Published:Updated:

கவிதையின் கையசைப்பு - எஸ்.ராமகிருஷ்ணன்

கவிதையின் கையசைப்பு - எஸ்.ராமகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
கவிதையின் கையசைப்பு - எஸ்.ராமகிருஷ்ணன்

புதிய தொடர்

கவிதையின் கையசைப்பு - எஸ்.ராமகிருஷ்ணன்

புதிய தொடர்

Published:Updated:
கவிதையின் கையசைப்பு - எஸ்.ராமகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
கவிதையின் கையசைப்பு - எஸ்.ராமகிருஷ்ணன்

கவிஞன் ஒரு மரங்கொத்தி

குபொகு இசிகாவா (Takuboku Ishikawa) ஜப்பானின் தலைசிறந்த கவிஞர். இதுவரை தமிழில் இவரது கவிதைகள் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை. நான் டோக்கியோ சென்றிருந்தபோது இவரது நூல்களை வாங்கி வந்தேன். 26 வயதே வாழ்ந்திருக்கிறார். அதற்குள், ஒளிரும் விடிவெள்ளியைப்போல பிரகாசமாக ஒளிர்ந்து அடங்கியிருக்கிறார். 

கவிதையின் கையசைப்பு - எஸ்.ராமகிருஷ்ணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தகுபொகுவின் கவிதைகளை வாசிக்கையில் கவிஞர் தேவதச்சனே நினைவில் வந்துபோகிறார். இருவரும் ஓருலகைச் சேர்ந்த கவிஞர்கள். தன்னைச் சுற்றிய உலகை எதிர்கொள்ளும் விதத்திலும் மொழியிலும் கவிதையைக் கட்டும் விதத்திலும் இருவருக்கும் மிகவும் நெருக்கமுள்ளது. ஒருவகையில் இவர் தேவதச்சனின் ஜப்பானிய சகோதரர் என்று சொல்லலாம். 1886-ல் ஹினோடோவின் சிறிய கிராமத்தில் பிறந்த இவர், ‘டாங்கா’ என்ற கவிதை வடிவத்தினைச் சிறப்பாகக் கையாண்ட கவிஞர்.

தகுபொகுவின் தந்தை இஷிகாவா ஈட்டீ, ஹினோடோவில் உள்ள சோடோ ஜென் கோயிலின் மதகுருவாக இருந்தவர். அந்த நாள்களில் பௌத்தத் துறவிகள் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், திருமணம் செய்துகொண்ட துறவிகளுக்கு மடாலயத்தில் உயர்பதவிகள் கிடைக்காது. ஆகவே, தகுபொகுவின் தந்தை தனது திருமணத்தை மறைத்துக்கொண்டார். தந்தையறியாத பிள்ளை என்றே அவரது பிறப்புச் சான்றிதழ் கூறுகிறது. குடோ கேட்சுவின் மகன் என, தாயின் பெயரிலேயே பிறப்புச் சான்றிதழ் உள்ளது. இவர் மட்டுமின்றி இரண்டு மூத்த சகோதரிகளும் அவ்வாறே தாயின் பெயரில் அடையாளப்படுத்தப்பட்டிருந்தார்கள். வாழ்நாள் முழுவதும் தந்தையின் அங்கீகாரம் கிடைக்காதவராகவே தகுபொகு வாழ்ந்தார். ‘தந்தையைவிடவும் தாயை ஏழு மடங்கு அதிகமாக நேசிக்கிறேன்’ என்று ஒரு குறிப்பில் தகுபொகு கூறியிருக்கிறார்.

கவிதையின் கையசைப்பு - எஸ்.ராமகிருஷ்ணன்ஷிபுடாமியிலுள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டார். அந்த நாள்களில் மிகுந்த புத்திசாலி என அனைவராலும் கொண்டாடப்பட்டார். அது தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. மாறாகத் தன்னைத் தனிமைப்படுத்தியது. பின்னாளில் தான் அறிவாளியில்லை என்பதை நிரூபணம் செய்வதற்காக, எத்தனையோ முட்டாள்தனமான செயல்களைச் செய்ய வேண்டியிருந்தது. தன்னோடு படித்த சராசரி மாணவர்கள் தங்கள் வாழ்வில் பெற்ற வெற்றியைக்கூட அறிவாளியாகிய நான் பெறவில்லை என்றே தகுபொகு எழுதுகிறார்.

இலக்கியத்தின் மீது  தீவிர ஆர்வம்கொண்ட இவர், கிடைக்கும் காசுக்கெல்லாம் புத்தகங்கள் வாங்கி வாசிக்கத் தொடங்கினார். ‘எனக்கு விருப்பமான புத்தகத்தை முழுமையாக என் கையால் எழுதி வைத்துக்கொள்வேன். அதுவே, அந்த நூலை உள்வாங்கிக்கொள்வதற்கான வழி. அந்த நாள்களில் என்னை செக்ஸ் புத்தகங்கள் ஆக்கிரமித்துக்கொண்டன. அந்தப் புத்தகங்களைக்கூட இரவெல்லாம் விழித்திருந்து கையால் எழுதிவைத்துக்கொண்டேன். ‘எழுத்தின் வழியே அறியப்படும் காமம் வேறுவிதமானது. அது தரும் கிளர்ச்சியும் கற்பனையும் நேரடியான பாலுறவுகூடத் தருவதில்லை’ என்று தகுபொகு தனது குறிப்பு ஒன்றில் எழுதியிருக்கிறார்.  

கவிதையின் கையசைப்பு - எஸ்.ராமகிருஷ்ணன்

இளமைக்காலத்தில் வறுமையின் காரணமாக, தகுந்த உணவு, உடை இன்றி சிரமப்பட்ட அவருக்குக் கவிதையே துணையாக இருந்தது. அவரது கவிதைகளை அன்றைய சிறுபத்திரிகைகள் ஆதரித்தன.
17 வயதில் அவரது கவிதைகள் வெளிவந்து பாராட்டுப் பெற்றன. கூடவே, கவிதைகளுக்காக அளிக்கப்படும் சிறு சன்மானம் அவரது அன்றாடத் தேவைகளுக்கு உதவியது. அந்த நாள்களில் ஒரு பிரபல விமர்சகர் தகுபொகுவின் கவிதைகளை வாசித்து, ‘இவை வெறும் குப்பைகள்’ என்று காரசாரமாகத் திட்டி எழுதியதன் காரணமாகத் தீவிர மனச்சோர்வுக்கு உள்ளானார்.

தான் ஓர் இலக்கியப் பத்திரிகையைத் தொடங்க வேண்டும் என்று விரும்பினார், அதன்படியே நண்பர்களை ஒன்று சேர்த்துக்கொண்டு இதழ் ஒன்றைத் தொடங்கினார் தகுபொகு. ஆனால், முறையான விநியோகம் இல்லாமல் அந்த இதழ் முடங்கிப்போனது. கடனாளியாக மாறினார் தகுபொகு. தன்னிடமுள்ள புத்தகங்களை விற்று உணவு வாங்கிச் சாப்பிட்டார். வேசைகளின் வீடுகளில் தங்கிக்கொண்டார். தகுபொகுவின் தந்தை பௌத்த மடாலயத்தில் கையாடல் செய்துவிட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டுத் துரத்தப்பட்டார். அதன் காரணமாக அவர் மீண்டும் தன் மனைவியைத் தேடிவந்து ஒன்றாக வாழத் தொடங்கினார். கவிஞராக மட்டுமே வாழ வேண்டும் என நினைத்த தகுபொகுவினால் பணம் சம்பாதிக்க முடியவில்லை. குடும்பத்தின் கடனை அடைக்கவோ, உதவி செய்யவோ முடியவில்லை. இந்த நாள்களில் அதிக அளவில் குடிக்க ஆரம்பித்தார். குடிபோதையில் கவிதைகள் பாடினார். விடிய விடியக் குடித்தபடியே உறக்கமின்றிக் கழித்தார். வாழ்வின் வெறுமை மிக மோசமாகத் தாக்கியது. குடிப்பதைத் தவிரத் தன்னை அழித்துக்கொள்ள வழியில்லை என்று தகுபொகு எழுதியிருக்கிறார்.

கவிதையின் கையசைப்பு - எஸ்.ராமகிருஷ்ணன்

இந்த நாள்களில் அவர் செட்சுகோ என்ற பெண்ணைக் காதலிக்கத் தொடங்கினார். அவளைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டார். அவளுக்கு தகுபொகுவின் கவிதைகள் மீது மிகுந்த ஈடுபாடு. தனது வீட்டில் பேசி சம்மதிக்கவைத்தாள். ஆனால், திருமண நாளன்று தகுபொகு வேறு ஊரில் குடித்து மயங்கிக்கிடந்தார். திருமணம் நடக்கவில்லை. மூன்று மாதங்களுக்குப் பிறகு செட்சுகோவைத் தேடிப்போனார். அவள் கோபித்துக்கொள்ளவில்லை. அன்றே, அப்போதே திருமணம் என எந்தச் சடங்குமின்றி அவளைத் திருமணம் செய்துகொண்டு, தன்னோடு அழைத்துவந்தார்.

டோக்கியோவில் ஒரு குடும்பம் பணமின்றி வாழ்வது எளிதானதில்லை. திருமணப் பரிசாக நண்பர்கள் தந்த பணத்தைக்கொண்டு சில மாதங்கள் அவர்களால் வாழ முடிந்தது. மீண்டும் பணக்கஷ்டம், செட்சுகோவின் பட்டாடைகளை விற்று வீட்டுச் செலவுகளைச் சமாளித்தார். அந்த நாள்களில் அவர் எழுதிய கவிதைகள் எதிலும் துயரத்தின் சாயலே இல்லை. கவிதைகளில் அவர் காதலையும் பிரிவையும் ஏக்கத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்திவந்தார்.

ஊரில் அப்பா ஓடிப்போனதால், அம்மாவும் தங்கையும் அவரைத் தேடி டோக்கியோ வந்துசேர்ந்தார்கள். வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மனைவியின் உறவினர் வழியாகத் தற்காலிகப் பள்ளி ஆசிரியர் வேலை ஒன்று கிடைத்தது. சொற்பச் சம்பளம். ஆனால், சிறிய கிராமப்புறப் பள்ளியில் வேலை. அதை உடனே ஒப்புக்கொண்டு மனைவியை ஊருக்கு அனுப்பிவைத்துவிட்டு தனி ஆளாகப் பள்ளி வேலைக்குச் சென்றார்.

ஆசிரியர் வேலை அவருக்குப் பிடித்திருந்தது. சின்னஞ்சிறு மாணவர்களுடன் பேசிப்பழகுவதை சந்தோஷமாகச் செய்தார். அவர்களுக்கு கதை, கவிதைகள் கற்றுத்தந்தார். பள்ளியில் ஒரு மாணவி, தான் செய்த சிறிய தவறு ஒன்றுக்காகக் கண்ணீர்விட்டு மன்னிப்பு கேட்டபோது, இந்த மனது தனக்கு இல்லையே என்று வருந்தினார் தகுபொகு. அந்த நாள்களில் அவர் எழுதிய கவிதைகளில் குழந்தைகள் அதிகம் இடம்பெற்றுள்ளார்கள்.

கவிதையின் கையசைப்பு - எஸ்.ராமகிருஷ்ணன்16 வயதில் அவர் கவிதை எழுதத் தொடங்கியபோது, ‘மரங்கொத்தி’ என்றே புனைப்பெயர் வைத்துக்கொண்டார். அதற்குக் காரணம், அவரது வீட்டின் பின்புறம் உள்ள காட்டில் எப்போதும் மரங்கொத்திகள் மரத்தைக் கொத்திக்கொண்டேயிருக்கும். அந்தச் சப்தம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மரங்கொத்தியின் சப்தம் தன்னை எழுதத் தூண்டுவதாகவும் அதுவே தனது அடையாளம் என்றும் தகுபொகு நினைத்தார். மரத்துடன் மற்ற பறவைகள் வெறுமனே உறவுகொள்கின்றன. ஆனால், மரங்கொத்தி அதனுடன் மோதி மோதி தன் இருப்பை நினைவுபடுத்துகிறது. ‘கவிஞனும் ஒரு மரங்கொத்தி போன்றவனே. உலகைத் தன் அலகால் கொத்திக் கொத்தி சப்தம் எழுப்புவதே அவனது வேலை’ என்கிறார் தகுபொகு.

அந்த நாள்களில் ஜப்பானில் கவிஞர்கள், ஐரோப்பியக் கவிதை வடிவங்களில் மயங்கி அதுபோலவே கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தார்கள். அதற்கு மாறாகப் பழைமையான ஜப்பானிய சொற்களைக்கொண்டு ‘டாங்கா’ என்ற மரபான கவிதை வடிவத்தை விரும்பித் தனதாக்கிக்கொண்டார் தகுபொகு. இவரது ‘டாங்கா’ கவிதைகள் உணர்ச்சிபூர்வமானவை. ஓவியர்கள் ஒன்றிரண்டு கோடுகளால் காட்சிகளைத் தீட்டுவதுபோலக் குறைவான சொற்களைக்கொண்டு கவிதைகளை உருவாக்குகிறார் தகுபொகு. அவரது கவிதைகள் வெளிச்சம் தருகின்றன; தூரத்து நட்சத்திரம்போல அவை வசீகரமாக இருக்கின்றன. தகுபொகுவின் கவிதையை முணுமுணுப்பிற்கு ஒப்பாகச் சொல்ல வேண்டும். அதுவும் காதருகே வந்து சொல்லிப்போவதுபோல மிக அண்மையில் கவிதைகள் ஒலிக்கின்றன. சில கவிதைகள் அப்படியே நமது சங்கக் கவிதைகளை ஜப்பானிய மொழியில் எழுதியதுபோலவே இருக்கின்றன. ‘இயற்கையை அறிதல்’ உலகெங்கும் ஒன்றுபோலத்தான் இருக்கும் போலும். மனிதர்களைவிடவும் தான் இயற்கையை அதிகம் நம்புவதாகவும் நேசிப்பதாகவும் தகுபொகு தனது டைரிக் குறிப்பில் குறிப்பிடுகிறார்.

ஆங்கிலம் கற்றுக்கொண்ட தகுபொகு, ஆங்கில இலக்கியத்தின் முக்கியக் கவிகளை, நாவல்களை விரும்பி வாசிக்கத் தொடங்கினார். குறிப்பாக வேர்ட்ஸ் வொர்த்தை விரும்பி வாசித்திருக்கிறார். ரிச்சர்ட் வாக்னர் என்ற இசையமைப்பாளர் மீது அதிகம் விருப்பம் கொண்டிருந்த தகுபொகு, ‘அவர் மிகச்சிறந்த கவிஞர், தத்துவவாதி, கட்டுரையாளர். அவரது இசையைவிடவும் கவிதைகளே தனக்கு மிகவும் விருப்பமானவை’ என்று வாக்னர் குறித்து விரிவான கட்டுரையை எழுதியிருக்கிறார்.

ஜப்பானிய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்பியபோது, உடற்தகுதி இல்லை என்று நிராகரிக்கப்பட்டார். டிசம்பர் 29, 1906-ல் அவரது பெண் குழந்தை பிறந்தது. அவளுக்கு ‘கியோகோ’ என்று பெயரிட்டார். பள்ளி ஆசிரியர் வேலையிலும் அவரால் தொடர முடியவில்லை; துரத்தும் பணக்கஷ்டம்; வறுமை... வேலையில்லாத நிலை அவரை நிரந்தரக் குடிநோயாளி ஆக்கியது. போதையிலேயே தனது நாள்களைக் கழித்தார். இரவில் உறங்க முடியாமல் புத்தகங்களைக் கடன் பெற்றுவந்து வாசித்துக்கொண்டேயிருந்தார். அமெரிக்காவிற்குப் போய்விட்டால் தனது கவிதைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்; கவிஞனாக வாழ முடியும் என நம்பி பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தார். அவர் மீது சில காவல்துறை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருந்ததும் முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தாலும் அவரது விண்ணப்பம் ரத்துசெய்யப்பட்டது. அது கூடுதல் மனவருத்தத்தை அவருக்குள் உருவாக்கியது.

 ஜென் மடாலயத்தில் வளர்க்கப்பட்ட சிறுவன் என்றபோதும் அவருக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கவில்லை. நாத்திகராகவே வாழ்ந்தார். தனிமைதான் அவரது முக்கியப் பிரச்னை. ‘மனிதனின் தனிமை அவனின் ஆயுள் முடியும்வரை நீங்காதது. தனிமையை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை’ என்று தகுபுகு எழுதியிருக்கிறார். இன்னொரு கவிதையில், ‘தனது தனிமை தன்னைவிடவும் வயதானது’ என்று கூறுகிறார். கவிதை எழுதினால் அங்கீகாரம் கிடைக்காது. ஆகவே, நாவல்களை எழுதுவோம் அதில் பணமும் அங்கீகாரமும் எளிதாகக் கிடைத்துவிடும் என உரைநடை எழுதுவதற்கு முயன்றார் தகுபொகு. ஆனால், அவரால் அதில் வெற்றிபெற முடியவில்லை.

காஃப்காவைப்போலவே தன் வாழ்நாளில் நடந்த எல்லா முக்கியச் சம்பவங்களையும் டைரியில் எழுதிவைத்திருக்கிறார் தகுபொகு. அந்த டைரியைத் தனது மனைவி படித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார். தனது காலத்துக்குப் பிறகு அந்த டைரியை எரித்துவிட வேண்டும் என்று நண்பரிடம் கொடுத்திருக்கிறார். நண்பர் அதை எரிக்கவில்லை. காப்பாற்றி வைத்திருந்தார். நண்பரின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி இந்த டைரியைக் கண்டெடுத்து அதை முழுமையாக பிரசுரம் செய்தார். அதனால்தான் இன்று தகுபொகுவின் டைரியும் குறிப்புகளும் நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன.

காசநோயால் பாதிக்கப்பட்ட தகுபொகு, அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது மருத்துவமனை நாள்களைக் கவிதையில் அற்புதமாகப் பதிவுசெய்திருக்கிறார். ‘மருத்துவமனையின் கண்ணாடி ஜன்னலின் வழியே வெளியே காணும்போது, எவ்வளவு பேர் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது’ என்ற அவரது கவிதை, இந்த உலகை நாம் எப்போது எவ்வாறு உணர்கிறோம் என்பதன் சாட்சியம். 

கவிதையின் கையசைப்பு - எஸ்.ராமகிருஷ்ணன்

அந்த நாள்களில் காசநோய்க்குத் தீர்வு கிடையாது. ஆகவே, தான் மரணத்தை நோக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக சென்று கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு தகுபொகுவை வாட்டியது. தன்னோடு படித்த நண்பர்களை, தனது பள்ளிக்காலத்தை, கிராமத்தை நினைத்து ஏங்கி கவிதைகள் எழுதியிருக்கிறார். குடியால் ஏற்கெனவே உடல் பலவீனமடைந்திருந்தது. இத்துடன் காசநோயும் சேர்ந்துகொள்ள, அவர் மிகவும் அவஸ்தைப்பட்டார். நண்பர்களும் அவரைப் புறக்கணித்தனர். தன்னைத் தேடி யாரும் வரவில்லை என்ற கசப்புஉணர்வுடன் அவரது நாள்கள் கழிந்தன. தனது வாழ்நாள் குறித்து அறிந்துகொள்ள ஆரூடம் பார்ப்பவர்களைத் தேடிச் சென்றார். அவர்கள் சொன்ன விஷயங்களைப் பரிகாசமாக்கிக் கவிதைகள் எழுதியிருக்கிறார் தகுபொகு.

‘யாருக்கும் பயன்படாத உடைவாளைப்போல வீணாகிப்போனது எனது வாழ்க்கை’ என ஒரு குறிப்பில் தகுபொகு கூறுகிறார்.  ‘யாரிடமும் கையேந்தி நிற்காதீர்கள், எவரது கருணைக்காகவும் காத்திருக்காதீர்கள். எவரையும் அண்டிப் பிழைக்காதீர்கள். உங்களைப் பற்றி எவரிடமும் வெளிப்படையாகப் பேசாதீர்கள். முகமூடி அணிந்துகொள்ளுங்கள். புதிய நட்பு தொடங்கும்போதே அது பாதியில் முடிந்துபோய்விடும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். சண்டையிடுங்கள்; முடிந்தவரை குரலை உயர்த்திச் சண்டையிடுங்கள்’ என்ற அவரது டைரிக் குறிப்புகளின் வழியே தனது வாழ்வின் அவலநிலையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

காசநோய் முற்றிய நிலையில், தொடர்ந்து காய்ச்சல் கண்டது. மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றபோதும் அவர் நலமடையவில்லை. வீட்டிற்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். கோமா நிலையில் மயக்கமாகிக்கிடந்த அவர், 1912 ஏப்ரலில் மரணமடைந்தார். அவரது மரணத்தின் பின்பு, அவரது கவிதைகள் முழுமையாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. ‘A Handful of Sand’, ‘Romaji Diary and Sad Toys’, ‘On Knowing Oneself Too Well’ போன்றவை அவரது முக்கிய நூல்கள். அவருக்கான வாசகர்கள் உலகெங்கும் உருவாகியுள்ளார்கள். இன்று அவரது கவிதைகள் குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட விமர்சன நூல்கள் வெளியாகியுள்ளன. அவரது படைப்புகள் ஜப்பானில் பல்கலைக்கழக அளவில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், தகுபொகு வாழ்ந்த காலத்தில் எந்த அங்கீகாரமும் கிடைக்காமல் வறுமையில், குடியில், தனிமையில் வாழ்ந்து மடிந்தார் என்பது தீர்க்கமுடியாத துயரமே.