் மனக்குறைகளும் ஆண்களுக்குத் தொடர்கின்றன.

 இங்கே எல்லாவிதமான தேவைகளும் நமக்கு இருக்கின்றன. தேவைகள் இல்லாமல் நம்மால் வாழ முடியவில்லை. ஏதோ ஒன்றை வெளியேற்றுவதற்காக, மனதை மயக்கத்தில் வைத்திருக்கக்கூடிய ஒன்றாக மட்டுமே பாலுறவு நமது வாழ்வியலில் இருந்துவருகிறது. ஒரு கொட்டாவி போடுகையில் வெளியேற்றப்படும் கெட்டாவி போன்றதாகிவிட்டது அது. தேவை தீர்ந்ததும் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்துவிட்டதைப் போன்று ஆகிறது. அவ்வளவுதானா?

இதில் நிறைவடைதல் எங்கிருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. இதில் மகிழ்ந்து கொண்டாடுதலே இல்லை. சொந்த மனைவியிடமே ஏதோ திருட்டுக்குப் போவதுபோலப் போகிறார்கள். வீட்டில் புகைப்படத்திலிருக்கும் கடவுளர்கள் பார்த்து வெட்கப்படுவார்கள், கோபித்துக்கொள்வார்கள் எனப் புகைப்படங்கள் இருக்கும் அறைக்குள் போக மாட்டேன் என்கிறார்கள். திருடும்போது விளக்கு அவசியப்படுவதில்லை. இப்படியாகப் போர்வைக்குள் ஒரு பாவச்செயலை அரங்கேற்றுவதுபோல அவசரமாக முடித்துக்கொள்கிறார்கள். பாலுறவில் வறட்சி இப்படித்தான் ஆரம்பமாகிறது. எந்தச் சுதந்திரமும் இங்கில்லை. பாலுறவில் ஈடுபடுதல் என்பது, அவசர உணவைச் சாலையோரக் கடையில் பசிக்காக வயிற்றில் அள்ளிப்போட்டுச் செல்வதைப் போன்றது அல்ல!

அடுத்து  என்ன? - வா.மு.கோமு

எல்லாக் காலத்திலும் ஆண் இயந்திரத்தனமாகவே உடலுறவில் ஈடுபட்டு வந்திருக்கிறான். காதலில் விளையாடுதல், தூண்டுதல் போன்ற எதுவும் விலங்கினங்களிடையே இல்லை. சீசனுக்கு சீசன் மட்டும் இனவிருத்திக்காக அவை துணை தேடுகின்றன. காரியம் முடிந்ததும் கிளம்பிவிடுகின்றன. ஒரு போன் செய்து ‘ஒத்துழைத்தமைக்கு நன்றி’ என்று சொல்வதில்லை. மிருகங்கள் இன்பத்தை அனுபவிப்ப தில்லை. அன்பான உணர்வுகள் அவற்றிடம் தொடர்வதில்லை. மனைவியானவளை ஐஸ்வைக்கத் தேவையில்லை என்றே ஆண் நினைக்கிறான். காதலியிடம் பாலுறவை நிகழ்த்த அவன் கடினமாகச் செலவீனங்களையும் வேண்டுதல் களையும் நிகழ்த்த வேண்டி இருக்கிறது. மனைவியானவளிடம் எந்தக் கெஞ்சுதல்களையும் நிகழ்த்த வேண்டிய தேவைகள் இல்லைஆணுக்கு. நேரடியாகப் பாலுறவுதான். அவளும் கணவன்முன் நெளிந்து வெட்கப்பட்டு நடிக்க வேண்டியதில்லை. வாழ்க்கை இப்படித்தான் அர்த்தமிழந்து போகிறது. இந்த விசயத்தைப் பற்றி எனது முந்தைய நாவலான ‘ராட்சசி’ பேசியது.

ன்றையே திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்று சிலர் சொல்கிறார்கள். திரும்பத் திரும்பச் சொல்வதை நான் விட்டொழிக்கப் போவதில்லை. அவற்றில் அழுத்தத்தைக் கூட்டிக்கொண்டிருக்கிறேன். வேறு வேறு கதைக்களங்களை எடுத்துக் கொண்டிருக்கிறேன். என்னைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் இந்த மாற்றங்களை உணர்வார்கள். அதற்குத்தான் எனக்கு முதலில் தெரிந்த விசயங்களைத் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறேன். அதாவது, என் ஏரியா எதுவோ, அதில் மட்டுமே எல்லைக்கோடுகள் போட்டு, அதனுள் மட்டுமே ஆட்டம் நடக்கிறது.

‘குடும்ப நாவல்’ தமிழ் வாசகப் பரப்பில் முக்கிய நாவலாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டெல்லாம் நான் எழுதவில்லை. விஷயத்தின் தீவிரத்தை நான் அதி அற்புதமாகவும் சொல்ல முயற்சிக்கவில்லை. எப்படி நிறுத்தி வார்த்தைகளை அலங்கரித்துச் சொன்னாலும் கதை என்பது ஒன்றுதான். இந்த நாவலை மிக மிக அழகான வடிவில் சொல்லவும் எனக்குத் தெரியும். தாமதமாகும் அதற்கு. நாம் வேகமான உலகில் இருக்கிறோம். என் இந்த வேகமே குறைவுதான். ஆனால், ‘எங்க கொஞ்சம் நாளா வா.மு.வைக் காணலியே...’ என்று யாரும் பேசிவிடக் கூடாதில்லையா!

தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பது எனக்குச் சந்தோஷமாக இருக்கிறது. புதிய வடிவங்களில் முயற்சியெடுப்பதும் எனக்குச் சந்தோஷமளிக்கும் விசயம்தான். என்னை ஊக்குவிக்கும் நண்பர்களை நான் ஏராளம் பெற்றிருக்கிறேன். அலைபேசியில் அவர்கள் பேசும் முதல் வார்த்தையே ‘என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க?.’ எழுதாமல் சும்மா லேப்டாப்பில் பொம்மை பார்த்துட்டு இருக்கேனுங்க! என்று அவர்களிடம் சொல்ல முடியாது.

நண்பர்கள். “நாவல் எதாச்சும் எழுதத் தொடங்கிட்டீங்களா?” என்று கேட்கையில், “ஆம்” என்கிறேன். “தலைப்பைச் சொல்லுங்க...” என்று அவர்கள் சாதாரணமாகவே கேட்பார்கள். “குடும்ப நாவல்” என்று சொல்லுகையில் ஏனோ சிரிப்பில் மிதக்கிறார்கள். ஏற்கெனவே வெளிவந்த என் நாவல்களின் தர நிர்ணயத்தைக் கண்டவர்கள்தான் அவர்கள். அவர்களுக்கே ஆச்சரியமான தலைப்பாக இது இருந்துவிட்டது. எனக்கேகூட ஆச்சரியம்தான். தலைப்பை முன்பே வைத்துவிட்டு நாவலை நகர்த்தத் தொடங்குகிறவனில்லை நான். ஆனால், இந்தத் தலைப்பை முன்பாகவே முடிவு செய்துவிட்டேன். ‘குடும்ப நாவல்’ என்று தலைப்பை வைத்துவிட்டுக் குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களைச் சொல்லிச் செல்வதுதான் முறையான விசயம். அதிலிருந்து பின்வாங்குவதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன். இந்த நாவல், என் மற்றைய எந்த நாவலையும் ஞாபகத்திற்குக் கொண்டு வராது. எழுதத் தொடங்குகையில் ஒரு நாவல் பேசப்படுமா, படாதா என்ற கணக்கையெல்லாம் போட்டு, கூட்டிக் கழித்துப் பார்த்துக்கொண்டு நான் எழுதுவதில்லை. அந்தந்தச் சமயத்தில் என்ன விஷயம் உதிக்கிறதோ, அதை எழுத்துக்குக் கொண்டுவந்து விடுகிறேன்.

‘ராட்சசி’ நாவல், கிராமியப் பின்னணியையும் குறுநகரப் பின்னணியையும்கொண்டு எழுதப்பட்டது. ‘குடும்ப நாவல்’ முற்றிலுமாகக் குறுநகரம் சார்ந்த நாவல். நிச்சயமாகக் குடும்பத்தில் நிகழும் கணவன் மனைவிக்கு இடையிலான பிரச்னைகளை முழுதாக அலசி எடுத்த நாவலாக இது முடிந்திருக்கிறது. வழமையான ‘சுபம்’ என்கிற முடிவிலும்கூட எந்தப் புதிய மாற்றத்தையும் நான் கொண்டுவரவில்லை. வழக்கத்தைவிட இந்த நாவல் ஏழு நாள்களில் வேகமாக எழுதி முடிக்கப்பட்டதற்கு நாவலின் களம்தான் காரணம். புதிதாக ஒரு விஷயம் சொல்லப்போகிறேன் என்றெல்லாம் பூச்சாண்டி காட்ட எனக்கு விருப்பமில்லை. என்னிடமிருந்து இப்படி ஒரு நாவல் வந்திருப்பது வாசகர்களை ஆச்சரியப்படுத்தலாம். நாவல் வெளியாகி, அதைப் பற்றிய  பேச்சு நிகழ்கையில் எது எப்படியெனச் சுத்தமாகத் தெரிந்துவிடும். இந்தப் புதிய நாவல் ‘உயிர்மை’ பதிப்பகம் வாயிலாக வருவதுதான் முற்றிலும் சரியெனப்படுகிறது எனக்கு. நாவல்களுக்கு இடையே, வேறு சில முயற்சிகளையும்  விரும்பிச் செய்துபார்க்கிறேன். சென்ற வருடம் குழந்தைகளுக்கான ஐந்து புத்தகங்கள் கொண்டுவந்தேன். இந்த வருடமும் ஐந்து புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism