“எனக்கு 15 வயதிருக்கும். அப்போது நான் வாசித்த ஒரு புத்தகமே என்னை அரசியல் நோக்கித் திருப்பியது. மாக்சிம் கார்க்கி எழுதிய ‘தாய்’தான் அந்தப் புத்தகம். தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்னைகளை, உணர்வுகளை எனக்குள் கடத்தியது. தற்போது ந.முத்துமோகன் எழுதிய ‘இந்திய தத்துவங்களும் தமிழின் தடங்களும்’ மற்றும் பேராசிரியர் நெடுஞ்செழியன் எழுதிய ‘ஆசீவகமும் அய்யனார் வரலாறும்’ ஆகிய இரண்டு புத்தகங்களை வாசித்துக்கொண்டு இருக்கிறேன்” - திருமுருகன் காந்தி



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“அசோகமித்திரன் பல ஆண்டுகளுக்கு முன் சார்த்தர் குறித்து ஒரு கட்டுரை எழுதினார். அதை எழுதுவதற்கு முன் சார்த்தரை முழுக்க முழுக்கப் படித்துவிட்டுதான் அந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். இப்போதுள்ள இளம் எழுத்தாளர்கள் படிக்கிறார்களா? சார்த்தரைக்கூட விடுங்கள், வெளிநாட்டு எழுத்தாளர்! தமிழில் எழுதியுள்ள கா.ந.சு, சிசு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், தி.ஜா, கு.ப.ரா, தி.ரங்கநாதன் இப்படிப் பெரிய பட்டாளமே இருந்திருக்கிறது... இவர்களுக்கெல்லாம் முன்பாக சங்க இலக்கியம்... தற்போது எழுதும் யாரும் இவற்றைப் படிப்பதாகப் பாவனைகூட செய்வதில்லையே, ஏன்?” - சாரு நிவேதிதா

சென்னையைப் பின்னணியாகக் கொண்ட ‘கருப்பர் நகரம்’ நாவல் மூலம் பரவலாகக் கவனம் பெற்ற கரன்கார்க்கி. தற்போது சயான் பர்மா ரயில்பாதையை மையப்படுத்தி ‘மரப்பாலம்’ என்ற பெயரில் ஒரு நாவல் எழுதி வருகிறார். இதற்கிடையில் ‘அமீபா’ என்ற திரைப்படத்துக்கு வசன உதவியும் செய்துவருகிறார். “சார்லஸ் டிக்கின்ஸ் எழுதிய ‘இருபெரும் நகரங்கள்’ படிச்ச பிறகுதான் இலக்கியம் பக்கம் வந்தேன்” என்கிறார்.

1 , 3 மற்றும் 5 நிமிடத்தில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து அந்தப் பொத்தானை அழுத்த வேண்டும். குழந்தைகளுக்கானதா, பெரியவர்களுக்கானதா என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். காதல், த்ரில்லர் எந்த வகை என்பதைத் தேர்ந்தெடுத்து அந்தப் பொத்தானை அழுத்தினால், சில நொடிகளில் பேப்பர் சுருள் உங்களுக்கான கதையை சுமந்தபடி வெளிவரும். ஆம்...இது கதைகளுக்கான வென்டிங் மெஷின் (Vending Machine).
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘ஷார்ட் எடிஷன்’ (Short Edition) என்னும் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு இதை அறிமுகப்படுத்தியது. இன்று அமெரிக்காவில் 30க்கும் மேற்பட்ட வென்டிங் மெஷின்கள் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. பிரான்ஸிலும் இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. 600 கதைகளோடு தொடங்கிய வென்டிங் மெஷின் இன்று ஒரு லட்சம் கதைகளை எட்டிக் கொண்டிருக்கிறது. முக்கிய விஷயம் இந்தக் கதைகள் அனைத்துமே இலவசம்.

“ ‘வேர்கள்’ புத்தகத்தை ஏழு வருஷத்துக்கு முன்னாடியே படிச்சிருக்கேன். திரும்பவும் படிக்கணும்னு தோணுச்சு. இப்போ படிச்சுக்கிட்டிருக்கேன். நமது முந்தைய தலைமுறையைப் பற்றித் தேடறதுக்கான உந்துதலை இந்தப் புத்தகம் கொடுக்கும்.
எல்லோரிடமும் ‘நீங்க கண்டிப்பாப் படிக்க வேண்டிய புத்தகம்’னு ஒரு புத்தகத்தைச் சொல்வேன். அது, ‘காவல் கோட்டம்’ ’’ - சமுத்திரக்கனி

இலக்கிய வாசகர்களுக்காக Literature Box ( இலக்கியப் பெட்டி) என்ற பெயரில் யூ-டியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி புத்தகங்கள் குறித்துஅறிமுகம் செய்துவருகிறார் பவித்ரன். இவர் அறிமுகம் செய்த ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து புத்தகங்கள் பற்றிய அறிமுகங்களைப் பதிவிட்டு வருகிறார். ‘கேளிக்கைக்கான யூடியுப் சேனல்ஸ் நிறைய இருக்கு. புத்தகத்துக்காக ஒன்னு ஆரம்பிக்கலாம்னு சின்ன யோசனைலதான் இந்த சேனல ஆரம்பிச்சு நடத்திக்கிட்டு இருக்கேன்” என்கிறார் பவித்ரன்.

ஷோபாசக்தியிடம் இரண்டு கேள்விகள்:
* உங்கள் Box கதைப் புத்தகத்தில் ‘Buddha collapsed out of shame’ என்ற பெர்ஷியப் படத்தின் பாதிப்பு இருக்கிறதா?
* ஈழம் என்ற லட்சிய நிலத்தில் கற்பனையாகவாவது நின்று புனைவு எழுதும் திட்டமுண்டா?
- லீனா மணிமேகலை

மறைந்த எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் எழுதிய கடைசி நாவல் `தந்திரவாக்கியம்’. துண்டாடப்பட்ட விவரணையில் (Fragmented Narrative) எழுதப்பட்டது. காலங்களினூடே முன்னும் பின்னும் அலையும் கதைக்களன். பின் குறிப்பில் `நாம் நினைப்பதுபோல களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் அல்ல. இருட்டடிப்புச் செய்யப்பட்ட காலம்’ என்கிறார் எம்.ஜி.சுரேஷ். வரலாற்றாசிரியர் ஆர்.பி.சராஃப் எழுதிய புத்தகம் ஒன்றை ஆதாரமாக வைத்துக்கொண்டு களப்பிரர்கள் குறித்துப் பல ஆய்வுகளை மேற்கொண்டு, இந்த நூலை எழுதியிருக்கிறார். இன்றைய ஐ.டி துறையின் பின்புலத்தில் கதை பயணிக்க, ஊடிழையாக களப்பிரர் காலக் கதையும் சேர்ந்துகொள்கிறது. இரண்டு கதைகள், இரண்டு கதாநாயகர்கள், இரண்டு முடிவுகள்... மரபார்ந்த வடிவத்தைத் தகர்த்து எழுதப்பட்ட இந்த நாவல் மிக முக்கியமானது.
வெளியீடு: சொல்லங்காடி, 10, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை-11. செல்:9677053933. விலை: ரூ.200.