Published:Updated:

“ஜனநாயகம்தான் எனது மதம்!”

“ஜனநாயகம்தான் எனது மதம்!”
பிரீமியம் ஸ்டோரி
“ஜனநாயகம்தான் எனது மதம்!”

விஷ்ணுபுரம் சரவணன், எம்.ஆர்.ஷோபனா - படங்கள்: தே.அசோக் குமார்

“ஜனநாயகம்தான் எனது மதம்!”

விஷ்ணுபுரம் சரவணன், எம்.ஆர்.ஷோபனா - படங்கள்: தே.அசோக் குமார்

Published:Updated:
“ஜனநாயகம்தான் எனது மதம்!”
பிரீமியம் ஸ்டோரி
“ஜனநாயகம்தான் எனது மதம்!”

“இ லோகமே மாறிப்போதா இ சோகமே தூர ஓடிதா...”

 அறையின் கதவைத் தட்டுவதை ஓரிரு நிமிடங்கள் நிறுத்தச் செய்தது உள்ளிருந்து ஒலித்த கத்தாரின் குரல். நக்சல்பரிகளின் கலை ஆயுதமாக ஆந்திர மண்ணில் கம்பீரமாக ஒலித்த குரல், புரட்சிகரப் பாடகர் கத்தாருடையது.  அரை நூற்றாண்டாக ஆயுதப் போராட்டக்களத்தில் இயங்கிக் கொண்டிருந்தவர் சில ஆண்டுகளுக்கு முன் அதிலிருந்து விடுவித்துக் கொண்டிருக்கிறார்.  சமீபத்தில் கத்தார் கோயில்களுக்குச் சென்றது பலரின் புருவத்தை உயர்த்தியிருந்த நிலையில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அவருக்குப் ‘பெரியார் விருது’ வழங்கப்பட்டது ஆச்சர்யத்தை அதிகப்படுத்தியது. விழா விருதுக்கு வந்திருந்தவரைச் சந்தித்தோம்.

“நக்சல் பாதையை நீங்கள் தேர்ந்தெடுக்க என்ன காரணம்?’’

“சிறுவயதில் சாதிய, தீண்டாமைக் கொடுமைகளை நிறைய அனுபவித்திருக்கிறேன். என் பெற்றோர் சாதி ஒழிப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள். அவர்கள் வழியேதான் எனக்கு அம்பேத்கர் அறிமுகமானார். அப்போதே நான் பாடல்கள், கவிதைகள் எழுதுவேன். கல்லூரியில் படிக்கையில், மார்க்ஸியக் கொள்கையால் ஈர்க்கப்பட்டேன். அம்பேத்கரியத்தையும் மார்க்ஸியத்தையும் ஒன்றுசேர்த்து பின்பற்றப்பட்ட தொடங்கினேன். அது என்னை நக்சல்பாரி இயக்கத்தில் கொண்டுசேர்த்தது. இதை ஒரு பரிணாம வளர்ச்சி என்றே நினைக்கிறேன்.”

“ஜனநாயகம்தான் எனது மதம்!”

“ ‘மக்கள் யுத்த குழு’ அனுபவங்களில் தற்போது அடிக்கடி உங்கள் நினைவுக்கு வருவது...’’

“அவை எல்லாமும் என் ரத்தத்தில் அல்லவா கலந்திருக்கிறது. எப்படி மறப்பது? எத்தனையோ ஆயுதப் போராட்டங்கள் நடத்தியிருக்கிறோம். குறிப்பாகச் சொல்வதென்றால்... செகந்திராபாத் சம்பவத்தில் போலீஸார் எங்களைச் சுட்டபோது, என் மீது ஆறு குண்டுகள் பாய்ந்தன. அதில் ஒன்று, முதுகுத்தண்டுவடத்தில் இன்றும் இருக்கிறது. (சிரிக்கிறார்) எப்போதுமே அந்த நாள்கள், என் மனத்திலிருந்து என்றும் அகலாது.”

“தெலங்கானா என்பது பல ஆண்டுகள் நடைபெற்ற போராட்டம், புரட்சிகர சக்திகள் கடுமையாக அதில் இயங்கின. அப்போது கோரப்பட்ட தெலங்கானாதான் இன்றைக்குக் கிடைத்திருக்கிறதா?”

“தெலங்கானா, ஆந்திரா என நிலப்பரப்பைப் பிரித்து, ஆள்பவர்கள்தாம் மாறியிருக் கிறார்கள். கிடைத்த அதிகாரத்தை அரசியல்வாதிகள் தவறாகப் பயன் படுத்து கிறார்களே தவிர, மக்களின் அடிப்படை நிலைமையை மாற்ற முயலவில்லை. பொருளாதார வளர்ச்சி, கல்வி, வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு இவற்றைத்தான் எதிர் பார்த்தோம். ஆனால், இவற்றைத் தடுக்கும் ஐந்து பேய்களாகப் பணம், கார்ப்பரேட் மீடியா, வளங்களைச் சுரண்டும் மாஃபியா, ஆயுதக் கலாசாரம், அரசியல் துரோகம் ஆகியவை இருக்கின்றன.”

“சந்திரசேகர ராவ், சந்திரபாபு நாயுடு இவர்களின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“ஆளும் வாய்ப்பு இருவருக்கும் கிடைத்திருக்கிறது. ஆனால், மக்களின் தலையெழுத்து மாறவில்லை.”

“பெரியார் விருது பெற்றிருக்கிறீர்கள்... அவரைப் பற்றிய உங்களின் கண்ணோட்டம் என்ன?”


“ராமர் படத்தை பெரியார் எரித்ததை மையமாக வைத்து நாடகம் நடித்துள்ளேன். ராமர் படத்தை எரிக்கும்போது, அதைத் தடுக்க சீதை வருவார். அப்போது நடக்கும் உரையாடல்கள் கடும் சர்ச்சைக்குள்ளானது. பொதுவாக, நான் எல்லாவற்றுக்கும் அறிவியல் பார்வை வேண்டும் என நினைப்பவன். பெரியாரும் எதைச் சொன்னாலும் அதற்கான காரணங்களைக் கேட்பவராக இருந்தார். தர்க்க ரீதியில் விளக்கச் சொன்னார். உதாரணமாக, இந்தப் பாட்டிலில் தண்ணீர் இருக்கிறது என்பது பார்ப்பவர்களுக்கே தெரியும். ஆனால், அந்தத் தண்ணீர் இனிக்குமா துவர்க்குமா என்பதை, பிறர் கூற நம்புவதைவிட, சோதித்துப் பார்த்து தெரிந்துகொள் எனச் சொன்னார். இதுவே எங்களை இணைத்தது. பெரியார் சீரமைத்த தமிழ்நாடு, இப்போது சினிமாக்காரர்களின் கைகளில் சிக்கித் தவிக்கிறது.”

“பெரியார் விருது பெறுகிறீர்கள். மார்க்சியத்தின் மீது இன்னும் நம்பிக்கை இருப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால் கடவுள் மறுப்புச் சிந்தனைகளிலிருந்து விடுபட்டு ஆன்மிக வழிபாட்டு முறைக்கு மாறியது ஏன்?”

“முதலில், கடவுள் யார் என்றும் அவர் எங்கிருக்கிறார் என்பதையும் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். ‘கடவுள் என்பது ஒரு தற்காலிகமான நம்பிக்கை’ என்று கார்ல் மார்க்ஸ் கூறியிருக்கிறார். இந்துக் கோயில்களுக்கு மட்டுமின்றி, எந்த மதக் கோயில்களுக்கும் செல்வேன். சில விஷயங்களில், மக்களின் பாதைகளை நாம் தேர்ந்தேடுப்பது நல்லது. அம்பேத்கருக்குச் செல்வாக்கு இருக்கிறது என அவரை பிஜேபி கையில் எடுக்க வில்லையா? மக்களோடு பயணித்து கடவுள் குறித்து, அவர்களுடன் விவாதிப்பது சரியான ஒன்றுதான். இங்கே இரண்டு விதமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. ஒன்று பக்தி, மற்றொன்று வெறி. ஆர்.எஸ்.எஸ் செய்வது இரண்டாவது ரகம். ஆனால், கடவுள் பக்தி இருப்பது ஒன்றும் தவறில்லை.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“ஜனநாயகம்தான் எனது மதம்!”

“மன மாற்றத்துக்குப் பிறகு மார்க்ஸியத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“என் கையில் வைத்திருக்கும் இந்தக் கம்பைப் பாருங்கள். முன்பெல்லாம் இதில் சிவப்புக் கொடியை மட்டும்தான் கட்டியிருப்பேன். இது மார்க்ஸியத்தின் அடையாளம். அது நம் சமூகத்தில் இருக்கும் வர்க்கப் பேதங்களை உடைத்தெறியும் சக்தி. சமீபத்தில்தான், இதனுடன் நீலநிறக் கொடியையும் கட்டினேன். இது, அம்பேத்கர் கொள்கைகளின் அடையாளம். சாதிய வேறுபாடுகளையும் களையும் சக்தி. இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால்தான் இந்தியச் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்படும். ஜாதியும் வர்க்கமும்தான் இந்தச் சமூகத்தைப் பிளவுபடுத்தி வைத்திருக்கின்றன. நான் ஒரு கட்டத்தில், சாதி குறித்துப் பேசவே வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருந்தேன். ஆனால், அது சாத்தியம் இல்லை என்று 70 ஆண்டுகால வாழ்க்கை அனுபவத்தில் புரிந்துகொண்டேன். ஏனென்றால், இங்கே சாதியம் என்பது நுனிப்புல் பிரச்னை இல்லை; ரொம்ப ரொம்ப அடிப்படையான சிக்கல்!”

“சாதியை அடிக்கட்டுமானமாகக் கொள்வதில் அம்பேத்கரியவாதிகள், மார்க்ஸியவாதிகளுக்குள் மாறுபட்ட கருத்து உள்ளதே...”

“மார்க்ஸியம் என்பது வர்க்க வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், ஆசியாவில் நிலவும் சாதியச்சூழலின் தன்மை மாறுபட்டது. அதைக் களைவதற்கு அம்பேத்கர், பூலே, பெரியார், நாராயணகுரு உள்ளிட்டோர் போராடினார்கள். மார்க்ஸியவாதிகளும் தற்போது அதைப் புரிந்துகொண்டு, இரண்டையும் ஒருசேர எதிர்க்கும் செயல்திட்டத்தில் இயங்கத் தொடங்கிவிட்டனர்.”

“மோடி ஆட்சியை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?”

“சாப்பிடும் உரிமையையே மறுக்கிறது மோடி அரசு. நான் பாம்பு, கொசுவைக்கூடச் சாப்பிடுவேன். அது என் உரிமை. இதைத் தடைசெய்ய நீங்கள் யார்? இந்தியாவில் ஜனநாயகம் அபாயகரமான சூழலில் இருக்கிறது.”

“தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருக்கிறதா?”

“எனக்கு 73 வயதாகிறது. இதுவரை வாக்கு செலுத்தியதே இல்லை. இப்போதுதான் வாக்காளர் பட்டியலில் என் பெயரைப் பதிவு செய்திருக்கிறேன். அந்தக் களத்தையும் என்னவென்று பார்த்துவிடுவோம்.”

“நீங்கள் நக்சல் பாதையிலிருந்து விலகியதற்கான நியாயங்கள் பூர்த்தியாகிவிட்டனவா?”


“நக்சல் பாதையிலிருந்து வெளியேறியதாக நான் மட்டுமின்றி, மக்களும் நினைக்கவில்லை. அவர்கள் என் மீது காட்டும் அன்பும் குறையவில்லை. இன்றைக்கும் என்னுடைய பாடல்களைக் கேட்க ஆயிரக்கணக்கில் மக்கள் வருகிறார்கள். நான் சென்றுகொண்டிருக்கும் பாதை, பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றுதான் சொல்வேன்.”

“உங்கள் ஆன்மிகத்துக்கு மதம் உண்டா?’’


“உண்டு. அதன் பெயர் ஜனநாயகம்.”
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism