வினைப்பயன்
மேகங்களைத் துடைத்து
நீலம்பூத்து நிற்கிறது வானம்
நெகிழிக் கழிவுகளால்
சுருண்டு கிடக்கிறது
மணல் சுரண்டிய ஆறு
வற்றிய ஏரியில்
காய்ந்து மிதக்கிறது
மீன்களின் கனவுகள்
கால்வாயில் நீர் தேடி ஓடி
சுடுமண்ணைக் குடித்து
காய்ந்த சருகுகளைத்
தழைக்கவிடுகிறது
கோரைப்புற்கள்
வளைக்குள் வாழும்
எலிகளும் நண்டுகளும்
கொறித்துக்கொண்டிருக்கின்றன
கோரப்பசிகளை
விட்டேத்தியாக களத்துமேட்டில்
நிற்கும் ஒற்றை வேம்பு
காற்றில் சலசலக்கிறது
பறவைகளில்லாப் பெருந்துயரை
உழவுத்தடம் மறைந்த
கொடும்பாலையாகத் திரிந்த
மருதமண்ணில்
உறிஞ்சும் சீற்றத்தோடு
இறங்குகிறது எரிவாயு வாகனம்
ஏதோ ஒரு காலத்தில்
உழுது தேய்ந்த மாட்டின் லாடம்
பதம்பார்க்க
நிலைகுலைந்த வாகனத்தின்
சக்கரத்திலிருந்து
பெரும் வெடிச்சத்தத்துடன்
வெளியேறியது
நஞ்சுண்டு செத்த
உழவனின் ஏக்கப் பெருமூச்சு.
- அய்யாவு பிரமநாதன்

கோடையின் நெடுந்துயர்
தூரத்தில் அகவும்
மயிலின் பசியிலிருந்து
விரக்தியோடு விடிகிறது
கோடையின் ஒரு பகல்
விளைநிலங்களில் இடப்பட்ட
காய்ந்த வரட்டிகளில்
கோவர்த்தன மலையென
பதுங்கி வாழ்கின்றன எறும்புகள்
கருவேலமரத்தின்
முள் நுனிகளிலிருந்துதான்
வெயில் பரவுகிறதென்ற
சந்தேகம் எனக்கு என்றும் உண்டு
வரப்பில் தனித்துக்கிடக்கும்
வயல் நண்டின் ஒற்றைக் கால்
மூன்று ஆண்டுகளுக்கு
முற்பட்டதாக இருக்கலாம்
பசுமையே இல்லையென்று
அப்படியொன்றும் சொல்லிவிட முடியாது
நேற்றைய மண்டகப்படிதாரர்கள்
அம்பாளுக்கு அணிவித்தது
பச்சை வண்ணப் பட்டுதான்.
- யாழிசை மணிவண்ணன்
நித்திரைப் பறவை
இரவு வான நதியிலிருந்து
மழை வழிந்துகொண்டிருந்தது
பறக்க முடியாத
எனது நித்திரைப் பறவை
காலடியைச் சுற்றிச்சுற்றி வந்து
வீட்டு வாசல் முன்
பெருங்கடலைக் கொத்தி
மிதக்கும்
கப்பல் ஒன்றை அலையவிட்டது
முன்னொரு நாள்
எனது நித்திரைப் பறவை
நீண்ட செங்குத்தாய்
தலையணைக்கு அருகில்
குறட்டை விட்டு
சலவாய் வடித்ததைக் கண்டு
எனக்குக் கோபம் கோபமாய்
வந்திருக்கிறது
நரைத்த
இந்த அறுபதாம் வயசு
கடைசி நித்திரைப் பறவையும்
என்னைக் கண்டுகொள்வதாயில்லை
இப்போதெல்லாம்
என் கவிதைகள் முழுக்க
தவளைகள் கத்தும் சத்தமாகவே இருக்கிறது.
- ஏ.நஸ்புள்ளாஹ்
