Published:Updated:

தொடர்கதை : ஒன்று

தொடர்கதை : ஒன்று

தொடர்கதை : ஒன்று

தொடர்கதை : ஒன்று

Published:Updated:
##~##

அது ஒரு ஃபார்முலா!

ரூமுக்கு நாலு பேர்தான் பேச்சிலராக இருப்பார்கள். 'அப்பிடிலாம் இல்லியே...’ என டீடெய்ல் சொல்ல விரும்பினால், ஹலோ பாஸு... அப்டி ஒரு ஒன்லைனில்தான் ஆரம்பிக்குது இந்தக் கதை!

அதிகாலையில் அலாரம்வைத்து செந்தில் எழுந்தான். அடுத்த இரண்டு மணி நேரம், 'ஒரு நாயகன் உதயமாகிறான்’. யெஸ்... ஜோதிகாவின் ஹஸ்பண்ட் சூர்யாவை சினிமாவில் இருந்து காலி பண்ணி கம்ப ராமாயணம் பேச அனுப்பப்போகிறவன் இந்த செந்தில்தான். த திங் இஸ்... இன்னும் பாலாவின் பார்வைதான் படவில்லை. ஜமுக்காளத்தை மடித்துப் போட்டு, பேர்பாடி யோகாவில் இறங்கினார் மானா மாமா. ஆர்ட் ஆஃப் லிவிங் ஆன்ட்டிகளைக் கவர் பண்ணப் போய்க் கற்று வந்த யோகா அங்கிள். காலை எழுந்ததுமே, மொபைல் தேடி மிஸ்டு கால்கள் பார்க்கும் கைக்குச் சொந்தமானவன் சண்முக சுந்தரம்... நோ ஷம்மி. பிரேம்ஜி ஃபீலிங்கில், நொட்டாங் காலை உதறி உதறி நடப்பான். கால் சென்டர் காளை. ஓசி பெர்ஃப்யூம் கிறுகிறுக்க, என்ட்ரன்ஸ் கேட்டில் தேவுடு காக்கிறானே... அவன்தான் ஆர்ம்ஸ் பாண்டி முனுஷ். அஞ்சப்பர் ஹோட்டல் பரோட்டா மாஸ்டர். நாலு பேரின் பார்வையும் ஒரே திசையில்... ஒரே விசையில்... ஏன்?

தொடர்கதை : ஒன்று

தேதான்! எதிர் ஃப்ளாட்டுக்கு தேவதைகள் வந்திருக்கிறார்கள். இதற்கு முன்பு அங்கே ஒரு சேட்டு குடியிருந்தான். சேட்டு வீடு என்றால் ஒரு சோனியா அகர்வாலாவது இருக்க வேண்டாமா? அந்த வீட்டில் ஒரு மராத்தி அப்பத்தா இருந்தாள். ஓவர் பான். சேட்டு வேறு. இந்தி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாதிரி, எந்நேரமும் அக்கம்பக்கத்துவாசிகளை எகிறிக்கொண்டு திரிவான். போனஸாக அந்த அப்பத்தா, இரவுகளில் கஸ்தூரி பாய், கமலா பாய், இந்திரா காந்தி, நர்கீஸ் ஆவிகளுடன் பேச ஆரம்பிக்க, 'நடந்தது என்ன?’, 'நிஜம்’ டீம் எல்லாம் கால் டாக்ஸிக்களில் பழைய கேமராக்களுடன் வந்து இறங்கியதும்தான் அசோஸியேஷன் விழித்தது. தீவிரவாதிகளை விரட்டியடித்த பின், தேவதைகளின் அரசாட்சி!

ழக்கம்போல ஒரு காலை எழுந்து பார்த்தால், எதிர் ஃப்ளாட் பால்கனியில் புதிதாய் சில பூந்தொட்டிகள். கொடியில் காயும் பூப்போட்ட நைட்டிகள். காற்றலைகளில் பெண் குரல்கள். ஜன்னலில் சாம்பிராணிப் புகை. வாசலில் கேபிள்காரன். டெம்போவில் இறங்கும் கட்டில், பீரோ.

பிசினெஸ் பேக்கோடு கீழே இறங்கிய மானாவை, மு.க.அழகிரி சாயலில் இருந்தவர் தெருவில் மறித்தார்,

''சார் ஐம் லிங்கம்... லிங்கேஸ்வரன். டி1-10ன்ல குடி வந்திருக்கோம். மேலே உங்க ஒய்ஃப் இருக்காங்களா? என் ஒய்ஃபை அனுப்பிவைக்கிறேன். இன்ட்ரோ ஆகிட்டாங்கன்னா... இந்த ஏரியா டீட்டெய்ல்ஸ் தெரிஞ் சுக்கலாம்ல... என்ன சார் நான் சொல்றது..?'' என்றவரை டென்ஷனாய் பார்த்தார் மானா.

''ஒய்ஃபா..? சார்... நாங்க நாலு பேர் பேச்சுலர்ஸ்தான் தங்கி இருக்கோம். பக்கத்துல ஃபேமிலி இருப்பாங்க... அங்கே கேளுங்க!''

தொடர்கதை : ஒன்று

''ஓ, நீங்க பேச்சுலரா..? வெரிகுட்... வெரிகுட்'' என மேலும் கீழும் பார்த்துச் சிரித்த லிங்கத்தைக் கடுப்பாய் முறைத்துவிட்டு நடந்தார் மானா. கொஞ்சம் திருத்தமான எ.வ.வேலு மாதிரி இருந்தாலும், மானா மாம்ஸ் ஸ்டில் அன் எலிஜிபிள் பேச்சுலர். தீராத காதலன். திகட்டாத மானுடன். கனிந்த அழகன். இனிய கயவன். தொழில், திருட்டு டி.வி.டி சப்ளை. பஜாரில் பர்சேஸ் பண்ணி, 10% கமிஷன்வைத்து டோர் டெலிவரி செய்கிற வேலை. பாதி கோடம்பாக்கத்துக்கு இவர்தான் உலக சினிமா தீனி. அமீருக்கு 'ட்ஸோட்ஸி’யும் மிஷ்கினுக்கு 'கிக்குஜிரோ’ வும் கொடுத்துக் கெடுத்தது மாம்ஸ்தான். கௌதம் மேனன் நம்பரை 'இம்சை’ என்று போட்டு சேவ் செய்திருக்கிறார். பார்ட்டியிடம் ட்ரிபிள் எக்ஸ் முதல், எடுத்த வரைக்கும் 'ஏழாம் அறிவு’ம் கிடைக்கும்.

காலையில் புதிதாய் வந்த எதிர் ஃப்ளாட்காரருக்கு, ரெஸ்பான்ஸ் பண்ணாதது எவ்வளவு பெரிய ப்ளென்டர் மிஸ்டேக் என்பதை மாலையே உணர்ந்தார் மாம்ஸ். 'உனக்கு முன்பாக என் சமூகம் செல்லும்’ என்பது மாதிரி அவர்கள் அறையின் சமூகமான 'ஹீரோ’ செந்தில்தான் எதிர் ஃப்ளாட் தகவல்களை ஷம்மியிடம் ஸ்க்ரோலிங் ஓடவிட்டான்.

''மச்சான்... நாலு பொண்ணுங்க மச்சான். மச்சான்... நாலு பொண்ணுங்க மச்சான்'' என அரற்றியவனை எட்டி மிதித்தான் ஷம்மி.

''செருப்பால அடிப்பேன். சொல்றா...''

''அங்கிள், ஐஸ் ஹவுஸ் ஈ.பி-ல வேலை பாக்கிறாரு. ஆன்ட்டி... ஹவுஸ் ஒய்ஃப். அப்புறம்... நாலு பொண்ணுங்க மச்சான்!''

''தோடா, ஸ்விட்ச் ஆஃப் பண்ணிக்க! இந்த முனுஸ் நாயி எங்க..? அயன் பண்ணிவெச்ச என் புது ஷர்ட்டை எடுத்துப் போட்டுட்டுப் போயிட்டான்...'' என்கிறபோதே, முனுஸ் உள்ளே வந்தான்.  

நைட் ஷிஃப்ட்டில் 40 கிலோ பரோட்டா மாவு பிசைந்துவிட்டு, காலையில் வந்து ரெஸ்ட் எடுக்காமல், ஷம்மி சட்டையைக் களவாடி மாட்டிக்கொண்டு, சைக்கிளில் மீனாட்சி காலேஜ் பஸ்ஸ்டாப்பில் டாப் அடிக்கிற யூத்.

எத்தனை காஸ்ட்லி பிராண்டட் சட்டை போட்டாலும், ரெண்டு கோட்டிங் எக்ஸ்ட்ரா பவுடர் அடித்து, காலர் அழுக்காகிவிடாமல் இருக்க, கழுத்தில்சொருகும்  கர்ச்சீப் அவனை அக்மார்க் மொக்கச்சாமி எனக் காட்டிக்கொடுத்துவிடும். இன்னமும் சைக்கிள் ஹேண்ட் பாரில் குஞ்சம் கட்டி, மட் கார்டில் ஸ்டிக்கர் ஒட்டி, வீல் ஃபோக்ஸ் கம்பிகளில் பாசி மணிகள் கோர்ப்பவனைப் பார்த்தால், ஃபிகர்களுக்குக் குமட்டிக்கொண்டு வரும். ஆனால், முனுஸ்...  பெண்கள் விஷயத்தில் மிஸ்டர்  கான்ஃபிடென்ட். நேற்றுகூட அனுஷ்காவுக்கும் 'வானம்’ பட டைரக்டர் கிரீஷ§க்கும் காதல் என்ற செய்தியைப் படித்துவிட்டு, ''ஐயோ, இவனுக்கே ஃபிகர் செட்டாவுறப்போ... எனக்கு செட்டாவாதா மச்சான்..?'' என்றவன்.  

டேய் நாயே... என்னடா என் புதுச் சட்டையெல்லாம் மண்ணு?''

''விடுறா விடுறா... எதிர் ஃப்ளாட்டுக்கு வந்துருக்குற அக்காவுக்குத் தண்ணி பிடிச்சுக் குடுத்தேன் மாப்பு. புது ஏரியா... புது ஜனங்க... பாவம்ல!''

''த்தா... ரூம் அட்வான்ஸ்ல இருந்து பொட்டிக்கடை அக்கவுன்ட் வரைக்கும் என்னுது. கால் சென்டர்ல எழவெடுத்துக் கொண்டுவந்து கொட்றேன். நல்லாக் கேட்டுக்கங்க... ஒழுங்கா இருக்கறதா இருந்தா... இந்த ரூம்ல இருங்க. அந்தப் பொண்ணுங்களுக்கு லைன் கட்டுறது... லைட் அடிக்கிறது... ரூட் போடுறது... நூல் விடுறதுன்னு ஏதாச்சும் கிளம்புனீங்க... நானே ஹவுஸ் ஓனர்ட்ட போட்டுக் குடுத்துருவேன். அப்புறம் சென்ட்ரல்ல துண்டு போட்டுத் தூங்க வேண்டியதுதான்...'' - கத்திவிட்டு ஷம்மி பால்கனிக்கு வந்து சிகரெட் பற்றவைத்தபடி எதிர் ஃப்ளாட்டையே பார்த்தான். ''என்ன... எவளையும் காணோம்..?''

ளிகை - காய்கறிக் கடைகள், தண்ணி லாரி ஏரியா, பால்கனி, ஜன்னல் என ஒரு வார மான்டேஜ்களில் நான்கு பெண்களின் தரிசனங்களும் திவ்யமாகக் கிடைத்தன. நாலும் கொழுக்கட்டைகள். செம ஃபிகர்ஸ். காணாது கண்ட கலர்ஸ். கடைக்குட்டி ஷோபியா... ப்ளஸ் டூ பூனை என்பதை யூனிஃபார்ம் சொன்னது. 'களவாணி’ ஓவியா சாயலில் பவர் க்ளாஸ் போட்டுக்கொண்டு, முட்டி தெரியும் மிடியில் திரிந்தவள்தான் முனுஸ் சாய்ஸ். காரணம் மிக எளிமையானது. 'இந்தக் குழந்தை மனசுக்காரனுக்கு, அந்தக் குழந்தைதான் செட்டாகும்’!

மூத்த பெண் சுனிதா. காட்டன் புடவைகளில் காலையில் கிளம்பி ஸ்கூட்டி பெப்பில் போவாள். மாலையில் நைட்டியில் பால்கனியில் டெஹல்கா படிப்பாள். பார்க்கவே அத்தனை சிம்பிள். சுனிதாதான் மானா மாம்ஸின் சாய்ஸ். 'மூத்த பொண்ணுன்னா பொறுப்பா இருக்கும். அந்த மெச்சூரிட்டிதான் நம்ம அலைவரிசை. அதுவும் இல்லாம அது சுஹாசினின்னா... நாம ஜே.கே.பி சிவக்குமார் இல்லையா!’

ரண்டாவது பெண் திவ்யா, சுடிதாரில் கிளம்பி அக்காவுடனோ அப்பாவுடனோ அவ்வப்போது போய் வருகிறாள். அல்லது வீட்டில், தெருவில், கடையில், மொபைல் பேசியபடியே நடக்கிறாள். துணி காயப் போடும்போது, தலை துவட்டும்போது, அம்மாவுக்கு நகம் வெட்டும்போது என எப்போதும் பாடுகிறாள். இவளும் ஹீரோ செந்திலின் சாய்ஸ். இவளும் என்றால் மூன்றாவது பெண் மகிமாவும் செந்திலுக்கு ஓ.கேதான்.  

மூன்றாவது பெண் மகிமா... பிரியங்கா சோப்ரா மாதிரி. ஜீன்ஸ் - டாப்ஸில் பல்ஸர் ஓட்டுகிற பெண். எல்.ஆர்.ஈஸ்வரி மாதிரி கொஞ்சம் ஆண் குரல் பேசிக்கொண்டு, ஓங்குதாங்கான மூங்கில் உடல் முறுக்கி படபடவென பல்சரில் போகும்போது இதயங்கள் தடதடக்கும். பார்த்தவுடனே கெமிஸ்ட்ரி கிளர்ந்து துள்ளுவதில், ஷம்மிக்கு மகியைப் பிடிக்கிறது. செந்தில் மாதிரி திவ்யாவையும் பிடிக் கிறது!

ரெண்டே வாரம்தான். பரோட்டா முனுஸ் எப்படியோ ஷோபியாவை கரெக்ட் பண்ணி இருந்தான். ஒரு மாலையில் ரூமில் நுழைந்த மானா அதிர்ந்து நின்றார். பால்கனியில் உட்கார்ந்து காற்றில் பரோட்டா போட்டுக்கொண்டு இருந்தான் முனுஸ். எதிரே ஷோபியா காற் றில் பூ கட்டிக்கொண்டு இருந்தாள். மானாவைப் பார்த்ததும் ஷோபி உள்ளே ஓட, முனுஸ் திடுக்கிட்டுத் திரும்பினான்.

''கொலைகாரா... ஸ்கூல் பிள்ளைகிட்ட... என்னடா இது?''

''மடக்கிட்டம்ல!''

''என்னாது?''

''விடா முயற்சி... விஸ்வரூப வெற்றி!''

தொடர்கதை : ஒன்று

மானா மாம்ஸ் டென்ஷனில் ஒரு கிங்ஸ் பற்றவைத்தார். இரண்டு வாரங்களாக அவரும்தான் சுனிதாவைப் பார்க்கிறார். அவள் பால்கனிக்கு வந்தால்... புருவங்கள் நெரித்து புரூஸ்லி பார்வை பார்த்துவிட்டுப் போய்விடுகிறாள். பால் பாக்கெட் வாங்க வந்தவளிடம், ''எக்ஸ்க்யூஸ் மீ, இந்த கீ-செய்ன் உங்களோடதா?'' என ஒரு பிட் போட்டு, ஹலோ சொல்ல முயன்றபோது, சுனிதா திரும்பி முறைத்ததில் அஞ்சு சொட்டு ஆசிட் தெறித்தது!

டேய் முனுஸ்... மேட்டரைச் சொல்றா!''

''அண்ணே... அதுவா எதுவும் நடக்காது. நடக்கவைக்கணும். நமக்கு நைட் ஷிஃப்ட். பகல்ல ஃப்ரீ. அங்க ஷோபிக்கு அரையாண்டு லீவு. தூங்காமக்கொள்ளாம ரூம்லயே டாப்படிச்சு கவுத்தேன். நாளைக்கு பீச் வர்றேன்னுருக்கு...''

நடக்கவைக்கணும். இத்தனை வயதில் மானா வின் கண்ணைத் திறந்தான் முனுஸ். அன்று மாலையே டி.வி.டி பேக்கைத் தூக்கிக்கொண்டு எதிர் ஃப்ளாட் காலிங் பெல் அடித்தார் மானா. அங்கிள்தான் கதவைத் திறந்தார்.

ட... வாங்க சார். உள்ளே வாங்க!''

மானாவின் கண்கள் மானாவாரியாய் அலைந் தன. எல்லோரும் டி.வி பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.

''ஏய் சவுண்ட் கம்மி பண்ணு. சார் எதிர் ஃப்ளாட்ல இருக்கார்... உட்காருங்க சார்.''

சுனிதா திரும்பிப் பார்த்தாள், மானாவுக்கு ஜிவ் வென்றது.

''ஒண்ணுமில்லை சார். ஆக்சுவலா நான் டி.வி.டி சப்ளை பண்றேன். புதுப் படம்லாம் கிடைக்கும். நல்ல ப்ளூ ரே டிஸ்க்குங்க. இப்போலாம் யாரு தியேட்டருக்குப் போய் பார்க்கறா? உங்க      ளுக்கு எந்தப் படம் வேணும்னாலும், நான் தர்றேன்.''

''காவலன்’ வந்துருச்சா அங்கிள்?'' - ஷோபியா கேட்க, குடும்பமே கூடி பேக்கை கவிழ்த்துப் போட்டு எடுத்தது. சுனிதா மட்டும் ஓரமாய் உட் கார்ந்து பார்க்க, மானா ஃபுல் லுக்குகளை விட்டுவிட்டு வீசிக்கொண்டு இருந்தார். 'இந்த மின் மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது’ என டி.வி-யில் ஸாங்!

ப்போது தடாலெனக் கதவு திறக்க, ''வேலு நாயக்கரய்யா...'' என்கிற எஃபெக்ட்டில் ஒரு பெண்ணின் கதறல். ''சுனிதாம்மா... சுனி தாம்மா... நான் சொன்னேன்ல அந்தப் பய சொன்ன மாதிரியே பண்ணிட்டாம்மா...'' என அலறியபடி, ஒரு பெண்மணி தன் கையெல்லாம் வெந்த நிலையில் நின்றாள்.

தபதபவென ஓடி வந்த சுனிதா, ''நான்சென்ஸ் அவனை என்ன பண்றேன் பாருங்க...'' என மொபைலை எடுத்து போலீஸுக்கு போன் போட்டாள். அதற்குள் பின்னாலேயே ஓடி வந்த ஒருவன், 'விஷ்ஷ்க் விஷ்ஷ்க்’ என கத்தியால் காற்றில் கிழிக்க, வீட்டில் அத்தனை பேரும் ஓடிப் பதுங்கி உருண்டார்கள். சுனிதா ரிமோட்டை எடுத்து வந்தவன் மண்டையில் விட்டெறிந்தாள். மானா மாம்ஸ் மேல் கத்தியோடு விழுந்தான் பயங்கரன். ஆவேசமாய் மானாவை அவன் கத்தியால் குத்தத் துடிக்க, சில செகண்டுகள் மரணத்தைக் கண்கள் முன் பார்த்தார் மானா. அவனது காலை சுனிதா பிடித்து இழுக்க, மில்லி மீட்டரில் தப்பினார் மாம்ஸ். அதற்குள் போலீஸ் வந்து, கத்தி பார்ட்டியை பொடங்கையில் அடித்து இழுத்துப் போனது. சுனிதா வந்தவளோடு ஆஸ்பத்திரி பறக்க, மானா பொறி கலங்கி நின்றார்.

''அவ மகளிர் விடுதலை அமைப்புல இருக்காப்பா... இந்த மாதிரி எதாவது கேஸ் வந்துட்டே இருக்கும். சொன்னா கேக்க மாட்டேங்குறா... அதை விடு. 'ஆடுகளம்’ இருக்கா?'' என்றார் லிங்கம்.

பதறித் தெறித்து ஓடிவந்துவிட்டார் மானா!

திவ்யா விஷயத்தில் செந்திலுக்கு நடந்தது வேறு. ஆலயம்மன் கோயிலில் திருவிழா என தி.நகர் பாண்டி பஜாரில் ஏகப்பட்ட டிராஃபிக். கோயிலில் கச்சேரி. டிராஃபிக்கில் வெந்து, 12-பியில் ஊர்ந்தபடி பார்த்தால், ஆர்கெஸ்ட்ரா மேடையில், 'டாடி மம்மி வீட்டில் இல்ல, தடை போட யாரும் இல்ல’ என சுடிதாரில் ஸ்டெப்ஸ் போட்டபடி பாடிக்கொண்டு இருந்தவள் திவ்யா. திடுக்கிட்ட செந்தில் ரன்னிங் பஸ்ஸில் இருந்து குதித்து விழுந்து எழுந்தான். பக்கத்தில் ஓடிப் போய் பார்த்து கன்ஃபார்ம் பண்ணினான். மேடை முன்னால் போய் நின்று அவளையே அடிச்சுப் பார்த்தான். செந்திலைப் பார்த்த திவ்யா, ஒரு செகண்ட் ரிதம் மிஸ் பண்ணி,  மறுபடி பாடத் தொடங்கினாள். அடுத்தடுத்து, 'அடடா மழைடா அட மழைடா’, 'மாம்பழமாம் மாம்பழம்’, எனக் குத்தியெடுத்தாள் திவ்யா. மேடையில் அறிவிக்கும்போதே. குத்து திவ்யா என டார்ச்சர் பண்ணினார்கள். இரவு வீட் டுக்கு வந்து படுத்த செந்தில், கனவில் கரு ணாஸ்-கிரேஸ் மாதிரி அவனும் திவ்யாவும் 'காதல் மீட்டர்’ நிகழ்ச்சியில் தம்பதியராய் ஜெயித்து, கிஃப்ட் வாங்கக் கண்டான்.

றுநாள் 'மெட்ரோ வாட்டர் வரு தாங்க?’ என்ற மொக்கை ரீசனை வைத்து, திவ்யா வீட்டுக்குப் போனான் செந்தில். குடும்பமே சூப்பர் சிங்கர்ஸ் பார்த்துக் கொண்டு இருந்தது.

''லிங்கம் சார்.''

''வாப்பா...''

''இல்ல சார்... மெட்ரோ வாட்டர் வரு தான்னு செக் பண்ணுங்களேன்.''

''வருதேப்பா...''

''இப்போ செக் பண்ணுங்களேன் சார்...''

''இப்பவும் வருதுப்பா...'' எனக் குரல் கொடுத்தார் ஆன்ட்டி.

''கொஞ்சம் குடிக்கத் தண்ணி கிடைக் குமா..?''

''திவ்யா தண்ணி குடும்மா...''

தண்ணியோடு வந்தாள் திவ்யா.  குடித்து விட்டுத் தந்தவன், ''டாடி மம்மி வீட்டில் இல்லே... தடை போட யாரும் இல்ல'' எனப் பாடினான். திவ்யா மார்க்கமாகப் பார்க்க, ''நேத்து பார்த்தேங்க... உங்க வாய்ஸ் சூப்பர். ஸ்ரேயா கோஷல் பிச்சை வாங்கணும். ஏ.ஆர். ரஹ்மான்ட்ட உங்க டெமோ சி.டி-யைக் கொண்டுசேர்க்க வேண்டியது என் பொறுப்பு. பை தி பை 'களவாணி’ல ஃபர்ஸ்ட் நான்தான் நடிக்க வேண்டியது. மிஸ்ஸாகிருச்சு... ட்ரை பண்ணிட்டு இருக்கேன்...'' என்றான். சட்டென்று சிரித்த திவ்யா, ''தேங்க்ஸ்...'' என்றாள்.

''உங்க நம்பர் தர முடியுமா..? ச்சும்மா நல்ல ஃபார்வர்டு எஸ்.எம்.எஸ் வந்தா, அனுப்பத் தான்...''

''நாளைக்குத் தர்றேன்...'' என்றவள், உள்ளே ஓடிவிட்டாள்.

''யெஸ்ஸ்ஸ்...'' என செந்தில் முட்டிக்காலை உயர்த்தி, முழங்கையைக் காற்றில் குத்தி, ஆர் யாவை இமிடேட் பண்ணினான்.

கி ஃபாலோ-அப்பில் திரிந்த ஷம்மிக்கு அந்த ஒற்றை வரித் தகவல் முதலிலேயே கிடைத்து இருக்கலாம். சிட்டி சென்டர் ஏர்டெல் ஸ்டாலில் சர்வீஸ் கேர்ளாக இருக்கிறாள். ஈஸ்ட் மென் கலர் ஐடியாவோடு பால்கனியில் எக்ஸர் சைஸ் பண்ணி பாடியை முறுக்கிக் காட்டினான் ஷம்மி. பூந்தொட்டிக்குத் தண்ணீர் ஊற்ற வந்த மகி, அவனைக் கண்கொண்டு பார்த்து அத்தனை அன்பாகப் புன்னகைத்துப் போனாள்.

பைக்கில் கோடம்பாக்கம் பாலத்தில் ஏறியவன் அதிர்ந்தான். 17வி-ல் ஃபுட்போர்டு அடித்துக்கிடந்த பையன்களில் ஒருத்தி மகி என்ற மஹேஸ்வரி.  கிட்டத்தட்ட நந்தனம் ஆர்ட்ஸ் பையன் மாதிரி ஜன்னலில் தொங்கிக்கொண்டு இருந்தாள். ''ஹலோ... பார்த்துங்க... பார்த்து'' எனப் பதறி னான் ஷம்மி. ''ஹேய்... ஹூஸ் த ஹீரோ ஹூஸ் த ஹீரோ '' என ஜாலி கூச்சல் போட்டாள் மகி. சிக்னலில் அவள் குதிக்க, அவனும் நின்றான்.

''நான் பயந்துட்டேங்க...'' என்றான் ஷம்மி.

''அதனாலதான் குதிச்சேன். எங்கே போறீங்க?''

''மவுன்ட் ரோட்...''

''நானும்தான். அப்போ இறங்குங்க...'' என்றாள்.

''ஏன்..?''

''அட... இறங்குங்க பாஸ்...'' என்றவள், சட் டென்று பைக்கை வாங்கி ஏறி அமர்ந்தாள். பதறி அவன் பில்லியனில் தொற்றிக்கொள்ள, அதிர அதிர... அவன் அலற அலற ஓட்டினாள். கிட்டத் தட்ட மவுன்ட் ரோட்டில் பைக்கை பிடுங்கிக் கொண்டு ஓடினான் ஷம்மி!

ந்த அடிதடிக்குப் பிறகும் சுனிதாவைக் கவர ஃபெமினிஸ்ட் ஆகத் துணிந்தார் மானா மாம்ஸ். பெண்ணிய உலகப் பட டி.வி.டி-க்களாக சுனிதாவுக்குக் கொடுத்தார். ''ஆக்சுவலி அருந் ததி ராய், இந்த மாவோயிஸ்ட் மேட்டர்ல...'' என ஏதேதோ டிரை பண்ணினார். அடுத்த வாரத்தில் ஒருநாள் சாஸ்திரி பவன் எதிரில் ஓர் ஆர்பாட்டத்தில் சுனிதாவைப் பார்த்தார். ஆக்ரோஷமாக கோஷங்கள் போட்டுக்கொண்டு இருந்தாள். கூடப் போய் நின்று மானாவும் கோஷம் போட்டார். ஆர்ப்பாட்டம் முடிந்து சுனிதாவை ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்து வந்தார். ''ஆங் சான் சூ கி ரொம்ப போல்டுல்ல...'' என்றார். கட்டம் போட்ட பெரிய கர்ச்சீப் எடுத்து நிதானமாக முகம் துடைத்த சுனிதா, ''உங்க ஃபேமிலில எத்தனை பேரு மானா..? நீங்க ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலை? டெய்லி காலைல ஏன் தப்புத் தப்பா யோகா பண்றீங்க?''- படபடவெனக் கேள்விகளால் போட்டுப் பொளந்தாள்.

வீட்டுக்கு அழைத்துப் போய் அவளே காபி போட்டுக் கொடுத்தாள். 'பூகம்பத்துக்குள் ஒரு பூ’ என ஃபீல் பண்ணிக்கொண்டு இருக்கும் போதே, வீட்டுக்குள் நுழைந்தார் ஒருவர். கிட்டத்தட்ட மானா வயசுதான் இருக்கும்.

வர் கண்களில் கேப்சூல் வடிவத்தில் புரட்சி எரிந்தது. அயன் பண்ணாத, ஆனால்... செம காஸ்ட்லியான ஜீன்ஸும், டி ஷர்ட்டும் போட்டு இருந்தார். சின்னக் கொண்டை காமெடியாக இருந்தது. அடிக்கடி இடது கழுத்தைச் சுளுக்கிக்கொண்டே இருந்தார். நரம்புத் தளர்ச்சியாக இருக்கலாம்.

''மிஸ்டர் மானா... இவர்தான் ஷங்கர். என் வுட் பீ. நான் கல்யாணம் கட்டிக்கப்போறவர்...'' என்றாள் சுனிதா.

''ஹலோ சார்...'' - பல்பு ஃபியூஸாகி, பலூன் காற்று போய், பலவீனமாய் புன்னகைக்க முயன்றார் மாம்ஸ்.

''ஹல்ல்ல்லோ..!''

''என்னோட சிந்தனைகள், லட்சியங்களுக்கு இவர்தான் கரெக்ட்டா மேட்ச் ஆனார். அதனாலதான் கல்யாணத்துக்கே சம்மதிச்சேன்'' என்றபோது அதுவரை காணாத சுனி தாவை மானா கண்டார்!

குத்து’ பாடகி திவ்யா, ஹீரோ செந்திலுக்கு மொபைல் நம்பர் தந்தாள். ஆனால், அவளுக்கு டாப்-அப் கார்டு போட்டு மாளவில்லை செந்திலுக்கு. திவ்யா தன் கச்சேரிகளுக்கு டிரைவராக செந்திலைப் பயன்படுத்தினாள்.  திவ்யாவின் மேடைகளில் கிருஷ் சாயலில் இருந்த பாடகனிடம், ''இது செந்திலு. எதிர் ஃப்ளாட்ல இருக்குது. சினிமா ஆசையில திரியுது. கச்சேரிக்கு எனக்குத் துணையா வருது'' என எக்கச்சக்க துது துது துக்களைப் போட்டதில், செந்தில் ஸ்பாட் அவுட்.  

தொடர்கதை : ஒன்று

கியைப் பற்றிய முக்கியமான தகவலை ஷம்மி கேள்விப்பட்டான். அது... அவள் ஷிஹான் ஹூஸைனியிடம் கராத்தே கற்று வருகிறாள் என்பது. 'நீ நிச்சயமா ஐ.பி.எஸ் ஆகணும் மகி’ அதுதான் என் ஒரே ட்ரீம்! என்று பெப் டாக் கொடுத்துவிட்டு, பேக் அடித்த ஷம்மி செய்வதறியாது, திவ்யாவை ஃபாலோ பண்ணலாமா என யோசிக்கத் தொடங்கினான்... துதுதுதுது!

ப்போதுதான் அது நடந்தது. ஓர் இரவில் ஷோபியா வீட்டைவிட்டு ஓடிப்போனாள். அதுதாங்க 'களவாணி’ ஓவியா சாயலில் இருப்பாளே அந்த ப்ளஸ் டூ பொண்னு. முனுஷின் கரெக்ஷன். குடும்பத்தின் கடைக்குட்டி.

அதிர்ச்சியான ஒரு விஷயம்... சோபியா ஓடிப்போனது ஷங்கருடன். அதுதான் சுனிதாவின் வுட் பீ. அட, அந்தப் புரட்சிப் பார்ட்டிங்க!

- இன்னும் ஒன்று... , ஒவியங்கள் : ஸ்யாம்