Published:Updated:

நாங்கள் ஒரு தொடர்கதை!

 நாங்கள் ஒரு தொடர்கதை!
பிரீமியம் ஸ்டோரி
நாங்கள் ஒரு தொடர்கதை!

தமிழ்மகன், தமிழ்ப்பிரபா, படம்: க.பாலாஜி

நாங்கள் ஒரு தொடர்கதை!

தமிழ்மகன், தமிழ்ப்பிரபா, படம்: க.பாலாஜி

Published:Updated:
 நாங்கள் ஒரு தொடர்கதை!
பிரீமியம் ஸ்டோரி
நாங்கள் ஒரு தொடர்கதை!

தொடர்கதைகளுக்கு ஒரு பொற்காலம் இருந்தது. இதழ்கள் வந்து இறங்கும் ரயில்நிலையத்தில் அதிகாலையிலேயே காத்திருந்து பத்திரிகையை வாங்கி சுடச்சுட காபியுடன் படித்த காலம் அது. திரை நட்சத்திரங்களைப்போல, தொடர்கதை எழுத்தாளர்களைச் சந்தித்து ஆட்டோகிராஃப், போட்டோகிராஃப் எனப் பரபரத்த ரசிகர் கூட்டம் இருந்தது. கொடிகட்டிப் பறந்த அந்த எழுத்தாளர்களைச் சந்திக்கவைத்தோம். எழுத்தாளர்கள் சிவசங்கரி, பாலகுமாரன், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகிய `பேனா’ நண்பர்கள் இந்தச் சந்திப்புக்கு இசைந்தனர்.

 நாங்கள் ஒரு தொடர்கதை!

எழுத்தாளர் பாலகுமாரன், தன் முதல் தொடர்கதை அனுபவத்திலிருந்து பேச்சைத் தொடர்ந்தார்.

பாலகுமாரன்: `மெர்க்குரிப்பூக்கள்’ தொடரை ‘சாவி’யில் எழுத ஆரம்பிச்சப்ப `அஞ்சு வாரம் பார்ப்பேன். நல்லாயில்லைன்னா நிறுத்திடுவேன்’னு சாவி சொன்னார். நான் அதை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு அஞ்சு வாரத்துல என்னென்ன பெஸ்டா முடியுமோ அதை ரீவொர்க் பண்ணி ரீவொர்க் பண்ணி எழுதினேன். அந்தக் கதைகளுக்கு ஓவியம் வரைஞ்ச ம.செ-கிட்ட நானே பேசுவேன். அவர் பக்கத்துல நின்னு, வரைஞ்சு முடிச்ச படங்களை வாங்கிட்டு வருவேன். தொடருக்கு நல்ல வரவேற்பு. கதைகளுக்கு அவ்ளோ முக்கியத்துவம் இருந்த காலகட்டம் அது.

கதைகளைக் காதால கேட்டு ரசிக்கிற காலம். சினிமாக்களைக்கூட ரேடியோவுல ஒலிச்சித்திரமா கேட்டு அழுதுண்டிருப்பா. இதனாலதான் தொடர்கதைங்களுக்கு அப்படி ஒரு வரவேற்பு இருந்தது. இப்போ, விஷுவல் மீடியா உச்சத்தில் இருக்கு. படிக்கிற ஆர்வம் போயி, எல்லாத்தையும் பார்க்கணும்னு ஆர்வப்படுற காலம். ஆனாலும் எழுதுறபடி எழுதினா, படிக்கிறவங்க படிச்சுண்டுதான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவசங்கரி: 1970-ல ஆனந்த விகடன்ல `எதற்காக?’ங்கிற என்னுடைய முதல் தொடர்கதை வந்தது. அந்தச் சமயம் விகடன்ல `மாவட்ட மலர்கள்’ போடுவாங்க. அப்போ அது ஒரு புது கான்செப்ட். சினிமா போஸ்டருக்குச் சமமா கதைகளுக்கு போஸ்டர் ஒட்டி பிரமாதப்படுத்துவாங்க. நான் அப்போ விழுப்புரத்துல இருந்தேன். எங்க வீட்டுக்குப் பக்கத்துலேயெல்லாம் போஸ்டர் ஒட்டியிருந்தாங்க. அதைப் பார்த்து நெகிழ்ந்த தருணம், இன்னும் ஞாபகம் இருக்கு. தொடர்கதைகளுக்கு விகடன் கொடுத்த முக்கியத்துவத்தை, என்னால மறக்கவே முடியாது. `பாலங்கள்’, `மனிதனின் கதை’ போன்ற தொடர்களுக்கெல்லாம் சினிமாவுக்கு வைக்கிற மாதிரி சர்ச் பார்க் ஸ்கூல் பக்கத்துல ஹோடிங்ஸ் வெச்சாங்க.

சுபா (சுரேஷ்): எங்களுடைய முதல் தொடர்கதை `நீயும் சொர்க்கம் போ’. சாவியில வந்தது. பத்திரிகைகளுக்கு நாங்க வாசகர் கடிதம் எழுதிப் பிரசுரமானாலே, அவ்ளோ சந்தோஷப்படுவோம். எங்க தொடர்கதை வந்தப்போ, எப்படிப்பட்ட மனநிலையில இருந்திருப்போம்னு யோசிச்சுப்பாருங்க.

பட்டுக்கோட்டை பிரபாகர்: என்னுடைய முதல் தொடர்கதை, சாவியோட `திசைகள்’ பத்திரிகையில வந்தது. அதுல விஷயம் என்னன்னா, `நீங்க முதல் தொடர்கதை எழுதுறீங்க. உங்க பேர் வராது. கடைசி அத்தியாயத்துலதான் இதை எழுதியவர் யார்னு பெயர் போடுவோம்’னு சொன்னாங்க. வாசகர் மத்தியில் அது பெரிய ஆர்வத்தை உருவாக்கியது. தொடர் முடியும்போது என் புகைப்படத்தோடு பெயர் போட்டு வந்தபோது, எனக்குக் கிடைச்ச வரவேற்பு மறக்கவே முடியாதது. சில கதைகள் திரைப்படங்களாகவும் மாறுச்சு!

சிவசங்கரி: என்னைப் பொறுத்தவரை, வாசகர்கள் படிப்பதற்காக மட்டுமே நான் எழுதினேன். சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. என்னுடைய ஏழெட்டுக் கதைகள் திரைப்படங்களாச்சு. பாலசந்தர், மகேந்திரன், முக்தா சீனிவாசன்னு சிறந்த இயக்குநர்கள், நன்றாக நடிக்கக்கூடிய நடிகர்கள் கேட்டதுக்காக மட்டுமே என் கதைகளைக் கொடுத்தேன். `அவன் அவள் அது’, `நண்டு’, `47 நாட்கள்’ எல்லாம் திரைப்படங்களா நல்லாவே ஓடிச்சு.

பாலகுமாரன்: சிவசங்கரியோட கதைகள், மிடில்க்ளாஸ் மக்களுக்கு நிறைய நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொடுத்தன. கணவனை `டார்லிங்’னுலாம் பொண்டாட்டி சொல்லலாம். ஒண்ணும் தப்பில்லைனு இவங்க கதைகள் மூலமாத்தான் பலருக்குத் தெரிஞ்சது.

சிவசங்கரி: தேங்க்யூ பாலா... அதேமாதிரி வாசகர்கள் எங்களுக்குக் கொடுத்த ஆதரவு ரொம்ப பலமா இருந்தது. எங்களோட குறைநிறைகளைச் சுட்டிக்காண்பிச்சாங்க. எங்களுக்கு அவங்க விசிறிகளா இல்லை... வாசகர்களா இருந்தாங்க.

பட்டுக்கோட்டை பிரபாகர்: வாசகர்கள் என்பதைத் தாண்டி தன் குடும்ப உறுப்பினரா எங்களை பாவிச்சாங்க. அவங்களோட பர்சனல் விஷயங்களை நிறைய ஷேர் பண்ணுவாங்க. அன்றைய வாசகர்கள், எழுத்தாளர்கள் மீது அவ்ளோ நம்பிக்கை வெச்சிருந்தாங்க.

சுபா (பாலா): வாசகர்கள் - எழுத்தாளர்களிடையே இருந்த ரிலேஷன்ஷிப் போல,   எழுத்தாளர்களுக்குள்ளும் ஆரோக்கியமான உறவு இருந்தது. `கன்றுக்குட்டிகள்’னு ஒரு கதை எழுதினோம். அதுக்குப் பாராட்டி வந்த முதல் கடிதமே பாலகுமாரன் சார் அனுப்பினதுதான். ‘கன்றுக்குட்டிகள் படித்தேன். மழை பெய்த சாலையில் பெட்ரோல் தடம்போல வண்ணமயமாக மனதில் தங்கிவிட்டது’னு போஸ்ட்கார்டுல எழுதி அனுப்பியிருந்தார். அதேபோல 'மயான பிரசவங்கள்'னு ஒரு கதை எழுதினோம். ரொம்ப சென்சிட்டிவான கதை. எதிர்வினை என்ன வரும்னு பயந்துட்டு இருந்தப்போ, `இவ்ளோ சின்ன வயசுல ரொம்ப மெச்சூர்டா, பொறுப்புணர்வோடு இந்தக் கதையை எழுதியிருக்கீங்க’னு சிவசங்கரி மேடம் பாராட்டிக் கடிதம் எழுதியிருந்தாங்க. இவங்க எல்லோரும்தான் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்ஸ். இவங்ககிட்ட இருந்து வந்த ஆரம்பகாலப் பாராட்டுகளே எங்களை  ஊக்கத்துடன் செயல்படவைத்தன.

பட்டுக்கோட்டை பிரபாகர்: என் கதைகளைப் பாராட்டியும் பாலகுமாரன் நிறைய கடிதங்கள் எழுதியிருக்கார். மாத நாவல்கள் உச்சத்துல இருந்த காலகட்டம் அது. அந்தச் சமயத்துல பாக்கெட் நாவல் அசோகன், எனக்கும் ராஜேஷ்குமாருக்கும் ஒரு பாராட்டுவிழாவைக் கலைவாணர் அரங்கத்துல நடத்தினார். ரசிகர்களைக் கடந்து அரங்கத்துக்கு உள்ளே வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு.

அந்த நிகழ்ச்சியில பாலகுமாரன் பேசும்போது, `என் மனைவி பட்டுக்கோட்டை பிரபாகரின் வாசகி. அவ கேட்பா, `இவ்ளோ பேசுறீங்களே, பட்டுக்கோட்டை பிரபாகர் மாதிரி ஒரு க்ரைம் நாவல் எழுத முடியுமா?’ன்னு. `முடியாது’ன்னு சொல்லிட்டேன். ஆனாலும் ஒண்ணு ட்ரை பண்ணினேன்’னு சொன்னார். இவருடைய பாராட்டெல்லாம்தான் எனக்கு மிகப்பெரிய உந்துசக்தியா இருந்தது.

சிவசங்கரி: எங்களுக்கு பாப்புலாரிட்டி வந்தது ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் சிறுபத்திரிகைகள், சோ கால்டு அறிவுஜீவிகள் எங்களை ஏத்துக்கல. ‘சிவசங்கரிதானே, கமர்ஷியல்’னு முத்திரை குத்துவாங்க. `என் கதையைப் படிச்சீங்களா?’னு கேட்டா... `படிச்சதில்லை’னு சொல்வாங்க. அதெல்லாம் எனக்கு எவ்ளோ வருத்தமா இருந்திருக்கும்...!

சுபா(சுரேஷ்):
ஒருத்தருக்கு இருபது பேருக்குமேல வாசகர் இருந்தா, அவரை எழுத்தாளராவே ஏத்துக்க மாட்டாங்க... விடுங்க. மக்கள் அங்கீகாரம் இருந்தது. நாங்க தொடர்ந்து எழுதிக்கிட்டிருக்கிறோம். சொல்லப்போனா, ஒரே சமயத்துல பல பத்திரிகைகளுக்குத் தொடர் எழுதினோம்.

பாலகுமாரன்: நான், ஒரே நேரத்துல ஏழு தொடர்கள் எழுதினேன். அந்தந்தத் தொடர்களுக்கான குறிப்பை, கதாபாத்திரத்தின் பெயர்களை வீட்டுல இருந்த மர பீரோவுல, செல்ஃப்ல, ஏன் பாத்ரூம்லகூட எழுதி ஒட்டி வெச்சிருப்பேன்.

சிவசங்கரி: ஒரே நேரத்துல நான்கு தொடர்கள் எழுதினேன். 18 மணி நேரமெல்லாம் தொடர்ந்து எழுதியிருக்கேன். பிறகு, அப்படியே அதை மூடி வெச்சுட்டு மைண்டை பிளாங்க் ஆக்கிட்டு, ரெண்டு நாள் கழிச்சு அடுத்த தொடர்ல கை வைப்பேன். நிறைய எழுதினாலும் எங்க எழுத்துல ஒரு நிதானம் இருந்தது. இதுவரை நான் எழுதிய கதைகளை எல்லாம் நேரம் கிடைக்கும்போது வாசிப்பேன். அந்தச் சூழலுக்கு அதை சரியாத்தான் எழுதியிருக்கேன்னு எனக்குத் தோணும். என்னுடைய எந்த ஒரு கதைக்கும் நான் வருந்தினதில்லை.

பாலகுமாரன்: நான் என்னோட கதைகளைத் திரும்பப் படிக்கிறதே இல்லை. எழுதி முடிச்ச உடனே அது என் கைவிட்டுப் போயிடுச்சு அவ்ளோதான். வாசகர்கள் ஏதாவது சொன்னா, ஓ அப்படியானு கேட்டுக்குவேன்.

பட்டுக்கோட்டை பிரபாகர்: இதுல இன்னொரு கோணமும் இருக்கு. ஒவ்வொரு காலகட்டத்துக்கும் நாம எழுதுறோம். முப்பது வருஷங்களுக்கு முன்னாடி ஒரு கதைக்கு, ஒரு பிரச்னைக்கு நாம சொன்ன தீர்வு இன்னிக்கு அதே பிரச்னைக்கு அதே தீர்வைச் சொல்ல முடியாது. ஏன்னா, இன்றைய காலகட்டம், சமூகச் சூழல், நியாய தர்மங்கள் எல்லாமே மாறிடுச்சு. `இருபது வருஷங்களுக்கு முன்னாடி நீங்க இப்படி ஒரு கதை எழுதுனீங்களே!’னு கேட்டா, அன்னிக்கு அது நியாயமா பட்டுச்சு எழுதினேன். அதே கதையை இன்னிக்கு எழுதச் சொன்னா, அதுக்கு வேற தீர்வை எழுதுவேன். இதுல வருத்தப்பட என்ன இருக்கு?

நீண்ட நேர உரையாடலுக்குப் பிறகு, மனம் முழுக்க நிரம்பிய திருப்தியுடனும் பரவசத்துடனும் விடைபெற்றார்கள்.

 நாங்கள் ஒரு தொடர்கதை!

படம்: தி.விஜய்

மயக்கம் தெளியும்!

ராஜேஷ்குமார்
: “நாற்பது வருஷங்களா எழுதிட்டு இருக்கேன். பழைய பட்டு, பழைய தங்கம், பழைய பாட்டுனு மக்களுக்குப் பழசு மீது ஒரு நம்பிக்கையும் ஈர்ப்பும் இருக்கும். அது மாறவே மாறாது. இன்றைய ஜெனரேஷன் ரொம்ப டெக்னாலஜி சார்ந்து இருக்குதான். ஆனா, எது எப்படி மாறினாலும் தொடர்கதைகளை வாசிக்கிற வழக்கம் குறையாதுன்னு நினைக்கிறேன். ஃபேஸ்புக்ல என்னைத் தொடர்புகொள்றவங்க, என் தொடர்கதைகளை ஆர்வமா விசாரிக்கிறாங்க. நான் இப்பவும் நான்கு பத்திரிகைகளுக்குத் தொடர்கதைகள் எழுதிட்டு இருக்கேன். நடுவுல ஏற்பட்ட தொய்வு, நிச்சயம் மாறும். மயக்கம் தெளியும்!”

 நாங்கள் ஒரு தொடர்கதை!

நாவல் ருசி!

இந்திரா சௌந்தர்ராஜன்:
“இப்போ இருக்கிறவங்கள்ல, 30 வயசுக்கு உட்பட்டவங்களுக்கு வாசிப்புப் பழக்கமே இல்லை. காரணம், அவங்களுக்குத் தமிழ் மீது பெரிய விருப்பமில்லை. அப்படியே இருந்தாலும் சரியா படிக்கவரலை. தப்புத்தப்பாத் தமிழ் எழுதுறாங்க. எங்கேயோ தப்பு நடந்திருக்கு. அதை ஆட்சியாளர்கள், கல்வியாளர்கள்தான் சரிசெய்யணும். சரியாத் தமிழ் தெரியாத இளைஞர் கூட்டம், ஆங்கில நாவலைப் படிக்கிறாங்க, என் மகள் உள்பட. ஆனா, அந்த ஏஜ் லிமிட்டுக்கு அப்பால்  ஒரு மெகா கூட்டம் இருக்கு.

நான் எழுதின `ருத்ரவீணை’, மாத நாவலாத் தொடர்ந்து 26 மாதங்களுக்கு வந்தது. அப்புறம் புத்தகமா மூன்று வால்யூம் வந்து, அதுவும் ஐந்து பதிப்பு வந்தது. அப்போ படிக்கிறாங்கன்னுதானே அர்த்தம். என்னுடைய நாவல்களை முன்பைவிட இப்போ அதிகமாவே படிக்கிறாங்க. எனக்கு மட்டுமில்லை, எல்லா நாவலாசிரியர்களுக்கும் இப்படித்தான் இருக்கு. தமிழ்த் தொடர்களுக்கு அழியாத ருசி இருக்கு. அதுதான் காரணம்!”
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism