தொடர்கள்
Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரி - 76

வீரயுக நாயகன் வேள்பாரி - 76
பிரீமியம் ஸ்டோரி
News
வீரயுக நாயகன் வேள்பாரி - 76

சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,

வீரயுக நாயகன் வேள்பாரி - 76

சோழப்படை வட்டாற்றில் திரும்பிய கணத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி பாரியின் மனதிலிருந்து இன்னும் உதிரவில்லை. இதுவரை உருவாகாத புதிய கேள்விகள் மேலெழும்பியபடியே இருந்தன. முடிவெடுக்க முடியாமல், குழப்பம் திணறடித்தது. சோழன், எவ்வியூரை நோக்கி வரும் பாதை தெரியாமல்தான் எழுவனாற்றிலிருந்து வட்டாற்றில் திரும்பிப் பயணிக்கிறான் என பிட்டன் உறுதியாகச் சொல்லுகிறான். ஆனால் பாரி அக்கூற்றினை ஏற்கவில்லை. மூலப்படை வருவதற்கு முன்னர் தூசிப்படையினர் தெளிவான அறிதலோடு அப்பக்கம் திரும்பிச்சென்றதை வீரர்கள் உறுதிப்படுத்தினர்.

வட்டாற்றின் வழித்தடத்தை அறிந்துபோகிற ஒருவனை எளிதாக நினைத்துவிட முடியாது. எழுவனாற்றிலிருந்து வட்டாற்றின் கரையில் எட்டுநாள் பயணத்தொலைவில் சிறுகானம் இருக்கிறது. அதன் மறுபுறத்தில்தான் உப்பறை அமைந்துள்ளது. பாழி நகருக்கான அடையாளம் உப்பறையிலிருந்து தொடங்குகிறது. ஆனால் இவையெல்லாம் வெளியுலகத்தைச் சேர்ந்த யாரும் எவ்வகையிலும் அறிந்திடமுடியாத ஒன்று. எனவே இவற்றை அறிந்துதான் சோழன் படைநடத்திக்கொண்டிருக்கிறான் என்று நம்பமுடியவில்லை. அதேநேரத்தில் அவன் மிகத்தெளிவாக எழுவனாற்றிலிருந்து வட்டாற்றில் திரும்பியதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

படை வட்டாற்றில் திரும்பிய முதல்நாள் இரவு பாரியின் மனதில் எண்ணிலடங்காத கேள்விகள் உதித்தவண்ணமிருந்தன. கோடையின் வெக்கையைப் பாறைகள் இரவெல்லாம் உமிழ்ந்தன. அவனது உடலில் வியர்வை அடங்கவேயில்லை. உள்ளுக்குள் எண்ணங்கள் கொப்பளித்தபடியே இருந்தன.

பின்னிரவில் பிட்டன் இருந்த இடம்நோக்கிக் கீழிறங்கினான் பாரி. மற்ற குதிரைவீரர்களை முகட்டின் மீதே பயணிக்கச் சொல்லிவிட்டு இருவீரர்களோடு கீழிறங்கினான். அதிகாலைப் பொழுது விடிகையில் பிட்டனின் படையணிக்குள் வந்து நின்றான் பாரி. எதிர்பாராமல் பாரி வந்து நிற்பது தாக்குதலைத் தொடங்குவதற்காகத்தான் என நினைத்த பிட்டன், அதற்கான வேலையைத் தொடங்க ஆயத்தமானான். ஆனால் பாரியோ, “நான் அதற்காக வரவில்லை. எதிரியை அருகிலிருந்து பார்த்தறியவே வந்தேன்” என்றான்.

“நாம்  தாக்குவதற்குக் காலந்தாழ்த்தக் கூடாது” என வாதிட்டான் பிட்டன். அவனது எண்ணங்களைத் தெரிந்துகொண்ட பாரி உத்தர வேதும் கொடுக்கவில்லை. நகர்ந்து கொண்டிருக்கும் எதிரிகளின் படையணி நோக்கிக் கீழிறங்கிக்கொண்டிருந்தான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 76

அன்றைய நாள் முழுவதும் எவ்வளவு நெருக்கமாகப் போகமுடியுமோ, அவ்வளவு நெருக்கமாக நின்று ஆற்றில் நகரும் படையின் தன்மையைக் கவனித்தான். ஆற்றின் நடுப்பகுதி முழுவதும் வேந்தனின் ஒழுங்கமைக்கப்பட்ட படையணி வந்தது. ஆனால், ஆற்றோரத்தில் வந்துகொண்டிருப் பவர்கள் வேந்தர்களின் படையணியைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் மலைமக்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் யார் இவர்கள் என்பதுதான் விளங்கவில்லை.

ஆழ்ந்த சிந்தனையின் வழியே அன்றைய நாள் முழுவதும் நடந்துகொண்டிருந்தான். பொழுது மங்கியவுடன் மீண்டும் முகடுநோக்கி மேலேறத் தொடங்கினான். அப்பொழுதும் பிட்டன் வாதிட்டான். வட்டாற்றில் ஊற்றுநீர் மிகக்குறைவு. அவர்கள் நேற்று தங்கியிருந்த இடத்தில் தோண்டப்பட்ட கிணறுகளில் போதுமான நீரில்லாததால் கிணறுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளனர். எழுவனாற்றில் நாளொன்றுக்கு நான்கு கிணறுகளை வெட்டியவர்கள், நேற்று பத்துக்கும் மேற்பட்ட கிணறுகளை வெட்டியுள்ளனர். தோண்டப்படும் கிணறுகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். அவ்வளவு எண்ணிக்கையில் தோண்டினாலும் இப்பெரும்படைக்குத் தேவையான நீரினை இவர்களால் கண்டறிய முடியாது. யானைகளுக்கும் போதுமான நீர் கிடைத்திருக்காது. இன்றிரவு நிலைமை இன்னும் மோசமாகும். நாளை அனைவரிடமும் முழுமையான சோர்விருக்கும் நாம் தாக்குதலைத் தொடுக்க நாளை இரவு மிகப்பொருத்தமானது” என்றான்.

பாரி மறுமொழியேதும் சொல்லவில்லை. அமைதியின் மூலமே மறுப்பினைச் சொல்லிவிட்டு மேல்நோக்கி நடக்கத் தொடங்கினான். எதிரிப்படையின் ஓரப்பகுதியில் வரும் மலையின மக்களின் உடலமைப்பினைப் பற்றியே மீண்டும் மீண்டும் சிந்தித்தபடியே வந்தான். ‘அவர்கள் பச்சைமலைத்தொடர்ப் பகுதியைச் சார்ந்தவர்கள் அல்லர். அப்படியென்றால் யாரவர்கள்?’ என்று எண்ணியபடியே இருந்தான்.

முள்ளூர்ப் பெரியவர் சொன்ன குறிப்புகள் நினைவுக்கு வந்தன. இரவாதன் சொன்ன அத்தனை செய்திகளையும் சிந்தித்துப்பார்த்தான். உதிரன் பதற்றத்தோடு எவ்வியூர் வந்ததை யோசித்தான். சட்டென அங்கவை சொன்னதாக உதிரன் சொன்ன சொல் நினைவுக்கு வந்தது, “அவர்கள் காதின் மேல்மடல்களில் மூன்று துளையிட்டிருந்தனர்.”

மனதுக்குள் மின்னலின் ஒளி பாய்ச்சுவதுபோல இருந்தது அந்தச் செய்தி. `எவ்வளவு முக்கியமான குறிப்பினை அங்கவை சொல்லியுள்ளாள்! மரத்தின் மீதிருந்து பார்த்ததால் கீழே செல்பவர்களின் காதுமடல்களைத் துல்லியமாகப் பார்க்க முடிந்துள்ளது. நாம் மிகவும் தொலைவிலிருந்து பார்த்ததால் அதனைப் பார்க்கமுடியவில்லை’ என்று நினைத்துக்கொண்டிருந்த பாரியின் மனதில் எதிரிப்படையில் வந்துகொண்டிருப்பது யாரெனப் பிடிபடத் தொடங்கியது. காதுமடல்களில் மேல்நிலையில் மூன்று துளைகளை இடுபவர்கள் மேல்காடர்கள் என்றும் கீழ்ச்சதையில் இரு துளைகளை இடுபவர்கள் கீழ்க்காடர்கள் என்றும், காதின் நடுநரம்பினை ஒட்டிப் பெரிய துளையினை இடுபவர்கள் குறுங்காடர்கள் என்றும் கேள்விப்பட்டுள்ளான். நெடுங்காடர்களை இதுவரை பாரி நேரில் பார்த்ததில்லை. ஆனால், அவர்களைப்பற்றிய எண்ணற்ற கதைகளை வேளிர்குலம் அறியும். அவை அனைத்தும் கடகடவென நினைவுக்கு வந்தன.

வேளிர்குலம் நெருப்பினை அறியவும், வளர்த்தெடுக்கவும், கட்டுப்படுத்தவும் ஆற்றல் கொண்டதைப்போல நீரினைப்பற்றிய பேரரறிவு கொண்டவர்கள் காடர்கள் என்பது நினைவுக்கு வந்தது. `மண்ணுக்குள் இருக்கும் கடுநீரை எப்படித் துல்லியமாக அவர்கள் கண்டறிந்தார்கள்?’ என முள்ளூர்ப் பெரியவர் அன்று எழுப்பிய கேள்விக்கு இன்று விடை கிடைத்தது.

நீரும் நெருப்பும் போல, கிழக்கும் மேற்கும்போல இயற்கையின் அதிஆற்றலை வெளிப்படுத்தும் இரு குடிகள்தாம் வேளிர்களும் காடர்களும். இவர்களுக்குள் எதிரெதிர் நிலை கொண்ட முரண்கள் ஆதியிலிருந்தே உருவாகிவிட்டன. வேளிரோடு பகைமைகொண்டு பழிதீர்க்க எண்ணற்ற சடங்குகளைக் காடர்கள் நடத்துவார்கள் என்பதும் பாரி அறிந்ததே. காடர்களின் கண்ணிற்படாமல் எப்படி அங்கவை தப்பினாள் என்பது இப்பொழுது தான் பெருவியப்பாக இருந்தது. அவர்களின் கண்ணிற்பட்டிருந்தால் எவ்வளவு பெரிய கொடூரம் நிகழ்ந்திருக்கும் என நினைத்தபடி விரைவாக நடந்தான்.

சிறுவயதில் காடறியும் பயணத்தின்போது வடதிசை ஊரொன்றின் கிழவன் சொன்ன சொல் நினைவுக்கு வந்தது, “காடர்களும் கருநொச்சியும் இருக்கும் வரை எந்தப் புதையலையும் மறைக்க முடியாது.”
அது நினைவுக்கு வந்த மறுகணம் குலநாகினியின் வாக்கும் நினைவுக்கு வந்தது. “பறம்பு மக்கள் இருக்கும் வரை பாழி நகரை எவனும் நெருங்க முடியாது.”

சொற்களின் நினைவுகளுக் குள்ளிருந்து மீண்டு வெளிவந்தான் பாரி. அவனது மனதிலிருந்த கேள்விகள் அத்தனைக்கும் விடை கிடைத்தது.

‘சோழன், காடர்கள்மூலம் பாழிநகர் பற்றிய குறிப்பினை அறிந்துள்ளான். இப்பொழுது அதனை நோக்கியே அவன் போய்க் கொண்டிருக்கிறான். கீழ்க்காடர்களே நீர்ச்சுரப்பைக் கண்டறிந்து கிணற்றினை உருவாக்கியுள்ளனர். படையின் இருபுறங்களிலும் நெடுங்காடர்கள் அணிவகுத்து வருகின்றனர். குறுங்காடர்கள் கொடும் நச்சுப் பூச்சிகளைக் கையாளத் தெரிந்த வர்கள். நகர்ந்துகொண்டிருக்கும் இப்பெரும் படையை எளிதில் அழிக்க முடியாது. ஏனென்றால், நெடுங்காடர்கள் அடர்மரக் கொப்புகளை ஒன்றுடனொன்றாகப் பின்னித் தடுப்பரண்களை எளிதாக அமைத்துவிடுவர். நாம் வீசும் அம்பும் ஈட்டியும் அத்தடுப்பரணைத் துளைத்துக்கொண்டு உள்ளே போவது மிகக்கடினம். நெடுங்காடர்கள் இருக்கும் வரை இப்படையைப் பக்கவாட்டிலிருந்து தாக்கி அழிக்க முடியாது. பிட்டன் மிகவும் அவசரப்படுகிறான். இரவாதனோ நாள்தோறும் உத்தரவு கேட்டுக்  குறிப்புகள் அனுப்புகிறான். நீராதாரம் உருவாக்கப்போகும்  சிக்கல் என்னவென்பதை நம்மால் எளிதில் முடிவுசெய்ய முடியாது. சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ என்று எண்ணியபடி உச்சிமுகட்டினை அடைந்தான் பாரி.

சோ
ழப்படை வட்டாற்றில் திரும்பிய ஆறாம்நாள். பொழுது நண்பகலைக் கடந்தது. கதிரவனின் சூடு உச்சங்கொண்டிருந்தது. நெடுங்காடர்களின் தளபதி துணங்கன் யானைப்படையின் நடுப்பகுதியிலிருக்கும் வேந்தரைக் காண வந்திருந்தான். யானையின் மீதிருந்த அம்பாரியில் அமர்ந்து வந்தான் செங்கனச்சோழன். அருகில் குதிரையின் மீது வந்துகொண்டிருந்தான் உறையன். துணங்கன் வந்துள்ள செய்தியை வேந்தனுக்குத் திரை விலக்காமல் மெய்க்காப்பாளன் சொன்னான். சிறிதுநேரத்தில் திரையை விலக்கினான் செங்கனச்சோழன்.

துணங்கன் முறைப்படியான மரியாதையைத் தெரிவிக்கக் குதிரையிலிருந்து கீழிறங்கி நின்றிருந்தான். அம்பாரியிலிருந்து எட்டிப்பார்த்தபடி அதனை ஏற்ற வேந்தன். ``என்ன செய்தி?” எனக் கேட்டான்.

துணங்கன் பதில் சொல்லும்முன் அவனைக் குதிரையின் மீது ஏறும்படி கையசைத்தான் வேந்தன். துணங்கன் குதிரையின் மீதேறிப் பேசும்பொழுது அதனை யானையின் மீதிருந்து கேட்க வசதியாக இருந்தது. ஆனால் இந்தச் செயல், வேந்தன் களைத்துப்போய் உள்ளான் என்பதன் அடையாளமாகவே துணங்கனுக்குத் தோன்றியது. அவன் சொன்னான், “இவ்வாற்றில் நீராதாரம் நாம் எதிர்பார்த்ததைவிட மிகக்குறைவாக இருக்கிறது.”

“என்ன செய்யலாம்?”

பறம்பில் மிகக்கடுமையான பகுதியை நாம் கடந்துவிட்டோம். அவர்களின் மிகப்பெரிய ஊர்கள் இருப்பதெல்லாம் எழுவனாற்றின் பகுதியில்தான். இனி பேராபத்தேதுமில்லை. எனவே நாம் படையைக் கையாள்வதில் சில முடிவுகள் எடுக்க வேண்டும்.”

“என்ன முடிவெடுக்க வேண்டும்?”

யானைப்படையின் ஒரு பகுதியையும் காலாட்படையின் ஒரு பகுதியையும் ஒருநாள் இடைவெளியில் பின்தொடர்வதைப்போல ஏற்பாடுகள் செய்யலாம். அதன்மூலம் நீராதாரத்தைப் பகிர்ந்து கொடுக்க முடியும். படையும் தெளிச்சிகொண்டு முன்னேறும். நம்முடைய தாக்குதல்திறன் எந்தக் கட்டத்திலும் குறையாது” என்றான்.

சற்றே பதறிய உறையன், “இல்லை, அப்படிச் செய்வதன் மூலம் நமது ஆற்றலை நாமே பிரித்தவர்களாகிவிடுவோம். எதிரி தாக்குதல்தொடுக்க வசதியாகிவிடும்” என்றான்.

துணங்கன் சொன்னான், “அப்படிச் செய்யவில்லையென்றால், நாளையே வீரர்கள் சிலர் மயங்கிவிழ நேரிடலாம். போதிய நீரின்றித் தொடர்ந்து வேலைவாங்கப்படும் யானைகளின் நடத்தை எப்படியிருக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. வீரர்கள் மயங்கிவிழத் தொடங்கினால் அது போருக்கான மனநிலையை முற்றாகச் சிதைக்கும்” என்றான்.

“பின்னால் வரும் இரண்டாம் நிலைப்படை வலிமைகுன்றி இருக்குமேயானால் எதிரிகள் அதனைச் சூழ்ந்து தாக்கி அழிப்பர்” என்றான் உறையன்.

நெடுங்காடர்கள் இருக்கும் வரை மலைமேலிருந்து அவர்கள் எறியும் ஈட்டியும் அம்பும் எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தாது. இப்பகுதியெல்லாம் அடர்காடுகள். ஆற்றங்கரை யோரத்திலிருக்கும் மரத்தொகுதிகளை ஒருபொழுதுக்குள் பின்னல்வலையாக மாற்றிவிட முடியும். எண்ணிலடங்காத மூங்கில் மரங்கள் ஆற்றோரம் இருக்கின்றன. எந்தக் கவலையும் நமக்கில்லை” என்றான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 76

சிறிதுநேரம் சிந்தித்த செங்கனச்சோழன், “இருதொகுதி யானைகளையும் ஈராயிரம் வீரர்களையும் இன்றிரவு இங்கேயே தங்கவையுங்கள். முன்னணிப்படை வழக்கம்போல் காலையில் புறப்படட்டும். இரண்டாம் நிலைப்படை ஒருநாள் இடைவெளியில் நம்மைப் பின்தொடரட்டும். அவசரத்தேவை யென்றால்கூட ஒருநாள் நடைத்தொலைவை எளிதில் வந்தடைந்துவிடலாம்” என்றான்.

இருவரும் ஏற்றுக்கொள்ளும் பதிலாக இருந்தது அது. ஆனாலும் துணங்கனுக்கு ஐயம் இருக்கத்தான் செய்தது. இருதொகுதி என்றால் இருநூறு யானைகள்தாம். மீதமுள்ள முந்நூறு யானைகளுக்கு நீர் கிடைப்பது கடினம். எனவே, சமமாகப் பிரிப்பதே சிறந்தது எனத் தோன்றியது. ஆனால், இதற்குமேல் வேந்தனிடம் பேசுவது முறையல்ல என்று தோன்றியதால் துணங்கன் அமைதிகாத்தான். ஆனால், உறையன் சொன்னான் “பின்னணிப்படையின் பாதுகாப்புக்கு நாம் கூடுதல் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.”

“மிகச்சிறந்த தளபதிகளை அங்கே நியமிப்போம்” என்றான் வேந்தன். சரியெனத் தலையாட்டினான் உறையன்.

இரண்டாம் நிலைப்படையில் யானைப்படைக்குக் கச்சனையும் காலாட்படைக்கு ஆழிமார்பனையும் தளபதியாக்கி உத்தரவிட்டான். நெடுங்காடர்களுக்கு யாரைத் தளபதியாக்கலாம் என்று துணங்கனைப் பார்த்துக் கேட்டான் செங்கனச்சோழன்.

துணங்கன் சொன்னான், “முன்னால் செல்கிறவர்களுக்குப் பின்னால் வரும் படையின் மீது ஐயமோ, கவனமோ சிறிதும் இருக்கக்கூடாது. அந்த அளவு அது வலுமிக்க படையாக அறியப்பட வேண்டும். எனவே இரண்டாம் நிலைப்படைக்கு நானே தளபதியாக நிற்கிறேன். முன்னணிப்படையின் நெடுங்காடர்களுக்கு சிவியன் தளபதியாக இருக்கட்டும்” என்றான்.

நெடுங்காடர்கள் சோழர்களுக்காக இப்போரில் பங்கெடுக்கவில்லை. வேளிர்கள்மீது தங்களுக்குள்ள பகையின் காரணமாகவே பங்கெடுக்கின்றனர் என்பதை எத்தனையோ முறை உணர்ந்த செங்கனச்சோழன் இப்பொழுதும் அதனையே உணர்ந்தான்.

திரன் ஈங்கையனை அழைத்துக்கொண்டு ஆறாம்நாள் இருக்கன்குன்றுக்கு வந்து சேர்ந்தான். அவன் வரும்வரை குதிரைகளைப் பாதுகாப்பது பெரும்போராட்டமாக இருந்தது. பகலிரவென ஒவ்வொரு கணமும் விழிப்பு உணர்வோடு இருக்க வேண்டியிருந்தது. சிறு கவனக்குறைவு ஏற்பட்டால்கூடத் தோகைநாய்கள் குகைநோக்கிப் பாயத் தயாராகிவிடுகின்றன. நாள்கள் செல்லச்செல்ல, பசி அவற்றை வெறிகொள்ளச் செய்தது. குதிரைகளின் சுவை வேறு வேட்டையை நோக்கி அவற்றைத் திரும்ப விடவில்லை. குகைக்குள்ளிருக்கும் குதிரைகளை வேட்டையாட ஒவ்வொரு கணமும் முயற்சி செய்துகொண்டிருந்தன.

குகையைக் காத்துநிற்கும் வீரர்களின் எண்ணிக்கையை இருமடங்கு அதிகப்படுத்தினான் தேக்கன். பறவைநாகங்கள் வந்தும் எவ்விதப் பயனும் இல்லை. தோகைநாய்கள் ஒரே கடியில் அவற்றை இருதுண்டுகளாக்கிவிடுகின்றன. வழிதெரியாமல் திகைத்தபடி குகையைக் காத்துநின்றனர் வீரர்கள்.

ஆறாம்நாள் உதிரனும் ஈங்கையனும் வந்து சேர்ந்தனர். பறம்பில் இல்லாத புதுவகையான விலங்கு என்று அதன் தன்மையைச் சொன்னவுடன் ஈங்கையன் சொல்லிவிட்டான், அதன் பெயர் “தோகைநாய்” என்று. “எவ்விதத் தாக்குதலாலும் அதனை வீழ்த்த முடியாது” என்று சொன்ன ஈங்கையன், “தந்திரத்தால் மட்டுமே அதனைக் கொல்ல முடியும்” என்றான். ஈங்கையனை அழைத்துக்கொண்டு புறப்படும்பொழுதே எல்லாவற்றையும் பேசி அவற்றுக்கான ஏற்பாடுகளையும் செய்தபடியே வந்தான் உதிரன்.

“கரும்புப்பாகு கிடைக்குமா?” எனக் கேட்டான் ஈங்கையன்.

“பறம்பில் கரும்பு இல்லை” என்றான் உதிரன்.

“இனிப்புச்சுவை கொண்ட பாகு வேறென்ன கிடைக்கும்?”

“பனம்பாகும் ஈச்சம்பாகும் கிடைக்கும்” என்றான் உதிரன்.

“எத்தனை பெருங்குடங்களில் பாகு கொண்டுவர முடியுமோ, அத்தனை குடங்களில் பாகினை அவ்விடம் கொண்டுவரச் சொல்லுங்கள்” என்றான் ஈங்கையன்.

வரும் வழியிலேயே எந்தெந்த ஊருக்கு ஆள் அனுப்ப வேண்டுமோ அங்கெல்லாம் ஆட்களை அனுப்பி ஏற்பாடுகளைக் காலம்தாழ்த்தாமல் செய்தான் உதிரன்.

“பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்ளும் பசை என்ன இருக்கிறது?” எனக் கேட்டான்.

“பலவகையான பசைகள் இருக்கின்றன” என்றான் உதிரன்.

“துளிபட்டாலும் பிரிக்கமுடியாதபடி ஒட்டக்கூடிய பசையை ஏற்பாடு செய்யுங்கள்” என்றான். அதற்கும் பொருத்தமான ஆட்களை அனுப்பி இருக்கன்குன்றுக்குக் கொண்டுவந்து சேர்க்கச் சொன்னான்.

“பசை வாடை அடிக்காமலிருக்க சுவைகூட்டிகளை அதனுடன் சேர்க்க வேண்டும்” என்றான். அதற்கும் ஏற்பாடானது.

ஈங்கையன் அவனோடு மூன்றுவீரர்களை அழைத்து வந்தான். அவர்களால் உதிரனைப் போலவோ, பறம்பின் வீரர்களைப் போலவோ வேகங்கொண்டு ஓடமுடியவில்லை. எனவே உதிரனும் சற்று மெதுவாகவே அவர்களுடன் நடக்க வேண்டியதானது.

அவர்கள் ஆறாம்நாள் இருக்கன் குன்றினை வந்தடைந்தார்கள். ஈங்கையன் கேட்டவையெல்லாம் அவன் வரும் முன்னரே வந்துசேர்ந்திருந்தன. அவன் வியந்துபோனான். குகைகாத்து நிற்கும் தேக்கனைக் கண்டு வணங்கினான். நீலனின் மணவிழாவின்பொழுது அவனிடம் நிறைய பேசவேண்டும் என்று தேக்கன் விரும்பியிருந்தான். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமற்போனது.

தேக்கனைக் கண்டதும், “தோகைநாய்களைப்பற்றிச் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன. ஆனால், அவற்றை வீழ்த்தும் வழியைப்பற்றி மட்டும் இப்பொழுது பேசுவோம்” என்றான்.

தேக்கனும் மற்றவர்களும் அவன் என்ன சொல்லப்போகிறான் என்பதை ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்தனர்.

“மூன்று குதிரைகளை நாம் இழக்கவேண்டியிருக்கும்” என்றான்.

“இன்னும் மூன்றா?” எனக் கேட்டான் வீரனொருவன்.

“ஆம். மூன்று குகைகளில் குதிரைகளிருப்பது அவற்றுக்குத் தெரியும். எனவே மூன்று குதிரைகள் கட்டாயம் தேவை. காயம்பட்ட அல்லது வயதான குதிரைகளைக் கொடுங்கள்” என்றான்.

சரியெனச் சம்மதித்தனர்.

“தோகைநாயினை வீழ்த்துவதற்கான ஒரே வழி அதனுடைய தோகைதான்” என்றான்.

வீரர்கள் அவன் சொல்வதைப் பெருவியப்போடு கேட்டனர்.

பெருவட்டவடிவில் செடிகொடிகளை நன்றாக விலக்கிக் களம் அமையுங்கள். அவ்விடம் முழுவதும் ஈச்சம்பாகும் இறுக்கிப்பிடிக்கும் பசையும் அவற்றின் வாடை தெரியாது மறைக்கும் அளவுக்குச் சுவையூட்டிகளும் கலந்த கலவையை நன்றாக ஊற்ற வேண்டும். அவ்விடம் முழுவதும் ஊற்றியபின் ஒருகுதிரையை மட்டும் வீரர்கள் சிலர்  அக்களத்தின் நடுப்பகுதிக்குக் கொண்டுசெல்ல வேண்டும். குகை விட்டு வெளிவரும் குதிரையைக் கண்டு தோகைநாய் மின்னல்வேகத்தில் பாய்ந்து வரும். பாகு ஊற்றப்பட்ட வட்டத்தின் நடுவிற்கொண்டுபோய் குதிரையை விட வேண்டும். தோகைநாய்கள் அதன்மீது பாயத் தொடங்கியதும் குதிரையை விட்டுவிட்டு வந்துவிட வேண்டும். எண்ணற்ற தோகைநாய்கள் பாய்ந்துவந்து அவற்றைக் கடித்துக் குதறும். இத்தனை நாள் பசிக்கு ஒரு எலும்பினைக்கூட அவை மிச்சம் வைக்காது.

தோகைநாய்கள் இப்புறமும் அப்புறமும் குதிரைக்கறியை இழுத்து, முன்காலை மடக்கி உட்கார்ந்து, கடித்து உண்ணும்பொழுதெல்லாம் அதனது தோகை பாகுக்கலவையில் முழுமையாகப் புரளும். குதிரையைத் தின்றுமுடிக்கும் வரை அது வேறெதிலும் கவனங்கொள்ளாது. அதன்பிறகு எழுந்து ஓடத் தொடங்கும் பொழுதுதான் தெரியும், வால்பகுதியிலுள்ள தோகையும் அடிவயிற்றுமுடியும் முழுவதுமாக ஒன்றுடனொன்று ஒட்டிக்கிடப்பது. அது எவ்வித் தவ்வும்பொழுது தோகைமுடிகள் சிலிர்த்து விரியாது. வாலின் எடையும் தூக்கித் தாவ முடியாத அளவுக்குக் கனமாக மாறும்.

முதல் தாவலிலே இதனைத் தோகைநாய் உணர்ந்துவிடும். முன்னும் பின்னுமாகத் திரும்பி ஏதேதோ செய்துபார்க்கும். பாகுக்சுவையால் மரக்கிளையில் எவ்விடத்தில் உட்கார்ந்தாலும் எறும்புகளும் பூச்சிகளும் அதனை மொய்க்கத் தொடங்கும். அப்பொழுதுதான் நீள்வாயின் வேட்டை தொடங்கும். தனது கூரிய பற்களைக்கொண்டு திரும்பித்திரும்பி அரிக்குமிடத்தில் கடிக்கத் தொடங்கும். இடப்புறமும் வலப்புறமுமாக வண்டு ரீங்காரமிடுதல்போலச் சுற்றிச்சுற்றி முன்பற்களால் கடித்திழுக்கும். அதன் நீள்வாயின் முன்பற்கள் பின்னுடலை மாறிமாறிக் கீறும். பின்புறப் பிட்டங்களிலும் வாலிலுமிருந்து குருதி கசியத் தொடங்கும். எந்நேரமும் பூச்சிகள் மொய்த்துக்கிடக்க எந்த இடத்தில் நின்றாலும் செவ்வெறும்பும் பாறையெறும்பும் மலையெறும்பும் அதன்மேல் ஏற, பேரலறலோடு அது ஓடத் தொடங்கும். உட்கார முடியாமல் ஓடிக்கொண்டேயி ருக்கும் அது வெகுவிரைவிலேயே ஓட முடியாத்  தன்மை எய்தும்.  மலைமுழுவதும் எதிரொலிக்கும் அதன் ஊளைச்சத்தம் சிறிது சிறிதாகக் குறைந்து இளைப்பின் வழியிலான முனகலோடு அதன் வாழ்வு முடியும்” என்றான் ஈங்கையன்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 76

இரவு நெருங்கியதும் வேலையைத் தொடங்கினர். குகைக்கு முன்னாலிருந்த செடிகொடிகளை வெட்டி அப்புறப்படுத்தினர். கலவைகள் நன்கு தயாராயின. ஈங்கையன் சொன்னபிறகு  அதில் தேவையை உணர்ந்து எங்கும் கிடைக்காத எழுமுட்பசையையும் தெல்லுக்கொடிப்பசையையும் சேர்த்தனர். இனி அதன் ஒட்டுந்தன்மைக்கு இணையேதும் இல்லை என்றான் தேக்கன்.

இரவானதும் வெளிச்சம் விழாதபடி பந்தங்களைத் திருப்பி வைத்து, கலவைகளைக் கொண்டு வந்து ஊற்றினர். போதும்போதும் என்று சொல்லுமளவுக்கு ஊற்றி முடித்ததும் மூன்றுவீரர்கள் குதிரையைப் பிடித்துக்கொண்டு கலவையை நோக்கி நடந்தனர். குதிரைகள் குகை விட்டு வெளி வருவதறிந்த கணமே தோகைநாய்கள் தமது தோகைசிலிர்க்க, கிளைகளை விட்டு எழுந்தன. நீள்வாய்கள் மெள்ளத்திறந்த பொழுது கால்கள் குதிரையை நோக்கிப் பாய்ச்சலுக்கு ஆயத்தமாயின.

பொழுது நடுப்பகலைக் கடந்தது. பாரியை நோக்கி பிட்டன் மலையேறி மேலே வந்தான். தொலைவிலேயே அவன் வருவதை அறிந்தான் பாரி. பிட்டனின் பதற்றம் நாளுக்கு நாள் கூட்டிக்கொண்டே இருந்தது. நெடுங்காடர்களைப் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தி அடர்காட்டுக்குள் நகரும் ஒரு படையை எளிதில் தாக்கி வீழ்த்திவிட முடியாது என்பதைப் பாரி நன்கு உணர்ந்திருந்தான். ஆனால் பிட்டனோ, எதிரியின் படையில் நெடுங்காடர்கள் இருக்கிறார்கள் என்பதையே அறியவில்லை. எனவே, காலந்தாழ்த்தாமல் உடனே தாக்குதலைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியபடியே இருந்தான். வழக்கமான தாக்குதலால் இவர்களை ஒன்றும் செய்துவிட முடியாது, வேறுவழியைக் கண்டறிந்தால் மட்டுமே தாக்குதலுக்குப் பலன் கிடைக்கும் என்ற சிந்தனையிலேயே தாக்குதலைத் தள்ளிப்போட்டுக்கொண்டு வந்தான் பாரி.

மேலேறிவந்த பிட்டன் சொன்னான், “எதிரி குடிநீர்ப் பற்றாக்குறையின் காரணமாகப் படையை இருகூறாகப் பிரித்துள்ளான். நேற்றிரவு தங்கிய இடத்தை விட்டு இன்னும் ஒரு பகுதிப்படை புறப்படவில்லை. இதுதான் பொருத்தமான நேரம். இன்றிரவு பின்புறப்படையைத் தாக்கலாம்” என்றான்.

“சற்று பொறுத்திருப்போம்” என்றான் பாரி.

பிட்டனால் பாரியின் வார்த்தைகளை ஏற்க முடியவில்லை. ``இதுபோன்ற சிறந்த வாய்ப்பு இனி கிடைக்காமற்போகலாம்.”

“எதனை வைத்துச் சொல்லுகிறாய்?” எனக் கேட்டான் பாரி.

“எதிரிகள் நீர்ப்பற்றாக்குறையைச் சமாளிக்க சரியான உத்தியை வகுத்துவிட்டார்கள். இன்னும் இரண்டு நாள்கள் இதே தன்மையில் அவர்கள் படையை நகர்த்திச் சென்றுவிட்டால், அதன்பின் அவர்கள் வலிமையடைந்துவிடுவார்கள்.”

“எப்படி?”

“இரண்டு நாள் நடைத்தொலைவில் வட்டாற்றின் ஓரமாகச் சிறுகானத்துக்குச் சற்றே முன்னால் குளமொன்று இருக்கிறது. எக்கோடையிலும் நீர்வற்றாத குளமது. துவண்டுபோயிருக்கும் எதிரிகளின் யானைப்படையை அது முழுமையாகத் தெளிச்சிகொள்ளச் செய்துவிடும். நாம் அதற்குள் முந்தியாக வேண்டும்” என்றான்.

பிட்டனின் கூற்று பாரிக்கு வேறொன்றைச் சொல்லியது. சற்றே வியப்போடு, “இக்கோடையிலும் அதில் நீர் இருக்கிறதா?” எனக் கேட்டான்.

“ஆம். வீரர்கள் பார்த்துவந்த பின்னர்தான் உடனடியாக உன்னிடம் சொல்ல மேலேறி வந்தேன்.”

“அப்படியென்றால் அவர்கள் குளம்நோக்கி நகரட்டும். அதுதான் நமக்கான இடம்.”

பிட்டனுக்குப் புரியவில்லை. அவ்விடத்தில் வைத்துத் தாக்கலாம் எனப் பாரி நினைக்கிறானோ என்று தோன்றிய கணத்தில் பிட்டன் சொன்னான், “அது மேலிருந்து தாக்குவதற்கான நிலவமைப்பு கொண்ட இடமல்ல. அவ்விடத்தில் தாக்குதலைத் தொடுத்தால் எதிரியை வீழ்த்த முடியாது.”

“அவ்விடத்தில் மட்டுமல்ல, மேலிருந்து தாக்கும் போர்முறையால் எவ்விடத்திலிருந்து தாக்கினாலும் எதிரியை வீழ்த்த முடியாது.”

‘பாரியா இப்படிச் சொல்வது?’ என்று அதிர்ந்த பிட்டன், “ஏன் அப்படிச் சொல்கிறாய்?’’ என்றான்.

சோழனின் படையை இருபுறமும் அரணெனக் காத்து வந்துகொண்டிருப்பவர்கள் நெடுங்காடர்கள்.

“நெடுங்காடர்களா..?” பிட்டன் ஒரு கணம் உறைந்து மீண்டான்.

வீரயுக நாயகன் வேள்பாரி - 76

“ஆம். அந்த வலிமை இருப்பதால்தான் பறம்புக்குள் துணிந்து இவ்வளவு தொலைவு முன்னேறியுள்ளான் சோழன்.”

பிட்டனுக்கு அடுத்து என்ன கேட்பதெனத் தெரியவில்லை. அவன் அதிர்ச்சிக்குள் மூழ்கிக்கொண்டிருந்தபொழுது பாரி தெளிவுநோக்கி மேலேறிக்கொண்டிருந்தான்.

“குளக்கரைதான் நமது தாக்குதலைத் தொடங்கப்போகும் இடம். வீரர்களின் எண்ணிக்கையைப் பலமடங்கு அதிகப்படுத்த வேண்டும். மீதமிருக்கும் வடதிசை ஊர்கள் நாற்பத்தி மூன்றுக்கும் செய்தியனுப்புங்கள். இருகரைகளிலும் வீரர்கள் குவியட்டும். நாளை மறுநாள் நள்ளிரவில் தொடங்குகிறது நமது தாக்குதல்” என்றான் பாரி.

தாக்குதல் எப்பொழுது என்று கேட்டுக்கொண்டேயிருந்த பிட்டனின் கேள்விக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. ஆனால், இதுவரை இருந்த வேகமும் தெளிவும் இப்போது குழப்பமாக மாறின.

மலைமுகட்டிலிருந்து கீழே தனது படைநோக்கி வந்தான் பிட்டன். எல்லா ஊர்களுக்கும் செய்திகளைக் கொண்டு சேர்க்க வீரர்கள் புறப்பட்டனர். வலக்கரையில் இருக்கும் இரவாதனுக்கு  மறைகுறிப்புகள்மூலம் செய்தி சென்றுசேர்ந்தது. வீரர்கள் தாக்குதலைத் தொடங்க எல்லா வகைகளிலும் ஆயத்தமாகிக்கொண்டிருந்தனர். பிட்டன் விடையில்லாத கேள்வியோடு இருந்தான். ‘குளக்கரையில் வைத்து என்ன செய்துவிட முடியும்? குளத்துநீரில் நஞ்சுகலந்து யானைகளைக் கொல்லும் உத்தியை, பாரி ஒருபொழுதும் கைக்கொள்ள மாட்டான். வேறு என்னதான் செய்யப்போகிறான்?’

- பறம்பின் குரல் ஒலிக்கும்...