Published:Updated:

“நடுநாட்டு மக்கள் கதையை எழுத ஆள் இல்ல!” - கண்மணி குணசேகரன்

“நடுநாட்டு மக்கள் கதையை எழுத ஆள் இல்ல!” - கண்மணி குணசேகரன்
பிரீமியம் ஸ்டோரி
“நடுநாட்டு மக்கள் கதையை எழுத ஆள் இல்ல!” - கண்மணி குணசேகரன்

சந்திப்பு : வெய்யில் - படங்கள் : எஸ்.தேவராஜன்

“நடுநாட்டு மக்கள் கதையை எழுத ஆள் இல்ல!” - கண்மணி குணசேகரன்

சந்திப்பு : வெய்யில் - படங்கள் : எஸ்.தேவராஜன்

Published:Updated:
“நடுநாட்டு மக்கள் கதையை எழுத ஆள் இல்ல!” - கண்மணி குணசேகரன்
பிரீமியம் ஸ்டோரி
“நடுநாட்டு மக்கள் கதையை எழுத ஆள் இல்ல!” - கண்மணி குணசேகரன்

‘தைரியமாய்த் துணைக்கு
ஒரு தெம்மாங்கோடு போனால்
எளிதில் எட்டிவிட முடியும் இலக்கை’


என்று எழுதிச் செல்பவர் கண்மணி குணசேகரன். முந்திரி மணக்கும் வாழ்வு அவருடையது. கவிதை, சிறுகதை, நாவல், சொல்தேடல் என விரிவான இயக்கம்கொண்டவர். வட்டாரமொழி இலக்கியத்துக்குப் பங்களித்துக்கொண்டிருக்கும் தமிழ் இலக்கிய ஆளுமைகளில் மிகவும் செயலூக்கம்கொண்டவர். ‘நடுநாட்டுச் சொல்லகராதி’ தமிழுக்கு இவர் அளித்திருக்கும் கொடை. இவரது பல படைப்புகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக உள்ளன.

விருதாச்சலத்திலிருந்து அரை மணி நேரப் பயணத் தொலைவிலிருக்கிறது கண்மணி குணசேகரனின் கிராமமான மணக்கொல்லை. ஒரு நண்பகல் வேளையில் சென்றோம். வீட்டு முற்றத்தில் உள்ள சிறிய மூங்கில் தடுப்பைத் திறந்துகொண்டு சென்றால், மணக்கும் பலாச்சுளைகளோடு வரவேற்கிறார். கேள்விகளுக்கு, ராகமிழையும் வடதமிழகத்து வட்டாரமொழியில் வந்து விழுகின்றன பதில்கள்.

“நடுநாட்டு மக்கள் கதையை எழுத ஆள் இல்ல!” - கண்மணி குணசேகரன்

“சமீபத்தில் என்னென்ன வட்டார வழக்குச் சொல்லைத் தேடிக் கண்டுபிடித்தீர்கள்?”

“ ‘மக்கிட்டி’னு ஒரு சொல். அதாவது பெண்கள் குளிக்கும்போது மார் வரைக்கும் பாவடையைத் தூக்கிக்கட்டி இருப்பாங்களே, அதுக்குப் பேர்தான் மக்கிட்டி. மார்க்கட்டு, மார்க்கட்டி, என்பது மறுகி மக்கிட்டி ஆகிருக்கு. ‘கெண்டம் உடைதல்’னு இன்னொரு சொல். தூக்குப்போட்டு தற்கொலை பண்ணிக்கும்போது, கடைசியா கழுத்து உடையுறதத்தான் கெண்டம் உடைதல்னு சொல்றாங்க. கண்டம்னா... கழுத்து. பிறகு, ‘குஞ்சித்தாயத்து’, ‘தம்பித்தோழன்’,  ‘நாழிவாசல்’, ‘நடப்பால்’னு பத்துப் பதினைஞ்சு சொற்கள் சேகரிப்புல வந்திருக்கு.

நடுநாட்டுச் சொல்லகராதியை முடிச்சு அச்சுக்கு அனுப்பி வச்சப்ப, அவ்வளவுதான்  எல்லாச் சொற்களையும் இந்த அகராதியில கொண்டுவந்தாச்சு. இனி நமக்குத் தெரியாத சொற்கள்னு இங்க எதுவும் இல்லனு நெனைச்சேன். ஆனா, அதுபாட்டுக்கு கிடைச்சுக்கிட்டே இருக்கு. இது ஆயுசுக்குமான தேடல் பயணம், இது முடியாதுனு இப்போ புரிஞ்சுபோச்சு!” (சிரிக்கிறார்)  

“சொற்களைத் தேடி அலைகிற இந்தப் பயணம் என்ன மாதிரியான அனுபவமா இருக்கு?”


“உலகத்திலேயே ரொம்பக் கொடுமையான பயணம், சொற்களைத் தேடிப் போறதுதான். அவ்வளவு மன உளைச்சலைத் தரும். ஆனா, ஒரு புதுச் சொல்லைத் தெரிஞ்சுக்கிடும்போது கிடைக்கிற சந்தோஷம் அளவில்லாதது.  இதில், பழகிய ஆட்களுக்குத் தூக்கமே வராது. இரவுலகூடத் திடீர்னு ஒரு சொல் ஞாபகம் வரும். நான் சேகரிக்கத் தொடங்கிய ஆரம்பக்கட்டத்தில், ஒரு சொல் எப்போ ஞாபகம் வந்தாலும் எழுதிக்கிற மாதிரி தொம்பைல, படுக்குற இடத்துலனு  எல்லா இடத்திலும் பேனாவையும் பேப்பரையும் வெச்சுக்குவேன். கிடைச்ச சொல்லக் குறிக்காம விட்டுட்டோம்னு வச்சுக்கோங்க, அந்தச் சொல்லைச் சொல்றதுக்கோ, கேட்கிறதுக்கோ ஆன சந்தர்ப்பசூழல்  மறுபடியும் வாய்க்கிற வரை அந்தச் சொல்லப் புடிக்க முடியாது. மறந்துபோச்சுனா, மனசு அப்படி வலிக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“நடுநாட்டு மக்கள் கதையை எழுத ஆள் இல்ல!” - கண்மணி குணசேகரன்நம்ம ஊர்ச் சொற்களை நம்ம வட்டாரத்துக்குள்ள சேகரிக்கிறோம்.  நம்ம ஊர்ச் சொற்களுக்கு இணையான பொருளில் வெளியூர்ல பயன்படுத்தப்படுற சொற்களை எப்படிச் சேகரிக்கிறதுனு யோசிச்சேன். வெளியூர்ல இருந்து நம்ம ஊருக்குக் கல்யாணம் பண்ணி வந்திருக்கிற மருமகப் பிள்ளைகள்கிட்ட உங்க ஊர்ல இந்தச் சொல்லுக்கு என்ன சொல்வீங்கனு கேட்டுக் கேட்டுச் சேகரிச்சேன்.

நிறைய சொற்கள் ஆச்சர்யமா இருக்கும். சுடுகாட்டோட தலைப்பகுதி அதாவது, ‘நுழைவாயில்’ அதுக்கு எங்க ஊர்ல ‘அரிச்சந்திர மொடக்கு’னு பேரு. அந்த இடத்துலதான் பாடையை நிப்பாட்டி ஒரு நாலணா போடுவாங்க. இன்னொரு ஊர்ல அதுக்கு ‘அரிச்சந்திர மறப்பு’. பக்கத்துல செங்குறிச்சியில அதுக்குப் பேரு ‘பாடத் திருப்பி’ காரணம், அந்த இடத்திலதான் பாடையை ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டுபோவாங்க. இப்படிச் சொற்களைத் தேடிப்போனா, புதுசுபுதுசா பல ஊர்ப் பழக்கவழக்கங்களும், உணவுமுறையும் மருத்துவமும் தெரிய வரும்.”

“அப்படிக் கிடைத்த ஒரு விஷயம்  பற்றிச் சொல்லுங்களேன்...”

“ ‘ஒதப்பை’. ஆட்டுக்குடல்ல இருக்கு பாருங்க செரிபடாத தளைச் சாந்து... அதுக்குப் பேரு ‘ஒதப்பை’. கால்ல கரப்பான்னு சொல்ற கடி கிடிலாம் வந்துச்சுன்னா, அந்த ஒதப்பைய வாங்கிக் கால்ல அப்படியே சாக்ஸ் மாதிரி கட்டிவிட்டுருவாங்க. அது ஏராளமான மூலிகைச் செடிகளைத் தின்னிருக்கும் பாருங்க, அந்தச் சாற்றுல புண்ணு ஆறிடும். கரப்பானுக்கு அது மட்டும்தான் நல்ல தீர்வு. விவசாயத்துல நாத்த அரிச்சுக் கட்டுற எடத்துல குறிப்பிடப்படுற ‘ஒதப்பை’னு ஒரு சொல்லத் தேடிப்போய், இந்தச் சொல்லும் மருத்துவமும் கிடைச்சது.”

“மக்கள்கிட்ட போய்ப் பேசிப் பேசிச் சொற்களைச் சேகரிக்கிறது எளிமையா இருக்கா?”


“ஏன் கேக்கறீங்க... தாலாட்டு, விளையாட்டுப் பாடல், ஒப்பாரிப் பாடல்னு நூத்துக்கணக்கான பாடல்களைத் தெரிஞ்சி வெச்சிருப்பாங்க. பாடச் சொன்னா, பாட மாட்டாங்க, வெட்கப்படுவாங்க.  ‘தொண்டைல இருக்கு... வாய்ல வரமாட்டேங்குது’ம்பாங்க.  தூண்டிலுக்குப் புழு மாதிரி ஒண்ணு நமக்குத் தெரிஞ்சாப் போதும்.

‘எண்ணச் சட்டி எண்ணச் சட்டி தளதளங்க
ஏங்கூட வாடா சின்னத்தளங்க
காது கடுக்கன கழட்டி வச்சி’

அப்பிடினு ஒரு பாட்ட நாம ஆரம்பிச்சோம்னா, உடனே அவங்க,

 ஏரி மேட்டுல குந்தானி
இந்தாடா பையா முந்தானி
ஆப்பு ஈப்பு மாமங் கொடுத்த டேப்பு’ னு


பாட ஆரம்பிச்சுடுங்க. சொற்களைத் தேடி நாம கொஞ்ச தூரம் நடந்தோம்னா அதுவும் நம்மத் தேடி நடந்து வரும். நம்ம காதுபட எங்கயாவது ஒலிக்கும். என் அனுபவத்தில இதை உணர்ந்திருக்கேன்.”

“நடுநாட்டு மக்கள் கதையை எழுத ஆள் இல்ல!” - கண்மணி குணசேகரன்

“இந்த வழக்குச் சொல் சேகரிப்பிற்குள் எப்படி வந்து சேர்ந்தீர்கள்?”

“சங்கமித்ரானு ஒரு கவிஞர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியில இருந்தவர். ‘நான்கு எருதுகளும் ஒரு ஓநாயும்’கிற கவிதைத் தொகுப்பை எழுதியவர். அவர்தான் என்னோட ‘உயிர்த்தண்ணீர்’ சிறுகதைத் தொகுப்பைப் படிச்சிப் பார்த்திட்டு, ‘உன்னோட கதையில நிறைய வட்டார வழக்குச் சொற்களை பயன்படுத்துற. இது ரொம்ப நல்ல விஷயம். இதையெல்லாம் சேகரிச்சுக் கொண்டுவா, ஒரு அகராதியாப் போடலாம். 50,000 செலவாகும் நான் பார்த்துக்கிறேன்’னார்.

10-வது வரைதான் படிச்சிருக்கோம், நாம போய் அகராதி தயாரிக்கிறதா, இதெல்லாம் ஆகுற வேலையானு விட்டுட்டேன். பிறகு ஒருமுறை, பெருமாள் முருகனோட ‘கொங்கு வட்டாரச் சொல்லகராதி’ கெடைச்சது. வாங்கிப் பார்த்தேன். அதைப் பார்த்த உடனே, ‘இதை நம்மாலும் செய்ய முடியும் போலயே’னு ஒரு நம்பிக்கை வந்தது. சிறுகதைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு, நாவல்னு எல்லா வடிவத்திலயும் எழுதிப் பார்த்தாச்சு. இது கொஞ்சம் புதுசா இருக்கு... இதையும் செஞ்சு பார்ப்போமேனு உள்ள வந்ததுதான்.

இன்னொரு விஷயத்தை இங்கே சொல்லியே ஆகணும். பெருமாள் முருகனோட அகராதியைப் பார்த்தப்ப வந்த சந்தோஷம், முன்னுரையைப் படிச்ச உடனே பொசுக்குனு போச்சு. ஏன்னா, அதில கி.ராவோட அகராதித் தயாரிப்பு, விற்பனை சார்ந்த சில விஷயங்களைப் பற்றி எழுதியிருந்தார். ஒரு மனக்குழப்பத்தோட தமிழினி வசந்தகுமார் அண்ணனுக்கு போன்போட்டு, இப்பிடி விஷயம்... சொற்களைச் சேகரிக்கட்டுமானு கேட்டேன். ‘நீ சேகரி கண்மணி, நான் கொண்டு வர்றேன்’னு நம்பிக்கையா சொன்னார். அப்படித்தான் உள்ளே வந்து சேர்ந்தேன்.”

“இந்த மொழியில்தான் எழுத வேண்டும் என்று எப்போது முடிவுக்கு வந்தீர்கள்?”


“ஆரம்பத்துல, பொதுத்தமிழ்லதான் கவிதைகள் எழுதிக்கிட்டிருந்தேன். அந்தச் சமயம், பழமலய் கவிதைகள் என்னைப் பெரிதும் பாதிச்சது. அந்த மொழி என்னை வசீகரிச்சது. வாழ்க்கைப்பாடுகளோட வலியை, கோபத்தை, அபத்தத்தை வட்டாரமொழியில் எழுதும்போது வெளிப்படுகிற வீரியத்தை உணர்ந்தேன். பெருமாள் முருகனோட முதல் சிறுகதைத் தொகுப்பு ‘திருச்செங்கோடு’, தங்கர்பச்சானின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘வெள்ளை மாடு’ ரெண்டையும் வாசிச்சேன். இனி, மக்கள் மொழியிலதான் எழுதணும்னு அழுத்தமா முடிவுக்கு வந்தேன்; எழுதினேன்.

என்னுடைய சிறுகதைத் தொகுப்பு ‘உயிர்த்தண்ணீர்’ வெளியானது. ஆரம்பத்தில், யாரும் தொகுப்பைப் பற்றி பேசல. முக்கியத்துவம் கொடுக்கல. வாசிக்கிறதுக்குச் சிரமம்னு விட்டுட்டாங்க. படிச்ச ஒரு சிலர் மட்டும் நல்லாயிருக்குனு சொன்னாங்க. தப்பு செஞ்சிட்டோம் போலயேனு வருத்தத்திலிருந்தேன். அப்போ ஒரு இலக்கிய நிகழ்ச்சியில, கவிஞர் அழகு நிலானு ஒரு பொண்ணு, என்னைப் பார்த்ததும் டக்குன்னு கையப் புடிச்சிக்கிச்சு. ‘என்னணா இப்டி எழுதியிருக்கிறீங்க’னு ஒவ்வொரு கதையைப் பற்றியும் சொல்ல ஆரம்பிச்சுடுச்சு. ஒரு நகரத்துப் பொண்ணு இதைப் படிச்சுப் புரிஞ்சுருக்குன்னா, தேடல்கள் உள்ளவங்க எதையும் தேடிப் படிச்சுப் புரிஞ்சுப்பாங்கனு நம்பிக்கை வந்துச்சு. தொடர்ந்து எழுத ஆரம்பிச்சேன்.”

“உங்களுடைய ‘வந்தாரங்குடி’ நாவலின் மொழியில் நிறையவே மாற்றங்கள் தெரிஞ்சதே?”

“ஆமாம். உள்ளுக்குள்ளயும் வெளியேயும் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கு. தலைமுறைகள் மாறியிருக்கு. இப்படிக் கொஞ்சம் எழுதிப் பார்க்கலாம்னு தோணுச்சு. மத்தபடி இலக்கியவாதிக மார்க்கை குறைவா போட்ருவாங்கனு பயமெல்லாம் இல்லை. எந்த மொழியையும் மேல கீழனு சொல்ல வரல. எழுதும்போது அப்படியே கொஞ்சம் மிதந்து மேலே வந்தேன்,  அவ்வளவுதான். மத்தபடி நாம எப்பவும் அடியாழத் தாவரம்தான்.”

“வந்தாரங்குடி நாவலின் முதல் வரி ‘இருள் கவிந்த நிலம்’ என்று தொடங்கும். ஒரு பெரிய நாவலின் முதல் வரியை ஏன் இப்படி வைக்கவேண்டும் என்று முடிவு செய்தீர்கள்?”


“கரைக்கிறவன் ஒண்ண நெனைச்சு கரைச்சா, குடிக்கிறவன் ஒண்ண நெனைச்சு குடிப்பாங்கிற பழமொழியாட்டம் நீங்க கேக்கறீங்க. எனக்கு அப்படியெல்லாம் பெரிய திட்டமொண்ணும் இல்ல. என்னடா முதல் பக்கத்தக் காணோங்ற மாதிரி தொடங்கி, கடைசிப் பக்கத்தையும் காணோம்ங்ற மாதிரி நாவல் முடிஞ்சு போகணும். அதுதான் நம்ம வடிவம்.நாவலை முதலில் ‘...ந்தோ... ந்தோ...’னு குருவி விரட்டுறதாத்தான் தொடக்கி எழுதியிருந்தேன். பதிப்பாளர், ‘ஒரு நிலம் இருளில் கிடந்து விடியுது, அத இன்னும் கொஞ்சம் விவரிச்சு எழுதிக்கொடுனு’ கேட்டதால ஒரு பக்கம் அப்படி எழுதினேன். அதில் முதல் வரியா, ‘இருள் கவிந்த நிலம்’னு வரும். உங்களுக்குப் பிடிக்கலனா, அடுத்த பக்கத்துல ‘...ந்தோனு தொடங்குற இடத்திலருந்து வாசிங்க!” (சிரிக்கிறார்)

“யதார்த்த வகையான படைப்புகளில் மட்டுமே இயங்கி வருகிறீர்கள். வேறு புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணங்கள் இல்லையா?”


“நான் ஒரு விவசாயி. இந்த மண்ணுல என்ன வெளையுமோ, அதைத்தானே நான் விதைக்கவும் அறுக்கவும் முடியும். எங்கிட்ட இருக்கிறது பொட்ட மண்ணு. இந்த மண்ணுல நான் துவரை விதைக்கலாம், வீட்டுக்குச் சுவர் வைக்கலாம், பொம்மை சுடலாம், அதச் செம்மையாவும் செய்யலாம். எனக்கு அது போதும். இறக்குமதி இஸங்கள் எனக்குத் தேவைப்படல. அதையெல்லாம் வச்சு வாசகனைக் கவர வேண்டிய அவசியமும் எனக்கு இல்ல. என்னுடைய மொழியில என் கைக்கு எட்டுனதச் செஞ்சாலே போதும்னு நினைக்கிறேன்.  இன்னும் சொல்லப்போனா, தமிழ்ல இங்க உள்ள யதார்த்த வாழ்க்கையே இன்னும் முழுசா சொல்லப்படல.

பத்து வருஷத்துக்கு முன்னாடி, எதார்த்தவாதம் நாக்கத் தொங்கப்போட்ரும். செத்துரும்னு சொன்னாங்க. எதார்த்தவாதம் எழுதுனா பொண்ணு தர மாட்டானுவோங்ற மாதிரியெல்லாம்கூடச் சொன்னாங்க. ஆனா, அப்படியா நடந்திருக்கு, இல்லையே. எழுதுறதில எனக்கு விருப்பமும் சந்தோசமும் நிறைவும் தர்றதத்தானே நான் எழுத முடியும். எனக்கே ஆர்வம் இல்லாத ஒண்ணுல என்னுடைய வாசகனுக்கு நான் என்ன தர முடியும். முதல்ல, உள்ளத எழுதுவோம்ணே.”

“நடுநாட்டு மக்கள் கதையை எழுத ஆள் இல்ல!” - கண்மணி குணசேகரன்

“பெண்களின் வாழ்க்கைதான் உங்கள் படைப்புகளின் பிரதானக் களமாக இருக்கிறது. என்ன காரணம்?”

“இந்த உலகத்தில பெண்களை மாதிரி ஒரு பிறப்ப நீங்க பார்க்கவே முடியாது. அவங்களோட கனவுகள் இருக்கு பாருங்க... சொல்லி மாளாது. இந்த ஆம்பளப் பசங்க, கொஞ்சம் வளர்ந்ததும் பீடி அடிப்பான், சைக்கிள எடுத்துக்கிட்டு ஊர் சுத்துவான், தண்ணியடிப்பான், வருவான் போவான்... எல்லாம் பண்ணிருவான்.

பெண் பிள்ளைகளோட ஆசைகள், கனவுகள் இருக்கு பாருங்க, அப்படியே இருக்கும். அது வளர்ந்து வரும்போது, அந்தக் குடும்பத்துல வூடு நெறஞ்சு இருக்கும். வயசுக்கு வந்து அரைப்பாவாடை கட்டும்போது, அதுக்கொரு கனவிருக்கும். முழுப்பாவாடை கட்டும்போது, ஒரு கனவிருக்கும். மார்பெல்லாம் வளரும்போது, குனிஞ்சு குனிஞ்சு பாக்கும்... குதிச்சு குதிச்சு ஓடும். தாவணி கட்டும்போது ஒரு கனவிருக்கும். மகாராணிக் கனவு... ராஜகுமாரிக் கனவு... ஆனா, கடைசியில என்னை மாதிரி ஒரு சொட்டத் தலையனுக்குக் கட்டிவெச்சுருவாங்க. அப்படியே ஆஃப் ஆயிடும். முழுவாமப் பூட்டுதுனா அது வாழ்க்கை கஷ்டம், புள்ள பெத்துச்சுன்னா... இன்னும் ரொம்பக் கஷ்டம். கனவுகளப் பூராம் பொதச்சுப்புட்டு, எந்த வூட்டுக்குப் போனமோ, அந்தக் குடும்பத்துக்கு, அவளோட கணவனுக்கு, மாமியாருக்குனு எல்லாருக்கும் உகந்து உகந்து செய்யணும். அவ கனவு அவ்வளவுதான்... முடிஞ்சுபோகும்.

இன்னைக்கும் ஒரு குடும்பத்து ஆம்பளை செத்துப் போனான்னா, பசங்கள பொம்பளப் புள்ளைவோ காவந்து பண்ணிடும். அனா, ஒரு ஆம்பளையால முடியாது, பெரிய சவாலான விஷயம்.

எங்க ஊரு பெண்புள்ளைக, நான் கதை எழுதுறேனு தெரிஞ்சுக்கிட்டதுக, களவெட்ட வரும்போது அதுங்க கதைகளை என்கிட்டச் சொல்லுங்க. ஏங்கதைய எழுது ஏங்கதைய எழுதுன்னு போட்டி போடுங்க. ‘உங்’ கொட்டி மாளாது. கண்ணு முன்னாடி பார்க்கிற இந்த மனுஷிகமேல பெரிய மரியாத ஆயிடுச்சு. அந்த மரியாதையக் கதைகளா எழுதி வெளிப்படுத்துறேன்.”

“பெண்களின் வாழ்க்கைப்பாடுகள் துயரங்கள் எழுதப்பட்ட அளவு அவர்களின் கொண்டாட்டங்கள் எழுதப்படவே இல்லையே?”


“எரிகிற குச்சிகளைப் பற்றி எனக்குப் பிரச்னையே இல்ல. எரியாத குச்சிகளைப் பற்றித்தான் பிரச்னை. அடுப்புல குச்சிகள வச்சுக்கிட்டே இருப்போம், நல்லா எரிஞ்சுக்கிட்டிருக்கும், திடீர்னு அடுப்பு புகையும். ஏதோ ஒரு குச்சி நமத்துப்போயிருக்குனு அர்த்தம். அந்த நமத்துப்போன குச்சி, ஏன் நமத்துப்போச்சி. அதுக்கு என்ன நடந்ததுனு எழுதுவேன். அப்படித்தான் எழுதி வந்திருக்கேன். அதத்தான் சொல்லணும்னு முக்கியமாப் பட்டுச்சு. ‘அஞ்சலை’ நாவல்ல ஒரே ஒரு தடவ அது ஊரச் சுத்திட்டு வரும் சந்தோசமா... அதுமட்டும்தான். வேற எந்த சந்தோசமும் அதுக்கு இருக்காது. உங்க கேள்விக்குப் பிறகு, அப்படி ஒரு நாவல எழுதணும்னு தோனுது. இவ்வளவு துயரங்களுக்குள்ளும் அவங்க உருவாக்கிக்கிற சின்னச் சின்ன எளிமையான கொண்டாட்டங்களப் பற்றி எழுதணும். இனி வரக்கூடிய என்னுடைய கதைகள்ல நீங்க எதிர்பார்க்கலாம்.”

“கிராம வாழ்வில், ஒருவரது பூர்வீகமும் அந்தரங்கமும் பெரும்பாலான உண்மைகளும் எல்லோருக்கும் தெரிந்துவிடுகிறது. இது ஒரு சுமை இல்லையா? தப்பிக்க முடியாத இடமாக மாறிவிடுகிறதல்லவா?”


“நம் வாழ்வின் பலமும் பலவீனமும் அதுதான். ‘அஞ்சலை’ நாவல்ல பேசப்படும் களம் அதுதான். எந்த அளவுக்கு உங்களைப் பற்றி ஒருவருக்குத் தெரிஞ்சிருக்கிறது பிரச்னையோ, அதே அளவுக்குத் தெரியாம இருக்கிறதும் பிரச்னைதான். நகரத்தில உங்களுக்கு ஒரு துயரம் நேர்ந்து போச்சுன்னா, நீங்களாதான் தேறி வரணும். கிராமத்துல எவ்வளவுக்கு எவ்வளவு விஷயத்தைச் சுமையாக்குறாங்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு எளிதாக்கி, ஒரு குடும்பத்த இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டு வந்துருவாங்க.

எங்க ஊர்ல ‘அந்தி எழவு’னு ஒரு சடங்கு இருக்கு. ஒரு குடும்பத் தலைவன் இறந்துபோறான். இறப்பு நடந்த வீட்டுல குடும்பத்தத் தாங்கிட்டுருக்கிற அந்த அம்மா, அந்த இறப்பிலிருந்து மீள முடியாம போராடிக்கிட்டு இருப்பாங்க. அப்போ, பதினாறாம் நாள் கரும காரியம் வரைக்கும் ஒவ்வொரு சாயந்தரமும் அந்தத் தெருச் சனங்களெல்லாம் போய் அந்தச் சம்பந்தப்பட்ட அம்மாவக் கட்டிப்புடிச்சு அழுதுட்டு வருவாங்க. இந்த மாதிரி எல்லாரும் போய் அழுற சந்தர்ப்பத்தில் தன்னையறியாமலேயே எல்லாத் துக்கத்தையும் அழுது… அழுது… அந்த அம்மாவோட மனம் இயல்பு நிலைக்கு வந்திடும். பத்துப் பதினைஞ்சு நாள்கள்ல அவங்க பாட்டுக்கு வேலைக்குக் கிளம்பிப் போயிருவாங்க. 

எங்கப்பா இறந்த சமயத்துல எங்கம்மா, நைட்டு ரெண்டு மணிக்கு எந்திரிச்சு அழுவாங்க. அந்தச் சமயத்துல தெருவே வந்துரும். அவ்ளோ ஆறுதல் சொல்வாங்க. அப்படி ஊரே வந்து நிக்கும்போது, எதிலிருந்தும் மீண்டு வந்துரலாம்னு தோனும். நீங்க சொல்ற மாதிரி பிரச்னை காயம்போல இருந்தாலும் அதுக்கும் மருந்து அங்கேயே இருக்கு.”

“காமம், வன்முறை சார்ந்த அழுத்தம் நகரத்தைவிடக் கிராமத்தில் அதிகம் உள்ளதாகச் சொல்லப்படுகிறதே?”

“அப்படியெல்லாம் இல்லண்ணே. மனுஷப் பய எங்க இருந்தாலும் அங்க இந்த ரெண்டு அழுத்தமும் இருக்கும். நகரத்துல கல்வியறிவும் கண்காணிப்பும் அதிகமா இருக்கிறதால, நகரம் ரொம்ப ஒழுக்கமா அமைதியா இருக்கிற மாதிரி ஒரு பொய்யான பிம்பம் இருக்கு. சமீபமா செய்திகளப் பாக்கிறப்ப, அதுவும் பொய்னு எல்லோருக்கும் தெரியுது.”

“ ‘அஞ்சலை’ நாவல் காலத்துக் கிராமத்துக்கும் இப்போதைய கிராமத்துக்கும் என்ன வித்தியாசம்?”

“ ‘அஞ்சலை’ நாவல்ல வர்ற மாதிரி அந்தக் காலத்துல ஒரு குடும்பம் செதைஞ்சு போச்சுன்னா, பொண்ணு கோவிச்சுக்கிட்டு ஊருக்குப் போச்சுன்னா, குடும்பத்த ஒண்ணு சேர்த்துவைக்க, பேசி விருந்துவைக்க சாராயம் குடிச்சான். இன்னைக்கு, குடும்பத்தக் கந்தரகோலம் பண்றதுக்குக் குடிக்குறானுங்க. முக்கியமா சொல்லணும்னா, இன்னைக்குக் கிராமங்கள்ல நீதி செத்துப்போய்க் கெடக்கு. கிராமத்தோட நீதி பரிபாலனம் மாறிப்போச்சு.

அன்னைக்கு, ஆளு வசதியில்லாதவரா இருப்பார் ஆனா, நேர்மை இருக்கும்; வார்த்தை சுத்தமிருக்கும். ஊர்ல ஒரு பிரச்னை, பஞ்சாயத்துனா அவர் சொல்றத ஊரே கேட்கும். ‘அவரக் கூட்டிட்டு வாங்கய்யா... சரியாப் பேசுவார்’னு சொல்வாங்க. இன்றைக்குப்  பணமுள்ளவன், அரசியல் செல்வாக்கு உள்ளவன்தான் பெரியாளா இருக்கான்; நியாயம் பேசுறான். அது நியாயமா இருக்குமா? கிராமங்கள்ல அன்னைக்கு இருந்த பெரிய மனுஷங்க இல்லாமப் போய்ட்டாங்க. அது இந்தக் கிராம அமைப்புக்குப் பெரிய இழப்பு. என்னுடைய நாவல்ல ‘அஞ்சலைக்கு அவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் வாழ்க்கை நின்னு நெலைச்சதுன்னா காரணம், அன்னிக்கு அந்த மாதிரி பெரிய மனுஷங்க, நியாயமுள்ளவங்க இருந்தாங்க. இந்தக் காலமா இருந்தா அஞ்சலையால திரும்ப ஊருக்குள்ளவே வர முடியாது.”

“உங்கள் நாவல்ல வர்ற அந்த ‘அஞ்சலை’ பாத்திரம் ஓர் உண்மையான நபர்தான் என்று நினைக்கிறேன். இப்போது அவர் எப்படி இருக்கிறார்?”


“இங்கதான் இருக்காங்க. மீதி விஷயத்த அஞ்சலையோட இரண்டாம் பாகம் ‘சஞ்சலம்’னு... மனசுல உருப் போட்டுட்டே இருக்கேன். அதைப் படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க.” (சிரிக்கிறார்)

“நடுநாட்டு மக்கள் கதையை எழுத ஆள் இல்ல!” - கண்மணி குணசேகரன்

“வட்டார மொழியில் ஒரு படைப்பை எழுதும்போது, அதில் துல்லியமான சாதிய அடையாளங்கள் வந்துவிடுமே... அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“உண்மைதான். இங்கு சாதி இருக்கத்தானே செய்யுது. அதை எப்படி மறைச்சு எழுதுறது; ஏன் எழுதணும்? பிறகு, எப்படித்தான் மனிதர்களோட அசல் வாழ்க்கைய ரத்தமும் நாத்தமுமா எழுதுறது?

இங்கு சாதியே இல்லைனு பொய் சொல்லணுமா,  எதையும் எதிர்கொண்டுதான் நாம கடக்க முடியும். விலகிப்போய் இல்ல.எனக்கு இதை எழுதுறதுல தயக்கமெல்லாம் கிடையாது. ஒரு எழுத்தாளன் எழுதுற படைப்புல அவனோட குரல், சாதிய நிறுவுதானுதான் பார்க்கணும். ஒரு நல்ல எழுத்தாளன் சாதியை விசாரிப்பான்; சத்தியமா எப்பவும் அதை ஆதரிக்க மாட்டான்.”

“தமிழில் இன்னும் எழுதப்படாமல் இருக்கிற, எழுதப்பட வேண்டும் என நீங்கள் விரும்புகிற விஷயம்?”

“விவசாயத்தோட வீழ்ச்சியையும் இந்த நிலத்திலிருந்து மறைஞ்சுக்கிட்டு வர்ற நீர் பற்றியும் எழுதப்படணுங்கிறது என்னோட ஆசை. எனக்குத் தெரிஞ்சு, ஒரு கவளையில பூட்டாங் கயிறக் கட்டி, வாளியால மொண்ட தண்ணி. பிறகு, கெணறு வெட்டி முப்பதடி விழுந்தது. பிறகு, ஐம்பதடி போச்சு. அப்புறம் கை போர் போட்டு நூறு அடில மோட்டார் ஓடிக்கிட்டிருந்தது. பின்ன, வாட்டர் லெவல் கொறைஞ்சு 250 அடில நின்னது. போன வருசம் 300 அடி. இப்போ 400 அடிக்கும் கீழ தண்ணி போயிருச்சு. இப்பத் திரும்பவும் மோட்டாருக்குச் செலவு பண்ணிக் கிட்டிருக்கோம். நீரும் நிலமும்தான் நம்ம வாழ்க்கையோட முதல் பிரச்னை. ஆனா, இந்த விஷயத்துல நாம ஏனோதானோனு இருக்கோம். மீத்தேன் போராட்டம் அவ்வளவு தீவிரமா நடக்குது, காவிரி டெல்டா பற்றி விவசாயப் பிரச்னைகள் பற்றி படைப்புகள் வரணும்.”

“உங்களுடைய அரசியல் நம்பிக்கை குறித்துச் சொல்லுங்கள்?”

“நாம விரும்பினாலும் விரும்பாட்டாலும் அரசியல் ஒவ்வொரு மனிதனையும் விடாது. எல்லாரையும்போல எனக்கும் அரசியல் இருக்கு. எந்தத் தனிப்பட்ட லாப எதிர்பார்ப்பும் இல்லாத, அரசியல் அது. பாட்டாளி மக்கள் கட்சியில உறுப்பினரா இருக்கேன். பணியிடத்திலயும் பாட்டாளி மக்கள் கட்சி தொழிற்சங்கத்துல இருக்கேன். இந்தப் பகுதியில் மக்களின் நிலம் சார்ந்த, நீராதாரங்கள் சார்ந்த பிரச்னைகள்ல அவங்கதான் முன்னே நின்னு செயல்படுறாங்க. அந்த வகையில் நான் உடன் நிக்கிறேன். மற்றபடி, நான் அரசியல்வாதி கிடையாது. கட்சி வேட்டி கட்டிக்கிட்டு கூட்டங்களுக்குப் போகிற ஆள் கிடையாது.”

“உங்களுடைய கடவுள் நம்பிக்கை எப்படியானது?”

“நம்ம சாமியெல்லாம் எலும்பு ரசம் கேக்குற சாமிக. என் சாமி நான் என்ன சாப்புடுறேனோ, அதைச்  சாப்புடும். நான் என்ன மாதிரி வாழ்றேனோ, அது மாதிரி வாழும். இன்னைக்கும்கூட என்னால தாங்க முடியாத துயரம்னா, போய் எங்க ஊரு அய்யனார் கோயில் குட்டைல குளிச்சு எழுந்து வந்தேன்னா, அந்தப் பிரச்னை அப்படியே போயிடும். இது என் நம்பிக்கை; என் வழிபாட்டு முறை. நான் குலதெய்வ வழிபாட்டு நம்பிக்கை கொண்டவன். அதுல தெளிவா இருக்கேன்.”

“நெய்வேலி பிரச்னை பற்றி ‘வந்தாரங்குடி’ நாவலில் எழுதினீர்கள். அந்த நிறுவனத்திடமிருந்து ஏதேனும் பிரச்னைகள் வந்தனவா?”

“நான்தான் திரும்பத் திரும்பச் சொல்றேனே, இங்க யாரும் எதையும் வாசிக்க மாட்டாங்க. அந்த நாவல்ல அவ்வளவு எழுதினேன். திரும்பிப் பார்க்கக்கூட இன்னமும் ஒரே ஒரு ஆள்கூட இல்லை.”

“இங்க, உங்க ஊர்லகூட யாரும் படிக்க மாட்டாங்களா?”

“ஊர்ல ரெண்டு மூணு பிள்ளைங்க படிக்கும்; புத்தகம் கேட்கும்; குடுப்பேன். மத்தபடி, பெரிய வாசகர்களா யாரும் இல்ல.”

“ ‘என்னடா வாழ்க்கை இந்த நெய்வேலியாலே’ என்று வந்தாரங்குடி நாவலில் ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும், அந்த நிலப்பகுதியின் ஒரு சிறிய ஆவணச் சித்திரம்போல. அந்தப் பாடலை எப்படி நாவலுக்குள் கொண்டுவந்தீர்கள்?”


“நெய்வேலிக்கு எதிரான போராட்டங்கள் நடந்துட்டிருந்த சமயம். நாங்க ‘மணிமுத்தாறு’னு ஒரு இதழ் நடத்திக்கிட்டிருந்தோம். அப்போ யாரோ கொண்டுவந்து ஒரு துண்டறிக்கையைக் கொடுத்தாங்க. அதில ஒரு பாடல் இருந்துச்சு. எழுதியவர் பெயர் கவி வான்முட்டினு இருந்துச்சு. யாரு என்னன்னு வெவரம் கேட்டா, ஒருத்தருக்கும் தெரியல. ‘யாரோ ஒருத்தர் மாட்டு வண்டியில மைக்செட் கட்டிக்கிட்டு, இந்தப் பாடலைப் பாடிக்கிட்டே துண்டறிக்கைகளைக் குடுத்துக்கிட்டுப் போனாருனு’ சொன்னாங்க. அந்தப் பாடலை வாசிச்சதும், இத்தனை ஊர்களை, அந்த ஊர்ப் பிரச்னைகளை ஒரு பாட்டுல கொண்டு வந்திருக்காரேனு எனக்கு ஆச்சர்யமா போச்சு. ஆனாலும், ஆளைப் புடிக்க முடியல. அந்தத் துண்டறிக்கையைப் பத்திரமா எடுத்து வெச்சுக்கிட்டேன். பா.ம.க-வின் போராட்ட நிகழ்வுக்காக எழுதப்பட்ட பாடல்னு மணிமுத்தாறு இதழ்ல அந்தப் பாடலை  வெளியிட்டோம். பிறகு அப்படியே மறந்துட்டேன். மறுபடியும்   ‘வந்தாரங்குடி’ நாவல் எழுதும்போது அந்தப் பாடல் நெனப்புல வந்தது. தேடிப் பிடிச்சு எடுத்து நாவலுக்குள்ள சேர்த்துட்டேன்.

அப்போ, அவ்வளவு தேடியும் கிடைக்காத ஆளு, ஒரு நாள் ஒரு கவிதைத் தொகுப்ப எடுத்துக்கிட்டு வந்து வீட்ல குடுத்தாரு. புத்தகத்தத் திறந்து பார்த்தா, கவி வான்முட்டினு இருக்கு. விசாரிச்சா...அவரேதான். விஷயத்தைச் சொன்னேன், சந்தோஷப்பட்டாரு. இப்போ பா.ம.கவுல இல்ல, நாம் தமிழர் கட்சியில இருக்கிறாரு.”

“நடுநாட்டு மக்கள் கதையை எழுத ஆள் இல்ல!” - கண்மணி குணசேகரன்

“தமிழில் எழுதப்படும் சிறுகதைகள், நாவல்கள் பெரும்பாலும் எடிட் செய்யப்படுவதில்லை. எடிட் செய்யப்படுவதை ஏதோ, தரக்குறைவான ஒன்றாகப் பார்க்கிறார்கள். நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“நான் இதை என்னுடைய அனுபவத்திலிருந்தே சொல்றேன். முன்பு ஒருமுறை ஒரு கவிதை எழுதியிருந்தேன்.

‘பயிர்கள் முளைக்கும் முன்பே
களைகள் முளைத்துவிடுகின்றன
பயிர்கள் வளரும் முன்பே

“நடுநாட்டு மக்கள் கதையை எழுத ஆள் இல்ல!” - கண்மணி குணசேகரன்

களைகள் வளர்ந்துவிடுகின்றன...
பயிர்கள் பூக்கும் முன்பே
களைகள் பூத்துவிடுகின்றன...’


இப்படிச் சொல்லிட்டே வந்து,

‘பயிர்கள் முற்றுவதற்கு முன்பே
களைகள் முற்றிவிடுகின்றன
பயிர்கள் அறுக்கப்படுவதற்கு முன்பே
களைகள் உதிர்ந்துவிடுகின்றன’


இதனால், களைகளை நம்மால் கட்டுப்படுத்தவே முடியவில்லை’ங்ற மாதிரி இருக்கும்.

இந்தக் கவிதையை நான் ஒரு கவிஞர்கிட்ட காண்பிச்சேன். அவர், ‘இதுல இருக்குற களைகளைப் பூராம் முதல்ல களை எடுக்கணும்’ அப்படின்னாரு. தலைப்பை நான் ‘களை’னு வெச்சிருந்தேன். அதை மட்டும் அப்படியே வெச்சிக்கிட்டாரு.

பயிர்கள் முளைக்கும் முன்பே
முளைத்துவிடுகின்ற
பயிர்கள் வளரும் முன்பே
வளர்ந்துவிடுகின்றன
பயிர்கள் பூக்கும் முன்பே
பூத்துவிடுகின்றன


இப்படிச் சொல்லிட்டே வந்து,

பயிர்கள் அறுவடை செய்யப்படுவதற்கு முன்பே
முற்றி உதிர்ந்து தன்னை விதைத்துக்
கொள்வதால் கட்டுப்படுத்த முடியாமலே
போய்விடுகிறது
வயலில் மட்டுமல்ல.


அப்படின்னு அதை எடிட் பண்ணினாரு.

“நடுநாட்டு மக்கள் கதையை எழுத ஆள் இல்ல!” - கண்மணி குணசேகரன்

இந்த எடிட்டிங் இந்தக் கவிதையை இன்னும் செழுமையாக்கிடுச்சே. அப்ப இத ஏத்துக்கிட்டுத்தானே ஆகணும்னு தோணுச்சு. எடிட்டிங் மேல எனக்கு நம்பிக்கை வந்துச்சு. அதேசமயம், நம்ம எழுத்த எடிட் பண்ணப்போற ஆள் யாருங்றது ரொம்ப முக்கியம். குடல் ஆபரேஷன் பண்ணுறவர் கிட்ட போய்க் கொடுத்தீங்கன்னா முடிஞ்சது கதை. என் கதைகளை எழுதி முடிச்சதும் பாண்டிச்சேரி கண்ணன், தமிழினி வசந்தகுமார் அண்ணன் ரெண்டு பேர்கிட்டயும் கொடுத்துருவேன். அந்த எழுத்து கொஞ்சம் கொஞ்சமா செழுமையடையிறத கண்ணு முன்னால பார்க்கலாம். நம்மை வச்சே நம்ம படைப்பைச் செழுமைப்படுத்துவாங்க.

வந்தாரங்குடி நாவலில் ஏராளமான பாத்திரங்கள் வரும். அதனால, பாத்திரங்களுக்கு ஒரு சார்ட் மாதிரி குடும்ப வரைபடம் போடுவோம்னு சொன்னேன், ‘அந்த மாதிரிப் போட்டாலே, நீ எழுதறதுக்கு லாயக்கு இல்லாத ஆளு. நாவல் போக்கிலேயே நீ வாசகனுக்கு விஷயங்கள, தொடர்ப ஞாபகப்படுத்தணும்னு சொன்னார் வசந்தகுமார் அண்ணன். சரிதான்னு புரிஞ்சிக்கிட்டேன். இப்படியான ஆட்கள் நம்மகூட இருக்கணும். அப்பதான் எழுத்து சிறக்கும்.  நம்ம நாவல் நல்லா வந்தா நமக்குத்தானே பெருமை.

எடிட்டிங் இல்லாமலேயே தங்கமா எழுதுற கிருபை சிலருக்குக் கிடைச்சிருக்கலாம்; அவங்களுக்கு எழுத்து  அப்படி அமைஞ்சிடலாம். நாம ஒரு சாதாரண ஆளு. நமக்கு எடிட்டிங் அவசியம்தான்.”

 “உங்களது படைப்புகளை முன்வைத்து எழுகிற விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?”

“நியாயமான விமர்சனமா இருந்தா ஏத்துக்க வேண்டியதுதான். மட்டையடியா அடிக்கிறது மனசளவுள ஒரு தேக்கத்த ஏற்படுத்தத்தான் செய்யும். அப்படியும் நடந்திருக்கு. ஆனாலும், தட்டிப்போட்டுட்டு உடனே எழுந்துருச்சுருவேன். சில நல்ல விமர்சனங்களையும் பாத்துருக்கேன்.  ‘அஞ்சலை’ நாவல் இரண்டாம் பதிப்புப் போகிற சமயம், முன்னுரைக்காக வ.கீதாவுக்கு அனுப்பிவெச்சிருந்தோம். அந்தம்மா நாவலை முழுசாப் படிச்சுட்டுக் கேட்டாங்க, ‘நாவல் எந்தக் காலகட்டத்தில் நடக்குது?’னு. பதில்சொல்ல முடியல. பிறகு, கதையில வர்ற பாத்திரங்களோட வயச கணக்குப் பாத்தா 1987-னு வருது.

எம்.ஜி.ஆர் இறந்துபோன வருஷம். நாவல்ல எந்த இடத்துல பதிவு பண்றதுனு தெரியல. ஒவ்வொரு இடமா வாசிச்சுப் பாக்குறேன். அப்புறமா, அஞ்சலையோட கல்யாண பத்திரிக்கை வாசிக்கிற இடத்தில இந்த வருஷத்தப் பதிவு பண்ணிறலாம்னு முடிவு பண்ணி, பக்கத்து ஊரு ஜோசியக்காரரைப் போய்ப் பார்த்துச் சரியா எழுதி வாங்கிட்டு வந்து சேர்த்தேன்.

சியாமலா கௌரின்னு ஒரு பொண்ணு பி.எச்டி பண்ணுது. ‘கோரை’ நாவலைப் படிச்சிட்டுத் திடீர்னு போன் பண்ணி, ‘சார் இந்தக் ‘கோரை’ நாவல் என்னா வூர்ல சார் நடக்குது’னு கேக்குது. எந்த இடத்துலயும் நான் ஊர்ப் பேர எழுதல. ‘எங்கூர்’னுதான் எழுதியிருக்கேன். இப்படியான கேள்விகளை விமர்சனங்களை நான் மதிக்கிறேன். அதை முன்னிட்டு என்னை, என் எழுத்தை மாத்திக்கிறேன். ஆனா, மட்ட அடியா அடிக்கிற ஆட்களை நான் பொருட்படுத்தவே மாட்டேன்.”

“நடுநாட்டு மக்கள் கதையை எழுத ஆள் இல்ல!” - கண்மணி குணசேகரன்

“உங்களுடைய இந்த ‘மணக்கொல்லை’ கிராமம் குறித்த சிறப்பான விஷயங்கள் பற்றி சொல்லுங்க...”

“இந்தக் கிராமத்தோட சிறப்பே முந்திரிதான். கிழக்கு நிலம் முழுக்க முந்திரி. மேற்கு நிலம் முழுக்க நஞ்சை. அதாவது, பாதி முந்திரி, பாதி நெல்லு. மல்லாட்டக் கரும்பும்கூடப் போடுவாங்க. எல்லாத்துக்கும் மேல, எங்க தலைமுறைக்கு முந்தின தலைமுறைல, வீட்டுக்கு ஒரு ஆள் தெருக்கூத்துக் கலைஞரா இருந்திருக்காங்க.”

“உங்க வீட்ல யாரும் ஆடியிருக்காங்களா?”

“ஆமா, எங்க தாத்தா, அப்பால்லாம் ஆடியிருக்காங்க. இன்னமும் ஒவ்வொரு கோடை காலத்துலயும் நாலஞ்சு ராத்திரி ஊர்ல கூத்து நடந்துக்கிட்டுதான் இருக்கு. ஆனா, கூத்துப் பார்க்க வர்ற சனம் கொறஞ்சு போச்சு. ஆனாலும், கூத்தைப் பேணி வளர்க்கிற ஆட்கள் வந்துக்கிட்டேதான் இருக்காங்க. நேத்து வந்து ஒருத்தர் சொல்லிட்டுப் போறாரு, ‘ரேஷன் கடைல வேலைக்கு இருக்கேன், இப்ப வாத்தியாருக்கு ஆடறேன்’னு. முன்ன பப்பூனுக்கு ஆடி இப்போ வாத்தியார் வேசம் கட்டியிருக்காரு. ரேஷன் கடைல வேலை பாக்குற மனுஷனுக்குள்ள ஒரு கலைஞன் இருந்துருக்கான் பாருனு எனக்கு ஆச்சர்யம். சந்தோஷமாப் பாட்டுகளைக் கத்துக்கிட்டுக் கூத்துக்கான ஆட்கள் இன்னும் தயாராகிட்டுத்தான் இருக்காங்க.”

“ஒரு கூத்து ஜாமாவில் ஒரு சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஆடுவார்களா?”


“அப்படி இல்லண்ணே. நம்ம ஊரோட சிறப்பே அதுதான். இங்க கூத்துல எல்லாச் சமூகத்து ஆட்களும் இருப்பாங்க. எல்லாம் கலந்துதான் ஆடுவாங்க, ஒரு வித்தியாசமும் கிடையாது. எல்லா வசவு வார்த்தையாலயும் ஒருத்தருக்கு ஒருத்தர் உரிமையா திட்டி பேசிக்குவாங்க. விஷமமே கிடையாது. முன்னல்லாம், கூத்துப் பாக்குற பார்வையாளர் பகுதியைச் சாதி சொல்லிப் பிரிச்சு உக்காரவெச்சிருக்காங்க. இப்பெல்லாம் அப்படிக் கிடையாது. சொல்லப்போனா, தெருக்கூத்துல ஆடுற பாதிப் பேர் தலித்துகதான். கோனாரு, குயவருனு கூத்தைப் பொறுத்தவரை இங்க ஒரு பேதமும் கிடையாது. அது கலை, அதுக்கு முன்னாடி எல்லா மனுஷப் பயலும் ஒண்ணுதாங்ற புரிதல் இருக்கு. இப்படிப்பட்ட ஒரு நில அமைப்பு, மக்கள், வாழ்க்கைச் சூழல் இந்த மண்ணுல இருக்கு.”

“ஒரு படைப்பாளியாக உங்கள் மனதுக்கு நெருக்கமான சக எழுத்தாளர் யார் யார்?”

“ராஜேந்திர சோழன், நாஞ்சில் நாடன், சு.வேணுகோபால் ரொம்பப் பிடிக்கும். ராஜேந்திர சோழன், இந்த மண்ணோட எழுத்த எழுதுன முன்னோடி. நாஞ்சில் நாடன் மனம் திறந்து பாராட்டுவாரு. ‘ஆனந்த விகடன்’ல நாஞ்சில் நாடனோட ஒரு கதை வந்திருந்தது. நான் படிச்சிட்டு போன் பண்றேன். போனை எடுத்த உடனேயே, ‘உன் கதை மாதிரி ஒண்ணு எழுதிப் பார்த்தேன்’னு சொல்றாரு. அவரப் பார்த்து வளர்ந்த ஆளு நானெல்லாம். இதைச் சொல்றதுக்கு எவ்வளவு மனசு வேணும். அவரோட ‘சங்கிலி பூதத்தான்’ தொகுப்பைத்தான் இப்போ வாசிச்சிட்டு இருக்கேன். 

ஒரு சமூகத்தோட அன்றைய  பிரச்னைய நான் ஒரு கதையா நாவலா எழுதுனா, அன்னைக்கு அது பேசப்படும். அந்தப் பிரச்னை முடிஞ்சதும் அந்தக் கதையும் சாரம் இழந்துபோகும். ஆனா, மனுஷனோட அடிப்படை உணர்வுப் போராட்டங்களை, உறவுச் சிக்கல்களை, கீழ்மைகளை, மேன்மைகளை எழுதும்போது அது காலத்துக்கும் மனுஷனோட உரையாடி நிக்கும். அப்படியான கதைகள் சு.வேணுகோபாலுடையது. எளிமையா அதேசமயம் நுட்பமாச் சித்திரிக்கிற ஆளு. நடந்து போற பாதையில, பூத்திருக்கிற பூவுல தேன்குடிக்கிற வண்டோட இறகு எப்படி இருக்குனு நுட்பமா எழுதுவார். அதனால அவரைப் புடிக்கும்.”

“பல ஈழப்போராளிகளின் புகைப்படங்களை உங்கள் வீட்டுச் சுவற்றில் பார்க்க முடிகிறது. இந்த அரசியல் ஆர்வம்…”


“இது அரசியல்லாம் கிடையாதுண்ணே. வர வேண்டிய தார்மீகக் கோபம். இருக்க வேண்டிய சகோதர உணர்வு. அவ்வளவுதான்.  80-களின் பிற்பாதியில் இங்கே தெருக்கூத்துகளில் ஈழம் குறித்த பாடல்களைத் தீவிரமாப் பாடுவாங்க. அப்போதே உருவான உணர்வு அது. அந்தக் காலகட்டத்தில முழுக்க ஈழப் பெண் விடுதலைப் புலிகளை முன்வைத்து ‘பீனிக்ஸ் பூக்கள்’னு ஒரு கவிதைத் தொகுப்பு எழுதினேன். சரியான வாய்ப்புகள் இல்லாமல் பிரசுரிக்க முடியாமப் போச்சு. இந்த உணர்வு இல்லனாதான், நீங்க  ஒருத்தரப் பார்த்து ஆச்சர்யப்படணும்.” (சிரிக்கிறார்)

“நீங்கள் ஒரு வட்டார மொழியின் பிரதான கலைஞன். தமிழ்நாட்டில் பேசப்படுகிற வட்டார மொழியில் உங்களுக்குப் பிடித்த மொழி எது, ஏன்?”

“கொங்கு வட்டார மொழி எனக்கு ரொம்பப் பிடிக்கும். சின்னவங்களையும்கூட  ‘வா கண்ணு... போ கண்ணுனு’ மரியாதையா அழைக்கிற அந்தத் தொனி ரொம்பப் பிடிக்கும். அதுல வெளிப்படுற கனிவும் வாஞ்சையுமான ஒலிப்பு பிடிக்கும்.”

“நீங்கள் நன்றாகப் பாடுவீர்கள் என்று சொல்கிறார்களே?”

“பெரிய பாடகனெல்லாம் இல்ல. தெருக்கூத்துல கேக்கிற பாடல்களை மனப்பாடம் பண்ணிவெச்சுக்குவேன். பொதுஇடங்கள்ல பேசக் கூப்பிடும்போது, நாம ஒரு பக்கம் பேசிக்கிட்டிருந்தா, பார்வையாளர்கள் ஒரு பக்கம் பேசிக்கிட்டிருப்பாங்க. அப்போ, ஒரு பாட்ட எடுத்துவிட்டோம்னு வைங்க, சட்டுனு கூட்டம் நம்ம பக்கம் கவனமாயிரும்; ரசிக்கும். அதுக்காகச் சில கூத்துபாடல்களை, தாலாட்டுப் பாடல்களை, ஒப்பாரிப் பாடல்களைக் கைவசம் வெச்சிக்குவேன். நானும் சில நேரம், மெட்டுக்கு வரிகளை எழுதுவேன். வட்டார மொழியில கவனமுள்ள எழுத்தாளனா இருப்பது ஒரு பெரிய கொடை. ‘மீன் பிடிக்கப் போனவன் நண்டும் பிடிச்சுட்டு வருகிற மாதிரி, ஏதோ ஒரு சொல்லுக்காகப் போய்க் கதைப்பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள், ஒப்பாரினு பல விஷயங்கள் கிடைக்கும். மத்தது எப்படியோ ஒப்பாரி ரொம்ப நல்லாப் பாடுவேன்.

‘எம்மா தென்னே மரம் பொளந்து

“நடுநாட்டு மக்கள் கதையை எழுத ஆள் இல்ல!” - கண்மணி குணசேகரன்


என்னப் பெத்தம்மா
எனக்குத் தேருமேல் செப்பனிட்டு
என்னைத் தேடி வந்த அம்மாளும்
இன்னைக்கு நான் தென்னே முடி வளத்து
இன்னைக்குத் தேருமேல போட்டழுதா
இன்னைக்குத் தேரு அலங்காரமா
என்னப் பெத்த அம்ம
ஒனக்குத் திருவண்ணாமலை சிங்காரமாம்...

எம்மா பாக்கு மரம் பொளந்து
என்னை பெத்தம்மா
ஒனக்குப் பாடையுமே செப்பனிட்டு
இன்னைக்கு என்னப் பாத்து வந்த அம்மாளு
இன்னைக்கு நான் பம்ப முடிவளத்து
இன்னைக்கு நான் பாடமேல போட்டழுதா
இன்னைக்குப் பாட அலங்காரமா
என்னைப் பெத்தம்மா உனக்குப் பழனிமல சிங்காரம்மா...’


இப்பிடி நான் வரியெடுத்துப் பாடுனேன்னா, சுத்தியுள்ள சனம் கண்ணீர் விடும். எங்க தாத்தா கூத்தாடியிருக்காரு. எங்கப்பா கூத்தாடியிருக்காரு. எனக்கு கூத்தாடுறதுக்குச் சந்தர்ப்பம் அமையல. அந்தத் தொடர்ச்சிதான் இப்படிக் கூத்துப் பாடல்களை நோக்கி உந்தித் தள்ளுது. என் மகனும் நானும் சேந்து ராத்திரியில பாடுவம். ஏகாந்தமா இருக்கும்.”

“நடுநாட்டு மக்கள் கதையை எழுத ஆள் இல்ல!” - கண்மணி குணசேகரன்

“எப்போதெல்லாம் எழுதுவீர்கள், என்ன மாதிரியாகத் திட்டமிடுவீர்கள்?”

“எனக்கு வேலைக்குப் போகணும். விவசாயம் பாக்கணும். குடும்பப் பொறுப்பு இருக்கு. வேலையில் மூணு ஷிப்ட்டும் வரும். அதுக்கு இடையில எழுதணும். மெடிக்கல்ல மாத்திரை வாங்கிறப்ப ‘இரவு’னு எழுதிக்கொடுப்பான். நான் அவன்கிட்ட கேட்பேன், ‘நைட் ஷிப்ட் பாக்கிறப்பப் போடலாமானு’ அதுதான் நம்ம பொழப்பு. ஷிப்ட்ல இருக்கும்போது, வீட்ல வந்து நெறைய எழுதணும்னு ஆசை இருக்கும். ஆனா, வந்ததும் செவனேனு படுத்துப்பேன். ஒடம்பு முடிய மாட்டேங்குது. வேலையும் பார்த்துத்தான் ஆகணும். புள்ளையக் குட்டிய வச்சுக்கிட்டு ஒண்ணும் பண்ண முடியல.எனக்கு ஓய்வு கெடச்சா போதும் எழுதுவேன். அமைதியான இடமா இருக்கணும் தொந்தரவு இருக்கக் கூடாது னெல்லாம் இல்ல. சோறாக்கிட்டுருப்பாங்க, எண்ண தாளிக்கிற நெடியடிக்கும், தெரு இரைச்சலிருக்கும். எரைச்சல்களோட எரைச்சலா ஏம்பாட்டுக்கு எழுதிக்கிட்டிருப்பேன்.

பெரும்பாலும் நிஜ மனிதர்களைச் சம்பவங்களை எழுதுறதுனால, பெரிய தயாரிப்பெல்லாம் தேவைப்படாது.  ஆனா ‘வந்தாரங்குடி’ மாதிரி பெரிய நாவலை எழுதுறதுக்கு முன்னாடி, மனசுக்குள்ள மொத்த நாவலையும் ஓட்டிப் பார்ப்பேன். கதாபாத்திரங்கள் பேரு, ஊர், நிலப்பகுதினு வரைஞ்சு சுவத்தில ஒட்டிட்டேன். கஜினி படத்துல ஒட்டுற மாதிரி. (சிரிக்கிறார்) எழுதணும்னா இதெல்லாம் வேணும்னு தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் பலர் பல விஷயங்கள வெச்சிருக்காங்க. நமக்கு அப்படி ஒண்ணும் கிடையாது. ஓய்வு கிடைக்கணும் அவ்வளவுதான்.”

“உங்க குடும்பம் பற்றிச் சொல்லுங்க...”

“எங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் இந்த ஊர்தான். விவசாயக் குடும்பம். ரெண்டு பேருமே நல்ல உழைப்பாளிங்க. எனக்கு பத்தொம்பது வயசிருக்கும், ஏதோ உடல் நலக் கோளாறுல அப்பா இறந்துட்டாரு. எங்க அண்ணன், என்.எல்.சி-ல வேலை கெடைக்காமக் காத்துக்கிட்டு இருந்தாரு. எங்க அம்மா, எங்க அண்ணனுக்கு அவங்க அண்ணன் பொண்ணத் திருமணம் பண்ணி வச்சிச்சு. அண்ணன் பொண்ணுக்கும் அம்மாவுக்குமே செட் ஆகல. எங்கம்மா தற்கொலை பண்ணிக்கிச்சு.

அக்காவுக்குத் திருமணம் பண்ணிக் குடுத்ததுக்கு அப்புறம், நான் திருமணம் பண்ணுனேன். அந்தப் பொண்ணுக்கு நான் எழுதுறது படிக்கிறதெல்லாம் பிடிக்காது; எழுத்து, கதை சொல்றதுனு பெண்பிள்ளைகள்கிட்ட நான் பேசுறது பிடிக்காது. ஒரு நாள் அதுவும் தற்கொலை பண்ணிக்கிச்சு. இப்ப எவ்வளவோ டாக்டர்களைத் தெரிஞ்சுவெச்சிருக்கோம். அன்னைக்கு வெவரம் இல்ல. இருந்திருந்தா, ஒரு கவுன்சிலிங் குடுத்துருக்கலாம். அப்போ நானே சின்னப் பையன். விட்டாச்சு. இடைல அண்ணனும் உடல்நலக் கோளாறுல தற்கொலை பண்ணிட்டு இறந்துபோனாரு.

அஞ்சலை நாவலுக்குப் படம் போட்டவரு, சொந்தக்காரர். அவர் பொண்ணத்தான் இப்போ மறுமணம் பண்ணிருக்கேன். மனைவி - காசிமணி, மகன்கள் மூணு பேர், தமிழ்மதி, அறிவுமதி, இளமதினு. இவங்ககூடதான் இந்த வாழ்க்கையை வாழ்ந்துட்டுருக்கேன். வாழ்க்கைல தொடர் தற்கொலைகளையும் உயிரிழப்புகளையும் சந்திச்சு வந்திருக்கேன். எல்லாக் காலகட்டத்திலயும் அடிப்படையா எழுத்து மட்டுந்தான் எனக்குப் பக்கபலமா இருந்துட்டுருக்கு. தொடர்ச்சியா துயரங்களைப் பார்த்ததால, ஒரு சின்ன நெகிழ்ச்சியான விஷயத்தைக்கூடத் தாங்கிக்க முடியிறதில்ல, பொசுக்குனு கண்ணீர் பொங்கிரும்.

முந்திரிய மட்டும் பாத்துக்கிறேன். கொள்ளைல எதுவும் பண்ண முடில. குத்தகைக்கு விட்டுருக்கேன். இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் இருக்கும் ‘இருளக் குறிச்சி’ அங்கதான் அஞ்சாவது வரை படிச்சேன். அப்புறம் பத்தாவது வரை ஆலடியில படிச்சேன். உளுந்தூர்பேட்டை ஐ.டி.ஐ-க்கு சைக்கிள்லயே போய்ட்டு வந்துடுவேன். அப்ரன்டீஸும் சரி வேலையும் சரி விருதாச்சலத்திலேயே கிடைச்சது. படிப்பு, வேலைனு எந்த வயசுலயும் எந்த ஊருக்கும் போய் ராத்தங்கினது இல்ல. எந்த ஊருக்குப் போனாலும் ராத்திரியில தூக்கம்  வராது. எப்பேர்ப்பட்ட வேலையா விழாவா இருந்தாலும் சரி ஊர் திரும்பிருவேன்.”

“உங்களுடைய பலம் எது, பலவீனம் எது?”

பலவீனம்னா, உடல்நல அளவுல சின்னதா ஏதும் வந்தாக்கூட ரொம்பப் பயந்திருவேன். ஒடைஞ்சி போயிருவேன். நம்ம வாழ்க்கையில மரணங்கிறது நியாயமில்லாம வந்து வந்து போனதுனால, அப்படி ஒரு மனப்பிரச்னை. குடும்பம் நம்மளை நம்பித்தான் இருக்குது. அது அதுக்கு றெக்க மொளச்சுப் போச்சுனா, பிரச்னை இல்ல. அது அது வாழ்க்கைய அது அது தீர்மானிச்சுக்கும். இப்போ, எல்லாமே நாமதான். நமக்கு ஒண்ணு ஆயிட்டா, இவங்கள யார் பாத்துப்பாங்ற கவலையிலேயே பதட்டமாகிருவேன். தமிழகத்தில உள்ள மருத்துவம் தொடர்பான எல்லா ஆட்களுக்கும் போன் போட்ருவேன்.

பலம்னா, எனக்கு இந்தப் பொட்ட மண்ணும், முந்திரிக்காடும், சனங்களும்தான். இதெல்லாம் என்கூட இருக்கிற வரை என்ன யாரும் ஒண்ணும் பண்ண முடியாது. நம்ம சொந்த மண்ணுல கால் ஊனி நிற்கும்போது வரும் பாருங்க பலம். அதுக்கு ஈடு எதுவும் சொல்ல முடியாது.”

“உங்களுக்கான அங்கீகாரம் கிடைத்திருப்பதாக நினைக்கிறீர்களா?”

“என்னைவிடப் பெரிய படைப்பாளிகள், சாகித்ய அகாதெமி உள்பட பல விருதுகளை வாங்கும்போது சந்தோஷப்பட்டிருக்கேன். ஆனா, இலக்கியத்துக்கு அவ்வளவு உண்மையாப் பங்களிக்காதவங்களுக்கும் அந்த விருது போகும்போது, எந்த விதத்துல நாம குறைஞ்சி போயிட்டோம்ணு தோணும். 25 வருஷமாத் தொடர்ந்து எழுதிக்கிட்டிருக்கேன். எந்தக் கதையையும் ஏனோதானோனு எழுதினது இல்ல.  ‘அஞ்சலை’, ‘நெடுஞ்சாலை’, ‘வந்தாரங்குடி’னு வேற வேற வழ்க்கையை எழுதிப் பார்த்திருக்கேன். 15 வருஷம் உழைச்சு அகராதி கொண்டுவந்திருக்கேன். இன்னும், என்ன முடியுமோ அதைச் செய்வேன். விருதுகளோ அங்கீகாரமோ, வரும்போது வரட்டும்.

நம்ம வட்டார வழக்குல சொல்லணும்னா, நஞ்சையிலாகட்டும் புஞ்சையிலாகட்டும் முந்திரியிலாகட்டும் எனக்குக் கிடைக்க வேண்டிய மானியம் கிடைச்சிருக்கணும். ஆனா, மானியப் பட்டியல்லகூட நம்ம பேரு வர மாட்டேங்குது. இதைப் பற்றி நான் என்னத்தச் சொல்றது.” (சிரிக்கிறார்)

“வாழ்க்கையின் பெரிய துயரம் எது என்று நினைக்கிறீர்கள்?”

“என்னுடைய அனுபவத்தில், பெண் துணை இல்லாத ஒரு ஆணோ, ஆண் துணை இல்லாத ஒரு பொண்ணோ வாழ்ற வாழ்க்கைதான் பெருந்துயரம். துணையிழந்து போறது மாளாத்துயரம், ரணத்துயரம். ஒரு ஆணாக நானே இவ்வளவு உணர்ந்திருக்கி றேன்னா, பெண்களோட நிலை எவ்வளவு  வலி கூடுனதா இருக்கும். ஆண் துணை இல்லாத பெண்கள், தங்களைப் பற்றிய நல்லதும் கெட்டதுமான பேச்சுகளைக் கடந்து வர்றதே பெரிய விஷயம்ணே. ஆளுக்குத் துணையா இருந்து வாழ்றதே இவ்வளவு கஷ்டமா இருக்கு. யோசிச்சுப் பாருங்க துணையில்லா வாழ்வ.”

“வாழ்க்கையின் கொடை என்று எதைச் சொல்வீர்கள்?”

“குடும்பத்தோட, புள்ளைகுட்டிகளோட நம்ம வீட்டுக் கொள்ளையில விவசாய வேலை பார்க்குறோம் பாருங்க, அதாண்ணே வாழ்க்கையோட கொடை. இப்பவும், கொஞ்சம் ஓய்வு கெடைச்சாலும், பசங்களக் கூட்டிட்டுப்போய்க் கொள்ளையில வேலை செய்வேன். குட்டையில போய் அவங்களோட விளையாடிக் குளிப்பேன். சாயந்தர நேரம் கஞ்சித்தண்ணியில கொஞ்சம் உப்பப்போட்டு, கூட்டா உட்காந்து குடிக்கிறதுக்கு ஈடா என்னத்தச் சொல்ல முடியும். முந்திரி பொறக்குறது மல்லாட்டை பொறக்குறதெல்லாம் எங்களுக்குச் சந்தோசங்கள்ல ஒண்ணுதான். என் பசங்களுக்குக் கூத்துப் பார்க்கிறது ரொம்பப் பிடிக்கும். கூத்து ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே போய்ப் பாயப்போட்டுக் கும்பலா உட்காந்து பாக்கிற மனமகிழ்ச்சி கொடைதானண்ணே. கச்சிதமா சொல்லணும்னா, உறவுகளோட ஒண்ணா இருக்கிறதுதான் வாழ்க்கையின் பெரிய கொடை.”

“ஏதேதோ காரணங்களால் ஆரம்பத்தில் எழுதத் தொடங்கியிருப்பீர்கள். ஆனால், இப்போதும் விடாப்பிடியாக ஏன் இலக்கியம் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?”

“ஆரம்பத்துல ஒரு ஆர்வத்துல எழுத வந்தேன். ஆனா, இன்னைக்கு இந்த நடுநாட்டு வாழ்க்கையை, மக்களோட கதையைச் சொல்லவோ எழுதவோ  யாரும் இல்ல. அதனால நான் எழுதுறேன். கண்ணுக்கு எட்டிய வரை இங்கிட்டுப் புதுசா எழுதுற ஆளுக தட்டுப்படல. அப்படியே வர்ற ஒண்ணு ரெண்டு பேரும் சினிமா அது இதுனு திசை மாறிப் போயிடுறாங்க. அவங்ககிட்டயும் இந்த மொழி இல்ல. இதை நான்தான் எழுதியாகணுங்ற ஒரு உரிமையில வேற வழியில்லாத கடமையிலதான் எழுதிக்கிட்டிருக்கேன். யாராவது வந்தா நல்லதுதான். நான் கொஞ்சம் சும்மா இருப்பேன். இந்த வயசுல ஓடியாடித் தேடி எழுதுறது எவ்வளவு சந்தோசமோ, அவ்வளவு பாடாத்தான் இருக்கு.”

“தமிழ் இலக்கியத்தில் கண்மணி குணசேகரன் எப்படி நினைக்கப்பட வேண்டும் என ஆசைப்படுகிறார்?”

“கொஞ்சங் கொஞ்சமா மறைஞ்சிக்கிட்டு வர்ற நடுநாட்டு மொழியையும் அதன் சொற்களையும் பண்பாட்டையும் மக்களின் வாழ்க்கைப்பாடுகளின் கதைகளையும் இந்த மண்ணைப் பற்றிய சேதிகளையும் தேடித் தேடிச் சேகரிச்சு எழுதின ஒரு எளிய மனுஷன்; பதிவு செஞ்ச மனுஷன்னு நினைக்கப்பட்டாப் போதும். கண்ணு முன்னாடி ஒரு கூத்துக் காட்சி மாறுறதுபோல மாறிக்கிட்டிருக்கிற இந்த நிலத்து வாழ்வ கடைசிச் சாட்சியா நான் பார்த்துப் பதிவு பண்ணிக்கிட்டிருக்கேன். அவ்வளவுதான்.”

“இன்றைய தமிழகத்து அரசியல் நிலையைப் பற்றி ஒரு பழமொழி சொல்லுங்களேன். முடிச்சுக்குவோம்?”

“‘ஆத்துல ஓடுற தண்ணி, அம்மா குடி... ஆயா குடி’னு சொல்வாங்க. மக்கள ஆள்ற அரசியல் அதிகாரம் என்ன ஆத்துத் தண்ணியா… ஆளாளுக்கு அள்ளிக் குடிக்க?”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism