அலசல்
Published:Updated:

தமிழகத்துக்கு வருகிறது டிஃபென்ஸ் காரிடார்

தமிழகத்துக்கு வருகிறது டிஃபென்ஸ் காரிடார்
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழகத்துக்கு வருகிறது டிஃபென்ஸ் காரிடார்

நட்டு செய்பவர்கள்கூட நாட்டைக் காக்கலாம்!

ந்திய ராணுவத்தினர் தங்கள் துப்பாக்கிகளை மரப்பெட்டியில் வைத்து எடுத்துச் செல்கிறார்கள். கோவையில் நடந்த ராணுவ எக்ஸ்போவுக்கு வந்த ஒருவர், ‘‘நான் உயர்வகை பிளாஸ்டிக் பெட்டிகள் தயாரிக்கிறேன். அதன் உள்ளே துப்பாக்கிகள் உட்பட எதையும் வைத்துக்கொள்ளலாம். வெயில், குளிர் என எதையும் தாங்கும்’’ என்று சொன்னார். அவர் இதற்கு முன்பு ராணுவத்துக்கு எதையும் சப்ளை செய்தவர் இல்லை; அப்படிச் செய்யமுடியும் என நம்பியதும் இல்லை. ஆனால், ராணுவ எக்ஸ்போ அவருக்கான வாய்ப்பைத் திறந்து வைத்துள்ளது. இப்படி ரொம்ப சீக்ரெட் டான ராணுவத் துறையை நம்மாலும் நெருங்க முடியும் என்கிற நம்பிக்கையையும் வாய்ப்பையும் எளிய தொழில் நிறுவனங்களுக்கும் உருவாக்கி யிருப்பதுதான் டிஃபென்ஸ் காரிடார் திட்டம். கோவையில் நடந்த எக்ஸ்போ வளாகத்தில், சுமார் 1,500 பேர் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தினர். ‘டிஃபென்ஸ் இன்வெஸ்டார் செல்’ என்கிற வெப் போர்ட்டலில் பலர் தங்கள் தயாரிப்புகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

தமிழகத்துக்கு வருகிறது டிஃபென்ஸ் காரிடார்

எங்கோ ஒரு மூலையில் லேத் பட்டறை வைத்துப் பொருளைத் தயாரித்து வருகிறவர்களும், இனி ராணுவத்துக்கு சப்ளை செய்யலாம். பிரதமர் மோடியின் இந்தக் கனவுக்குச் செயல்வடிவம் கொடுத்துக்கொண்டிருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, கோவை, ஓசூர், சேலம் ஆகிய ஊர்களில் ராணுவ எக்ஸ்போக்கள் சமீபத்தில் நடந்து முடிந்தன. இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, ‘பாதுகாப்புக் கண்காட்சி 2018’ ஏப்ரல் 11 முதல் 14 வரை நடக்கவுள்ளது. சென்னையை அடுத்த திருவிடந்தை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி இதற்கான ஏற்பாடு நடந்துவருகிறது. சுமார் 2 லட்சம் சதுர மீட்டர் பரப்பில் ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப்படையின் தளவாடங்கள் இங்கே காட்சிப் படுத்தப்பட உள்ளன. அனைத்துப் பிரிவு ராணுவ அதிகாரிகளும் வரவிருக்கிறார்கள். கண்காட்சியின் போது பிரதமர் மோடியும் வருகிறார்.

இதில் 650 உள்நாட்டு, வெளிநாட்டுப் பாதுகாப்புத் தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தப்போகின்றன. 45 நாடுகளிலிருந்து பாதுகாப்புத் துறை தளவாடங்களைக் கொண்டுவந்து காட்சிப்படுத்தவுள்ளனர். ஆயுதச் சந்தையில் முன்னணியில் உள்ள அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இஸ்ரேல், தென் கொரியா, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே தங்கள் வருகையை உறுதி செய்து விட்டன. தமிழகத்திலிருந்து சுமார் 75 நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறும் என்பது கூடுதல் தகவல்.

தமிழகத்துக்கு வருகிறது டிஃபென்ஸ் காரிடார்

முதல்முறையாக, இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் உ.பி-க்கும் தமிழ்நாட்டுக்கும் டிஃபென்ஸ் காரிடார் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி. இந்திய ராணுவத்துக்குத் தேவையான தளவாடங்கள், உதிரி பாகங்களை இங்கிருக்கும் தொழில் நிறுவனங்கள் மூலமாக இந்தியாவிலேயே தயாரிப்போம் என்கிற ‘மேக் இன் இண்டியா’ திட்டத்தின் ஒரு முன்மாதிரிதான் இது. உலகிலேயே ஆயுத இறக்குமதியில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. ராணுவத் தளவாடங்களைத் தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்கள் தாராளமாக இங்கே இருந்தும்கூட, நாம் ஆயுதங்களுக்காக மற்ற நாடுகளை எதிர்பார்த்து நிற்கிறோம். இந்த நிலையை மாற்றவே, டிஃபென்ஸ் காரிடார் திட்டம் வருகிறது.

இதுகுறித்து, கொங்கு மண்டலத்தில் டிஃபென்ஸ் காரிடார் திட்டத்தைக் கொண்டுவர முழு வீச்சில் செயல்படுபவரும், தமிழக பி.ஜே.பி-யின் பொதுச்செயலாளருமான வானதி சீனிவாசனிடம் பேசினோம். ‘‘மத்தியில் ஆளும் பி.ஜே.பி., தமிழகத்தைப் புறக்கணிப்பதாக இங்குள்ள அரசியல் தலைவர்கள் குறை சொல்கிறார்கள். தமிழகத்திலிருந்து ஒரு         எம்.பி-தான் பி.ஜே.பி சார்பில் ஜெயித்தார். ஆனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய அளவுக்கு வாய்ப்பைத் தந்திருக்கிறார் மோடி. நமது பாதுகாப்புத் துறையின் தளவாடக் கொள்முதல் பிரிவு, தமிழகத்தின் முக்கியப் பகுதிகளில் உள்ள சிறு குறு நிறுவனங்கள், ஏற்கெனவே ராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிற நிறுவனங்கள்... இவற்றிடமிருந்து வாங்கிக் கொள்வதற்கான ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்துக்கு வருகிறது டிஃபென்ஸ் காரிடார்

டிஃபென்ஸ் காரிடாரில் சென்னை, கோவை, திருச்சி, சேலம், ஓசூர் ஆகிய நகரங்கள் முதல் கட்டமாக இடம்பெற்றுள்ளன. ராணுவத்துக்குத் தேவைப்படும் எல்லாவற்றையும் முன்பெல்லாம் ராணுவம் மட்டுமே தயாரித்து வந்தது. இப்போது அந்த விதியைத் தளர்த்திவிட்டார்கள். சுமார் 275 பொருள்களைத் தனியாரும் தயாரிக்கலாம் என மத்திய அரசு அனுமதித்திருக்கிறது. முக்கிய விஷயங்களில் பாதுகாப்பு அம்சங்கள் கடைப்பிடிக்கப்படும். தனியார் உற்பத்தி செய்யும் பொருள்களையும் ராணுவம் வாங்கிக்கொள்ளும். ராணுவத்தில் போர் சம்பந்தமான கருவிகள் தயாரிப்பு தவிர, ஜீப், கார், விமானங்களுக்குத் தேவைப்படும் பாகங்களைத் தயாரிப்பது, ரன்வே அமைப்பது... இப்படி விதவிதமான தேவைகள் உள்ளன. ராணுவத் தளவாடப் பொருள்கள் உற்பத்தித் துறையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வரக்கூடிய அளவுக்கு வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள்’’ என்றார் வானதி.

இந்தத் திட்டத்தின் ஆரம்பப் புள்ளியாக, கோவை கொடீஸியாவில் உள்ள ‘இன்னவேஷன் ஹப்’ என்கிற மையத்துக்கு ரூ.20 கோடி தந்தார்கள். கோவை, சென்னை, ஓசூர், சேலம் மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்ற எக்ஸ்போக்களில், ராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிற மிகப் பெரிய நிறுவனங்கள் பலவும், அவர்களுக்கு என்னென்ன பொருள்கள் தேவையோ அவற்றையெல்லாம் காட்சிப்படுத்தி யிருந்தார்கள். தங்களின் தரத்தில் நம்பிக்கை வைத்து உழைக்கும் பலரும், யாருடைய சிபாரிசும் இல்லாமல் நேரடியாக வந்து பதிவு செய்யக்கூடிய வாய்ப்புகளை இந்த எக்ஸ்போக்கள் உருவாக்கியுள்ளன. ‘டிஃபென்ஸ் இன்வெஸ்டார் செல்’ என்கிற வெப் போர்ட்டலில் பதிவாகியுள்ள பொருள் தேவைப்பட்டால், அதுகுறித்து டெண்டர் விடும்போது எல்லோரும் கலந்துகொள்ளலாம். வெளிப்படையாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்துக்கு வருகிறது டிஃபென்ஸ் காரிடார்

சென்னையில் நடைபெறும் சர்வதேசக் கண்காட்சியில், உலகின் பல நாடுகளின் அதிகாரிகள்  பங்கேற்கின்றனர். ராணுவத் தயாரிப்பு நிறுவனங்களும் கலந்து கொள்கின்றன. நம் நிறுவனங்கள் உற்பத்தி செய்கிற பொருள்களையும் அவர்கள் பார்வையிடப்போகிறார்கள். தமிழக அரசின் ஒத்துழைப்புடன் நோடல் ஆபீஸராக டைடல் பார்க் நிர்வாக இயக்குநர் இளங்கோவன் இதற்காகச் செயல்பட்டுவருகிறார். தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைவிட பிரமாண்டமாக, பாதுகாப்புக் கண்காட்சி 2018 அமையப்போகிறது.

- ஆர்.பி.

‘‘பாராசூட் முதல் ஃப்ளைட் வரை செய்யலாம்!’’

‘‘இ
ந்த டிஃபென்ஸ் காரிடார் திட்டம், தமிழகத் தொழில்துறைக்குப் பெரிய வரப்பிரசாதம்’’ என்கிறார், இந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பின் தமிழ்நாடு சேர்மன் பொன்னுசாமி. ‘‘இதற்காக ஓய்வுபெற்ற ராணுவ ஆராய்ச்சி மைய அதிகாரி ஒருவர், தொழிலதிபர்கள், தொழில்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளது. இந்தியா இப்போது ராணுவத் தளவாடங்களை 85% வெளிநாடுகளிலிருந்தே வாங்குகிறது. இனி, இவற்றை இந்தியாவிலேயே உருவாக்க மத்திய அரசு நினைக்கிறது.

தமிழகத்துக்கு வருகிறது டிஃபென்ஸ் காரிடார்

பெரிய, குறு, சிறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க நினைக்கிறார்கள். இந்தியாவின் தேவை போக, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யலாம். திருச்சி பெல் நிறுவனம் இதுவரை மின் நிலையங்களுக்குத் தேவையான உபகரணங்களைச் செய்துவந்தது. கடற்படைக்குக் கப்பல் தயாரிக்க என்ன பாகங்களை இங்கே உற்பத்தி செய்யமுடியும் என்று இப்போது ஆலோசனை செய்கிறார்கள். உலக அளவிலான பொருளாதாரச் சூழல்களால் கோவையில் ஜவுளித்தொழில் தொடர்பான மில்கள் நலிவடைந்து போயிருக்கின்றன. டிஃபென்ஸ் காரிடார் திட்டத்தால் இந்த நிலை மாறும். ராணுவ யூனிபார்ம், டாங்கிகளை மலைப்பிரதேசத்தில் தூக்கிச் செல்லும் பவர்ஃபுல் பாராசூட்டுகள் போன்றவற்றைத் தயாரித்துக் கொடுத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். தவிர, டென்ட் துணி போன்ற பல அயிட்டங்களைக் கொங்கு மண்டலத்தில் உற்பத்தி செய்யமுடியும். லட்சக்கணக்கில் ராணுவ வீரர்களுக்கான ஷூ தயாரித்துக் கொடுக்கமுடியும்.

தமிழகத்துக்கு வருகிறது டிஃபென்ஸ் காரிடார்

தேஜாஸ் ஜெட் விமானங்களை பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்து வருகிறது. தற்போதைய ராணுவத் தேவையை அவர்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. அதனால், சிறு குறு நிறுவனங்கள் சிலவற்றைச் சேர்த்து விமானங்களைத் தயாரிக்க ஆரம்பித்தால், டெக்னிக்கல் ஆதரவு தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இப்படித் தமிழகத்துக்கு வாய்ப்புகள் குவிகின்றன’’ என்கிறார் பொன்னுசாமி.