Published:Updated:

முன்னாள் காதலன்

முன்னாள் காதலன்
பிரீமியம் ஸ்டோரி
முன்னாள் காதலன்

கவிதை: லீனா மணிமேகலை - ஓவியம்: செந்தில்

முன்னாள் காதலன்

கவிதை: லீனா மணிமேகலை - ஓவியம்: செந்தில்

Published:Updated:
முன்னாள் காதலன்
பிரீமியம் ஸ்டோரி
முன்னாள் காதலன்

ப்படிப் போகிறது
உன் காதல் வாழ்வு
என்ற என் கேள்விக்கு
மையமாக முறுவலித்தான்
என் முன்னாள் காதலன்
உனக்கு? என்று திருப்பிக் கேட்ட அவனுக்கு
“நிறைவு” என்று அவன் கண்கள்
துணுக்குறுவதைப் பார்க்கும் வரை
சொல்லிவிட்டு
இனி எஞ்சிய வாழ்வை ஓட்டிவிடலாம் என்றேன் .

இரண்டு கோப்பை பியர்
உள்ளே இறங்கியிருந்தது.

அவளுக்குமுன் குடிக்க முடியாது என்றான்
உடம்புக்கு நல்லதுதானே என்றேன்
புகைப்பதையும் விட்டுவிட்டேன் என்றான் 
அவளுக்கு ஆஸ்துமா என்று கேள்விப்பட்டேன் என்றேன்

முன்னாள் காதலன்

உன் ரசம் சாப்பிட்டு நாளாச்சு என
அவன் தொடங்கிய வாக்கியத்தை
நீ பாடும் பாட்டெல்லாம்
அப்பப்ப ஞாபகம் வரும் என முடித்து வைத்தேன்

பிறகு மௌனம்
தனித் தனியான எங்கள் மௌனத்தில்
ஒன்றிணைந்த நினைவுகளின் இரைச்சல்

உன் இன்ஸ்டாகிராமில்
நீ வளர்க்கும் பூனையைச் சந்தித்தேன் 
அரைப் புன்னகையுடன் சொன்னான்
உனக்குப் பிடித்த ரோஸ் செம்பருத்தி பூத்தது
பதிவு போட்டேன், மனசில்லை, நீக்கிட்டேன் 
தலை நிமிராமல் சொன்னேன்.

கோபத்தில் ஒருநாள்
அனுப்பிக்கொண்ட குறுஞ்செய்திகளை
ஒன்றுவிடாமல்
அழித்துவிட்டதாகச் சொன்னபோது
அவன் நெற்றி சுருங்கியது
எழுதிக்கொண்ட ஆயிரத்து சொச்சம்
மெயில்களையும் கடவுச்சொல் போட்ட கோப்பில்
சேமித்துவைத்திருக்கிறேன் 
தோன்றும்போது ரகசியமாக வாசிப்பேன்
என்றபோது
கடித்துத் துப்ப நகம் இல்லாமல்
விரலில் ரத்தம் கசிந்தது

கலவி, காபி என அன்றாடங்களில்
வாய் வரை வந்துவிடும் பெயரை
எச்சில்கூட்டி விழுங்குவது போன்ற
சங்கடங்களை இருவருமே பேசிக்கொள்ளவில்லை

மகிழ்ச்சியா இருக்கியா
ஒரே குரலில் ஒரே நேரத்தில்
கேட்டுக்கொண்ட போது
உணவும் மதுவும் மாலையும்
செறித்து உடல்கள் வியர்த்துவிட்டன

அவன் கைப்பேசியில் இருபது ‘மிஸ்டு கால்ஸ்’
என் கைப்பேசியில் பத்தொன்பது
‘நோட்டிபிகேஷன்ஸ்’

என் முன்பற்களுக்கு நடுவே இடைவெளி
அதிகமாயிருப்பதாய் அவனும்
அவன் மூக்கு முடியில் நரை
விழுந்திருப்பதாய் நானும்
சுட்டிக்காட்டி, சிரித்துக்கொண்டே
விடைபெற்றோம்

பிரிவு வந்தால்
கடலுக்குள் கைகோத்து நடந்துபோய்ச் சாவோம்
என்று சொல்லிக்கொண்டவர்கள் 
காலத்திற்குள் கைவிலக்கி நடந்துபோய்
அவரவர் வாழ்வுக்குத் திரும்பினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism