Published:Updated:

ஆட்டம் - சிறுகதை

ஆட்டம் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டம் - சிறுகதை

நர்சிம் - ஓவியங்கள்: செந்தில்

ஆட்டம் - சிறுகதை

நர்சிம் - ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
ஆட்டம் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
ஆட்டம் - சிறுகதை

ள்ளங்கைகளைத் தேய்த்து கண்களுக்குக் காட்டி எழும்போதே தயாளனின் முகம் கண் முன் வந்தது. இதோ அதோ என நான் இழுத்தடித்துவிட்டாலும் இன்று எப்படியும் சொல்லித்தான் ஆகவேண்டும் தயாளனிடம்.

பல் துலக்கிக்கொண்டே செடிகளைப் பார்த்தேன். இப்போது, இந்தப் புதுக்கிறுக்குப் பிடித்திருக்கிறது எனக்கு. ஏதோ ஒரு ஸ்பேம் கால் அது. எப்போதும் எடுப்பதில்லை என்றாலும், அன்று எடுத்ததன் விளைவு அந்த அழைப்புக்குரல் என்னைப் பேசவைத்து, என் கண் முன்னே மொட்டைமாடித் தோட்டத்தை  விரியவைத்து, என் பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யும் வரை ஓயவில்லை.

ஆட்டம் - சிறுகதை

ஒரு நல்ஞாயிறு காலையில் வேன் வந்து நின்றது வீட்டுவாசலில். தரையைச் சுத்தம் செய்துவிட்டு, பச்சை நிறத்தில் `Grow bag’ எனச் சொல்லப்பட்ட தொட்டிகளை வரிசையாக அடுக்கினார்கள். அதனுள் இடப்பட்ட இயற்கை உரம் மற்றும் மண் கலவைகள் எனப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கீரை, கத்திரி, வெண்டைக்காய், தக்காளி என வரிசைக்கு ஒன்றாக பிரமாதமான ஒரு தோட்டத்துக்கான வரிசைகளைத் தரையில் ஏற்படுத்திவிட்டுப் போய்விட்டார்கள்.

அன்றிலிருந்து என் அன்றாடம் மாறிப்போய்விட்டது. காலையில் எழும்போதே செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது; சொல்லப்போனால், எழுவதே செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றத்தான் என்பதுபோல் ஆனது. அதிலும் மண்ணைத் துளைத்துக்கொண்டு துளிர்விட ஆரம்பித்த நாள்கள், ஏதோ நானே புதிதாய்ப் பிறந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தின.

இவள் என்னைப் பைத்தியம்போல் பார்க்க ஆரம்பித்தாள். அலுவலகத்தில் இருக்கும்போதும், புத்தம் புதிதாய்த் துளிர்விட்ட கத்திரிப்பூவின் வண்ணம் கண்களுக்குள் இருக்கும். பூனை மயிர் வேய்ந்த வெண்டைப் பிஞ்சின் புத்தம் புதுத் தன்மை என மனம் முழுக்கத் தோட்டம்தான். சடைசடையாய் மிளகாய்ச்செடிகள் காய் பிடித்திருந்தன. செடியைக் கீழிருந்து மேல்நோக்கித் தடவினால்  கொத்துக் கொத்தாய் விரல் இடுக்கில் காய்கள் கை நிறைக்கும்.

முகத்தைக் கழுவித் துடைத்துக்கொண்டே தயாளனின் பிரச்னை குறித்து மீண்டும் யோசிக்கத் தொடங்கினேன். `கோபிகிருஷ்ணன் இந்தச் சூழல்குறித்து ஏதேனும் கதை எழுதியிருப்பார்’ எனத் தோன்றியது. தேடிப்பிடித்துப் படித்தால் ஒருவேளை எப்படி இந்தச் சூழலை எதிர்கொள்வது என உதவியாக இருக்கலாம். ஆனால், அவரின் கதை தயாளனுக்கு வேண்டுமானால் உதவக்கூடும். நான் அவர் கதைகளில் வரும் எதிர்மறைப் பாத்திரம் என்பதாக இருக்கக்கூடும்.

ஆம், எங்கள் நிறுவனத்தின் பிரதிநிதி நான். தயாளன் ஒரு சிறிய பகுதியின் மேலாளர். செலவைக் குறைக்கும் நோக்கில், தயாளன் போன்ற சற்றே சிறு குறைகள் இருக்கும் ஆள்களை நீக்கச்சொல்லி உத்தரவு. எத்தனையோ வருடங்களாகப் பணிபுரிகிறார். கடந்த வாரமே கெடு விதித்திருந்தது மேலிடம்.  நானும் இந்த ஒரு வாரத்தில் மூன்று நான்கு முறை அவரை என் அறைக்கு அழைத்துப் பேச்சை ஆரம்பிக்க யத்தனிக்கும்போதே அவரின் அப்பாவித்தனமான சொற்கள், புதிய திட்டங்கள் குறித்து அவர் பேசும் ஆர்வம் எனத் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஆனால், நேற்று நடந்த மண்டலங்களுக்கான அலைபேசி அலசல் பேச்சில், மீண்டும் இதைக் கையில் எடுத்து ஊர்வாரியாக இத்தனை பேரை நீக்கச்சொல்லி அழுத்தம் கொடுத்தார் வி.பி. அப்போது அவர் மதிய உணவைச் சுவைத்துக்கொண்டிருந்தார் என்பதை, லைனில் இருந்த எங்களால் உணர முடிந்தது.

என் பிரச்னை என்னவெனில், சற்று கூடுதல் சம்பளம் வாங்குபவர்கள் பட்டியலில் ஆள்குறைப்பு செய்ய வேண்டும் என அவர் சொன்னதில் முதல் பெயரே தயாளனுடையதுதான். இனி வேறு வழி இல்லை. வெண்ணெய் முகத்தோடு நளினமாய் வலம்வரும் மேலாள வர்க்கத்தின் ஒரே விதி, தன் கழுத்துக்குக் கத்தி வரும்போது, அதை மிகச் சாதுர்யமாய்த் திருப்பிவிடுதல். கத்திக்குத் தேவை கழுத்துதானேயன்றி அது தாங்கி நிற்கும் முகமல்ல. அதில் இன்னொரு முக்கிய விதி, ரத்தம் சிதறுதல் ஆகா. வெண்ணெய் வெட்டியதுபோல், எந்தப் பிரச்னையுமின்றி வெட்டுதல்.

இத்தனை வருடங்களில் ஒரு நாள்கூட நான் தயாளனை பார்க்கிங்கில் பார்த்ததில்லை. இன்று மலர்ந்த முகத்தோடு என்னை பார்க்கிங்கிலேயே பார்த்து நான் அவருக்கு அருகில் வரும் வரை காத்து நிற்கிறார். நான் அருகில் சென்றதும் `நல்நாள்’ என அவர் முகமன் கூறியது, என்னைக் கடினமாய் உணரவைத்தது. மிகவும் சம்பிரதாயமான ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு விறுவிறுவென நடந்தேன்.

இன்று எப்படியும் சொல்லிப் புரியவைத்துவிட வேண்டும். என்னால் முடிந்தவரையில் காலம் தாழ்த்தியதையும் அவருக்குப் புரியவைக்க வேண்டும்.

செயற்கையான சிறு சினம்கொண்ட முகபாவத்துக்கு என்னைத் தயார்படுத்திக்கொண்டு வேலைகளை ஆரம்பித்தேன்.  என்னால் இயல்பாய் இருக்க முடியவில்லை. இதற்கு முன்னர் நிறைய பேர் வேலையை விட்டுப் போயிருக்கிறார்கள். சிலரை அனுப்பியும் இருக்கிறோம். ஆனால், அனுப்பியவர்கள் எல்லோரும் `நீயென்ன அனுப்புவது?’ என வேறு எங்கோ சேர்ந்துவிட்ட பிறகே, ‘லாங் ஆப்சென்ட்’ என லெட்டர் அனுப்பி, பிறகு டெர்மினேஷ வைபவங்களே அதிகம். தயாளன் விஷயத்தில் அப்படியல்ல. வயதில் மூத்தவர். பல ஆண்டுகளாக வேலையில் இருக்கிறார். எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்பவர். அதுதான் அவரின் பிரச்னையே.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆட்டம் - சிறுகதை

முன்னர் ஒருமுறை, மனிதவளத் துறையினர் ஒரு  பயிற்சி அளித்தார்கள். இது தொடர்ச்சியாய் நடக்கும் ஒன்றுதான். எங்கேயாவது சாப்பிட அழைத்துப்போவது, அணியாய், குழுவாய் இயங்கப் பயிற்சி அளிப்பது என நாளை ஒப்பேற்றுவார்கள். அந்தப் பயிற்சியின்போது நான்  வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு வற்புறுத்தினாலும் அல்லது மனம் லேசாக  சபலப்பட்டாலும் இதுபோன்ற பயிற்சி விளையாட்டுகளில் கலந்துகொள்ளாமல் சற்றுத் தள்ளி நின்று நம் அணி எப்படி விளையாடுகிறது எனப் பார்ப்பதே என் வழக்கம். ஏனெனில், தலைவன் என்பவன் வேடிக்கை பார்க்கலாம்; சற்றே தவறு நிகழ்ந்து, சரியாய் விளையாடாமல் போய், வேடிக்கைப்பொருளாக ஆகிவிடக் கூடாது என்பது என் எண்ணம்.

அந்தப் பெண், எங்கள் ஊழியர்களை நான்கு அணிகளாகப் பிரித்து, ஒவ்வோர் அணிக்கும் நான்கு நான்கு பந்துகளைக் கொடுத்தாள். எதிரில் இருக்கும் கூடையில் பந்துகளைப் போடவேண்டும். மூன்று கூடைகள், தொலைவில், அருகில், வெகு அருகில் என. தொலைவில் இருக்கும் கூடையில் போட்டால் ஆயிரம் பாயின்ட்டுகள். மற்றவை முறையே ஐந்நூறு, நூறு எனப் பிரித்து, அணிகள் பந்துகளைப் போட்டார்கள்.

முடிந்ததும், அவள் ஆரம்பித்தாள்.

``நீங்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு பந்தை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்று போட்டீர்கள். எல்லோருமே ஆயிரம் பாயின்ட் கூடையை நோக்கித்தான் எறிந்தீர்கள். ஒன்றைக் கவனித்தீர்களா? நான் ஆளுக்கு ஒரு பந்து என எந்த விதிமுறையும் சொல்லவில்லையே, ஒரே ஆள் நான்கு பந்துகளை வைத்துக் குறிபார்த்தால், சிறிய பயிற்சி ஏற்பட்டிருக்கும். நான்காவது பந்தை நிச்சயம் அவர் கூடையில் போட்டு ஆயிரம் பாயின்ட்டுகள் எடுத்திருக்கலாம் அல்லவா?” என்றாள்.

உண்மைதான். நாமாக சிலவற்றைப் பின்பற்றுகிறோம். அப்படியான எந்த விதிமுறையையும் யாரும் விதித்திருக்காவிட்டாலும் நாம் எதற்கோ கட்டுப்பட்டுப் பின்பற்றுகிறோம். உதாரணமாக, கலகலப்பாகப் பேசிக்கொண்டே வந்து லிஃப்டுக்குள் ஏறிவிட்டால் சட்டென மயான அமைதிகொள்கிறோம். யார் இட்ட விதி அது? லிஃப்டுக்குள்  பேசக் கூடாது என யாரும் எங்கும் இதுவரை சொன்னதேயில்லைதானே! இப்படிப் பலப்பல சிந்தனைகள். தயாளன் மற்றும் இன்னபிற அணித்தலைவர்களுக்குள்ளும் இந்தச் சிந்தனைகள் ஊற்றெடுத்திருக்கக்கூடும். இப்போது பயிற்சியாளர் முன்வந்தாள்.

``சரி, போனது போகட்டும். மீண்டும் ஆடுவோம்.’’

அதே ஆட்டம்.

இந்தமுறை தலைகீழ். எல்லா அணியும் ஒவ்வொரு பிரதிநிதியை நியமித்து, நான்கு பந்துகளை அவர் கையில் திணித்தார்கள். மகிழ்ச்சியாய் அந்த ஆட்டம் முடிய, பயிற்சியாளினி மைக்கைக் கையில் எடுத்தாள்.

“ஆக... நான் நினைத்ததுபோலவே நீங்கள் உங்கள் முடிவுகளில் செயல்களில் உறுதியானவர்கள் அல்லர். நான் சொன்னதும் சட்டென அதைப் பின்பற்றி, ஒருவர் மீது நம்பிக்கைவைத்து உங்கள் அணியை அடகுவைத்துவிட்டீர்கள் அல்லவா?” என்றாள்.

எனக்குள் மிகப்பெரிய திறப்பைத் தந்தது அவளின் வார்த்தைகளும் அந்த விளையாட்டும். ஆம், எடுப்பார் கைப்பிள்ளை என்பதே வாழ்வின் பெரும்பாலான தருணங்களில் நடப்பதாகத் தோன்றியது.

அன்று மதியம் தயாளன் என்னிடம் சொன்னது, ``ஒண்ணும் புரியல சார். அந்தப் பொண்ணு சொன்னதும், ‘அட ஆமா... ஒரே ஆள் எய்ம் பண்ணா சரியாத்தான இருக்கும். நாம இன்னும் பத்து வருஷம் பின்னாலேயே இருக்கோமே’னு நினைச்சா, ஒரே போடாப் போட்டுருச்சு பாருங்க சார்.”

அப்போது நான் நினைத்தது. ஆனால், தயாளனிடம் சொல்லாதது இதுதான். `அது அப்படியல்ல, மேலே இருப்பவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் ஆட்டம். ஆட்டத்தின் விதிகள் மாறிக்கொண்டே இருக்கும்.’

என் குழப்ப மனநிலையிலிருந்து விடுபட, சற்று எழுந்து நடக்க முடிவெடுத்தேன். கவனமாய்  தயாளன் இருக்கை இருக்கும் பகுதியைத் தவிர்த்து வேறு பக்கமாய் நடந்து ஓய்வறையை அடைந்தேன். அங்கு, அந்தப் பெரிய கண்ணாடிக்கு வெகு அருகில் தன் கண்ணை வைத்து கண்ணில் விழுந்திருந்த தூசியைப் பார்த்துக்கொண்டிருந்தார் தயாளன். என்னைப் பார்த்ததும் சுதாரித்து, ``வெளில வெயில், பார்த்தீங்களா?” என்றார்.

ஆட்டம் - சிறுகதை

ஒன்றும் பேசாமல் சும்மா நின்றுவிட்டு வந்துவிட்டேன்.

நல்லவேளையாக என் அறையில் ரகு நின்றிருந்தான். தணிக்கையாளன்.  என் முகத்தைப் பார்த்ததும் சிரித்தான். ``என்ன பாஸ், தயாளன் மேட்டரா... மூஞ்சியே டார்க்கா இருக்கு?”

பெருமூச்சு விட்டேன்.

``டோன்ட் நோ ரகு, எப்படிச் சொல்றதுன்னு... நேத்து பாஸோடு கால் பேசும்போது இருந்தியே, பிரஷரைப் பார்த்தல்ல, ப்ச்... டோட்டலா இந்திய லெவல்ல அம்பது அறுவது பேர கழுத்தறுக்குறாங்க. கேட்டா காஸ்ட் கட்டிங், திங்க் அபவுட் ஃபியூச்சர்னு ஆரம்பிப்பானுங்க.”

ரகு சிரித்தான்.

“நாடு போற போக்கப் பார்த்தா அடுத்து நமக்கும் இதுதான் பாஸ்.  சொல்றதுக்கு  ஒண்ணும் இல்லை. ஆனா ஒண்ணு, நார்மலா  போய்க்கிட்டிருந்த ஒரு விஷயத்தை ஏதோ அப்நார்மல், டேஞ்சர்னு காட்டி, இப்ப அது நார்மலாத்தான் இருக்கு, நார்மலா ஆக்கிட்டோம்னு காட்டுறாங்க. செம கேம் இது. இந்த கேப்ல, இந்த புராசஸ்ல மாட்டி அழிஞ்சவங்க நிறைய பேர்.”

``இந்த தயாளன் மாதிரி” என முணுமுணுத்தேன்.

``எக்ஸாட்லி’’ என்றான்.

``நாளைக்கே டக்குனு இன்வெஸ்ட்டர்ஸ் பணத்தை பம்ப் பண்ண ஆரம்பிச்சா, அப்ப வந்து அவனை எடு, இவனை எடு மார்க்கெட்ல நம்மதான் நம்பர் ஒண்ணுனு காட்டணும். எவ்ளோ லட்சம் போனாலும் பரவாயில்லைனு கத்துவாங்க’’ - என் இயலாமை, கொஞ்சம் கொஞ்சமாய்க் கோபமாக உருவெடுக்க ஆரம்பித்தது.

``ஆனா இந்த தயாளனும் கொஞ்சமாவது இம்ப்ரூவ்மென்ட் காட்டலாம்ல, நானும் இன்டைரக்டா எவ்வளவோ ஹின்ட் கொடுத்துட்டேன், ப்ச்!”

ரகு சிரித்தான். ``இன்டைரக்டாவா, டைரக்டாவே சொன்னாலும் அவருக்குப் புரியாது பாஸ். அவ்ளோ இன்னொசன்ட் அவர். பாவம், ரொம்ப வருஷமா இருக்கிறதால இந்தச் சம்பளத்துக்கு வந்துட்டார். இப்ப திடீர்னு போகச் சொன்னா, எங்க போவார்? ஹி இஸ் த பிரெட் வின்னர் ஆஃப் ஹிஸ் ஃபேமிலி. பையனும் பொண்ணும் படிக்கிறாங்க.”

ரகு சொல்லச் சொல்ல எனக்கு தயாளன்மேல் பரிதாபமும்  மேலிடத்தின் மீது  சினமும், இந்த நிலைக்குத் தள்ளிய அரசின் மீது வெறுப்பும் வந்தன.

``எல்லாம் சரியாத்தான போயிட்டிருந்துச்சு. இப்ப என்ன ஆச்சு திடீர்னு, இவ்ளோ அழுத்தம்?” பேசிக்கொண்டிருக்கும்போது தயாளன் அவசர அவசரமாய் ஓடிவந்தார்.

``சார், பையன் ஸ்கூல்ல இருந்து போன். பையனுக்கு... பையனுக்கு...”

அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை. உடனே ரகுவிடம் சொல்லி வண்டியை எடுத்துக்கொண்டு தயாளனுடன் போகச் சொன்னேன்.

ஹெட் ஆபீஸிலிருந்து பாஸின் அழைப்பு. தவிர்த்தேன். அநேகமாய் முதல்முறை அவரின் அழைப்பைத் தவிர்க்கிறேன். கொஞ்சம் நெருடல் அல்லது பயம் பீடித்தது. உடனே, `சற்று நேரத்தில் அழைக்கிறேன்’ என வாட்ஸ்-அப் செய்தி அனுப்பினேன். அதை அவர் பார்த்தாரா எனப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஆட்டம் - சிறுகதை

நான் வீட்டுக்குக் கிளம்பும் வரை எந்தத் தகவலும் இல்லை. தயாளனின் மொபைல் அணைத்துவைக்கப்பட்டிருந்தது. ரகு போனை எடுக்கவில்லை. ஆனால், பிறகு அழைப்பதாகச் செய்தி அனுப்பியிருந்தான். தயாளனின் நிலையை நினைத்துப்பார்க்கவே கடினமாக இருந்தது. மகனுக்கு என்ன ஆயிற்றோ, நல்லவேளை ஏதேனும் பெரிய செலவெனில் கம்பெனியின் காப்பீட்டுத் திட்டம் பார்த்துக்கொள்ளும். போன வாரமே அவரை அனுப்பியிருந்தால், இந்நேரம் என்ன ஆகியிருக்கும் அவர் நிலை?

நேராக தயாளனின் வீட்டுக்குச் செல்லலாமா என யோசித்தேன். ஆனால், அது சரிவராது. பிறகு நாளை அவரை எதிர்கொள்வது இன்னும் சங்கடமாகிவிடும். காரில் ஏறியதும் ரகுவை அழைத்தேன். கட் செய்தான். ஏதோ பெரிய பிரச்னை என்று மட்டும் தோன்றியது.

பாஸிடமிருந்து செய்தி வந்திருந்தது. `தயாளன் பேப்பர்?’ என இரண்டே வார்த்தைகள். பேப்பர் என்ற ஒற்றை வார்த்தை, எவ்வளவு பெரிய அர்த்தம்கொண்டது. பேப்பர் என்பது, ஒரு முறிவு; ஒரு அஸ்தமனம்; ஒரு தொடக்கம்; பெரும் துக்கம் என நிறைய அர்த்தங்கள் பொதிந்தது.

இரவில் செடிகளைப் பார்ப்பது வித்தியாசமாக இருந்தது. வெக்கையைத் தவிர்க்க, தண்ணீர் ஊற்றினேன். விதவிதமாய் ஹோஸ் பைப்பின் அளவை மாற்றி நீரைச் சிதறடித்துக்கொண்டிருந்தேன். என் மனம் நிம்மதிகொள்ளும் வரை, தயாளனின் முகம் மறையும் வரை, தயாளனின் மகன் நிலை மறக்கும் வரை நீரைத் தெளித்துக்கொண்டிருந்தேன். புதிது புதிதாகக் காய்த்தவற்றைப் பார்த்துக்கொண்டே நீர் தெளித்தேன். இடமும் மனமும் குளிர்ந்தன.

``அப்பா... செஸ் ஆடலாமா?”

புதிதாய் செஸ் பழகும் ஆர்வம் மகனுக்கு. எனக்கும் விளையாட வேண்டும்போல் இருந்தது.

சிலைபோல் செதுக்கப்பட்ட செஸ் காய்களைக் கட்டங்களில் அடுக்கினான். ஆட்டத்தின் நடுவே குதிரையைச் சட்டென நேராக நகர்த்தினான்.

``டேய்... நோ, குதிரை அப்படிப் போகாது.”

``ஒங்கிட்ட சொல்லுச்சா?”

``டேய், ஆட்டத்தோட ரூல்ஸ்டா. குதிரைன்னா இப்படித்தான் போகணும். ரூக்னா இப்படி நேரா” என நகர்த்திக் காட்டினேன். ``ஒவ்வொண்ணுக்கும் ஒரு பவர், அதை மீறிப் போகவே முடியாது.’’

நான் சொல்லச் சொல்ல, அதிகாரத்தின் ஆட்டமும் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் அளவுகளும் கண் முன் வந்தன.

``எனக்கு இந்த ரூல் பிடிக்கலைப்பா. ஐம் க்விட்டிங் த கேம்” எனத் தட்டிவிட்டு எழுந்தான்.

சதுரங்கக் காய்கள் கட்டங்களுக்குள் சரிந்து வீழ்ந்து, அரைவட்டமடித்து உருண்டன.

நான் மொபைலை எடுத்து, பாஸ் நம்பரை அழைத்தேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism