Published:Updated:

அடுத்து என்ன? - ஸ்ரீதர் ரங்கராஜ்

அடுத்து என்ன? - ஸ்ரீதர் ரங்கராஜ்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - ஸ்ரீதர் ரங்கராஜ்

வாசிப்பின் படைப்பின் புதிய சாத்தியங்கள்:படங்கள் : தயாஜி, கங்காதுரை கணேசன்

அடுத்து என்ன? - ஸ்ரீதர் ரங்கராஜ்

வாசிப்பின் படைப்பின் புதிய சாத்தியங்கள்:படங்கள் : தயாஜி, கங்காதுரை கணேசன்

Published:Updated:
அடுத்து என்ன? - ஸ்ரீதர் ரங்கராஜ்
பிரீமியம் ஸ்டோரி
அடுத்து என்ன? - ஸ்ரீதர் ரங்கராஜ்

கசார்களின் அகராதி

டந்த சென்னைப் புத்தகக் கண்காட்சியில் எனது மொழிபெயர்ப்பில் வெளிவந்த ஹருகி முரகாமியின் ‘கினோ’ சிறுகதைத் தொகுதி அதிகமான பாராட்டுகளைப் பெற்றது. முரகாமி பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பரவலாக வாசிக்கப்படுபவர், தமிழில் ஏற்கெனவே நன்கு அறிமுகம் செய்யப்பட்டவர் என்பதால் இது சாத்தியமானது. அதையடுத்து 1910-ல் நடந்த மெக்சிகோ புரட்சியினை நிகழ்களமாகக்கொண்டு 1962-ல் கார்லோஸ் ஃபுயந்தஸ் எழுதிய ‘ஆர்தேமியோ க்ரூஸ்சின் மரணம்’ என்ற நாவல், இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. சிறுகதை எழுதுவது மொழிபெயர்ப்பது பிடித்த புத்தகங்களை வாசிப்பது என நகர்கின்றன நாள்கள்.  

அடுத்து என்ன? - ஸ்ரீதர் ரங்கராஜ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு படைப்பை வாசிக்கும்போது உண்டாகும் ‘மொழிபெயர்க்க வேண்டும்’ என்கிற உந்துதல்தான் எனது படைப்புத் தெரிவின் உத்தி. 2010-ல் நண்பர் ஒருவரது பரிந்துரையின்பேரில் நான் வாசித்த மிலோராத் பாவிச்சின் நாவலான ‘Dictionary of the Khazars’-ஐ மொழிபெயர்க்க வேண்டும் என்ற விருப்பம் பல ஆண்டுகளாக இருந்தாலும் அதைச் சாத்தியப்படுத்துவதற்கான வாய்ப்பு இப்போதுதான் அமைந்தது. நாவல், ஆகஸ்ட் மாதம் ‘கசார்களின் அகராதி’ என்ற பெயரில் எதிர் வெளியீடாக வரவுள்ளது. கடந்த சில மாதங்களாக அதன் மொழிபெயர்ப்புப் பணியில்தான் ஈடுபட்டுள்ளேன். பாவிச்சின் கடினமான அதேசமயம் கவித்துவமான மொழியைத் தமிழில் கொண்டுவருவது அதிலுள்ள முக்கியமான சவால். கிரேக்க, லத்தீன், ஹீப்ரூ, பல்கேரிய, ரஷிய, காத்தலோனிய மொழியிலுள்ள சொற்கள், பெயர்கள், சொலவடைகள், கவிதைகள், மற்றும் அவர்களது மரபான விஷயங்களைப் புரிந்துகொண்டு மொழிபெயர்ப்பது என்பது அதிலுள்ள மற்றொரு சுவாரஸ்யமான சவால். முற்றிலுமாக வேறொரு மனநிலைக்கு நம்மை நகர்த்திச் செல்லக்கூடியது கசார்களின் அகராதி.

அடுத்து என்ன? - ஸ்ரீதர் ரங்கராஜ்1984-ல் செர்பிய-க்ரவோஷிய மொழியில் எழுதப்பட்டு யுகோஸ்லாவியாவில் வெளியிடப்பட்ட இந்த நாவல் ‘21-ம் நூற்றாண்டின் முதல் நாவல்’ என்று பாராட்டப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. துல்லியமாகச் சொல்லவேண்டும் என்றால் ஏப்ரல் 2018-ல் ஃப்ரெஞ்சிலிருந்து பெர்சிய மொழிக்குப் (ஃபார்சி) பெயர்க்கப்பட்டதையும் சேர்த்து மொத்தம் 41 மொழிகள். எனினும் பாவிச், இந்திய மொழியொன்றில் மொழிபெயர்க்கப்படுவது இதுவே முதல்முறை. அது தமிழாக அமைந்ததில் மகிழ்ச்சி. 20 ஆண்டுகளாகத் தமிழிலக்கியச் சூழலில் அதிகம் பேசப்பட்ட, விதந்தோதப்பட்ட ஒரு படைப்பு கசார்களின் அகராதி. இந்த நாவலை கட்டுரைகள், மேற்கோள்கள் வழியாக ஏராளமான வாசகர்கள் அறிந்திருப்பார்கள். இருப்பினும் இதுவரை அந்தப் படைப்பு தமிழில் மொழிபெயர்க்கப்படாமல் இருந்து அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதை என்னவென்று சொல்வது? 

அடுத்து என்ன? - ஸ்ரீதர் ரங்கராஜ்

பாவிச், பெல்கிரேடிலுள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். 18-ம் நூற்றாண்டிலிருந்து பல எழுத்தாளர்களைக்கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். வரலாற்று ஆசிரியர், ஆய்வாளர். அவருடைய ஒவ்வொரு நாவலும் வெவ்வேறு உத்திகளில் எழுதப்பட்டது. குறுக்கெழுத்துப் புதிர்போல, முன்னிருந்தும் பின்னிருந்தும் வாசிக்கக் கூடிய வகையில், டோரட் அட்டைகள் வடிவில், ஒரு கதைக்கு 100 முடிவுகள், என்று பல்வேறு வடிவ ரீதியிலான உத்திகளை முயன்று பார்த்திருக்கிறார். அவ்வகையில் இது அகராதி வடிவில் எழுதப்பட்டுள்ள நாவல். வாசகர்கள் இதை எந்தவோர் அத்தியாயத்திலிருந்தும் வாசிக்கத் தொடங்கலாம் என்பதே இதன் வடிவச் சிறப்பு. மூன்று மதங்களுக்கு மூன்று புத்தகங்கள் என (சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள்) அரேபிய இரவுகள் போன்று சுவாரஸ்யமாக அமைக்கப்பட்ட இந்நாவலை, அகர வரிசைப்படுத்தப்பட்ட அத்தியாயங்களை எந்த வரிசையில் வேண்டுமானாலும் வாசித்துக்கொள்ளலாம்.

மூன்று வெவ்வேறு நூற்றாண்டுகளில் நிகழும் மூன்று கதைச்சரடுகள். வெவ்வேறு காலங்களில் தோன்றும் கதாபாத்திரங்கள். நூற்றாண்டுகளைக் கடந்து பின்னால் சென்று பாதிப்பை நிகழ்த்தும் சம்பவங்கள் எனச் சிறிய விஷயங்களைக்கூட வாசகன் தவறவிட்டுவிடக் கூடாது என்ற அளவில் மிகக் கவனமாகப் பின்னப்பட்ட ஒரு வலை. வாசகனது முழுமையான கவனத்தைக் கோருகின்ற படைப்பு. கதாபாத்திரங்கள், நிகழ்வுகள் மற்றும் நிகழ்விடங்கள் மூன்று புத்தகத்திலும் வெவ்வேறு விதமாகக் கையாளப்படுகின்றன. ஆனால், மூன்று புத்தகங்களும் அவற்றிலுள்ள நிகழ்வுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையனவாக அமைக்கப்பட்டுள்ளன. 

அடுத்து என்ன? - ஸ்ரீதர் ரங்கராஜ்

இந்நாவல் ஆண் பிரதி மற்றும் பெண் பிரதி என்ற இரு பிரதிகள் கொண்டது. ஆண் பிரதிக்கும் பெண் பிரதிக்குமான வித்தியாசம் மிக முக்கியமான ஒரு பத்தி மட்டுமே. பாவிச் இது பற்றிக் கூறும்போது, “2000 வருடங்களாக எழுத்தாளர்கள் புதிய முறைகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நாம் வாசிக்கும் முறை என்பது எப்போதும் ஒன்றுதான். நாம் வாசிக்கும் முறையை மாற்ற நான் முயன்றுள்ளேன். அனைவருக்குமே ஓர் அகராதியை எப்படி உபயோகிப்பது, குறுக்கெழுத்துப் புதிரை எப்படி நிரப்புவது என்று தெரியும். இந்த அகராதியின் மூலம் ஒவ்வொரு வாசகனும் ஒரு புத்தகத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பதிவும் ஒரு கதை, படிக்க எளிமையானது.ஆண் தன்மையுடைய கதைகளுக்கும் பெண் தன்மையுடைய கதைகளுக்கும் ஒரே மாதிரியான முடிவு சாத்தியமில்லை.” என்றார்.

பாவிச்சின் படைப்புகள் வெறுமனே வடிவ ரீதியிலான முயற்சிகள் என்று மட்டும் குறுக்கிவிட முடியாது, அவை தீவிரமான அரசியல் நிலைப்பாடுகள் கொண்டவை. இந்நாவல் ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை காஸ்பியன் கடலருகே வாழ்ந்த கசார்கள் என்ற தனித்துவம் வாய்ந்த ஓர் இனக்குழு கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய அல்லது யூதப் பெருமதங்களால் உள்ளிழுக்கப்பட்டு வரலாற்றில் தடமின்றி மறைந்துபோனதை விளக்குகிறது. தங்களுக்கென வாய்மொழிக் கதைகள், நம்பிக்கைகள், தொன்மங்கள், வழிபாடு என உயிர்ப்பான மிகநீண்ட வரலாற்றை, பண்பாட்டைக்கொண்ட இனக்குழு ஒன்று, அதற்குப் பல நூற்றாண்டுகள் பின்னால் உருவான ஒரு நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளும் சூழல் எவ்வாறு உருவாகிறது, மாற்றத்தில் ஈடுபடும் மதங்கள் அவற்றின் விழுமியங்களைத் தவறான ஒன்றென, கைவிட வேண்டியதென எப்படி நம்பவைக்கின்றன என்பதை பாவிச் இந்நாவலில் விளக்குகிறார். இதனூடாக மும்மதங்களின் நம்பிக்கைகள், அவற்றுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் முரண்கள், யுகோஸ்லாவிய - செர்பியத் தொன்மங்கள், தொல்கதைகள், முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றையும் விளக்கிச் செல்கிறார்.

நாவல் படிக்கும்போது வாசகன் அனைத்து நிலங்களது தொல்குடிகளின் இன்றைய நிலையோடும் அதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும். மேலும் இதுவரை வாசித்திராத புதிய நிலங்கள் மற்றும் அவற்றின் வரலாற்றைச் சுவாரஸ்யமான கட்டமைப்பின் வாயிலாக அறிகின்ற வாய்ப்பு இப்படைப்பின் வழி வாசகனுக்குக் கிடைக்கும். நல்ல புனைவெழுத்து ஒன்றில் புனைவு எந்தப் புள்ளியில் தொடங்குகிறது என்பதை உங்களால் பிரித்தறிய முடியாது. அப்படியான படைப்புதான் இது. மேலும் ஒரு நிலத்தின் அரசியல் வரலாற்றை ஒட்டிய புனைவை உருவாக்க விரும்பும் இளம் எழுத்தாளர்களுக்கு பாவிச் அதன் பல்வகைச் சாத்தியங்களை இப்படைப்பின் மூலம் உணர்த்துகிறார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism