Published:Updated:

பாம்பு - சிறுகதை

பாம்பு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
பாம்பு - சிறுகதை

சிறுகதை: அபிமானி, ஓவியங்கள்: ஸ்யாம்

பாம்பு - சிறுகதை

சிறுகதை: அபிமானி, ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
பாம்பு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
பாம்பு - சிறுகதை
பாம்பு - சிறுகதை

வாசலை விட்டு வெளியே வந்துகொண்டிருந்த திவாகரனின் கண்களில் அது படக்கெனத் தெரிந்து, பளிச்சென ஒளிர்ந்து, பட்டென மறைந்தது. மின்னல் தெறிப்பின் விநாடி ஒளிர்வு. இமைமூடும் வேகத்தில் அவசர மறைவு. மரப்பலகை அடுக்கின் கீழ் அது விறுவிறுவென ஊர்ந்து போனதை அவரது மூளை தன் ஞாபக ஏட்டில் சட்டெனப் பதித்துக்கொண்டதால், உடனே அதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியாமல் திணறினார். `அது பாம்புதானே? பாம்புபோலத்தானே இருந்தது... பாம்பாகத்தானே இருக்க வேண்டும்!’ நன்றாகத் தீர்மானித்துக் கொண்ட பிறகே, கறாரான முடிவுக்கு வந்தார். `பாம்புதான். நிச்சயமாக... அது பாம்புதான்.’

அதிர்ந்துபோனார் திவாகரன். விதிர்விதிர்த்துப் போனது தேகம்.  உடல் பதறி, முகம் வியர்த்து, சத்தம்போட்டுக் கத்திவிட்டார். “ஏலே, பாம்பு... பாம்பு... பாம்புலே!”

அவர் குரல் கேட்டதுதான் தாமசம், வீட்டுக்குள் அடைந்து கிடந்த சனங்கள் எல்லோரும் திறந்துவிடப்பட்ட கிடை ஆடுகளாய் மளமளவென தெருவுக்கு வரத் தொடங்கினார்கள். ஏகதேசம் 8 மணி ஆகியிருக்கும். செத்த நேரத்துக்கு முன்னர்தான் வீட்டில் மணி பார்த்துவிட்டு வெளியே வந்திருந்தார். அப்போது மணி 7:45. தெருவிளக்கு, இருட்டு முழுவதையும் சுத்தமாக விரட்டியிருந்தது. வயிறாரத் தின்றுவிட்டு அதன் கனம் குறைவதற்காக சிகரெட் புகைப்பது அவர் வழக்கம். வீட்டிலிருந்து சிகரெட் குடித்தால், மனைவி கமலா ஏடாகூடமாய்ப் பேசிச் சண்டைக்கு வந்துவிடுவாள். இதய நோயாளிக்கு, சிகரெட் புகை எமன் என்பதை அவள் தெரிந்திருந்ததன் வெளிப்பாடு. ஒதுக்கம் சதுக்கமாயிருந்த சாயபு கடைக்கு வந்து சிகரெட் வாங்கிப் பற்றவைத்துக்கொண்டால், அது அவள் கண்களுக்குத் தெரியாது என்பது அவரின் நம்பிக்கை. அவர்  சாவதானமாய் வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் கால் பதிக்கவும், அவர் முன்னால் சனியன் மாதிரி ஊர்ந்துபோன பாம்பைப் பார்க்கவும் சரியாக இருந்தது.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாம்பு - சிறுகதை

தெருவுக்கு வந்து நின்றிருந்தவர்களின்  முகங்களில் தீ ஜுவாலைகள் பற்றி எரிந்துகொண்டிருந்தன.

“எங்க மச்சான் பாம்பு? எங்க... எங்கன போச்சுது?”

எதிர்த்த வீட்டுக்குக் கீழ் வீட்டு மாரியப்பன், கையில், தடித்த கொம்புடன் மயானத்துக்குப் போகும் சுடலைமாடன் மாதிரி திவாகரனின் முன் வந்து நின்று பதறினான். அவனின் கண்களில் அனல் தெறிக்கும் வெக்கை தகித்தது. திவாகரனைவிட ஓங்குதாங்கலான உருவம்.

“இந்த மரப்பலகைக் கட்டுக்குள்ளதான் மாப்ள. இப்பதாம் போச்சு... நான் பார்த்தேன். வீச்சருவா கணக்கா பளபளன்னு இருந்திச்சு தெரியுமா? நம்ம பெருவெரல் தண்டியாவது இருக்கும். அத்தன திண்ணம்” என்று  வாப்பாறினார் திவாகரன். தெருச் சுவரையொட்டி, தரையில் காமாசோமாவென அடுக்கி வைக்கப்பட்டிருந்த பலகைகளின் குவியலைக் காட்டினார். குவியலின் எதிரில் கட்டப் பட்டுக்கொண்டிருத்த வீட்டுக்கு கான்கிரீட் போடப்பட்டு நேற்றுதான் பலகைகளைப் பிரித்து எடுத்து எதிரே, இருந்த வீட்டின் தெருச் சுவரையொட்டிக் கீழே அம்பாரமாய் அடுக்கி வைத்திருந்தார்கள். அதற்கு உள்ளேதான் பாம்பு விர்ரென உருவி ஓடியது. திடுமென அவர் கண்ட காட்சி, தொடுபிடியாய் அவரைப் பதற்றப்படவைத்துக்கொண்டிருந்தது. படையும் அஞ்சுமாமே, சவத்துப் பய பாம்புக்கு...

புற்றீசல் கணக்காக இரண்டு மூன்று பேர் அவருக்குப் பக்கத்தில் குலை பதற ஓடி வந்து நின்றார்கள். எல்லோருடைய கைகளிலும் குச்சி இருக்க, திவாகரன் மட்டும் வெறுங்கையுடன் நின்றிருந்தார்.

இரண்டு வீடுகள் தள்ளியிருந்த மாடசாமிதான் ரொம்ப ஆவேசமாக வந்து நின்றிருந்தான். திவாகரனுக்கு மகன் முறை வேண்டும். உள்ளூர் அஞ்சலகத்தில் தபால்காரன் வேலை. தாட்டியமான தேகம். பாம்பு ஓடினால் அவனால் பாய்ந்து விரட்ட முடியாதுதான். ஆனாலும் ஆளுக்கு முன்னால் வந்து நிற்கிற அவனின் ஆர்வத்தைப் பாராட்ட வேண்டும்போலத் தோன்றியது திவாகரனுக்கு.

“சித்தப்பா... நல்லாப் பார்த்தீங்கல்ல? பாம்புதான... பாம்பு கணக்கா பாம்புராணியும் தெரியும். அதான் கேட்டேன்” என்று.

வார்த்தைகள் சந்தேகத்தைக் கிளப்பினாலும், மாடசாமியின் பார்வை அம்புகள், பலகைக் குவியலின் அடிப்பகுதியையே குறிவைத்துக்கொண்டிருந்தது. இமை தட்டாத குறி.

“எங் கண்ணு என்ன பொட்டையால? நான் கரெக்டா பார்த்துட்டுதான் சொல்லுதன். அது பாம்புதான். எங் கண்ண வுட்டு இன்னும் மறையலல்ல அது. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அயித்துப்போவல...
பாம்புதான்.”

  “என்ன நிறத்துல இருந்திச்சு, மஞ்சளா... கறுப்பா?”

  “என்னையே சோதிக்கியா?” என்றபடி ஒரு கெட்ட வார்த்தையை உதிர்த்தார்.

  “கோபப்படாதிய. மஞ்சளா இருந்தா சாரப் பாம்பு. கறுப்பா இருந்தா நல்ல பாம்பு. தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்.”

“என்ன எழவா இருந்தாலும் பிடிச்சுதானல ஆவணும். வெளிச்சத்துல மின்னும்போது என்ன நிறம்னு எப்பிடில தெரியும்?”

மாடசாமியை திவாகரன் கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிப்பது, அவர்களின் உறவை சேவிக்கும் பிரியமான நடைமுறை. யார், யாரை, எந்தெந்த  வார்த்தைகளால் வைதுகொள்ளலாம் என்று உறவுமுறைகளில் சில எல்லைகள் இருந்தன. அந்த எல்லைகள் அவர்களின் உறவைத் தாக்காட்டி நிறுத்திவைத்து வளர்த்தெடுக்குமே தவிர, தறுதலைகளாக்கித் துண்டித்துவிடாது.

திவாகரனின் ஏச்சுக்கு மாடசாமி மட்டுமல்ல, அங்கு நின்றிருந்த எல்லோரும் கபகபவெனச் சிரித்தனர். 

கோவிந்தன் கட்டையான ஆளாக இருந்தாலும், நீட்ட நெடுப்பமான குச்சியை வைத்திருந்தான். கொஞ்சம் சில்லுண்டித்தனமானவன். ஆட்டுக்காலைப் பிடி என்றால், அதன் கொதவளையைப் பிடித்துக்கொண்டு நிற்பான். அவன்தான் புதியதாக வீடு கட்டிக் கொண்டிருந்தான். வெளிநாட்டிலிருந்து வந்திருந்த அவனின் ஐந்து மாதங்களை, வீடு அநாயசமாய்  விழுங்கியிருந்தது. அதன் முழுப் பசியும் அடங்க இன்னும் ஒரு மாதகாலம் தேவைப்படலாம். பலகைகளின் இடைவெளிகளில் குச்சியால் தொடுபிடியாகக் குத்திப் பார்த்துவிட்டு, சோர்ந்துபோயிருந்தான் அவன்.

“அண்ணே... பேசாம பலகையை எல்லாம் உருவி எடுத்துட்டுதான் பார்க்கணும். எவ்வளவு குத்தியிருக்கு... சவத்த ஒரு அணைக்கத்தையும் காணலையே!”

கூட்டம் கூடிவிட்டிருந்தது. குஞ்சும் குளுமான்களுமான கூட்டம், தெருவின் மறுதிசையில் திரண்டு நின்று அலங்கமலங்க விழித்துக்கொண்டிருந்தது. தெருவிளக்கின் பகட்டான ஒளியில் மனிதத்தலைகள் பாறைகளாக மினுங்கின. குட்டிப்பாறைகள். ஒவ்வொரு பாறையும் சுயமாய் அதிர்ந்து நொறுங்கிவிடுவதைப் போன்று பதற்றப்பட்டுக்கொண்டிருந்ததுதான் உண்மை. திவாகரன் வீசிய எச்சரிக்கை ஈட்டிகள், பாறைகளுக்குள் இடைச்செருகலாய்ப் புகுந்து அதிர்வை அதிகப்படுத்தின. “எல்லாரும் வூட்டுக்குள்ள ஓடிருங்க... பாம்பு உருவிக்கிட்டு அங்கனயும் வந்திரலாம். பொறவு, அய்யாடி அம்மாடின்னா ஒண்ணும் பண்ண முடியாது... கேளுங்க.”

பாறைகள் கேட்பதாக இல்லை. திகிலான ஓர் அனுபவத்தை நேரில் தரிசிக்கும் ஆர்வத்தில் கெந்தளிப்பாக நின்றிருந்தன.

“எலே... அந்தா ஓடுதுலே பாம்பு!”

கொலைப்  பாதகம் நிகழ்ந்துவிட்ட கணக்காக உச்சத்தில் குரலெடுத்துச் சத்தம் போட்டார் திவாகரன். மாரியப்பனும் அதைப் பார்த்துவிட்டிருந்தான். “ஆமா ஆமா... அந்தா ஓடுது... அந்தா ஓடுது. அடி”. குச்சியை நீட்டிக்கொண்டே குரங்கு மாதிரி தாவினான். பலகை அடுக்கின் வலதுபக்கத்தில், வாசலை அடைத்துக் கொண்டு நின்றிருந்த கேட்டின் சதுர வளைவில், விறுவிறுவென நுழைந்து விரைந்துபோனது பாம்பு.

முன்னால் விழுந்தடித்து ஓடிய திவாகரன், கேட்டின் உள்கொண்டியை (சதுரங்களாய் இடைவெளிகள் விட்டுப் பின்னப்பட்டிருந்தது கேட்) கை நுழைத்துத் திறந்துகொண்டு புலிப்பாய்ச்சலில் முற்றத்துக்கு விரைந்தார். பாம்பு முன்னறைக்குள் புகுந்திருந்ததை அவர் பார்த்திருந்தார். முன்னறையின் வெளிச்சம் சன்னமாய்க் கசிந்திருந்ததில் முற்றம் அசங்கல்மசங்கலாய்க் காட்சிதந்தது. சிமென்ட் பூச்சில் பளபளப்பைப் போர்த்தியிருந்தது முற்றம். பாய்ந்து வந்ததில் பிடிமானம் உறுதிப்படாமல் கால்கள் தள்ளாடின அவருக்கு. சுதாரித்து நின்றுகொண்டார்.

அவர் சத்தம் கேட்டதும், வீட்டுக்குள் இருந்த மரகதம் தன் தாட்டியமான தேகத்தை அநாயாசமாய்த் தூக்கிக்கொண்டு அலறியடித்து வெளியே ஓடி வந்தாள். முன்னறையில் உட்கார்ந்துகொண்டு இரவுத் தீவனத்தில் மும்முரமாக இருந்திருக்க வேண்டும் அவள். கையில் இருந்த எச்சில் பருக்கைகள் வெளிச்சப் பிரவாகத்தில் மல்லிகை மொட்டுகளாக மினுங்கியது தெரிந்தது.

“ஏ... என்ன என்ன... என்ன ஆச்சு?” எச்சில் ஒழுக அரைத்துக்கொண்டிருந்த அவளின் வாய்கூட தன் இயக்கத்தை இன்னும் முழுவதுமாக நிறுத்தியிருக்கவில்லை. நாக்கைச் சுழற்றிக்கொண்டிருந்ததால் வார்த்தைகளில் தடுமாறினாள்.

   “பாம்பு வந்துட்டும்மா உங்க வீட்டுக்குள்ள! இந்த வாசல் வழியாத்தான் உள்ள வந்துச்சு. நீங்க பார்த்தீங்களா?”

“ஐயோ... பாம்பா?! நான் பார்க்கலையே... வாசல் வழியாவா வூட்டுக்குள்ள வந்துச்சு? நான் பார்க்கலையே! ஆத்தா... நான் இப்போ என்ன செய்வேன்... என் குடி கெட்டிருச்சே!”

ஆடிப்போனாள் மரகதம். அவளின் தொப்பைத் தேகம் கட்டுக்குள் அடங்காமல் துள்ளாட்டம் போடத் தொடங்கியது. பூதலிப்பான முகத்தில் வியர்வைத் துளிகள் முள்களாக முளைத்து நின்றன.

   திவாகரனைத் தொடர்ந்து மாடசாமி, கோவிந்தன் வகையறாக்கள் அம்புப் பாய்ச்சல் களாய் முற்றத்துக்குப் பாய்ந்திருந்தார்கள்.

 “பாம்பு, வீட்டுக்குள்ளயாண்ணே போயிருச்சு? ச்சே... எல்லார் கண்ணையும் தப்பிட்டு வந்திருச்சே” கோவிந்தன் அடக்க முடியாமல் புலம்பிக்கொண்டான்.

“ஆமாப்பா... விசுக்குனு வாசல் வழியா வீட்டுக்குள்ள நுழைஞ்சுட்டு. என்னா வேகமா ஓடுது தெரியுமா? இவிய பார்க்கலைங்காவா.”

மரகதம், தேகம் உதறல் எடுக்க நின்றிருந்தாள். திவாகரனின் வார்த்தைகள் தீயாக அவளின் காதுகளைச் சுட்டிருக்க வேண்டும். அவள் காதுகள் தகதகத்து எரிவதுபோல் துடித்தன. கண்கள், அலங்கமலங்க வெறித்துக் கொண்டிருந்தன. அவளால் தன்னைக் கட்டி நிற்க முடியவில்லை. ஆற்ற முடியாமல் குலைப்பதற்றத்துடன் வார்த்தைகளைச் சிந்தினாள், “ஐயோ... நான் பார்க்கலையே... நான் பார்க்கலையேப்பா! எம் பாவத்துலையா வந்து விழணும்... நாசமுத்துப்போவான் பாம்பு! எனக்கு இப்ப என்ன செய்யணும்னு தெரியலையே” அழுதேவிட்டாள்.

 “சரிம்மா... ஒண்ணும் பயப்படாதிய. செத்தம் வெளிய நின்னுக்காங்க. பாம்ப அடிச்சப் பொறவு உள்ள வந்தா போதும்.”

“அட கடவுளே... இது என்ன சோதனை? ஒரு வாய் பருக்கையை அலப்பறை இல்லாமத் திங்கிறதுக்கு நீதமில்லையே!”

அவளின் ஆவலாதியைச் செவிமடுப்பதற்கு அவகாசம் இல்லை அவர்களுக்கு.  காரியத்தில் விரைவாக இறங்கவேண்டியதிருந்தது. இல்லையென்றால், பாம்பு தக்கடிவித்தை காட்டிவிட்டு ஓடிவிடும்.

துப்பாக்கி ஏந்திய வீரர்கள் கணக்காக, கையில் வைத்திருந்த குச்சிகளுடன் வீட்டுக்குள் இலக்கைத் தேடிப் புகுந்தார்கள்.

முன்னறையில், வெளிச்ச வலை விரிப்புக்குள் கட்டுண்டு கிடந்த பொருள்கள் எல்லாம் பகட்டாக மின்னிக்கொண்டிருந்தன. மூன்றடி உயரத்தில் நிறுத்தப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டி... ஏதோ நாடகம் ஒன்று வஞ்சனை இழை தகிக்கத் தொடுபிடியாய் ஓடிக்கொண்டிருந்தது. நாடகத்தைப் பார்த்துக்கொண்டுதான் மரகதம் தீவனத்தை விழுங்கியிருக்க வேண்டும். அதை நிறுத்துவதற்குக்கூட அவகாசம் தரவில்லை பாழாய்ப்போன பாம்பு. பளிங்குத் தரையில், பாதி உயரம் காலியாகிப்போயிருந்த பருக்கைக் குவியலோடு எச்சில் தட்டு வெறித்துக்கொண்டு கிடந்தது. அரை வயிறும் குறை வயிறுமாய் அவளை வெளியே விரட்டியிருக்கிறது பாம்பு. சுவர் அருகில் விஸ்தாரமாய் விரிந்திருந்த சோபா செட்டுகள்... டீப்பாய் பூந்தொட்டி... நிறுத்தப்படாமல் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி... சுவரில் ஷோகேஸ் பொம்மைகள் (குழந்தையும், நாய்க்குட்டியும், கோபுரமும் செடிப்பூக்களுமாய்)  பிளாஸ்டிக்கில் உருவம் பெற்று நின்றிருந்தன.

சோபா செட்டுக்கு அடியிலும், பீரோவுக்கு அடியிலும் வேகமாய் குச்சியை நுழைத்துக் குத்தினான் கோவிந்தன். எதுவும் தட்டுப்படாமல் ஏமாற்றம் அடைந்து திரும்பியது குச்சி. தொலைக்காட்சிப் பெட்டியை நிறுத்தியிருந்த மேசைக்கு அடியிலும் பக்கவாட்டிலும் குச்சியால் துழாவிவிட்டு ஒன்றும் தட்டுப் படவில்லை என்பது புரிந்ததும் விரக்தியுடன் திருப்பி எடுத்துக் கொண்டான். ஏமாற்றம் அடைந்திருந்த எரிச்சலில், கரகரவென இரைந்து கொண்டிருந்த காற்றாடியையும், ஏற்ற இறக்கத்துடன் இசை எழுப்பிக் கொண்டிருந்த தொலைக்காட்சி நாடகத்தையும் படக்படக்கெனப் போய் நிறுத்தினான். “சனியம்பிடிச்ச மாரி சத்தம் போட்டுக்கிட்டு.” பொறுமை இல்லை அவனுக்கு.

“எளவெடுத்த பாம்பு, எங்கனக் கூடிப்போச்சுதோ தெரியலையே” விரக்தியில் சடைத்துக்கொண்டான் மாரியப்பன்.

“அடுத்த அறையில போய்ப் பாருங்கப்பா. அதுக்குள்ள எங்கன போயித் தொலஞ்சிருக்கும்? வூட்டுக்குள்ளதான் சுருட்டிக்கிட்டுக் கெடக்கும்” திவாகரனிடம் குச்சி இல்லாததால், குனிந்து வளைந்து பாம்பைத் தேடுவதிலும், அக்கிசியுடன் அவர்களை வேலை ஏவுவதிலும் கருக்கடையாக இருந்தார்.

அடுத்த அறைக்குள் நுழைந்தார்கள். சுவரில் தடம் பார்த்துப் பொத்தானைத் தட்டிவிட்டார் திவாகரன். வெளிச்சம் வெள்ளந்தியாய் ஒளிர்ந்தது. சுவரில் பெரிய பெரிய சாமி போட்டோக்கள் வரிசைக் கிரமமாக நின்று மிரட்டிக் கொண்டிருந்தன. கீழே தங்க நிறத்தில் பெரிய குத்துவிளக்கும், பக்கத்தில் சாம்பிராணிக் கரண்டியும் வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தன. அங்கேயும் ஒரு பீரோ நின்றிருந்தது - சாமி படங்களுக்கு எதிரில். அதற்கு அடியிலும் ஆளாளுக்குக் குச்சியை நுழைத்து சோதித்துப்பார்த்தார்கள். “ஒரு எளவையும் காணவில்லை’’ என்றதும், அவர்களுக்குச் ‘சீ’ என்று ஆனது.  மூலைகள் வெறிச்சோடிக்கிடந்தன.

“சவத்துப் பயப் பாம்பு... என்ன இப்பிடி எசலிப்புப் பண்ணுது? செத்த நேரத்துக்குள்ள எங்கன போய்த் தொலஞ்சிருக்கும்... ம்...” வெப்புராளப்பட்டான் கோவிந்தன்.

“இன்னிக்கு, அதுவா நாமளானு ஒரு கை பார்க்காம வுடக் கூடாதுல” தீர்மானத்துடன் சபதம் ஏற்றுக்கொண்டான் மாரியப்பன்.

அடுத்து படுக்கை அறை. வாசலுக்கு உள்பக்கச் சுவரில் பதித்திருந்த பலகையில் கை வைத்து பொத்தானைத் தட்டிவிட்டான் மாடசாமி. மடை திறந்துவிட்ட குளத்துநீராய் அறையை நிறைத்துக் கொண்டது வெளிச்சம். பச்சை நிறப் போர்வைக்குள் பதுங்கிக் கிடந்தது கட்டில். அதற்கு அடியில் படுத்துக்கொண்டும், குச்சிகளை நெடுப்பமாய் நுழைத்துக்கொண்டும் சோதித்துப்பார்த்தார்கள். வெற்றிடத்தில் துழாவிவிட்டு, மொண்ணையாய்த் திரும்பி வந்தன குச்சிகள். கட்டிலுக்கு எதிரில் மயில் தோகை விரித்து நின்றிருந்த பச்சை நிற இரும்பு பீரோ. அதுக்குப் பக்கத்தில் தண்ணீர் கேன் ஏந்திய அகன்ற மேசை. மேசைக்கு ஒட்டுதலாய் நைலான் இழைகளால் பின்னப்பட்ட நாற்காலி. எல்லாம்... எல்லாம்தான்... ஏமாறவைத்தன அவர்களை.

“என்ன மச்சான்... இங்கேயும் பாம்பக் காணல. கிருதரம் பிடிச்ச பாம்பால்லா இருக்கும்போலுக்கு? எப்பா... குனிஞ்சி நிமிந்து தேடினதுல பொசலாந்துக்கிட்டு வருது. செத்த நேரம் ஒக்காந்து காலாறிட்டு அப்பொறமா தேடுவோம். குறுக்கு முறிஞ்சிப்போச்சு எனக்கு.”

அச்சலாத்தியாய் இருந்தது மாரியப்பனுக்கு. தேகத்தை நெளித்துக் கொடுத்துக்கொண்டே கட்டிலில் வந்து உட்கார்ந்தான். கனத்த அவன் தேகத்தைத் தொட்டிலாக ஆட்டிக்கொடுத்தது, மெத்தை. எல்லோருக்கும் களைப்பாகத்தான் இருந்தது. உட்கார்ந்து ஓய்வெடுத்தால்தான் தொடுபிடியான நடவடிக்கையில் இறங்க முடியும் எனத் தோன்றியது. மாரியப்பனுக்குப் பக்கவாட்டில் மற்றவர்களும் வந்து உட்கார்ந்து கொண்டார்கள்.

கட்டிலை அதிசயமாகப் பார்வையிட்டுக்கொண்டே மாரியப்பன் அங்கலாய்த்தான். மூன்று ஆள்கள் படுக்கக்கூடிய அகலம். விளிம்பு தொட்டு விரிந்திருந்த மெத்தை. நான்கு, ஐந்து தலையணைகள். “ஒரு மனுஷிக்கா இவ்வளவு பெரிய பெட்ரூமு, தளவாணிக? படுத்து உருளுவாப்போலுக்கு’’ என்று தனக்குள் கிளர்ந்த எண்ணத்தை மற்றவர்களிடமும் பகிர்ந்துகொண்டான்.

வக்கணையாகச் சிரித்துவிட்டு மாடசாமி சொன்னான், “அது என்ன மாமா, ஒண்ணும் தெரியாதவர் கணக்கா சொல்லுதிய? வள்ளியூர்லருந்து அடிக்கடி அவா மவாக்காரி ரெண்டு புள்ளைகளோடு வந்திட்டுப் போறால்ல. வந்தாத்தான் ஒரு வாரம், ரெண்டு வாரம் பழியா டேரா போட்டிருதாளே... அவியளுக்குப் படுக்கதுக்கு வேணாமா?”

அங்கிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது வள்ளியூர். பேருந்தில் பயணப்பட்டு வர, பத்து நிமிடம் ஆகும் என்பது அதிக நேரம்தான். வள்ளியூரில் கட்டிக்கொடுத்திருந்த மரகதத்தின் மகள்காரி, அவ்வப்போது சந்ததி விருட்சமாய் வந்து அம்மாவுக்கு நிழல் தந்துவிட்டுப் போய்க் கொண்டிருந்ததை திவாகரனும் தெரிந்திருந்தார். பாச நிழல்.

   ஞாபகம் வந்தவனாய் சடக்கென எழுந்து போய், காற்றாடிப் பொத்தானைத் தட்டிவிட்டு வந்தான் கோவிந்தன். முதலில் மூச்சு பிரியாமல் முனகிய காற்றாடி, சன்னம் சன்னமாய் வேகம் கூடி விசிறியடித்தது. காற்றின் குளிர்க்கரங்கள் அவர்களின் வியர்வையை இதமாய்த் துடைத்து எடுத்தன. நிறை குளத்தில் குதித்து நீச்சல் அடித்தது கணக்காக, சுவாசங்களை சுவாரஸ்யப் படுத்தின.

மறந்துவிடாதிருந்த பழைய நிகழ்ச்சிகளை மனதில் நிறுத்தி பராதியாகச் சொல்லிக்கொண்டான் கோவிந்தன். தொடக்க சமிக்ஞையாக அவனிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது. “ஆங்... சாதாரண நாள்ல நாமெல்லாம் இந்த வூட்டுக்குள்ள வந்துட முடியுமா? இப்போ பாம்பை அடிக்கணுமேங்கிற அக்கிசியில, பொவுலு இல்லாம நம்மள ஊட்டுக்குள்ள வுட்டுட்டுப் போயிருக்கா அந்தப் பொம்பள. காரியம் நடக்கணும்னா கழுதையும் காலப் புடிக்குமாம்ல? எல்லாம் நேரம்தான்’’ என்றபடி நமட்டலாய்ச் சிரித்துக்கொண்டான்.

பாம்பு - சிறுகதை

அடுத்து மாடசாமியின் ஆவலாதி...

“எப்பா... என்னா வரத்து வருவா தெரியுமா? பக்கத்துல நின்னுரக் கூடாது. அயித்து மறந்துகூட இந்த வூட்டு வாசல்ல நம்ம காலு பட்டுரக் கூடாது. அப்படி என்னிக்காவது தெரியாத்தனமா பட்டிருச்சுன்னா அவ்வளவுதான். உடனே வாளியிலத் தண்ணியக் கொண்டாந்து கழுவிவிட்டிருவா. நம்ம தெருவுலயே எடத்த வாங்கி வூட்டக் கட்டிக்கிட்டு, நம்மகிட்டயே சாதி வித்தியாசம் பார்க்குதா. அக்குருமம் பிடிச்சவா.” அவனின் கூர்ந்த பார்வை, பீரோ கதவில்  தோகைகள் விரித்து நின்றிருந்த மயில்மேல் நிலைத்திருந்தது. கர்வம் பிடித்த மயில், ‘வான்கோழி எல்லாம் தனக்கு நிகர் ஆகுமா?’ என்று கேட்பதுபோலிருந்தது.

“சரி சரி... பொரணி அளந்தது போதும். வந்த காரியத்த மொதல்ல பாருங்க. பாம்பு எல்லாரையும் ஏக்காச்சம் காட்டிட்டு எங்கேயாவது ஓடிரப்போவுது” திவாகரன் எல்லோரையும் மென்மையாகச் சத்தம்போட்டார்.

“செத்தம் பொறுங்க சித்தப்பா... ஒடம்பெல்லாம் வலிக்கு... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குவோம்” கெஞ்சலாகக் கேட்டுக்கொண்டான் மாடசாமி. அவனின் தாட்டியமான தேகம் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது.

“ஒடம்பக் கொறல... இப்பிடித் தெக முட்டிக்கிட்டு வராது.”

திவாகரனின் கிண்டலுக்கு மற்றவர்கள் கலகலவெனச் சிரித்தார்கள். மாடசாமியும் வெட்கப் பட்டுச் சிரித்துக்கொண்டான்.

“நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு எந்திரிக்கதுக்குள்ள பாம்பு கம்பிய நீட்டிரக் கூடாது, பார்த்துக்குங்க” வக்கணையாய்ச் சொல்லிக்கொண்டே அவரும் கோவிந்தனின் பக்கத்தில் வந்து இணக்கமாக உட்கார்ந்துகொண்டார்.

திவாகரனுக்கும் அவர்களின் ஆவலாதிகளில் உடன்பாடு இல்லாமலில்லை. அவர் பணி முடிந்து ஊருக்கு வந்த நாள்களிலிருந்தே மரகதத்தின் நடவடிக்கையைக் கவனித்துக்கொண்டுதான் வருகிறார். தண்ணீரில் ஒட்டாத எண்ணெயின் அதிகாரம்.

தூத்துக்குடித் துறைமுகம் எல்லோரையும்போல அவருக்கும் அறுபது வயதானவுடன் அரசாங்கச் சட்டத்தின்படி மெக்கானிக் பணியிலிருந்து ஓய்வளித்திருந்தது. குடும்ப சமேதராய் ஊருக்கு வந்து சொந்த வீட்டில் குடித்தனம் நடத்திக்கொண்டிருந்தார். அவர் ஊருக்கு வந்த நாள்களின் ஆரம்பத்தில்தான், மரகதத்தின் வீடு முழுமைபெறத் தொடங்கியிருந்தது.

ஒருகாலத்தில் கட்டை மண் சுவர்களும் ஓலைக்குடிசைகளுமாய் அந்தக் கொந்தரவாகக் கிடந்த தெரு... பத்து வருஷங்களில்தான் செங்கற்களால் சுவர் எழுப்பி, கான்கிரீட்டால் கூரை வேயப் பட்ட வீடுகளைச் சுமந்து, பரிமளிக்கத் தொடங்கியிருந்தது. பலரின் வெளிநாட்டு வேலைகளும், உள்நாட்டில் சுயமான சம்பாத்தியமும் தெருவின் கோலத்தை முற்றிலும் மாற்றியிருந்தன. இந்தத் தருணத்தில்தான், விலைபோகாமல் வீடுகளுக்கு மத்தியில் வெறுமையாய்க் கிடந்திருந்த பொன்னுலிங்கத்தின் மனையை விலைக்கு வாங்கி, வீடு கட்டத் தொடங்கியிருந்தாள் மரகதம். பொன்னுலிங்கத்துக்குக் கழுத்தை நெரிக்கும் பணத் தேவை. பூத்துப் பல வருடங்களை உதிர்த்துக்கொண்டிருந்த இரண்டு குமருகளுக்கு மாலை பூட்டவேண்டிய கட்டாயம். உள் சாதியில் யாரும் மனையை வாங்க உடன்படாததால், அந்நிய சாதிக்குக்  கையளிக்க வேண்டியதிருந்தது அவருக்கு.

ஆரம்பத்தில் திவாகரனுக்குத் திகைப்பாகத்தான் இருந்தது. எப்படி இந்தத் தெருவில், ஓர் அந்நிய  சாதிக்காரி வந்து அரிச்சல் இல்லாமல் வீடு கட்டிக் கொள்கிறாள் என்று நினைத்ததால் எழுந்த திகைப்பு. அப்போது அவள் ஊரான தாமரைக்குளத்தில் நினைவலைகள் நீச்சலடிக்கத் தொடங்கின. ஈரம் இல்லாத குளம் அது. அடிக்கடி நிகழ்ந்த கொலைகளால் சுற்றுமுற்று ஊர்களைக் கிலி பிடிக்க வைத்துக்கொண்டிருந்தது.

அந்த ஊர்க்காரர்களின் எரவாடே கூடாது என்றுதான் எல்லோரும் ஒதுங்கிப் போனார்கள். அங்கு இருந்தா ஒரு குடி கெளம்பி தன் தெருவுக்கு வந்திருக்கிறது என்று நினைத்தபோது, நெருடலாக இருந்தது திவாகரனுக்கு.

எப்போதாவது தன் எதிரில் முகம் காட்டும் பொன்னுலிங்கத்தை அன்று மெனக்கெட்டு நிறுத்திவைத்து, தன் சந்தேகத்தைக் கேட்டு நிவர்த்தி செய்துகொண்டார் திவாகரன்.

 “என்ன மாமா... அலுசியமா இருக்கு... அவிய நம்ம தெருவுல வந்து வீடு கட்டுதாவா?”

பொன்னுலிங்கம் அப்புராணி. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று அமைதி காப்பவர். அவருடன் யாரும் வலிய சண்டைக்குப் போனாலும், ‘நமக்கு எதுக்கு தொறட்டு?’ என்று வாயைப் பொத்திக்கொண்டு போகிறவர். சலனப்படாமல் பதில் சொன்னார், “பங்காளிச் சண்டையில அவிய மாப்ளய வெட்டிக் கொன்னுப்புட்டாவியளாம். அவியத்தெருவுல ஒரே சண்டச் சல்லியமா இருக்காம். சவம் அங்கன இருந்தா மேலும் சீண்டரந்தாமின்னு என்கிட்ட மனையக் கேட்டாவ. அதும் வெலப்போவாமத்தான இழுத்துக்கிட்டுக் கெடந்துச்சு... சவத்தக் கையக் கழுவிட்டேன். இப்போ அதுக்கென்ன? நம்மகிட்ட அவியச் சருவிக்கிட்டா வரப்போறாவா? இல்ல, நாம அவியகிட்டச் சரவிக்கிட்டுப் போவப்போறமா? அவிய அவியப் பாட்டப் பார்த்துட்டு செவனேன்னு இருக்கப்போறோம்.”

“இல்ல மாமா... நம்ம தெருவுல அவிய வந்து அரிச்சல் இல்லாம வீடு கட்டியிருக்காவளே... நம்மள்ல யாரும் அவிய தெருவுல போயி வீடு கட்டிக் குடியிருக்க முடியுமான்னுதான் ரோசிக்கிறேன்.”

பதில் சொல்லாமல் போயிருந்தார் பொன்னுலிங்கம். மருமகன் யதார்த்தத்தைத்தான் சொல்கிறார் என்பதை அவர் புரிந்துகொண்டிருக்க வேண்டும். மெளனம், சம்மதத்துக்கு அடையாளம்.

வீட்டைக் கட்டி முடித்துவிட்டு அதன் திறப்புக்குக்கூட தெருவில் யாரையும் அழைத்திருக்கவில்லை அவள். பொன்னுலிங்கத்துக்குக்கூட அந்தக் கொடுப்பினை இல்லாதிருந்ததுதான் கொடுமை. அது மட்டுமல்லாமல், வீட்டின் வாசல் முகப்பில், அவள் கணவரின் பெயருக்குப் பின்னால் சாதியையும் சேர்த்து எழுதிப் பலகை மாட்டிக் கொண்டது, வடிகட்டிய அயோக்கியத்தனமாகத் தெரிந்தது திவாகரனுக்கு. ‘நான் வேறு ஆள்’ என்று வித்திரிப்பு காட்டுகிற அயோக்கியத்தனம்.

இரண்டு நாள்கள் கழித்து எசகுபிசகாய் அவள் தெருவில் எதிர்ப்பட்டபோது, ஆற்றாமையால் திவாகரன் கேட்டுவிட்டிருந்தார். “சாதி வித்தியாசம் பார்க்காம எங்க தெருவுல வந்து வீடு கட்டிக் குடியிருக்கிய... பெருந்தன்மன்னு நினைச்சிருந்தேன். அது ஏன் உங்க வீட்டுக்காரரோட பெயருக்குப் பின்னால சாதிப் பெயரைப் போட்டுக்கிட்டு வித்திரிப்பு  காட்டுதிய? அத மாத்திரலாமே!”

அவளின் குண்டு முகம் நசுங்கிப்போனது கணக்காக விகாரப்பட்டது. கண்களில் தீ நின்று கொழுந்துவிட்டு எரிந்தது. கடை கண்ணிக்குப் போகிறாள்போல... கையில் வைத்திருந்த துணிப்பையின் முனையைக் கந்தரகோலத்தில் கசக்கத் தொடங்கியிருந்தாள்.

“என் வீடு... நான் எப்படியும் எழுதி வெப்பேன்... நீ யாரு அதைக் கேட்கிறதுக்கு?” என எடுத்தெறிந்து பேசிவிட்டாள். சன்னதம்கொண்ட சாமியாடி கணக்காக தரையில் கால் பதிக்க முடியாமல் தகித்துக்கொண்டு வந்தாள்.

சந்தடிச்சாக்கில் கூடிவிட்ட கூட்டம், சூழலைக் கலவரப்படுத்தத் தொடங்கியது. வீட்டுக்குள் வேலையாயிருந்த அவரின் மனைவி கமலா, விட்டெறிந்த கல்லாய் ஓடிவந்தாள். துணி துவைத்துக்கொண்டிருந்தாள்போல... சேலையிலும் ரவிக்கையிலும் ஒட்டிக் கொண்டிருந்த நுரைகள் ‘உண்மைதான்’ என்றன.

“ஏங்க நீங்க, வம்பப் பிடிச்சி வெலைக்கு வாங்குதிய? யாரும் என்னத்தையும் எழுதிவெச்சுட்டுப் போறாவ... ஒங்களுக்கு என்ன? நாம உண்டு, நம்ம பொழப்பு உண்டுன்னு இருக்காம...”

மற்றவர்களும் கமாலாவுக்கு ஒப்புவாசித்தனர். ``சவத்த விட்டுத் தள்ளுங்க... வழியில போற ஓணானப் பிடிச்சி மடியில வெச்சுக்கிட்டு...”

மரகதத்துக்கு, தன்னக்கட்டி நிற்க முடியாமல் போயிருந்தது. கடைக்குப் போகிற அவசரமாய் இருக்கலாம் அல்லது திவாகரனின் கேள்வியில் அவள் நிலை தடுமாறிப் போயிருக்கலாம். எடுப்பாய் நடந்து போனவள், அலட்சியமாய் வார்த்தைகளை உதிர்த்து விட்டிருந்தாள். “எம் புருஷம் பேரப் போடுதேன்... ஒனக்கு ஏன் வலிக்கு? நீ வேண்ணா ஒம் பேருக்குப் பின்னால ஒஞ்சாதிப் பேர எழுதி போர்டு போட்டுக்கயேன்... யாரு வேண்டாம்னா?”

நீரோட்டமாய் ஓடிக் கொண்டிருந்த திவாகரனின் நினைவுகளை கோவிந்தன் வார்த்தைக் கற்களை எறிந்து களைத்தான். “வூடு முழுக்க சாமான்களா வாங்கிப் போட்டிருக்காளே... ஏற்கெனவே வசதியானவதானா?” அவன் வெளிநாட்டில் இருந்ததால் அவனுக்கு அவளைப் பற்றிய சுயசரிதை தெரியாமலிருந்ததில் ஆச்சர்யம் இல்லை.

    மாடசாமி, கோவிந்தனின் ஐயப்பாட்டைத் தீர்த்துவைத்தான். “அட. அவா புருஷங்காரன் மிச்சம் வெச்சிட்டுப் போன செத்தம்போல பணத்த வட்டிக்கு விட்டாங்கும் கோடீஸ்வரி ஆயிருக்கா. எல்லாம் அநியாயமான சம்பாத்தியம். பத்து வட்டின்னா பார்த்துக்கோயேன்.”

   “பின்ன? சங்காத்தமா இதுகளை எல்லாம் வாங்க முடியுமா? எல்லாம் ஊர்ப் பணம். நியாயமா சம்பாதிக்கவிய எல்லாம் இப்பிடி ஜோக்கு மாக்கா வாழ முடியுமா தம்பி? அதுலயும், ஒத்தக்கட்ட மனுஷி”
``பேராசக்காரி... வட்டியில ஒரு ரூபாயக்கூட முன்னப்பின்ன வுட மாட்டா... தெரியுமா?” திவாகரன் தனக்குத் தோன்றிய ஆவலாதியையும் அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

அவர் மனத் திரையில், பழைய நிகழ்ச்சி ஒன்று விஸ்தாரமாய் படம் போடத் தொடங்கியது. ஒரு தடவை அவளிடம் 5,000 ரூபாய் கடன் வாங்கியிருந்த முக்கு வீட்டு சந்தானம், (இரண்டு வருஷங்களாய் வட்டியைக் கறாராய்க் கொடுத்துக் கொண்டிருந்தவன்தான்) அசலைத் திருப்பிக் கொடுத்தபோது வட்டியைத் தள்ளுபடி பண்ணக் கேட்டதற்கு, தரியாத்தனமாய் நின்றுவிட்டிருந்தாள் அவள். `சவம் தொரட்டு எதற்கு?’ என்று திவாகரன் சென்று சந்தானத்திடமிருந்து வட்டியை முழுவதும் வாங்கிக் கொடுத்த  பிற்பாடுதான், வாயைப் பொத்திக்கொண்டு போனாள். பணப்பேய்ப் பிடித்தவள்.

யதேச்சையாக மாடசாமியின் பருந்துப் பார்வை, கட்டிலுக்கு வலதுபக்கச் சுவரின் மேல் வரிசைகட்டி நின்றிருந்த போட்டோக்களைக் குறிவைக்கத் தொடங்கியது. குழந்தைகளும் குடும்ப உறுப்பினர்களும் சினிமா நடிகர்களும், அரசியல் தலைவர்களுமாய் போட்டோக்களில் இருந்தவர்கள், அவனின் பார்வைக்கு கோழிக்குஞ்சுகளாயினர். அவற்றின் நடுநாயகமாக சேவல் கணக்காகச் சிலிர்த்துக்கொண்டு இருந்தவரின்மேல் அவன் பார்வை அசையாமல் அழுத்தமாக நின்றது. பாளை அரிவாள் கொண்டையும் மீசையும்  உருட்டுப் பார்வையுமாய் மிரட்டிக்கொண்டிருந்தது சேவல்.

“சித்தப்பா... இவருதான் அந்தப் பொம்பளையோட புருஷக்காரன். என்ன கெந்தளிப்பா இருக்காம் பாருங்க. ரொம்ப அடாதுடிக்காரன் சித்தப்பா.”

சரமாய்ப் பாய்ந்த எல்லோருடைய பார்வை அம்புகளும் கொத்தாக சேவலின் மீது விழுந்தன.

“ஆளப் பார்த்தா எமகாதகன் கணக்காத்தான்  இருக்கான். அதான் அவம் பொஞ்சாதி இந்த வரத்து வர்றா” திவாகரன் இயல்பாகச் சொல்லிவிட்டுச் சிரித்துக்கொண்டார்.

“நான் தாமரக்கொளத்துக்கு தபால் கொண்டுட்டுப் போவும்போ என்கிட்டே சாதியக் கேட்டுத்  தெரிஞ்சதிலருந்து, என்னைய ஊருக்குள்ள வுட மாட்டான் இந்தத் தறுதலப்பய. என்னியத் தெருவுக்கு வெளியவே நிக்கவெச்சுட்டு, தபால் வந்திருக்கவியள ஆள வுட்டுக் கூப்புட்டு வெளிய வெச்சே தபாலக் குடுக்கச் சொல்லுவான். ரொம்ப ஆதாளி  பிடிச்சவன் சித்தப்பா.”

இது, திவாகரன் அறிந்திராத செய்தி. கேட்டதும் குமுறலாக வந்தது. எவ்வளவு அக்குருமம் பிடித்தவர்களாக இருக்கிறார்கள்! சக மனிதர்களைச் சமமாய் பாவிக்கத் தயங்குகிற மிருகங்கள். என்னவோ அவர்கள் மட்டும் கிரீடத்துடன் பிறந்தவர்கள் கணக்கா... மற்றவர்கள் எல்லாம் அம்மணமாகப் பிறந்தவர்கள் கணக்கா... வெப்புராளம் பிடுங்கித் தின்றது அவரை.

“அவம் பொஞ்சாதி நம்ம தெருவுல வந்து வூடு கட்டிக் குடியிருந்துக்கிட்டு, நம்மகிட்டயே ஓட்ட அதிகாரம் பண்ணுதா? ம்... பூன எளச்சதுன்னா, எலி, மாமா மச்சான் மொற கொண்டாடுமாம். அந்தக் கததான்” எக்காளமாகச் சொல்லிவிட்டுச் சிரித்தான் மாரியப்பன்.

“சரிப்பா... கத அளந்தது போதும்... பாம்பத் தேடுங்க. சவம் எங்கன சுருண்டுகிட்டுக் கெடக்கோ. வந்தது வந்தாச்சு... அதை அடிச்சுக் கொன்னுட்டு அந்தம்மா கண்ணுல காட்டிட்டுப் போயிருவோம். இல்லைன்னா மனுஷி ரா முழுக்கத் தூங்க மாட்டா” சோம்பல் களைந்து எழுந்து நின்ற கோவிந்தன் மற்றவர்களை உற்சாகப் படுத்தினான்.

அநேகமாக அவர்கள் எல்லா இடங்களிலும் கருக்கடையாய்த் தேடிவிட்டிருந்தார்கள். குளியல் அறையும் கழிவறையும் மட்டுமே அவர்களிடமிருந்து தப்பியிருந்தன. அந்த வீட்டுக்குள் முன்னறை, பூசை அறை, படுக்கையறை, குளியல் அறை, கழிவறை என நீட்டுப்போக்காக இருந்ததால், வரிசைக்கிரமமாகத் தேடிக்கொண்டு வருவதற்கு அவர்களுக்கு வசதியாக  இருந்தது.

    “நாத்தம் பிடிச்சதுவ... அங்கன போயி யாரு மூக்க நுழைப்பாவ?”

ஆளாளுக்குச் சலித்துக்கொண்டு பின்வாங்கினார்கள். கோவிந்தன் தான்  அவர்களை தயானத்துப் பண்ணினான். ஒரு காரியத்தில் தலையிட்டால் கடைசிவரை முண்டிப் பார்த்துவிட வேண்டும். காயா, பழமா என்பது அப்புறம். 

பாம்பு - சிறுகதை

    குளியல் அறையின் முன் பகுதி சன்னமாய் இருளைப் போத்தியிருந்தது. உச்சியில் துருத்திக்கொண்டிருந்த குமிழ்விளக்கு, ‘என்னை ஒளிர வைத்தால்தான் போர்வையை விலக்குவேன்’ என்று கறாராய் அறிவித்துக் கொண்டிருந்தது கணக்காகத் தோன்றியது. வெளிச் சுவரில் பொருத்தியிருந்த பொத்தானைத் தட்டினான் கோவிந்தன். குமிழ்விளக்கு ஒளிர்ந்ததும் போர்வை விலகி, நிறை அம்மணமாய்த் தெரிந்தது முன் பகுதி. குளியல் அறைக்கு உள்ளிருந்து சுவர் வழியே வெளியே வந்திருந்த இரும்புக் குழாய், சதுர மடிப்பில் வளைந்து நீண்டு, முனையைப் புறவாசல் சுவரின் கீழ்ப்பகுதித் துளையில் நுழைத்து, மறுபக்கத்தில் வந்து நின்று, தன் ஒற்றைக் கண்ணால் வெளித்தோட்டத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. தோட்டத்தில் குமைந்துகொண்டு நின்றிருந்த மரங்களும் செடிகளும் குழாயின் ஈரம் சிந்திய பார்வையில்தான் பசியடங்கிக் கொண்டிருந்தன.

“ஏ பாம்பு... அந்தா போவுதுலே... அந்தா போவுது... குழாய்க்கு அடியில உருவிப் போய்க்கிட்டிருக்கு பாருங்க.”

கோவிந்தன் தன் குள்ள தேகம் வெடித்துவிடும் கணக்காகக் கூப்பாடு போட்டான். கையில் இருந்த குச்சியை உயர்த்திக்கொண்டு குழாயை நெருங்க எத்தனித்தவன், திடீரென யோசித்துக் கொண்டு நின்றான். எந்தப் பாம்பையும் திடுதிப்பென அடித்துவிடக் கூடாது. சில சனியன்கள் சீறிக்கொண்டு எதிர்த்து வரும். முன்னெச்சரிக்கையுடன் நம்மைத் தற்காத்துக்கொண்டு நிற்கவும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

திவாகரன் உட்பட எல்லோரும் பாம்பைப் பார்த்துவிட்டிருந்தனர். தடித்த வெள்ளிக் கம்பியாய் மினுமினுவென ஊர்ந்துகொண்டு போனது பாம்பு. நல்ல பாம்புதான். மழைநீர் விழுந்த தாராய் அதன் தேகம் பளபளத்தது. அவர்களின்  நாடி நரம்புகள் திருக்கிய கயிறுகளாய் முறுக்கேறிக்கொண்டன. தந்திரக்காரப் பாம்பு... குழாயின் ஒதுக்கத்தில் தன் உடலை மறைத்துக்கொண்டு பொன்னம்போல புறவாசலை நோக்கித் தன் நகர்தலைத் தொடர்கிறது. குழாயின் அற்றத்தைத் தொட்டுவிட்டால் சுவர்த் துளையின் இடுக்கில் நுழைந்து வெளியேறிவிடலாம் என்பது அதற்கும் தோன்றியிருக்க வேண்டும்.

    எல்லோரும் பாம்பை அடிப்பதற்குக் கச்சை  கட்டிக்கொண்டு நிற்க, திவாகரன் மட்டும் குத்துக்கல்லாட்டம் நின்று பாம்பை வைத்த கண் வாங்காமல் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார். எதைப் பற்றியோ தீர்க்கமாக   ரோசனை பண்ணிக்கொண்டிருக்கிறார் போல என்று தன்மையாக நினைத்தார்கள். திடீரென அவர் வாயிலிருந்து அப்படியோர் உத்தரவு வரும் என்று அவர்கள் செத்தமும் நினைத்திருக்க வில்லை...
  “பாம்பு போவட்டும்... விடுங்க... அத  அடிக்காண்டாம்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism