Published:Updated:

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்
பிரீமியம் ஸ்டோரி
தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

தொகுப்பு : வெய்யில், அழகுசுப்பையா ச.

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

தொகுப்பு : வெய்யில், அழகுசுப்பையா ச.

Published:Updated:
தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்
பிரீமியம் ஸ்டோரி
தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்
தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

 ‘தமிழர்’ எனும் அடையாளம் சார்ந்த உரையாடல்கள் சமீபத்தில் மீண்டும் தீவிரமாகத் தொடங்கியிருக்கின்றன. சிந்துவெளி நாகரிகம் தொடங்கிக் கீழடி வரை தொல்லியல் சார்ந்த ஆதாரங்களும் சர்ச்சைகளும் ஏராளம் உண்டு. சம்ஸ்கிருதம் - தமிழ் இடையிலான முரண்களும் விவாதங்களும் எப்போதும் அணையாத நெருப்பைப் போன்றவை. தொழில்நுட்ப வளர்ச்சிகளும், புதிய தாராளவாதப் போக்குகளும் தமிழர் என்ற அடையாளத்தை, பெருமிதத்தை மேலும் மேலும் சிக்கலுக்குள்ளாக்குகின்றன. எவை பெருமிதங்கள், எவை கற்பிதங்கள் என்ற விமர்சனப் பார்வையைக் காலம் கோரி நிற்கிறது. இலக்கியம், மெய்யியல், தொல்லியல், அரசியல் போக்கில் ‘தமிழர் எனும் அடையாளம்’ சார்ந்த பார்வைகளை முன்வைப்பதோடு, அதில் ஈழநோக்கு, இஸ்லாமிய, கிறித்தவ நோக்குகளையும் இணைத்துக்கொள்கின்றன கட்டுரைகள். விமர்சனப்பூர்வமாக நாம் நம்மை அணுகுவதற்கும் புதிய உரையாடல்களுக்கு வலுசேர்க்கவும் இந்தக் கட்டுரைகள் பயன்பட வேண்டும் என்பதே இத்தொகுப்பின் நோக்கம்.

தமிழரின் மெய்யியல் அடையாளம்            

ந.முத்து மோகன்

மிழில் ஒரு செழுமையான உலகியல் மரபு பழங்காலம் தொட்டே வழங்கி வருகிறது. இதை உலக ஈடுபாடு, விருப்புகொண்ட மரபு என்று சொல்லலாம். வாழ்வில் அழுத்தமான ஈர்ப்பு, ஈடுபாடுகொண்டது என்றும் அதைச் சொல்லலாம். கறாரான தத்துவமொழியில் அதைப் பொருள்முதல்வாதம் என்பார்கள். அதை ஓர் ஆதிப் பொருள்முதல்வாதம் என்று ஒரு மொழிபெயர்ப்பாளர் எழுதியிருந்தார். அது தமிழின் அடையாளங்களில் முதன்மையானது. ‘புறநானூறு’, ‘அகநானூறு’ போன்ற பழந்தமிழ்ப் பாடல்களிலும் தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களிலும்  ‘மணிமேகலை’, ‘நீலகேசி’ போன்ற காப்பிய நூல்களிலும் நாம் அதைக் காண முடியும். இடைக்காலத் தமிழகத்தின் பக்தி மரபுகளிலும் சைவசித்தாந்தம் போன்ற தத்துவங்களிலும் இதன் தாக்கத்தைக் காண முடியும். தமிழ்ப் பக்தி, உணர்ச்சிகளில் நனைந்த வடிவத்தைப் பெற்றமைக்கு அதன் பூர்வீக உலகியல் ஈடுபாட்டைக் காரணமாகச் சொல்லலாம். நவீன காலத்தில் திராவிடம், நாத்திகம், பகுத்தறிவு பேசிய சிந்தனைகள் தோற்றம் பெறுவதுக்கும் அந்த உலகவிருப்பு மரபே ஆதாரமாக இருந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

தொல்காப்பியத்தின் ஒரு நூற்பா,

‘முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே’ (950) என்று கூறுகிறது. இதைச் சுருக்கமாகக் கூறினால், ‘முதல் எனப்படுவது நிலமும் பொழுதும்’ என்று ஆகும். நிலத்தையும் பொழுதையும் முதற்பொருள்கள் எனப் பண்டைத்தமிழர் கருதினர் என்பதை இங்கு காணமுடிகிறது. முதற்பொருள் எனில், இறைவனைக்கொள்ளும் வழக்கத்தை இடைக்காலத்தில் சைவமும் வைணவமும் அறிமுகப்படுத்தின. பிற்காலத்தில் வந்த இஸ்லாமும் கிறித்தவமும் அவ்வாறே சொல்லின. ஆயினும், பண்டைத்தமிழரின் வழக்கம் அதுவல்ல என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்.

நிலத்தை முதற்பொருளாகக் கொள்வதிலிருந்து திணைக் கோட்பாடு என்ற ஒரு கருத்தாக்கம் தமிழில் தோற்றம் பெறுகிறது. தமிழ்கூறு நல்லுலகின் நிலப்பகுதிகளை உற்று நோக்கி, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற பகுப்பினைத் தமிழர்கள் உருவாக்கியுள்ளனர். மலையும் மலைசார்ந்த நிலமும், காடும் காடுசார்ந்த நிலமும், வயலும் வயல்சார்ந்த  நிலமும், கடலும் கடல்சார்ந்த நிலமும், கூடுதலாக வறண்ட, நிலைதிரிந்த நிலமும் ஐவகை நிலங்கள் எனப் பிரித்துக் காட்டியுள்ளனர். ஐவகை நிலங்களில் வளரும் பயிர்ப் பச்சைகள், வாழும் உயிரினங்கள், மக்கள் தமது பிழைப்புக்காக மேற்கொள்ளும் தொழில்கள், உணவு ஈட்டும் முறைகள், ஆண் பெண் காதல்-களவு உறவுகள், அந்நிலங்களில் ஒலிக்கும் ஆடல் பாடல் வகைகள், அம்மக்களின் தெய்வ நம்பிக்கைகள் ஆகியவை திணைக்கோட்பாட்டில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. நிலப்பரப்புகளின் குணநலன்கள் பற்றிய அனுபவமும் இயற்கை மற்றும் மக்கள் வாழ்க்கை பற்றிய ஒரு பெரும்பார்வையும் கொண்டவரால் மட்டுமே இவ்வகையான பகுப்பை ஏற்படுத்தித் தர முடியும். கற்றறிந்த ஓர் அறிஞரைவிடச் சாதாரண விவசாயியால் இந்த வகைப்படுத்தலை எளிதில் புரிந்துகொள்ள முடியும். மேற்குறித்த நூற்பாவில் இடம்பெறும், ‘பொழுது’ என்ற சொல், ஒரு நாளின் வைகறை, கருக்கல் போன்ற சிறுபொழுதுகளையும் கார்காலம், பனிக்காலம் போன்ற பருவகாலங்களையும் குறிக்கின்றது. நிலம், மண் ஆகியவற்றின் வேறுபாடுகளையும் பருவகாலங்களின் வேறுபாடுகளையும் நிலத்தில் இறங்கி வேலைசெய்யும் உழைப்பாளியால்தான் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

ஐவகை நிலங்கள் பற்றிய தமிழின் திணைக் கோட்பாடு ஓர் அதிசயம். எந்தவிதமான சமயச் சார்பும் இன்றி, புராணியக் கதைத்தல்களும் இன்றி, முழுக்க உலகியல் சார்ந்த ஒரு வகைப்படுத்தல் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளது. கிரேக்கத் தத்துவம் தொன்மச் சிந்தனையில் வேரூன்றி இருந்ததாகச் சொல்வார்கள். சம்ஸ்கிருதச் சிந்தனை, மாந்திரீகச் சடங்குகளில் வேர்கொண்டிருந்ததாகச் சொல்வார்கள். தமிழ்ச் சிந்தனை, உலகியலில் வேரூன்றி நிற்கிறது. இது ஓர் அதிசயம்தான்.

தமிழர் உலகநோக்கின் முதற்பொருளாக நிலம் அமைகிறது. உலக நோக்குக்கு முழுமையை வழங்குவதாகவும் நிலம் உள்ளது. ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு தெய்வம் குறிப்பிடப்பட்டுள்ளது, உண்மைதான். ஆயின் அந்தத் தெய்வங்கள் உலகைப் படைத்ததாகவோ, மக்களைக் காப்பதாகவோ சொல்லப்படவில்லை. திணைக் கோட்பாடு வழங்கும் ஐவகை நிலங்களை ஐவகை உலகங்கள் என்றே தொல்காப்பியம் பெயரிட்டுள்ளது. நிலம் சார்ந்த ஒரு பன்மீயப் பார்வை அதனுள் அமைந்துள்ளது. வேறுபாடுகளைத் துல்லியப்படுத்தும் அக்கறை உள்ளது, எல்லாவற்றையும் ஒன்றாக்க வேண்டும் என்ற மொக்கையான அவசரம் இல்லை. திணைக்கோட்பாடு தரும் தமிழ் நிலங்கள் பற்றிய சித்திரத்தை, புவியியல் இயல்புவாதம் என்று குறிப்பிடலாம். நிலத்தில் தொடங்கி உயிரினங்கள், உணவு உற்பத்தி, பண், பண்பாடு, தெய்வம் என வளரும் அதை ஓர் இயற்கைசார் மெய்யியல் எனக் கூறலாம். அது இயற்கையினுள் மனிதரையும் அவரது வாழ்வையும் வைத்துச் சித்திரிக்கிறது. அதைச் சுற்றுச்சூழல் மெய்யியல் எனக் கூறலாம். திணைக்கோட்பாடு முயற்சிக்கும் முழுமை குறித்த நோக்கு ஆச்சரியப்பட வைக்கிறது. இவ்வகைத் தத்துவங்களைச் சமீபகாலங்களில் பசுமை மெய்யியல் என்று அழைக்கின்றனர்.

  ‘நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்துங்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்’ (1589)

என்ற மற்றொரு நூற்பாவும் தொல்காப்பியத்தில் உண்டு. பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உருவாக்கப்பட்ட உலகைப் பற்றி இந்நூற்பா பேசுகிறது. திணைக்கோட்பாட்டிலிருந்து அதிக தூரம் விலகி நிற்பதாக இந்நூற்பாவின் கருத்து தோற்றமளிக்கிறது. ஆயினும், வடக்கில் பேசப்பட்ட ‘சார்வாகம்’, ‘உலகாயதம்’ போன்ற தத்துவங்களுக்கு இது அணுக்கமாக உள்ளது. இந்நூற்பாவில் ஒலிக்கும் ‘கலந்த மயக்கம்’ என்ற சொல் அற்புதமானது. பஞ்சபூதங்கள் சரியான விகிதாசாரத்தில் சேர வேண்டும் என்று கணக்குப் போட்டுச் சொல்லுவது ஒருமுறை. ஆயினும், இங்கு  ‘கலந்த மயக்கம்’ என்ற சொல், கவிதைபோல மென்மையாக ஒலிக்கிறது. பொருள்களின் சேர்க்கை அவற்றின் இயங்கியலைக் குறிப்பது. இயங்கியலின் நுட்பமான ரசவாதத்தையே, மாந்திரீகமான புணர்ச்சியையே ‘கலந்த மயக்கம்’ என்ற சொல் அழுத்திச் சொல்கிறது. ஒரு மறைஞானியின் சொற்களில் தென்படும் மேகமூட்டத்தை இங்கு ஒருவர் உணர முடியும்.

‘மண் திணிந்த நிலனும்

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கைபோல’


என்றோர் அழகிய புறநானூற்றுப் (2) பாடல். ஈரத்தமிழில் நனைந்த பஞ்சபூத இயங்கியலை இங்கு காட்டுகிறது. நிலமும் நீரும் காற்றும் தீயும் முரணித் திணிந்த பிரத்தியட்சக் காட்சி இங்கு விரிகிறது. ஒன்றையொன்று ஏந்தியும் முரணியும் தொழில்படும் இயங்கியல் எதிர்வுகள் சித்தரிக்கப்படுகின்றன. தமிழும் பஞ்சபூதவாதமும் மிக இயல்பாக இணைந்துள்ளன. பஞ்சபூதங்கள் என்பவை தனித்தனியான ஐந்து பொருள்கள் என்பதையே அடியோடு மறக்கவைத்து அவற்றைப் பரஸ்பரத் தொடர்பில், நெருக்கமான உறவுநிலையில் இப்பாடல் காட்டுகிறது.

மற்றுமொரு புறநானூற்றுப் பாடல் (18). அதிகம் அறியப்பட்ட பாடல்.

‘நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே’


பண்டைத்தமிழரின் இயற்கைத் தத்துவம் பஞ்சபூதங்களோடு முடிந்துவிடவில்லை. இப்புறநானூற்றுப் பாட்டில் அது உழைப்பாள விவசாய மக்களின் வாழ்வியலை நோக்கிப் பரவுகிறது. நிலம்-நீர், உணவு, உடம்பு-உயிர் என்ற ஒரு தொடர்ச்சியை, சமன்பாட்டைப் புறநானூற்றுப் புலவன் இங்கே உருவாக்கிக் காட்டுகிறான். நீரையும் நிலத்தையும் குறிவைத்து எத்தனை வஞ்சகமான அரசியல்கள் இன்று அரங்கேற்றப் படுகின்றன? இந்தப் பாடலுக்குப் பின்னால் அமைந்துள்ள அப்பட்டமான இயல்புவாதம் தமிழரின் மிகப்பெரும் சொத்து.

தமிழ் மொழியின் எழுத்துகளுக்கு,  ‘மெய்யெழுத்து’ என்றும் ‘உயிரெழுத்து’ என்றும் அவற்றின் இணைந்த இயங்கியல் மொழிச்செயல்பாட்டை ‘உயிர்மெய்’ என்றும் பெயரிட்டது யார்? அதன் பின்னுள்ள மெய்யியல் யாது? மெய் எனில் தேகம் அல்லவா? மெய்யியல் எனில் தேகவாதம் ஆகுமல்லவா? மெய் என்ற சொல்லுக்கு உண்மை என்றும் உடல் என்றும் தமிழில் இரண்டு பொருந்திய பொருண்மைகளை வழங்கியதின் பின்புலம் என்ன? மொழியில் உச்சரிக்கப்படும் இரண்டு அடிப்படையான ஒலிகளில் ஒன்றை உயிரென்றும் மற்றொன்றை உடல் என்றும் பெயரிட்டவர் யார்? இன்றைக்கு மிகப்பெரும் மொழியியல் அறிஞர்கள்கூட, மொழி என்பதைச் செய்திப் பரிமாற்றத்திற் கான ஊடகம் என்று வரையறுத்து விடுகிறார்கள். ஆனால், பழந்தமிழரால் அதை உடலாகவும் உயிராகவும் எப்படி வருணிக்க முடிந்தது? மொழியை ஊடகம் என ஒரு சடப்பொருளாக அணுகும் முறையிலிருந்து அடியோடு விலகி, உடல் தாங்கி வந்த உயிராகக் காணுதல் ஒரு மிகப்பெரும் தத்துவத்தைத் தன்னுள் கொண்டுள்ளதாகத் தோன்றுகிறதே! எழுத்துகளை உயிரென்றும் மெய்யென்றும் பிரித்தபோதும் மொழி எனில், அவை இரண்டற இணைந்தவை என்பதிலும் தமிழின் தெளிவான பார்வை புலப்படுகிறது.

பண்டைத்தமிழ் இலக்கியங்கள், அக இலக்கியங்கள் என்றும் புற இலக்கியங்கள் எனவும் பகுத்து அடையாளப்படுத்தப் படுகின்றன. அகம், புறம் இரண்டும் வாழ்வின் இரண்டு பக்கங்கள் எனச் சொல்லப்படுகின்றன. ஆயினும், எங்குமே அகமின்றி புறம் தனித்து, அல்லது புறமின்றி அகம் தனித்து வாழ முடியும் எனப் பண்டைத்தமிழர் வாதிடத் துணிந்ததே இல்லை. அகமும் புறமும் எப்போதும் இணைந்ததே வாழ்க்கை என்ற புரிதலே அழுத்தமாக உள்ளது. அகம், மானுடரின் காதல் வாழ்க்கை குறித்தது எனக் கூறப்படுகிறது. புறம் பெரும்பாலும் ஆண்கள் மேற்கொள்ளும் போர், வணிகம், கல்வி ஆகியவற்றின் பொருட்டான செயல்பாடுகள், புலப்பெயர்வுகள் என வகைப்படுத்தப் படுகின்றன.

இவை இரண்டில் எது அதிக முக்கியமானது, அடிப்படையானது? என்ற ஒரு கேள்வியைச் சங்க இலக்கியங்கள் கேட்டுக்கொள்ளவில்லை. ஆயினும்,

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்


வ.சுப.மாணிக்கனார் எனும் தமிழ்ப் பேரறிஞர், தமிழ்மரபில் அகமே அடிப்படையானது, புறத்தைவிட அது முந்தியது எனும் வாதத்தை முன்வைத்துள்ளார். இதை எப்படிப் புரிந்துகொள்வது? தமிழின் அகமரபு உண்மையில் இயற்கையில் எங்கும் நிலவும் பொதுமரபான உயிர்களின் மறுஉற்பத்தி எனும் இயற்கை நிகழ்வின் தொடர்ச்சியாக அமைகிறது என்று வ.சுப.மாணிக்கனார் விளக்குகிறார். தாவரங்களும் தமது இனத்தைப் பரப்புகின்றன, ஊர்வனவும் பறப்பனவும் தமது உயிரினங்களைத் தொடர் உற்பத்தி செய்கின்றன. எனவே, அக மரபு என்பது இயற்கை மரபு. எந்த உயிரினமும் இதைத் தொடராமல் இருப்பதில்லை. எனவே, தமிழின் அக மரபு அடிப்படையானது, முதன்மையானது என்கிறார். இது ஓர் அறிவுப்பூர்வமான விளக்கம்.

அகமும் சரி, புறமும் சரி, இரண்டுமே மானுட இனம் தன்னை மறு உற்பத்தி செய்துகொள்வதுக்கும் தம்மை உயிர் வாழுமாறு தக்கவைத்துக்கொள்ளுவதுக்கும் அடிப்படையானது. அவை வெறுமனே இலக்கிய மரபுகளல்ல, அவை வெறுமனே அழகியல் மரபுகளல்ல. அவை வாழ்வின் இரண்டு இன்றியமையாத பக்கங்கள். அவை இரண்டுமே தமிழ்மரபில் ஆழப் பதிந்துள்ள உலகவிருப்பு, வாழ்க்கைவிருப்பு. எந்த அலங்காரமும் இன்றி, பூடகமும் இன்றி, எந்தவிதமான போலித்தனமும் இன்றி உலக விருப்பும் வாழ்க்கை விருப்பும் தமிழில் பதிவாகியுள்ளன. வாழ்க்கை பண்டைத்தமிழ் இலக்கியங்களில் கொண்டாடப்பட்டுள்ளது. பல தொழில்கள், பண்டைத்தமிழால் கொண்டாடப்பட்டுள்ளன. வேட்டுவத் தொழிலும் ஆயரின் உழைப்பும் வேளாண்மைத் தொழிலும் கடற்கரைத் தொழிலும் அழகு செழிக்கப் பண்டைத்தமிழில் வருணிக்கப்பட்டுள்ளன. திறனுடன் செய்யும் எந்தத் தொழிலையும் தமிழ் இழிவாகப் பேசியதாகத் தெரியவில்லை. இயற்கையை, உணர்ச்சிகளை, பெண்ணழகை, காதலை, வீரத்தைப் பண்டைத்தமிழ் இலக்கியங்கள் கொண்டாடுகின்றன. வாழ்வைக் கொண்டாடும் ஒரு மெய்யியலைத் தமிழ் தன்னில் கொண்டுள்ளது. செழிப்பான மருத நிலத்திலும் வறண்ட பாலை நிலத்திலும் அது வாழ்வைக் கொண்டாடியுள்ளது. இதை ஒரு மகத்தான மரபாகவே தமிழ் வருங்காலத்துக்கு விட்டுச்சென்றுள்ளது.

கூடுதலாக, மற்றொன்றையும் சொல்ல வேண்டும். நவீன ஐரோப்பியச் சிந்தனை மெய்யியல்களை வரையறை செய்யும்போது, அவை, நாடுகளைக் காலங்களைக் கடந்த பொதுச்சொல்லாடல்களாக இருக்க வேண்டும் எனக் கூறுகின்றது. விஞ்ஞானங்களின் மொழிபோல மெய்யியல்களும் பொதுவான மொழி ஒன்றைப் பின்பற்றி அமைய வேண்டுமென வலியுறுத்துகின்றன. ஆயினும், பண்டைத்தமிழின் மெய்யியலைப் பற்றிப் பேசும்போது, அது ஐவகை நிலங்களையும் பருவகாலங்களையும், மெய்யும் உயிரும்கொண்ட மொழியையும், அகமும் புறமும்கொண்ட வாழ்வையும் தன்னில் ஒன்றிணைத்துக் காட்டும்போது, அம்மெய்யியல் தமிழ்ப் பண்பாட்டின் முத்திரையையும் தன்னில் சுமப்பதாக ஆகிறது. அது ஐரோப்பிய நவீனம் சிலாகிக்கும் விஞ்ஞானப்பூர்வமான நவீன மொழியைத் தேர்வுசெய்வது கிடையாது. மாறாக, பண்பாட்டுப் பிரக்ஞைகொண்ட ஒரு மொழியில் அது தனது அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்கிறது. பண்பாட்டில் வேர்கொண்ட ஒரு மெய்யியலைத் தன் அடையாளமாகக்கொண்டிருக்கிறது.

சிந்துவெளி ‘விட்ட’ இடமும்… சங்க இலக்கியம் ‘தொட்ட’ இடமும்…

ஆர்.பாலகிருஷ்ணன்

சில அண்மைக்கால நிகழ்வுகள் தமிழ், தமிழர் என்ற அடையாளங்கள் பற்றிய விவாதங்களைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்துள்ளன. சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் பற்றிய தரவு சார்ந்த புதிய உரிமைகோரல்; கீழடி அகழ்வாராய்ச்சி மற்றும் அது தொடர்பான விழிப்பு உணர்வு;  ஜல்லிக்கட்டு மீட்பிற்கான போராட்டம் போன்றவை இந்தப் புதிய விவாதங்களுக்குத் தூண்டுதலாக அமைந்த பின்புலக் காரணிகளாகும்.

தமிழ் - வடமொழி; வடக்கு - தெற்கு என்று எதிரும் புதிருமாக உணரப்படும் இருமைகள் (Binaries) ஏதோ 20-ம் நூற்றாண்டில் தொடங்கிய தற்காலச் சமூக அரசியலின் விளைவல்ல என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். இது காலங்காலமாக நிகழும் தொடர்நிகழ்வு.

கண்ணகி சிலை வடிக்க, இமயத்தில் கல் எடுத்து, தமிழர் தம் வீரத்தைப் பழித்த கனக-விசயர் தலையிலே அக்கல்லைச் சுமந்து வரச் செய்து, கங்கை ஆற்றில் செங்குட்டுவன் புனித நீராட்டியதாகச் சிலப்பதிகாரம் சொல்கிறது. அது உண்மையா இல்லையா என்பது அல்ல முக்கியம், அப்படி ஒரு குரல் அப்போதே ஏன் இலக்கியப் பதிவாக ஒலித்திருக்கிறது என்பதுதான் முக்கியம்.  ‘ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்’ தொடங்கி, ‘கங்கைகொண்ட சோழன்’ என்று ஒரு ‘வித்தியாசமான’ பெயர் மரபு எதையோ சொல்கிறது. ‘பரங்குன்று இமயம் நிகர்க்கும்’ என்று ஒப்பிடுகிறான் ஒரு சங்கத் தமிழ்ப்புலவன். இதை மிகை என்று சொல்லிக் கடந்துவிடலாம். ஆனால், இதற்கான கூட்டு உளவியலைப் புலன்விசாரிப்பது முக்கியம்.

‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி’ என்ற  ‘பெருமிதம்’ தமிழர்களின் கூட்டுணர்வில் ஏதோ ஒருவகையில் குடியேறியிருக்கிறது. அலங்காநல்லூர் வாடிவாசலுக்கு  அமெரிக்காவில் வரிந்துகட்டுகிறார்கள் அயலகத் தமிழர்கள்.

அதேநேரத்தில், தமிழுக்கு எதிரான செயல்பாடுகள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் நடந்துகொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சுவாமிநாத தேசிகர் என்பவர்  ‘இலக்கணக் கொத்து’ என்ற நூலில், ‘ஐந்து எழுத்துகளை மட்டுமே(!) தனக்கெனக் கொண்ட தமிழ், ஒரு மொழி என்று சொல்வதுக்கு அறிஞர்கள் வெட்கப்படுவார்கள்’ என்று எழுதினார். அண்மையில்கூட உலக இலக்கியத்துக்குத் தமிழ்மொழி கொடையளித்த திருக்குறளை,  ‘வடமொழி சாஸ்திரங்களின் சுருக்கம்’ என்று ஒருவர் நூல் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

இத்தகைய எதிரும் புதிருமான இருமை எப்போது தொடங்கியது? ஏன் தொடர்கிறது? இவற்றைத் தீவிரமாகப் புலன்விசாரிக்காமல் எப்போதும்போல் கடந்து சென்று அவரவர் நிலைகளில் நின்று முழக்கங்கள் எழுப்பலாம். அல்லது அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார்ந்த ஆய்வுகளின் துணைகொண்டு தொடர்ந்து இயங்கி, புரியாத புதிர்களின் மீது புதுவெளிச்சம் பாய்ச்ச முயற்சி செய்யலாம்.

இந்தியவியலின் மிகமுக்கியமான இரண்டு புதிர்கள் உண்டு. முதல் புதிர், சிந்துவெளி மக்கள் யார்? அவர்கள் பேசிய மொழி எது? அந்த நாகரிகம் எப்படி நலிவடைந்து அழிந்தது? இரண்டாவது புதிர், பொதுவாகத் திராவிட மொழிகளின் தோற்றம் பற்றியது, அதிலும் குறிப்பாகத் தமிழ் மொழியின் தோற்றம் மற்றும் தொடர்ச்சி பற்றியது. பழந்தமிழ்ப் பதிவுகள் மீள்நினைவாகப் பேசும் கடல்கோள்கள், புலப்பெயர்வுகள், தமிழ்ச்சங்கங்கள் பற்றிய நினைவுகள் இதில் அடங்கும்.

ஆனால், இந்த இரண்டு கேள்விகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை; இன்னும் சொல்லப்போனால், ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களே.

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்


முதலில் சிந்துவெளி பற்றிப் பேசுவோம். 1924-ம் ஆண்டு, இந்திய வரலாற்றைப் புரட்டிப்போட்டது. சிந்துவெளி நாகரிகம் பற்றிய ஆய்வறிக்கை அந்த ஆண்டுதான் வெளியிடப்பட்டது. அதுவரை இந்தியப் பண்பாட்டின் தோற்றமே ‘ரிக்’ வேதத்தில்தான் தொடங்கியது என்பது போன்ற ஒரு கருத்தாக்கமே வரலாறு என்று வாசிக்கப்பட்டது. ஆனால், சிந்துவெளி நாகரிகம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் அந்தக் கருத்து கேள்விக்குள்ளானது.   ‘சிந்துவெளிப் பண்பாடு, திராவிட நாகரிகமாக, குறிப்பாகத் தமிழ்ப் பண்பாட்டோடு தொடர்புடைய வாழ்வியலாக இருந்திருக்கக்கூடும்’ என்ற கருத்தை முதன்முதலாக முன்மொழிந்தவர், வங்காள மொழியியல் அறிஞரான சுனிதி குமார் சட்டர்ஜி. அதைத் தொடர்ந்து ஹீராஸ் பாதிரியார், அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்றோர் சிந்துவெளிப் பண்பாடு குறித்த திராவிடப் பண்பாட்டுக்கு வலுசேர்த்தனர்.

சிந்துவெளி வரிவடிவங்களை, எழுத்து பொறிப்புகளை வாசித்தறிய முடியாத முட்டுக்கட்டையான நிலைமையால் சிந்துவெளியின் மொழி பற்றிய ‘இறுதித் தீர்ப்பு’ நிலுவையில் உள்ளது.

சிந்துவெளிச் சிதிலங்களால் புலனாகும் நகர வாழ்க்கையில் கோட்டை மதிற்சுவர்கள், வெளிநாட்டு வணிகத்தின் முக்கியத்துவம், பொதுக்குளியல் இடங்கள், சிறந்த வடிகால் அமைப்பு, அகன்ற நேரான தெருக்கள், தாய்த்தெய்வ வழிபாடு, ‘சமூக வாழ்வில் சமயம் சார்ந்த குறியீடுகள் முன்னுரிமை பெறாதது’ ஆகியவை முக்கியக் கூறுகள். குதிரை, தேர்ச்சக்கரம் போன்ற தடயங்கள் இல்லை என்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இத்தகைய கூறுபாடுகள், வேதகாலம் சுட்டிக்காட்டும் வாழ்க்கைமுறைக்கு முரணானவை என்பது திராவிடக் கருதுகோள் ஆதரவாளர்களின் வாதம். ஆரியர்களின் முக்கியமான கடவுளான இந்திரன், ‘கோட்டைகளைத் தகர்ப்பவன்’ என்று போற்றப்பட்டவன். சிந்துவெளி மக்களோ கோட்டைவாசிகள்.

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

‘இந்தச் சிதைவடைந்த பரவலான குடியிருப்புகளின் உடமையாளர்கள் வேறு இடங்களுக்குப் போய்விட்டார்கள்’ என்று தைத்ரிய பிராமணம் (II.4.6,8) என்ற பழமையான சம்ஸ்கிருத இலக்கியம் பதிவுசெய்வது, சிந்துவெளி மக்கள் விட்டகன்ற இடங்கள் பற்றிய வியப்பாகவும் இருக்கக்கூடும். இது ஒருபுறம் இருக்கட்டும்.இப்போது, இந்தியாவின் தென்கோடிக்குக் செல்வோம். 2000 ஆண்டுகளுக்கு முன்பே மிகச் சிறப்பான இலக்கண இலக்கியங்களைப் பழந்தமிழ்ப் பண்பாடு படைத்துள்ளது. பழங்காலத் தமிழ் மக்கள் சிந்துவெளி மக்களைப்போலவே திரைகடலோடிகள். ‘பல்வேறு மொழிகளைப் பேசும் புலம்பெயர்ந்து வந்த மக்கள் எல்லாம் கலந்து இனிமையாக வாழும் பட்டினம்’ பற்றிப் பெருமையாகப் பேசுகிறது சங்க இலக்கியம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது ஒரு நாகரிகப் புரிதல்.

சிந்துவெளிப் பண்பாடு, நகர்மய வாழ்வியலின் உச்சகட்டம் என்றால்... சங்க இலக்கியம், இந்தியாவின் நகர்மய இலக்கியத்தின் கம்பீரமான தொடக்கம் ஆகும். ‘மதுரைக்காஞ்சி’, ‘பட்டினப்பாலை’ போன்ற பத்துப்பாட்டு இலக்கியங்களின் தலைப்பே இதைச் சொல்லும். சங்க இலக்கியங்களில் இடம்பெறும் நகர் அமைப்பு வர்ணனைகள், கோட்டைகள், மதிற்சுவர்கள், ஆறுபோல அகன்ற தெருக்கள், அங்காடிகள், வாசிப்பவர்களை வியக்கவைக்கும்.

ஒரு பெண்ணின் அழகை வர்ணிக்கும்போது பல்வேறு நகரங்களின், ஊர்களின் வனப்பை உவமையாகக் குறிப்பிடும் ஒரே இலக்கியம் சங்க இலக்கியம்தான். இந்த நகர்மயப் பண்பாட்டு மரபின் இலக்கியத் தொடர்ச்சியை  ‘பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்’ என்ற சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். இதற்கு இணையான நகர்வழிபாடு வேறெந்த இலக்கியத்திலும் மங்கல வாழ்த்தாக இருக்கிறதா?

இந்த அளவுக்கு நகர் சார்ந்த இலக்கியமரபு தமிழ் மொழியில் இருந்தாலும் பழங்காலத்து நகரங்களுக்கான அகழ்வாய்வுத் தடயங்கள் தமிழ் மண்ணில் அண்மைக்காலம் வரை தோண்டி எடுக்கப்படவில்லை.  வரலாற்றா சிரியர்கள் அகழ்வாய்வுத் தலங்களில் கிடைக்கும் ‘தட்டுமுட்டுச் சாமான்களுக்கும், பண்டம் பாத்திரங்களுக்கும்’ கொடுக்கும் முக்கியத்துவத்தில் நூற்றில் ஒரு பங்கைக்கூட இலக்கியங்களுக்குக் கொடுப்பதில்லை.

பாலைவனத்தில் ‘கொலைப்பட்டினியாய்’ இருக்கும் ஒட்டகம், செத்துச் சிதிலமான விலங்குகளின் எலும்பைத் தின்னும் என்ற துல்லியமான உண்மையை வடமொழி இலக்கியங்களே அறியாதிருக்கும்போது சங்க இலக்கியம் எப்படித் துல்லியப் பதிவு செய்தது? (அகநானூறு 245) பாலைவனமே இல்லாத தமிழகத்தில் எழுதப்பட்ட தொல்காப்பியத்தின் மரபியலில் ஆண் ஒட்டகம், பெண் ஒட்டகம், ஒட்டகக் கன்று பற்றிய பெயர் மரபுகள் எப்படி?

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

இமயமலையின் உச்சியில் வாழும் கவரி மா (யாக்) என்ற விலங்கின் உணவுப்பழக்கம் பற்றி வடமொழி நூல்கள்கூடப் பதிவிடாத துல்லியம் சங்க இலக்கியத்தில் எப்படிப் பதிவானது? கோவேறுக் கழுதையின் காலை சுறா கடிக்கும் வாய்ப்புள்ள ஒரே இடமான கட்ச் கழிமுகத்தின் (குஜராத்) நேர்முக வர்ணனையைப் பழந்தமிழ்ப் புலவன் எப்படிச் செய்தான்? சிந்துவெளிப் பொறிப்புகளில் சிங்கம் இல்லை, புலிதான் உண்டு. நர்மதை ஆற்றின் தென்கரை தாண்டி, தீபகற்ப இந்தியாவில் சிங்கம் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. ஆனால், காட்டில் வாழும் சிங்கத்தின் உடற்கூறுகளை இயற்கையின் பின்னணியில் சங்கத்தமிழ் இலக்கியம் மட்டும் எப்படிப் பதிவுசெய்தது?

‘பொன்படு கொண்கானத்து நன்னன்’ (நற்றினை.391) என்ற தமிழ்மன்னன், கொண்கானப் பகுதியில் (கோவா அருகில்) எப்போது வாழ்ந்தான், அங்கு ஏன் வாழ்ந்தான்... சங்க இலக்கியம் நன்னனோடு தொடர்புபடுத்தும் மலைப்பெயர்கள், இடப்பெயர்கள் எல்லாம் எப்படி இன்னும் அப்பகுதியில் புழக்கத்தில் உள்ளன.  சிந்துவெளிப் பண்பாட்டில் இதுவரை கிடைத்துள்ள தெற்குத் தடயமான மகாராஷ்டிராவிலுள்ள தைமாபாத் அருகே இந்தத் தமிழ் இடப்பெயர்கள் இருப்பதை எப்படிப் புறக்கணிப்பது?

‘துவரை ஆண்ட வேளிருள் வேளே’ (புறநானூறு. 201) என்று பாடப்பட்ட வேளிர் மரபினர், துவரை (குஜராத் -துவாரகை) எனப்படும் பகுதியை 49 தலைமுறைகளுக்கு முன்பு ஆண்டவர்கள் என்ற சங்க இலக்கியப் பதிவை எப்படிக் கடந்து செல்வது? அப்பகுதியில் ‘மாங்குடி’ உள்ளிட்ட பல சங்க இலக்கிய இடப்பெயர்கள் இன்னும் புழக்கத்தில் இருப்பதை எப்படி விளக்குவது?  ‘அது சிந்துசமவெளிப் பண்பாட்டின் மிக முக்கியமான புள்ளி’ என்பதை எப்படிப் புறக்கணிப்பது?

‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்ற நூலில் நான் முன்வைத்துள்ள ‘கொற்கை வஞ்சி தொண்டி வளாகம்’ (KVT Complex) என்ற புதிய சான்றாதாரம், சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் இடப்பெயர்களில் பெரும்பாலானவை இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் இன்று வரை பயன்படுத்தப்படுகின்றன என்ற உண்மையைப் பதிவுசெய்கிறது. இந்தப் பெயர்கள் இல்லாமல் தமிழர்களின் அடையாளத்தைக் கட்டமைக்க முடியாது. ஆனால், இந்தப் பெயர்களில் எதுவும் வடமொழி இலக்கியங்களுக்குத் தெரியவே தெரியாது. இந்த முரண்பாட்டின் முடிச்சுக்குள் ஒளிந்துகிடக்கிறது இந்தியப் பண்பாட்டின் அடித்தளம் பற்றிய தெளிவின்மையை விளக்கும் திறன்கொண்ட மூலவெளிச்சம்.

‘மேல்-மேற்கு: கீழ்-கிழக்கு’ என்ற இருமைப் பாகுபாடாக அமைந்த சிந்துவெளி நகரங்களின் அமைப்புமுறைக்குப் பின்புலமாக அமைந்த நெடுவீச்சுச் சிந்தனைகளே கீழ்-கிழக்கு; மேல்-மேற்கு என்ற புவியியல் சார்ந்த திசைகளுக்கான திராவிடச் சொற்களின் ஆக்கத்துக்குக் காரணமாகும்.
இதன்மூலம் சிந்துவெளி நகரமைப்பு முறை மட்டுமல்ல, அந்நகரங்களில் நடந்த சேவல் சண்டை மரபின் தொடர்ச்சி சங்க இலக்கியங்கள், வீரச்சேவல் நடுகல் மரபு, பழங்காலக் கல்வெட்டுகள் என்று ‘ஆடுகளம்’ திரைப்படம் வரை தொய்வின்றித் தொடர்வது கவனிக்கத்தக்கது. தோற்றத்துக்குச் சமமான முக்கியத்துவம் கொடுத்துத் தொடர்ச்சியைக் கொண்டாட வேண்டும். அதனால்தான் சிந்துவெளித் திமில் காளையை அச்சு எடுத்ததுபோல அழகிய கம்பீரத்துடன் திமிறுகிறது காங்கேயம் காளையின் தமிழ்த் திமில்.வாடிவாசல் வளர்கிறது.

சிந்துவெளி ஆராய்ச்சியில் சமகாலச் சமூக, பூகோள அரசியலின் நிழல் படிந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இந்தியாவில் நிகழ்ந்த, நிகழ்கிற சிந்துவெளிப் பண்பாட்டின் தொடர்ச்சிக்கான தேடுதல்கூடக் கிழக்கிலிருந்து மேற்காக நகர்ந்த அளவுக்கு வடமேற்கிலிருந்து தென்மேற்காக, தெற்காக அவ்வளவு முனைப்புடன் தொடரவில்லை என்பது உண்மை. சிந்துவெளிக் குறியீடுகளை ஒத்த மட்பாண்டக் கீறல்கள் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம் கிடைத்துள்ளன என்ற உண்மை அனைவரையும் யோசிக்க வைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை.

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

உணர்ச்சியால் உந்தப்பட்ட பேச்சுகளும், அறிவியல்பூர்வமாக நிறுவ முடியாத கருத்துகளை முன்வைத்து நம்பகத்தன்மையை இழந்ததும், நிகழ்காலத் துதிபாடல்களில் நேரத்தைச் செலவிட்டதும் - தமிழ்ச்சமூகம் தனக்குத்தானே இழைத்துக்கொண்ட அநீதிகளும் அதன் விளைவாக நேர்ந்த கூட்டுக்காயங்களும் ஆகும்.

தமிழ்த் தொன்மங்களின் தொடக்க வேர்களையும் தொடர்ச்சியையும் இணைக்கும் முயற்சியில் இன்னும் கண்ணுக்குப் புலப்படாத, கைக்குக் கிடைக்காத இடைவெளிகளை (Missing Links) நிரப்ப ‘கீழடி’ உள்ளிட்ட வைகைக்கரை அகழ்வாராய்ச்சிகள் உதவும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

வைகையின் இரு கரைகளிலும் சிந்துவெளியின் அடையாளங்களை ஒத்த அகழ்வாய்வுத் தடயங்கள் மேலும் மேலும் கிட்டும்போது... தமிழக நகர்மயக் குடியிருப்புகளின் தொல்பொருள் தடயங்களின் கரிமக் காலக்கணிப்பு முறை, சங்ககாலக் குடியிருப்புகள் மற்றும் அதற்கு முற்பட்ட குடியிருப்புகளின் காலத்தைச் சிந்துவெளிப் பண்பாட்டின் காலத்தை நோக்கி நெருக்கி எடுத்துச் செல்லும்போது... சங்க இலக்கியங்கள் பேசும் மீள்நினைவுகள், நம்மைச் சிந்துவெளிக்குப் புவியியல் அடிப்படையில் நெருங்கிய இடங்களுக்கு ஆதாரபூர்வமாக எடுத்துச் செல்லும்போது... சிந்துவெளிக்கும் தமிழகத்துக்கும் தமிழ்த் தொன்மங்களுக்கும் இடையிலான நில, கால இடைவெளிகள் தானாகவே சுருங்கும்.

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்


சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் வேறுவேறு அல்ல என்பதைப் புதிய புதிய மெய்ப்பிக்கத்தக்க சான்றாதாரங்களின் மூலம் தொடர்ந்து நிறுவுதல் என்பது தமிழ்த்தொன்மங்கள் பற்றிய புரிதல்களுக்கு மட்டுமல்ல; வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியாவின் தேதிகள் அற்ற காலகட்டங்களின் சமூகப் பண்பாட்டு வேர்களின் மீது வெளிச்சம் பாய்ச்சவும் துணைபுரியும்.

அதைப்போலவே, பாதையைவிட, பயணத்தின் திசையைவிட முக்கியமானது பயணம். அதைவிட முக்கியமானவன் பயணப்பட்டவன். வரலாறு என்பது வரல் ஆறு. அதாவது வந்த வழி. ஏனெனில் ஆறு என்பது வழி. மக்களை மையத்தில் வைக்காத வரலாறு- மன்னர்கள் பிறந்த கதை, வளர்ந்த கதை, இறந்த கதை பேசும். அரண்மனைகளையும் அந்தப்புரங்களையும் மட்டுமே துருவித்துருவி ஆராய்ந்து களிப்படையும் அல்லது களைப்படையும். நாம் மீட்டெடுக்க வேண்டியது மன்னர்களின் கதையை அல்ல. இன்னும்  சொல்லப்போனால் வெறும் மண்ணின் கதையைக்கூட அல்ல. மொழியை மூச்சில் ஏந்தி, முன் நடந்து, பண்பாட்டுத் தொடர்ச்சியை, காலத்தை வென்று நிற்கும் நடைமுறையாக்கிய மனிதர்களின் கதையை.

இந்தத் தெளிவே தமிழ் மொழியை ஒரு மாவட்ட மொழியாக, ஒரு மாநில மொழியாகச் சுருக்கிவிடாமல், ஓர் உயர்நாகரிகத்தின் மொழியாக உயர்த்திப் பிடிக்கும் பக்குவத்தை அளிக்கும். உண்மையில் கணியன் பூங்குன்றனும் வள்ளுவனும் நமக்கு வாசித்தளித்த வாழ்வியல் இதுதான். சுவர்களைவிட வலுவானது திறந்தவெளியின் சுதந்திரல் காற்று.

‘கிழக்கு வெளுக்கிறது கீழடியில்’ இது தொடக்கம்தான். இது தொடரும்; தொடர வேண்டும். இது மறைந்த கோட்டைகளின் மதில்சுவர்களுக்கான தேடல் மட்டும் அல்ல. மனித முயற்சியின் ஆழ அகலங்களைப் புலன்விசாரிக்கும் அக்கறை.

தமிழர் என்ற அடையாளம் - ஈழ நோக்கு        

கருணாகரன்

ண்மை, யதார்த்தம் என்பதற்கு அப்பால், தன்னுடைய அடையாளம் குறித்துப் பெரும்பாலும் கற்பிதங்களாலும் பெருமிதங்களாலுமே கட்டமைக்கப்பட்டுள்ளது தமிழ்ப் பொதுமனநிலை. இதற்கு, அது வரலாற்றில் எதிர்கொண்டிருக்கும் அரசியல், அறிவியல், பண்பாட்டு நெருக்கடிகளே முக்கியக் காரணம்.

மொழிப் பெருமிதம், பண்பாட்டுப் பெருமிதம், வரலாற்றுப் பெருமிதம், அறிவியல் பெருமிதம், சிந்தனைப் பெருமிதம் எல்லாம் இவற்றின் வெளிப்பாடுகள்தாம். காலனியாதிக்கம் உண்டாக்கிய நெருக்கடிகளும் அடையாள மேவுகையும் தனது அடையாளப் பேணுகை, மீளெழுச்சி, தகவமைப்பு பற்றிய அவசியத்தைத் தமிழ் மனதில் உண்டாக்கியது. இந்த மனநிலை தமிழர்களிடத்தில் மட்டுமல்ல, சிங்களவர்களிடத்திலும்கூட உருவானது. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் ஆங்கில மொழியும் கிறித்தவமும் இலங்கைச் சமூகங்களிடத்திலே தீவிரமாகச் செல்வாக்குச் செலுத்தின. இதற்காக மதத்தையும் கல்வியையும் முன்னிலைப்படுத்தி, இலங்கை முழுவதிலும் அரச ஆதரவுடன் இயங்கின கிறித்தவ மிஷனரிகள். ஏராளமான கிறித்தவப் பாடசாலைகள் நாட்டின் பெரும்பகுதியில் உருவாக்கப்பட்டன.

இதை எதிர்கொள்ளும் பொருட்டு சிங்களத் தரப்பில் மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பௌத்த சிங்கள மறுமலர்ச்சியின் தந்தையாக வர்ணிக்கப்படும் அநகாரிக தர்மபால தேரர் இதற்கென ‘மகாபோதி சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டார். ‘இலங்கை வரலாறு’ என்று கூறப்படும் ‘மஹாவம்சம்’ என்ற சிங்கள பௌத்த மையப்படுத்தப்பட்ட வரலாறு, மிகத் தீவிரமாக மீள்கட்டமைப்புச் செய்யப்பட்டது. இலங்கையின் ஆதிக்குடிகள் சிங்களவர்களே எனவும் இயக்க வம்சத்தின் வழியாக வந்தவர்கள் இவர்களென்றும் இந்த வரலாறு கூறியது. சிங்கத்தோடு கூடிப் புணர்ந்து பிறந்த பிள்ளைகளே சிங்கள வம்சத்தின் முதல்தலைமுறையைச் சேர்ந்த விஜயவாகுவும் விஜயவல்லியும் என்ற புனைவுருவின்மூலம் இது மேலும் சமூக மனதில் நிலைப்படுத்தப்பட்டது. சிங்கள பௌத்தத்தின் பிந்தைய காலப் பேரெழுச்சி இதன்போதே ஏற்பட்டது. இது பின்னாளில் சிங்களத் தேசியவாதமாக உருவெடுத்தது. இந்தச் சிங்களத் தேசியவாதம், கிறிஸ்தவத்தையும் ஆங்கிலத்தையும் அந்நிய ஆதிக்கத்தையும் எதிர்த்ததோடு மட்டும் நிற்கவில்லை. தமிழையும் தமிழர்களையும் எதிர்க்கும் போக்கினையும் பின்னாள்களில் (சுதந்திரத்துக்குப் பிறகு) உருவாக்கியது. இதற்கான உளவியல் காரணம், தமிழும் தமிழர்களும் இன்னோர் அதிகார, ஆக்கிரமிப்பின் பின்னணியைக்கொண்டிருக்கின்றன என்பதுவேயாகும். சிங்கள மனதில், தமிழ் மொழியும் தமிழர்களும் ‘இந்திய (தமிழகத்தின்) ஆக்கிரமிப்பின் வடிவம்’ என்ற வகையிலேயே பதியப்பட்டுள்ளது.

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

சிங்களர்களிடத்தில் அநகாரிக தர்மபால தேரரைப்போல, தமிழர்களிடத்திலே ஆறுமுக நாவலர் தலைமையிலான எழுச்சி உருவானது. ஆறுமுகநாவலர் சைவத்தையும் தமிழையும் மையமாகவைத்து இந்த அடையாள நிறுவுகை – மீளுருவாக்கப் பணிகளைச் செய்தார். கூடவே,
சி.வை.தாமோதரம்பிள்ளையின் பதிப்புத்துறை முயற்சிகளும் ஒரு வகையில் இதற்கு உதவியாக அமைந்தன.

தமிழ்ப் பண்பாட்டின் வரலாற்றுச் சிறப்பையும் அதற்கு அடிப்படையாக இருக்கும் தமிழின் இலக்கியச் செழுமை, இலக்கணச் சிறப்பு எல்லாவற்றையும் சமூகமயமாக்கும் முயற்சியில் ஆறுமுகநாவலர் தீவிரமாகச் செயல்பட்டார். இதற்காக அவர் தமிழகத்திலிருந்து அன்றைய சூழலில் உருவாக்கப்பட்டிருந்த நூல்களோடு, அங்கிருந்த கருத்துநிலையையும் இலங்கைக்குக் கொண்டுவந்து சேர்த்தார். கூடவே, தமிழகத்திலிருந்து இந்தப் பரவலாக்கப் பணிகளுக்காக அச்சு இயந்திரத்தையும் எடுத்து வந்தார்.

சி.வை.தாமோதரம்பிள்ளை சைவத்தை முன்னிலைப்படுத்தவில்லை. அவருடைய முயற்சிகளும் சிந்தனையும் தமிழ்மொழியின்பாற்பட்டே இருந்தன. என்றாலும், தமிழடையாள மீள்நிலைப்படுத்துகைக்கு அவை தாராளமாக உதவின. அடுத்தகட்டமாக, சுவாமி விபுலாநந்தர் இதை இன்னொரு கட்டத்துக்கு வளர்த்துச் சென்றார். தமிழ்த் தேசியத்தின் மூலக்கூறுகளை விபுலாந்தரின் பணிகள் உருவாக்கின. இவையெல்லாம் இணைந்தும் கலந்துமே பின்னாளில் ஈழத்தில் தமிழ்த் தேசியவாதமாக உருத்திரண்டன. இதன் முழுமைப்படுத்தப்பட்ட வடிவம், இலங்கை சுதந்திரம் பெற்ற 1948-க்குப் பிறகே உருவானது. பிறகது முற்றுமுழுதாக அரசியல் ரீதியானதாக மாறியது. அப்படி மாற்றமடையும்போது, அரசியல் தன்னியல்பில் கொள்கின்ற அதிகாரத்தை மையப்படுத்திய நோக்கில், தமிழ் அடையாளம் குறித்த ஏராளமான கற்பிதங்களும் பெருமிதங்களும் புனைவுருவாக்கமாகின.

பொதுவாகவே தேசியவாத எழுச்சிகளில் அடையாள நிறுவுகை மேலோங்குவதுண்டு. இதற்கமையத் தன்னைக் கட்டமைத்துக்கொள்வதற்கும் தகவமைத்துக்கொள்வதற்கும் பொருத்தமான கருத்துநிலையை இந்த தேசியவாதச் சிந்தனை உருவாக்க முயலும். இதற்கு மொழி, நிலம், பாரம்பரியம், பண்பாடு, மரபு, கலை, இலக்கியம் என்ற மூலக்கூறுகளில் தன்னுடைய வேர்களைத் தேடித் தனக்கான சாற்றினை எடுத்துக்கொள்ளும். இந்த அடையாள நிறுவுகைக்கு தமது வரலாற்று மூலங்களைக் குறித்த கற்பிதங்களும் பெருமிதங்களும் பலவாக இருக்கும். இலங்கையிலும் இதுதான் நிகழ்ந்தது. தமிழ்த் தேசியவாதம், சிங்களத் தேசியவாதம் என்ற இருநிலை எழுச்சிகள் ஒன்றை ஒன்று மேவுகின்ற விதமாகப் புனைவுகளை அடுக்கின. பிரித்தானியரி டமிருந்து சிங்களத் தரப்பின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதால், தமிழ்த் தரப்பு

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

தொடர்ச்சியாக நெருக்கடிக்குள்ளாகியது. பிரித்தானியர் உருவாக்கியிருந்த நெருக்கடியைவிட சிங்கள ஆட்சியாளரின் நெருக்கடி இன்னொரு விதத்தில் மிகத் தீவிரமாக இருந்தது. இதனால், அதை எதிர்கொண்டெழுவதற்காக, ‘தமிழ்ப் பண்பாடும் வரலாறும் வாழ்வும் மிகச் சிறப்பானது, தொன்மையானது, வரலாற்றுக்கு முற்பட்டது என்று தொடங்கி ஆண்டபரம்பரைக் கதைகள் பலவும் அடையாளப் பேணுகைக்கான முன்னரங்காக அடுக்கப்பட்டன. இதற்கு வாய்ப்பாக தமிழகத்தில் அக்காலத்தில் எழுச்சியடைந்திருந்த தமிழ்ச் சிறப்புப் பற்றிய கதையாடல்களும் திராவிடக் கருத்தியலும் வலுசேர்த்தது. ஆனால், திராவிடக் கருத்தியலில் பெரியார் முன்னிலைப்படுத்திய அடையாளங்கள் எதுவும் இலங்கையில் பகிரப்படவோ பரவலாக்கம் பெறவோ இல்லை. பதிலாக, தி.மு.க மேடைகளிலும் தமிழ்நாட்டுப் பொதுமனப்பாங்கிலும் உருவாக்கப்பட்ட ‘உலகின் முதல் குடி தமிழ்க்குடி, உலகின் முதல் மொழி, உலகிலேயே சிறந்த மொழி தமிழ், உலகுக்கே வழிகாட்டிய சிறந்த பண்பாடு, உலகமே வியக்கின்ற வீரமும் காதலும் தமிழர்களிடமே இருந்தது’ என்பது மாதிரியான பெருமிதங்கள் சமூகமயமாக்கப்பட்டன.

‘தமிழன் என்றோர் இனமுண்டு. தனியே அதற்கோர் குணமுண்டு’ என்ற புகழுரை ஈழத் தமிழர்களிடத்தில் ஓங்கியொலித்தது.  ‘கடாரம் வென்ற சோழர்கள் நம்மவர்கள்’ என்று ஒவ்வொருவரும் தங்கள் முதுகிலே தட்டிக்கொள்ளும் அளவுக்குத் தமிழர்களின் பெருமிதம் மேலோங்கியது. மனுநீதி கண்ட சோழன், சிபிச்சக்கரவர்த்தி, பாரிவள்ளல் என்ற பிம்பப் படிமங்கள் தமிழ் வரலாற்றுச் சிறப்பாக முன்னிலைப்படுத்தப்பட்டன. மட்டுமல்ல, இலங்கையை ஆட்சிசெய்த எல்லாள மன்னனின் சிறப்புகள் பலவிதமாக எடுத்துக் கூறப்பட்டன. இந்த எல்லாள மன்னன் சோழப்பரம்பரையைச் சேர்ந்தவர் என்ற அடையாளம் மேலும் சிறப்பிக்கப்பட்டது. சோழர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையின் பல இடங்களிலும் தனிச்சிறப்பான ஆட்சியை நடத்தினார்கள் என்பதும் பெருமையுடன் பேசப்பட்டது. இன்னும் இந்தப் புரிதலோடுதான் இது பற்றிய உரையாடல்கள் நடக்கின்றன.

இதிலே ஒரு வேடிக்கை உண்டு. சிங்களத் தேசியவாதம் அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக்கொள்ளவும் மீள்நிர்மாணிப்புச் செய்யவும் தன்னுடைய வரலாற்று மூலங்களின் வழியாக தேசியவாதத்தை உருவாக்கியது. பிறகு, அதை வைத்துக்கொண்டே தமிழ்த்தரப்பை ஆக்கிரமித்து அழிப்புச் செய்யவும் சிதைக்கவும் முற்பட்டது. தேசியவாத எழுச்சியின் விளைவே இதுதான்.

1950, 60, 70-களில் ஈழத் தமிழர்களிடத்திலே பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் மேடைகள் அப்படியே தமிழ்நாட்டின் தி.மு.க மேடைகளை ஒத்திருந்தன. வீரபாண்டிய கட்டபொம்மனுக்குப் பதிலாக வன்னியை ஆட்சிசெய்த(?) பண்டாரவன்னியனின் கதைகள் கூறப்பட்டன. அங்கே எட்டப்பன் என்றால் இங்கே காக்கை வன்னியன் காட்டிக் கொடுப்பாளனாகச் சித்திரிக்கப்பட்டான். இப்படியே, ‘எங்கள் தாத்தாவுக்கு யானை இருந்தது’ என்றவிதமாக ஒவ்வொருவரும் நெஞ்சை நிமித்திக்கொண்டு வரலாற்றுப் புகழ்பேசித் திரிந்தனர். ஆனால், அன்றாடம் காய்ச்சுவதற்குப் பலருக்குக் கஞ்சிக்கே வழியிருக்கவில்லை. இந்தப் பெருமித வரலாற்றுக்குள் புதையுண்டிருந்த பெண்ணொடுக்குமுறை, சாதீயக் கீழ்மைகள், பன்மைத்துவத்துக்கு எதிரான போக்கு, சுயவெளிப்படுத்துகை, ஜனநாயகத்தைக் குறித்த கேள்விகள் – விமர்சனங்கள், சிந்தனைகள் எதுவுமே இருக்கவில்லை. இதையிட்டுச் சிந்திக்கும் தரப்பினரும் இடதுசாரிகளும் ‘இதெல்லாம் பழைய பெருங்காயப் பானைச் சங்கதிகள்’ என்று சிறிய அளவில் எதிர்வினைகளை ஆற்றினர் அல்லது மெல்லிய புன்னகையுடன் இதைக் கடந்துசெல்ல முற்பட்டனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் இவர்களின் மீது ‘வரலாற்றுத் துரோகிகள்’, ‘இனத்துரோகிககள்’ என்ற அடையாள முத்திரை குத்தப்பட்டது. இதனுடைய வளர்ச்சி, விடுதலை இயக்கங்களிடத்திலும் மேலோங்கியது. இதிலும், இடதுசாரியச் சிந்தனையுடைய இயக்கங்கள் இந்த வரலாற்றுப் பெருமிதங்களையும் கற்பிதங்களையும் மெல்லிய புன்சிரிப்புடன் விலகி இயங்கின. விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இயக்கங்கள் தமிழ்ப்பெருமித வரலாற்றின் தொடர்ச்சியாகவே வளர்ச்சியடைந்தன.  “சாண்டில்யனின் ‘கடற்புறா’ தனக்குப் பிடித்த நாவல்” என்று பிரபாகரன் குறிப்பிட்டிருந்தமை இங்கே இந்தக் கற்பிதப் பெருமித வரலாற்றுச் சிந்தனைப்போக்கில் கவனிக்கத்தக்கது. மட்டுமல்ல, சோழர்களுடைய புலிக்கொடியை விடுதலைப்புலிகள் இயக்கம் கொண்டிருந்தது இன்னொரு சான்று.

சோழ மன்னர்கள் தமிழ் வரலாற்றுச் சிறப்பைக் கட்டமைத்தவர்கள், தமிழரின் வீரத்தை உலகுக்குக் காண்பித்தவர்கள் என்ற உருவகத்தை புலிகள் மனதெடுத்தனர். காதலுக்கும் வீரத்துக்கும் தமிழ் வாழ்வே உலகச் சிறப்புடையது என்ற வியாக்கியானங்கள் மேலெழுந்தன. சங்ககாலப் பெருமைகள் பேசப்பட்டன. ‘இவையெல்லாம் தமிழ்நாட்டின் சிறப்புகளே அன்றி, இலங்கையின் அடையாளங்களல்ல’ என்று சொல்லப்பட்ட கருத்துகள் நிராகரிப்புக்குள்ளாகி, தமிழ்நாடு, தாய்நாடு எனவும் ஈழம், சேய்நாடு எனவும் நிறுவப்பட்டது. முன்னரே கூறியிருப்பதைப்போல இந்த மாதிரியான விசயங்கள்தான் சிங்கள உளவியல் அச்சத்தை மேலும் வலுப்படுத்தின, இன்னும் உறுத்தலைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன என்பதைப் பலரும் கவனிக்கவில்லை.

இவ்வாறு கட்டமைக்கப்பட்ட புனைவுருக்களின் வளர்ச்சி, புலிகளின் பேரழுச்சியோடு மேலும் கேள்விக்கிடமில்லாமல் உயர்ந்தது. தனித்தமிழ் மொழியை (தூய்மை வாதத்தை) அமலாக்கும் சிந்தனைகள் புலிகளின் காலத்தில் மேலெழுந்தன. இதற்குப் பல தமிழ்ப் பேராசிரியர்களும் தமிழ்ப் பண்டிதர்களும் உதவினர். ஏறக்குறைய தனித்தமிழ் இயக்கத்துக்கு நிகரான செயல்பாட்டைப் புலிகள் 1990-களில் முன்னெடுத்தனர். அவ்வாறு, தமிழ் மரபுவாதிகளால் புலிகளுக்கு வழிகாட்டப்பட்டது. இதற்கான பின்னூட்டத்தைத் தமிழகத்திலிருந்த ஈழ ஆதரவுச் சக்திகளில் சிலவும் வழங்கியதுண்டு. ‘சங்ககாலம் மீண்டது’ என்ற ‘மகிழ்கதைகள்’ எங்கும் பேசப்பட்டன. புறநானூற்றுக் கால வீரக்கதைகளும் நடுகல் வழிபாடு பற்றிய வியாக்கியானங்களும் மீளுருவாக்கம் செய்யப்பட்டன. ‘ஆழக்கடலெங்கும் சோழமகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று, தமிழ் - ஈழக்கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று, காலை விடிந்தது என்று பாடு, சங்ககாலம் திரும்பியது ஆடு’ என்று விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் போற்றிப் புகழும் பாடல்கள் ஏராளமாகப் பாடப்பட்டன. பிரபாகரன் ‘கரிகாலன்’ என்று இன்னொரு சிறப்புப் பெயரிலும் குறிப்பிடப்பட்டார். புலிகள் இயக்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தமிழ்ப்பெயர் சூட்டப்பட்டது. அத்தனை பெயர்களும் தமிழ்நாட்டின் இலக்கியத்திலும் ஆட்சியிலும் குறிப்பிடப்பட்ட பெயர்களாகவே இருந்தன. இப்படிச் சங்ககாலத்துக்குத் திரும்பிய இந்தப் பார்வை, புறநானூற்று வீரத்தை - நீண்ட பல தலைமுறைகளாகத் தமிழர்கள் இழந்திருந்த வீரயுகத்தை, புலிகள் மீட்டெடுத்தனர் என்று கொண்டாடியது. ‘மீண்டெழுந்தது வீரயுகம்’ என்று புலிகளின் வீரத்தைப் புகழ்ந்துரைத்துப் பாடல்களும் கவிதைகளும் புனையப்பட்டன. தமிழ்நாட்டிலும் பிரபாகரனையும் புலிகளையும் இதே கோணத்தில் பார்க்கும் நிலை உருவானது.

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்சிங்கள பௌத்த மஹாவம்ச மேலாதிக்கத்துக்கான எதிர்ப்பு வடிவமாகக் கட்டமைக்கப்பட்ட தமிழ்த் தேசியவாதம், தமிழ்ச்சங்க காலத்துக்கும் சோழர்காலத்துக்கும் இடையில் கிடந்து ஊசலாடியது. எந்த வகையில் தன்னைக் கட்டமைப்பது என்ற குழப்பங்கள் உருவாகின. ஒரு சாரார் தமிழ்த் தேசியத்தைப் புதிய முறையில் நவீன தேசியத்தின் பண்புகளோடு விஞ்ஞானபூர்வமாகக் கட்டமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். முக்கியமாக, ‘ஜனநாயக உள்ளடக்கத்தைத் தமிழ்த் தேசியம் கொள்ளவேண்டும். அப்படிச் செய்யும்போதே அது பலமானதாக அமையும்’ என்றனர். ‘இப்படிச் செய்யும்போது, சாதிய, பால் (பெண்) ஒடுக்குமுறைகள் நீங்கும். பிரதேச வேறுபாடுகள், மதப் பிரிவினைகள் நீங்கி பன்மைத்துவத்துக்கான சூழல் உருவாகும் என்று வாதிட்டனர். அடையாளம் என்பது நிலையானதல்ல. அது  இடம், காலம், சமூக நிலை, அறிவு, துறைசார் அல்லது அறிவுசார் நிறுவனங்கள், கட்சிகள், அரசியல் போன்றவற்றின் செல்வாக்கினால் உருவாக்கப்படுவது. தனியாள் கோட்பாட்டாளுமைத்திறனும் இதில் செல்வாக்குச் செலுத்தும். இன்றைய நிலையில் ஜனநாயகத்துக்கான முன்னுரிமையும் சமகால அரசியல் பொருளாதாரச் சுற்றோட்டத்தைக் கவனித்து அதற்குரிய வகையில் பாரம்பரியத்தோடு இணைந்த நவீன உருவமைப்புச் செய்யப்படும் அடையாளமே பொருத்தமானது’ என்றனர்.

ஆனால், இதை ஏனைய தரப்பினர் பொருட்படுத்தவே இல்லை. அவர்கள் ‘தமிழன் என்றோர் இனமுண்டு, அதற்குத் தனித்தோர் குணமுண்டு’ என்ற மாதிரி, மொழி, பண்பாடு, நிலம், மதம், உடை, உணவு என அனைத்திலும் தூய்மைவாதம் பேணப்பட வேண்டும் என்றனர். 1990-ல் முஸ்லிம்கள் வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதும் அக்காலப்பகுதியில் தனித்தமிழ் மொழியை வலியுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதும் ஒத்து நோக்கப்பட வேண்டியது. மட்டுமல்ல, எல்லாவற்றுக்குமான பாதுகாப்புக்குப் பலத்தை உருவாக்குவதே வழியாகும் என வாதிட்டனர். குறிப்பாகச் சிங்களத் தேசியவாதத்தை எதிர்கொள்வதற்கு நிகரான தமிழ்த் தேசியவாதம் கட்டிறுக்கமாக இருக்க வேண்டும். அந்தப் பலத்தின் மூலமே நிலத்தையும் நிலத்தோடு இணைந்த வாழ்வுகொண்டிருக்கும் பண்பாட்டையும் மொழி மற்றும் ஏனைய தனித்துவங்களையும் பேணலாம் என்றனர். இதற்கு அரசியல் அதிகாரத்தின் மூலம் பெறப்படும் பலமே பாதுகாப்பானது என வலியுறுத்தப்பட்டது. ஆனால், ‘இந்த அரசியல் பலத்தை இலங்கைச் சூழலில் தமிழர்கள் பெற முடியாத அளவுக்குச் சிங்கள பௌத்த மேலாதிக்கம் இருப்பதால், அதை முறியடிப்பற்பதற்கு புலிகளின் ராணுவ பலம் தேவை’ என்றனர். இந்த அடிப்படையிலேயே புலிகளுக்குப் பேராதரவு கிடைத்தது.

சிங்கள பௌத்தப் பேரினவாதத்தினால் மொழி, நிலம், பண்பாடு உள்ளிட்ட அடையாள அழிப்புகள் அல்லது ஆக்கிரமிப்பு நெருக்கடிகளுடன் உலகமயமாதலினால் உருவாகும் அடையாளச் சிதைவுகளுக்கும் இழப்புக்கும் எதிராக – மாற்றாக – பாரம்பரியத்தை மீள்கட்டுமானம் செய்யும் முயற்சிகள்  தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. ஆனால், புலிகளின் வீழ்ச்சி இந்த எண்ணத்திலும் செயற்பாட்டு முறையிலும் பேரிடியாக அமைந்தது.

என்றாலும், கருத்து நிலையிலும் பண்பாட்டுப் பொறிமுறையிலும் மாற்றங்களோ படிப்பினைகளோ நிகழவில்லை. மீளவும் வரலாற்றுப் பெருமிதங்களின் வழியே இப்போதும் இதுவே நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், இதற்குள்ளே - இந்தப் பெருமிதங்களுக்கும் இந்தப் பெருமிதங்களை உற்பத்தி செய்யும் கற்பிதங்களுக்குள்ளும் கிடந்து நாறிக்கொண்டிருக்கும் பால் சமத்துவமின்மையைப் பற்றி, சாதீயக் கொடுமையைப் பற்றியெல்லாம் தமிழ்ப் பண்பாட்டு மனம் கவலைப்படுவதில்லை. இவையெல்லாம் தமிழர் என்ற அடையாளத்துக்கும் தமிழின வளர்ச்சிக்கும் எதிர்நிலை அம்சங்களே என்றும் உணர்வதில்லை.

போரினாலும் அரசியல் நெருக்கடிகளினாலும் 20 லட்சத்துக்கும் அதிகமான ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து உலகின் பல நாடுகளிலும் வாழ்கின்றனர். இவர்கள் தாங்கள் வாழ்கின்ற நாடுகளிலும் இந்தத் தமிழ்க் கற்பிதங்களையும் பெருமிதங்களையும் அவற்றின் அடியில் கிடக்கும் கீழ்மைகளையும் பேணிக்கொண்டே வாழ்கின்றனர். இன்னும் செழிப்பாகச் சொன்னால், புலம்பெயர்ந்தவர்

களி்டத்தில்தான் இன்னும் இந்த பாதக உணர்நிலை கூராக உள்ளது. தாங்கள் வாழ்கின்ற சூழலின் தாக்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், தங்களுடைய மொழியும் எண்ணங்களும் பண்பாடும் செயற்பாட்டு வலுவை இழந்துகொண்டிருப்பதன் ஆற்றாமையே இது. இதைக் கடந்து முன்னகர வேண்டும் என்று சிந்திக்க முடியாத பதற்றம் இவர்களிடத்திலே காணப்படுகிறது. இந்தப் பதற்றமே மீள மீள எண்ணற்ற கற்பிதங்களையும் பெருமிதங்களையும் உண்டாக்குகிறது. இது சங்ககால, சோழர்காலப் பெருமிதங்கள் மட்டுமல்ல, கடந்த சில தலைமுறைகளுக்கு முந்தியகாலப் பெருமிதங்களாகவும் உள்ளன.

இதற்குப் பதிலாக – இந்த உளக் கொந்தளிப்புக்கும் இடர்பாடுகளுக்கும் பதிலாக – அறிவுப்பூர்வமாக வரலாற்றையும் பண்பாட்டையும் சமகால, எதிர்கால வாழ்வுக்கு ஏற்ற வகையில் மீள்கட்டமைப்புச் செய்வதே பொருத்தமானதாகும். இதற்கு அறிவுச் செயற்பாடுகளே அவசியம். இதற்கான கலை, இலக்கிய, மொழி, வரலாற்று, அறிவியல் செயல்பாட்டு ஆளுமைகளும் அதற்கான மெய்நிறுவனங்களுமே தேவை. இந்தப் பலமே மெய்யான அடையாளப் பேணுகையையும் நிறுவுகையையும் மீளுருவாக்குகையும் செய்யும். இதை யார் உணர்வார், எப்படித் தாழ்ந்து பறக்கும் தமிழ்க்கொடியை மேலுயர்த்துவது?

அடையாள அரசியல் என்பது விடுதலை அரசியல் இல்லை

யமுனா ராஜேந்திரன்

1965-2009-2017 இந்த மூன்று ஆண்டுகளும் தமிழர்களின் அரசியல் அடையாளத்தை உருவாக்கிய ஆண்டுகள். இந்தி எதிர்ப்புப் போராட்டம், முள்ளிவாய்க்கால் பேரழிவு, தை எழுச்சி என்பன இந்த ஆண்டுகளின் நிகழ்வுகள். மாணவர்கள், இளைஞர்கள், தமிழ்க் குடிமைச் சமூகத்தினர் பங்கு பற்றியதாக இந்த நிகழ்வுகள் இருந்தன. காலனியம் இந்தியத் துணைக்கண்ட நாடுகளைவிட்டு விலகியபோது, பல்லின நாடுகளான தேசிய அரசுகளைக்கொண்ட, மையப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்கு எதிரான, பல்லின நாடுகளில் இனத்தேசிய உணர்வு என்பது நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது இந்த இனத்தேசிய உணர்வை இந்திய தேசிய அரசுக்கு இளைஞர்களும் மாணவர்களும் வெளிப்படுத்தியதொரு தருணம்.

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்


இனத்தேசிய அடையாளம் என்பது எப்போதும் குறிப்பிட்ட சமூகத்தை முன்னுந்திச் செல்ல வேண்டும் என்பது இல்லை. பெனான் சொல்வதுபோல அது உள்ளீடற்ற ஒரு போராட்ட வடிவம். அதிர்ஷ்டவசமாக இனத்தேசிய உணர்வு என்பது, தமிழகத்தைப் பொறுத்தவரை ஜனநாயக வடிவம் கொண்டதாகவும் சமூகநீதி, சுயமரியாதை தனிநபர் தேர்வு, விடுதலை எனும் தத்துவ உணர்வு கொண்டதாகவும் இருந்தது. அண்ணா அடிப்படையில் ஒரு ஜனநாயகவாதி. பெரியார் மானுட விடுதலையை முன்னிறுத்திய ஒரு தத்துவவாதி. நடைமுறையில் சாதி ஒழிப்பு, சமூகநீதி, அதிகாரப் பகிர்வு, பெண்விடுதலை என்பது அதனது அரசியல். இந்தியச் சூழலில் சமத்துவச் சமூகம் இதன் அடிப்படையில்தான் கட்டப்பட முடியும். பல்லின நாடான முழு இந்தியாவுக்கும் திராவிட மரபின் பங்களிப்பு என்பது இதுதான்.

இந்தியாவில் வாழும் பிற எந்தத் தேசிய இனத்தைவிடவும் சர்வதேசிய அரசியல் பிரக்ஞைகொண்ட ஓர் இனமாகத் தமிழர்களே இருக்கிறார்கள். புவி சார்ந்த சிற்சில வேறுபாடுகள் தமிழகத் தமிழருக்கும் ஈழத்தமிழருக்கும் இருந்தாலும் இனத்தேசிய இறையாண்மைக்கான போராட்டத்தில், புரட்சிகர ஸ்தாபனம், உள்நாட்டு மற்றும் பிராந்திய  சக்திகள் இதனோடு சர்வதேசிய நாடுகள் ஒரு போராட்டத்தில், அதன் உருவாக்கத்தில் கொண்டிருக்கும் பங்கு என்ன என்பதை ஓர் இனத்தின் கூட்டுப்பிரக்ஞையாக உணரச் செய்ததில் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு மகத்தான பங்கு இருக்கிறது.

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

ஈழவிடுதலைப் போராட்டத்தின் நிகழ்முறையும், அது இடைக்கால அரசின் கட்டுமானத்தின்போது எழுப்பிய பிரச்னைகளும், அதன்போக்கில் அது எதிர் கொண்ட நெருக்கடிகளும் எதிர்காலத் தமிழகம் எவ்வாறு அமைய வேண்டும் எனும் படிப்பினைகளைத் தமிழகத் தமிழர்களுக்கு விட்டுச்சென்றிருக்கிறது. மதச்சார்பற்ற தமிழகம், வந்தேறி வெறுப்பு அரசியலை நிராகரித்த ஒரு தமிழகம், சாதி மறுத்த தமிழகம், சுயநலம் அகற்றிய தலைமை, அமைப்பினுள் அரசியல் மாறுபாடுகளைக் கருத்துப் பகிர்வினால் மேவிச் செல்லும்முறை என்பதெல்லாம் முள்ளிவாய்க்கால் பேரழிவு, தமிழகம் - ஈழம் என்ற இரு நிலப்பரப்புகளிலும் வாழும் தமிழர்களுக்கு விட்டுச்சென்றிருக்கும் செய்திகள்.

சோவியத் யூனியனில் சோசலிசத்திற்கு நேர்ந்த பின்னிடைவு, வம்சாவளி ஆட்சிகளில் வெகுமக்களுக்கு ஏற்பட்ட கசப்புஉணர்வு, மேலைத்தேய-அமெரிக்க நாடுகளில் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி, தகவல் தொழில்நுட்பச் சாதனங்களின் பரவலால் சமூக ஊடகங்களில் ஏற்பட்ட பாய்ச்சல், போன்றவை மரபான அரசியல் கட்சிகளுக்கு வெளியில் குடிமைச் சமூகத்தின் எழுச்சியை உலகெங்கிலும் தோற்றுவித்தது. எகிப்து தாஹிரர் சதுக்கத்தில் அரபுலகில் ஏற்பட்ட வெகுமக்களின் எழுச்சி, அமெரிக்காவில் வால்ஸ்ட்ரீட்டில் ஏற்பட்ட எழுச்சி, இங்கிலாந்தில் ஏற்பட்ட கறுப்பின இளைஞர்களின் எழுச்சி போன்றவற்றின் பாடங்களைச் சுவீகரித்ததாகத் தமிழகக் குடிமைச் சமூகத்தின் ‘தை எழுச்சி’ நிகழ்வு வெளிப்பட்டது.

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

‘தை எழுச்சி’ கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட எழுச்சிகளிலேயே மிக முக்கியமானது. குழந்தைகளும் ஆண்களும் பெண்களும் முதியவர்களும் கட்சிகளுக்கு அப்பால், சாதி மதங்களுக்கு அப்பால், தமிழகத்தின் முக்கியமான நகரங்களின் சதுக்கங்களில் திரண்ட ஒரு நிகழ்வு அது. மத்திய அரசின் பாரபட்சம், கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம், தமிழக வளங்களின் மீதான மக்களின் கோருதல், முள்ளிவாய்க்கால் பேரழிவின் துயரம், எல்லாமும் சேர்ந்து வெகுமக்களின் எழுச்சியாக வெளிப்பட்டது. ஜல்லிக்கட்டு என்பது ஒரு குறியீடு மட்டுமே. அதை மட்டுமே அறுதியாக நிறுத்தியவர்கள் அரசின் கையாள்களாக ஆகினர். வேறுபட்ட கோரிக்கைகளை எழுப்பியவர்கள், காவல்துறையின் வன்முறைக்கு ஆளானார்கள். மீனவ மக்கள் தனிமைப் படுத்தப்பட்டு வேட்டையாடப்பட்டார்கள்.

குவிக்கப்பட்ட மத்திய அரசு அதிகாரம், ஏவப்படும் இந்துத்துவப் பெருந்தேசிய உணர்வு என்பதற்கு எதிரான, மதச்சார்பற்ற, சாதி கடந்த, பெண்ணுரிமை போற்றும் தன்னிறைவு தேசியமாகவே தமிழகத் தேசியம் இன்று எழுந்திருக்கிறது. பாரம்பர்யமான தேர்தல் திராவிடக் கட்சிகளின் மீது குடிமைச் சமூகம் வெறுப்புற்றிருக்கிறது. இனத்தேசிய விடுதலை உணர்வு இளைஞர்களிடம் வீறுபெற்றிருக்கிறது. இதன் விளைவாகவே கட்சிகளுக்கு வெளியில் புதிய சமூக இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன.

விடுதலை அரசியலாக எழுந்த தமிழகத் தலித் அரசியல் என்பது, காலப்போக்கில் தம்மால் கடந்துபோக முடியாத தனித்த சாதி அடையாள அரசியலாக வந்து முடிந்திருக்கிறது. அடையாள அரசியல் என்பது, பொதுஎதிரிக்கு எதிராக ஒருங்கிணைவை உருவாக்க முடியவில்லையானால் அது தம்மை விடுவித்துக்கொள்ள முடியாது. அடையாள அரசியல், தனது தனித்த அடையாளங்களை நிலைநாட்டிக்கொண்ட பின்னால், பரஸ்பர அடையாளங்களை ஒப்புதல் என நகர்ந்து, ஒன்றுபடுதல் என்னும் இடத்தை நோக்கிச் செயல்பட வேண்டும்.

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

தமிழக தலித்தியம் என்பது வித்தியாசம் என்பதன் அடிப்படையில்தான் தனது கோட்பாட்டை வடிவமைத்தது. இன்று அதன் அடிப்படையில் மூன்று தனித்தனிக் கட்சிகள் இருக்கின்றன. இவர்களுக்கு இடையிலான முரண்கள் உச்சத்தை அடைந்திருக்கின்றன. ஆதிதிராவிட மக்களின் பாலான பாரபட்ச உணர்வை விடுதலைச் சிறுத்தைகளின் கோட்பாட்டாளர் வெளிப்படுத்துகிறார்.  ‘அவர்களுக்கு உள்ஒதுக்கீடு தரக் கூடாது’ என்ற ‘புதிய தமிழகம்’ முழுமையாகத் தலித் விடுதலை என்பதை மறுத்துவிட்டு ஆண்ட பரம்பரை அரசியலை முன்வைக்கிறது. சந்தையூர் சுவர்ப் பிரச்னையில் ஒரு குறிப்பிட்ட சாதியைப் பிரதிநிதிப்படுத்து வதாகவே விடுதலைச் சிறுத்தைகள் நிற்கிறது. வித்தியாசம் என்பதன் அடிப்படையில் எழும் அடையாள அரசியலின் எல்லை இதுதான்.

அடையாள அரசியல் என்பது கலாசார அரசியல். இந்த அரசியல் பொருளாதாரத்தைப் பகிரும் அரசியலாக, பிறரை அங்கீகரிக்கும் ஜனநாயக அரசியலாக ஆகாதவரை விடுதலை அரசியலாக ஆக முடியாது. அடையாள அரசியலின் எல்லை இதுதான். இன்று விடுதலை அரசியல் என்பது வர்க்கம், மதம், இனம், சாதி, பாலினம் என அனைத்தையும் ஊடறுத்துச் செல்கிறது. அடையாள அரசியல் என்பது இவற்றுள் ஏதோ ஒன்றை மட்டுமே முழுமையானதாகத் தேர்ந்துகொள்கிறது. இவற்றுக்கு இடையிலான ஊடாட்டம்கொண்ட இணைவுப் பார்வையே விடுதலை அரசியலாக ஆக முடியும்.

தமிழ்க் கிறிஸ்தவப் பண்பாடு

ஆ.சிவசுப்பிரமணியன்

ரு சமூகத்தின் பண்பாடானது அச்சமூகத்தினரின் உணவு, ஆடை, பழக்கவழக்கங்கள், பயன்படுத்தும் பொருள்கள் என்பனவற்றின் வாயிலாக மட்டுமின்றி அங்கு வாழும் மக்கள் பின்பற்றும் சமயத்தின் வாயிலாகவும் வெளிப்படும். இவ்வகையில் தமிழ்நாட்டில் நிலவும் கிறிஸ்தவமும் தன் பங்கிற்குச் சில பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தி நிற்கிறது.

யூதப் பண்பாட்டில் உருவான கிறிஸ்தவம் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவியது. பின்னர் போர்ச்சுக்கீசியர், டச் நாட்டினர், டேனிசியர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகிய ஐரோப்பியக் காலனியவாதிகளின் வாயிலாக, 16-வது நூற்றாண்டிலிருந்து அறிமுகமாகி, வளர்ந்து பரவியது. இது தோன்றிய நாடு, இதை இங்கு அறிமுகம்  செய்வித்தோர் என்பனவற்றின் அடிப்படையில் நோக்கினால், இது அயல்பண்பாடு சார்ந்தது. ஆனால், காலப்போக்கில் இது தமிழ்நாட்டின் பண்பாட்டுக் கூறுகளையும் விழுமியங்களையும் உள்வாங்கிக்கொண்டது. ‘பண்பாடு ஏற்றல்’ (Iculturation) என்று சமூகவியலாளர் கூறுவதற்கு ஏற்ப, ஐரோப்பியக் காலனியவாதிகளால் அறிமுகமான ‘கிறிஸ்தவம்’, பண்பாடு எற்றல் வாயிலாக ‘தமிழ்க் கிறிஸ்தவம்’ என்ற அடையாளத்தைப் பெற்றது.

உலகளாவிய கிறிஸ்தவ மதத்திற்குத் தமிழ்க் கிறிஸ்தவம் என்ற அடைமொழி வழங்குவது குறித்துச் சிலர் மாறுபடுவதும் உண்டு. இது தொடர்பான விவாதத்தில், யார் மதம் மாறினார்கள், மதம் மாறிய பின்னர் அவர்களது சமூக வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் எவை என்பது ஆராயப்பட வேண்டும்.

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

மதம்மாறியோர்

தமிழகத்தின் அடித்தள மக்கள் பிரிவினரே அதிக அளவில் கிறிஸ்தவர்களாக மதம் மாறினர். இம்மதமாற்றத்தில் தனி மனிதர்களைவிட சாதி அடிப்படையிலான குழுக்களே அதிக அளவில் பங்கேற்றன. இதனால், இம்மதமாற்ற நிகழ்வுகளைக் குழும மதமாற்றம் அல்லது வெகுதிரள் மதமாற்றம் (Mass Coversion) என்றழைத்தனர். சமூகப் பாதுகாப்பு, சமூக உயர்மதிப்பு என்பனவே இம்மதமாற்றத்தின் அடிப்படை நோக்கங்களாக அமைந்தன. ஏனெனில்,  இவை இரண்டும் மறுக்கப்பட்டவர்களாகவே மதம்மாறிய அடித்தளமக்கள் வாழ்ந்து வந்தனர்.

மறுக்கப்பட்ட உரிமைகள்


கல்வி கற்றல், பொதுத் தெருக்களில் நடமாடுதல், கோயில் நுழைவு, சொத்துரிமை என்பன இம்மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்தன. இவ்வாறு பொதுவெளியிலும் பொது நிறுவனங்களிலும் இயங்குவதற்குத் தடை அல்லது கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தவர்கள், மதம் மாறிய பின்னர் அதற்கு இணையான புதிய உரிமைகளைப் பெற்றார்கள்.

புதிய உரிமைகள்

கோயில் நுழைவு மறுக்கப்பட்டிருந்தவர்கள், தேவாலயம் சென்று கூட்டிசை (காயர்) பாடுவோருடன் இணைந்து பாடி அனைவருடன் கூட்டு வழிபாட்டில் (காங்கிரிகேஷனல் பிரேயர்) பங்கேற்கும் உரிமையைப் பெற்றனர். முறைப்படுத்தப்பட்ட மன்றாட்டுகளை (ஜெபம்) அனைவருடன் இணைந்து உரக்கக் கூறினர். கோயில் பூசகரின் பணி கிட்டாதிருந்தவர்களுக்கு, தேவாலயக் குருக்களின் ஆன்மிகப் பணி கிட்டியது. சமயப் புனித நூல்களைப் பயிலும் உரிமை மறுக்கப்பட்டிருந்தவர்களின் கரங்களில் வேதப்புத்தகம் என்ற பெயரில் விவிலியம்(பைபிள்) இடம்பெற்றது. அதைப் படித்தறியும் கல்வியும் கிட்டியது. சைவ வைணவக் கோயில்களில் வழிபாட்டின் இறுதியில் வழங்கப்படும் பிரசாதத்தைப் பெற முடியாதிருந்தவர்கள், தேவாலய வழிபாட்டின் நற்கருணைச் சடங்கில் திரு அப்பமும் திரு ரசமும் குருவிடம் இருந்து பெற்றார்கள்.

மற்றொரு பக்கம், தம் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் இம்மக்கள் இழந்தனர். குறிப்பாக, ‘ஓர் இறை’ கோட்பாட்டை வலியுறுத்தும் கிறித்துவத்தைத் தழுவிய  பின்னர், பல தெய்வங்களை வழிபடுவதைக் கைவிட்டனர். அதேசமயம், தம் வழிபாட்டு முறைகளிலும் வாழ்க்கை வட்டச் சடங்குகளிலும் தமிழ்மண் சார்ந்த பண்பாட்டுக் கூறுகளையும் அடையாளங்களையும் உள்வாங்குதலையும் மேற்கொண்டனர். இதைப் பண்பாடு ஏற்றல் எனலாம். இது, சமயம் சார்ந்தும் வாழ்வியல் சார்ந்தும் வெளிப்படுகிறது.

சமயம் சார்ந்தவை

பண்டைத் தமிழர் சமயவாழ்வில், தெய்வங்களுக்குப் படையலாகத் தானியங்கள், விலங்குகள், காய்கறிகள், பால் என்பனவற்றைக் காணிக்கையாகச் செலுத்தும் பழக்கம் இருந்துள்ளது. சங்க இலக்கியங்களும் காவியங்களும் இதைக் குறிப்பிடுகின்றன. இன்றும் ஓரளவுக்குச் சைவ வைணவக் கோயில்களிலும் பேரளவில் நாட்டார் தெய்வ வழிபாட்டிலும் இம்முறை தொடர்கிறது. தமிழ்க் கிறிஸ்தவர்களிடமும் இது வழக்கத்தில் உள்ளது.

வேளாண்மை மேற்கொள்ளும் கிறிஸ்தவர்கள், முதல் விளைச்சலைத் தேவாலயத்தில் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். மாடு, கன்று ஈன்ற பின் சுரக்கும் முதல் பாலையும் வீட்டில் வளர்க்கும் கோழி இடும் முதல் முட்டையையும் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். பதநீர் இறக்கும் பருவத்தில் முதல் முறையாகப் பதநீர் இறக்கியதும் அதைக் காணிக்கையாகப் படைப்பதுடன் தேவாலய வழிபாட்டில் கலந்துகொள்வோருக்கும் வழங்குகிறார்கள். முதற்பலனை காணிக்கையாக வழங்குவதை விவிலியம் குறிப்பிடுகிறது. இதனால், இச்செயல்கள் சமய முரண்பாடாகப் பார்க்கப்படுவதில்லை.

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

உப்பையும் மிளகையும் கலந்து காணிக்கையாகப் படைக்கும் வழக்கம் சைவக் கோயில்கள் சிலவற்றில் உண்டு. இம்மரபுதாம் கத்தோலிக்கர்களிடம் இன்றளவும் உள்ளது. விவிலியத்திலும் அவர்களது மன்றாட்டுகளிலும் உப்பு இடம்பெற்றுள்ளது. ‘உப்பைப்போல் சாரமுடையவர்களாக இருங்கள்’ என்பது இயேசுவின் வாக்கு. இக்காரணங்களால் உப்புக்காணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது எனலாம். முளைப்பாரி எடுத்தல் என்னும் சமயச் சடங்கு தமிழ்நாட்டில் பரவலாக அறிமுகமான ஒன்று. கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி வீடுகளில் முளைப்பாரி வளர்த்து, கிறிஸ்துமஸ் இரவு அன்று தேவாலயத்தில் கொண்டு சேர்ப்பார்கள். தேவாலய வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இயேசு பாலன் குடிலில் அது வைக்கப்படும்.

முளைப்பாரி வளர்ப்பில் தற்போது மறைந்துவரும் ஒரு நிகழ்த்துகலை, ‘முளைக்கும்மி’ என்று அழைக்கப்படும் முளைப்பாரிக் கும்மி. இதைச் சடங்கியல் தன்மையுடன் கூடிய நிகழ்த்துக்கலை எனலாம். இக்கும்மிப் பாடலில் ஒவ்வொரு நாளும் நிகழும் தானிய முளையின் வளர்ச்சி வருணிக்கப்படுவதுடன் பல்லவிச் சொல்லாகக் குறிப்பிட்ட தெய்வத்தின் பெயர் இடம்பெறும்.சான்றாக, பத்திரக்காளியம்மன் கோயில் திருவிழாவுக்காக வளர்க்கப்படும் முளைப்பாரி வளர்ப்பில் பாடப்படும் முளைக்கும்மியில்,

 ‘முதல் நா(ள்) முண்டும் முளை
அம்மா பத்திரக்காளி முளை’


என்று பாடுவர். கத்தோலிக்கக் கிறிஸ்தவர் முளைக்கும்மியில் பல்லவிச் சொல் இயேசு பாலகரை மையமாகவைத்து அமையும். சான்றாக,

‘மூன்றானத்து முண்டும் முளை
நம்ம திவ்வியன் பாலன் முளை’


என்று பாடுவர்.

இவை தவிர தேரிழுத்தல், சப்பரம் தூக்குதல், திருநீற்றுப் புதன், அனைத்து ஆன்மாக்கள் திருநாள், பனையோலையில் செய்யப்பட்ட சிலுவையுடன் குருத்தோலை திருநாளன்று ஊர்வலமாகப் போதல் என்பனவற்றில் தமிழர்களின் சமயப் பண்பாட்டின் தாக்கத்தைக் காண முடியும். இதுபோன்றே புனிதர்கள் பக்தி முயற்சியிலும் தமிழர் சமயப் பண்பாட்டின் தாக்கம் உண்டு. பொங்கலிடல், கரும்புத் தொட்டில் சுமத்தல் என்பன புனிதர் பக்தி முயற்சியில் இடம்பெறுகின்றன. சிவகங்கை மாவட்டம் கண்டுப்பட்டி கிராமத்தில், அந்தோனியார் திருவிழாவின்போது மாடுபிடித்தல் வீர விளையாட்டு நிகழ்கிறது.வைணவர்களும் சைவர்களும் தம் சமயப் புனித நூல்களில், ‘நூல் சாற்றிப் பார்த்தல்’ என்ற பெயரில் நற்குறி காண் சடங்கு மேற்கொள்வதைப் போன்று கிறிஸ்தவர்களும் தம் விவிலிய நூலில் நூல் சாற்றிப் பார்த்து நற்குறி காண்கிறார்கள்.

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

உலகியல் சார்ந்தவை

சமய வாழ்வில் மட்டுமின்றி, தம் குடும்ப வாழ்க்கையிலும் வாழ்க்கை வட்டச் சடங்குகளிலும் தமிழர்களின் சமயப் பண்பாட்டுத் தாக்கம் தமிழ்க் கிறிஸ்தவர்களிடம் உள்ளது. குழந்தையைத் தாலாட்டும் தாய், தன் குழந்தையை மாடப்புறாவாக உருவகித்து,

‘மாடப்புறாவே - நீ

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

மழைக்கெல்லாம் எங்கிருந்தாய்’
என்று வினவ, அதற்கு,
‘கோலச் சிறகொடுக்கி
செந்தூர் குமரன் கோவில்
கோபுரத்துள் நானிருந்தேன்’


என்று குழந்தை விடையளிக்கிறது. இதே பாடல் கத்தோலிக்கரிடம் பின்வருமாறு வழங்குகிறது.

‘மாடப்புறாவே - நீ
மழைக்கெல்லாம் எங்கிருந்தாய்?
கோலச் சிறகொடுக்கி
கோட்டாறு சாவேரியார்
கோபுரத்துள் இருந்தேன்’


இதுபோல் வேறுபல தாலாட்டுப் பாடல்களும் உள்ளன.

எதிர்மறைக் கூறுகள்

தமிழ்ப் பண்பாட்டின் எதிர்மறைக் கூறாகச் சாதி வேறுபாடும் தீண்டாமைக் கருத்தியலும் இடம்பெற்றுள்ளன. சமத்துவக் கருத்தியலைக்கொண்ட கிறிஸ்தவம் கருப்பர் X வெள்ளையர் என்ற இனப் பாகுபாட்டை உள்வாங்கிக்கொண்டதுபோல தமிழ்க் கிறிஸ்தவமும் சாதி வேறுபாடு, தீண்டாமை என்ற கருத்தியலை உள்வாங்கிக்கொண்டது.

ஐரோப்பியர்களின் திருமணச் சடங்கில் மணமகனும் மணமகளும் மோதிரம் மாற்றிக்கொள்வது மரபு. தமிழ்க் கிறிஸ்தவம் மலரத் தொடங்கிய காலத்திலேயே, தாலிகட்டும் அனுமதியைப் பெற்றுவிட்டது. ஆனால், தாலி என்ற அணிகலன் சாதிகளுக்கு ஏற்பவே அமையும் தன்மையது. சாதி அடையாளங்கள் தாலியில் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்தவம் தம் சமய அடையாளமான சிலுவையைத் தாலியில் இணைத்துக்கொண்டாலும் சாதி அடையாளத்தை ஆங்காங்கே பின்பற்றத்தான் செய்கிறது. கிறிஸ்தவத் தேர்களும் சப்பரங்களும் செல்ல மறுக்கும் தெருக்கள் உள்ளன.

இவ்வாறு உலகளாவிய சமயமான கிறிஸ்தவம், பண்பாடு ஏற்றல் வாயிலாகத் தமிழ்க் கிறிஸ்தவம் என்ற அடையாளத்தைப் பெற்றுத் தமிழரின் சமூக வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டது.

தமிழ்முஸ்லிம் அடையாளம்

எச்.முஜீப் ரஹ்மான்

மிழகச் சூழலில் தமிழர் அடையாளம், முஸ்லிம் அடையாளம் வேறுவேறாகப் பார்க்கப்படவில்லை என்பது சற்று ஆறுதல் அளிக்கும் விஷயம்தான். திராவிட இயக்கம் முஸ்லிம்களைப் பிரிக்காமல் பொதுத்தமிழ் அடையாளத்தில் வைத்தமையால் ஓரளவுக்குச் சிக்கலற்ற வாழ்க்கையைத் தமிழகத்தில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். இந்தியாவின் மற்ற மாநிலங்களை வைத்துப் பார்க்கும்போது முஸ்லிம்களின் வாழ்க்கை, பின்னடைந்திருந்தாலும் பாதுகாப்பு பலமாக உள்ளது. கோவை குண்டு வெடிப்புக்குப் பிந்தைய சூழல்கூட, தமிழகத்தில் இஸ்லாமியரை வெறுக்கும் வகையில் இல்லாமலிருக்க பெரியாரியச் சிந்தனையின் தாக்கம்தான் முக்கியமான காரணம். இன்று இஸ்லாமியரில் ஒரு பிரிவினராக இருக்கும் வஹாபிகளைக் குறித்த தெளிவு, தமிழ்ச் சமூகத்துக்கு இருப்பதை நாம் காணலாம். கோவை குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு வஹாபிகளே காரணம் என்பது மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் சவுதி பெட்ரோ டாலரால் உருவாக்கப்பட்டவை என்ற தெளிவு இருக்கிறது.

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

‘இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி’ என்ற ஒருங்கிணைப்பைத் தமிழக முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டார்கள்.இங்கே முஸ்லிம் என்ற பொதுஅடையாளத்துக்குள் உருது முஸ்லிம்களும் இணைந்திருப்பதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் உருது முஸ்லிம்களுக்கும் பலத்த வேறுபாடுகள் இருக்கின்றன. ஓரளவுக்கு முன்னேறிய சமூகமாகவே உருது முஸ்லிம்கள் இருக்கிறார்கள். தமிழ் பேசும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் என்று எல்லாத் துறைகளிலும் பெரும்பான்மையானவர்கள் ஏழ்மை நிலையிலே உள்ளனர். ஆனால், பொதுத் தமிழ்ச் சமூகம், முஸ்லிம் என்றால் அரபுப் பணத்தில் செல்வம் பெற்றவராகக் கருதும் நிலை இருக்கிறது. சச்சார் கமிஷனின் அறிக்கையைப் பார்க்கிறபோது, முஸ்லிம்கள் சமூக, பொருளாதார, அரசியல் மட்டங்களில் பட்டியல் இன மக்களைவிட மிகவும் பின்தங்கியிருப்பது தெரிகிறது. தமிழ்ச் சூழலில் இஸ்லாமியர் என்றால் தீவிரவாதிகள் என்ற கற்பிதம் செல்லுபடியாகவில்லை. மாறாக, முஸ்லிம்கள் என்றால் செல்வந்தர் என்ற கற்பிதம் இருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதோர் அணித்திரள் உருவாகியபோது, திராவிடச் சித்தாந்தத்தை முஸ்லிம்கள் உள்வாங்கித் திராவிட இயக்கத்துக்கு உறுதுணையாக நின்றனர். ஆனால், திராவிட இயக்கங்கள் முஸ்லிம்களை ஊறுகாயாகப் பயன்படுத்தினார்கள் என்பதைப் பின்னாள்களில் முஸ்லிம்கள் அறிந்துகொண்டார்கள். தமிழகத்தை இதுவரை ஆட்சிசெய்த எந்தக் கட்சிகளும் ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட இஸ்லாமியர்களின் கல்வி, அரசு வேலைவாய்ப்புகளுக்கு எந்த முன் முயற்சியையும் எடுக்கவில்லை. 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்குள் இஸ்லாமியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு அளிக்க முடியும். ஆனால், முக்கியக் கட்சிகளான தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் தொடர்ந்து பொய்யான வாக்குறுதிகளையே அளித்து வருகின்றன.

2006-ல் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட சச்சார் கமிஷன் அறிக்கை, இந்திய நாட்டில் பெரும்பாலான முஸ்லிம்கள் எப்படி விளிம்புநிலையில் உள்ளனர் என்பதை ஆதாரத்துடன் வெளிச்சம்போட்டுக் காட்டியது. மேலும், முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கான பல முக்கியப் பரிந்துரைகளையும் அக்குழு அளித்தது.

இந்திய நாட்டின் மக்கள்தொகையில் 13.4 சதவிகிதமாக உள்ள முஸ்லிம்கள், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர் என்பதை ஆதாரப்பூர்வமாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. மத்திய அரசுத் துறைகளில் முஸ்லிம்கள் வெறும் 4.9 சதவிகிதம் மட்டுமே உள்ளனர். அரசின் மிகப் பெரிய பொதுத்துறையான ரயில்வேயில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 4.2 சதவிகிதம் மட்டுமே என்பதும், அவர்களிலும் 98.7 சதவிகித முஸ்லிம்கள் கடைநிலைப் பணிகளிலேயே உள்ளனர் என்பதும் வெளிப்பட்டது. இந்திய குடிமைப்பணிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ் போன்ற உயர்பதவிகளில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை 3.2 சதவிகிதம் மட்டுமே. நீதித்துறையில்கூட 7.8 சதவிகிதம் மட்டுமே முஸ்லிம்கள். காவல்துறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஒரு வகையில் கூறினால், பாதுகாப்புத்துறைகளில் முஸ்லிம்கள் நியமனம் செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளனர் என்பதும் அந்த அறிக்கையில் வெளிப்பட்டது. தமிழக மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 5.5 சதவிகிதம் இருந்தும், காவல்துறையில் அவர்களது எண்ணிக்கை துச்சமான 0.11 சதவிகிதம் மட்டுமே. தேசிய அளவில் கல்வியில்கூட முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கிய நிலையில்தான். பட்டப்படிப்பு முடித்தவர் 3.4 சதவிகிதம், முதுகலை பட்டம் பெற்றவர் 1.2 சதவிகிதம். முஸ்லிம்களில் வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழ்பவர்கள் மட்டும் 94.11 சதவிகிதம். நிலமற்ற முஸ்லிம்கள் 60.4 சதவிகிதம். இதுவே அவர்களது கல்விநிலைக்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளது என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது.

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

முஸ்லிம்கள் ஒரு சமூகக் குழு என்ற அடிப்படையில், அவர்களுக்குரிய உரிமைகளை அல்லது இடஒதுக்கீட்டை இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டுப் பெறுவதற்கு உரிமை படைத்தவர்கள். இந்திய அரசியல் சட்டப் பிரிவு 15(4) மற்றும் 16(4)-ன் வரையறைக்குள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்க்கவும், 5 சதவிகித இடஒதுக்கீட்டைக் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் தற்போது மாநிலத்தில் உள்ள ஏ, பி, சி, டி பிரிவுகளுடன் ‘இ’ பிரிவு எனக் கூடுதலாகச் சேர்த்து இடஒதுக்கீடு வழங்கவும், ஆந்திரப்பிரதேசப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ஆணை வழங்கப்பட்டது. முஸ்லிம்களின் கல்விநிலை இன்று உயர்ந்துகொண்டே செல்லும் நிலையில், உயர்பதவிகளில் அவர்களுக்குத் தரப்படும் இடங்கள் குறைந்துகொண்டே போகின்றன. இந்த அறிகுறிகள் மிகவும் மோசமானவை. இதற்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்.

இதுதொடர்பாக, ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ தமிழ்நாடு மாநிலத் தலைவர் காதர் மொகிதீன், “ஒருவர் முஸ்லிமாக மாறும்போது, அவர் இஸ்லாம் எனும் பெரும் சமூகத்தில் ஓர் அங்கமாக மாறிவிடுகிறார். இஸ்லாத்தில் சாதியும் கிடையாது, சாதி அடிப்படையிலான பாரபட்சமும் கிடையாது. இந்தியாவில் முஸ்லிம்கள் பொருளாதார, கல்வி மற்றும் சமூக அந்தஸ்தின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகக் கருதப்படுகின்றனர். இஸ்லாத்தில் சேரும் தலித் இன மக்களை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை ஏற்கக் கூடாது. அவ்வாறு ஏற்றுக்கொண்டால் இஸ்லாத்தில் சாதி உள்ளதாக ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும். அரசியல் சாசனத்தின்படி மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக் கோரினோம். மத்திய அரசு, லெப்பை, தக்னீ, மாப்பிள்ளை மற்றும் தூதேகுலா ஆகிய நான்கு பிரிவுகளையும், தமிழக அரசு மேற்கண்ட நான்கு பிரிவுகளோடு செய்யது, ஷேக், அன்சர் ஆகிய மூன்று பிரிவுகளையும் சேர்த்துப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 3.5 சதவிகித தனி உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின்படி, இந்தியாவில் முஸ்லிம்களுக்குப் பிரத்யேகமாக 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் முஸ்லிம்களின் கோரிக்கை” என்று கூறினார்.

முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்துச் சிறுபான்மையினர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட அளவு ஒதுக்கீட்டை அளிக்கும் வகையில் 2004-ம் ஆண்டில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷன் தன்னுடைய அறிக்கையை 2007-ல் பிரதமரிடம் சமர்ப்பித்தது. இவ்வளவு நாள் வரை கிடப்பில் போடப்பட்ட அந்த அறிக்கையை, மக்களவையின் கடைசி நாளான கடந்த  18.12.2009-ல் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் தாக்கல் செய்துள்ளார். இந்திய முஸ்லிம்கள் இவ்வறிக்கையை வரவேற்கும் அதேவேளையில், ஆளும் வர்க்கத்தினர் முஸ்லிம்களின் நியாயமான உணர்வுகளைப் புரிந்துகொண்டு, உடனே இவ்வறிக்கையில் கூறப்பட்டவாறு சிறுபான்மையினருக்கு என்று தனி இடஒதுக்கீட்டை உடனே வழங்க வேண்டும்.

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

மக்கள்தொகை (பக்கம் 13)

முஸ்லிம்கள் – 13.4% (2001-ம் கணக்கெடுப்புப்படி)

முஸ்லிம்களின் கல்வி அறிவு (பக்கம் 16,17)

1. முஸ்லிம்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் – 59.1 % (அதாவது 40.9% முஸ்லிம்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.)

2. முஸ்லிம்களில் 5-ம் வகுப்பு வரை படித்தவர்கள் – 65.31% பேர்

3. முஸ்லிம்களில் 8-ம் வகுப்பு வரை படித்தவர்கள் -15.14% (அதாவது 100-க்கு 85 பேர் 8-ஆம் வகுப்புகூடப் படிக்காதவர்கள்)

4. 10-ம் வகுப்பு வரை – 10.96% (அதாவது 100-க்கு 90 பேர் 10-ம் வகுப்புகூடப் படிக்காதவர்கள்)

5. 12-ம் வகுப்பு வரை – 4.53% (அதாவது 100-க்கு 95 பேர் 12-ம் வகுப்புகூடப் படிக்காதவர்கள்)

தமிழர் எனும் அடையாளம்! - பெருமிதங்களும் கற்பிதங்களும்


6. பட்டம் (டிகிரி) படித்தவர்கள் – 3.6% பேர்

குடியிருப்புகள்: (பக்கம் 23)

1. முஸ்லிம்களில் 34.63% பேர் குடிதண்ணீர், கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வாழ்கின்றனர்.

2. முஸ்லிம்களில் 41.2% பேர் அடிப்படைக் கட்டமைப்பு இல்லாத வீடுகளில் வாழ்கின்றனர்.

3. மீதமுள்ள 23.76% முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கத்தகுந்த வீடுகளில் வாழ்கின்றனர்.

வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள்: (பக்கம் 25)


இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரைவிடவும் முஸ்லிம்கள்தான் அதிகம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்.

1. நகர்ப்புறத்தில் 27.22 % முஸ்லிம்கள் வறுமை கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்.

2. கிராமப்புறத்தில் 36.92% முஸ்லிம்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்.

அதாவது, 100-க்கு 36 முஸ்லிம்கள் உணவு, உடை, இருப்பிடம் இல்லாமல் வாழத் தகுதியற்ற நிலையில் வாழ்கின்றனர்.

வறுமைக்கோடு என்றால் என்ன?


இரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள், ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்பவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள், நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள், வெட்டவெளியில் கழிப்பிடம் செல்பவர்கள், வீட்டு உபகரணங்கள் (டி.வி, ரேடியோ, மின் விசிறி, குக்கர் போன்றவை) இல்லாதவர்கள், (நிரந்தர வருமானம் இல்லாமல்) கூலி வேலை செய்பவர்கள், பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள்... இப்படி வாழ்பவர்களை அரசு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எனக் குறிப்பிடுகின்றது.

இந்தியாவில் முஸ்லிம்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மேலே குறிப்பிடப்பட்ட நிலையில் (வறுமைக்கோட்டுக்குக் கீழ்) வாழ்கின்றனர். தமிழகத்தில் 5–ல் ஒரு முஸ்லிம் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றார்.

மாத வருமானம் (பக்கம் 30).


ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களின் சராசரி மாத வருமானம் ரூ.1832.20 (ஒரு குடும்பத்திற்கு).

4.முஸ்லிம்களுக்காக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் பல்கலைக்கழகங்களை அரசு நிறுவ வேண்டும். மேலும், இந்த பல்கலைக்கழகங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கி, முஸ்லிம் மாணவர்களின் நலனுக்காகச் செயல்படும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட வேண்டும். (பக்கம் 151)

பரிந்துரைகளில் சில:

1.இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் Article 16 (4) விதி–படி சிறுபான்மையினருக்கு 15% இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அதில் 10% முஸ்லிம்களுக்குக் கொடுக்க வேண்டும். ஏனெனில், முஸ்லிம்கள் ஒட்டுமொத்த சிறுபான்மை ஜனத்தொகையில் 73% உள்ளனர். மீதமுள்ள 5 சதவிகிதம் பிற சிறுபான்மைச் சமுதாயத்திற்கு கொடுக்கப்பட வேண்டும். சில இடங்களில் 10% இடத்திற்கு முஸ்லிம்கள் கிடைக்கவில்லை என்றால், பிற சிறுபான்மைச் சமுதாயத்திற்கு அந்த இடங்களை வழங்க வேண்டும். (பெரும்பான்மை சமுதாயத்திற்குக் கொடுக்கக் கூடாது) - (பக்கம் 150,152)

2.கல்வி, வேலைவாய்ப்பு மட்டுமல்லாமல் அரசு அறிவிக்கும் திட்டங்களிலும் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடும். பிற சிறுபான்மை மக்களுக்கு 5% இடஒதுக்கீடும் வழங்க வேண்டும். (பக்கம் 152)

3.SC/ST-க்கு இருப்பதுபோல் முஸ்லிம்களுக்கும் கல்வி கற்பதற்கான Eligibility criteria தகுதிகள் (மதிப்பெண்) தளர்த்தப்பட வேண்டும். விண்ணப்பங்களின் விலையும் குறைக்கப்பட வேண்டும். கல்விக் கட்டணமும் குறைக்கப்பட வேண்டும்.

5.அங்கன்வாடிகள், நவோதயா, வித்யாலயா (பள்ளிகள்) போன்றவை முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஏற்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம்களின் குழந்தைகளை இந்தப் பள்ளிகளுக்கு அனுப்ப முஸ்லிம் குடும்பங்களுக்கு மானியம் வழங்க வேண்டும். (பக்கம் 151)

6.முஸ்லிம்/கிறித்துவர்களாக மதம் மாறும் தலித்துகளுக்கு அவர்களின் சலுகை மீண்டும் கிடைக்கப் பெற வழிவகை செய்ய வேண்டும் (பக்கம் 153).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism