Published:Updated:

`ஜன்னலில் ஒரு சிறுமி!’- இது இரண்டாம் உலகப் போரில் சிதைந்த ஒரு பள்ளியின் கதை!

ஜன்னலில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறுமி(டோட்டோ-சான்)யின் வாழ்க்கையை மட்டுமல்ல... அங்கு படித்த ஒவ்வொரு குழந்தையின் வாழ்வையும் மாற்றியுள்ளது அந்தப் பள்ளி

`ஜன்னலில் ஒரு சிறுமி!’-  இது இரண்டாம் உலகப் போரில் சிதைந்த ஒரு பள்ளியின் கதை!
`ஜன்னலில் ஒரு சிறுமி!’- இது இரண்டாம் உலகப் போரில் சிதைந்த ஒரு பள்ளியின் கதை!

இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்காவின் `பி29' குண்டுவீச்சு விமானங்கள், டோக்கியோவில் வானத்திலிருந்து குண்டுகளை வீசின. அதில் `டோமோயி' பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்தது. தன் கற்பனையால் உருவான அந்த அழகான பள்ளி எரிந்துகொண்டிருப்பதை, அழுக்கேறிய கறுப்பு உடை அணிந்த தலைமையாசிரியர் பார்த்துக்கொண்டிருந்தார். துக்கம் குரல்வளையை அழுத்திப் பிடிக்க, துயரம் சூழ்ந்த அந்தச் சூழலில், ``அடுத்து நாம் எப்படிப்பட்ட பள்ளியை உருவாக்கலாம்'' என்று தன் மகனிடம் கேட்டார். அந்தச் சூழ்நிலையில்கூட பலரின் எதிர்காலக் கனவுகளைப் பற்றி யோசித்த அந்த மனிதர்தான் கோபயாஷி. இவரைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முன் `டோமோயி' பள்ளியைப் பற்றியும் சுட்டிப்பெண் டோட்டோ-சானைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். 

தன்னுடைய வீட்டில் இல்லாத, பள்ளியில் உள்ள புதுமையான மேஜையைத் திறந்துத் திறந்து மூடி வகுப்பைத் தொந்தரவு செய்யும் சேட்டைக்காரி அவள். வீதியில் செல்லும் இசைக் கலைஞர்களை ஜன்னலின் வழியே அழைத்து `ஏதாவது இசையுங்கள்’ என்று இசைக்கச் சொல்லி, ஓர் இசைக் கச்சேரியையே நடத்தி முடிக்கும் சுட்டிப்பெண். இந்தக் காரணங்களுக்காக பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுகிறாள். இதுமட்டுமல்ல, இன்னும் பல சேட்டைகளுக்குச் சொந்தக்காரி. இந்தச் சுட்டிப்பெண்தான் பின்னாளில் ஜப்பானின் பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளராக, எழுத்தாளராக, சமூக சேவகராக, நடிகையாக, பல உயரிய விருதுகளை வென்றார். அவர்தான் டெட்சுகோ குரோயாநாகி (டோட்டோ-சான்). இவரின் மாற்றங்களுக்குக் காரணமான பள்ளிதான் `டோமோயி'. இந்தப் பள்ளியைத் தொடங்கியவர்தான் கோபயாஷி.

1893-ம் ஆண்டில் டோக்கியோவில் உள்ள கிராமத்தில், ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த கோபயாஷி, தொடக்கக் கல்வி முடித்ததும் ஆசிரியர் ஆனார். இசையின் மீது மிகுந்த நாட்டம் உடையவர். கல்வியுடன் இசையும் இணைந்ததன் மூலம் இசைக்கல்வியில் முக்கியத்துவம் பெற்றவர். பல நாடுகளுக்குப் பயணம் செய்து பள்ளிகளைப் பார்வையிட்டு, பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டவர், 1937-ல் `டோமோயி ஹாகுன்' என்ற பள்ளியைத் தொடங்கினார். கோபயாஷி தன் பள்ளியைப் புதுவிதமாக வடிவமைத்தார். வெளியூர்களுக்குப் பயணம் செல்லும்போது குழந்தைகள் குதூகலமாக இருப்பார்கள். ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடியே பயணிப்பது குழந்தைகளுக்கு அலாதியான அனுபவத்தைக் கொடுக்கும்.

அதனால், பயணம் செய்யும் ரயில்பெட்டிகளையே வகுப்பறைகளாக மாற்றிவிடலாம் என யோசித்தார் கோபயாஷி. டோமோயியின் தோற்றமாக அது அமைந்தது. அந்தப் பள்ளியில் மோசமான உடைகளைக்கூட நீங்கள் அணிந்து செல்லலாம். இதை அவரே வலியுறுத்துவார். பாடங்களைப் பொறுத்தவரை, குழந்தைகள் எந்தப் பாடத்தை விரும்புகிறார்களோ, அதிலிருந்தே படிக்கலாம். சந்தேகம் எழும்போதும், உதவிகள் தேவைப்படும்போதும் ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள். இதனால் குழந்தைகளின் தனித்திறமைகளை எளிதில் அடையாளம் காண முடியும் என்பது கோபயாஷியின் சிந்தனை. அதில், வெற்றியும் கண்டார் என்பதுதான் உண்மை.

டோமோயி-ல் உணவுகூட சமத்துவமானதுதான். கடலிலிருந்து கொஞ்சம், மலையிலிருந்து கொஞ்சம் என தினமும் விதவிதமாக உணவுப்பொருள்களை எடுத்துவர வேண்டும். இவற்றில் குறை ஏதேனும் ஏற்பட்டால், கோபயாஷி சார்பாக வழங்கப்படும். சாப்பிட்டுவிட்டு மதியம் அழகான ஒரு நடைப்பயணம். வானம், பட்டாம்பூச்சி, பூக்கள் என எதைப் பற்றி வேண்டுமானாலும் அவர்கள் பேசிக்கொள்ளலாம். பல இடங்களுக்கும் பள்ளிகளிலிருந்து குழந்தைகளைக் கூட்டிச்செல்லும் கோபயாஷி, ஒருமுறை நீச்சல்குளத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு குழந்தைகள் ஆடைகளின்றி நீந்த அனுமதித்தார். 

`உடற்கூறு வேற்றுமைகளில் ஆர்வத்தைக் காட்டக் கூடாது’, `உடலை மறைப்பதற்குப் படும்பாடு இயற்கைக்கு முரணானது’ என்பதில் கோபயாஷி நம்பிக்கைகொண்டவர் என்பதால் அப்படிச் செய்தார். குறிப்பாக, மாற்றுத்திறனாளி மாணவர்களும் இருந்ததால் `எல்லோருடைய உடலும் அழகானதுதான்’ என்பதைப் பயிற்றுவிக்க விரும்பினார்.

அமெரிக்கா, ஜப்பானின் மீது தாக்குதல் தொடுத்துக்கொண்டிருந்த அதே சமயத்தில்தான், இந்தப் பள்ளியும் இயங்கியது. அப்போது ஒரு அமெரிக்க மாணவன் டோமோயியில் படித்துக்கொண்டிருந்தான். அந்த மாணவனுக்கும் ஜப்பான் மாணவர்களுக்கும் இடையிலிருந்த நட்பு மிகவும் அழகானது. குரோயாநாகி இந்த நட்பை, ``ஜப்பானும் அமெரிக்காவும் டோமோயில் நண்பர்களாக இருந்தனர். ஆனால், டோமோயிக்கு வெளியே அமெரிக்காவும் ஜப்பானும் எதிரிகளாக இருந்தனர்'' என்கிறார். எவ்வளவு உண்மை! பள்ளி முழுவதும் நிறைந்திருக்கும் அன்பும், குழந்தைகளின் இதயம் நிறைந்துகிடக்கும் மகிழ்ச்சியும்தான் கோபயாஷியின் வெற்றி.

கோபயாஷி இதோடு நிறுத்திவிடவில்லை. முதல் கிரேடு படிக்கும் குழந்தைக்கு சுயமரியாதையைக் கற்றுத்தருகிற ஒருவராக இருந்தார்.  பயத்திலிருந்து வெளிவருவதற்கான பயிற்சிகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தார்; இரவுகளில் பள்ளியில் தங்குவதற்கான கூடாரங்கள் அமைக்கக் கற்றுக்கொடுத்தார்; உணவு சமைக்கக் கற்றுக்கொடுத்தார்; இசையைக் கற்றுக்கொடுத்தார்; நடனத்தைக் கற்றுக்கொடுத்தார்; தரைகளில் கிறுக்கக் கற்றுக்கொடுத்தார்; கிறுக்கிய பிறகு சுத்தம் செய்யவும் கற்றுக்கொடுத்தார். இப்படி மாணவர்களின் எல்லா ஆசைகளையும் நிறைவேற்றக்கூடிய ஆசிரியராகவே கடைசிவரை இருந்தார். 

எந்த விதத்திலும் மாணவர்கள் தங்களைக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்பதிலும், அவர்களுக்கு சுயமரியாதை அவசியம் என்பதிலும் கவனமாக இருந்தார். `ஏற்கெனவே முடிவுசெய்த வார்ப்புகளில் குழந்தைகளைப் பொருத்தாதீர்கள். அவர்களை இயற்கையாக வளரவிடுங்கள். அவர்களின் ஆவலை, ஆசையை, விருப்பத்தை அடக்கி வைக்காதீர்கள்; கற்பனைகளை நொறுக்காதீர்கள்; அவர்களின் கனவு உங்கள் கனவை விடப் பெரிதாக இருக்கலாம்’ என்பதுதான் கோபயாஷி ஆசிரியர்களுக்கு அடிக்கடி கூறும் அறிவுரை.

ஜன்னலில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறுமியின் (டோட்டோ-சான்) வாழ்க்கையை மட்டுமல்ல... அங்கு படித்த ஒவ்வொரு குழந்தையின் வாழ்வையும் மாற்றியுள்ளது அந்தப் பள்ளி. பெருமைமிகுந்த அந்தப் பள்ளி 1945-ம் ஆண்டில் தகர்க்கப்பட்ட பிறகு மீண்டும் எழவே இல்லை என்பதுதான் வருந்தத்தக்கச் செய்தி.

டெட்சுகோ குரோயாநாகியின் சுயசரிதைதான் டோட்டோ-சான் (ஜன்னலில் ஒரு சிறுமி) என்ற புத்தகம். உலகின் சிறந்த சுயசரிதைப் புத்தகங்களின் வரிசையில் டோட்டோ-சானுக்கும் சிறப்பான ஒரு இடம் உண்டு. இந்நூல் வெளிவந்த சில ஆண்டுகளிலேயே பல மில்லியன் விற்பனைகளை எட்டியது. பள்ளிகளில் பாட நூலாகவும் உள்ளது. டெட்சுகோவிற்கு பல விருதுகளையும், நன்மதிப்பையும் சமூகத்தில் பெற்றுதந்தது. படித்துமுடித்த ஒவ்வொருவரையும், தான் அந்த பள்ளியில் படிக்கவில்லையே என்ற ஏக்கத்தை வரவைத்தது. அந்த ஏக்கத்திலிருந்து இந்தப் புத்தகம் மட்டுமே விடுதலைப் பெற்றுத்தரும். புத்தகத்தை மறக்காமல் படித்துவிடுங்கள். இந்த புத்தகத்தைப் படிக்கும் நேரம்கூட, உங்கள் வாழ்க்கையின் மறக்கமுடியாத ஒரு தருணமாக மாறும்.