Published:Updated:

துர்கா !

துர்கா !

துர்கா !

துர்கா !

Published:Updated:

நடிப்பு : ஐஸ்வர்யா
கலை : ஸ்யாம்
ஒளிப்பதிவு : கே.ராஜசேகரன்
கதை, திரைக்கதை : தேவிபாலா 
இயக்கம் : நீங்களேதான்

துர்காவை நம்பி வந்திருக்கும் சுதா. அன்வரை மணக்கப் போகும் மும்தாஜ். துர்கா என்ன செய்யப் போகிறாள்... அன்வர் யாருக்கு? இத்தகைய கேள்விகளை எழுப்பி முடிந்திருந்தது கடந்த எபிசோட். துறுதுறுவென அடுத்த மூவ்களை யோசிக்கிறார்கள் தோழிகள்... இந்த எபிசோட் இயக்குநர் நாற்காலியைப் பிடிக்க!

சென்னை - மைதிலி, கப்பலூர் - ஜெயசித்ரா, சென்னை - சுபா விஜயராகவன்.... இந்த மூவரும் 'சுதா தியாகம் செய்து, அன்வர் - மும்தாஜை சேர்த்து வைக்கட்டும்' என்கிறார்கள் அவரவர் பாணியில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரவாயல் - வசந்தி, சென்னை - சுமதி ரகு... 'காதலித்தவள் சுதா. நேற்று வந்தவள் மும்தாஜ். அவள்தான் விலக வேண்டும்' என்கிறார்கள் இவர்கள்!

ஆழ்வார்திருநகர்- லஷ்மி.... 'அன்வர் ஒருக்காலும் சுதாவை நம்ப மாட்டான்' என்று அடித்துச் சொல்கிறார் இந்த வாசகி.

திருநெல்வேலி - சசிகலா, நிலக்கோட்டை - புஷ்பலதா.... 'இது மொத்தமுமே... சுதாவைத் திருந்த அன்வர் நடத்தும் நாடகம்' என்று சொல்லி, கதையை நகர்த்துகிறார்கள் இந்த இருவரும்!

சென்னை - கௌரி.... இந்தத் தோழி, ராஜத்தை வைத்து ஒரு ஃப்ளாஷ்பேக் கதையை சொல்கிறார்... அழகான கதை. ஆனால், தற்சமயம் இந்த ஃப்ளாஷ்பேக் உபயோகப்படும் நிலையில், கதையின் போக்கு இல்லையே!

நங்கநல்லூர் - வாணிஸ்ரீ.... 'நான் மனம் மாறிவிட்டபோதும், என் வாழ்வில் ஏன் இந்தப் புயல்?' என வேதனைப்படும் சுதா, 'அண்ணி நமக்காக அன்வரிடம் போராடுவாள்' என்று நம்புகிறாள். சுதாவின் மனதில் பாஸிட்டிவ் நம்பிக்கையை விதைப்பதன் மூலம்... இந்த எபிசோட் இயக்குநர் நாற்காலியைப் பிடிக்கிறார் இந்தச் சகோதரி... வாழ்த்துக்கள்!

அன்வருடன் நிற்கும் மும்தாஜை, ஓரக் கண்ணால் சுதா பார்த்தாள். மும்தாஜ், சுதாவை ஏற இறங்கப் பார்த்தாள்.

''அக்கா... நான் புறப்படறேன்.''

''இரு அன்வர். சாப்பிட்டுப் போகலாம்.''

''வேண்டாம்க்கா. இன்னொரு நாளைக்கு வர்றோம்'' - சுதாவை அன்வர் கண்டுகொள்ளவே இல்லை. மும்தாஜ், துர்காவிடம் வந்தாள்.

''அக்கா... கொஞ்சம் உள்ளே வர்றீங்களா? நான் பேசணும்.''

சரக்கென திரும்பினாள் சுதா. துர்காவுக்கு தர்மசங்கடமாகிவிட, மும்தாஜ் உரிமையுடன் துர்காவின் கைகளைப் பற்றி உள்ளே இழுத்துப் போக, ஹாலில் சுதாவும், அன்வரும் மட்டும். சுதா தாள முடியாமல் அன்வரை நெருங்கி, ''யார் அந்தப் பொண்ணு?'' என்றாள்.

''நான் கல்யாணம் செஞ்சுக்கப் போற மும்தாஜ். துர்கா அக்காகிட்ட இவளைக் காட்டி சம்மதம் வாங்க வந்திருக்கேன்.''

சுதாவுக்கு காலடி நிலம் நழுவியது. அதிர்ச்சி யுடன் நிமிர்ந்து அன்வரைப் பார்த்தாள். வேறு பக்கம் பார்வையைத் திருப்பிய அன்வர், ''அண்ணி சம்மதிக்க மாட்டாங்க...'' என்று சுதா சொன்னதும் படக்கென திரும்பினான்.

''யாரு சொன்னது? என் விருப்பத்துக்கு அக்கா ஒருக்காலும் தடை சொல்லமாட்டாங்க.''

''இது துரோகம்!''

''ஓ... அக்காவை துரோகினு சொல்ற நீ நல்லவளா?''

''நான் அண்ணியைச் சொல்லல. என்னைக் காதலிச்சுட்டு, இப்ப யாரோ ஒரு மும்தாஜைக் கூட்டிட்டு வந்து நிக்கற நீங்கதான் துரோகி!''

அவளை ஒரு விஷப் பூச்சியை பார்ப்பதைப் போல பார்த்துவிட்டு, உள்ளே வந்துவிட்டான் அன்வர்.

''என்னை உங்களுக்குப் புடிச்சிருக்கானு நான் கேட்டதுக்கு நீங்க பதிலே சொல்லலையேக்கா...'' - மும்தாஜின் தேன் குரல் காதில் விழ, அன்வர் நெருங்கினான்.

''மும்தாஜ்... எனக்குப் பிடிச்ச எல்லாமே எங்கக்காவுக்குப் பிடிக்கும். மதங்களைத் தாண்டின சகோதர பாசம் இது. எனக்கு நிறைய வேலை இருக்கு. இப்ப சூழ்நிலை சரியில்லை. புறப்படு!''

''நான் வர்றேன்க்கா!'' என்ற மும்தாஜ் துர்கா வின் காலில் திரும்பவும் விழ, ''நல்லாரும்மா!'' என்றாள் துர்கா. இருவரும் வெளியே ஜோடியாக வர, சுதா நிலைகுலைந்து நிற்க, அன்வரின் பைக் படபடத்து புறப்பட்டது. துர்கா உள்ளே வந்தாள்.

''அண்ணி... என்ன இது?''

துர்காவால் பேச முடியவில்லை.

துர்கா !

''என்னைக் காதலிச்ச அன்வர், அதிரடியா இப்படி ஒரு முடிவை எடுத்தது ஏன் அண்ணி? நான் உங்களை எதிர்த்தேன். நோகடிச்சேன். அம்மா கூட சேர்ந்து நிறைய புண்படுத்தி இருக்கேன். அம்மை போட்டு படுத்து எழுந்தப்ப, நான் புதிய சுதாவா ஆயிட்டேன் அண்ணி. இப்ப மனசு மாறிட்டேன். திருந்தி வர்ற நேரத் துல இத்தனை பெரிய தண்டனையா? இத்தனை நாள் செஞ்ச பாவங்களுக்கு கடவுள் தர்ற பரிசா?'' - துர்காவின் காலில் விழுந்து சுதா கதற, துர்கா மௌனம் நீடித்தாள்.

''என் விருப்பத்துக்கு அக்கா தடை சொல்ல மாட்டாங்கனு அன்வர் திடமா இருக்கார் அண்ணி...'' என்ற வளை துர்கா நிமிர்ந்து பார்த்தாள்.

''ஆனா, நான் நம்பல. என்னை அன்வர் கூட வாழ வைக்கணும்னு துடிச்சவங்க நீங்க. அதுக்காக நீங்க கடைசி வரைக்கும் போராடுவீங்கனு நான் நம்பறேன்.''

துர்காவின் அதிர்ச்சி அதிக மானது.

''அம்மா வீட்டை விட்டு நான் வந்தாச்சு. இனி போகப் போறதில்லை. இங்கே குழந்தைகளைப் பாத்துட்டு உங்களுக்கு உதவியா இருக்கேன். என்னை நீங்க வாழ வைப்பீங்கனு நம்பறேன். ஒருக்கால் முடியாம போயிட்டா, காலம் முழுக்க உங்க காலடில இருந்துடுவேன். இத்தனை நாள் செஞ்ச பாவத்துக்கு பரிகாரமும் அதுதான். என்னை விட்டுறாதீங்க அண்ணி!'' - துர்காவின் கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சுதா அழ, துர்கா சோர்ந்து போனாள்.

''அசடு... எழுந்து நில்லு. இப்படியெல்லாம் பேசலாமா?'' என அவளது கண்ணீரைத் துடைத்து விட்டாள்.

''நீ இங்க வந்த விவரம், அத்தைக்குத் தெரியுமா?''

''தெரியாது!''

''நான் போன் பண்ணி சொல்றேன்!''

''எதுக்கு அண்ணி? சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நான் மேஜர்தான்!''

''உளறாதே... நீ கல்யாணம் ஆகாத பொண்ணு. ஒரு தாய்க்கு எத்தனை பதற்றம் இருக்கும் தெரியுமா? போன் பண்ணி இப்பவே பேசு!''

''வேண்டாம்மா... நான் சொல்லிக்கறேன்!'' என்றபடி உள்ளே நுழைந்தார் நடேசன்.

''மாமா... இவளை சமாதானப்படுத்துங்க. முடிஞ்சா கூட்டிட்டுப் போங்க.''

''வேண்டாம்மா... அவ உனக்கு உதவியா இங்கேயே இருக்கட்டும். நல்ல காத்து இனி மேலாவது இவ மேல படட்டும்.''

சுதா உள்ளே போனாள்.

துர்கா !

''அத்தே!'' என அஞ்சு ஓடி வர, ராஜா தயங்கி நிற்க, சுதா அவர் களுடன் விளையாடத் தொடங்க, இருவரும் அவளிடம் ஒட்டிக் கொள்ள, துர்கா நடேசனிடம் வந்தாள்.

''மாமா... நான் அன்வர்கிட்ட பேசணும். நீங்க வீட்டைப் பாத்துக் குங்க...''

''துர்கா... எந்த நேரமும் உனக்கு உறுதுணையா இருக்கறவன் அன்வர்தான். அவனை சுதாவுக் காக நீ இழந்துடாதே!''

''இல்லை மாமா... நான் பேச றேன்!''

வெளியே வந்தாள். செல் போனில் முயல, அன்வர் கிடைத்தான்!

''உடனே பாக்கணும். நீ மட்டும் சிவன் பார்க்குக்கு வா!''

''சரிக்கா!''

தன் டூ-வீலரில் புறப்பட்ட துர்கா, இருபது நிமிடங்களில் பூங்காவை அடைய, அன்வர் காத்திருந்தான்.

''என்னக்கா... அழுது புலம்பி, உன் மனசை உருக்கி, இங்கே அனுப்பி வெச்சாளா சுதா?''

துர்கா பேசவில்லை!

''அத்தனையும் வேஷம்க்கா! இத்தனை நாள் இல்லாத பாசம், இப்பப் பொத்துக்கிட்டு வந்தி ருக்கா? புள்ளைங்களை பராமரிக்க வந்தாளா? ஆனந்த் சாரும் கோவப்பட்டு அங்கே போயாச்சு. இருக்கற ஒரு பிடிமானமும் விட்டாச்சு. நீ கழட்டிவிட்டா... அதோ கதினு பெட்டியைத் தூக் கிட்டு வந்திருக்காளா?''

''தப்பு செய்யறவங்க திருந்தவே மாட்டாங்களா அன்வர்?''

''நான் அப்படி சொல்லலைக்கா. ஆனா, சுதா மாறமாட்டா.''

''ஏன் அப்படி நினைக்கற?''

''அவ கூட கொஞ்ச நாள் பழகி இருந்தாலும் எனக்கு அது நிச்சயமா தெரியும்க்கா.''

''நீ சுதாவை காதலிச்சது நிஜம் தானே?''

''அக்கா... பழகப் பழகத்தானே மனுஷங்க சுயரூபம் தெரியுது. உங்க மாமியாரும், அவங்க பெத்த புள்ளைங்க மூணும் விஷம்க்கா. ஸாரி, ஆனந்த் சாரையும் சேர்த்துத் தான் நான் சொல்றேன்.''

''அன்வர்?''

''வராகன் அண்ணனை அவங்க சம்சாரம் நிம்மதியா வாழ விடல. உங்களை மாதிரி ஒரு நல்ல உத்தமமான மனைவியை ஆனந்த் சார் சந்தேகப்பட்டது கொடுமை. அந்த ரத்தம்தானே சுதா ஒடம்புல ஓடுது? அவளைக் கட்டிக்கிட்டு காலம் முழுக்க நான் அவஸ்தைப் படணுமா? உன் தம்பி நான் நிம்மதியா வாழக் கூடாதுனு நீ நெனச்சா, சுதாவை எனக்குக் கட்டிவை. நான் ஏத்துக்கறேன். உனக்காக என் அமைதியை இழக்க தயார்!''

துர்கா ஆடிப் போனாள்!

''என்னடா பேசற நீ? உன் சந்தோஷம் குலையணும்னு உன் அக்கா நான் நினைப்பேனா?''

''அப்படீனா விட்டுடு. மும் தாஜை நான் கட்டிக்கறேன்''

துர்கா கலக்கத்துடன் அவனைப் பார்த்தாள்.

''அக்கா... ஊருக்கு உழைக்கறவள் நீ. மோசமான உன் புகுந்த வீட்டு உறவுகளுக்காக இன்னமும் வக் காலத்து வாங்காதே. இன்னொண் ணும் நான் சொல்லட்டுமா?''

''சொல்லு அன்வர்...''

துர்கா !

''உனக்கு உதவ, புள்ளைங்களை பராமரிக்க நல்ல ஒரு ஆயாம்மாவை நான் கூட்டிட்டு வர்றேன். சுதாவை உன் கூட வெச்சுக்காதே. உன் சோத்துல அவ விஷம் வெச்சாகூட நான் ஆச்சர்யப்படமாட்டேன்!''

''என்னப்பா இப்பிடி பேசற?''

''அக்கா... நீ புத்திசாலி. ஆனா, வெள்ளை மனசு ஒனக்கு. மத்த வங்க கண்ணீர் விட்டா, நீ அதுல கரைஞ்சு போயிடுவே.''

துர்கா ஏற இறங்க அவனைப் பார்த்தாள்!

''என்னக்கா?''

''என்னையே நம்பி வந்த சின்னப் பொண்ணு. கெஞ்சி அழறா. அவளைப் போகச் சொல்ல முடியுமா அன்வர்?''

''அக்கா... நீ கூட அந்தக் குடும்பத்தை நம்பித்தான் வாழறதுக்கு போனே. ஒருத்தராவது உன்னைப் புரிஞ்சுக் கிட்டாங்களா? அக்கா... நல்லவங்களா வாழறதுல தப்பில்லை. அதேசமயம் நம்ம பாதுகாப்பும் ரொம்ப முக்கியமில்லையா?''

துர்கா முகத்தில் சலனம்!

''மும்தாஜை வேண்டாம்னு நீ சொன்னா, நான் கட்டிக் கல. ஆனா, சுதா எனக்கு வேண்டாம். நெருப்புனு தெரிஞ் சும் நெஞ்சுல அதை வெச்சுக்க நான் தயாரா இல்லை.''

''சரி அன்வர்... போகலாம்!''

''எங்கிட்ட கோவமாக்கா?''

''எதுக்குடா? உன் மனசு எனக்குப் புரியாதா? என் தம்பி சந்தோஷத்துக்கு நான் குறுக்கே நிப்பேனா? சரி... மும் தாஜுக்கு சுதா பற்றித் தெரியுமா?''

''எதையும் நான் மறைக்கலைக்கா. மாஜிகாதலினு தெரியும். தெரிஞ்சுதான் அவ சம்மதிச்சுருக்கா.''

''சரி... நீ புறப்படு. நான் போன் பண்றேன்.''

துர்கா வண்டியை ஸ்டார்ட் செய்தாள். நேராக வீட்டுக்கு வர, உள்ளே இரைச்சலாக குரல்கள். துர்கா நுழைய, ராஜம் உள்ளே இருந்தாள்!

''நீ ஆயிரம் தடவை சொன்னாலும், நான் வர மாட்டேன். அண்ணி கூடத்தான் இருப்பேன்.''

''அண்ணனே அவளை உதறிட்ட பிறகு, இனிமே என்னடீ உனக்கு அண்ணி?''

''ராஜம்... இங்கே வந்து ரகளை பண்ணாதே!'' என நடேசன் எச்சரிக்க, துர்காவை ராஜம் பார்த்துவிட்டாள்.

''என் பொண்ணு மனசை மாத்தி, ஏன்டீ எங்கிட்டே இருந்து பிரிக்கற?''

''இதப்பாருங்க... உங்க பொண்ணை நான் வரச் சொல் லலை. அவளா வந்திருக்கா. நான் விரட்ட முடியாது.''

''அவளை அந்த அன்வருக்குக் கட்டி வெச்சு, எங்க குடும்ப மானத்தை காத்துல பறக்க விடப்போறியா?''

துர்கா சிரித்தாள்!

''அன்வருக்கு வேற பெண் கூட முடிவாயாச்சு. நான் அன்வரைப் பாத்துட்டுத்தான் வர்றேன். பெத்தவங்க பேச்சுக்குத்தான் அவன் கட்டுப்படுவான். உங்க மகளை தாராளமா கூட்டிட்டுப் போகலாம்!''

''அண்ணி..!''

துர்கா, சுதாவிடம் வந்தாள்!

''இதப்பாரு சுதா... உனக்காக நான் அன்வர்கிட்ட கெஞ்சிக்கூடப் பார்த்தாச்சு. அவன் கேக்கறதாயில்லை. இதுக்கு மேல என் கைல எதுவுமே இல்லை. உன்னை நான் புடிச்சு வைக்கலை. நீ உங்கம்மா கூடப் போயிடு!''

''அண்ணி... உங்களை நம்பித்தானே நான் வந்திருக்கேன்?''

''சரி சுதா... எனக்குப் புரியுது. உங்க குடும்பத்தையே அன்வருக்குப் புடிக் கலை. நான் என்ன செய்ய முடியும்?''

''உன்னை வெறுக்கற இந்தக் கூட்டத்துக்கு நீ எதுக்கு வக்காலத்து வாங்கற? போங்கடி வெளிய! ஆத்தாளும் மவளுங்களும் யாரையுமே வாழவிட மாட்டீங்களா?'' - நடேசன் சீறினார்.

''இதப்பாரு சுதா... நீ என் நாத்தனார். நான் உன்னைப் போகச் சொல்லலை. ஆனா, அன்வரை நான் கட்டாயப்படுத்த முடியாது. உன் முடிவை நீ எடுத் துக்கோ!''

''சரி அண்ணி... இன்னிக்கு ஒரு நாள் நான் இங்கே இருக்கலாமா?''

''தாராளமா!''

''சுதா... நீ என் கூட வரமாட்டியா?''

''இல்லைம்மா. நீ போகலாம்!''

ராஜம், துர்காவிடம் வந்தாள்!

''எங்க குடும்ப அமைதியைக் கெடுத்த கொடும்பாவிடி நீ. வயிறு எரிஞ்சு சொல்றேன். நீ வாழ மாட்டே!''

நடேசன் குறுக்கே பாய்ந்தார்.

''நம்ம குடும்பத்தை விட்டு விலகினா, துர்கா அமோகமா வாழ்வா. போடி வெளியே!'' - ஏறத் தாழ கழுத்தைப் பிடித்துத் தள்ளினார்!

''வயசான காலத்துல புத்தி வக்கிர மாகுதாய்யா பாவி மனுஷா..?!''

''என்னடீ சொன்னே?''

''மாமா... விடுங்க!''

''இதுக்கு என்ன அர்த்தம் துர்கா?''

''மாமா... ஒருத்தரை பிடிக் கலைனா, அவங்க கேரக்டர் மேல சேறு தெறிக்கறது இங்கே புதுசா? ----------- சாப்பிடற பன்றிக்கு வேற என்ன புத்தி இருக்கும்? விடுங்க!''

''என்னையாடீ பன்னினு சொன்ன?'' என்று ராஜம் பாய, துர்கா கொஞ்சமும் மதிக்காமல் உள்ளே சென்றாள். ராஜம் கூச்சல் போட்டபடி கூந்தல் அவிழ்ந்து தொங்க, தலைவிரி கோலமாக வாசலில் இறங்கி நடக்க, நடேசன் கூனிக்குறுகி உட்கார்ந்திருக்க, சுதா உள்ளே போய்விட்டாள்!

நடேசன் கலங்கிய கண்களும், சிவந்த முகமுமாக நிமிர, துர்கா அருகில் வந்தாள்.

''விடுங்க மாமா... நான் இதை எல்லாம் பெரிசா எடுத்துக்கல. நம்ம சுத்தம் நமக்குத் தெரியும்போது, மத்தவங்க சொற்கள் நம்மை என்ன செய்யும்?''

துர்கா !

''ரணமா இருக்கும்மா. ஒரு புண்ணியவதியை பாவிங்க இப்படிப் புண்ணாக்கினா, எப்படீம்மா?''

துர்கா எதுவும் பேசவில்லை. குழந்தைகளை கவனிக்க உள்ளே வந்து விட்டாள். வீட்டு வேலை களில் சகலமும் மறந்தாள். சுதா அடுத்த ஒரு மணி நேரத்தில் யாரிடமும் சொல்லாமல் வெளியே புறப்பட்டுப் போனாள். இரவு ஏழு மணிக்கு திரும்பி வந்தாள். துர்கா எதுவுமே கேட்கவில்லை. சுதா உள்ளே போய்விட்டாள். நடேசன் துர்காவிடம் வந்தார்.

''நான் புறப்படறேன்மா!''

''இருட்டிப் போச்சே மாமா... ஏன் போறீங்க?

''பரவாயில்லைம்மா. மனசே சரி இல்லை. ஏதாவதொரு முதியோர் இல்லத்துல என்னை சேர்த்து விட்ரு துர்கா. அந்தப் பிசாசு கூட இனி இருக்க முடியாது'' என்றவர் சோர்வுடன் நடந்துபோக, துர்கா வேதனையுடன் நின்றாள். இரவு உணவு தயாரானது!

''சுதா... சாப்பிட வர்றியா?''

''வேண்டாம் அண்ணி!''

துர்கா கட்டாயப்படுத்தவில்லை. குழந்தைகளை சாப்பிட வைத்து அவளும் சாப்பிட்டு, விளக்குகளை அணைத்து விட்டு உறங்கப் போனாள்.

களைப்பில் விடிந்ததுகூடத் தெரியவில்லை. காலை ஆறரை மணி. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து வாசலை நெருங்க, கதவு திறந்து கிடந்தது! வீடு முழுக்கத் தேடியும் சுதா இல்லை!

'எங்கே போனா? அம்மா வீட் டுக்குப் போயிட்டாளா? என்கிட்ட சொல்லாம போக மாட்டாளே?’

துர்கா, அவசரம் அவசரமாகக் குளித்து முடித்து பூஜை அறைக்கு வந்து விளக்கேற்றி முடித்து நிமிர, நான்காக மடித்த காகிதம் விளக்கடியில்! துர்கா வேகமாக அதை உருவிப் பிரிக்க, சுதாவின் கையெழுத்து. துர்காவுக்குப் படபடவென வர, அவசரமாக அந்தக் கடிதத்தை படிக்கத் தொடங்கினாள். படிக்கப் படிக்க இதயம் தொண்டைக்கு வந்து விட்டது. வியர்த்து ஊற்றியது.

''அடிப்பாவி மகளே!'' - வாய் விட்டு அலறினாள் துர்கா!

கடிதத்தில் இருந்தது என்ன..?!

- தொடருங்கள் தோழிகளே...
ஆடைகள் உதவி: பி.எம். சில்க்ஸ்,
மயிலாப்பூர்,
சென்னை

 இந்தஅத்தியாயத்தைப் படித்து முடித்ததுமே... அடுத்த அத்தியாயம் எப்படி என்பதை தீர்மானியுங்கள். அதை அப்படியே மனதில் வடித்துக் கொண்டாலும் சரி, எழுதி வைத்துக் கொண்டாலும் சரி... 044-42890014 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உங்கள் பெயர், ஊரை முதலில் சொல்லி விட்டு உங்கள் குரலிலேயே கதை திருப்பத்தை பதிவு செய்யுங்கள். மிகச்சிறந்ததாக தேர்ந்தெடுக்கும் கதைத் திருப்பத்தை வைத்து அடுத்த அத்தியாயத்தை நகர்த்துவார் தேவிபாலா. அத்தகைய எபிசோடை சூப்பராக சமைக்கும் வாசகிக்கு பிரஷர் குக்கர் பரிசு!

முக்கிய குறிப்பு: செவ்வாய் விட்டு செவ்வாய் 'அவள் விகடன்' கடைக்கு வருவது உங்களுக்குத் தெரிந்ததுதான். இதழ் வெளிவரும் வாரத்தின் சனிக்கிழமை அன்று மாலைக்குள் 044-42890014 எண்ணைத் தொடர்பு கொண்டு கதைத் திருப்பத்தை பதிவு செய்ய மறக்காதீர்கள்!

பிரஷர் குக்கர் பரிசு!

துர்கா !

''ஒவ்வொரு முறையும் சீனியர் சிட்டிசனுக்கே  எபிசோட் இயக்குநர் நாற்காலி கிடைச்சுட்டே இருக்க... நமக்கெல்லாம் வாய்ப்பே இருக்காதோனு வருத்தமாவே இருக்கும். இருந்தாலும் நம்பிக்கையோட கதை சொல்லிட்டே இருந்தேன். இப்ப, சீனியர் சிட்டிசன்களின் அனுபவத்திலும் வயதிலும் பாதியளவே இருக்குற எனக்கு அந்த நாற்காலி கிடைச்சுருக்கறது... ரொம்ப சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு. துர்கா கொடுக்கற இந்த தைரியத்துல நானும் கதை எழுத ஆரம்பிக்கலாம்னு தோணுது. இதுக்கும் 'அவள் விகடன்’ கைகொடுக்கும்னு மனதார நம்புறேன். தேங்க்ஸ் எ லாட் மை டியர் அவள்!'' என்று மூச்சுவிடாமல் தன் சந்தோஷத்தை  குழந்தையின் துள்ளலோடு பகிர்ந்து கொண்டார் 'ஹோம்மேக்கர்' வாணிஸ்ரீ!

இவருக்கு பிரஷர் குக்கர் அன்புப் பரிசாக அனுப்பி வைக்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism