மரணத்தின் வெம்மை
கோடையின் வெம்மையில்
ஆவியாகிப்போவதில்லை
மரணத்தின் வாடை.
ஒரு விடுமுறையின்போது
பலமணிநேரம் பயணித்து
தடவிப்பார்த்த
தற்கொலை செய்துகொண்ட
நண்பனின் விரல்கள்
விடுதியின் கடைசி நாளில்
கட்டியணைத்து
விடை கொடுத்தவை.
அழவும் அவகாசமின்றி
இறந்த இரண்டே மணி நேரத்தில் தெருவெங்கும்
தண்ணீர் தெளித்து
ஊரே வழியனுப்ப
அவசரமாய் அடக்கமானார்
உத்திரத்தன்று இறந்துபோன மாமா.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நேற்றைய தினசரியில்
தண்ணீர் கேட்டுப்
போராடியதாய்ச் சொல்லப்பட்ட
மக்களில் இரண்டாவது வரிசையில்
மூன்றாவதாய்
இருந்தவருக்கு
மகன்களால் கைவிடப்பட்டு
கூழ் வார்க்கும் திருவிழாவில் நெரிசலில் மூர்ச்சையாகி
இறந்த மாணிக்கம் பெரியப்பாவின் சாயல் .
உலர்ந்த காற்று உட்புக
ஆளுயரத்தில்
சாவு நிகழ்ந்த வீட்டின்
வாசலில் அலைவுறும்
மாலை வாங்கிவந்த
நெகிழிப்பையென
அலைவுறுகிறது
அகல மறுக்கும்
கோடையின் மரணங்கள்.
- கே.ஸ்டாலின்
கடந்தகால ஒளிப்படம்
உடன் படித்தவர்களோடு
எப்போதோ எடுத்துக்கொண்ட
குழு ஒளிப்படத்தை
எதேச்சையாகப் பார்க்க நேரிடுகிறது.
கணத்துளியும் தாமதியாமல்
சட்டென இறக்கை பூட்டிக்கொண்டு
கடந்தகாலம் ஏகுகிறேன் அரூபமாய்.
இன்று பூத்துக் குலுங்கும்
வாழ்வு விருட்சத்துக்கு
அன்றே விதையூன்றிய ஒருத்தியைத் தொட்டு
பிரியங்கள் வழிய
நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
அசாதாரண சந்தர்ப்பங்களை
அச்சமின்றித் துணிவோடு எதிர்கொள்ள
தன் அனுபவங்கள் வழி
ஆற்றுப்படுத்தியவளைப் பார்த்துப்
பெருமிதத்தை வெளிப்படுத்துகிறேன்.
எதற்கும் வருத்தமின்றி
எப்போதும் சிரித்து உற்சாகமூட்டியவள்
இப்போதும் புன்னகைக்கத் தூண்டுகிறாள்.
அப்போது நிழல்போல உடனிருந்து
அகால மரணமடைந்தவள்
பார்வையிலிருந்தே மறைகிறாள்
திரையிடும் கண்ணீரால்.
- தி.சிவசங்கரி
நம்பிக்கை
வயல்வெளி வேலியோரம்
தன்னிலை மறந்து
பின்னிப் பிணைந்திருக்கும்
நல்லபாம்பு சாரைமீது
தன் வெள்ளைத் தோள் துண்டு
சாத்தும் தாத்தா
அத்துண்டினை எடுத்து
வீட்டில் பத்திரப்படுத்தி வழிப்பட்டால்
நல்லதே நடக்குமென்ற நம்பிக்கையில்.
கடன் தொல்லையில் இறந்த
தாத்தாவின் தகரப்பெட்டியில்
இரண்டு வருடமாக
மடிப்புக் கலையாமல் இருக்கிறது
மகிமைத்துண்டு.
- முகில் முருகேசன்