Published:Updated:

`இவை எல்லாம் புரியத் தொடங்கிவிட்டால் நவீன ஓவியமும் புரியத் தொடங்கிவிடும்!' - பிகாசோ #HBDPicasso

ஒருமுறை பார்வையாளர் ஒருவர் ``உங்களது ஓவியங்கள் எங்களுக்குப் புரியவே இல்லையே!'' என்று கூற, உடனே பிகாசோ ``உங்கள் வீட்டின் அருகில் உள்ள மரங்களில் குயில் கூவுகிறதே... அதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? வீட்டின் கண்ணாடிகளில் பனி படிகிறதே, அதை நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்வீர்கள்?" என்று பதிலளித்தார்.

`இவை எல்லாம் புரியத் தொடங்கிவிட்டால் நவீன ஓவியமும் புரியத் தொடங்கிவிடும்!' - பிகாசோ #HBDPicasso
`இவை எல்லாம் புரியத் தொடங்கிவிட்டால் நவீன ஓவியமும் புரியத் தொடங்கிவிடும்!' - பிகாசோ #HBDPicasso

ஸ்பெயின் நாட்டில், இடதுசாரி ஆட்சிக்கு எதிராக வலதுசாரிகள் தாக்குதல்கள் நடத்திக்கொண்டிருந்தனர். வலதுசாரிகளுக்கு ஹிட்லரும் முசோலினியும் மிகப்பெரிய அளவில் பக்கபலமாக இருந்தனர். ஸ்பெயின் நாட்டில் உள்ள மிகச்சிறிய நகரம் குவர்னிகா. உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் சிறிய நகரம் என்றே சொல்லலாம். அந்த நகரத்தில் 1937-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெர்மனியின் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின. கொத்துக்கொத்தாக மக்கள் மாண்டனர். உலகில் நடந்த மிகக் கொடுமையான தாக்குதல்களில் ஒன்று, இந்த குவர்னிகா குண்டுவெடிப்பு.

இதன் கொடூரத்தைச் சித்திரிக்கும் வகையில் எருமைத் தலைகள், குரல்வளை நசுக்கப்படும் குதிரைகள், பல்பு மற்றும் அதிலிருந்து வரும் வெளிச்சம் (விமானங்களிலிருந்து குண்டு விழுவது), குழந்தையைக் கையில் ஏந்தி வான் நோக்கிக் கதறும் பெண், பூக்கள் ஆகியவற்றைக் குறியீடுகளாக வைத்து ஓவியர் ஒருவர் வரைந்த ஓவியம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று வரை குவர்னிகாவின் கொடூரத்தைக் காட்டும் வரலாற்று ஆவணமாகவே இந்த ஓவியம் பார்க்கப்படுகிறது. இந்த ஓவியத்தை வரைந்த ஓவியரிடம் ஜெர்மன் அதிகாரி ஒருவர், ``இந்த ஓவியத்தை நீங்கள்தான் வரைந்தீர்களா?'' எனக் கேட்க, உடனே அந்த ஓவியர் ``நீங்கள்தான் உருவாக்கினீர்கள்'' என்றாராம். அந்த ஓவியர்தான் `Pablo Picasso Diego José Francisco de Paula Juan Nepomuceno María de los Remedios Cipriano de la Santísima Trinidad Ruiz y Picasso'. சுருக்கமாக பாப்லோ பிகாசோ.

பிகாசோ, 1881-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் நாள் ஸ்பெயின் நாட்டில் உள்ள மால்கா என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை, ஜோச் ரூயிசு பால்சுகா. தாய், மரியா பிகாசோ. தந்தை ஓவிய ஆசிரியர். தன்னுடைய தாய் பெயரையே பிரதானப் பெயராக வைத்துக்கொண்டார். மிக நீளமான பெயருடைய பிகாசோவை அவருடைய நண்பர்கள் `பிகாசோ' என்றே அழைப்பார்கள். இந்தப் பெயரை பிகாசோ மிகவும் விரும்பினார். ஏனெனில், ஸ்பெயின் நாட்டில் இரண்டு முறை `எஸ்’ எழுத்தைப் பெயர்களில் அதிகம் பயன்படுத்துவது கிடையாதாம். இதனாலேயே பிகாசோவுக்கு `பிகாசோ’ என்ற பெயர் மிகவும் பிடிக்குமாம்.

பேசுவதற்கு முன்பே கிறுக்கத் தொடங்கியவர் பிகாசோ. பிகாசோ முதன்முதலில் பேசிய வார்த்தை பென்சில். 7 வயது முதல் தந்தையிடமிருந்து முறையாக ஓவியத்தைக் கற்றுக்கொள்ள தொடங்கினார். 13-வது வயதில் பிகாசோ வரைந்த முடிவற்ற புறா ஓவியத்தைப் பார்த்து, அவரின் தந்தையே பிரமித்துவிட்டாராம். ஓவியப் பள்ளிக்குச் சென்று கற்றுக்கொள்வதில் ஆர்வம் இல்லாத பிகாசோ, மாட்ரிட்ஸ் பேரடோ என்ற இடத்தில் உள்ள ஃப்ரான்சிஸ்கோ கோயா மற்றும் எல்கிரீகோ ஆகியோரின் ஓவியங்களைப் பார்த்துக்கொண்டிருப்பாராம். 14 வயதில் பிகாசோ வரைந்த `ஆன்ட் பேப்பா' (Portrait of Aunt Pepa) என்கிற யதார்த்த ஓவியம், இன்றளவிலும் ஸ்பெயின் நாட்டின் ஆகச்சிறந்த படைப்பாகக் கொண்டாடப்படுகிறது.

பிகாசோவின் ஓவியங்களை காலரீதியாக வகைப்படுத்தலாம். வறுமையைச் சந்திக்காத கலைஞன் உண்டோ? பிகாசோவும் அதற்கு விதிவிலக்கல்ல. வறுமை அவரைச் சூழ்ந்திருந்த காலங்களில் அவர் பெரும்பாலும் நீலநிற ஓவியங்களையே வரைந்துள்ளார். பிச்சைக்காரர்கள், விலைமாதர்கள், தற்கொலை செய்துகொண்ட நண்பனின் பிரிவின் வலியை உணர்த்தும் படம் எனத் துயரமும் தனிமையும் வறுமையும் சார்ந்தே இவரது படைப்புகள் இருந்துள்ளன. பிறகு, பொருளாதாரரீதியிலும் பரவலாகச் சமூகத்திலும் படைப்புகள் வழியே அறியப்படத் தொடங்கினார். அந்தக் காலத்தில் இளஞ்சிவப்பு நிற ஓவியங்களை வரைந்துள்ளார். பிறகு, ஆப்பிரிக்கப் படைப்புகள் மீதுகொண்ட ஆர்வத்தால் அது சார்ந்த ஓவியங்களை வரையத் தொடங்கினார். இது அவருடைய ஓவியம் சார்ந்த பார்வையை மாற்றியது என்றே கூறலாம். இந்தக் காலகட்டங்களில்தான் `Les Demoiselles d'Avignon’ என்கிற பெண்கள் சேர்ந்து இருக்கும் ஓவியம் ஒன்றை வரைந்தார். வளைவரைகள் அதிகம் இல்லாத, முக்கோண வடிவங்களால் இந்த ஓவியம் அமைந்திருந்தது. இந்த ஓவியம்தான் `கியூபிசம்' என்ற நவீன வகை ஓவியங்களுக்கு ஆரம்பம் எனலாம்.

15-ம் நூற்றாண்டுக்குப் பிறகு ஓவியத் துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என விமர்சகர்களும் மக்களும் பேசிக்கொண்டிருந்த காலத்தில்தான் பிகாசோவின் கியூபிசம் என்னும் முறை நவீன ஓவியத்துக்கான மிகப்பெரிய எழுச்சியாக இருந்தது. இந்த கியூபிசம் மிகப்பெரிய அளவில் ஓவியத்தின் உண்மைத்தன்மைக்கான கேள்வியையும் விமர்சனத்தையும் பெற்றாலும், பெரும்பான்மையான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது; ரசிக்கப்பட்டது.

ஒருமுறை பார்வையாளர் ஒருவர் ``உங்களது ஓவியங்கள் எங்களுக்குப் புரியவே இல்லையே!'' என்று கூற, உடனே பிகாசோ ``உங்கள் வீட்டின் அருகில் உள்ள மரங்களில் குயில் கூவுகிறதே... அதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? வீட்டின் கண்ணாடிகளில் பனி படிகிறதே, அதை நீங்கள் எவ்வாறு புரிந்துகொள்வீர்கள்? வடிவத்தை மாற்றிக்கொள்ளும் மேகம், வெயில், இரவு, மழை எல்லாவற்றையும் எப்படிப் புரிந்துகொண்டுள்ளீர்கள்? உங்களை எல்லாவற்றிலும் கரைத்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வழியில் நீங்கள் இணைந்திருப்பதை உணரத் தொடங்குங்கள். இவை எல்லாம் புரியத் தொடங்கிவிட்டால் நவீன ஓவியமும் புரியத் தொடங்கிவிடும்'' என்றாராம்.

பிகாசோவின் மற்றொரு பிரபலமான ஓவியம், அவர் வரைந்த ஒற்றைப் புறா. இதுதான் உலக அமைதிக்கான சின்னமாக இன்றும் பறந்துகொண்டிருக்கிறது. அவரின் தூரிகைகள் வரைந்த புறாக்கள் என்றும் நமக்குத் தேவைதான்.

பிகாசோவும் அவரது ரசிகர்களும் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வுகள் மிகவும் சுவாரஸ்யமானவை. ஒருமுறை பிரான்ஸில் நடந்த கண்காட்சியைப் பார்வையிட்ட ஓவிய ரசிகர் ஜெரோம் செக்லெர் என்பவர், பிகாசோவின் செல்ஃப் போர்ட்ரெய்ட் ஓவியத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டார். உடனே, பிகாசோவைத் தேடி அவரைச் சந்தித்தாராம். அப்போது, செல்ஃப் போர்ட்ரெய்ட் ஓவியத்தில் உள்ள சிவப்பு வண்ணத்துப்பூச்சி கம்யூனிசத்தையும், அவர் அணிந்திருக்கும் செய்லர் உடையானது ஈடுபாட்டையும் குறிக்கிறது என எண்ணி அவரிடம் பேசினாராம். ஆனால், அப்படியெல்லாம் நினைத்து நான் வரையவில்லை என்று பிகாசோ கூறிவிட்டாராம். அந்த அனுபவத்தை செக்லெர் எழுதும்போது `Most of the time, when you ask an artist about the meaning of their work, all you get is underwear' என எழுதியிருந்தார்.

ஓவியத்துக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த பிகாசோ, ஓவியம் வரைவதே தனி ஸ்டைல் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தக் காட்சிகளை `தி மிஸ்ட்ரி ஆஃப் பிகாசோ’ என்ற படத்தில் காணலாம். இந்தப் படத்தை இயக்கிய ஹென்றி ஜார்ஜ், பிகாசோவை நேரடியாகவே வரையவைத்துக் காட்சிப்படுத்தியுள்ளார். அரைகால்சட்டையை அணிந்துகொண்டு நிற்கும் பிகாசோ தூரிகையைத் தொட்டால் ஓவியங்கள் கொட்டும் என்றுதான் சொல்ல வேண்டும். சிந்திக்கும் இடைவெளிகூட இல்லாமல் வேகமாக வரைவதில் பிகாசோவுக்கு இணை பிகாசோவே. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கிட்டத்தட்ட 13,000-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். அதிக ஓவியங்கள் வரைந்ததாலோ என்னவோ இவருடைய ஓவியங்கள் அதிகம் திருடு போயின. இந்தத் திருட்டில்கூட ஒரு சுவாரஸ்ய சம்பவம் உண்டு.

கடந்த 2010-ம் ஆண்டு ஆங்கிலப் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்திதான் அந்த சுவாரஸ்யச் சம்பவம் வெளியில் வரக் காரணம். பிகாசோவின் ஓவியங்களின் உண்மைத்தன்மையை அறிய Pierre Le Guennec என்பவர் பிகாசோ ஃபவுண்டேஷனுக்குச் சில ஓவியங்களை அனுப்பியுள்ளார். ஓவியங்கள் அனுப்பியவரின் வீட்டைச் சோதனையிட்டபோது 250-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் கிடைத்துள்ளன. அவரை போலீஸார் கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்தினர். விசாரணையில்தான் தெரிந்தது, Pierre Le Guennec என்பவர் ஒரு எலெக்ட்ரீஷியன். அவர் பிகாசோவின் வீட்டில் 3 ஆண்டுகளாக எலெக்ட்ரிக் சார்ந்த பணிகளைச் செய்தவர் என்பதும், பிகாசோ அவரிடம் ஓவியங்களைக் கொடுத்தார் என்பதும் தெரியவந்தது. ஆனால், அவரைப் பற்றி எந்தக் குறிப்பிலும் பதிவிடவில்லை.

பிகாசோ வரைவதில் மட்டுமல்ல, ஸ்கல்ப்சர், ஆடை வடிவமைப்பு போன்ற துறைகளிலும் சிறந்துவிளங்கினார். தான் ஈடுபட்ட துறைகளில் புதிய மாற்றங்களையும் கொண்டுவர அவர் தவறவில்லை. கவிஞராகவும் அவர் காலத்தில் அறியப்பட்டவர் பிகாசோ `I have called out into the starless and endless nights; Oh, My love! where are you? I have waited for you; Wished, and wished for you' என்று காதலையும், `I walk a lonely road, the one and only one I've ever known' என்று தனிமையையும் கவிதையாக எழுதியுள்ளார். மிகக்குறைவான கவிதைகளை அவர் எழுதியிருந்தாலும் மிகவும் எளிமையான அழகான வார்த்தைகளும் உணர்வுகளும் அதில் நிரம்பியிருக்கும்.

``ஓவியன், இருப்பதைப் பார்த்து அப்படியே வரைந்துவிட்டுப்போவதில் என்ன புதுமையான விஷயம் இருக்கிறது? பார்க்கும் காட்சி அவன் மனதினுள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளைத்தான் ஓவியன் ஓவியமாக வரையவேண்டும்” என்று கூறும் பிகாசோ தன்னுடைய ஒவ்வொரு படைப்பின் வழியாகவும் சமூக, தனிமனித உணர்வுகளை தன்னுடைய இறுதிக்காலம் வரை பிரதிபலித்துக்கொண்டே இருந்தார். 20-ம் நூற்றாண்டில் உலகமே கொண்டாடிக்கொண்டிருந்த பிகாசோவின் ஓவியங்களை ஹிட்லர் `பைத்தியத்தின் கிறுக்கல்கள்’ என்று விமர்சித்தார். இந்தக் கிறுக்கல்களைத்தான் உலகமே இன்றளவிலும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

இன்று (அக்டோபர் 25) இந்த மகத்தான ஓவியனின் பிறந்தநாள்!