Published:Updated:

கன்னியம்மாள் - சிறுகதை

கன்னியம்மாள் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
கன்னியம்மாள் - சிறுகதை

க.வீரபாண்டியன் - ஓவியங்கள்: ஸ்யாம்

கன்னியம்மாள் - சிறுகதை

க.வீரபாண்டியன் - ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
கன்னியம்மாள் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
கன்னியம்மாள் - சிறுகதை

“இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிச்சுக்கிறது என்னன்னா... நம்ம ஊரு முன்னாள் பெரசிடென்ட் பெரியசாமி, இன்னிக்குக் கோழிகூவுற நேரத்துல காலமானாரு... அன்னார் தகனம், இன்னிக்கி சாயங்காலம் 5 மணிக்கு நம்ம ஊரு கெழக்க இருக்கிற குடியானவுக சுடுகாட்டுல நடக்குமுங்கோ...ஓஓஓ...’’

பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்காலம் முடிந்து 15 வருடம் ஆகியிருந்தும், அதற்குப் பிறகு மூன்று பேர் அந்தப் பதவியை அலங்கரித்திருந்தாலும்கூட இன்றைக்கும் அதியங்குடி கிராமத்துக்காரர்களின் பிரசிடென்ட் பெரியசாமிதான். கன்னியம்மாள் மாதிரியான சிலருக்கு `பெரசன்ட்டு’. `பிரசிடென்ட் பெரியசாமி இறந்துவிட்டார்’ என்று பன்றிமலையில் பட்டு எதிரொலிக்கும் ஊர் தண்டல் பாலுவின் குரல், காலையில் மாட்டுத் தொழுவத்தில் சாணியை அள்ளிக்கொண்டிருந்த கன்னியம்மாளுக்கு பகீரென்று இருந்தது. வாழைமரத்தின் கிழிந்த இலைகள் காற்றில் படபடத்தன. உடல் பதற, தொழுவத்தை விட்டு வெளியே வந்தாள்.

இன்றைய அதிகாலையும் எல்லா நாளும்போலதான் விடிந்தது. அதிகாலை 4:30 மணியிலிருந்து வேலை செய்துகொண்டிருக்கும் கன்னியம்மாளுக்கு, பிரசிடென்ட்டின் மரணச் செய்தியைக் கேட்டதிலிருந்து நெஞ்செலும்புகளுக்கிடையில் கூரான கத்தியைவிட்டு இதயத்தைக் குத்திய மாதிரி வலித்தது. முந்தைய இரவில் இப்படியொரு கெட்டசெய்தி வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லாதது இன்னும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அறிகுறிகள் தெரிந்திருந்தால் ஆசுவாசப்படுத்திக்கொள்ள மனது தயாராயிருக்கும். அந்தக் கொடுப்பினையும் இல்லாமல்போனது. அகால மரணம்.

கன்னியம்மாள் - சிறுகதை

காதில் விழுந்த சொற்கள், அதிகாலையின் கருநீல வானத்தை மறுபடியும் இருளுக்குள் இழுத்துப்போனது. அவள் சேர்த்துவைத்த செல்வம் மொத்தமும் ஒரு காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் சென்றதைப்போல, வீடும் வாசலும் தோட்டமும் தீக்கிரையாகி மொத்தச் சொத்தும் எரிந்து சாம்பலாகி நாசமானதைப்போல பேரழிவின் உணர்வில் மனம் சிக்கித் தவித்தது. கன்னியம்மாளின் நெஞ்சில் வலியெடுக்க, நடுங்கிய கைகளால் அமுக்கிவிட்டு வலியின் அழுத்தத்தைக் குறைக்க முயன்றாள்.

அவளுக்கு வாழ்க்கையில் பிடிப்பு வருவதற்கு பிரசிடென்ட் ஒரு காரணம். ஒரு காரணம் மாத்திரமல்ல, முழுக் காரணமும் அவர்தான். பணப்பிரச்னைகள் வரும்போதெல்லாம் பிரசிடென்ட்டிடம் ஓடுவாள். அவரும் அவள் கேட்டவுடன் சின்ன மறுப்புகூடச் சொல்லாமல் ரூபாய் நோட்டுகளை எச்சில் தொட்ட விரல்களால் சர்சர்ரென எண்ணி அனுப்பிவிடுவார். ``கன்னியம்மாளுக்கு என்ன... கொடுத்துவெச்சவ. பெரசன்ட்டு இருக்காரு” என்று பேசுபவர்களின் வார்த்தையில் இருக்கும் கேலி கேலியல்ல; அவளையும் அவரையும் சேர்த்துவைத்துப் பேசும் வசைச்சொல்.

அவள் காதுபடப் பேச ஆரம்பித்த பிறகுதான், அவள் கண்ணீரோடு ராசாத்தியிடம் மட்டும் அந்த ரகசியத்தைச் சொன்னாள். ``இது நம்ம ரெண்டு பேரத் தவிர வேற யாருக்கும் தெரியக் கூடாது. யார்கிட்டயும் சொல்லிராத ராசாத்தியக்கா” மிளகாய் பிடுங்க மொக்கைத்தேவர் தோட்டத்துக்குப் போய்க்கொண்டிருக்கும்போது அந்தக் கருக்கலில் அவர்கள் இருவரையும் தவிர அருகில் யாரும் இல்லாத சமயம் பார்த்து ராசாத்தியிடம் சொல்லிவிட்டாள். காலத்துக்கும் அடைபட்ட காய் வெடித்துப் பஞ்சாய்க் காற்றில் பறந்து மிதந்தாள் கன்னியம்மாள். 

பக்கத்தில் `உங்கள் ரகசியத்தை நானும் கேட்டுவிட்டேன்’ என்பதைப்போல கருவேலமரத்தின் பாதையில் நீண்டிருந்த கிளை ஒன்றின் முனையில் ஓணான் தன் தலையை உயர்த்தி, மஞ்சள் கண்களை உருட்டி உருட்டிப் பார்த்தது. கன்னியம்மாள், ராசாத்தியைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். ராசாத்தியும் ``நான் எதுக்குடி ஆத்தா இதைச் சொல்லப்போறேன்!” ரகசியத்தைத் தனக்குள்ளே அந்த நொடியிலேயே புதைத்துவிட்டவளாகப் பதில ளித்தாள். ராசாத்தி பக்கத்துக் காட்டுக்குள் புகுந்து இரண்டு மூன்று செடிகளை இணுங்கி வந்தாள். காய்ந்த தோலை உரித்து உள்ளிருந்த பச்சைப்பயற்றை வகுந்து கன்னியம்மாள் கையில் கொடுத்து, தானும் வாயில் போட்டு மென்றாள்.

``ஏய் பொண்ணு... நான் களையெடுக்கப் போயிட்டு வர்றேன். நீ மறக்காம ரெண்டு மாட்டையும் வள்ளியப்பன் தோட்டம் பக்கமா பத்திட்டுப் போ” என்று கன்னியம்மாள் தன் மருமகள் பழனியம்மாளைப் பார்த்து வேலைக்குக் கிளம்பும் அவசரத்தில் படபடவெனச் சொல்லிவிட்டுக் கிளம்பத் தயாரானாள். ``ஆங்... சரித்தே” வீட்டுக்குள்ளிருந்து மெள்ள  வெளியில் வந்து விழுந்தது பழனியம்மாளின் குரல். `ஆங், சரி, சரித்தே, சரி மாமா, செஞ்சுடுறேன், பண்றேன், பார்த்துக்குறேன், கொண்டார்றேன், தந்துடுறேன்,’ இவ்வளவுதான் அவள் பதில். அவளின் பேச்சு மட்டும் சுருக்காக இருக்கவில்லை; ஆளும் சின்னதாய்ச் சுருங்கி, நறுங்கி சவலைப்பிள்ளைபோலதான் இருப்பாள்.

மாமியார் கன்னியம்மாள் குட்டையாக, கறுப்பாக இருந்தாலும், அவளின் கண்கள் துறுதுறுவென இருக்கும். அவள் நடையில் இருக்கும் பரபரப்பு, உடல் வளைந்து மடிந்து நெளிந்து செய்யும் வேலையை விறுவிறுவென இயந்திரம்போலச் செய்து முடித்துவிடும். அதைப் பார்க்கிறவருக்கு, `அவ தெறமையும் வேகமும் யாருக்கு வரும்?’ என்று அங்கலாய்ப்பதே வேலை. கன்னிவாடி, தருமத்துப்பட்டி, ஒட்டன்சத்திரம் வரைக்கும் அவளுக்கு இந்த நல்லபெயர் இருந்தது. மிளகாய், தக்காளி, வெண்டை, அவரை, பாசிப்பயறு, நெல், பருத்தி, வேர்க்கடலை, எள், கனகாம்பரம், மல்லிகை, சம்பங்கி, சாமந்திப் பூ என எதைப் பயிரிட்டிருந்தாலும், விதை தெளிப்பது, களை எடுப்பது, காய் பிடுங்குவது, பூப்பறிப்பது என எதுவாக இருந்தாலும் கன்னியம்மாள் அங்கு இருப்பாள்.

இந்த ஊரில் கன்னியம்மாளுக்கு இணையாக போலியமனூர் மாரியம்மா, சுரைக்காய்ப்பட்டி ராசாத்தி, மேட்டுப்பட்டி மூக்கம்மாதான் இப்படி எந்த நேரத்திலும், எல்லா வேலைக்கும் சரியாக இருப்பார்கள். இந்த நால்வரில் கன்னியம்மாளைவிட மற்ற மூவரிடத்திலும் பக்குவமும் லாகவமும் கொஞ்சம் குறைவுதான். நூல் பிடித்த மாதிரி ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் செடிகளின் வரிசையை வைத்தே `அவை கன்னியம்மாள் நட்டவை!’ எனச் சொல்லிவிடலாம். அவள் விதை தெளித்தால் அந்தச் செடி செழித்து, பருத்து வளரும். மண்ணிலும் விதையிலும் அவளின் வீரியமும் ஆழமாக இறங்கியிருக்கும். விளைச்சலில் எந்தக் குறைச்சலும் இருக்காது. வழக்கத்தைவிடக் கூடுதலாக ஒன்றிரண்டு கிலோ காய்த்துக் குலுங்கும். அவள் கைராசி அந்த மாதிரி. ``எந்த சாமிகிட்ட வரம் வாங்கி அவ அம்மாக்காரி முந்தி விரிச்சாளோ, மண்ணுல அவ தொட்டதெல்லாம் காய்ச்சுக் கொட்டுது” என்று அவள் காதுபடவே பேசும் ஊரைப் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல், ஏர்க்கலப்பை சுமந்த மாடுபோல நிற்காமல் இயங்கிகொண்டே இருப்பாள்.

பிரசிடென்ட்டும் அவர் ஆத்தாளும் ``கன்னியம்மா, மறக்காம கோழிகூப்பிட வந்துருடி...” என்றால் கன்னியம்மாளும் ``மடையத் தொறந்துவிட்டா மண்ணுல ஓடாம மானத்துலயா பாயப்போகுது தண்ணி. வாராம எங்க போகப்போறேன்? வந்துர்றேன் ஆத்தா” என்று சொல்லிவிட்டுச் சென்றால், கீழ்வானத்தில் வெள்ளி முளைக்கும் நேரத்துக்கெல்லாம் வந்துவிடுவாள். கோழியையும் சேவலையும் அவள் வந்து எழுப்பிவிட வேண்டும்.

ஒருமுறை அவள் முகத்தில் விழித்துச்சென்ற காரியம் கைகூடியதிலிருந்து வீட்டில் எந்த நல்லது கெட்டதுக்கும் அவளைக் காலையில் வரச்சொல்லி அவள் முகத்தில் விழித்துதான் பிரசிடென்ட் அந்தக் காரியத்தைத் தொடங்குவார். ஊர்க்காரர்களுக்குத் தெரியாமல்தான் வரச்சொல்வார்கள். இல்லையென்றால், `காலனிக்காரி மொகத்துல முழிச்சு எந்திரிக்கிற பெரசிடென்ட்டுனு வெளியில சொல்லிக்கிட்டு நெஞ்சை நிமித்திக்கிட்டு அலையாத’ எனக் கேவலமாய் ஏச்சு வாங்குவது தவறாது.

அவள் கைராசியைப்போல முகராசியும், நல்ல காரியங்களில் ஈடுபடும் முன்பு நல்ல சகுனமாக இருந்தது. வெயிலின் கதிர் பட்டு மினுக்கும் அவளின் கறுப்புத் தோலும், வட்ட முகமும், சுடர்விடும் கண்களும், வரிசை மாறாத கருமை கலந்த வெண்பற்களும், கருஞ்சிவப்பு நிறத்தில் தடித்த உதடுகளும், ரெட்டை நாடியும் முகத்தில் இயல்பைவிட உடல் வனப்பைக் கூட்டிக்காட்டும். அவள் குமரியான சமயம் `மதுரை மீனாட்சி கணக்கா இருக்கா’னு ஊரார் வாழ்த்திச் சொன்ன சொல்லை இன்றும் நிரூபிப்பதுபோல இருந்தது அவளின் மங்களகரமான அழகு. ரவிக்கை போடாத சேலையில் அறுபது வயதை நெருங்கிக்கொண்டிருந்த அவளின் உடல் இன்னும் கிழடு தட்டாமல் முறுக்கேறிக் கிண்ணென்று இருந்தது. கழனிகளில் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலையில் கூடிநிற்கும் வேகமும் செய்நேர்த்தியும் `எப்போதும் கிழவியாக மாட்டாள்!’ என்று சொல்லவைக்கும் அந்த ஊர்ப்பெண்களில் எவருக்கும் வாய்க்காத உடல்வாகு.

அவள் வரவுசெலவு எல்லாம் பிரசிடென்ட் வீட்டில்தான். யார் தோட்டத்தில் வேலை செய்தாலும் வரும் கூலியில் ஐந்து ரூபாயோ, பத்து ரூபாயோ மட்டும் தன் மகனிடம் அல்லது மருமகளிடம் கொடுத்துவிட்டு மீதிப்பணத்தை பிரசிடென்டிடம் கொடுத்துச் சேர்த்துவைப்பாள். அவசர ஆத்திரத்துக்கு அவரிடமிருந்து வாங்கிக்கொள்ளலாம். ஆனால், எவ்வளவு தொகை கொடுத்துவைக்கிறோம், என்ன தேதியில் எவ்வளவு வாங்கினோம், எவ்வளவு பணம் மீதி இருக்கிறது என்ற விவரம் எதுவும் அவளுக்குத் தெரியாது. `கொடுத்துவைப்பது மட்டுமே தன் கடமை. மற்றதை பிரசிடென்ட் பார்த்துக்கொள்வார்’ என்பது அவனின் அனுமானம். பிரசிடென்ட், அந்தப் பதவியில் இருந்த நாள்கள் என்றில்லாமல் இன்று வரை ஊரில் எல்லா விவகாரங்களையும் தானே தலைமேல் போட்டுக்கொண்டு கவனிக்கவேண்டும் என்ற தோரணையில் வலம்வந்தார். கன்னிவாடிப் பேரூராட்சிக்குப் போட்டியிட்டுத் தோற்று, காசு  பணம், சொத்து சுகங்களை இழந்திருந்தாலும், அந்த ஊரிலிருந்து அரசாங்கம், அரசியல் சம்பந்தமாக எது நடந்தாலும் பிரசிடென்ட் தலையீடு இல்லாமல் நடப்பதில்லை.

நெடுஞ்சாலை போடுவதற்காக சர்வே செய்து டேப் வைத்து அளந்ததில், கன்னியம்மாளின் வீடும் வரைபடத்துக்குள் வந்தது. கன்னியம்மாள், தான் இந்த மண்ணில் பிறந்ததற்கும் வாழ்வதற்கும் ஆதாரமாக இருந்த வீட்டை எந்தக் காரணத்துக்காகவும் இழக்கத் தயாராக இல்லை. தன் வீட்டை இழப்பது அவளையே இழப்பதற்குச் சமமாகக் கருதினாள். `தலைமுறை தலைமுறையாய் விருத்தியாகி வந்த வம்சத்தை இழப்பது’ என்று தன் அழுகையிலும் முனகலிலும் மன்றாடிப் பார்த்தாள். அவள் புருஷனும் மகனும் எங்கு சென்று முறையிடுவது எனத் தெரியாமல் நிலை கலங்கியவர்களாக இருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கன்னியம்மாள் - சிறுகதை

கன்னியம்மாளும் மற்றும் சில காலனிக்காரர்களும் குடியிருந்த வீட்டையும், சோறு போடும் துண்டு நிலத்தையும் சாலைக்காகக் கொடுக்க மறுத்து முரண்டுபிடித்தபோது, தாசில்தாரும் ரெவின்யூ இன்ஸ்பெக்டரும் பிரசிடென்ட்டை வைத்துதான் இவர்களைச் சமாதானப்படுத்தி ஒப்புதல் கையெழுத்து வாங்கினர். எல்லோருக்கும் ஊருக்கு வெளியே ஐந்து சென்ட் வீட்டுமனைப் பட்டா கொடுத்தனர். கன்னியம்மாளுக்கும் நான்கைந்து காலனிக்காரர்க ளுக்கும் மட்டும் சற்றுத்தள்ளி தூரமான இடத்தில் தந்தனர்.

கன்னியம்மாள் குடிசை போட்டுக்கொள்ளவும், வீடு பறிபோன சோகத்தில் படுக்கையில் விழுந்த அவளின் கணவன் இறந்தபோது அடக்கம் செய்யும் செலவுக்கும் பிரசிடென்ட்டுதான் பணம் கொடுத்து உதவினார். ``மொதல்ல ஒம் மகளுக்கு காலேஜ் ஃபீஸைக் கட்டு. நெலத்துக்கான பணம் வந்ததுக்குப் பெறகு மத்ததைப் பாத்துக்கலாம்” என்று  வலியவந்து பணம் கொடுத்தார். சில மாதங்களுக்குப் பிறகு எல்லோர் தரப்பிலும் அரசாங்கத்திடம் பேசி அவரே நஷ்ட ஈடு வாங்கித் தந்தார். அப்போது ஆரம்பித்த வரவுசெலவு, கன்னியம்மாளுக்கு இப்போது வரை பிரசிடென்ட்டுடன் தொடர்ந்துவருகிறது. தன் மகனிடமும் மருமகளிடமும் `பெரசன்ட்டுகிட்ட இருக்கிறது பேங்குல கெடக்கிறது மாதிரி’ என்று சொல்லிவைத்தாள்.

மகனும் மருமகளும், அவள் என்ன வேலை பார்க்கிறாள், என்ன கூலி வாங்குகிறாள், வாங்கிய கூலியை என்ன செய்கிறாள் என்று எந்த விவரத்தையும் கேட்பதில்லை. தன்னைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய அய்யாவையும் அம்மாவையும் கணக்குக் கேட்பதையோ, என்ன செய்கிறார்கள் எனப் பார்ப்பதையோ சடையாண்டி அவமானமாகக் கருதினான். அவர்களுக்கும் பொண்டாட்டி பிள்ளைகளுக்கும் உழைத்துச் சம்பாதித்துச் சோறு போடுவது தன்னுடைய கடமை என்று வாழ்கிறவன் சடையாண்டி. தன் அம்மா செய்யும் வரவு செலவுகள் எதுவும் அவனுக்குத் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டும் என எப்போதும் அவன் பெரிதாக ஆர்வம் காட்டியதுமில்லை.

``என்ன ஏதுன்னு கணக்கு வெச்சுக்கடி. நாளைக்கு ஏதாவது சிக்கல்னா நடுவீதியில நிக்கக் கூடாதில்லயா?’’ பச்சைமிளகாயை வெடுக் வெடுக்கெனப் பிடுங்கிக்கொண்டிருந்த ராசாத்தி சொன்னபோது ``அதையெல்லாம் நம்ம பெரசன்ட்டும் அவுக ஆத்தாளும் சரியா பார்த்துக்குவாக” என சேலைத்தலைப்பை சாக்குப்பையைப்போல வைத்துக்கொண்ட கன்னியம்மாள், பிடுங்கிய மிளகாயைத் தன் மடியில் போட்டுக்கொண்டே அவள் வாயை அடைத்துவிடுவாள். மிளகாய் பிடுங்குவதில் காட்டும் வேகம் ராசாத்தி பேசத் தொடங்கியதும் இன்னும் கூடி, அவளைக் கடந்து இரண்டு வரிசையை முடித்து கன்னியம்மாள் முன்னால் போய்க்கொண்டிருப்பாள்.

``இப்படிக் குடுத்துவெக்கிறதை விட்டுட்டு, நம்ம நாடார் கெழவிகிட்ட சீட்டு கட்டலாம். அது கணக்கா சீட்டுல எழுதிவெச்சு வரவுசெலவு பார்க்கும்” கன்னியம்மாள் மீதிருந்த அக்கறையில் ராசாத்தியும் மிளகாய் பிடுங்குவதில் வேகம் கூட்டி அவளிடம் சொன்ன அறிவுரையை, கன்னியம்மாள் காதில் போட்டுக்கொள்ளவில்லை. ``பார்த்துக்கலாம் ராசாத்தியக்கா!” என்று சொல்லி மீண்டும் பத்துச் செடிகள் முன்னால் போய் மிளகாய் பிடுங்கித் தன் மடியில் போட்டு நிறைப்பதில் கவனம் வைத்தாள். மிளகாயின் கார நெடி உடல் முழுக்கப் பரவி, மூக்கில் நமைச்சல் எடுத்தது. நமைச்சலை விரட்ட புறங்கையை வைத்துத் தடவிக்கொடுக்க, மூக்கிலிருந்து நீரொழுக ஆரம்பித்தது. வேலை வேகமெடுத்த கொஞ்ச நேரத்தில் அதுவும் வற்றிப்போனது.

இறுதியில் மடியில் நிரம்பி வழியும் மிளகாயைக் கூடையில் கொட்டி எடை போட்டால், வழக்கம்போல அன்றைக்கும் மற்ற எவரையும்விட அவள் கூடை எடைதான் அதிகமாக இருந்தது. கூலியை வாங்கிக்கொண்டு அங்கு இருக்கும் எல்லோருக்கும் பெருமிதம் ததும்பும் முகத்தைக் காட்டுவாள். இடுப்பில் செருகியிருக்கும் சேலையில் கொஞ்சம் எடுத்து மடித்த ரூபாய்த்தாள்களை வைத்து பீடி சுருட்டுவதுபோலச் சுருட்டி மறுபடியும் செருகிக்கொள்வாள். வாய்க்காலில் பாய்ந்தோடும் நீரை இரு கைகளாலும் அள்ளி முகத்தையும் கழுத்தையும் கைகளையும் கால்களையும் கழுவிவிட்டு நீரில் நனைந்த சேலைத்தலைப்பை வைத்துத் துடைத்துவிட்டுக்கொள்வாள்.

சுருங்கிய, பழுத்த மிளகாய்களை `வீட்டு உபயோகத்துக்கு ஆகும்!’ என ஒரு கை அள்ளி சேலைத்தலைப்பின் நுனியில் போட்டு பந்தைப்போல முடிந்து  எடுத்துக்கொண்டு ஓடையில் இறங்கி வரப்புகளில் ஏறி பிரசிடென்ட் வீட்டை நோக்கி நடைபோடுவாள். எப்போது போனாலும் போகும்போது வேப்பங்குலையை ஒடித்து ஒரு கட்டு கொண்டுபோய் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் மாட்டுத்தொழு வத்தின் ஓரத்தில் இருக்கும் வெள்ளாடு மூன்றுக்கும் பிரித்துப் போடுவாள். பிரசிடென்ட் ஆத்தா கேட்டாலும், கேட்காவிட்டாலும் அந்த ஆடுகளுக்கு அந்த மேட்டுக்காட்டின் வழியே வரும் சமயம் கண்ணில் அகப்படும் தீவனத்தை அள்ளி வந்து போடுவதில் அவளுக்கொரு மனத்திருப்தி.

எந்தத் தோட்டத்தில் கூலி கொடுத்தாலும் சாயங்காலமானால் அவளை பிரசிடென்ட் வீட்டில் பார்த்துவிடலாம். மழை இல்லாமல் துளியும் ஈரமற்ற வறண்ட காற்று வீச, வானம் பார்த்துக் கிடக்கும் பூமியில் பச்சையெனச் சொல்ல சில கருவேலமரங்களைத் தவிர வேறில்லை என்றொரு காலம் வரும். வெயிலின் காலம். கண்களைச் சுருக்கிச் சுருக்கிப் பார்க்கும் மனிதர்களின் நடமாட்டமும் குறைந்த காலம். வயிற்றுப்பாட்டுக்குக் குடும்பம் குடும்பமாய் ஊரை விட்டு வெளியேறிப் போவதைத் தவிர போக்கிடம் இல்லை.  கருவேலமரங்கள்கூட வளராத அந்த ஊரின் நிலம், கள்ளிப்புதர்கள் நிறைந்த பொட்டல்காடாய் சூடேறித் தகித்துக்கொண்டிருந்த அந்த நாள்களில் வெளியூருக்கு விறகு வெட்டப் போனாலும் ஊருக்குள் வந்ததும் பிரசிடென்ட் வீட்டை நோக்கித்தான் அவள் மனமும் கால்களும் செல்லும். வெளியூரிலிருந்து வரும்போதே பேரப்பிள்ளைகளுக்குத் தின்பண்டமும் பலகாரமும், வீட்டுக்குக் காய்கறிகளும் மளிகைச்சாமான்களும் வாங்கி வந்ததுபோக மீதம் இருக்கும் பணம் பிரசிடென்ட் வீட்டு இரும்புப்பெட்டியில் கிடந்து உறங்கத்தான் கொடுத்துவைத்திருக்கிறது.

கன்னியம்மாளின் மகன் சடையாண்டி வாங்கி வந்த மாடுகள் ரெண்டும் விலை போகாமல் வீட்டிலேயே இருந்தன. புதிதாக வந்த, இறைச்சிக்காக மாடு விற்பனைத் தடுப்புச் சட்டத்தால் சந்தையில் மாடு விற்க முடியாதபடி கெடுபிடி. சட்டமும் புதிய கெடுபிடிகளும் என்னவென்றும் எதற்காகவென்றும் புரியவில்லை. மாடு ஏற்றிப் போன வண்டிகளைப் பிடித்துக்கொள்வதும், ஆள்களைப் பிடித்து அடிப்பதும் அங்கங்கு நடந்துகொண்டிருந்ததால், வியாபாரம் முற்றிலும் முடங்கி விட்டது. கடந்த நான்கு மாதங்களாக அதற்கான தீனியும், வைத்தியச்செலவும் செய்து கட்டுப்ப டியாகவில்லை.

கன்னியம்மாள் - சிறுகதை

மாட்டுத் தரகனான அவன் போட்ட முதல் மொத்தமும் இழந்து நட்டமானது. இப்போது விற்றாலும் போட்ட முதலீட்டை எடுக்க முடியாத நிலை. கொஞ்ச நஞ்சமல்ல, ஒவ்வொரு மாடும் இருபதாயிரம் ரூபாய். மொத்தம் நாற்பதாயிரம். அதுவும் தேவகோட்டைச் சந்தையில் வட்டிக்கு விடும் மேலூர் செல்லையாவிடம் அதிக வட்டிக்கு வாங்கியிருந்தான். `ஒரு மாதம் வீட்டில் வைத்து நல்ல தீனி போட்டு, கொஞ்சம் எடை கூடியவுடன் பொள்ளாச்சி சந்தையில் நல்ல விலைக்கு விற்றுவிடலாம்’ என, பல திட்டங்களைப் போட்டு வைத்திருந்தான்.

`மாடு விற்று வரும் பணத்தில் பெரிய மகள் செல்விக்குத் தங்கச்செயின் எடுத்துப் போடலாம்’ என நினைத்திருந்தான். அவளும் ஒட்டன்சத்திரத்துக்குக் கல்லூரியில் படிக்கப் போனதிலிருந்து ``கழுத்து மொழுக்கட்டின்னு இருக்குப்பா!’’ என்று சின்னதாகத் தங்கச்செயின் எடுத்துத் தரச் சொல்லி ஊருக்கு வரும்போதும், அவளைப் பார்க்க விடுதிக்குப் போகும்போதும் அழுதுகொண்டிருந்தாள். அது இப்போது முடியாது என்று உறுதியாகிவிட்டது. ``செயின் என்ன செயினு... செல்லையாவுக்கு வட்டியைக் கட்டுறதுக்கு முடியாம இருக்கு. அதுதான் இப்போ கவலையாக்கும்’’ மகளின் காதில்படும்விதமாக தன் சம்சாரத்திடம் எரிந்துவிழுந்தான். மாடுகளுக்குக் காசநோய் வந்த மாதிரி எடை இறங்கி, எலும்புகள் துருத்திக்கொண்டி ருந்தன.

``ஒரு வாரம் தாமதமானாலும் ஊருக்கு நேரா கெளம்பி வந்து `மாட்டைப் புடிச்சுட்டுப் போறேன்’னு நிப்பான். இப்போ இருக்கிற நிலைமைக்கு அதையும் புடிச்சுட்டுப் போவானான்னு சந்தேகம்தான். `வீட்டை எழுதிக் கொடு’னு கேட்பான். எப்படிச் சமாளிக்கிறதுன்னு புரிய மாட்டேங்குது. என்ன செய்யப்போறனோ?” என்று புலம்பியபடி பெருமூச்சு விட்டதை, அடுப்படியில் விறகைத் தள்ளி விட்டுக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்த கன்னியம்மாள், `காலையில மொத வேலையா பெரசன்ட்டைப் பார்த்துப் பணத்தை வாங்கிட்டு வந்து சடையாண்டிகிட்ட குடுத்துக் கடனை அடைக்கச் சொல்லணும்’ என நினைத்துக்கொண்டாள். `எவ்வளவு பணம் நம்ம கொடுத்துவெச்சோம். சடையாண்டிக்கு 40,000 ரூபா தேவைப்படும்னு பேசிக்கிட்டிருந்தான். அவ்வளவு பணம் இருக்குமா?’ என்ற கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டிருக்க, `இந்த முறை பெரசன்ட்டைக் கேட்டுடணும்’ என்று முடிவெடுத்தாள்.

``என்னடி கன்னியம்மா இந்நேரத்துல விடிஞ்சும் விடியாம வந்து நிக்குற... பணம் எதுவும் தேவைப்படுதா?” பிரசிடென்ட் ஆத்தா கேட்டாள். கன்னியம்மாள் வீட்டின் வேலிப்படலுக்கு வெளியே நின்று பேசினாள். பிரசிடென்ட், வீட்டுக்குள்தான் ஏதோ வேலையாக இருந்தார். ஆத்தாளும் கன்னியம்மாளும் வெளியில் பேசிக்கொண்டிருந்தது நன்றாகக் கேட்டது.

``ஆமா ஆத்தா...”

``எவ்வளவு வேணும்?”

``ஒட்டுக்கா எவ்வளவு இருக்கும் ஆத்தா?” இந்த வார்த்தையைக் கேட்டதும் வீட்டுக்குள் இருந்த பிரசிடென்ட்டுக்குச் சுருக்கென்றது. எப்போதும் கேட்டிராத வார்த்தைகளைக் கேட்டபோது மனம் ரசிக்கவில்லை. அவர் போய் இரும்புப்பெட்டியைத் திறந்தார். சில நூறு ரூபாய்த்தாள்கள் தவிர, இவள் பணம் என்று எதுவும் இல்லை. வருவதெல்லாம் அவரின் வரவுசெலவுகளில் கலந்துவிட்டிருந்தன. மனதுக்குள் கணக்கு போட்டபோது கடந்த ஆறு வருடமாக அவள் கொடுத்த மொத்தத் தொகை தோராயமாக ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டுவதுபோலத் தெரிந்ததும் மேற்கொண்டு கணக்குபோடாமல் நிறுத்திக்கொண்டார். அவ்வப்போது பெரும்பாலும் நூறு, இருநூறு என்றும் சில சமயங்களில் ஆயிரம், ரெண்டாயிரம் என்றும் வாங்கிப் போயிருக்கிறாள். அது சொற்பம்தான் என்பதால், அந்தக் கணக்கையும் எழுதவேண்டியதில்லை என மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.

``எனக்கென்னடி தெரியும் நான் எந்தக் கணக்கு வழக்கைக் கண்டேன்?” என்று தனக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பதுபோல் பேசினாள் பிரசிடென்ட் ஆத்தா.

``இரு என் மகனக் கூப்பிடுறேன்” திரும்பி வீட்டுக்குள் கண்களைச் செலுத்தி ``பெரியசாமி... பெரியசாமி... இந்தாய்யா, கன்னியம்மா வந்து நிக்குறா... வந்து என்னன்னு பாரு?’’ அவளின் சத்தம், வீட்டுக்குள் நுழைந்து புழக்கடைக்குப் போய். பின்புறத் தோட்டத்தில் வரப்பை வெட்டி, தோட்டத்துக்குப் போகும் தண்ணீரைப் பாய்ச்சிக்கொண்டிருந்த பண்ணையாள் வரை கேட்டது. கிழவியின் உடல் காட்டும் தளர்ச்சிக்கு நேரெதிராக இருந்தது அவளின் கம்பீரமான குரல். ஒரு பர்லாங் வரை பரந்து கிடக்கும் நிலத்தில் கும்பல் கும்பலாக வேலை பார்த்துகொண்டிருக்கும் ஆள்களை கத்திக் கத்தி அதட்டி வேலை வாங்கிய அனுபவம்தான். முன்பெல்லாம் பெரியசாமியின் மனைவியிடமிருந்துதான் அதிகார மிடுக்கு நிறைந்த அதட்டல்களும் வசைகளும் வரும். அவள் இறந்ததிலிருந்து கிழவி மறுபடியும் தோட்டம், விவசாயம், வெள்ளாமை என இறங்கிவிட்டாள்.

கைவைத்த பனியனும் தோளில் துண்டுமாக ஆத்தாளின் குரலுக்கு வெளியே வந்த பெரியசாமி, வேட்டியை அவிழ்த்துக்க ட்டிக்கொண்டு வந்தவாறு அவளைப் பார்த்து ``என்ன கன்னியம்மா, பணம் வேணுமா?” என்று கேட்டார்.

``ஆமாங்க.”

``எவ்வளவு வேணும்?”

``ஒட்டுக்கா எவ்வளவு இருக்கும்ங்க?

``கணக்கு வழக்கெல்லாம் பார்த்து வெச்சுட்டு வந்திருக்கிற மாதிரிதான தெரியுது. ஒனக்கு எவ்வளவு வேணும் சொல்லு!”

``எனக்கு நாப்பதாயிரம் தேவப்படுதுங்க” கன்னியம்மா தொகையைச் சொன்னதும் பெரிய சாமிக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு பெரிய தொகையை இவள் கேட்பாள் என்று எப்போதும் எதிர்பார்த்திருக்க வில்லை.

``என்னது நாப்பதாயிரமா?!” - திடுக்கிடலின் மூலம் தன் அதிர்ச்சியை அவளுக்கு வெளிப்படுத்திவிட்டு ``இவ்வளவு பணம் திடீர்னு ஒனக்கு எதுக்கு கன்னியம்மா?”

அவள் சடையாண்டியின் பணக்கஷ்டத்தையும் செல்லையாவிடம் வட்டிக்கு வாங்கிய விஷயத்தையும் சொன்னாள்.

``இப்படி திடுதிப்புனு இவ்வளவு பணத்த ஒரேயடியா கேட்டா, நான் எங்க போறது? நீ குடுத்துவெச்சதே அவ்வளவு வருமான்னு தெரியலை. ஒரு வாரம் பொறுத்து வா. என்ன ஏதுன்னு கணக்கு பார்த்துட்டுச் சொல்றேன்.”

``சரிங்க. ஒருவேளை தொகை போதலைன்னா, நீங்கதான் கொஞ்சம் ஏற்பாடு பண்ணித் தரணுங்க” சொல்லிவிட்டு `அடுத்த சனிக்கிழமை வந்து பார்க்கலாம்’ என்ற நினைப்பில் வீடு வந்து சேர்ந்தாள். அவளுக்கும் நாற்பதாயிரம் ரூபாய்  மிகப்பெரிய தொகை என்று தெரியும். தான் கொடுத்துவைக்கும் ஐம்பது, நூறு ரூபாய்கள் அந்த அளவுக்குப் பெரிய தொகையாய்ச் சேர்ந்திருக்குமா என்ற சந்தேகமும் இருந்தது. பணத்தை வாங்கி வந்து கொடுத்துவிட்டுப் பிறகு சடையாண்டியிடம் சொல்லலாம் என்று மகனிடம் எதுவும் சொல்லவில்லை.

`சனிக்கிழமை காலை வீட்டு வேலையை முடித்துவிட்டு, ராமசாமி தோட்டத்தில் கனகாம்பரம் பறிக்கப் போய்விட்டு, சாயங்காலம் பிரசிடென்ட்டைப் போய்ப் பார்க்கலாம்’ என்று வெள்ளிக்கிழமை சாயங்காலமே நினைத்திருந்தாள். சனிக்கிழமை காலை பிரசிடென்ட்டின் இழவுச் செய்தியோடு விடியும் என, கன்னியம்மாள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

கன்னியம்மாள் - சிறுகதை

பிரசிடென்டின் கேதத்துக்குப் போய், பிணத்தைத் தூக்கிப் போகும் சாயங்காலம் வரைக்கும் குளத்தோரத்தில் அலையில் அடித்து ஒதுக்கப்பட்ட தக்கைகளைப்போல காலனிக்காரர்கள் சிலரோடு சேர்ந்து வீட்டு வேலிப்படலுக்கு வெளியே தென்னைமரத்து நிழலுக்கடியில் நின்றுகொண்டிருந்தாள். கரையும் சேராமல் குளத்தின் மையத்துக்கும் செல்ல முடியாமல் குளத்தின் ஓரத்திலேயே அலையில் தத்தளிக்கும் தக்கையைப்போல இருந்தது அவளது மனமும். இழவுக்கு வந்து போனவர்கள், ``பெரியசாமி ஆத்தாளைவிட இவளுக்குதான் பெரிய இழப்பாயிருக்கும்போல” வந்தவர்களில் சிலர் இவளையும் பிரசிடென்ட்டையும் சேர்த்துவைத்துப் பேசினார்கள். கேதத்துக்கு வந்த ராசாத்தி அவள் அருகே வந்தாள்.

``என்ன கன்னியம்மா இப்படியாகிப்போச்சு? இப்ப என்ன செய்யப்போற?”

``பாவம் தங்கமான மனுஷன். இப்படியாகும்னு யாரு கனாக் கண்டா? கெளரவமா தலைநிமிந்து நடந்துக்கிட்டி ருந்த மனுஷன் உசுரு... இப்படி பொசுக்குன்னு ராத்திரி கண்ண மூடித் தொறக்குறதுக்குள்ள இல்லாமப்போயிருச்சே!” சுரம் தாழ்ந்த குரலில் கன்னியம்மாள் பேசி முடித்தபோது தென்னைமரத்திலிருந்து காய்ந்த மட்டை ஒன்று வந்து விழுந்தது. அவளுக்கு திடுக்கென ஆகி உடல் அதிர்ந்து நடுங்கியது.

``எவ்வளவுடி குடுத்துவெச்ச? இப்போ எப்படிக் கேட்டு வாங்கப்போற?”

``ஆத்தாளுக்கு நான் குடுத்துவெச்சது எல்லாம் தெரியும். காரியம் முடியட்டும். வந்து பேசி வாங்கிக்கணும். என் மகன் கடனைக் கட்டுறதுக்கு நாப்பதாயிரம் ரூபாய் தேவப்படும்னு கேட்டேன். கொஞ்சம் கூடக்கொறைய இருந்தா போட்டுத்தாங்கன்னு சொல்லியிருந்தேன். அவ்வளவு பணம் இல்லைன்னா இந்த நேரத்துல யாரைக் கேட்கிறதுன்னுதான் எனக்குப் புரியலை.”

``அந்தக் கெழவிகிட்டயிருந்து மொதல்ல நீ குடுத்துவெச்சத வாங்கப் பாரு” அவளோடு கொஞ்ச நேரம் சேர்ந்து நின்றிருந்துவிட்டு, மதியம் சூரியன் உச்சிக்கு வந்தபோது ராசாத்தியும் கிளம்பிவிட்டாள்.

ராசாத்தி சொன்னதுதான் சரியென்று பட்டது கன்னியம்மாளுக்கு. காரியம் முடிந்த வீட்டில் எப்படிக் கேட்பது என யோசித்துக்கொண்டி ருந்தாள். தனக்கும் வேறு வழி இல்லை. இல்லையென்றால், வீட்டை செல்லையா எழுதி வாங்கிக்கொள்வான் என்பதை நினைத்துப்பார்த்தாலே உயிர் போகிற மாதிரி இருந்தது. அப்படியெல்லாம் நடக்காது என்று தனக்குத்தானே தைரியம் சொல்லிக்கொண்டாள். சொந்தமென்று சொல்லிக்கொள்ள இருப்பதே அந்த ஒரு ஓட்டுவீடுதான். மறுபடியும் மறுபடியும் ஓட்டுவீடும், தன் மாமனார், மாமியார், மச்சான், நாத்தனார், கொழுந்தன், அவர்களின் குடும்பங்கள், தன் கணவன், ஒரேயொரு மகன், மகள்கள் என, குடிசையாய் இருந்து ஓட்டுவீடாய் மாறிய அந்த வீட்டில் அவள் வாழ்க்கை கழிந்த நினைவுகளும் வந்து போயின. அதுவும் இல்லையென்றால், இந்த ஊரில் பிள்ளை, குட்டிகளை வைத்துக்கொண்டு எங்கு போய் வாழ்வது? உள்மனதெங்கும் கேள்விகள் பொங்கி வட்ட வட்டக் குமிழ்களாகி வெடித்துச் சிதறின.

“இதனால் சகலமானவருக்கும் தெரிவிச்சுக்கிறது என்னன்னா...” என்ற தண்டல் பாலுவின் குரல் கன்னியம்மாளின் காதில் வந்து அலறியது. தண்டல் பாலுவின் குரல் கனவிலும் வந்து தொல்லை செய்வதாய் நினைத்து, அந்தக் கொடுங்கனவிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற தவிப்போடு தலையை உதறிக்கொண்டு கண்களைத் திறந்தாள். வீட்டின் உச்சத்தில் ஓடு பதிக்கப்பட்டிருந்த மரச்சட்டகங்கள் மங்கலாகத் தெரிந்தன. விழித்ததும் கண்களைக் கசக்கியவளின் காதில் மீண்டும் அந்த அலறல். அவள் வீட்டு வாசலில் இருந்துதான் கத்துகிறான்போல. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இருட்டும் கலைந்தது.  அதே குரல் இன்னும் தெளிவாகவும் அருகிலும் கேட்டது. ``நம்ம கொண்டவெள்ளை மனைவியும், பெரியசாமி தாயாருமான கல்யாணியம்மா காலமாகிட்டா...ங்கோ... ஓஓஓ...” அந்தக் குரல் இரவில் உறங்கிக்கொண்டிருந்த எல்லோரையும் உசுப்பியது.

ஆத்தாளும் இறந்துவிட்டாள் என்ற தகவல், கன்னியம்மாளின் தொண்டையை நெரிப்பதுபோல இருந்தது. எழுந்து சொம்பில் இருந்த தண்ணீரைக் குடித்தாள். மனம் வெறுமையாயிருந்தது. சுற்றிலும் இருந்த இருள் சூனியமாகத் தெரிந்தது. விடிந்தும் விடியாததுமாக எந்த வேலையிலும் கவனம் குவிக்க இயலாமல் கேத வீட்டுக்குப் போனாள். வேலிக்கு வெளியே பூச்சி கடித்து அங்கங்கு கறுத்திருந்த அதே தென்னைமரத்தின் அடியில் கரண்டு கம்பியில் நின்றிருந்த ஒற்றைக் காக்கையைப்போல தன்னந்தனியாக நின்றிருந்தாள்.

பெரியசாமி, அவரின் மனைவி, ஆத்தாவிடம் இருந்ததைக் காட்டிலும் அதிகார மிடுக்கு சற்று தூக்கலாக இழவு வீட்டுக் கூட்டத்தைத் தாண்டி ஒரு குரல் வெளியில் நின்ற கன்னியம்மாளிடம் வந்து வந்து சென்றது. கேதத்துக்கு வந்திருந்தவர்களில் பெரியசாமியின் மகனும் மருமகளும், மகளும் மருமகனும் குடும்பத்தோடு வந்திருக்கிறார்கள் எனச் சொன்னார்கள். மூத்த மருமகளின் குரல்தான் ஓங்கி ஒலித்துக்கொண்டி ருந்தது. `காரியம் முடிந்ததும் அவர்களைப் பார்த்து விஷயத்தை எடுத்துச் சொல்லி, பணத்தை எப்படியாவது வாங்கிவிடவேண்டும்’ என்று மனதுக்குள் முடிவுசெய்தவள் அங்கிருந்து கிளம்பினாள். வரும்போது செல்லையாவையும் உடன் அழைத்து வரவேண்டும் என நினைத்து க்கொண்டாள்.

காலையில் அங்காளம்மாள் தோட்டத்தில் கனகாம்பரம் பறிக்க வழக்கம்போல தூக்குச்சட்டியை எடுத்துக்கொண்டு போய்க்கொண்டி ருந்தாள். மழை பொய்த்துப்போனதால் மேட்டு நிலத்தைச் சுற்றிக் காய்ந்து புதர் மண்டிக் கிடந்தது. மாடுகளும் ஆடுகளும் காய்ந்த புற்களை எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் மேய்ந்துகொண்டிருந்தன. போர்வெல் போட்டிருந்த சில நிலங்கள் மட்டுமே பச்சையாகத் தெரிந்தன.

கறுப்பு கறுப்பாய் கட்டெறும்பு போய்க்கொண்டிருந்த வரிசையைச் சிதைத்துவிடாமல் நடந்து கொண்டிருந்தவளைக் கடந்து வாகனங்கள் சில ஒன்றன் பின் ஒன்றாக `விர்... விர்...’ரென்று புழுதியைக் கிளப்பி அதில் புகையையும் கலந்துவிட்டுச் சென்றன. அவளைக் கடந்து வேகமாகச் சென்ற வாகனங்கள் பிரசிடென்ட் வீட்டுக்குள் நுழைந்ததைப் பார்த்ததும் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக, தான் போக நினைத்த பாதையை மாற்றிக்கொண்டு நடந்தாள்.

``சீக்கிரம் வந்து கையெழுத்துப் போடுங்க” என்று வக்கீலைப்போல கறுப்புக் கோட்டு போட்டிருந்த ஒருவன் கைகளில் இருந்த காகிதங்களை ஆட்டி ஆட்டிக் கத்திக்கொண்டிருந்தான். பிரசிடென்ட் வீட்டின் முன்னால் பெரும்கூட்டம் திரண்டிருந்தது. ஓரத்தில் நின்றிருந்த வெறும் வாயை அரைத்துக்கொண்டிருந்த ஆடுகள், அவளின் பார்வையைத் தன் பக்கம் இழுத்தன. தொழுவத்தில் மாடுகளைக் காணவில்லை. வீட்டுவாசலில் நின்றிருந்த இரண்டு பேர் பேசியது கன்னியம்மாளுக்குக் கேட்டது ``பெரியசாமி குடும்பத்தை, ஏந்தான் சாவு விடாம துரத்துதோ! என்ன பாவம் பண்ணுனாகளோ. ஒண்ணு விடாம தொடைச்சு எடுத்துட்டுப் போகுது. ரெட்டைப்பனை மரம் விழுந்ததுகணக்கால்ல சடசடன்னு விழுந்திருச்சு” சொல்லிய வார்த்தைகளில் அடுத்தடுத்து விழுந்த திடீர் சாவுகளின் அதிர்ச்சி தெரிந்தது. 

``என்னடி கன்னியம்மா இங்க நிக்குற?” என்று கூட்டத்தை விட்டு விலகி வந்த பெண் ஒருத்தி கன்னியம்மாளைப் பார்த்துக் கேட்டாள். வீட்டையே எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த கன்னியம்மாள், பதற்றத்தோடு வீட்டுக்குள் நடப்பது என்ன ஏதென்று விசாரித்தாள். ``பெரசிடென்ட் வாங்குன கடனுக்கு கோர்ட்டுல இருந்து வீட்டையும் சொத்தையும் ஜப்தி பண்ண வந்திருக்காகளாம். ம்ஹ்... என்ன பண்ண? ஒருக்கா கடன்ல விழுந்தா மீள முடியுமா?” என்று பெருமூச்சு விட்டாள்.

சாலையில் நடந்துகொண்டிருந்த கோயில் மாடு ஒன்று சடாரெனத் தன் நடைமாற்றி வேலிப்படலை உரசியவாறு ஒட்டி வந்து தன் கொம்புகளைச் சிலுப்பியதில் கன்னியம்மாள் தடுமாறினாள். தலைக்கு மேலே ஆகாயத்தைத் தொடும் தூரத்துக்கு வளர்ந்திருந்த தென்னைமரம் கிறுகிறுவென மயக்கம் வந்ததைப்போலச் சுழல ஆரம்பித்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism